பெங்களூருவின் பழைய பரபரப்பு மெதுமெதுவாகத் திரும்பிக் கொண்டிருந்தது. எனினும் மக்கள் சுதந்திரக்காற்றைக் கூட சிறிது பயத்துடன் தான் சுவாசித்தனர். முன்னே போல விருட்விருட்டென்று செல்லும் வாகனங்கள் கூட நிதானித்துச் சாலையில் இயங்கியதைப் பார்த்தால் மக்களின் மனம் இன்னும் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது.
ஆங்காங்கே கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள் ஊரடங்கு முடிந்தாலும் தங்களின் கடமையைச் செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தன. நோய்த்தொற்று முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்படும் வரை இம்மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தப் போவதில்லை என்றும், மக்கள் நடமாட்டத்திலுள்ள கட்டுப்பாட்டை மட்டும் தான் தாங்கள் விலக்கியிருக்கிறோம் என்றும் அரசுத்தரப்பு செய்தி சேனல் கூறியது.
இம்மாதிரியான சூழ்நிலைகளுக்கிடையே பெங்களூருவின் கல்யாண் நகர்ப்பகுதிக்குள் விரைந்தது ராகவின் கார். அங்கே நுழையும் போதே அவந்திகாவுக்குள் மகிழ்ச்சி ஊற்றெடுத்துப் பொங்கியது.
எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் தன் வீட்டைப் பார்க்கிறோம் என்று ஆவலுடன் காரிலிருந்து இறங்கியவளைப் பக்கத்துவீட்டுப் பெண்மணிகள் சாலையில் நடைபயிற்சிக்காக வந்த அந்தத் தெருவாசிகளும் அவளை வேடிக்கை பார்த்தபடி அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டபடி நடந்தனர்.
அவந்திகா இவர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியுடன் திரும்ப காரிலிருந்த நால்வரும் அவளுக்குப் பின்னர் நிற்பதைப் பார்த்ததும் விஷயம் புரிந்தது.
ராகவிற்கு அவந்திகாவின் அண்டைவீட்டாரின் செய்கையைப் பார்த்ததுமே அவர்கள் மனம் போன போக்கு புரிந்துவிட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஓகே! ரொம்பநேரம் வெளியே நிக்க வேண்டாம்… உள்ளே போலாம்” என்று அவந்திகா அவர்களை வீட்டினுள் வருமாறு அழைக்க நால்வரும் சங்கடத்துடன் வீட்டுக்குள் நுழைந்தனர்.
உள்ளே நுழையும் போதே வீட்டின் அமைதி மனதை உறுத்த அவந்திகாவுக்குச் சித்தியை எப்படி சமாளிப்பது என்பது தான் இப்போதைய கவலை. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஹாலுக்கு வந்தவளைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் திக்பிரமை பிடித்தது போல சிலையாகி விட்டனர்.
கல்யாணமண்டபத்திலிருந்து இருபத்தியிரண்டு நாட்களுக்கு முன்னர் மாயமானவள் எங்கே சென்றாள், எப்படி இருக்கிறாள் என்று எத்தகவலுமே கிடைக்காமல் மனதைப் போட்டு வருத்திக் கொண்டிருந்தவர்களுக்கு ஒருவேளை தங்கள் மனதின் எண்ணங்கள் தான் அவளைப் போல தோற்றமளிக்கிறதோ என்று எண்ணி ஐயமுற்றனர்.
ஆனால் அவளைத் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த நான்கு வாலிபர்களைக் கண்டதும் கௌசல்யாவுக்கும் ரகுவரனுக்கும் ஐயந்திரிபற தெரிந்துவிட்டது வந்தது அவந்திகாவே தான் என்பது. கௌசல்யா அவளை நெருங்கியவர் வேறு எதுவும் கேட்கவில்லை.
அவந்திகா கௌசல்யாவைக் கண்டதும் அணைத்துக் கொண்டவள் “எனக்கு ஒன்னுமில்லை சித்தி… அழாம உணர்ச்சிவசப்படாம நான் சொல்லுறதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்று மட்டும் அழுத்தத்தோடு உரைத்தாலும் அதை மீறி அவரது கண்ணீர்த்துளிகள் தன் முதுகில் விழுவதை அவளால் உணரமுடிந்தது.
