“நான் இதுவரை வாசிக்காத ஆகச்சிறந்த கவிதை நீ; ஆனாலும் என் இதயம் உன்னை எப்படியோ மனப்பாடம் செய்துவிட்டது. உன்னிடமிருந்து ஒற்றைச் சம்மதத்தைப் பெற, எனக்குப் பிடித்த ஆசிரியையிடம் விடைத்தாள் எழுதும் மாணவனாய் நீளமாய் விருப்பத்தைச் சொல்லிக் காத்திருக்கிறேன்”
ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து வெண்பா சொன்ன அனைத்தையும் ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள் சுனந்தா. பெண் பார்க்கும் படலத்தில் நேத்ரன் பேசியதை வைத்து அவளே ஒரு ஊகத்திற்கு வந்திருந்தாள்.
“அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்குதுன்னு தோணுது வெண்பா. அதான் இப்பிடி சுத்தி வளைச்சு உன்னைக் கரெக்ட் பண்ணுறதுக்கு டைம் கேட்டிருக்கார்” என்றாள் அவள் கள்ளச்சிரிப்போடு.
“ப்ச்! அதெல்லாம் இல்லக்கா. அவருக்குமே இது ஷாக்தான். திடீர்னு ஒரு பொண்ணைக் காட்டி இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொன்னா அவ பேரழகியா இருந்தாலுமே மனசுக்குப் பிடிச்சாதானே உடனே பதிலைச் சொல்ல முடியும்”
“அவருக்கு உன்னைப் பிடிக்காத மாதிரி எனக்குத் தோணல. நீ சொல்லுறதை வச்சுப் பாத்தா இந்தக் கல்யாணத்துக்கு உன் சம்மதம் வேணும்னுதான் அவர் இப்பிடி அவகாசம் கேட்டிருக்குறதா தோணுது”
“அக்கா”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்னடி அக்கா, இருக்குறதைச் சொன்னேன்”
சற்று நேரத்தில் இருவருக்கும் அவரவர் வகுப்பறைக்குச் செல்வதற்கான பாடவேளைகள் வந்துவிட இந்தக் கல்யாணக் காசிப்பை பேசியபடியே வகுப்பறைக்குப் பிரிந்து சென்றார்கள்.
அதே நேரத்தில் முக்காணியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தான் நேத்ரன். ஊருக்குள் சென்று ஓட்டு கேட்டபோது பொது நூலகத்தை விரிவுபடுத்துவது குறித்து ஊர் இளைஞர்கள் கேட்டுக்கொண்டதை நிகிலனிடம் குறித்துக்கொள்ளுமாறு சொன்னான்.
“உலகமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்தான் உண்மைன்னு ஓடுது. நீங்க லைப்ரரியைச் சரி பண்ணச் சொல்லுறீங்க. ஆச்சரியமா இருக்குப்பா. கண்டிப்பா பண்ணிடலாம்” என்று தோள்களில் தட்டி வாக்களித்தான் அவர்களுக்கு.
பின்னர் அரசியல்வாதிகள் வழக்கம்போல செய்யும் யுக்திகளான வயோதிகப் பெண்களிடம் சென்று ஓட்டு கேட்பது, பெண்கள் ஆரத்தி எடுக்க ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்பது போல போஸ் கொடுப்பது, பெரியவர்கள் போட்ட மாலை, சால்வைகளை ஏற்றுக்கொள்வதென கர்மசிரத்தையாக அவற்றையும் செய்து முடித்தான்.
“போன தடவை ராஜூப்பா வாங்குன ஓட்டு அப்ராக்சிமேட்டா எழுபத்தஞ்சாயிரம். அதுல உதிரியா ஓட்டு பிரிய காரணம் சில சுயேட்சைகளும், அந்த மூணாவது அணியும். அவங்க எந்தப் பகுதியைச் சேர்ந்தவங்கன்னு லிஸ்ட் வச்சிருக்கேன். அங்க நாம ஸ்ட்ராங்கா பிரச்சாரம் பண்ணுனோம்னா அந்த ஓட்டையும் நாம அறுவடை பண்ணலாம் நேத்ரா”
சில ஆயிர ஓட்டுகளில், ஏன் ஒரு ஓட்டில்கூட வெற்றி தோல்வி மாறிவிடும். அரசியல்வாதிக்கு ஒவ்வொரு ஓட்டும் ப்ளாட்டினம் போல. அதைப் பெறுவதற்கான எந்த முயற்சியையும் அவன் செய்யாமல் இருக்கமாட்டான்.
