“பாலையின் நடுவே கானலை கடலாய் எண்ணி ஏமாந்த பறவைக்கு மெய்யான சமுத்திரமும் கானலாய் தான் தோன்றுமாம். உறவுகளெனும் கானல் பாசமெனும் தாகத்தை தணிக்கும் என நம்பிய என் மனதின் நிலையும் இது தான். நிலையற்ற உறவுகளில் அமிழ்ந்து ஏமாற்றத்தைப் பரிசாக பெற விருப்பமின்றியே தனிமையை என் துணையாய் ஏற்றுக்கொள்கிறேன். என் இனிய தனிமையே இனி என் நிரந்தர துணை”
-தக்ஷிண்யா
ஷான்ஃபி, உத்தரகாண்ட்…
அழகான ஏப்ரல் மாத காலை நேரத்தில் குளிரும் சூரிய கதிரின் வெம்மையும் கலந்த இதமான சீதோஷ்ணத்தின் நடுவே அமைந்திருந்த ஷான்ஃபி கிராமத்தின் சாலையில் சென்று கொண்டிருந்தது ஃபோர்ட் எண்டீவர் கார். சுற்றிலும் பச்சை ஆடை அணிந்த இயற்கையன்னையின் அழகை ரசித்தபடி காரை விரட்டிக் கொண்டிருந்தார் ஓட்டுனர்.
அவரது கண்களுக்கு விருந்தளித்த பசுமையோடு காதுகளுக்குக் காரமான சொற்களால் விருந்தளித்துக் கொண்டிருந்தான் அந்தக் காரின் பின்னிருக்கையில் அமர்ந்து சவாரி செய்து கொண்டிருந்த நெடிய ஆடவன்.
ஆறடி தேகத்தின் ஒவ்வொரு செல்லிலும் பணத்தின் செழுமை பதிந்திருந்தது. கம்பீரக்குரலோ கோபத்தில் குளித்துக் கொண்டிருந்தது. குரலின் கோபத்தை பிரதிபலிக்கும் கூரிய விழிகளின் ஹேசல்நட் வண்ண கருமணிகளை ரியர்வியூ மிரரில் பார்த்த போதே ஓட்டுனருக்கு அவனது கோபத்தின் அளவு புரிந்தபடியால் அவ்வளவு நேரம் ஒலித்துக் கொண்டிருந்த இந்தி பாடலை நிறுத்திவிட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இனாஃப்! அத்தைக்குப் பிடிக்கலைனா அந்த வேலைய நிறுத்திடுங்க மகேஷ்… எனக்கு என் அத்தையோட மனதிருப்தி ரொம்ப முக்கியம்… அவங்களுக்குப் பிடிக்காத கம்பெனியோட டீலை கண்டினியூ பண்ணுனதே தப்பு… இந்த டீல் வேண்டாம்னு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி கிட்ட பேசிடுங்க… அத்தைக்கு எந்தக் கம்பெனி ஓ.கேனு படுதோ அதோட டீல் பேசிக்கலாம்”
மறுமுனையில் பேசுபவர் அவன் கூறியதெற்கெல்லாம் சரி என்று விடவும் அழைப்பைத் துண்டித்தான் அந்நெடியவன்.
அழைப்பைத் துண்டித்த கையோடு ஓட்டுனரிடம் பேச ஆரம்பித்தான்.
“இன்னும் எவ்ளோ நேரமாகும்?”
“அரைமணி நேரம் தான் சாப்”
“இதே பதிலை தான் நீங்க ஒரு மணி நேரமா சொல்லுறீங்க”
அவன் சலித்துக் கொள்ளவும் ஓட்டுனர் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினார்.
அவரது வேகத்தில் நம்பிக்கை வைத்து மீண்டும் காரைத் துரத்தி வரும் பசுமைக்காட்சிகளில் கண் பதித்தான் அவன்.
அவன் ருத்ரதேவ். இருபத்தொன்பது வயது வாலிபன். இன்னும் திருமணமாகாதவன் என்பது உபரித்தகவல். ஊட்டி மற்றும் கோவை சுற்று வட்டாரத்தில் ஹோட்டல்கள், ரிசார்ட்கள், வில்லாக்களுக்குப் பிரசித்தி பெற்ற கிரேட் மௌண்ட் குழுமத்தை நிர்வகிக்கும் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவன்.
