“எய்யா சரவணா! பாலம்மாக்கா வந்திருக்கு பாரு. எழுந்திரிச்சு என்னனு கேளு”
இவ்வளவு நேரம் அன்னை வாளியிலிருந்த தண்ணீரை வாசலில் தெளிக்கும் சத்தத்தைக் கேட்டபடி போர்வைக்குள் உறங்குவது போல பாசாங்கு செய்துகொண்டிருந்த சரவணன் பாவனையை நிறுத்திவிட்டுச் சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தான் கட்டிலில்.

இரவிலிருந்து காலை வரை நிற்காமல் சுழன்ற கடமை தவறாத மின்விசிறியை நிறுத்திவிட்டு எழுந்து கதவைத் திறந்தான்.
அவனது அன்னை கனகவல்லியிடம் சோகமே உருவாக ஏதோ கதை சொல்லிக்கொண்டிருந்தார் பாலம்மா என்ற பெண்மணி.
சரவணனைக் கண்டதும் “இப்பவே உன் மவனுக்குக் கல்யாணக்களை வந்துட்டு போ” என்றவர் “எய்யா நேத்து நைட்டுல இருந்து ஃபேனு சுத்த மாட்டேங்குது. கொஞ்சம் வந்து என்னனு பாக்குறியா?” என வினவினார்.
சரவணன் கடுப்போடு தன் அன்னையை நோக்கினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவரோ மகனை இறைஞ்சுவது போல பார்த்தார்.
“சரி வர்றேன். நீங்க போங்க” என்று சொல்லி பாலம்மாவை அனுப்பி வைத்தவன் தன் அன்னையிடம் கடுகடுக்க ஆரம்பித்தன.
“எதுவா இருந்தாலும் கடைக்குப் போய் பாத்துக்கங்கனு சொல்லமாட்டிங்களாம்மா? இவங்க வீட்டுக்குப் போன மாசம் மிக்சி ரிப்பேர் பண்ணிக் குடுத்ததுக்கு இன்னும் காசு தரல. நஷ்டத்துக்கு வேலை பாக்க முடியுமா?”
“அப்பிடி இல்ல சரவணா. ஆம்பளை இல்லாத வீடு. யார் கொண்டு வந்து உன் கடையில குடுப்பாங்க? இந்த ஒரு வாட்டி போயிட்டு வாய்யா”
என்னதான் கடுப்பு போல காட்டிக்கொண்டாலும் அன்னை இறங்கி வந்து பேசினால் அமைதியாகிவிடுவான் சரவணன். அவர் வார்த்தைக்கு அத்துணை மதிப்பு அவனிடம்.
“சரிம்மா. நான் பல் தேய்ச்சிட்டுப் போய் பாக்குறேன்”
அன்னையிடம் சொல்லிவிட்டுத் தோட்டத்தில் இருக்கும் குடிநீர் வரும் குழாயின் அருகே நின்று பல் துலக்க ஆரம்பித்தான்.
சரவணன் – வயது இருபத்தெட்டு. படிப்பு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இஞ்சினியரிங் டிப்ளமோ.
டிப்ளமோ முடித்ததும் மூன்று ஆண்டுகள் சென்னையில் மூன்று தானியங்கி வாகன நிறுவனங்களின் தயாரிப்பு பிரிவில் ஒப்பந்தப் பணியாளனாக வேலை செய்து, நிரந்தர வேலைவாய்ப்புக்கும் பணியுயர்வுக்கும் வழியில்லை என்றதும் சொந்த ஊருக்கு வந்துவிட்டான்.
ஒரு வருடம் கிடைத்த வேலை அனைத்தையும் பார்த்தான். தந்தையின் நண்பர் ஒருவர் நடத்திய வீட்டு உபயோகப்பொருட்கள், எலக்ட்ரானிக் சாதங்களைப் பழுது பார்க்கும் கடையில் பணியாற்றினான்.
அவரிடமிருந்து அந்தக் கடையை வாங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சொந்தமாக நடத்திவருகிறான். உதவியாளர் எல்லாம் கிடையாது. எல்லாமே அவன்தான்.
அதுபோக புதிதாகக் கட்டப்படும் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வேலையையும் அவ்வபோது செய்வான்.
ஊர்க்காரர்களும் சின்ன சின்ன பழுதுகளுக்கு அவனைத் தேடியே சென்றார்கள். பெரும்பாலானவர்கள் அதற்கான தொகையைக் கொடுத்துவிடுவார்கள்.
சிலர்தான் ‘இதோ அதோ’ என்று இழுத்தடிப்பார்கள். இத்தனைக்கும் ஆயிரம் இரண்டாயிரங்களில் எல்லாம் இருக்காது. நூறு, இருநூறுக்கே அத்தனை இழுபறி.
அதனால்தான் யாருக்கும் வீடு தேடிச் சென்று வேலை பார்த்துக்கொடுப்பதில்லை அவன்.
“எதுவா இருந்தாலும் கடைக்குக் கொண்டு வந்துடுங்க” என்று சொல்லிவிடுவான்.
ஆனால் அவனது அன்னை கனகவல்லிக்கும், தந்தை ரத்தினவேலுவுக்கும் இரக்கச்சுபாவம் அதிகம். அதை அடுத்தவர்கள் உபயோகிக்கிறார்கள் என்பதைக்கூட அறியாத அப்பாவிகள்.
அதனால் அவர்கள் சொல்வதை அவன் மறுப்பதில்லை. இதோ பாலம்மாவின் வீட்டு மின்விசிறியைப் பழுது பார்ப்பதிலிருந்து அவர்கள் பார்த்து நிச்சயித்த தேவயானியைத் திருமணம் செய்வது வரை அனைத்துக்கும் மறுபேச்சு இல்லாமல் ஒப்புக்கொண்டான்.
இன்னும் ஒரு வாரத்தில் அவனுக்குத் திருமணம். அதற்குரிய உற்சாகமோ எதிர்பார்ப்புகளோ இல்லாமல் வெகு சாதாரணமாக அன்றாட வேலைகளையும், தொழிலையும் கவனித்துக்கொண்டிருக்கிறான்.
அவன் பல் துலக்கிவிட்டு வருகையில் அன்னையும் தந்தையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.
“மருமவளுக்கு நீ எடுத்த பட்டுச்சேலை ரொம்ப பிடிச்சிருக்குதாம் கனகு. அத்தை கிட்ட சொல்லிடுங்க மாமானு என் கிட்ட சொல்லி விட்டுச்சு”

