இரவின் அமைதியை ரசித்தபடி கானகத்தின் நடுவில் இருக்கும் அந்த வீட்டின் மாடியில் நின்றிருந்தாள் அவந்திகா. அது மலைப்பகுதி என்பதால் குளிர்க்காற்று உடலைச் சிலிர்க்க வைக்க உள்ளங்கைகளைத் தேய்த்துச் சூடாக்கி கன்னத்தில் வைத்துக் கொண்டவள் கண் எதிரே வரிவடிவமாய் தெரிந்த மலைமுகடுகளை பெருமூச்சோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின்னே யாரோ வரும் சத்தம் கேட்டுத் திரும்பியவள் அங்கே நின்ற ராகவைக் கண்டதும் இவனா என்ற அலட்சியபாவனையுடன் முகத்தைத் திருப்பி எதிர்புறம் வெறிக்கத் தொடங்கினாள்.
ராகவ் தான் செய்த பிழைக்கு இது தேவை தான் என்று எண்ணியவனாய் அவந்திகாவின் அருகில் சென்று நின்றவன் அவளிடம் போனை நீட்ட, இது எதற்கு என் பார்வையாலேயே கேள்வி கேட்டவளிடம்
“உங்க வீட்டுக்குக் கால் பண்ணி சொல்லிடு… ட்வென்டி ஒன் டேய்ஸ்க்கு அப்புறமா பத்திரமா வந்துடுவேனு அவங்க கிட்ட சொன்னா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்க” என்று அழுத்தமான குரலில் கட்டளையிட்டான்.
அவந்திகா போனை வாங்கிக் கொள்ளாமலேயே “தேவையில்லை” என்றால் ஒற்றை வார்த்தையாய்.
அவளது பதிலில் இவ்வளவு நேரம் இருந்த குற்றவுணர்ச்சி விடைபெற சுள்ளென்று ஏறிய எரிச்சலுடன் பேச ஆரம்பித்தான் ராகவ்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நீ என்ன முட்டாளா? உன்னை நினைச்சு உன் ஃபேமிலி வீணா டென்சன் ஆவாங்கனு சொன்னா இப்போ கூட ஆட்டிட்டியூட் காட்டுற? என்ன பொண்ணு நீ?”
“என்னால அவங்களை காண்டாக்ட் பண்ண முடியாது”
“அதான் ஏன்னு கேக்குறேன்?”
“நிறைய ரீசன் இருக்கு… அதுல முதல் காரணம் எனக்கு என் சித்தியோட நம்பர் மனப்பாடமா தெரியாது… அவங்க நம்பர்னு இல்லை வேற யாரோட நம்பரும் நான் மெமரியில வச்சுக்கலை… எல்லாமே மொபைல்ல தான் இருக்கு… கிட்னாப் பண்ணுனது தான் பண்ணுன, என் மொபைலையும் சேர்த்து பண்ணியிருக்கலாம்ல… இப்போ பாரு, அத்துவானக் காட்டுக்குள்ள ஒரு தடியன் என்னை கிட்னாப் பண்ணுனதைக் கூட என்னால சித்தி கிட்ட சொல்ல முடியலை”
அவந்திகா இவ்வாறு சொன்னதும் ராகவுக்கு எரிச்சல் இன்னும் அதிகரிக்கவே “மரியாதையா பேசு மிஸ்…. உன் பேரு என்ன? வாட் எவர்…. ஒரு மொபைல் நம்பரை மெமரியில வச்சுக்க முடியலை… நீயெல்லாம் வாய் பேசவே கூடாது” என்று ஏளனத்துடன் உரைத்துவிட்டு நின்றான்.
