கெட்வெல் மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்..
வரவேற்பு பெண்ணிடம் பதற்றத்துடன் உரையாடிக் கொண்டிருந்தாள் அவந்திகா.
“எக்ஸ்யூஸ் மீ! இங்கே கௌசல்யா ரகுவரன்னு ஒருத்தவங்களை அரைமணிநேரத்துக்கு முன்னாடி ராகவ்னு ஒருத்தர் அட்மிட் பண்ணுனாரு… அவங்க எந்த வார்ட்ல இருக்காங்க?”
“ஜெனரல் வார்ட்ல தான் மேம் இருக்காங்க” என்று சொல்லி வார்ட் எண்ணைச் சொல்லவே அவந்திகா அது எங்கே என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வேகமாக நடந்தாள்.
அவள் கௌசல்யா இருந்த அறைக்குள் நுழைந்தபோது ராகவின் குரல் காதில் விழுந்தது.
“நீங்க ரொம்ப ஒரி பண்ணிக்காதிங்க கௌசிம்மா! உங்கப் பொண்ணைப் பத்தி உங்களுக்குத் தெரியும்ல… மூனாவது மனுசங்க பேச்சைக் கேட்டு மனசைக் குழப்பிக்காதிங்கம்மா”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதிகாரத்துடனே அவனது குரலைக் கேட்டுப் பழகிவிட்டவளுக்கு ராகவின் இந்த ஆதுரமானக் குரல் புதிது. அதை வியந்தபடி அறைக்குள் நுழைந்தவள் அவனைப் பார்வையிட்டபடி கௌசல்யாவிடம் திரும்பினாள்.
“என்னாச்சு சித்தி? நீங்க காலையில சாப்பிடாம போறப்போவே நினைச்சேன்.. இப்போ பாருங்க மயக்கம் போட்டு விழுந்திருக்கிங்க… ஏதோ இவன் அங்கே வந்ததால சரியா போச்சு… இல்லைனா என்ன ஆகிருக்கும்னு யோசிங்க… பிளட் பிரஷரை ரொட்டீனா செக் பண்ணனும்னு சித்தப்பா சொன்னப்போ கேட்டிங்களா?” என்று படபடவென்று பொரிந்து தள்ளியவளைக் கண்டதும் ராகவுக்கும் கௌசல்யாவுக்கும் ஆயாசமாக இருந்தது.
“கீப் கொயட்! அவங்களுக்கு பிரஷர் லெவல் மாறிக்கிட்டே இருக்குனு டாக்டர்ஸ் சொன்னாங்க… மத்தபடி பயப்படுற மாதிரி எதுவும் இல்லை ஜான்சிராணி… நீ கொஞ்சம் அமைதியா இருந்தா அவங்க ரிலாக்ஸ் ஆவாங்க” என்றவனை முறைத்துவிட்டுக் கௌசல்யாவிடம் திரும்பினாள் அவந்திகா.
“திடீர்னு ஏன் மயக்கம் வந்துச்சு சித்தி? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டவளிடம் கௌசல்யா பணியிடத்தில் நடந்த சம்பவத்தை ஒரு வரி விடாமல் சொல்லத் தொடங்கினார்.
“இன்னைக்கு லஞ்ச் ஹவர்ல ரேகா கொஞ்சம் அதிகமா பேசிட்டாங்க அவந்திகா… விக்ரம் உன்னையும் ராகவையும் காபிஷாப்ல பார்த்தானாம்.. நீ அவன் கிட்ட என்ன சொன்னியோ தெரியலை, அவன் ரேகா கிட்ட வந்து அதைச் சொல்லிருக்கான் போல… அந்தம்மா இன்னைக்கு ஜாடைமாடையா குத்திக்காட்டிப் பேசுனாங்க… என்னால அதையெல்லாம் கேட்டுட்டு எப்பிடி அமைதியா இருக்க முடியும்? அதை யோசிச்சே எனக்கு தலை வலிச்சு மயக்கம் வந்துடுச்சு” என்று சொல்லி முடிக்கவும்
“ஏன் சித்தி நீங்க அவங்களோட பேச்சைலாம் பெருசா நினைச்சு வருத்தப்படுறிங்க? காஸிப் பேசுற ஆன்ட்டீஸ் பேசிட்டுப் போகட்டும்னு விடவேண்டியது தானே! ஏதோ உலகத்துல இல்லாத மகனைப் பெத்துட்டாங்க” என்று சொல்லி விக்ரமின் நினைவில் எரிச்சலுற்றாள்.