அக்குழுமத்தைச் சேர்ந்த ரிசார்ட்களை நிர்வகிப்பவன். அதில் என்னென்ன புதுமைகளைப் புகுத்தலாம் என்று சதாசர்வகாலமும் சிந்தித்து செயலாற்றுபவன். தொழிலில் கறார் பேர்வழி.
அவனது தொழில் நேர்த்தியும் கற்பூர புத்தியும் கிரேட் மௌண்ட் குழுமத்தை தொடங்கிய அவனது தாத்தாக்களான சதாசிவம், மாணிக்கவாசகம் இருவரையும் அவன் மீது அசையா நம்பிக்கை கொள்ள வைத்திருந்தது.
எப்போதும் தொழில் சிந்தனையில் உழலுபவன் ஷான்ஃபிக்கு வர காரணம் ஐ.ஐ.எம் கோழிக்கோட்டில் அவனுடன் படித்த உற்ற நண்பன் அனுதீப் கன்னாவின் திருமணம்.
பொதுவாக ருத்ரதேவ் அவனது குடும்பத்தினரைத் தவிர வெளியாட்களுடன் அவ்வளவு எளிதில் பழகுபவன் அல்ல. நறுக்கு தெறித்தாற்போல பேசிவிட்டு நகர்ந்து விடுபவன். அவனுக்கு நண்பர்கள் என்றால் அனுதீப் கன்னாவும் அவனது பால்ய சினேகிதன் அசோகமித்ரனும் மட்டுமே.
இருவரில் அசோகமித்ரன் கோவைக்காரன். அனுதீப் ஐ.ஐ.எம்மில் அறிமுகமானவன்.
அனுதீப்பின் குடும்பமும் ரிசார்ட்களுக்குப் பெயர் பெற்றவர்கள் தான். நைனிடாலில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்தி வருபவர்களுக்கு ஷான்ஃபியில் கால்சா நதிக்கரையில் இயற்கை எழிலுடன் கூடிய குயின்ஸ் பேரடைஸ் என்ற ரிசார்ட் ஒன்று உள்ளது.
அதில் வைத்து நடைபெறவுள்ள அனுதீப்பின் திருமணத்திற்காக தான் ருத்ரதேவ் வருகிறான்.
சில தொழில்நுட்ப காரணங்களால் விமானம் கிளம்புவதில் உண்டான தாமதம், நைனிடாலில் இறங்கியதும் திடுதிடுப்பென பெய்த மழை, கார் வருவதில் உண்டான தாமதம் என அனைத்துமாகச் சேர்ந்து அவனை ஒருவித எரிச்சல் மனோபாவத்தில் வைத்திருக்க போதாக்குறைக்கு அவனது அத்தை வேறு புதிதாக அவன் ஆரம்பிக்கவிருந்த ‘க்ளாம்பிங்’ வகை ரிசார்ட்களை கட்டமைக்கும் பணியை ஏற்றிருந்த கட்டுமான நிறுவனத்தின் மீது அதிருப்தி விமர்சனத்தை வைக்க உதவியாளனிடம் அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி உத்தரவிட்டான் அவன்.
திருமணம் முடிந்த கையோடு ஊட்டி திரும்பியதும் வேறு கட்டுமான நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம். அந்த அளவுக்கு அவனது அத்தையின் கருத்துக்கு மதிப்பவன் அவன்.
அந்த எண்ணவோட்டங்களுடன் காரில் பயணித்தவன் திடீரென கார் ஒருவித குலுக்கலுடன் வேகம் குறைந்து நிற்க ஆரம்பிக்கவும் இப்போது என்னடா பிரச்சனை என்ற சலிப்போடு ஓட்டுனரை நோக்க அவரோ காரிலிருந்து இறங்கி பரிசோதிக்க ஆரம்பித்திருந்தார்.
நிமிடங்கள் கரைய கரைய அவனது பொறுமையும் கரைந்து போக காரிலிருந்து இறங்கினான் ருத்ரதேவ்.
“இப்ப என்னாச்சு?”
