விஹான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட்…
இந்தியாவின் தலைசிறந்த அலைபேசி சேவையை அளிக்கும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம். பெங்களூருவைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும் அந்நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருபதாயிரத்தைத் தாண்டும். தலைமை அலுவலகமான பெங்களூரு அலுவலகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட பதினைந்து வேறுபட்டத் துறைகளும் ஒவ்வொன்றிலும் குறைந்தது பத்து பணியாளர்கள், ஒரு மேலாளர் வீதம் மொத்தம் நூற்றி அறுபது பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
கிட்டத்தட்ட ஏழு மாடியுடன் பளபளத்த அக்கட்டிடம் அமைந்திருக்கும் வளாகத்தில் ஒரு பக்கம் அலுவலக ஊழியர்களுக்கென பிரத்தியேகமான நவீனரக உணவகமும், இன்னொரு பக்கத்தில் அகண்ட வாகனங்களை நிறுத்துமிடமும் இருக்க ஏகப்பட்ட ஏக்கரை வளைத்துப் போட்டு கட்டப்பட்டிருந்தது அந்த தலைமை அலுவலகம்.
அதிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது பி.எம்.டி.சி பேருந்து ஒன்று. அதிலிருந்து இறங்கினாள் இளம்பெண் ஒருத்தி. கருப்புநிற ஷோல்டர் பேக்கின் வாரை இரு கரங்களிலும் மாட்டிக் கொண்டு பேக்கை முதுகில் தஞ்சமடையச் செய்துவிட்டு, ஜீன்ஸின் பாக்கெட்டிலிருந்து மொபைல் போனை எடுத்து அதில் ஹெட்போனை மாட்டிவிட்டு மறுமுனைகளைக் காதில் மாட்டிக் கொண்டு அவளுக்குப் பிடித்தப் பாடலைக் கேட்டபடி சாலையில் ஓரத்தில் நடந்து கொண்டிருந்தாள்.
ஐந்தடி உயரத்தில், துருதுருவென்ற முகவெட்டு, பேசும்போதே கன்னத்தில் விழும் குழி இவை அனைத்தும் அவளை அழகியாக மாற்ற முயற்சிக்கும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் குணம் கொண்டவள் அவள். முக்கியமாகச் சுயமரியாதை என்ற வார்த்தையின் நடமாடும் பெண்ணுரு அவள்.
நூறு சதவீத இக்கால மாடர்ன் யுவதியாக வெள்ளை நிற ஸ்னீக்கர்ஸுடன் டெனிம் ஜீன்ஸிலும் விண்ட்டேஜ் டிசர்ட்டிலும் நிமிர்வாய்த் தெரிந்தவள் சாலையில் ஓரத்திலிருக்கும் கட்டிடங்களை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றபடியே அங்கே சென்று கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் “பய்யா கேன் யூ ப்ளீஸ் டெல் மீ தி டேரக்சன் டு விஹான் கேம்பஸ்?” என்று கேட்டுவைக்க அவன், அவள் நிற்குமிடத்திலிருந்து சில அடிகள் தூரத்தில் பெரிய மதில் சுவர்கள் சூழ்ந்திருந்தக் கட்டிடத்தைக் காட்ட அவள் புன்னகையுடன் “சுக்ரியா பய்யா” என்று சலாம் போட்டுவிட்டு அந்த வளாகத்தை நோக்கி நடைபோட்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஒரு வழியாகக் கட்டிடவளாகத்தினுள் நுழைந்தவளை காவலாளி மறித்து விவரம் கேட்கவே தான் வந்தது தொழில் சம்பந்தப்பட்டப் பேச்சுவார்த்தைக்காக என்று அவள் கூறிவிடவே, அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டுவிட்டு வருவதாகக் கூறியவர் ‘விசிட்டர்களுக்கான வெயிட்டிங் ஹாலில்’ அவளைக் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார்.
அவள் அந்த அறையை நோக்கி நகரும் போது அந்த வளாகத்தினுள் நுழைந்தது ஒரு பி.எம்.டபிள்யூ கார். அவளைக் கடந்துச் சென்ற காரின் கண்ணாடியில் சூரியஒளி பட்டு அவள் கண்ணைக் கூசச் செய்ய அனிச்சை செயலாக அவள் கரம் உயர்ந்து அந்த ஒளியைத் தடுக்க முற்பட்டது. அதற்குள் காரும் அவளைக் கடந்துச் சென்றுவிடவே அந்த இளம்பெண் காத்திருப்போர் அறைக்குச் சென்று அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தபடி போனை நோண்ட ஆரம்பித்தாள்.
