தலையில் பாறாங்கல்லை வைத்து அழுத்தினாற்போன்ற கனமான உணர்வுடன் எழுந்தாள் அவந்திகா. தான் எங்கே இருக்கிறோம் என்று எண்ணியபடி கண்ணைத் திறந்தவளுக்குத் துணையாய் அந்த அறையில் கண் சிமிட்டிக்கொண்டிருந்தது ஒரு ஜீரோ வாட்ஸ் பல்ப்.
அதன் ஊமைவெளிச்சத்தில் கண்களால் அந்த அறையைத் துளாவியவளுக்கு இப்போதும் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை. தலைபாரம் வேறு இம்சிக்க மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்தவளுக்கு இறுதியாக நினைவிருந்த காட்சி ஒரு பிரெஞ்ச்தாடிக்காரனின் கண்ணாடி அணிந்த முகம். அவன் தனது முகத்தில் ஏதோ ஸ்பிரே அடித்தான் என்பது வரை நினைவிலிருந்தது.
அதற்குப் பின்னர் என்னவாயிற்று என்று எவ்வளவு யோசித்தும் அவளது மூளையில் எந்தக் காட்சியும் தோன்றவில்லை.
தனக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு தான் மயங்கியிருக்கிறோம், விழித்த பிறகு பார்த்தால் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு இடத்தில் அடைபட்டிருக்கிறோம் என்றால் தான் கடத்தப்பட்டிருக்கிறோமா என்று யோசித்தவளுக்கு அவளது மூளை அளித்த விடை ‘ஆம்’…
தலையில் கைவைத்தபடி கதி கலங்கிப் போன அவந்திகா விறுவிறுவென்று அந்த அறையில் சாளரங்கள் ஏதும் தென்படுகிறதா என்று தேடத் துவங்க, அவளின் துரதிர்ஷ்டம் அங்கே பெயருக்குக் கூட ஒரு சாளரமும் இல்லை. இப்போது எப்படி தப்பிப்பது என்று எண்ணியவளின் மூளை தாறுமாறாகச் சிந்திக்க ஆரம்பித்தது.
ஏ.சியின் மெல்லிய காற்றிலும் வியர்வை அரும்புகள் அவளின் நெற்றி மற்றும் மேலுதட்டில் பூக்க ஆரம்பிக்க, எதேச்சையாக அவளது கரம் அவள் அணிந்திருந்த ஆரத்தின் மீது பட்டது. அதைக் தொட்டதும் அனிச்சை செயலாக அடுத்து கம்மல், வளையல் என்று மாற்றி மாற்றித் தடவிப்பார்த்தவளுக்கு நகைக்காக இந்தக் கடத்தல் நடைபெறவில்லை என்பது தெளிவானது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எவ்வளவு யோசித்தும் விடை தெரியாத கேள்வியை அக்கேள்வி எழும்பக் காரணமானவனிடம் கேட்பதே உசிதம் என்று உணர்ந்தவள் வேகமாகக் கதவை நோக்கிச் சென்றாள்.
கதவைத் தட்டியவள் “யாராவது இருக்கிங்களா?” என்று கன்னடத்தில் கத்த எதிர்முனையிலிருந்து அதற்கு எப்பதிலும் வரவில்லை. மீண்டும் மீண்டும் கத்தியவளுக்குத் தொண்டை வறண்டுவிட “யூ ராஸ்கல்! கிட்னாப் பண்ணிட்டு ஆன்சர் கூட பண்ணாம இருக்கியா?” என்று பொங்கிய சினத்துடன் உரைத்தவள் அங்கே கதவை உடைக்க எதாவது தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்தாள்.
ஒரு பித்தளை பூக்கிண்ணத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லாது போக அவந்திகாவுக்குக் கண் மண் தெரியாமல் வந்த கோபத்திற்கு முதலில் பலியானது அந்த அறையின் ஒரு மூலையிலிருந்த ஆளுயரக்கண்ணாடி தான்.
கையில் வைத்திருந்த பூக்கிண்ணத்தை சினத்துடன் கண்ணாடி மீது தூக்கியெறிய அது ‘சிலீரென்ற’ சத்தத்துடன் நொறுங்கியது. அது உடைந்தச் சத்தம் கேட்கவும் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
திறந்த கதவின் வழியே தெரிந்த ‘பளீர்’ வெளிச்சத்தில் கண் கூசவும் கரங்களைக் கொண்டு ஒளியை மறைக்க முயன்று தோற்றவளை நெருங்கினான் நிழலுருவமாக அவள் கண்ணுக்குத் தெரிந்த ராகவ்.