அவந்திகாவின் குரலைக் கேட்டு இவ்வளவு நேரம் அர்ஜூனின் அறையில் அவனுடன் பேசிக்கொண்டிருந்த அம்புஜா, அர்ஜூனுடன் வெளியே வந்தவர் பேத்தியைக் கண்டதும் கலக்கத்துடன் அவளை நெருங்கினார். அர்ஜூன் அவளது காலைக் கட்டிக்கொண்டவன் “நீ எங்கே போயிட்டக்கா? யாருமே எனக்கு நீ எங்கே போனேனு சொல்ல மாட்றாங்க” என்று சொல்லிவிட்டு கண்ணீர் சிந்த ஆரம்பிக்கவும்
அவந்திகா ரகுவரனிடம் “ப்ளீஸ் சித்தப்பா! அப்புறமா அழுதுக்கலாம்.. உங்க ஒய்ப், அம்மா, மகன் மூனு பேரையும் கொஞ்சநேரத்துக்கு வாட்டர்டேமைக் குளோஸ் பண்ணச் சொல்லுங்க” என்று கூற ரகுவரன் சரியென்று தலையசைத்தவர் மூவரையும் அரும்பாடு பட்டு சமாதானப்படுத்தினார்.
ராகவும் அவனது சகோதரர்களும் இதை ஒருவிதச் சங்கடத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவந்திகா அவர்களைத் திரும்பிப் பார்த்தவள் “ஏன் நின்னுட்டே இருக்கிங்க? ப்ளீஸ் சிட் டவுன்” என்று அமரச் சொல்லவும் குடும்பத்தினரின் பார்வை அவர்கள் நால்வரையும் கேள்வியாய் நோக்கியது.
நால்வரும் அமர்ந்ததும் அவந்திகா சித்தி, சித்தப்பா, பாட்டி மூவரையும் அமரச் சொன்னவள் ராகவைப் பார்க்க அவன் தொண்டையைச் செருமியவன் “எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க… நான் அவந்திகாவை…” என்று ஆரம்பிக்கும் போதே அவந்திகாவின் குரல் இடைவெட்டியது.
“இவர் தான் என்னை கிட்னாப்பர் கிட்ட இருந்து காப்பாத்துனாரு சித்தி… இவர்னா இவர் மட்டும் இல்லை.. வருண், கிஷோர் அண்ட் அமர் இவங்க நாலு பேரும் தான்” என்று சொல்லிவிட்டு ராகவை அமைதி காக்கும்படி கண்ணாலேயே கட்டளையிடவே ராகவிற்கு இந்தப் பெண் ஏன் பொய் சொல்கிறாள் என்று குழப்பத்துடன் அவளை ஏறிட்டான்.
அவனது சகோதரர்களின் நிலையும் அதுவே. ஆனால் அவந்திகா சளைக்காமல் கதையைத் தொடர்ந்தாள்.
அதாவது கல்யாணமண்டபத்தில் அவளை யாரோ கடத்தியதாகவும், அதன் பின்னர் கர்நாடகா எல்லைப்பகுதி வனத்தில் தன்னை அடைத்து வைத்திருந்த போது தான் அவர்களிடமிருந்து தப்பித்ததாகவும், தன்னைத் துரத்தியவர்களை இந்த நான்கு சகோதரர்கள் தான் விரட்டியடித்துத் தன்னைக் காப்பாற்றியதாகவும் இதுவரைக்கும் பார்த்திருந்த அத்தனை தமிழ் மற்றும் கன்னடப்படங்களின் கதைகளைக் கலந்து புதியதாக ஒரு கதையைச் சொல்லி அவர்கள் நால்வர் மீதும் சந்தேகம் வராதபடிக்கு வீட்டினரின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டாள்.
ரகுவரனும் கௌசல்யாவும் கடத்தும் அளவுக்கு அவளுக்கு யார் விரோதியாக இருக்க முடியும், ஏன் அவள் தங்களைத் தொடர்பு கொள்ள முயலவில்லை என்று கேள்வியால் அவளைத் திணறடிக்கவும் அவந்திகாவால் அவர்களைச் சமாளிக்க முடியவில்லை.
“ஓ மை காட்! நான் இத்தனை நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கேன்… அதுவும் மறுபிறவி எடுத்த மாதிரி எவ்ளோ பெரிய கிட்னாப்பர் கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கேன்! நியாயப்படி நான் எந்த ஆபத்துமில்லாம திரும்பி வந்ததுக்கு நீங்க எல்லாரும் இந்நேரம் சந்தோசத்துல திக்குமுக்காடியிருக்கணும்… அதுக்குப் பதிலா என்னை இப்பிடி என்கொயரி பண்ணுறிங்களே?” என்று ஆதங்கத்துடன் கூற
அவள் பேசிய பொய்கள் அனைத்தையும் திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்த ராகவ் கிஷோரிடம் “ஜான்சிராணி எவ்ளோ அழகா பொய் சொல்லுறா பாரு! பாவம் இவளோட பேரண்ட்ஸ்… அவ சொல்லுறதையும் நம்புறாங்க” என்று சொல்லவும்
கிஷோர் “பய்யா அவ மட்டும் பொய் சொல்லலைனா இப்போ நம்ம மூனு பேரும் கிட்னாப்பிங் கேஸ்ல மாட்டியிருப்போம்” என்று பதிலளிக்கவே ராகவும் அதை ஆமோதித்தான்.
