அவன் தன் அதிகாரத்தைக் கவிதையால் போர்த்தி, அத்தனை அழகாக ஒரு மாயவலையைப் பின்னினான்; என் தயக்கங்கள் அனைத்தும் அவனது பிடிவாதத்திற்குப் பணிந்து மௌனமாய் உருகிப்போயின.
-வெண்பா
“கல்யாணத்துக்குப் போனோமா வந்தோமானு இருக்கணும். சின்னதுரை வீட்டுக் கல்யாணம்ங்கிறதால நம்ம பக்கத்து ஆளுங்களும் வருவாங்க. அவங்க பேசுற மாதிரி எதையும் செய்யக் கூடாது.”
செண்பகராமன் கறாராய்ச் சொன்ன அறிவுரைகள் யாவற்றுக்கும் தனது தலையசைப்பைப் பதிலாய்க் கொடுத்தாள் வெண்பா. இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கு வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னைக்குப் பேருந்து.
கிளம்பும் முன்னர் மகளுக்குச் சில அறிவுரைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார் செண்பகராமன். அவளுக்கும் திருமணப் பேச்சு முடிவாகியிருக்கிறது. இச்சூழலில் அவள் சின்னதாய் ஒரு தவறு செய்தாலும் அதைப் பூதாகரமாக்கித் திருமணத்தில் குட்டையைக் குழப்ப ஆட்கள் தயாராய் இருப்பார்கள். அதை அறிந்தவர் செண்பகராமன். வெண்பாவும் தந்தை பேச்சைத் தட்டாதவள் என்பதால் அனைத்தையும் கேட்டுகொண்டாள் அமைதியாக.
உமையாளும் ஹேமாவும் அவளுக்கு வேண்டிய உடைகளை எடுத்துவைத்துவிட்டார்கள். இரவுணவைக்கூட வீட்டிலேயே சாப்பிட்டுவிடலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அனைவரோடும் அமர்ந்து சப்பாத்தியையும் ஒயிட் குருமாவையும் காலி செய்துவிட்டு எழிலனின் காரில் திருநெல்வேலிக்குக் கிளம்பினாள் வெண்பா.
“மாப்பிள்ளைகிட்ட நீ சென்னைக்கு வர்றதைச் சொல்லிட்டேன். உனக்கு எதுவும் உதவி வேணும்னாகூட நீ வெளியாளுங்ககிட்ட கேக்கமாட்ட. அவர் அங்க இருக்குறது உனக்கு நல்லதுதானே?”
“ம்ம். சரிண்ணா”
எழிலன் கார் ஓட்டிக்கொண்டிருக்கத் தனது மொபைலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வெண்பா. வாட்ஸ்அப்பில் அவளுடன் பள்ளியில் பணியாற்றும் அமுதாவிடம் சாட் செய்துகொண்டிருந்தாள்.
“என் கிளாஸ் லீடர் ஹேமாவ நீ பாத்திருக்கல்ல, அவளைக் காணலனு அவ பேரண்ட்ஸ் ஸ்கூலுக்குப் போன் பண்ணி விசாரிச்சாங்க. இன்னைக்கு ட்வெல்த்துக்கு நடந்த ஸ்பெஷல் கிளாஸுக்கு வந்த பொண்ணு வீட்டுக்குத் திரும்பிப் போகலையாம்.”
வெண்பாவுக்கு மனம் பிசைந்தது ஒரு மாதிரி. தற்போது பெண்கள் பாதுகாப்புக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லாத சூழல். ஒரு பெண்ணாய், ஓர் ஆசிரியையாய் அவளுக்குக் கவலை வந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லையே!
“போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்தாச்சா?”
“அவங்ககிட்ட போனா என்ன சொல்லுவாங்கனு உனக்குத் தெரியாதா?”
“வாஸ்தவம்தான்! அவ வீட்டுக்கு வந்துட்டானா எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க”
அவளிடம் சாட் செய்துகொண்டிருக்கையில் நேத்ரனிடமிருந்து செய்தி வந்தது.
“பஸ்ல ஏறியாச்சா டீச்சரம்மா?”
“அண்ணாகூட இப்பதான் வண்ணாரப்பேட்டைக்குப் போயிட்டிருக்கேன் நேத்ரன். நீங்க என்ன இவ்ளோ சீக்கிரம் ஆன்லைன் வந்துட்டீங்க? சாப்பிட்டாச்சா?”