“எல்லா நேரமும் அடுத்தவங்களைப் பத்தி கவலைப்படாம நம்ம இஷ்டத்துக்கு இருக்க முடியாது அவந்திகா… நம்மளால எப்போவும் சமூகத்தைப் பத்தி யோசிக்காம இருக்க முடியாது… உனக்கு இன்னும் அதைப் புரிஞ்சுக்கிற பக்குவம் வரலை” என்றார் கௌசல்யா இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
“நல்லா கேட்டுக்கோ! நீ லவ் பண்ணுறதை நான் தப்புனு சொல்ல மாட்டேன்… ஆனா இடம், பொருள், ஏவலை மறக்கக் கூடாது அவந்திகா” என்றவரின் வார்த்தையில் அதிர்ந்தாள் அவந்திகா.
“சித்தி! நான் யாரையுமே….” என்று பேசவந்தவளை இடைவெட்டியவர்
“ராகவ் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாரு… உன்னைக் காப்பாத்துனவரை நீ ஹீரோவா நினைச்சுக் காதலிக்க ஆரம்பிச்சதை நான் தப்பு சொல்லலை… ஆனா விக்ரம் கிட்ட அதைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன வந்துச்சு?” என்று கேட்கவும் அவந்திகா வாயைப் பிளந்து ஆச்சரியப்பட்டவள் கடுப்புடன் ராகவ் புறம் திரும்பினாள்.
“இதெல்லாம் உன்னோட வேலையாடா?” என்று கண்ணாலேயே மிரட்டியவளுக்குப் பதில் சொல்லாமல் அப்பாவியாய் முகத்தை வைத்திருந்தவனது கழுத்தை நெறித்துக் கொல்லலாமா என்ற ஆத்திரம் எழ கௌசல்யாவின் ‘இடம், பொருள், ஏவல்’ வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.
கடுப்பு குறையாமல் “சித்தி யாரு ஹீரோ? இவனா? இவன் ஹீரோ இல்லை சித்தி.. வில்லன்” என்று சொல்லிவிட்டு ராகவை மீண்டும் முறைத்தவளின் கரத்தைப் பற்றினான் ராகவ்.
“ஐ னோ! உனக்கு நான் டூ டேய்ஸா கால் பண்னலைனு நீ என் மேல கோவத்துல இருக்கே… பட் ஒர்க் பர்டன் ஜாஸ்தி.. டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ” என்று கெஞ்சலுடன் சொல்லிவிட்டு அவள் மட்டும் அறியும் வண்ணம் கண் சிமிட்டவே அவந்திகாவுக்கு அநியாயத்துக்கு ஆத்திரம் மட்டுமே பொங்கியது.