அவந்திகா ஒரு வழியாக அனைவரையும் சமாதானப்படுத்திய பிறகு வழக்கம் போல ரகுவரனுக்கு அவந்திகாவின் தோழியரிடமிருந்து போன் வரவே அவர் நிம்மதியுடன் “அவந்திகா வீட்டுக்கு வந்துட்டாடா… நீங்க ரெண்டு பேரும் நேரிலயே வந்து பாருங்க” என்று சொல்லிவிடவே இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் வெளியே இரண்டு பெண் குரல்கள் ஏதோ பொரிந்து தள்ளியபடி வருவது அனைவரின் காதிலும் விழுந்தது.
அடுத்தச் சில நொடிகளில் அவந்திகாவை “ஹனிபி” என்ற அழைப்புடன் இறுக்கமாக அணைத்துக் கொண்டனர் அந்த இரு பெண்களும். அந்த இருவரில் ஒருத்தி சோபாவில் சோகவடிவாய் தன் சகோதரர்களுடன் அமர்ந்திருந்த வருணைக் கண்டதும் முகம் கலங்கிப் போனாள்.
வருணும் அவளைக் கண்டதும் தடுமாறியவன் எழ முயல அதற்குள் அவந்திகாவை விட்டு விலகிய அந்த உயரமானவள் “என்ன நடந்துச்சு ஹனிபி? இவங்கள்லாம் யாரு? உன் கூட ஏன் வந்திருக்காங்க?” என்று கேட்க
“உஷா!“ என்று அவந்திகா ஆரம்பிக்கவும் ராகவுக்கும் அவனது சகோதரர்களுக்கும் இவள் தான் வருண் சொன்ன ரதியா என்ற ஆச்சரியம். ராகவ் அன்று தான் அவந்திகாவின் அறைக்குள் செல்ல முயன்ற போது இவள் தானே வெளியில் நின்றிருந்தாள் என பிரதியுஷாவின் முகம் நினைவுக்கு வந்தது.
அதே நேரம் அவந்திகா தனது குடும்பத்தினரிடம் சொன்ன அதே பொய்யை தோழிகளிடமும் சொல்ல இருவரில் ஒருத்தி கூட அவள் சொன்னதை நம்பிவிட்டதாக அவர்களின் முகங்கள் கூறவில்லை.
அதிலும் பிரதியுஷாவின் விழிகள் வருணையும் அவனது சகோதரர்களையும் சந்தேகத்துடன் நோக்கவே வருணால் நிம்மதியாக மூச்சு கூடவிட முடியவில்லை. வருணின் இந்தத் தோற்றமே பிரதியுஷாவின் சந்தேகத்தை அதிகரித்தது எனலாம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நால்வரிடமும் சகஜமாகப் பேசினாள்.
ரித்திமா “ஹனிபி நீ ஏன் எங்களை கான்டாக்ட் பண்ணலை?” என்று கேட்க
அவந்திகா “நான் போனை இங்கேயே வச்சிட்டுப் போயிட்டேன் ரித்தி” என்றாள் சோர்வுடன்.
ரகுவரன் தான் இனி முடிந்து போனவற்றைப் பேசி எப்பயனுமில்லை என்று அனைவரையும் இனிமேல் அவந்திகாவைக் கேள்வி கேட்டு வருத்த வேண்டாமென்று அழுத்தமாகச் சொல்லிவிட்டார்.
கௌசல்யா மகளைக் காப்பாற்றியதற்காக நான்கு சகோதரர்களுக்கும் நன்றி கூற நால்வரும் சங்கடத்துடன் அவரைத் தடுத்தனர்.
“ப்ளீஸ் ஆன்ட்டி! தேங்க்ஸ்லாம் சொல்லாதிங்க… இதுல என்ன இருக்கு?” என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிச் சமாளித்தாலும் நால்வரின் மனதிலும் குற்றவுணர்ச்சி எழுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.
அவர்கள் கிளம்புவதாகச் சொல்ல அம்புஜா “என் பேத்தியை எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தியிருக்கிங்க! எதாவது சாப்பிட்டிட்டுத் தான் போகணும்” என்று அன்புக்கட்டளையிட நால்வரும் அதை மறுக்க இயலாது சரியென்று தலையாட்டி வைத்தனர்.