“கவர்னரைப் போய்ப் பாத்தாச்சு. அவர் ஆட்சியமைக்க அழைச்சிட்டார். நாளை மறுநாள் சட்டமன்றம் கூடப்போகுது. அமைச்சரவையும் முடிவாகிடுச்சு. மைண்ட் இப்பதான் ரிலாக்ஸா இருக்கு. அதான் உன்கிட்ட பேசலாம்னு ஆன்லைன் வந்தேன். டின்னர் இனிமேதான்! பெரியப்பாவும் நானும் ஒண்ணாதான் சாப்பிடுவோம்”
“ம்ம்! நாளைக்கு மார்னிங் நீங்க என்னைப் பிக்கப் பண்ணிக்க வருவீங்களா?”
“நான் வரணும்னு டீச்சரம்மாக்கு அவ்ளோ ஆசை”
எப்போதும் போலச் சீண்டியவன் அவளைப் புன்னகைக்கவைக்கத் தவறவில்லை. வெண்பாவுக்கு அவனைப் பார்க்க மெய்யாகவே ஆசைதான். ஆனால் வெளிப்படையாகச் சொல்லத் தயக்கம்.
“என்னாச்சு? டீச்சரம்மாக்கு நெட்வொர்க் பிரச்சனையா?”
“இல்ல! நீங்க வாங்களேன்.”
“ம்ம்! வந்துட்டாப் போச்சு”
பேச்சினிடையே வண்ணாரப்பேட்டையும் வந்துவிட்டது.
இரவின் இதமான குளிரோடு திருநெல்வேலி மாநகரம் உறங்கத் தயாராகிக்கொண்டிருக்க, வண்ணாரப்பேட்டை பைபாஸில் அந்த அதிநவீன சொகுசுப் பேருந்து பயணிகளுக்காகக் காத்து நின்றது.
எழிலனிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்ற கையோடு உள்ளே ஏறித் தனக்கான ‘விண்டோ சீட்’ ஸ்லீப்பரில் அமர்ந்துகொண்டாள் வெண்பா. ஏசியின் மெல்லிய சிலுசிலுப்பும், இருள் போர்த்திய உட்புறத்தின் நீல நிற டிம் லைட் வெளிச்சமும் அவளுக்கு இதமாக இருந்தன.
எழிலனின் கார் கிளம்பியதும் பேருந்தும் கிளம்பியது. தனக்கான போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு, மொபைலில் ‘கிளம்பியாச்சு’ என நேத்ரனுக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள்.
மறுகணமே, ‘ஸ்லீப் வெல் டீச்சரம்மா! நாளைக்குக் காலையில சென்னையில உன்னை ரிசீவ் பண்ண உன் எம்.எல்.ஏ வெயிட்டிங்ல இருப்பான்’ எனப் பதில் வந்தது.
இதழ்களில் உதிர்ந்த புன்னகையோடு, இயர்போனைக் காதுகளில் செருகி இளையராஜாவின் மெலடிகளில் தன்னைத் தொலைத்தாள் வெண்பா.
பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…
இனி வரும் முனிவரும்…
தடுமாறும் கனிமரம்…
பேருந்து மதுரை, திருச்சி என நெடுஞ்சாலையின் இருளைக் கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்தது. ஜன்னல் வழியே தெரிந்த நிலவொளியும், பின்னோக்கி ஓடும் மரங்களும், எதிரே கடந்து செல்லும் லாரிகளின் மஞ்சள் விளக்குகளும் அவளது பயணத்திற்கு ஓர் அழகியலைக் கூட்டின. நேத்ரனின் நினைவுகளோடும், அவனைக் காணப்போகும் எதிர்பார்ப்போடும் அவளது இரவும் உறக்கமும் இனிமையாகக் கழிந்தது.
விடியலின் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்ய, லேசாகக் கண்விழித்தாள் வெண்பா. செங்கல்பட்டைத் தாண்டிப் பேருந்து சென்னையின் எல்லைக்குள் நுழைந்திருந்தது. திருநெல்வேலியின் நிதானமான காலை நேரத்திற்குப் பழகிய அவளது கண்களுக்கு, சென்னையின் விடியல் அசுர வேகத்தில் இயங்குவது போலத் தெரிந்தது. வண்டலூர், பெருங்களத்தூர் என ஒவ்வொரு நிறுத்தமாகப் பயணிகள் இறங்க, கிண்டியில் இறங்குவதற்காகத் தன் ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு தயாரானாள் வெண்பா.