“நான் ஏன் உன்னைப் புரிஞ்சிக்கணும்டா? ஏன் இப்பிடி அநியாயமா பொய் சொல்லுற?” என்று வெகுண்டவளைக் கையமர்த்திய கௌசல்யா
“அவர் தான் வேலை இருக்குனு சொல்லுறாருல! ஏன் சண்டை போடுற? ராகவ் எல்லாத்தையும் சொன்னாரு… அவங்களுக்கும் நமக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு… ரெண்டு குடும்பத்தோட கலாச்சாரமும் வேற வேற, பழக்கவழக்கம், அந்தஸ்துனு நிறைய வித்தியாசங்கள் இருக்கலாம்… ஆனா இதை எல்லாம் தாண்டி எனக்கு அவந்திகாவைப் பிடிச்சிருக்குனு சொல்லுறாரு! கேக்கிறதுக்கு ஒருபக்கம் சந்தோசமா இருக்கு… இன்னொரு பக்கம் அவரோட குடும்பம் இந்த ரிலேஷன்ஷிப்பை ஏத்துப்பாங்களானு கலக்கமாவும் இருக்கு… அவரோட சிந்தனை எல்லாமே இப்போ அவங்க ஃபேமிலியை கன்வின்ஸ் பண்ணுறதுல இருக்கிறப்போ நீயும் புரிஞ்சுக்காம சண்டை போட்டா என்ன அர்த்தம்?” என்று பேசிக்கொண்டே செல்லவும் அவந்திகாவுக்கு முள் மேல் நிற்பதைப் போன்ற அவஸ்தை.
“சித்தி அவன் சொன்னதை நினைச்சுக் கூட எனக்கு ஷாக் இல்லை… ஆனா அதையும் நம்பி எனக்கு அட்வைஸ் பண்ணுறிங்க பாருங்க, அதை தான் என்னால தாங்கிக்க முடியலை” என்று கோபமும் கேலியும் கலந்து சொல்லிவிட்டு
“ராகவ்! கொஞ்சம் வர்றியா? டாக்டரைப் பார்த்து சித்தி கண்டிசனைக் கேட்டுட்டு வந்துடுவோம்” என்று புன்னகைமுகமாய் சொல்லிவிட்டு அவனைக் கையோடு அழைத்துச் சென்றவள் மருத்துவரிடம் விவரம் கேட்டுவிட்டுப் பயப்படுவதற்கு எதுவுமில்லை என்று அவர் சொன்னதும் மருத்துவரின் அறையிலிருந்து ராகவுடன் வெளியேறினாள்.
வெளியேறுவதற்கு முன்னர் “யுவர் மதர் இஸ் வெரி லக்கி டூ ஹேவ் அ சன் இன் லா லைக் ஹிம் (இப்படி ஒரு மருமகன் கிடைக்க உங்கள் அம்மா கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சிரிக்க அவந்திகாவும் சிரித்தே சமாளித்தபடி வெளியேறினாள்.
“டாக்டரைக் கூட விட்டு வைக்கலையா? ஏன்டா இப்பிடி பொய் சொல்லிருக்க? ஆக்சுவலி தப்பு என் மேல தான்… இங்கே வந்த அன்னைக்கே கிட்னாப்பிங் கேஸ்ல உன்னை உள்ளே தள்ளிருக்கணும்… ஒரு செகண்ட் தடுமாறி பொய் சொன்னேன்ல… அதுக்குத் தான் நீ பொய் மேலே பொய் சொல்லி என்னை வச்சு காமெடி பண்ணிட்டிருக்க” என்று வெடித்துவிட்டு அடங்கினாள்.
ராகவ் “நான் என்ன பொய் சொன்னேன் ஜான்சிராணி? நான் சொன்ன எல்லாமே உண்மை தான்.. நான் என்னோட ஃபேமிலி கிட்ட உன்னைப் பத்தி பேசுனேன்… அம்மா, பெரியம்மாக்கு நான் என்ன பண்ணுனாலும் ஓகே.. சித்தியை நான் கணக்குல வச்சிக்கிறது இல்லை… இப்போ என்னோட பிராப்ளம் டாட், பெரியப்பா, சித்தப்பா அண்ட் தாதி மட்டும் தான்.. பட் ஐ வில் மேனேஜ் தெம்” என்று அவன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே செல்ல அவந்திகாவுக்கு தலையைச் சுவற்றில் முட்டிக்கொள்ளலாமா என்றிருந்தது.