முக்காணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அவனது தேர்தல் அலுவலகம் அமைந்திருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான் நேத்ரன்.
அவன் வரும்போதே அங்கே ஏதோ சச்சரவு. அவர்கள் பகுதியில் தேர்தல் வந்ததற்கான அறிகுறியே சுற்றியுள்ள கிராமங்களில் ஒவ்வொரு கட்சியின் பிரச்சாரப் பாடல்கள் மற்றும் பிரச்சார வரிகளை முழங்கவிட்டுக்கொண்டு சாலையில் அங்கும் இங்குமாகச் செல்லும் டாட்டா ஏஸ் வாகனங்களே.
தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தேதி மாலை வரை இந்த வாகனங்கள் அந்தந்த வேட்பாளர்களின் பெயர்கள், கட்சிச் சின்னங்களோடு எல்லா ஊர்களிலும் நடமாடிக்கொண்டிருக்கும்.
வாக்காளர்களின் மனதில் கட்சிகளின் சின்னங்களைப் பதிய வைக்கப் பயன்படுத்தப்படும் இந்த முயற்சிகளில் இப்போதும் எவ்வித மாற்றமும் இல்லை.
அப்படி நேத்ரன் சார்ந்திருக்கும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நேத்ரன் அந்தத் தொகுதியில் ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் ஒன்றின் உரிமையாளர்தான் இப்போது உரத்தக் குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
அவரோடு வட்டச் செயலாளர் காரச்சாரமாக பதிலுக்குப் பதில் பேசுவதைக் கண்டவன் “ஆறுமுகண்ணே! என்ன பிரச்சனை?” என விசாரித்தான்.
ஓடோடி அவனிடம் வந்தவர் “ஒரு நாளுக்கு இவ்ளோன்னு முன்னாடியே பேசி முடிச்சுட்டோம் தம்பி. இப்ப திடீர்னு அதிகமா பணம் கேக்குறாப்ல” என்றார்.
நேத்ரன் அந்த உரிமையாளரைப் பார்த்தான். அவரும் அவனிடம் வந்தார்.
“உங்களுக்கே நிலவரம் தெரியும் தம்பி. போரைக் காரணம் காட்டி பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே இருக்கு. வண்டிய நான் ஓட்டுனாலும் நோட்டீஸ் குடுக்குற பையனுக்குப் பணம் குடுக்கணும். இந்த ரெக்கார்ட் செட்டுக்கு டெய்லி வாடகை குடுக்கணும். எல்லாம் சேர்த்துப் பாக்குறப்ப கையில மிச்சம் வரமாட்டிக்குது”
நேத்ரன் ஆட்காட்டி விரலால் புருவத்தை நீவியபடி யோசித்தவன் “ஆறுமுகண்ணே! அவர் கேக்குறதைக் குடுங்க. விலைவாசி ஏறுதுல்ல. ஆயிரம் ரெண்டாயிரத்துல மிச்சம் பிடிச்சு என்ன பண்ணப்போறோம்?” என்று சொல்ல வட்டச் செயலாளரும் ஆமோதிக்க டாட்டா ஏஸ் உரிமையாளருக்கும் மகிழ்ச்சி.
பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதால் இருவரும் நகர நிகிலன் நேத்ரனின் தோளில் கைப் போட்டு அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றான்.
“எல்லா பிரச்சனைக்கும் உன்கிட்ட சொல்யூஷன் இருக்கும்ல. சொல்யூஷன் இல்லன்னாலும் அந்தச் சமயத்துல பிரச்சனையச் சமாளிச்சிடுற. வித்தைக்காரன்தான். ராஜூப்பா சரியான ஆளைத்தான் செலக்ட் பண்ணிருக்காரு”
“ரொம்ப ஐஸ் வைக்காத. தலைவரோட தூத்துக்குடி விசிட் எந்தப் பிரச்சனையும் இல்லாம முடியணும். அதுல கொஞ்சம் கண்ணை வை. கட்சியில சில பெருசுங்க சலசலன்னு உள்ளடி வேலை பாக்குறதா தகவல் வருது. எதிர்க்கட்சிக்கு வேலை பாக்குறானுங்கன்னு கேள்விப்பட்டேன். லிஸ்ட் உனக்கு அனுப்புறேன். நம்ம ஸ்டைலை ஆஃப் பண்ணி வை. எலக்ஷன் முடியட்டும். தலைவர் வரைக்கும் இந்த இஷ்யூவைக் கொண்டு போகணும். கட்சிக்குள்ள இருந்து உள்ளடி வேலை பாக்குறவனுங்களுக்குக் கிடைக்குற பதவியும் அதிகாரமும் கட்சியோட அடிமட்டத் தொண்டனுக்கு எங்க கிடைக்குது? ஆறுமுகண்ணனைப் பாரு. நம்ம கட்சியை இந்தத் தொகுதியில இருக்குற ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு போய் சேர்த்தவர். அவரை மாதிரி எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உழைக்கிற தொண்டன் கடைசிவரைக்கும் வளருறது இல்ல. இதைத் தலைவர்கிட்ட கொண்டு போகணும்”
நிகிலன் அவன் தீவிரமாய் பேசவும் அதைக் கவனித்துத் தனது ஐபேடில் குறித்துக்கொண்டான்.