கிண்டி மேம்பாலத்தின் கீழே பேருந்து நின்றதும், தன் ட்ராலி பேக்கோடு கீழே இறங்கினாள். காலை நேர டிராஃபிக், எங்கும் விரையும் வாகனங்கள், ஐ.டி கம்பெனிகளுக்கு ஓடும் இளைஞர்கள் என அந்த இடமே பரபரப்பாக இருந்தது.
கழுத்தைச் சுற்றி மெல்லிய காற்றில் ஆடிய தன் அலைபாயும் கூந்தலை ஒதுக்கிவிட்டபடி, மொபைலை எடுத்து நேத்ரனுக்கு அழைக்கப்போன மறுகணம், அவளுக்கு முன்னால் ஒரு சொகுசான கருப்பு நிற ஆடி கார் வந்து நின்றது.

காரின் முன்பக்கக் கதவு திறக்க, சேஜ் பச்சை வண்ணத்தில் முழங்கை வரை ஏற்றிவிடப்பட்ட ஸ்லீவுடன் கொஞ்சம் ஓவர் சைஸ் டீஷர்ட்டும், ஜீன்ஸுமாக, இறங்கினான் நேத்ரன். எந்தப் பெண்ணும் கட்டாயம் ஒரு முறை திரும்பிப் பார்க்கும் கம்பீரம். ஆனால் அவனது காந்தக் கண்களோ கூட்டத்திற்கு நடுவே தன் தேவதையை மட்டுமே தேடிப் பிடித்தன.
“வாட் எ சர்ப்ரைஸ்! எம்.எல்.ஏ சார் ஸ்பாட்ல கரெக்டா இருக்கீங்க? அரசியல்வாதிங்க பங்ச்சுவாலிட்டில வீக்னு நினைச்சேன்” என்றாள் வெண்பா, முகம் மலர அவனை நோக்கி நடந்துவந்தபடி.
“என்னோட வி.ஐ.பி வர்றாங்க. நான் ஸ்பாட்டுக்கு வராம இருப்பேனா?” என்றபடி, அவளது கைகளில் இருந்த ட்ராலியை வாங்கிக் காரின் டிக்கியில் வைத்தான் நேத்ரன்.
“சென்னை வைப்ஸ் எப்பிடி இருக்கு டீச்சரம்மா? டிராஃபிக்கைப் பார்த்து மிரண்டுட்டீங்களா?” என்று அவன் குறும்பாகக் கண்ணடிக்க,
“நான் என்ன சின்னப் பிள்ளையா மிரளுறதுக்கு? நெல்லையில இருக்குற அதே மனுஷங்கதானே இங்கயும் இருப்பாங்க. இதுல மிரளுறதுக்கு என்ன இருக்குதாம்?” என்று பொய்யாக முறைத்தாள்.
“பார்றா! ஊரைத் தாண்டி வந்ததும் சிட்டுக்குச் சிறகு முளைச்சிடுச்சு போலயே. பேச்சுல பயமில்ல” என்று அவளது மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்டினான்.
“அதே மாதிரி சென்னை வந்ததும் எம்.எல்.ஏவோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ் வேற லெவல் ஆகிடுச்சே. என்ன விஷயம்?”
“எல்லாம் உன்னை இம்ப்ரெஸ் பண்ணத்தான் செல்லம். கெட் இன்!” என்று அவளுக்காக முன்பக்கக் கதவைத் திறந்துவிட்டான்.
காரின் உள்ளே ஏறியதும், அவளுக்கான சீட் பெல்ட்டை அவனே குனிந்து மாட்டிவிட்டான். தன்னை நோக்கிச் சரிந்தவனின் பிரசன்னத்தோடு அவனை வாசனையில் குளிப்பாட்டிய பெர்ஃபியூமின் நறுமணமும் சேர்ந்து வெண்பாவைக் கிளர்ச்சியில் ஆழ்த்தின என்றால் அது பொய்யில்லை.