அவந்திகா அவனது ஏளனப்பேச்சில் சீண்டப்பட்டவள் “இவ்ளோ பேசுறியே.. நீ ஒரு நம்பர், ஒரே ஒரு நம்பரைச் சொல்லு பார்ப்போம்” என்று அவனிடம் சவால் விட
ராகவ் மூச்சு விடாமல் பத்து இலக்க எண்ணைச் சொல்லிவிட்டு “இது எங்க அம்மாவோட நம்பர்… ஒருத்தவங்க நமக்கு முக்கியம்னு நினைச்சா அவங்க சம்பந்தப்பட்ட எதையும் நம்ம மறக்க மாட்டோம்” என்று அவளுக்கு ஒரு குட்டு வைத்தான்.
அவந்திகா அதெற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் “அப்பிடி தான் இருக்கணும்னு எந்த ரூலும் கிடையாதுல்ல.. எனக்கு என் நம்பரைத் தவிர வேற யாரோட நம்பரும் தெரியாது” என்றாள் மிதப்பாக.
ராகவ் அதைக் கேட்டுவிட்டு “வாட்? கம் அகெய்ன்” என்று படபடக்க
அவந்திகா “எனக்கு என் நம்பர் மட்டும் தான் தெரியும்” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“இது போதுமே! உன் மொபைல் இப்போ உன் கிட்ட இல்லைனா அது கண்டிப்பா உங்க வீட்டுல தான் இருக்கணும்… அதுக்குக் கால் பண்ணி விஷயத்தைச் சொல்லிடு” என்று ராகவ் கூறவும்
அவந்திகா “பார்றா! இந்த மைதாமாவு மண்டைக்குள்ளவும் ஏதோ இருக்கு” என்று தமிழில் உரைத்துவிட்டுப் போனை அவனிடமிருந்து வாங்கியவள் தனது எண்ணுக்கு அழைத்தாள்.
“நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பு கன்னடத்தில் வரவும் தான் அவந்திகாவுக்குத் தனது மொபைலைத் தன்னுடைய மேஜையின் அறைக்குள் வைத்துப் பூட்டியது நினைவில் வந்தது. மண்டபத்துக்குக் கிளம்பும் முன்னர் அவசரவேலையாக அதை எடுத்தவள் அங்கேயே வைத்துப் பூட்டிவிட்டாள்.
அதை எண்ணி இப்போது தலையில் அடித்துக்கொண்டவளை கையைக் கட்டி வேடிக்கை பார்த்தபடி அந்த மாடி வராண்டாவின் மரக்கைப்பிடியில் சாய்ந்தபடி நின்றான் ராகவ்.
அவந்திகா சோர்ந்த முகத்துடன் போனை அவனிடம் திரும்பியளிக்க “என்னாச்சு? யாரும் போனை எடுக்கலையா?” என்று கேட்டவனிடம்
“போன் சுவிட்ச் ஆஃப்னு வருது… நான் மறந்து போய் அதை டிராயர்ல வச்சு பூட்டிட்டேன்” என்று சொல்லிவிட்டு குனிந்து தன் கைநகங்களில் பார்வையைப் பதித்தாள்.
ராகவ் “அப்போ உன் பேரண்ட்ஸை உன்னோட ஃப்ரெண்ட்ஸை காண்டாக்ட் பண்ணவே முடியாதா?” என்று தவிப்புடன் கேட்கும் போது தான் அவந்திகாவுக்கு அவனது ‘ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தை பிரதியுஷாவை நினைவூட்டியது.
வருணிடம் பிரதியுஷாவின் எண் இருக்குமல்லவா! அவனது போனில் அவளுக்கு அழைத்து தான் இருக்கும் சூழ்நிலையைச் சொல்லிவிடலாம் என்று எண்ணியவள் விறுவிறுவென்று கீழே இறங்கிச் சென்றாள்.
அங்கே வருண் அமர்ந்திருக்க அவனுடன் இன்னும் இரண்டு வாலிபர்களைக் கண்டுத் துணுக்குற்றவள் பார்வையாலே இவர்கள் யாரென்று வருணிடம் வினவ அவன் மெதுவாக “இவங்க என்னோட பிரதர்ஸ்… இவன் கிஷோர்… இவன் அமர்” என்று இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
கிஷோர் “ஹாய்” என்றபடி கையை நீட்ட அவந்திகா அதை தயக்கமின்றி பற்றிக்கொண்டு நிற்கும் நேரம் ராகவும் மாடியிலிருந்து இறங்கி வந்தான்.