“என்ஜின்ல சின்ன பிரச்சனை சாப்… சீக்கிரம் சரி பண்ணிடலாம்”
சொன்னதோடு தனக்குத் தெரிந்த மெக்கானிக்கை மொபைலில் அவர் தொடர்பு கொள்ளவும் ருத்ரதேவ் அவரை ஒரேயடியாக விரட்டாமல் இறுக்கம் தளர்ந்து சுற்றியிருக்கும் இயற்கை காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தான்.
இரு பக்கமும் பசுமைப்போர்வை போர்த்தினாற்போல மரம் செடி கொடிகள், அவை சரிவாய் இறங்குமிடத்தில் சிறு சிறு கற்கள் கிடந்தன.
அக்கற்கள் நிரம்பிய கரையைத் தழுவி ஓடிக் கொண்டிருந்த கால்சா நதியின் சலசலக்கும் ஓசையை அனுபவித்தவனுக்கு நதிநீரைப் பார்க்கும் ஆர்வம் எழவும் தனது முழுக்கை சட்டையை மடித்துவிட்டுக் கொண்டு சரிவில் இறங்கினான்.
ஷூ கால்களுக்கு அடியே கற்கள் மிதிபடும் சப்தத்தோடு நதியின் சலசலப்பும் கலவையாய் ஒலித்த நேரத்தில் அங்கே வீசிய குளிர்க்காற்றை கிழித்துக் கொண்டு மதுரகானமாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்.
என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
முன் பின் அறியாத மக்கள், புதிய மொழி என வேறு உலகத்தில் நடமாடுவது போன்ற உணர்வில் இருந்தவனுக்கு அக்குரலைக் கேட்டதும் இவ்வளவு நேரம் இருந்த சலிப்பு அகன்று மனதில் புதுவெள்ளமாக புத்துணர்ச்சி பிரவாகம் எடுக்க குரல் வந்த திசையை நோக்கி நடந்தான் ருத்ரதேவ்.
விமான பயணத்தில் கிட்டத்தட்ட அரிதாகி நைனிடாலில் இறங்கியதும் காணாமலே போன தமிழ் மொழியை பாடல் வடிவில் கேட்டதும் ‘அப்பாடா’ என்ற உணர்வெழுந்தது அவனுக்குள்.
கண்கள் குரலுக்குச் சொந்தக்காரியைத் தேடி அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்தே விட்டது.
நதிக்கரையில் கிடந்த பெரிய பாறையொன்றில் வெண்மை மிண்ட் நிற பைஜாமாவும் டீசர்ட்டும் அணிந்து கருமை வண்ண அருவியாய் பக்கவாட்டில் கூந்தல் வழிந்தோட அமர்ந்திருந்தாள் பெண் ஒருத்தி.
பக்கவாட்டு தோற்றத்தில் ஒப்பனையற்ற முகம் மின்னியது. சற்றே சிவந்திருந்த நாசியும், பாடும் போது மென்மையாய் வளைந்து நெளியும் செவ்விதழும், பாடல் வரிகளுக்கேற்ப பட்டாம்பூச்சியாய் படபடக்கும் இமைகளும் அந்தக் காலைப்பொழுதில் அவளைப் பேரழகியாக காட்டியது என்றால் மிகையில்லை.
ருத்ரதேவ் அவள் அழகில் வாய்ப்பேச்சிழந்து நிற்கையிலேயே பாடல் தொடர்ந்தது.
உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா.
கல் நெஞ்சையும் கசிய வைக்கும் திறன் சங்கீதத்துக்கு உண்டு என்பார்கள். ஆனால் அப்பெண்ணின் பாடலோ ருத்ரதேவின் உயிரையே உருக்கிவிட்டது.
அத்தனை பரபரப்புக்கிடையே அவனை ஆசுவாசமுற செய்த இனிய குரலுக்குச் சொந்தக்காரி ஒரு புன்சிரிப்புடன் திரும்ப ருத்ரதேவின் கண்களில் ரசனையும் சுவாரசியமும் குடியேறியது.
இத்தனை மைல் தொலைவில் தமிழ்ப்பெண் ஒருத்தியைப் பார்த்த மகிழ்ச்சியோடு வாலிபத்துக்கே உரித்தான ரசனையும் சேர்ந்து கொள்ள அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனை உந்தி தள்ளியது.
தன்னை மறந்து பாடி முடித்தவள் அங்கே நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு கணம் மிரண்டு விழித்தாள்.
