“எப்போதும் வேகமாக சுற்றும் எனது உலகம் அவளைக் கண்டதும் நகர கூட மறந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் பரபரப்பை விடுத்து ரசனையை ஆடையாக உடுத்தி அவளைக் கண்டு ரசித்தது. நதிக்கரையில் அவளைக் கண்ட அடுத்த நொடியில் நாடி நரம்பெங்கும் காதலின் நறுமணம் பரவி பெருக இவள் தான் உன் துணை என்றது என் குட்டி இதயம்.
-ருத்ரதேவ்
குயின்ஸ் பேரடைஸ் ரிசார்ட்…
ஒரு பக்கம் பசுமை போர்த்திய மலைத்தொடரும் அதனடியில் சலசலத்து ஓடும் கால்சா நதியும் அரணாக காவல் காக்க பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது குயின்ஸ் பேரடைஸ் ரிசார்ட்.
சந்தனவண்ண பூச்சுடன் இளநீலவண்ண கூரை கொண்ட ஏழு கட்டிடங்கள் தகுந்த இடைவெளியுடன் இயற்கை அழகை சிதைக்காமல் அச்சூழ்நிலையுடன் பொருந்தி கம்பீரமாக நின்று கொண்டிருந்தன.
பால்கனியுடன் நதிக்கரையைக் காணும் வகையில் அமைந்திருந்த சூட்கள், தோட்டத்தைக் காணும் வகையில் அமைந்திருந்த ஜூனியர் சூட்கள், காட்டேஜ்கள், சூரியவெளிச்சம் நன்றாக படும் வகையில் கண்ணாடி கூரையுடன் கூடிய கிராமத்து வீடுகள் போன்ற அறைகள் என வகைப்படுத்தப்பட்டிருந்த அறைகள் தான் அந்த ரிசார்ட்டின் சிறப்பம்சம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
செயற்கையான சிமெண்ட் தரையை அந்த ரிசார்ட் பகுதியில் எங்கும் காண இயலாது. இயற்கையாக அவ்விடத்தில் அமைந்திருக்கும் பாறைகளும் மண் தரையும் அவற்றினூடே செழித்து வளர்ந்திருந்த மலைவாசஸ்தல மலர்ச்செடிகளும் புதர்களும் அந்த ரிசார்ட்டின் அழகை இன்னும் கூட்டிக் காட்டும்.
அதை நோக்கி கோடாய் செல்லும் சாலையில் வந்த காரானது ரிசார்ட்டின் தரிப்பிடத்துக்குள் நுழைந்தது. சில வினாடிகளில் அதிலிருந்து இறங்கினான் ருத்ரதேவ்.
அவனது உடைமைகள் காரிலிருக்க அவனுக்காக காத்திருந்தாற்போல ஓடி வந்த ரிசார்ட்டின் பணியாளர் ஒருவர் அவற்றை எடுத்துக்கொண்டு அவனுக்கு வணக்கம் போட்டார்.
“நமஸ்தே சாப்… தக்ஷி மேம் நீங்க வந்ததும் உங்களை நதிக்கரைப்பக்கம் இருக்குற ரூமுக்கு அழைச்சுட்டுப் போக சொன்னாங்க” என்று கூற ருத்ரதேவும் அவருக்குப் பதில் வணக்கத்தைக் கூறியபடி அவரைத் தொடர்ந்தான்.
செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே மலர்ச்செடிகளை ரசித்தபடியே நடந்தவன் அவனுக்கு ஒதுக்கப்பட்ட நதியோர அறையை அடைந்ததும் ரிசார்ட்டின் பணியாளர் கதவைத் திறந்து அவனது உடைமைகளை அங்கே வைத்துவிட்டுக் கிளம்பினார்.
“தக்ஷி மேம் இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவாங்க சாப்” என்ற தகவலுடன்.