ஹாலில் சென்று நின்றவனின் கண்கள் இருவரின் இணைந்திருந்த கரங்களில் பட்டு மீள தொண்டையைச் செருமித் தான் இருப்பதை உணர்த்தினான்.
அவந்திகா அவனை ஒரு பொருட்டாக மதியாமல் “ஐ அம் அவந்திகா… நீங்க கடத்தணும்னு நினைச்ச பிரதியுஷாவோட ஃப்ரெண்ட்” என்று அழுத்தமாகக் கூற
ராகவ் “அவந்திகா…” என்ற பெயரை மெதுவாக தனது வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
கிஷோரும் அமரும் அவந்திகா கூறியதைக் கேட்டு சங்கடமாய்ப் புன்னகைக்க, அவளோ “இட்ஸ் ஓகே கய்ஸ்… முடிஞ்சதைப் பத்தி பேசி என்ன ஆகப்போகுது? வருண் உங்க கிட்ட உஷா நம்பர் இருக்கும் தானே… அவளுக்குக் கொஞ்சம் கால் பண்ணித் தர முடியுமா?” என்று கேட்க, வருண் இல்லை என்று மறுப்பாய் தலையசைத்தான்.
அதைக் கேட்ட அவந்திகாவுக்கு எரிச்சல் மிகவே “ஏன்? கால் பண்ணித் தந்தா உங்க சொத்து குறைஞ்சு போயிடுமா? ஏன்யா பணக்காரன் எல்லாரும் ஒரே மாதிரி சின்னப்புத்தியோட இருக்கிங்க?” என்று எண்ணெயிலிட்டக் கடுகாகப் பொறிய ஆரம்பிக்கவும் இப்போது கோபமடைவது ராகவின் முறையாயிற்று.
“அது என்ன எதுக்கெடுத்தாலும் பணக்காரங்கனா அப்பிடி, இப்பிடினு நீயா இமேஜின் பண்ணிட்டுப் பேசற? சின்னப்புத்தி இருக்கிறவங்க எல்லா தரப்புலயும் இருப்பாங்க”
“அஹான்! அப்போ நீயே உங்க அண்ணா கிட்ட கேளு.. ஏன் எனக்குப் போன் தர மாட்றாருனு?”
ராகவ் வருணிடம் “பய்யா! நீங்க பேச வேண்டாம்… இவளே பேசிட்டுக் குடுத்துடுவா” என்று கூற வருண் மறுப்பாய் உதட்டைப் பிதுக்கியவன்
“என் கிட்ட ரதியோட நம்பர் இல்லை” என்றவனின் பதிலில் ராகவோடு சேர்ந்து அவந்திகாவும் ஏமாற்றமடைந்தாள்.
சிகையைக் கோதிக்கொண்டவனைக் கேலியாகப் பார்த்தவள் “ஹலோ! நீ சொன்ன முக்கியமானவங்க தியரி எனக்கு மட்டும் தானா? உங்க அண்ணனுக்குலாம் அதை எக்ஸ்பிளெயின் பண்ணக்கூடாதா?” என்று நக்கலடித்தாள்.
ராகவ் அதைக் கேட்டதும் “இவ கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்குதே” என்று மூச்சை இழுத்துச் சமனப்படுத்திக் கொண்டான்.
அவந்திகாவுக்கும் நால்வரின் நிலையும் புரியாமல் இல்லை. ஆனால் எல்லாம் இந்த வளர்ந்து கெட்ட திமிர் பிடித்தவனின் முட்டாள்தனத்தினால் தானே என்று வெதும்பியவள் இதற்காக இங்கிருந்து செல்வதற்குள் இவனுக்குப் பாடம் கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும் என்று சூளுரைத்துக் கொண்டாள்.