“இனாஃப்! இவங்க எல்லாரை விடவும் முக்கியமான பிராப்ளம் நான் தான்டா… நான் இன்னும் உன்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே சொல்லலை… உன் இஷ்டத்துக்குக் கால்குலேட் பண்ணுறதை நிறுத்து… என் விஷயத்துல உன்னோட எல்லா கால்குலேஷனும் தப்பா தான் போகும்” என்று பிடிவாதத்துடன் உரைத்தவளை அலட்சியத்துடன் ஒதுக்கிவிட்டான் ராகவ்.
“யூ னோ ஒன் திங்க் இது நாள் வரைக்கும் கண்டிப்பா உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குத் தோணுனதே இல்லை… ஆனா இன்னைக்கு கௌசிம்மா மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் எனக்குக் கில்டியா இருந்துச்சு… நான் பண்ணுன அந்தச் சின்னத் தப்போட விலை இவ்ளோ பெருசா இருக்கும்னு நான் யோசிக்கலை… தப்பு பண்ணுனவங்களுக்குப் பனிஷ்மெண்ட் உண்டு தானே… நான் பண்ணுன தப்புக்குப் பனிஷ்மெண்டா உன்னை மேரேஜ் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்.. அண்ட் ப்ளீஸ் உன்னோட சோ கால்ட் டயலாக்சை எடுத்துவிடாதே… நான் ஒன்னும் இரக்கப்பட்டு உனக்கு வாழ்க்கைப்பிச்சை போட வரலை… அதை மட்டும் மனசுல வச்சுக்கோ” என்று அசட்டையாகச் சொன்னவனின் பேச்சில் வாயடைத்துப் போய் நின்றிருந்தாள் அவந்திகா.
“எப்பிடியும் நானும் நீயும் யாரோ ஒருத்தரைக் கல்யாணம் பண்ணித் தான் ஆகணும்… அதுக்கு ஏன் நம்ம ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?” என்று கேட்டவனுக்குத் தலையை மறுப்பாக அசைத்தவள்
“இம்பாஸிபிள்… உன்னை மாதிரி ஒருத்தனோட ஒரு நிமிசம் கூட என்னால வாழ முடியாதுடா… நான் ஆசையா காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கனும்னு விரும்புறேன்… எனக்கு அரேஞ்ச்ட் மேரேஜ் வேண்டாம்” என்று பிடிவாதமாக மறுத்தவளின் கூந்தலைக் கலைத்துவிட்டவன்
“யூ ஹேவ் நோ ஆப்சன்மா… மேரேஜுக்கு அப்புறம் என்னையே லவ் பண்ணிக்கோ… ஐ டோண்ட் ஹேவ் எனி பிராப்ளம்… அண்ட் உன் தலையெழுத்துல லவ் மேரேஜ்ங்கிறது இல்லை” என்று கேலியாகச் சொல்லிவிட்டுக் கௌசல்யா இருக்கும் அறையை நோக்கிச் சென்றான்.
கௌசல்யாவுக்குப் பெரிதாக ஒரு பாதிப்பும் இல்லையென்பதால் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்லிவிடவே அவந்திகாவுடன் கிளம்பியவர் ராகவிடம்
“நீங்க ரொம்ப அவசரமா முடிவெடுக்கிறிங்க… கொஞ்சம் யோசிங்க” என்று உரைத்துவிட்டு அங்கிருந்து அவந்திகாவுடன் இணைந்து செல்ல முயல ராகவ் அவர்களை நிறுத்தியவன்
“நானே உங்களை டிராப் பண்ணிடுறேன்” என்று சொல்லித் தனது காரை எடுத்துவந்தவன் சொன்னபடி அவர்களை வீட்டில் இறக்கிவிட்டுச் செல்ல முயல, கௌசல்யா
“வீட்டுக்கு வந்துட்டு வெறும் வயித்தோடப் போனா எப்பிடி? வந்து ஒரு கப் காபியாச்சும் குடிச்சுட்டுப் போங்க” அவனை அழைக்க அவந்திகா எதுவும் சொல்லாமல் சிலை போல நின்றாள்.