யாரந்த தக்ஷி மேம் என்ற கேள்வியோடு தனது அறைக்குள் வந்தவன் அதன் ஒரு பக்கமாக ஓடிக்கொண்டிருந்த கால்சா நதியை அறையிலமர்ந்தபடி ரசிக்க ஆரம்பித்தான்.
அதே நேரம் தக்ஷிண்யாவோ அவளது அறையில் நவ்யாவோடு சேர்ந்து தயாராகிக் கொண்டிருந்தாள். இடையே அனுதீப் கன்னாவிடமிருந்து மொபைலில் அழைப்பு வந்தது.
அதை ஏற்றவள் “குட் மானிங் சார்” என்கவும்
“குட் மானிங் தக்ஷி… என் ஃப்ரெண்ட் ருத்ரா ரிசார்ட்டுக்கு வந்துட்டான்… சோனாக்ஷி இன்னைக்கு ஷாப்பிங் போகணும்னு சொல்லிட்டா… சோ அவன் கூடவே இருந்து அவனைக் கவனிச்சுக்கோங்க… நான் இன்னைக்கு ஈவ்னிங் வந்துடுவேன்… உங்க ரொட்டீன் ஒர்க்கோட சேர்ந்து இது எக்ஸ்ட்ரா தொந்தரவு தான்… பட் அங்க என்னோட நம்பிக்கைக்கு பாத்திரமானவங்க நீங்க மட்டும் தான்… என்னோட கெஸ்டை என்னை விட நீங்க நல்லா உபசரிப்பீங்கங்கிற நம்பிக்கையில தான் இந்தப் பொறுப்பை உங்க கிட்ட குடுக்குறேன்” என்றான் அவன்.
“ஏன் சார் தொந்தரவு அது இதுனு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறிங்க? இது என்னோட கடமை… நீங்க மேம் கூட ரிலாக்சா ஷாப்பிங் போயிட்டு வாங்க… நான் உங்க ஃப்ரெண்டுக்கு எந்த அசவுகரியமும் இல்லாம அரேஞ்ச்மெண்டை பக்காவா பாத்துக்குறேன்” என்றாள் தக்ஷிண்யா.
“தேங்க்யூ தக்ஷி” என்றபடி அவன் அழைப்பை முடித்துக்கொள்ள நவ்யாவும் தக்ஷிண்யாவும் தங்களது வேலையைக் கவனிக்க ரிசார்ட்டுக்குக் கிளம்பினர்.
அங்கே சென்றதும் அனுதீப்பின் நண்பன் வந்து விட்டதாகவும் அவனை நதிக்கரை பக்கத்து அறையில் தங்க வைத்திருப்பதாகவும் ரிசார்ட்டின் பணியாள் கூறவும் தக்ஷிண்யா அந்நண்பனை காண நவ்யாவை அனுப்பி வைத்தாள்.
“சாரோட ஃப்ரெண்டுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது நவி… ரூம் கம்ஃபர்டா இருக்குதானு கேட்டுக்க”
நவ்யா சென்றதும் ஏற்கெனவே வந்திருந்த விருந்தினர்களின் அறைகளுக்குக் காலையுணவு பானங்கள் சென்றுவிட்டதா என்று கவனிக்கச் சென்றுவிட்டாள்.
செல்லும் வழியில் ரிசார்ட் சிப்பந்திகள் வேலையைச் சரிவர செய்கிறார்களா என்பதையும் பார்வையிட்டபடியே சென்றாள்.
அதே நேரம் அவனது அறையில் குளித்து உடைமாற்றியிருந்தான் ருத்ரதேவ்.
மொபைலில் அவனது உதவியாளனிடம், தான் வரும் வரை செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டவன் கதவு தட்டப்படவும் எழுந்து சென்று திறந்தான்.
“குட் மானிங் சார்” என்று கோல்கேட் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த நவ்யாவிடம் பதிலுக்குக் காலை வணக்கம் கூறினான்.