அவந்திகா நால்வரையும் தீர்க்கமாகப் பார்த்தவள் “இங்க பாருங்கப்பா, நடந்த விஷயம் ரொம்ப தப்பு தான்.. பட் இது சில குழப்பங்களால நடந்த விபத்து… சோ உங்க மூனு பேரு மேலேயும் எனக்கு துளி கூட வருத்தம் இல்லை… ஆனா, யூ… மிஸ்டர்…. உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்… இதுக்கு உன்னை பழிவாங்கல என் பேரு அவந்திகா இல்லை” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறவும் ராகவுக்குக் காணாமல் போன குற்றவுணர்ச்சி மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
அவன் மனம் தவறு செய்துவிட்டோமே என்று தவிக்க ஆரம்பிக்க, அவந்திகா “இந்த ட்வென்டி ஒன் டேய்ஸ் முழுக்க நீ எனக்குப் போர் அடிக்காம பார்த்துக்கணும்… என்னால மொபைல் இல்லாம ஒன் செகண்ட் கூட இருக்க முடியாது… சோ உன் மொபைலை என் கிட்ட குடுத்துடு… ஹில் ப்ளேஸ் தான், சோ நெட்வொர்க் பிராப்ளம் வரும்.. பட் அதை நான் மேனேஜ் பண்ணிப்பேன்…
தென்… எனக்கு மார்னிங் முழிச்சதும் காபி வேணும்… பிரேக் ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் எல்லாமே உன் இஷ்டம் தான்… பட் பியூர் வெஜிடேரியன் மட்டும் தான் சமைக்கணும்…
அப்புறம் நீ புரஃபசனல் கிட்னாப்பர் இல்லைங்கிறதால என்னைக் கடத்துன உனக்கு நான் போட்டுக்க டிரஸ்ஸுக்கு எங்கே போவேனு உறைக்காம போயிடுச்சு… சோ எனக்கு நாளைக்கு சேஞ்ச் பண்ணிக்க வேற டிரஸ் வேணும்” என்று அவள் நிறுத்தவும் நான்கு ஆண்மகன்களுக்கும் ஆச்சரியம்.
அவந்திகா நெற்றியில் ஆட்காட்டிவிரலால் தட்டிவிட்டு “இப்போதைக்கு இது போதும்.. இன்னும் எதாவது வேணும்னா நானே உன் கிட்ட சொல்லுறேன்” என்றபடி ராகவின் அருகில் வந்தவள் அவன் வைத்திருந்த மொபைலைக் கிட்டத்தட்ட அவன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டாள். பின்னர் பொறுமையாக அவனது பெருவிரலை அழுத்த போனின் திரை ஒளிர்ந்தது.
அதில் கடவுச்சொல்லை மாற்றி வைத்துவிட்டுக் கையோடு போனையும் எடுத்துச் சென்றுவிட்டாள். அவளது தொடுகை கொடுத்த அதிர்ச்சியில் அவன் சிலையானதாலோ என்னவோ ராகவ், அவந்திகா அங்கிருந்து நகரும் வரை விழி தட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் சென்றதும் அவளது தொடுகையில் விதிர்த்துப் போன தன்னையும், அவளது பேச்சை கேட்டு வாயடைத்துப் போய் நின்ற சகோதரர்களையும் எண்ணி எரிச்சலுற்றவன்
“ஏன் சிலை மாதிரி நிக்கிறிங்க? இவளைக் கிட்னாப் பண்ணுனதுக்கு நான் தான் ஷாக் ஆகணும்… என்ன பொண்ணுடா இவ? ஏதோ எக்ஸ்கர்சன் வந்த மாதிரி பேசிட்டுப் போறா… என்னோட பெர்மிசன் இல்லாம என் போனை என் கிட்ட இருந்து பிடுங்கிட்டு டயலாக் வேற பேசிட்டுப் போறா.. அம் ஐ லுக்கிங் லைக் அ சர்வெண்ட்? என் கிட்ட யாருமே இப்பிடி பிஹேவ் பண்ணுனது இல்லை…
நாலு பசங்க, அதுவும் அவளுக்கு யாருனே தெரியாத நாலு பசங்களோட ஒரே வீட்டுல ட்வென்ட்டி ஒன் டேய்ஸ் இருக்கணும்னு ஒரு பயம் இல்லை… டென்சன் இல்லை… அது சரி, இதெல்லாம் அவளுக்கு எதுக்கு வரப் போகுது? இந்த ட்வென்டி ஒன் டேய்ஸ் இன்னும் என்னென்ன வினோதமா பண்ணி வைக்கப் போறாளோனு நம்ம தானே டென்சன் ஆகணும்” என்று புலம்பலில் முடித்தான்.