ராகவும் மறுப்பு தெரிவிக்காமல் அவர்களுடன் வீட்டுக்குள் வரவே அர்ஜூன் பள்ளி முடிந்து திரும்பியிருந்தவன் அம்புஜாவிடம் வழக்கம் போல கதை பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
கௌசல்யாவையும் ராகவையும் முந்திக் கொண்டு நுழைந்த அவந்திகாவைக் கண்டதும் “வந்துட்டியா அந்து?” என்று சொல்லிவிட்டு நாக்கைத் துருத்திக் காட்ட
அவந்திகா “டேய் எத்தனை தடவை சொல்லிருக்கேன் அப்பிடி கூப்பிடாதேனு” என்று அவனது காதைப் பிடித்துத் திருகிவிட்டு
“எல்லாம் நீ குடுக்கிற தைரியம் அம்பு.. இனிமே அவன் அந்து, சந்து, பொந்துனு கூப்பிட்டானு வை, ரெண்டு பேரையும் சித்தப்பா கிட்ட சொல்லி சென்னைக்குப் பார்சல் பண்ணிடுவேன்” என்று மிரட்டிக் கொண்டிருக்கும் போது ராகவும் கௌசல்யாவும் உள்ளே நுழைந்தனர்.
ராகவ் புன்னகையுடன் மூவரையும் பார்த்தவன் அம்புஜாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு நிமிர அவந்திகாவுக்கு ஒரு நிமிடம் மாரடைப்பு வந்து நீங்கியது. ஆனால் அம்புஜாவுக்கோ உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் வைத்தது போல ஜில்லென்று இருக்க “நல்லா இருப்பா” என்று சொன்னவரிடம்
“அம்பு! அவனுக்குத் தமிழ் தெரியாது… அவன் ஒரு ஸ்டார் பிளஸ் சேனல்” என்று சொல்லவும் அம்புஜா புரியாது விழிக்க
கௌசல்யா மகளை முறைத்துவிட்டு “அவங்க பஞ்சாபி ஃபேமிலி அத்தை… அதனால ஹிந்தியும் இங்கிலீசும் தான் தெரியும்” என்று சொல்ல அம்புஜா சரளமாக ஹிந்தியில் அவனிடம் பேச ஆரம்பித்தார்.
“என்னோட வீட்டுக்காரர் ஏர் ஃபோர்ஷ்ல வேலை பார்த்தப்போ நாங்க குடும்பத்தோட நார்த்ல தான் இருந்தோம்” என்று ஆரம்பித்தக் கதை அவந்திகா சமையலறைக்குச் சென்று அனைவருக்கும் காபி போட்டு எடுத்துவரும் வரைக்கும் நீண்டது.
அவந்திகா காபியை நீட்டவும் பெற்றுக் கொண்டவன் அர்ஜூனிடம் ஏதோ கேட்க அவன் ஆங்கிலத்தில் எதையோ உளறினான். அதன் பின் இருவரும் ஹைஃபை கொடுத்துவிட்டு மீண்டும் எதையோ பேச அவந்திகாவின் கவனம் முழுவதும் ராகவ் என்ற ஒற்றை மனிதன் மீதே குவிந்திருந்தது.
மனதிற்குள் “அந்தக் காட்டுக்குள்ள நான் பேச்சுத்துணைக்கு ஆளில்லாம தவிச்சப்போ பெரிய இவனாட்டம் சீன் போட்டுட்டு இப்போ வந்து பல்லை பல்லைக் காட்டுறான்… இடியட்… மைதாமாவு… இவனோட பெர்ஃபார்மன்சைப் பார்த்துட்டு ஒருவேளை அம்புவும் அஜ்ஜூவும் இம்ப்ரெஸ் ஆயிட்டா….” என்ற இழுவையுடன் யோசிக்கும் போதே ராகவுடன் அவர்கள் பேசிச் சிரிப்பது அவந்திகாவுக்குள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது.