அவனது நெடுநெடு உயரத்தை அடுத்து அவளது பார்வையில் சிக்கியது ருத்ரதேவின் ஹேசல்நட் வண்ண விழிகளே! ஏனோ பார்க்கும் போதே வயிற்றில் புளியைக் கரைத்தது அவளுக்கு.
யார் இவன்? எவ்வளவு நேரமாக இங்கே நிற்கிறான்? இது வரை இவனை எங்கேயும் பார்த்தது இல்லையே!
அவள் யோசிக்கும் போதே ருத்ரதேவ் அவளை நோக்கி இன்னும் இரண்டு அடிகள் எடுத்து வைத்து நெருங்கினான் “ஹாய்” என்ற முகமனுடன். இது அவனது இயல்பில்லையே என்று மனசாட்சி கிண்டல் செய்ய அதை ஒதுக்கிவிட்டு அப்பெண்ணை நெருங்கினான் அவன்.
பதிலுக்கு அவள் பேசாமல் திகைக்கவும் “நானும் தமிழ் தான்… பை த வே, ஐ அம் ருத்ரதேவ்” என்று வெகு இயல்பாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
அவளது மௌனமும் திகைப்பும் அவனுக்கு வேடிக்கையாக இருக்கவே “நீங்களும் தமிழ் தான்னு உங்க பாட்டை வச்சே கண்டுபிடிச்சிட்டேன்… டோண்ட் கெட் பேனிக்… நான் ஒன்னும் உங்களை கடிச்சு திங்குற மேன்-ஈட்டர் இல்ல… ரிலாக்ஸ்” என்று கிண்டலாக உரைக்கவும் அப்பெண் சிலிர்த்துக் கொண்டாள்.
“முஜே பதா நஹி ஆப் கோன் ஹை… கேன் யூ ப்ளீஸ் மூவ் அ லிட்டில் (நீங்க யாருனு எனக்குத் தெரியலை… தயவு பண்ணி கொஞ்சம் நகருறிங்களா?)”
இவ்வளவு நேரம் செந்தமிழ் தாண்டவமாடிய நாவில் திடுதிடுப்பென இந்தியும் ஆங்கிலமும் குடியேறி விட்டது.
ருத்ரதேவ் புன்சிரிப்புடன் “ஓ! அப்ப உங்களுக்குத் தமிழ் தெரியாது?” என்று அவள் உயரத்திற்கு குனிந்து தமிழில் கேட்க அவள் புரியாதவளைப் போல விழித்தாள்.
முன்பின் தெரியாத வாலிபனிடம் அதுவும் தானாக வழிய வந்து அறிமுகம் செய்து கொள்பவனிடம் எந்தப் பெண்ணாக இருந்தாலும் பேச யோசிப்பாள் தானே!
அப்பெண்ணும் அப்படி யோசித்திருக்கலாம் என அவன் எண்ணுகையிலேயே அவள் அங்கிருந்து விறுவிறுவென ஓட்டமும் நடையுமாக கிளம்பிவிட்டாள்.
“ஆப் கி நாம் க்யா ஹே? அரே போல்னா” என்று அவன் சத்தமாக கேட்பது செவியில் விழுந்தும் கேட்காதவளைப் போல சரிவில் நடந்து சாலையில் ஏறி மறைந்தாள் அவள்.
அவள் பாடியது, தன்னைக் கண்டதும் மருண்டு விழித்தது, பின்னர் ஓடி மறைந்தது என அனைத்தையும் ஒரு நொடியில் மனதில் ஓட்டிப் பார்த்தவன் “கார் ரெடி சாப்” என்ற ஓட்டுனரின் குரலில் நடப்புக்குத் திரும்பினான்.
சரிவில் ஏறி சாலையை அடைந்தவன் ஓட்டுனரிடம் அப்பெண்ணைக் குறித்து வினவ அவரோ “ரிசார்ட்டுக்குப் போற ரோட்ல தான் அந்தப் பொண்ணு நடந்து போச்சு சாப்… பாதியிலேயே இன்னொரு பொண்ணு ஸ்கூட்டியில வந்து பிக்கப் பண்ணிடுச்சு” என்றார்.