முழங்கை வரை மடித்துவிடப்பட்ட ஸ்லீவின் உபயத்தால் அவன் ஸ்டீயரிங் வீலைத் திருப்பியபோது கரங்களில் எழுந்து அடங்கிய நரம்புப் பின்னல்களை அவளையறியாமல் விழிகள் ஆச்சரியமாய்ப் பார்த்தன.
“ப்ச்! இது ஒரு மானங்கெட்ட வீக்னெஸ் உனக்கு” என்று வாய்க்குள் திட்டிக்கொண்டாள் தன்னையே! மியூசிக் சிஸ்டமின் உபயத்தால் அது நேத்ரனின் செவிகளைப் போய்ச் சேராதது வரை அவளுக்கு இலாபம்தான்!
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே…
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்…
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே…
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்
கார் கிண்டியின் நெரிசலைக் கடந்து, அடையாறு நோக்கிச் சீறிப்பாய்ந்தது.
“நைட் சீக்கிரமே ஆஃப்லைன் போயிட்ட. நல்லா தூங்குனியா?” நேத்ரன் ஸ்டீயரிங்கை ஒரு கையால் பிடித்தபடி, அவளைப் பார்த்து அக்கறையாகக் கேட்டான்.
“ஸ்லீப்பர் ஏ.சி! தூக்கம் வராம இருக்குமா? நல்லாத் தூங்கிட்டே வந்தேன்,” என்றாள் வெண்பா இயல்பாக.
“ஓகே ஓகே! நேரா ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போலாமா? இல்ல, காலையில என்கூட ஒரு காபியும் ப்ரேக்ஃபாஸ்டும் முடிச்சிட்டு அங்க போகலாமா? உனக்குப் பசிக்கும்ல?”
“நான் ப்ரஷ் பண்ணவேல்ல. எப்பிடி காபி, ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம்? வேண்டாம்பா. நான் ஜானு வீட்டுக்கே போயிடுறேன்”
“அடேங்கப்பா! உலகமகா சுத்தக்காரியா இருக்கியே! எனி ஹவ்! அப்படியே ஆகட்டும் மகாராணி!” என்று சிரித்தபடியே காரின் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினான் நேத்ரன்.
கார் போய்க்கொண்டிருக்கையிலேயே அவனது மொபைல் அலறியது. காரை ஓட்டியபடி பேச அவனுக்குப் பிரியமில்லை. வெண்பாவிடம் யார் அழைத்ததெனப் பார்க்கச் சொன்னான்.
“ஜவஹர்னு வருது நேத்ரன்”
ஜவஹர் கபடிகுழுவில் விளையாடும் பையன். அமைதியானவன். காரணமில்லாமல் தொந்தரவு செய்யமாட்டான். அவனே தனது மொபைலுக்கு அழைக்கிறான் என்றால் நிச்சயம் ஏதோ முக்கியமான விஷயமாக இருக்குமென எண்ணி அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போடச் சொன்னான் வெண்பாவை.
“ஹலோண்ணா!”
“சொல்லுடா! என்ன விஷயம்? நீயே எனக்குக் கால் பண்ணிருக்க”
“நீங்க ஃப்ரீதானே? நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணலல்ல?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல! என்ன விஷயம்டா?”
“அண்ணா நம்ம முருகனைக் காணலண்ணா!” சொல்லும்போதே அந்தப் பையனின் குரல் உள்ளே போய்விட்டது. ஆனால் நேத்ரன் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டால்தானே!
“அவனுக்குக் காலேஜ்ல புராஜெக்ட் வேலை இருக்குனு சொன்னான். கைடுகிட்ட பேசப் போயிருப்பான்டா.”
“இல்லண்ணா! கதிரேசன் சார்கிட்ட பேசிட்டோம். அவன் வரலைனு சொல்லுறார். நேத்து ஈவினிங்ல இருந்து அவன் போன் ஸ்விட்ச் ஆஃப்னு அவங்கம்மா ஒரே அழுகைண்ணா”
நேத்ரனுக்கு அந்தக் கபடிகுழுவில் விளையாடும் ஒவ்வொருவரைப் பற்றியும் நன்றாகத் தெரியும். யாருமே வம்புதும்புக்கு அலைகிற ரகமில்லை. படிப்பு, விளையாட்டின் மூலம் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் அவர்கள்.
தவறான பாதையில் அவர்கள் போவதற்கான வாய்ப்பில்லை. ஆனால் முருகன் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போயிருக்கிறான் என்றால் நிச்சயம் அது சந்தேகத்தை அல்லவா விதைக்கிறது!