“உங்களுக்கு இந்த ரூம் கம்ஃபர்டபிளா இருக்குதா சார்? எந்தக் குறையும் இல்லையே”
“எவ்ரிதிங் இஸ் பெர்ஃபெக்ட்” என்றவன் இவள் தான் ரிசார்ட்டின் பணியாள் கூறிய தக்ஷியாக இருப்பாளென எண்ணிக்கொண்டான்.
நவ்யாவும் அவனுக்குக் காலையுணவை அனுப்பி வைப்பதாக கூறியவள் ஏதேனும் அசவுகரியமென்றால் தயங்காமல் தன்னிடம் கூறலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
அவள் சென்றதும் வீட்டினரிடம் இன்னும் பேசவில்லை என்பது உறைக்க உடனே அன்னையின் எண்ணுக்கு அழைத்தான்.
அவர் அழைப்பை ஏற்றதும் “குட் மானிங் சசிம்மா” என்று கொஞ்சினான் அவன்.
மறுமுனையின் அவனது அன்னை சசிகலாவோ எடுத்ததும் பொருமத் துவங்கினார்.
“ரீசண்டா கன்ஸ்ட்ரக்சன் டீல் ஒன்னை கேன்சல் பண்ணுனியாமே? ஏன்டா இப்பிடி இருக்குற? உங்கப்பா தான் தங்கச்சி தங்கச்சினு லலிதாவோட பேச்சை மீற மாட்றார்னா நீயும் அத்தைப்பாசத்துல குருட்டுத்தனமா முடிவெடுக்குற… இது எதுவும் நல்லதுக்கு இல்ல ருத்ரா… பிசினஸ்ல பெர்சனல் பிரச்சனைய கலந்தடிச்சு குழப்பிக்கக் கூடாது”
“உங்களுக்கே நல்லா தெரியும், நம்ம ஃபேமிலியில யாருமே அத்தை பேச்சை மீறமாட்டாங்க… அதுக்குக் காரணம் அவங்க மேல எல்லாரும் வச்சிருக்குற அளவுக்கடந்த பாசம்… லைஃப்ல அவங்க நிறைய கஷ்டப்பட்டுட்டாங்கம்மா… நம்மளால முடிஞ்சளவுக்கு அவங்களை சந்தோசமா வச்சிக்க வேண்டாமா?”
“அவ சந்தோசத்துக்கு இப்ப என்னடா குறை? எங்கண்ணா அவளை மகாராணி மாதிரி தாங்குறாரே… இன்னும் என்ன வேணும் உன் அத்தைக்கு?”
“எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேட்டா என்னம்மா அர்த்தம்? மாமா அத்தைய மகாராணியா தாங்குனாலும் அவங்க மனசுல இருக்குற ஒரே ஒரு குறை என்னனு நம்ம எல்லாருக்குமே தெரியும்… அவங்களே நினைச்சாலும் அதை மறக்க முடியாது… அந்த ஒரு காரணத்துக்காக தான் நம்ம குடும்பத்துல இருக்குற எல்லாருமே அத்தை மனசு கோணாம இருக்கணும்னு பிரயாசை படுறாங்க”
“சரி சரி… நான் என்ன சொன்னாலும் உன் காதுல ஏறப்போறதில்ல… இன்னைக்கு நேத்தா நீ இப்பிடி அத்தை அத்தைனு உருகுற? இது பல வருசமா நடக்குறது தானே… உன் அத்தை மேல இருக்குற பாசம் எப்பவும் உன்னோட வாழ்க்கைய பாதிச்சிடாம பாத்துக்க ருத்ரா… ஒரு அம்மாவா என்னால இவ்ளோ தான் சொல்ல முடியும்”
சசிகலா அதிருப்தியுடன் முடிக்கவும் ருத்ரதேவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவனது அத்தையும் தந்தையின் உடன் பிறந்த சகோதரியுமான லலிதா என்றால் ருத்ரதேவிற்கு கொள்ளைப்பிரியம். அவனுக்குப் பின்னே பிறந்த மகாதேவும் மாலினியும் அந்தளவுக்கு லலிதாவிடம் ஒட்டுவதில்லை.