ஷான்ஃபி ஒன்றும் பெரிய நகரம் அல்ல. இன்று இல்லையென்றாலும் இங்கிருந்து கிளம்புவதற்குள் அவளை எங்காவது பார்த்து விடலாம் என்றது ருத்ரதேவின் மனது. ஏனோ அவளது முகம் பழக்கமானதாக தோன்றியது அவனது மனதுக்கு.
கூடவே “நீயா இது? புதியவர்களிடம் ஒருவித விலகலுடன் கறாராகப் பேசும் ருத்ரதேவ் எங்கே சென்றான்? இப்படி முன்பின் அறியாத பெண்ணிடம் கிட்டத்தட்ட கல்லூரி மாணவனைப் போல நடந்து கொள்ளும் நீ கட்டாயம் அவனாக இருக்க முடியாது” என்று அறுதியிட்டுக் கூறியது அந்தப் பொல்லாத மனம்.
மனதின் குரலை ஒருவித புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டபடியே காரிலமர்ந்தான் அவன்.
காரும் ரிசார்ட்டை நோக்கி வேகமெடுத்தது.
அதே நேரம் அந்தப் பெண்ணோ தனது தோழியோடு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தாள். ருத்ரதேவும் அவளும் செல்லும் சாலைகள் வெவ்வேறு என்பதால் சந்திக்கும் வாய்ப்பில்லை.
“ஏன் நெர்வஸா இருக்குற தக்ஷி?”
ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டிருந்த தோழி கேட்கவும் அந்த தக்ஷி என்பவளிடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
“வழக்கம் போல வாக்கிங் வந்த இடத்துல கொஞ்ச நேரம் ரிலாக்சா உக்காந்துட்டுப் போகலாம்னு நினைச்சேன்… இன்னைக்கு க்ளைமேட் மனசுக்கு இதமா இருந்ததும் வாய் சும்மா இருக்காம பாட ஆரம்பிச்சிடுச்சு… பாடி முடிச்சதும் கண்ணை திறந்து பார்த்தா நெடுநெடுனு நார்த் இந்தியன் மாதிரி ஒருத்தன் நிக்குறான்… அவன் தமிழ்ல பேசவும் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்… எவ்ளோ தான் தைரியமான பொண்ணா இருந்தாலும் இந்த மாதிரி ஆளரவம் இல்லாத இடத்துல தன்னந்தனியா ஒருத்தன் கிட்ட கேஸ்வலா பேசுறங்கிறது என்னைப் பொறுத்தவரைக்கும் சவால் தான் நவி… அவன் என்னை தமிழ்ப்பொண்ணுனு தெரிஞ்சுக்கக்கூடாதுனு இந்தில பேசி குழப்பிட்டு ஓடி வந்துட்டேன்… ரோட்டுக்கு வந்தப்ப தான் அங்க ஒரு கார் ரிப்பேர் ஆகி நின்னதை கவனிச்சேன்… அவன் வந்த காரா தான் இருக்கணும்னு கெஸ் பண்ணிட்டு ஓட்டமும் நடையுமா ரிசார்ட்டுக்குக் கிளம்புனப்ப தான் உன் ஸ்கூட்டி கண்ணுல பட்டுச்சு”
அவள் சொல்லி முடிக்கவும் ஸ்கூட்டியை ஓட்டிய நவி என்ற நவ்யா குபீரென நகைத்தாள்.
பின்னே இருந்தவள் முறைப்பது பக்கவாட்டு கண்ணாடியில் தெரியவும் சிரிப்பைக் கட்டுப்படுத்தியவள்
“கோச்சுக்காத தக்ஷி… அந்தாளை நினைச்சு தான் சிரிச்சேன்… தமிழ்ப்பொண்ணுனு ஃப்ளர்ட் பண்ண நினைச்சு ஏமாந்து போயிருப்பான்ல” என்கவும்
“சீச்சீ! அவன் ஏன் என் கிட்ட ஃப்ளர்ட் பண்ண போறான்? லூசு மாதிரி உளறாம ரோடை பார்த்து ட்ரைவ் பண்ணுடி” என்று அதட்டினாள் தக்ஷி.
சொல்லும் போதே நெடுநெடுவென ஆகிருதியான ருத்ரதேவின் உருவம் அவள் மனக்கண்ணில் வந்து சென்றது. கூடவே குறும்பாய் மின்னிய ஹேசல்நட் வண்ண விழிகளும்.