இவன் சீக்கிரமாக இடத்தைக் காலி செய்ய மாட்டானா என்று எதிர்பார்ப்புடன் நின்றவளை ஓரக்கண்ணால் கவனித்தவன் “ஓகே கிரானி! நான் கிளம்புறேன்… சீக்கிரமா மறுபடியும் மீட் பண்ணலாம்.. கௌசிம்மா போயிட்டு வர்றேன்… பை சாம்” என்றவன் நேரடியாக அவந்திகாவைப் பார்க்க அவளும் அவனைத் தான் கடுப்புடன் நோக்கிக் கொண்டிருந்தாள்.
கௌசல்யாவும் அம்புஜாவும் அதைப் புரிந்து கொண்டவர்களாய் அர்ஜூனுடன் இடத்தைக் காலி செய்ய அவந்திகா “இப்போ எல்லாரும் இவ்ளோ அவசரமா எங்கே போறிங்க?” என்று கேட்டவள் அவர்கள் சென்றதும் ராகவிடம் திரும்பினாள்.
“எல்லாரையும் மெஸ்மெரைஸ் பண்ணியாச்சுல்ல.. கிளம்பு” என்று சொல்லிவிட்டு அவளும் உள்ளே செல்ல விழைய அவள் கரம் பற்றி நிறுத்தியவன்
“இது வெறும் சாம்பிள் தான்… பை த வே, உன்னோட ஃபேமிலி உன்னை மாதிரி இல்லை… தே ஆர் வெரி ஸ்வீட்… ஆனா நீ இருக்கியே சரியான மிர்ஸி” என்று சிரிப்பை அடக்கியக்குரலில் சொல்லவும் அவந்திகா வெகுண்டுப் போய் அவனிடம் ஏதோ சொல்ல வந்தவள் வீட்டினரின் நினைவில் அமைதியாகி விட்டாள்.
பின்னர் தணிந்த குரலில் “நான் உன்னை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்… நீ தலை கீழே நின்னு தண்ணி குடிச்சாலும், மேற்கே உதிக்கிற சூரியன் கிழக்கே உதிச்சாலும், பூமியில இருந்து வானத்தைப் பார்க்க மழை பெய்ஞ்சாலும் சரி இந்தக் கல்யாணம் நடக்காது” என்று மூச்சுவிடாமல் வசனம் பேசிமுடித்தவளைச் சுவாரசியமான விழிகளால் அளவிட்டவன்
“இஸிண்ட்? நான் போட்ட எந்தப் பிளானும் ஃபெயிலர் ஆனதில்லை… லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்… பை ஜான்சிராணி” என்று சொல்லிவிட்டு அவளின் இரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டு வெளியேறினான் அவன்.
சென்றவனை வெறித்தவள் “பெருமாளே! ப்ளீஸ் நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேன்… ஆனா இந்தச் சிடுமூஞ்சியை என்னால அப்பிடியெல்லாம் யோசிச்சுக் கூடப் பார்க்க முடியலை… தயவுபண்ணி இவனை என் லைஃப்ல இருந்து ரிமூவ் பண்ணிடுங்க… சத்தியமா இவனைக் கட்டிக்கிட்டு டெய்லியும் ஸ்டார்பிளஸ் சீரியல் பார்க்க என்னால முடியாது” என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.
ஆனால் விதியோ இருவருக்கும் தான் போட்ட முடிச்சை இன்னும் இறுக்கமாக்கும் வேலையில் ஜெகஜோதியாக இறங்கிவிட்டது. இனி நடப்பதைத் தடுக்க யாரால் தான் இயலும்?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