அதே நேரம் அவளைக் கடந்துச் சென்ற அந்த பி.எம்.டபிள்யூ கார் பார்க்கிங்கில் நிற்க, அதன் கதவுகளைத் திறந்து கொண்டு இறங்கினான் ஒரு வாலிபன். ஆறடி உயரத்தில் பஞ்சாபிகளுக்கே உரித்தான நிறத்துடன் சிகரெட்டின் தொடர்பறியா சிவந்த உதட்டுக்குச் சொந்தக்காரனான அவனது தலைமையில் தான் இந்த விஹான் கேம்பஸ் முழுவதும் இயங்குகிறது.
தனது பளபளத்தச் சிகையைக் கோதியபடி கண்ணில் கூலர்சை மாட்டிக்கொண்டபடி பிஸினஸ்மேனுக்குரிய சர்வலெட்சணங்களும் பொருந்தும் வண்ணம் கருப்புநிற கோட் மற்றும் பேண்ட்டில் மிடுக்காக நின்றவன் ஷூக்கால்கள் டக்டக்கென்று ஒலியெழுப்ப அலுவலகத்தின் கீழ்த்தளத்திற்குள் நுழைந்தான்.
அவனைக் கண்டதும் வரவேற்பு பெண் வைத்த வணக்கத்திற்கு கம்பீரமான தலையசைப்பைப் பதிலாக அளித்தபடியே உள்ளே நுழையும் போது எதிர்பட்ட ஊழியர்களின் ‘குட் மார்னிங்’களுக்கு பதிலளித்தபடி லிப்டிற்குள் சென்றவன், அவனது அலுவலக அறை இருக்கும் மூன்றாவது தளத்தை லிப்ட் அடைந்ததும் அதிலிருந்து வெளியேறி தனது அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அவனது அறையின் கண்ணாடிக்கதவைத் திறந்துவிட்டு உள்ளே சென்றவனை லேவண்டர் நறுமணத்துடன் வரவேற்றது அவனது அலுவலக அறை. அவனுக்கு எதிலுமே ஒரு ஒழுங்குமுறை வேண்டும். அதற்கு ஏற்றாற்போன்று அவனது செகரட்டரி ரீட்டா அவனது மேஜையிலிருந்து அவன் உபயோகிக்கும் பேனா வரை அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி வைத்திருக்க அவன் இதழில் ஒரு புன்னகை குடிகொண்டது.
இதழின் புன்னகை இதயத்தினுள் ஒரு இலயத்தை உண்டுபண்ண இன்று ஏன் மனம் வித்தியாசமாய் அனைத்தையும் உணர்கிறது என்று வியந்தான் அவன். அவனது அறையின் கண்ணாடிச்சுவரின் திறப்பு வழியே பார்த்தால் மொத்த விஹான் கேம்பசும் தெரியும். அதன் வழியே வேடிக்கை பார்க்கும் போதே முன்னே பச்சைநிற புல்வெளிகளுடன் பரந்துவிரிந்து தெரிந்த கேம்பசை ஒரு ராஜகுமாரன் தனது ராஜ்ஜியத்தைப் பார்வையிடுவது போன்ற உணர்ந்தான் அவன்.
இவையனைத்தையும் தாண்டி இன்னதென்று புரியாத ஒரு உணர்வும் உள்ளத்தை ஆக்கிரமிக்க, பேண்ட் பாக்கெட்டினுள் கைவைத்தபடி நின்றான் விஹான் டெலிகாமின் எம்.டி.
அவனது நிலை இவ்வாறு இருக்க காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தவளோ யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
“டோண்ட் ஒரி… நான் கெம்பே கவுடா வரைக்கும் போகணும்… போற வழியில இங்கே வந்தேன்… நோ நோ! ப்ளீஸ் அவ கிட்ட சொல்லாதே… நான் இன்னைக்கு வாங்குற வாங்குல அவன் கண்டிப்பா அவ கிட்டத் திரும்பி வந்துடுவான்… நீ அந்த ரெயின்போ குரூப்போட ஈவெண்டுக்கு பிளான் பண்ணி வை… நான் வந்து மத்ததை உனக்குச் சொல்லுறேன்” என்று சொல்லிவிட்டு போனில் மீண்டும் பாடலை ஒளிக்கச் செய்தவளிடம் வந்தார் காவலாளி.