அன்றைய தினம் தேர்தல் அலுவலகத்திலேயே நேத்ரனின் பொழுதெல்லாம் கழிந்து போனது. இரவு வீட்டுக்குத் திரும்பியபோது அங்கே நிச்சயதார்த்தப் புடவை வாங்குவதற்கான பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.
“டிசைனர் கமலி ஒரு சில்க் சாரி ப்ராண்ட் வச்சிருக்காங்க. அதுல ப்யூர் கோல்ட் ஜரி சாரி எல்லாம் அட்டகாசமா இருக்கு பெரியம்மா. நாம அவங்ககிட்ட பேசலாமா?”
இன்ஸ்டாகிராமில் குடியிருக்கும் அந்த வீட்டின் குட்டி இளவரசி நிருபமாவின் கேள்வி இது.
“அதெல்லாம் வேண்டாம் நிரு. நம்ம குடும்பத்துல எப்பவும் போத்தீஸ், ஆரெம்கேவியில எடுக்குறதுதான் வழக்கம். அது எனக்கும் உன் அம்மாவுக்கும் சென்டிமென்ட் கூட. அங்கயே போயிடலாம். முகூர்த்தப் புடவை அவங்ககிட்டவே எக்ஸ்க்ளூசிவா நெய்து தரச் சொல்லிடலாம்” என்றார் அங்கயற்கண்ணி.
“புவனாக்கா இருந்திருந்தா எனக்குச் சப்போர்ட் பண்ணிருப்பா. சோ சேட்” என்று அவள் சோகரசத்தைப் பிழியும்போதே நேத்ரனும் உள்ளே வந்துவிட்டான்.
“சாரி பர்சேசிங் டிஸ்கஷன் போகுதா?” என வினவியபடி அவனும் அவனருகே நிகிலனும் அமர அங்கயற்கண்ணி இருவருக்கும் காபி கொண்டு வருமாறு வீட்டின் பணியாட்களிடம் கட்டளையிட்டார்.
“நான் எப்பவும் வாங்குற இடத்துலயே புடவை எடுத்துடலாம்னு சொல்லுறேன். இவளுக்கு டிசைனர் மூலமா கஸ்டமைஸ் செஞ்சு வாங்கணும்னு ஆசையா இருக்குதாம். என்ன செய்யலாம்டா?”
அங்கயற்கண்ணி அவனிடம் வினவ அவனது தங்கை கண்களால் தனக்குச் சாதகமாய் பேசுமாறு அவனிடம் இரகசியம் பேசினாள்.
நேத்ரன் வேண்டுமென்றே ‘முடியாது’ என சைகை காட்டினான்.
பின்னர் “கல்யாணப்பொண்ணுக்கு உங்களுக்கு எல்லாம் நீங்க சொல்லுற மாதிரி வாங்கிக்கோங்க. இவ மட்டும் இவளுக்குப் பிடிச்ச டிசைனர்கிட்ட வாங்கிக்கட்டும்” என்றான் அவன்.
“சூப்பர்! அப்பிடியே நம்ம எல்லாரோட ரிசப்ஷன் ட்ரஸும் அவங்ககிட்டவே வாங்கிடலாம்ண்ணா. ட்ரெண்டியா அதே சமயத்துல ரிச் கல்ச்சரோட இருக்கும் அவங்க டிசைன்ஸ் எல்லாம்” என உற்சாகமானாள் நிருபமா.
அச்சமயத்தில் காபி வர நிகிலனும் நேத்ரனும் எடுத்துக்கொண்டார்கள்.