வருணும் மற்ற இருவரும் இதைப் பார்த்து நமட்டுச்சிரிப்புடன் நிற்க வருணை ஆதங்கத்துடன் பார்த்த ராகவ்
“பய்யா! அட்லீஸ்ட் நீங்க உங்களோட கேர்ள் ஃப்ரெண்ட் போட்டோவாச்சும் எங்களுக்குக் காட்டிருக்கலாம்” என்று கூறவும் அவன் தம்பியின் தோளைத் தட்டிக்கொடுத்த படி அங்கிருந்து அகன்று அவர்கள் நால்வரும் வழக்கமாகக் கொட்டமடிக்கும் அறைக்கு இழுத்துச் சென்றான்.
அதே நேரம் அவந்திகா மாடியறையில் தஞ்சமடைந்தவள் தன்னை நினைத்து வருந்தும் குடும்பத்தினரையோ, தோழிகளையோ பற்றி எவ்விதக் கவலையுமின்றி யூடியூபில் பாடல் கேட்க ஆரம்பித்திருந்தாள்.
கவலைப்படுவதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்பது அவளின் வாதம். எப்படி இருந்தாலும் நிச்சயதார்த்தம் நின்றிருக்கும், இன்னும் இருபத்தியோரு நாட்களில் மீண்டும் அவள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பப் போகிறாள். பின் ஏன் தேவையில்லாது வருந்த வேண்டும் என்று தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டாள்.
அறிமுகமற்ற நான்கு வாலிபர்களுடன் பெயர் தெரியாத இடத்தில் தங்குவதற்கு அவளுக்கும் சற்று தயக்கம் தான். ஆனால் அவளுக்குத் தோழியின் காதலன் மீது நம்பிக்கை இருந்தது. அதே போல தவறு நடந்துவிட்டது என்று அறிந்ததும் பதறிய ராகவின் மீதும் முழு நம்பிக்கை இருந்தது.
என்ன தான் அவன் கோபப்பட்டாலும் ஒரு பெண்ணின் திருமணம் நிற்க காரணமாகிவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி அவன் முகத்தில் தெரிவதைக் கண்டுகொண்ட பின்னர் தான் அவந்திகா இவர்களுடன் தங்குவதில் எந்த பயமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தாள்.
அவள் எப்போதும் அப்படித் தான். ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்று அழுது புலம்புவதில் விருப்பமற்றவள். அதே போல இன்னாரால் தானே நான் அவதிப்படுகிறேன் என்று யாரையும் குற்றம்சாட்டும் எண்ணமும் அவளுக்குத் துளியும் இருக்காது. நடந்த அசம்பாவிதத்தைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுவதே புத்திசாலித்தனம் என்பாள் அவந்திகா. இப்போதும் அதே மனநிலையுடன் தெளிவாகத் தான் இருந்தாள்.
பின்னாளில் அவளது இந்த குணமே அவளது நாயகனை அவள் வசம் சேர்த்து வைக்கும் என்ற விஷயத்தை அறியாமல் பாடல்களைக் கேட்டபடி கண்ணுறங்க ஆரம்பித்தாள் அவந்திகா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