குழந்தையாக அன்னையின் மடியில் வளர்ந்ததை விட அத்தை மடியில் வளர்ந்ததே அதிகம்.
அந்தப் பிணைப்பு தான் அலுவல் ரீதியான முடிவில் கூட லலிதாவின் விருப்பு வெறுப்புகளை பற்றி அவனை அக்கறை கொள்ள செய்திருந்தது.
ஏனோ சசிகலாவிற்கு மட்டும் வீட்டினர் லலிதாவை அளவுக்கதிகமாக தாங்குவதில் பிடித்தமில்லை. இத்தனைக்கும் சசிகலாவுக்கும் லலிதாவுக்கும் இடையே நாத்தனார், அண்ணி என்ற இரட்டை உறவுமுறை வேறு உள்ளது.
ஆம்! சசிகலாவின் மூத்தச் சகோதரர் ராஜேந்திரனை லலிதாவும், லலிதாவின் தமையன் லோகநாதனை சசிகலாவும் மணமுடித்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இருவரது தந்தையரும் ஆத்மார்த்த நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளாக இருந்தது இரு குடும்பங்களையும் பிணைத்து கிரேட் மௌண்ட் குடும்பம் என்ற ஒற்றை கூரைக்குள் அடைத்துவிட்டது.
காலங்கள் கடந்தும் ஏனோ சசிகலாவால் லலிதாவை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அவரது மைந்தன் ருத்ரதேவின் எண்ணம். ஆனால் சசிகலாவுக்கோ லலிதாவின் பிறவிக்குணமான பிடிவாதம், செல்வச்செழுமையால் உண்டான திமிரில் சற்று அதிருப்தி.
எது எப்படியோ தனது மைந்தனிடம் அவர் உள்ளார்ந்த அன்போடு நடந்து கொள்வதால் சசிகலாவும் லலிதாவின் எதிர்மறை குணங்களை பெரிதுபடுத்தியதில்லை.
ஆனால் எதற்கெடுத்தாலும் லலிதாவின் சொல்லுக்கிணங்கி குடும்பத்தினர் நடந்து கொள்வதால்தான் இந்த வயதிலும் அவரது பிடிவாதமும், முன்கோபமும் மாறவில்லை என்பது சசிகலாவின் எண்ணம்.
அன்னையும் அத்தையும் எதிலும் ஒத்துப்போவதில்லை என்றாலும் ருத்ரதேவிற்கு இருவர் மீதும் அளவுக்கடந்த அன்பு தான். லலிதாவிற்கும் அவர் பெற்ற மகன் சர்வானந்தை விட ருத்ரதேவ் என்றால் அலாதி பிரியம். அவரது மடியில் தவழ்ந்த முதல் குழந்தை ருத்ரா என்பதால் அவனுக்கு ஒன்றென்றால் துடித்துப் போவார் லலிதா.
ருத்ரதேவ் அன்னையைச் சமாதானம் செய்துவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் காலையுணவு வரவும் அதை சாப்பிட்டுவிட்டு அன்றைய நாள் முழுவதையும் ரிசார்ட் அமைந்திருந்த ஷான்ஃபி கிராமத்தைச் சுற்றி வந்தே கழித்தான்.
இரவு ஏழு மணிக்கு ரிசார்ட்டுக்குத் திரும்பியவன் கேம்ப் ஃபயர் பகுதியில் அனுதீப் கன்னாவின் குரலைக் கேட்டதும் உற்சாகத்துடன் அங்கே சென்றான்.
“ஹேய் ருத்ரா” என்று ஆவலுடன் கட்டியணைத்த அனுதீப் தனது வருங்கால மனைவி சோனாக்ஷியை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.