அவன் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைக்க அவந்திகா என்ன யோசித்தாளோ வேகமாக நொறுங்கிய கண்ணாடியின் பெரியத் துண்டை எடுத்துக்கொண்டவள் “ஏய்! கிட்ட வராதே! வந்தா நீ உயிரோட இருக்க மாட்டேடா” என்று பயத்தில் நடுங்கும் கரங்களைக் கட்டுப்படுத்தியபடி கூற
ராகவ் எங்கே கண்ணாடி அவள் கரங்களைக் கிழித்துவிடுமோ என்று பதறியபடி “ஹேய் ஜான்சிராணி! ஃபர்ஸ்ட் அந்த கிளாஸ் பீஸை தூக்கி எறி… இல்லைனா கையில காயம் பட்டுடும்” என்று ஹிந்தியில் பேசிவிட அவந்திகாவுக்கு இந்தக் குரலுக்குச் சொந்தக்காரனின் கோபப்பேச்சு நினைவுக்கு வந்தது.
அவளறியாமல் அவளது உதடுகள் உச்சரித்த வார்த்தை “மிஸ்டர் கபூர்”… இவன் பிரதியுஷாவின் காதலன் அல்லவா என்று யோசித்தவள் வேகமாக கண்ணாடித்துண்டைக் கீழே வீசிவிட்டு அந்த அறையின் சுவிட்ஸ்போர்டை நெருங்கி சுவிட்சை போட ஏதோ ஒரு சுவிட்சைத் தொட்டதும் அந்த அறையின் ஊமை வெளிச்சம் அகன்று பாலொளியை மின்விளக்கு உமிழ ஆரம்பித்தது.
வெளிச்சத்தில் அவன் முகத்தைக் கண்டதும் அவந்திகாவுக்கு கோபம் உச்சந்தலையில் தாண்டவமாட அவன் அருகில் சென்றவள் ராகவின் சட்டையைக் கொத்தாகப் பற்றிக்கொண்டு
“ஹேவ் டேர் யூ டு கிட்னாப் மீ? உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா… அங்கே எனக்கு நிச்சயதார்த்தம்னு எல்லாரும் காத்திருப்பாங்க… நீ என்னைக் கடத்திட்டு வந்து இங்கே வச்சிருக்க…. இது மட்டும் என் சித்திக்குத் தெரிஞ்சா அவங்க மனசொடைஞ்சுப் போயிருவாங்க… மண்டபவாடகை, சாப்பாட்டுச்செலவுனு எல்லாமே உன்னால வேஸ்ட் ஆகியிருக்கும்… எல்லாத்தையும் விட என் சித்தியோட மானம், மரியாதை எல்லாம் நாசமா போயிருக்கும்… ஏன் அமைதியா நிக்கிற? பதில் சொல்லு” என்று அவன் சட்டையைப் பற்றி உலுக்கியெடுக்கவும் ராகவின் பொறுமை காற்றிலிட்டக் கற்பூரமாய்க் கரைந்தது.
அவளது கரங்களைச் சட்டையிலிருந்து விலக்கியவன் அதோடு சேர்த்து அவளையும் விலக்க, அவந்திகா அவன் தொட்டக் கரத்தை ஒருவித அசூயையுடன் உதறிக்கொண்டாள்.
ராகவ் கோபத்தை அடக்கியக்குரலில் “லுக்! உன்னை மாதிரி ஏமாத்துக்காரிக்குக் கோபமே வரக்கூடாது” என்று புருவம் உயர்த்தி ஆட்காட்டிவிரலால் எச்சரித்தபடி அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளை உச்சரிக்க
அவந்திகா அதை அலட்சியப்படுத்திவிட்டு “ஏன் உன்னை மாதிரி கிட்னாப்பருக்கு மட்டும் தான் கோவம் வரணும்னு கவர்மெண்ட் எதாவது ரூல் போட்டிருக்காங்களா?” என்று கோபம் தெறிக்கும் குரலில் கேட்க
“வார்த்தையை அளந்து பேசு… இல்லைனா பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும்” என்று அவன் கூறியவிதம் அவளுக்குள் குளிரைப் பரப்பினாலும் கடத்தல்காரனுக்கு இது ஒன்று தான் குறை என்று அவனுக்குச் சற்றும் குறையாத கோபத்துடன் அவனை எதிர்கொண்டாள் அவந்திகா.