நால்வரும் காபி மட்டும் போதுமென்று கூறிவிட சில நிமிடங்களில் காபியுடன் ஆஜரானார் அம்புஜா. நால்வரும் காபியை அருந்திவிட்டுக் கிளம்புவதாகச் சொல்லவே வாசல் வரை சென்று வழியனுப்பினர் அவந்திகாவின் குடும்பத்தினர்.
பக்கத்துவீட்டுக்காரர்களின் கழுகுப்பார்வை மீண்டும் அவர்களைக் கொத்துவதற்குள் அவந்திகா அனைவரையும் உள்ளே செல்லுமாறு கூறிவிட்டாள்.
நான்கு சகோதரர்களுடன் இப்போது அவந்திகாவும் அவளது தோழிகளும் மட்டுமே நிற்க இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பிரதியுஷா நால்வரையும் நோக்கி “சோ நீங்க நாலு பேரும் எங்க ஹனிபியைக் காப்பாத்துன ஹீரோஸ்… இதை நம்புறதுக்கு நான் ஒன்னும் கௌசிக்கா இல்லை” என்று சொல்லவும்
அவந்திகா அவசரமாகக் குறுக்கிட்டு “இல்லை உஷா! இவங்க தான்…” என்று தான் சொன்ன பொய்யை மீண்டும் ஒரு முறை சொல்ல முயற்சிக்கவே அவளை விரல் நீட்டி அமைதி காக்குமாறு சைகை செய்தாள் பிரதியுஷா.
அவந்திகா அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகிவிடவே ராகவ் தன்னிடம் பதிலுக்குப் பதில் பேசுபவள் இந்த ரதியிடம் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போகிறாளே என்று ஆச்சரியப்பட்டுப் போனான்.
பிரதியுஷா நால்வரையும் நோக்கி “அன்னைக்கு மண்டபத்துல என்ன நடந்துச்சு? யாரு இவளைக் கிட்னாப் பண்ணுனாங்க? இதெல்லாம் பத்தி இன்னைக்கு ஈவினிங் பேசிக்கலாம்.. உங்க நாலு பேருக்கும் மெரிடியன் ஹோட்டல் ஓகே தானே?” என்று முடிவெடுத்துவிட்டு அபிப்பிராயம் கேட்டவளை எண்ணி நால்வருக்கும் உள்ளுக்குள் புகைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள இயலாச் சூழ்நிலை.
அவளது பார்வை வருணிடம் நிலைக்க வருண் “சரி! நாங்க நாலு பேரும் ஈவ்னிங் அங்கே இருப்போம்… இப்போ கிளம்புறோம்” என்று சொல்லிவிட்டுக் காரில் சென்று அமர்ந்துவிட்டான்.
பிரதியுஷா அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் வீட்டினுள் சென்றுவிட ரித்திமா அவள் பின்னே ஓடினாள்.
அவந்திகா மட்டும் சிலை போல நிற்க ராகவ் அவளிடம் “நீ தேவை இல்லாம பெரியவங்க கிட்ட பொய் சொல்லிருக்க அவந்திகா.. இதால என்ன பிரச்சனை வரப் போகுதுனு தெரியலை… பட் எங்களை யாரும் தப்பா நினைச்சுடக் கூடாதுனு தான் நீ பொய் சொன்னேனு புரியுது… சோ இதால எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைச் சேர்ந்தே சமாளிப்போம்” என்று சொல்லிவிட்டு அவளிடம் கை நீட்ட அவந்திகா எந்த யோசனையுமின்றி அவன் கரத்தைக் குலுக்கினாள்.
ராகவ் பெருமூச்சுடன் “குட் பை… டேக் கேர்” என்று உரைத்தவன் கையை விட மனமில்லாதவன் போல இன்னும் பற்றியிருக்க, கிஷோர் ஹார்ன் அடித்து “பய்யா ஷால் வீ கோ?” என்று காரினுளிருந்தபடி கத்த, அவந்திகாவின் கரத்தை விடுவித்தபடி அங்கிருந்து காரை நோக்கி சென்றான்.
அவளைத் திரும்பிப் பார்க்காமல் காரில் அமர்ந்தவன் கிஷோரைக் காரை எடுக்குமாறு சொல்ல கிஷோர் அவந்திகாவுக்கு டாட்டா காட்டிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.
அவந்திகா புன்னகையுடன் கையசைத்துவிட்டு அந்தக் கார் தெருமுனையில் மறைந்ததும் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