“ஹலோ பய்யா” என்று முதல் அறிமுகத்திலேயே அவனை சகோதரனாகப் பாவித்து அவள் பேசியதும் தங்கை மாலினியின் நினைவு வந்துவிட்டது ருத்ரதேவிற்கு.
அவளைப் பற்றி சோனாக்ஷியிடம் கூறியவன் “நீ ரொம்ப சைலண்ட்டான பொண்ணுனு அனுதீப் சொன்னான்… ஆனா என்னோட சிஸ்டர் மாலினி சரியான அறுந்த வாலு… அவளோட குறும்புத்தனத்தைச் சமாளிக்க முடியாம அம்மாவும் பாட்டிகளும் திண்டாடுவாங்க” என்று கூற
“நீ மாலினியையும் மேரேஜுக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம் ருத்ரா” என அனுதீப் குறைபட்டான்.
“அவளுக்கு நெக்ஸ்ட் மன்த் செமஸ்டர் எக்சாம் அனுதீப்… அம்மாவுக்கு ஸ்டடீஸ்ல காம்ப்ரமைஸ் பண்ணுனா பிடிக்காது… அதான் அவளைக் கூட்டிட்டு வரலை” என்றான் ருத்ரதேவ்.
“சரி… அட்லீஸ்ட் மகாதேவையாச்சும் கூட்டிட்டு வந்திருக்கலாமே” என்று அவனது இளைய சகோதரனைப் பற்றி கேட்க
“அவனா? சார் இப்ப காதல்ல விழுந்திருக்கார்… சோ நம்ம கரடியா கத்துனாலும் அவர் காதுல எதுவும் விழாது” என்றான் ருத்ரதேவ் கேலியாக.
இதற்கிடையே அனுதீப் கன்னாவின் உதவியாளன் ராகேஷ் பாண்டே வந்துவிட சோனாக்ஷிக்கும் அனுதீப்பிற்கும் தனிமையைக் கொடுத்துவிட்டு அவனோடு பேசியபடி ருத்ரதேவ் நகர்ந்தான்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கையிலேயே கேம்ப் ஃபயர் பகுதிக்கு சற்று தூரத்தில் போடப்பட்டிருந்த குட்டி மேடையிலிருந்து கிடாரின் இனிய இசை கசிந்தது.
கவனம் ஈர்க்கப்பட்டு அங்கே திரும்பினர் இருவரும்.
மேடையில் கிடாரை இசைத்தபடி பாடிக்கொண்டிருந்தவளைப் பார்த்ததும் ருத்ரதேவின் கண்கள் மகிழ்ச்சியில் பளபளத்தது.
ஏனெனில் அங்கே பாடியபடி நின்று கொண்டிருந்தவள் தக்ஷிண்யா.
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்
என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்று கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும்
கேட்காதம்மா
ஓஹோ ஜானே ஜா
நதிக்கரையில் பார்த்த அதே பெண்! அப்போது நதிநீரே பின்னணியாய் ஒலிக்கப் பாடினாள், இப்போதோ கிடார் அவளது பாட்டுக்குத் துணையாய் இசைத்தது. இசைக்கு மொழியில்லை என்பார்கள். எனவே அங்கிருந்த மொத்த கூட்டமும் அவளது குரலினிமையைக் கண்டு மெய்மறந்ததேயன்றி யாருமே தெரியாத மொழி என விழிக்கவில்லை.
ருத்ரதேவின் உள்ளம் அவள் பாட பாட உற்சாகத்தில் துள்ளாட்டம் போட்டது. கூடவே தமிழ் தெரியாது என்று அவனிடம் பொய் உரைத்தவளின் குட்டு வெளிப்பட்டு விட்ட மகிழ்ச்சியும் தான்.
அதே மகிழ்ச்சியுடன் அவளுக்கும் ரிசார்ட்டுக்கும் என்ன தொடர்பு என்பதை நைச்சியமாக விசாரிக்க எத்தனித்தான்.