“என்னடா பண்ணுவ? ஹான், நான் அப்பிடி தான் பேசுவேன்.. பிகாஸ் நான் பாதிக்கப்பட்டவ… அதுவும் உன்னால… பணம் இருக்குக்கிங்கிறதுக்காகத் தலை கால் புரியாம ஆடி, காதல்ங்கிற பேருல ஏமாத்துற உனக்கே இவ்ளோ கோபம் வந்துச்சுனா எனக்கு வரக் கூடாதா? ஐ அம் வார்னிங் யூ… மரியாதையா என்னை மண்டபத்துலயே கொண்டு போய் விட்டுடு… நான் இரக்கப்பட்டு உன்னை போலீஸ்ல மாட்டிவிட மாட்டேன்” என்று அவள் எரிச்சலுடன் கத்தவும் ராகவ் அவளை மெச்சுதல் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு கால் மேல் கால் போட்டபடி சட்டமாக அமர்ந்து கொண்டான்.
அழுத்தமான இதழ்களில் ஒரு ஏளனப்புன்னகை தவழ “ம்ம்… கண்டினியூ மிஸ் ஜான்சி ராணி அவர்களே! கேரி ஆன்…,’ என்று சொல்லிவிட்டுக் கையைக் கட்டிக்கொண்டு அவளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
அவந்திகா பொங்கிய சினத்துடன் “ஜஸ்ட் ஷட் அப் இடியட்… நான் என்ன கதையா சொல்லிட்டிருக்கேன்? நீ பண்ணுனது கிரிமினல் அஃபென்ஸ்… இதுக்கு என்ன பனிஷ்மெண்ட்னு தெரியுமா? நீ மட்டும் என்னை மண்டபத்துல கொண்டு போய் விடலைனா கட்டாயமா உன்னை ஜெயில்லை தள்ளிடுவேன்டா” என்று மிரட்டியவளின் வார்த்தைகள் அவனுக்கு ஏனோ நகைச்சுவையாகவே தோன்றியது போலும்.
“மண்டபத்துக்குப் போய் என்ன பண்ணப் போற? அங்கே இப்போ யாரும் இருக்க மாட்டாங்க… ஃபர்ஸ்ட் கிளாக்கை பார்த்துட்டுப் பேசு… உன்னை கிட்னாப் பண்ணி கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்துக்கு மேலே ஆகுது… நீ இப்போ இருக்கிறது கர்நாடகா தமிழ்நாடு பார்டர்ல உள்ள ஒரு ஃபாரஸ்ட் ஏரியாவுல… இங்கே இருந்து பெங்களூரு எவ்ளோ தூரம் தெரியுமா? என்றவனின் கேள்வியில் அவந்திகா நிஜமாகவே அரண்டு போனாள்.
அவளது மிரட்சியை ஏளனமாகப் பார்த்தபடி “நீ டயலாக் சூப்பரா பேசுற… ஆக்ட்ரஸ் ஆகிறதுக்கான எல்லா டேலண்டும் உன் கிட்ட இருக்கு… அது இருக்கப் போய் தானே அவ்ளோ அழகா காதலிக்கிற மாதிரி நடிச்ச நீ?” என்றவனைச் சுடுவது போன்று முறைத்தாள் அவந்திகா.
“வாட்? நான் யாரையோ காதலிச்சேனு நீ சொல்லித் தான் எனக்கே தெரியுது… பைத்தியம் மாதிரி உளறாதே… என் வாழ்க்கையில இது வரைக்கும் நான் யாரையும் காதலிச்சது இல்லை…” என்று தீர்மானமாக உரைத்தவளை அவன் நம்பினால் தானே!
அந்நேரம் பார்த்து அவள் மனதில் யாரையாவது காதலித்துத் தொலைத்திருக்கலாமோ என்று நேரம் காலம் தெரியாமல் ஒரு எண்ணம் உதித்தது.
அது உதயமானதுமே மண்டையில் சற்று பலமாகக் கொட்டிக் கொண்டவளின் மூளை அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்தது.