“நீங்க போகலாம் மேடம்… உள்ளே வரச் சொல்லிட்டாங்க” என்று கூறியவருக்கு நன்றி கூறிவிட்டு லேயர்கட் செய்திருந்த கூந்தல் அழகாய் அசைய அங்கிருந்து வெளியேறி அந்த ஏழுமாடிக் கட்டிடத்தை அண்ணாந்துப் பார்த்தபடி நடக்கத் தொடங்கினாள்.
உள்ளே நுழைந்தவளை புன்னகையுடன் வரவேற்ற வரவேற்பறை பெண் “வெல்கம் மேம்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என்று அவளது லேயர்கட் செய்திருந்த கூந்தலை ஏக்கத்துடன் பார்த்தபடி கேட்க
அந்த இளம்பெண் “ஐ வாண்ட் டு மீட் மிஸ்டர் கபூர்” என்று தெளிவாகக் கூற
“டு யூ ஹேவ் பெர்மிசன்?” என்று கேட்டவளிடம் தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கருப்புநிறத்தில் தங்கநிற எழுத்துக்கள் மின்னும் ஒரு பிஸினஸ் கார்டை எடுத்து நீட்டினாள் அந்த இளம்பெண்.
“ஐ அம் ஒன் ஆஃப் த பார்ட்னர்ஸ் ஆஃப் சன் டியூ ஈவெண்ட் அண்ட் வெட்டிங் பிளானர்ஸ்… இதைச் சொல்லுங்க… உங்க எம்.டிக்கு நான் யாருனு தெரியும்” என்று அவள் நம்பிக்கையுடன் உரைக்க
அந்த வரவேற்பு பெண் இண்டர்காமில் எம்.டியின் செகரட்டரியிடம் விவரத்தைத் தெரிவித்துவிட, செகரட்டி அந்த எம்.டியிடம் கேட்டுவிட்டு அந்தப் பெண்ணை எம்.டியின் அலுவலக அறைக்கு அனுப்புமாறு கூறிவிடவும் புன்னகையுடன் அவளது கார்டை அவள் வசம் ஒப்படைத்தாள் அந்த வரவேற்பறை பெண்.
“தேர்ட் ஃப்ளோர் மேம்” என்று தளத்தைக் குறிப்பிட்டவளிடம் புன்னகையுடன் விடைபெற்றவள் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாடலைக் கேட்டபடி அவளது ஸ்னீக்கர்ஸ் விசுக் விசுக்கென்று சத்தம் போட லிப்டினுள் நுழைந்தாள்.
மூன்றாவது தளத்தில் லிப்ட் நிற்கவும் வெளியே வந்தவள் அங்கே வந்த ஊழியர் ஒருவரிடம் “எக்ஸ்யூஸ் மீ! எம்.டியோட ரூம்?” என்று கேள்வியாய் நிறுத்த அவர் அவளுக்கு வலப்பக்கமாய் திரும்பும் படி சொல்லிவிட்டு சென்றார்.
அவரிடம் இடம் கேட்டுத் தெரிந்து கொண்டவள் ஒரு வழியாய் அதைக் கண்டுபிடித்து ‘மேனேஜிங் டைரக்டர்’ என்ற பித்தளைத்தகடு வைக்கப்பட்டிருந்த நிலையுடன் நின்ற கண்ணாடிக்கதவின் முன்னே நின்றபடி
“ஏன்டா நீ என் ஃப்ரெண்டை லவ் பண்ணுவ… அப்புறம் அவ சிச்சுவேசனைப் புரிஞ்சுக்காம பிரேக்கப் பண்ணுவ… இதைக் கேட்டுட்டு அவ வேணும்னா அழுது கரையலாம்.. ஆனா நான் உன்னை அப்பிடியே விடமாட்டேன்… இன்னைக்கு நான் உன்னை நறுக்குனு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கலை என் பேரு……..” என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.