மொபைலில் பேசியபடி அங்கே வந்த குந்தவை தனது தமக்கையின் அருகே வந்து அமர்ந்தார்.
“சாரி வாங்கப் போற இடம் முடிவு பண்ணிட்டீங்களா அக்கா? மனோ ஆரெம்கேவியில வாங்கலாம்னு பிரியப்படுறா” என்றார்.
“நானும் அதேதான் சொல்லிட்டிருந்தேன் குந்தவை. ஒரு நல்ல நாளா பாத்து ஆரெம்கேவிக்குப் போய் எடுத்துடலாம்”
குந்தவை தனது மைந்தனிடம் திரும்பினார்.
“வெண்பாகிட்ட பேசுனியா? ட்ரஸ் வாங்க அவ வருவாளா?”
“கொஞ்சம் பிசியா இருந்ததுல பேசலைம்மா. நீங்களே கேட்டுக்க வேண்டியதுதானே?”
“நான் கேட்டா அவ மனசுக்குப் பிடிச்சதை சொல்லுவாளோ என்னமோ? நீ கேட்டுச் சொல்லு”
“எனக்கு அவகிட்ட பேசுறதுல ஒரு கஷ்டமும் இல்ல. ஆனா தேவையில்லாம கால் பண்ணி நான் வழியுறதா அவ நினைச்சுட்டா போகப் போறது உங்க வளர்ப்போட மானம்தான் மம்மி”
“போதும்டா! அவளும் நீயும் அன்னைக்குச் சகஜமா பேசுனதை நாங்க எல்லாரும் கவனிச்சோம். அவகிட்ட கேட்டுச் சொல்லு. என் மருமகளுக்கு நான் ஏதாச்சும் வாங்கிக் குடுக்கணும்”
“மருமகளா? இன்னும் எதுவும் முடிவாகல”
நேத்ரன் அமர்த்தலாகச் சொல்லவும் இரு பெண்மணிகளும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.
“அதெல்லாம் முடிவான மாதிரிதான். அவ மருமகளுக்கு வாங்க நினைக்குறப்ப நீ ஏன் குறுக்க வர்ற? நீ வெண்பாகிட்ட பேசிட்டுச் சொல்லு” என அங்கயற்கண்ணியும் குந்தவையோடு சேர்ந்து சொல்லவும் நேத்ரன் அவளிடம் பேசுவதாகச் சொல்லிவிட்டுத் தனது அறைக்கு வந்தான்.
நிகிலனிடம் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லி அனுப்பி வைத்த கையோடு இலகு உடைக்கு மாறியதும் அவன் செய்த முதல் காரியம் வெண்பாவின் மொபைல் எண்ணுக்கு அழைத்ததுதான்.
சில ரிங்குகள் போனதும் அழைப்பை ஏற்றவள் “ம்ம்! சொல்லுங்க” என்றதும்
“எங்கம்மா அவங்க மருமகளுக்கு ஏதோ கிப்ட் பண்ணணுமாம். மதினிக்கு நிச்சயப் புடவை எடுக்கப் போறப்ப நீ வருவியா இல்லையான்னு கேக்கச் சொன்னாங்க” என்றான் அவன்.
“மருமகளா? நாம இன்னும் எந்த முடிவையும் சொல்லலையே” மறுமுனையில் வெண்பா அதிர நேத்ரனுக்குள் சிரிப்புக் குமிழிகள் உடைந்தன.
“சரிதான்! ஆனா அவங்க அப்பிடித்தான் பேசிக்கிறாங்க. அவங்களை அவங்க போக்குல விட்டுடுவோம். நீ சொல்லு. உனக்கு ஸ்கூல்ல லீவ் கிடைக்குமா? வரமுடியுமா?”
மறுமுனையில் வெண்பா சிறிது நேரம் யோசித்தாள். நிச்சயப்பட்டு எடுப்பது எல்லாம் மாப்பிள்ளை வீட்டாரின் வேலை. அதில் மணப்பெண்ணுக்கே அவசியமில்லாதபோது மணப்பெண்ணின் தங்கைக்கு என்ன அவசியம் வந்துவிடப்போகிறது?
ஆனால் அங்கயற்கண்ணிக்கு துர்காவை அழைத்துச் சென்று புடவை வாங்கவேண்டுமென்ற எண்ணமென மாலையில் மகளிடம் சொல்லியிருந்தார் உமையாள். அதனால்தான் குந்தவையும் தனது வருகையை விரும்புகிறாரெனப் புரிந்துபோனது வெண்பாவுக்கு.