எப்படியும் நிச்சயதார்த்தம் நின்று போயிருக்கும். தான் வீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக இந்த ‘மிஸ்டர் கபூரை’ போலிசில் சிக்க வைக்கவேண்டும். அதன் பின்னர் சித்தியிடம் வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு சொல்ல வேண்டும். ஏனென்றால் சத்தியமாக அந்த விக்ரம் தனக்காகக் காத்திருக்கும் அளவுக்குத் தியாகி இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
அவந்திகா இவ்வாறெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க ராகவ் “இப்போ கூட எவ்ளோ கிளவரா ஆக்ட் பண்ணுறா இந்தப் பொண்ணு” என்று பொருமியபடி அமர்ந்திருந்தான்.
அவள் இறுதியாகச் சொன்ன ‘நான் யாரையும் காதலிக்கவில்லை’ என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டவன் “நானும் அதைத் தான் சொல்லுறேன் ஜான்சி ராணி…நீ இது வரைக்கும் யாரையும் காதலிச்சது இல்லை… காதலிச்ச மாதிரி நடிச்சிருக்க” என்று பழைய குருடி கதையாகக் கூறவும் அவந்திகா எரிச்சலுற்றாள்.
“காதலிக்க மாதிரி நடிக்கிறதுலாம் உன்னை மாதிரி ஹை கிளாஸ் பீபிளோட வேலை… அதுல்லாம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது” என்று வெட்டிப் பேசினாள் அவந்திகா.
ராகவ் செய்வதையும் செய்துவிட்டு இவளுக்கு வாய் வேறு என்ற கோபத்தில் நாற்காலியைப் ‘படாரென்று’ தள்ளிவிட்டு எழுந்தவன் “அப்போ உன்னை மாதிரி ராயல் ஃபேமிலியில வளருற பொண்ணுங்க என்ன பண்ணுவிங்க?” என்று வருணின் நினைவில் பற்களைக் கடித்தபடி கேட்க வாயிலில் நிழலாடியது.
இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க அங்கே நிலை உயரத்துக்கு வந்து நின்றவன் வருண். முகத்தில் நம்ப முடியாத பாவனையுடன் ராகவைப் பார்த்தவன் அவன் அருகில் நின்ற அவந்திகாவைக் கண்டதும் “ஹனிபி நீங்க இங்க என்ன பண்ணுறிங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்க ராகவ் இவளுக்கு இன்னும் எத்தனை பெயர்கள் தான் இருக்கிறதோ என்ற எரிச்சலுடன் அவந்திகாவைப் பார்த்தான்.
அவந்திகாவோ தனது தோழிகள் மட்டும் அழைக்கும் செல்லப்பெயர் இந்த நெடியவனுக்கு எப்படி தெரியவந்தது என்ற யோசனையுடன் “நீங்க யாரு? உங்களுக்கு எப்பிடி இந்த நேம் தெரியும்?” என்று படபடக்க இப்போது தான் எதுவோ சரியில்லை என்று ராகவின் மூளைக்கு உறைத்தது.
வருண் “நீங்க ரதியோட ஃப்ரெண்ட் தானே… அவ அடிக்கடி உங்களையும் ரித்தியையும் பத்தி பேசுவா” என்று இறுகியக்குரலில் கூறிவிட்டு நின்றான்.
அவந்திகாவுக்கு அவனது ‘ரதி’ என்ற விளிப்பு பிரதியுஷாவின் பேச்சை நினைவுறுத்த ராகவைத் தன் கண்ணால் அளவிட்டவள் மெதுவாக வருணிடம் திரும்பி “ஆர் யூ மிஸ்டர் கபூர்?” என்று கேட்க
வருண் ஒரு தலையசைப்புடன் அதை ஆமோதித்தவன் “எஸ்… ரதி என்னை அப்பிடித் தான் கூப்பிடுவா… பை த வே ஐ அம் வருண் கபூர்” என்று கூறி ராகவையும் அவந்திகாவையும் ஒருசேர அதிரவைத்தான்.
அவந்திகா மனதிற்குள் “இந்த நெட்டைக்கொக்கு தான் மிஸ்டர் கபூர்னா, இந்த மைதாமாவு யாரு? தேவை இல்லாம இவ்ளோ நாளா இவனைத் திட்டித் தீர்த்திருக்கேனே” என்று எண்ணி குற்றவுணர்ச்சியுடன் ராகவை நோக்க அவன் முகமோ உணர்வின்றி கல் போல இருந்தது.