அவளது ஸ்னீக்கர்ஸ் ஏற்படுத்திய விசுக் விசுக்கென்ற ஒலியில் இவ்வளவு நேரம் கேம்பசை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை நோக்கித் திரும்ப, அங்கே அவன் எதிரே அலுவலகச் சூழலுக்குச் சற்றும் பொருந்தாத கேசுவல் உடையுடன், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டபடி ஒரு கை மொபைல் போனைத் தாங்கியிருக்க மற்றொரு கை அவளது மினி ஷோல்டர்பேக்கின் வாரைப் பிடித்திருந்தபடி நின்றவளைக் கண்டதும் அவனுக்குள் வினோதமான ஒரு ஜந்துவைப் பார்ப்பது போன்ற உணர்வு.
தன்னை அலட்சியத்துடன் ஒற்றைப்புருவம் தூக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் மனதிற்குள் “இவ்ளோ திமிரா என் முன்னாடி யாரும் நின்னதில்லை… போயும் போயும் இப்பிடி ஒரு வினோதமான பொண்ணையா பய்யா லவ் பண்ணனும்?” என்று மனதிற்குள் கடுகடுத்தபடி அவளுக்குச் சற்றும் குறையாத அலட்சியத்துடன் அவளை எதிர்கொண்டான் அவன்.
இருவரின் விழிகளும் சத்தமின்றி வாட்போர் நடத்திக் கொண்டிருக்க முதலில் மவுனத்தை உடைத்தது அவள் தான்.
“சோ யூ ஆர் மிஸ்டர் கபூர்? அம் ஐ கரெக்ட்?” என்று கேட்டவளிடம்
“சோ யூ ஆர் த பார்ட்னர் ஆஃப் சன் டியூ ஈவெண்ட் பிளானர்? அம் ஐ கரெக்ட்?” என்று பதிலுக்கு மற்றொரு கேள்வியைக் கேட்டு அவளை ஏகத்துக்கும் எரிச்சலூட்டினான் அவன்.
தான் தேடி வந்த ஆள் அவன் தான் போல என்று ஊகித்தவள் அவன் மேஜையிலிருந்த அவனது பெயர் பலகையைக் கண்டிருந்தால் பின்னர் வந்த எவ்வளவோ பிரச்சனைகளைத் தவிர்த்திருப்பாள்.
அதே நேரம் அந்த எம்.டியும் வெறுமெனே அவளை சன் டியூவின் பார்ட்னர் என்று தெரிந்து கொண்டதற்கு பதிலாக ஒரு முறை, ஒரே ஒரு முறை அவளது பெயரைக் கேட்டிருந்தால் தான் செய்யப் போகிற காரியங்கள் தன் வாழ்வில் நிகழ்த்தப் போகும் குழப்பங்களைத் தவிர்த்திருப்பான்.
இருவரும் மிகச் சரியாக தங்கள் எதிரில் உள்ள நபரைத் தாங்கள் எண்ணிய நபரென்று தவறாக ஊகித்துக்கொள்ள விதி இருவரையும் பார்த்து நக்கலுடன் சிரித்தது.
அந்த இளம்பெண் அவன் தான் தேடிவந்த மிஸ்டர் கபூர் என்று தெரிந்ததும் வெடிக்கத் தொடங்கினாள்.
“இவ்ளோ பெரிய பிஸினஸ் கிங்டம்மை ரூல் பண்ணுற திமிர் உன் உடம்பு முழுக்கவும் இருக்கு போல.. உன் திமிரைக் காட்டுறதுக்கு காதலைத் தான் யூஸ் பண்ணுவியா? உன்னை மாதிரி திமிர் பிடிச்ச ஹைகிளாஸ் பீபிள்கு காதல்னா என்னனு தெரியுமா? அது சரி! அந்த மாதிரி மென்மையான உணர்வை உன்னை மாதிரி திமிர் பிடிச்ச ராட்சசன் கிட்ட எதிர்பார்த்தது எங்க தப்பு தான்” என்று ஏகவசனத்தில் ஹிந்தியில் காச்மூச்சென்று கத்தத் துவங்கினாள்.
அவள் எதிரில் இருந்தவனுக்கு இது வரை வாழ்வில் இம்மாதிரியான ஒரு சூழ்நிலை வந்ததே இல்லை. வெளியுலகில் மற்றவர்கள் கரம் உயர்த்துவதே அவனுக்கு வணக்கம் சொல்லத் தானேயன்றி இது போல அவன் முன்னே விரல் நீட்டி பேசியவர் எவருமில்லை.
அதுவும் இந்தப் பெண் அவனது தமையனைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி அவனது உணர்வுகளுடன் விளையாடிவிட்டு எவ்வளவு தைரியமாகத் தன் முன்னே வந்து திமிராகப் பேசுகிறாள் என்று எண்ணும் போதே உள்ளுக்குள் சுருசுருவென்று கோபம் மூளத் தொடங்கியது.