அவனைப் பற்றி யோசிக்கும் போதே தனது தலையில் குட்டிக்கொண்டாள் அவள்.
“தி கிரேட் தக்ஷிண்யா இப்பிடியா மனசை அலைபாய விடுவ? எவனோ ஒருத்தன் வந்தானாம், இவ பாடுனதை கேட்டுட்டு அறிமுகமானானாம்… லீவ் ஹிம் தக்ஷி” என்று மனசாட்சி இடித்துரைக்கவும் பழைய தக்ஷிண்யாவாய் மாறிப்போனாள்.
இது வரை அவளை அறிமுகம் செய்து வைக்கவில்லை அல்லவா!
அவள் தக்ஷிண்யா. இருபத்து நான்கு வயது இளம்பெண். ஹோட்டல் மேலாண்மையில் முதுகலை முடித்த கையோடு குயின்ஸ் பேரடைஸில் ஹாஸ்பிட்டாலிட்டி மேலாளராகப் பணிக்குச் சேர்ந்தவள். அங்கே அவளுக்குக் கிடைத்த தோழி தான் நவ்யா. அவள் உதவி மேலாளர்.
இருவருமே ரிசார்ட்டில் தான் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். ரிசார்ட்டின் மேலாண்மை இயக்குனரான அனுதீப் கன்னாவின் திருமணம் அங்கேயே நடக்கவிருப்பதால் விருந்தினர்களை வரவேற்பது, அவர்களுக்கான அறைகள் மற்றும் வசதிகளை கவனிப்பது என அந்த வாரம் முழுவதுமே பரபரப்பாகத் தான் கடந்தது.
இதோ இந்த வாரத்திலேயே வட இந்திய திருமணத்திற்கே உரித்தான சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் திருமணம் நடந்தேறும். அதற்காக நைனிடாலில் பிரசித்தி பெற்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைந்திருந்தான் அனுதீப்.
திருமணத்திற்கு வருகை தரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எவ்வித அசவுகரியமும் நேரக்கூடாதென கட்டளை வேறு இட்டிருந்தான். அவர்களின் தங்குமிடம் குறித்த பொறுப்பு முழுவதும் குயின்ஸ் பேரடைஸின் ஊழியர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஹாஸ்பிட்டாலிட்டி மேலாளர் என்ற முறையில் தக்ஷிண்யா தான் அதை கவனிக்க வேண்டும். அவளுக்கு உதவியாக நவ்யாவும் இருக்க பரபரப்பு இருந்தாலும் பதற்றமின்றி பணிகள் செவ்வனே நடந்தேறிக் கொண்டிருந்தது.
முந்தைய தினம் விருந்தினர்களில் ஒரு சாரார் ட்ரக்கிங் சென்றதால் அவர்களுடன் செல்ல வேண்டிய நிலை தக்ஷிண்யாவுக்கு. அந்த அலுப்பு தீருவதற்குள் அடுத்த கடமை அவளை அழைத்திருந்தது.
அனுதீப் கன்னாவின் நெருங்கிய நண்பன் ஒருவனை கவனிக்கும் பொறுப்பு அது. முந்தைய தின இரவே வர வேண்டியவன் விமானம் தாமதம் ஆனதால் நைனியில் தங்கி காலையில் வருவதாக கூறியிருந்தான்
தக்ஷிண்யாவும் அதிகாலையில் விழித்து அவனுக்காக காத்திருந்து போரடித்து போனதால் வழக்கமான நடைபயிற்சிக்காக கால்சா நதிக்கரைக்கு சென்றுவிட்டாள்.
இப்போது ரிசார்ட்டுக்குச் சென்றால் குளித்து தயாராகுவதற்கு சரியாக இருக்குமென அவள் ஒரு கணக்கு போட விதியோ அவள் நதிக்கரையில் கண்டு மிரண்ட ருத்ரதேவை வைத்து அவளுக்கு விளையாட்டு காட்ட கணக்கு போட்டது.
நதிக்கரையில் தமிழ் மொழி தெரியாதவளைப் போல காட்டிக்கொண்டவள் ருத்ரதேவைச் சந்தித்தால் எவ்விதம் எதிர்வினையாற்றப் போகிறாளோ!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