“இந்தப் பொண்ணு ரதி இல்லைனா நான் தப்பான ஒருத்தியைக் கடத்தி அவளோட என்கேஜ்மெண்ட் நிக்கிறதுக்குக் காரணமா ஆயிட்டேனா? தப்பு பண்ணிட்டேனே… இப்போ இந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ் என்ன மாதிரி மனநிலையில இருக்காங்களோ?” என்று குற்றவுணர்ச்சியில் தவிக்க ஆரம்பித்திருந்தான் ராகவ்.
அவந்திகா அவனது உணர்ச்சியற்ற முகத்தைப் பார்த்துவிட்டு வருணிடம் திரும்பியவள் “உங்களால எத்தனை பேருக்குக் கஷ்டம் தெரியுமா? என்னோட உஷாவுக்கு, எனக்கு, அப்புறம் இதோ இவனுக்கு” என்று ராகவை ஆட்காட்டிவிரலால் சுட்டிக் காட்டினாள்.
பின்னர் பெருமூச்சை எடுத்துவிட்டவள் “இட்ஸ் ஓகே! முடிஞ்சு போனதை பேசி எதுவும் ஆகப் போறது இல்லை… என்னை பெங்களூருக்கு அனுப்பி வச்சிடுங்க… என்னோட சித்தி ரொம்ப பயந்து போயிருப்பாங்க” என்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவுறுத்தவே ராகவ் திடீரென்று சுயநினைவு வந்தவன் போல விழித்தவன் அவந்திகாவின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.
“நான் தானே உன்னைத் தூக்கிட்டு வந்தேன்… நானே உன்னைக் கொண்டு போய் விடுறேன்.. லெட்ஸ் கோ” என்றபடி அவளுடன் அந்த அறையை விட்டு வெளியேற முயல அவர்களைத் தடுத்தது வருணின் குரல்.
“எப்பிடி உன்னால அவளைக் கூட்டிட்டுப் போகமுடியும் ராகவ்? நீ நியூஸ் சேனலை பார்க்கலையா? இன்னைக்கு ஈவினிங் சிக்ஸ் ஓ கிளாக்குக்கு அப்புறம் டோட்டல் கர்நாடகாவுக்குள்ளயும் எந்த போக்குவரத்தும் நடக்காதுனு கவர்மெண்ட் அனவுன்ஸ் பண்ணிட்டாங்க… வைரஸ் பரவுறதைத் தடுக்கிறதுக்காக இன்னும் ட்வென்டி ஒன் டேய்ஸ் எந்த வண்டியும் சிட்டிக்குள்ளவோ வேற எங்கேயோ போகக் கூடாதுனு அனவுன்ஸ் பண்ணிட்டாங்க… ஈவன் பப்ளிக் யாருமே வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதுனு சொல்லிருக்காங்க… இந்த நேரத்துல உன்னால இங்கே இருந்து போகவே முடியாது” என்று சொல்லி விடவே வாழ்க்கையில் முதல் முறையாக ராகவ் தான் செய்த செயலை நினைத்து வருந்த தொடங்கினான்.
தான் பற்றியிருந்த அவந்திகாவின் கரத்தை உற்றுநோக்கியவன் அவளது முகத்தைப் பார்க்கும் அளவுக்குத் தைரியமின்றி கல்லாய்ச் சமைந்தான்.
அவனது மனம் குற்றவுணர்ச்சியில் தவிக்க, அவந்திகாவோ “பெருமாளே! இன்னும் ட்வென்ட்டி ஒன் டேய்சுக்கு நான் இங்கே இந்த மைதா மாவு கூடத் தான் இருக்கணுமா? இட்ஸ் ஓகே… என்னை என்னலாம் சொல்லித் திட்டிருப்பான்… அதுக்குலாம் திருப்பிக் குடுக்க வேண்டாமா? மகனே நீ மாட்டுனடா…” என்று எண்ணி உள்ளுக்குள் குதூகலித்தாள். குற்றவுணர்ச்சியில் தவித்த ராகவோ, அவனைப் பழிவாங்க கிடைத்த வாய்ப்பில் குதூகலித்த அவந்திகாவோ இந்த இருபத்தியோரு நாட்கள் தங்கள் வாழ்வில் நிகழ்த்தப் போகும் வண்ணமயமானக் குழப்பத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