ஜவஹர் விட்டால் அழுதுவிடுவான் போல! பையன்கள் ஒருவருக்கொருவர் உறவுக்காரன் போலப் பழகுவார்கள். ஒருவனுக்குத் துன்பம் என்றால் மற்றொருவனின் கண் அனிச்சையாகக் கலங்கிப்போகும். அப்படியிருக்கையில் ஒருவன் காணாமலே போயிருக்கிறான் என்றால் வலிக்கும்தானே?
“நீ ஒண்ணும் கவலைப்படாத! நான் இப்பவே நம்ம ஆளுங்ககிட்ட பேசி என்ன விவகாரம்னு விசாரிக்கச் சொல்லுறேன்”
“சரிங்கண்ணா! உங்களுக்கு அங்க வேலை இருக்கும். இதைச் சொல்லி உங்களைத் தொந்தரவு…”
“அறைஞ்சேன்னா… உங்களைவிட எந்த வேலைடா எனக்கு முக்கியம்? இன்னைக்கு மதியத்துக்குள்ள முருகன் வீட்டுக்கு வருவான். அவங்கம்மாக்குத் தைரியம் சொல்லிக் கூடவே இருங்க. நான் பாத்துக்குறேன் மத்த எல்லாத்தையும்” என்று நேத்ரன் மிரட்ட அந்தப் பையன் மறுமுனையில் பணிவாய்ச் சரியென்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவனது முகத்தில் கவலையின் ரேகைகள் பரவியதைக் கண்டதும் வெண்பாவின் மனமும் அடித்துக்கொண்டது.
“என்னாச்சு நேத்ரன்? எங்க போயிருப்பான் அந்தப் பையன்?”
“தெரியலையே! நல்லப் பையன் வெண்பா. எந்தப் பிரச்சனைக்கும் போகமாட்டான். நல்லாப் படிக்குறவன் வேற. இந்த மாதிரி எப்பவும் அவன் நடந்துக்கிட்டதில்ல. அவன் வயசை நினைச்சாதான் பயமா இருக்குடி”
மெய்தானே! கல்லூரிப் பருவத்தில் வழிதவறுவதற்கான வாய்ப்பும், பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகம். என்னதான் பொறுப்பான பையனாக இருந்தாலும் அந்த வயதுக்கென சில குணாதிசயங்கள் துடித்தெழுமே! அதுதான் நேத்ரனின் கவலை.
அவனது முகமே அந்தக் கவலையைப் பிரதிபலிக்க வெண்பாவின் கரம் அவனது புஜத்தில் ஆறுதலாய்த் தட்டிக்கொடுத்தது.
“ஒண்ணும் இருக்காது நேத்ரன். டென்ஷன் ஆகாதீங்க. நாளைக்கு உங்களோட நாள்! நீங்க அதுல கவனம் வைங்க. பையன் கிடைச்சிடுவான்” என்றாள் மெதுவாய்.
“ஹோப் சோ” என்று சுருக்கமாகச் சொன்னவன் காரை ராஜா அண்ணாமலைபுரத்துக்கு ஓட்டிவரும் வரை அதிகமாய்ப் பேசவில்லை.
சின்னதுரையின் பங்களா அங்கேதான் இருக்கிறது. பங்களாவின் லொகேஷனை முந்தைய தினமே ஜானவி அனுப்பியிருந்தாள். பங்களாவை அடைந்ததும் தான் யாரெனச் சொன்னதும் காவலாளி கதவைத் திறந்துவிட்டார்.
கார் போர்ட்டிகோவில் நின்றதும், பயணக்களைப்போடு கீழே இறங்கினாள் வெண்பா. வண்டியின் சத்தம் கேட்டே பங்களாவின் பிரம்மாண்டமான தேக்குமரக் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடிவந்தாள் ஜானவி.
“ஹேய் வெண்பா! ஒருவழியா வந்துட்டியா? எவ்ளோ நாளாச்சு உன்னைப் பாத்து!” என்று உற்சாகத்தில் கத்திக்கொண்டே ஓடிவந்து வெண்பாவை இறுகக் கட்டிக்கொண்டாள்.
தோழியின் அன்பில் வெண்பாவின் முகத்திலும் பரவலான புன்னகை.
“நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டி ஜானு!” என்றவள், காரிலிருந்து இறங்கி அவர்களை நோக்கி வந்த நேத்ரனைப் பார்த்துவிட்டு ஜானவியின் புறம் திரும்பினாள்.
“ஜானு! இவரை உனக்கு நான் அறிமுகப்படுத்தியே ஆகணும். இவர் நேத்ரன். நம்ம தொகுதியோட எம்.எல்.ஏ. அண்ட் என்னோட வருங்காலக் கணவர்!” என்று வெண்பா சொல்லும்போதே அவளது கன்னத்தில் அத்தனை பெருமை மின்னியது.
“ஓ மை காட்! நேத்துதான் நியூஸ்ல பாத்தேன். நிஜமாவே கல்யாணமா? கங்க்ராட்ஸ் சார்!” என்று கண்களை விரித்து ஆச்சரியத்தோடு வரவேற்றாள் ஜானவி.
“தேங்க்ஸ் ஜானவி! அண்ட் ஜஸ்ட் கால் மீ நேத்ரன். சார்லாம் வேணாம்,” என்று இயல்பாகப் புன்னகைத்தான் நேத்ரன்.
சத்தம் கேட்டு ஜானவியின் பெற்றோரான சின்னதுரையும் ருக்மணியும் வெளியே வந்தார்கள். தங்கள் தொகுதியின் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தங்கள் வீட்டு வாசலில் நிற்பதைக் கண்ட சின்னதுரையின் முகத்தில் ஆச்சரியம் கலந்த மலர்ச்சி.
“வாங்க தம்பி! உள்ள வாங்க. வெண்பா வருவானு ராமன் சொன்னார். ஆனா உங்களை இங்க எதிர்பாக்கவே இல்லை. வாங்க,” என்று மிகுந்த அன்போடு உள்ளே அழைத்தார்.
பங்களாவின் பிரம்மாண்டமான ஹாலில் அமர்ந்த நேத்ரனை, ருக்மணி அன்போடு உபசரித்தார்.
“நாளைக்கு எம்.எல்.ஏவா பதவியேற்கப் போறீங்க. நியூஸ்ல பாத்தோம். ரொம்ப சந்தோஷம் தம்பி. எங்க மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று அவர் சொல்ல, நேத்ரன் பணிவாகத் தலையசைத்து அதனை ஏற்றுக்கொண்டான்.
“ரொம்ப நன்றி ஆன்ட்டி!”
“வெண்பாவோட நேரா இங்கதானே வர்றீங்க. காபிகூட குடிச்சிருக்கமாட்டீங்க. காலையில டிபன் சாப்பிட்டுத்தான் போகணும்,” என ருக்மணி வற்புறுத்த, அந்தப் பெரிய டைனிங் டேபிளில் வெண்பாவோடு அவனுக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது.
சுடச்சுட இட்லியும், ஃபில்டர் காபியும் அருந்தியபடியே சின்னதுரையுடன் சில அரசியல் மற்றும் பிசினஸ் விஷயங்களை மேலோட்டமாகப் பேசிக்கொண்டிருந்தான் நேத்ரன். அவனது மனதில் காணாமல் போன முருகனைப் பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தாலும், முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் அதை மிக நேர்த்தியாக மறைத்திருந்தான்.
காபியைக் குடித்துவிட்டு எழுந்தவன், “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். கட்சி ஆபிஸ்ல எனக்குக் கொஞ்சம் அவசர வேலை இருக்கு. நான் கிளம்புறேன்,” என்று விடைபெற்றான்.
அவனை வழியனுப்ப போர்ட்டிகோ வரை வந்த வெண்பாவிடம் திரும்பினான். அவனது கண்களில் இருந்த அந்த மெல்லிய பதற்றத்தை அவளால் மட்டும் வாசிக்க முடிந்தது.
“பத்திரமா இரு டீச்சரம்மா. ஈவினிங் நான் கூப்பிடுறேன்,” என்று கண்களால் விடைபெற்றுக்கொண்டு காரைக் கிளப்பினான் நேத்ரன்.
அவன் கார் கேட்டைத் தாண்டி மறையும் வரை, அந்தச் சாலையையே காதலோடும் சின்னக் கரிசனத்தோடும் பார்த்துக்கொண்டு நின்றாள் வெண்பா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