“ஷட் அப் இடியட்! உனக்குலாம் என் முன்னாடி நிக்கக் கூடத் தகுதியில்லை.. நீ என் முன்னாடி விரல் நீட்டி பேசுறியா? முதல்ல என் முன்னாடி இப்பிடி வாய்ஸ் ரெய்ஸ் பண்ணி பேசுறதை நிறுத்து… இது ஆபிஸ்; மீன்மார்க்கெட் இல்லை… அது மட்டுமில்லாம உன்னை மாதிரி ஏமாத்துக்காரிக்கு நியாயப்படி கோவமே வரக்கூடாது…
காதலிச்சு ஏமாத்திட்டுப் போனதே ஒரு அசிங்கமான விஷயம்… இதுல நீ தப்பே பண்ணலைங்கிற மாதிரி எல்லா தப்பையும் எங்க தலையில கட்டப் பார்க்குற… என்னைப் பொறுத்தவரைக்கும் காதலிக்கிறது முட்டாள்த்தனம்… அந்த முட்டாள்த்தனத்தைச் சிறப்பா செஞ்சு ஏமாத்திட்டு உனக்கு வாய் வேற ஓவரா நீளுதோ?” என்று அவனும் அழுத்தமானக் குரலில் பதிலடி கொடுத்துவிட இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டியதில் எதிரிலிருப்பவர் பேசும் வார்த்தையின் மறைபொருளை உணரவில்லை.
தனது தோழியை ஏமாற்றிய மிஸ்டர் கபூர் அவன் தான் என்று அந்த லேயர்கட் அழகியும், தனது தமையனைக் காதலித்துக் கைவிட்ட சன் டியூ நிறுமத்தின் பார்ட்னர் அவள் தான் என்று அவனும் தவறாக எண்ணிக்கொண்டு பேசிப் பேசியேச் சண்டையை வளர்த்துக் கொண்டனர்.
இருவரும் பதிலுக்குப் பதில் கத்திவிட்டு மூச்சு வாங்க நின்றனர். அந்த இளம்பெண் “இனிமே லவ் கிவ்வுனு யாரும் வந்தா அவங்களுக்கு மரியாதை கிடையாது” என்று எச்சரிக்க
எம்.டியானவனோ “லவ் கிவ்வுனு சுத்துறதுக்கு இங்கே யாருக்கும் நேரமில்லை… நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு” என்று பதிலடி கொடுத்துவிட்டுக் கதவைச் சுட்டிக்காட்ட அவனை எரிப்பது போல முறைத்துவிட்டு வெளியேறத் தொடங்கினாள் அவள்.
வெளியேறும் போது எரிச்சலில் “பெருமாளே! போயும் போயும் இந்த மைதாமாவையா உஷா காதலிச்சு வைக்கணும்! இனிமே இவன் அவளோட வாழ்க்கையில வரவே முடியாத மாதிரி பண்ணலை என் பேரு அவந்திகா கிடையாது” என்று தமிழில் முணுமுணுத்தபடி கண்ணாடிக்கதவை அறைந்துச் சாத்திவிட்டுச் சென்றாள் அவள், அவந்திகா.
அதே நேரம் உள்ளே இருந்தவனும் “இந்த மாதிரி ஒரு வினோதமானப்பிறவியையா வருண் பய்யா லவ் பண்ணி தொலைக்கணும்? இந்த ஜான்சிராணியை அவர் மனசுல இருந்து வெளியே அனுப்பலைனா என் பேரு ராகவ் கிடையாது” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு கறுப்புக்கோட்டைக் கழற்றியவன் தனது வெண்ணிற சட்டையின் ஸ்லீவை முழங்கை வரைக்கும் மடித்துவிட்டபடி தனது சுழற்நாற்காலியில் அமர்ந்து கொண்டான். “இடியட்! என் மூடை ஸ்பாயில் பண்ணிட்டுப் போயிட்டா… டேமிட்” என்று கடுகடுத்த வண்ணம் தண்ணீரைக் குடித்து அவள் பேசிவிட்டுச் சென்ற வார்த்தைகள் ஏற்படுத்திய உஷ்ணத்தைத் தணிக்க முயன்றான் அவன், ராகவ்…
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