“ஹூ இஸ் தட் கேர்ள் பாண்டே? இவ்ளோ அழகா பாடுறாங்க”
கண்கள் மின்ன தூரத்தில் இருந்த மேடையில் நின்று பாடிக்கொண்டிருந்தவளைக் காட்டி வினவினான் ருத்ரதேவ்.
அவனுடன் நின்றிருந்த ராகேஷ் பாண்டேவோ வாயெல்லாம் பல்லாக “அவங்க இந்த ரிசார்ட்டோட ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜர்” என்றான்.
அப்படியென்றால் அவளை தினமும் பார்க்கலாம். பதின்வயது கல்லூரி மாணவனைப் போல குதூகலித்தது ருத்ரதேவின் மனசாட்சி.
மேலும் அவளைப் பற்றிய தகவல்களை ராகேஷ் பாண்டேவிடம் கேட்கும்படி அதே மனசாட்சி உந்தி தள்ளியது.
“மேனேஜருக்கு இவ்ளோ அழகான வாய்ஸா? நான் கூட இந்த மியூசிக் பேண்ட்ல இருக்குற சிங்கர்னு நினைச்சேன்… பை த வே, வாட்ஸ் ஹெர் நேம்? எத்தனை வருசமா இங்க ஒர்க் பண்ணுறாங்க?”
மனதில் பொங்கிய ஆர்வத்தை வார்த்தையில் காட்டிக் கொள்ளாமல் அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கினான் அவன்.
“பாஸ்ட் டூ இயர்ஸா ஒர்க் பண்ணுறாங்க… சின்னப் பொண்ணு தான் சார்… பட் ரொம்ப டேலண்டானவங்க… அவங்க நேம் தக்ஷிண்யா” என்றான் ராகேஷ் பாண்டே.
“ஓ! இவ தான் ஸ்டாஃப் சொன்ன தக்ஷி மேடமா?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.
ராகேஷ் பாண்டேவிடம் “நைஸ் நேம்” என்றவனின் கண்கள் இப்போது பாடி முடித்துவிட்டு கிடாரை வருடிக் கொண்டிருந்த தக்ஷிண்யாவை ஆவலாய் தழுவியது.
தன்னிடம் தமிழ்ப்பெண் என்பதைக் கூட மறைக்க விரும்பியவள் முன்னே போய் நின்றால் அவள் எப்படி எதிர்வினையாற்றுவாள்? அதிர்வாளா? அல்லது காலையில் மருண்டது போல விழிப்பாளா? மீண்டும் பொய் சொல்லி அவனைத் தவிர்ப்பாளா?
எது எப்படியோ தக்ஷிண்யா பாடிய பாடல் வரிகளைப் போல தான் அவன் மனமும் இப்போது உணர்ந்தது.
அவளைக் கண்ட முதல் நாளிலேயே அவன் வேறொருவனாக அல்லவா மாறிப்போய் நிற்கிறான். காலையில் நதிக்கரையில் மென்மையாய் அவனைத் தாக்கிய இசையும் ஒப்பனையற்ற அழகும் இப்போது இரவு விளக்குகளின் ஒளியில் வேலைக்கேற்ற மெல்லிய ஒப்பனையோடு அதிரடியாய் தாக்கிய பேரழகும் அவனைப் பேச்சற்று நிற்க வைத்திருந்தது.
மூளை எண்ணற்ற சிந்தனைகளை எழுப்பத் துவங்க இதயமோ “உஷ்! இது ரசனைக்கான நேரம்” என்று அதட்டி அவனது கவனம் அனைத்தையும் பாடிக்கொண்டிருந்த தக்ஷிண்யா மீது குவித்தது.
இது காதலா? சத்தியமாக அந்த இதயத்திற்கு தெரியாது. ஆனால் இது காதலின் முதல் படியாக இருக்கலாம் அல்லவா என்று சொல்லிக்கொண்டது லப்டப் ஒலியுடன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