“நான் லீவ் எடுத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டாள் நேத்ரனிடம்.
பின்னர் மெதுவாய் “நீங்க… நீங்க வருவீங்களா?” என வினவினாள்.
“நான் வரணும்னு நீ ஆசைப்படுற போலயே” நேத்ரனின் குறும்புக்குரல் சீண்டவும் பதில் வரவில்லை மறுமுனையில்.
“அப்ப ஆசை இருக்கு” என்று அவன் அழுத்தமாய் சொல்லவும்
“அப்பிடி…எல்லாம் இல்ல. ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்.” எனச் சமாளித்தாள்.
“எனக்கு வர்றதுக்கான சூழல் இல்ல. எலக்ஷன் முடியுறவரைக்கும் இப்பிடித்தான் ஷெட்யூல் ஹெக்டிக்கா இருக்கும்”
“முடிஞ்சதுக்கு அப்புறம்?”
“அப்பவும் ஹெக்டிக்தான். ஏன்னா நமக்குக் கல்யாண வேலை ஆரம்பிச்சிடும்ல”
“எதே?” வெண்பா பதற நேத்ரனுக்கு மீண்டும் சிரிப்பு வந்துவிட்டது.
“நான் என்ன பேயா பிசாசா? என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஏன் இவ்ளோ பயம் உனக்கு?”
“அந்தக் கேள்வியை விடுங்க. உங்களுக்கு மட்டும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஓகேவா என்ன? சும்மா என்னை மட்டும்…”
“எனக்கு டபுள் ஓகே”
பேச்சினிடையே குறுக்கிட்டு அவன் சட்டென பதில் சொல்லவும் திகைத்துப்போனாள் வெண்பா.
“அது எப்பிடி ஓகேவா இருக்கும்? இருக்க முடியும்? நீங்க சும்மா என்னைச் சீண்டுறதுக்காக சம்மதம்னு சொல்றீங்க”
“ஏன் ஓகேவா இருக்கக்கூடாது? அரேஞ்ச்ட் மேரேஜ்னா அப்பிடித்தான். பாக்கணும், பேசணும், பிடிக்கணும். அப்புறம் நேரா கல்யாணம். புரிஞ்சிக்கிறதெல்லாம் அதுக்கு அப்புறம்தான். ஒருவகையில பாத்தா லவ் மேரேஜை விட அரேஞ்ச் மேரேஜ் மூலமா அமையுற வாழ்க்கை த்ரில்லா சுவாரசியமா க்யூரியாசிட்டியோட இருக்கும் டீச்சரம்மா.”
“நீங்க என்னைப் பாத்தீங்க. பேசுனீங்க. பிடிச்சுதா பிடிக்கலையான்னு சொல்லலையே.”
“நீ கேக்கவேல்லையே!”
“இப்ப கேக்குறேன். பிடிச்சுதா? அப்பிடி பிடிச்சா என்ன காரணம்?”
காரணமில்லாத எந்தக் காரியமும் உருப்படாது என்பது வெண்பாவின் எண்ணம். அது பிடித்தமாக இருந்தாலும் சரி!
“உன் குரலை முதல் தடவை கேட்டப்ப குழந்தைங்களைப் பிரச்சாரத்துல ஒரு கருவியா யூஸ் பண்ணுனது பிடிக்கலன்னு சொல்லிட்டிருந்த. அந்த நேரத்துல என் மனசும் அதைத்தான் யோசிச்சுது. அங்க இருந்த யாருக்கும் அது உறுத்தலா தெரியல. உனக்கும் எனக்கும் மட்டும்தான் அது தப்பா தோணுச்சு. ஒரு மாதிரி மொராலிட்டி இல்லாத செயல் போல. அப்பதான் உன்னைப் பாத்தேன். அந்த முகத்தைப் பிடிக்காம போகுமா? ரொம்ப பிடிச்சுது. உங்க வீட்டுல உன்கூட பேசுனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, நான் வாழ்க்கை முழுக்க கலாய்ச்சு தள்ளுறதுக்குன்னு அளவெடுத்து உருவாக்குன ஒருத்தி நீதாங்கிறது. நீ கண்டிப்பா எனக்குச் செட் ஆகுற டைப்தான். இப்ப இந்த நிமிஷம் கல்யாணம் வச்சாலும் நான் ரெடி. ஆனா நீ தயங்குறியே! அதுக்குத்தான் காத்திருக்கேன். காரணம் போதுமா? ஷப்பா! டீச்சரம்மாவ உஷார் பண்ண பதினைஞ்சு மார்க் கொஸ்டினுக்கு ஆன்சர் எழுதுற மாதிரி நீளமா பேச வேண்டியதா இருக்கு”
அவன் என்னவோ சாதாரணமாகச் சொல்லிவிட்டான். மறுமுனையில் அவன் பேசிய வார்த்தைகள் தனக்குள் உண்டாக்கிய சிலிர்ப்பை மறைக்க அத்துணைப் போராடினாள் வெண்பா.
‘அரசியல்வாதி என்றாலே மோசம்’ என்ற பொதுப்புத்தியில் ஊறிய மனம் நேத்ரனின் குணத்தைப் பற்றி ஓரளவுக்கு அறியாமல் அவனது தோற்றத்திலும் வார்த்தைகளிலும் மயங்கத் தயங்கியது. திணறியது.
“அ.அத்தை கிட்ட நான் வருவேன்னு சொல்லிடுங்க. நான் கால் கட் பண்ணிடட்டுமா?”
“நான் கட் பண்ணாதன்னு சொன்னா பேசிக்கிட்டே இருப்பியா டீச்சரம்மா? என்னமோ நான் சொன்னா நீ கேக்குற மாதிரி பெர்மிஷன் எல்லாம் கேக்குற”
“பெர்மிஷன் இல்ல. ஒரு கர்டசிக்குக் கேட்டேன்”
“அப்பிடியே நான் வரணுமா வேண்டாமாங்கிறதையும் சொல்லிடு. ஏன்னா நான் உன்னை மாதிரி இல்ல. நீ சொன்னா நான் கேப்பேன்”
எவ்வித திமிர்த்தனமும் இல்லாமல் நேத்ரன் இவ்வாறு சொன்னதும் வெண்பா வாயடைத்துப் போனாள். அடுத்த நொடியே மனம் ஜில்லென்று குளிர்ந்து போனது. தனக்குள் நடக்கும் மாற்றத்தை அவனிடம் காட்டக்கூடாதென்ற பிடிவாதத்தோடு அவனது பாணியில் பதிலளித்தாள்.
“வேட்பாளருக்கு எலக்ஷன் கேம்பெய்ன் வேலை இல்லன்னா வாங்க. பாக்கலாம்”
“ம்ம்! வந்துட்டா போச்சு.”
இலகுவாகச் சொன்னவன் அதற்கு மேலும் வெண்பாவைத் திணறடிக்காமல் இரவு வணக்கத்தோடு அழைப்பைத் துண்டித்தான், இனி அடிக்கடி பேசுவேன் என்ற குறிப்போடு.
பேசி முடித்து சில நிமிடங்களுக்குப் பிறகும் ‘நீ சொன்னா நான் கேப்பேன்’ என்று நேத்ரனின் குரல் மீண்டும் மீண்டும் தன் காதில் ஒலிப்பதாய் உணர்ந்தாள் அவள்.
புடவை எடுக்கக் குறித்த நாளில் குடும்பத்தினரோடும் துர்காவோடும் ஆரெம்கேவிக்குச் சென்றவளின் மனமெங்கும் ‘நேத்ரன் வருவானா? அவனுக்கு இருக்கும் தேர்தல் வேலையில் இங்கே வருவது சாத்தியப்படுமா?’ என்ற கேள்வியே அவளுக்குள் பிரதானமாய் ஒலிப்பதாய்.
எல்லாம் “ஹலோ டீச்சரம்மா” என்ற அழைப்புடன் பட்டுப்புடவைப் பிரிவுக்குள் நேத்ரன் வரும் வரை மட்டுமே!
அவனது குரல் கேட்டதும் அவளது பேச்சைக் கேட்காமல் மலர்ந்த வதனத்தில் சிரிப்பு வந்து ஒட்டிக்கொள்ள வரவேற்பாய் அவனை நோக்கினாள் வெண்பா.
மெரூன் வண்ண முழு நீள சுடிதாரில் அலையாய்ப் பாய்ந்த கூந்தலை பாதியளவுக்கு மேலே பெரிய பூ வடிவ க்ளா கிளிப்பில் அடக்கி, மீதமுள்ள அடர்கூந்தல் இடையைத் தழுவ தன்னெதிரே நின்றவளைப் பார்த்த நேத்ரனின் விழிகளில் அழகாய் வெளிச்சக் கோடிழுத்துப் போனது நேசமெனும் மின்னல்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