சமையல்கட்டு படியில் அமர்ந்து காபி குடித்தபடி சொல்லிக்கொண்டிருந்தார் ரத்தினவேலு. அதற்கு கனகவல்லி ஏதோ பூரிப்புடன் பதில் சொல்ல அதையெல்லாம் காதில் வாங்காமல் பாலம்மாவின் வீட்டை நோக்கி நடைபோட்டான் சரவணன்.
அங்கே போய் மின்விசிறியைக் கழற்றி பார்த்தவன் “காயில் எரிஞ்சு போயிருக்கு. கடைக்குக் கொண்டு போய் சரி பாக்க முடியும். முன்னூறு ரூபாய் ஆகும்” என்று சொல்ல

“அவ்ளோ ஆகுமா?” என்று அங்கலாய்த்தார் பாலம்மா. அவரது இளையமகள் அன்னையை முறைத்தாள்.
“நான் பத்து மணிக்குக் கடைக்குக் கொண்டு வந்துடுறேன்ணா” என்றாள்.
அங்கிருந்து வீட்டுக்கு வந்தவனிடம் மொபைலை நீட்டினார் கனகவல்லி.
“என்னம்மா?”
“மருமவப்பொண்ணு நேத்து நைட்டுல இருந்து பத்து வாட்டி உனக்குக் கால் பண்ணிடுச்சாம். நீ போனை எடுக்கவேல்லயாம். ஏன் இப்பிடி இருக்க சரவணா? உனக்குக் கல்யாணத்துல விருப்பம்தானே?” என்று ஐயமாகக் கேட்டார்.
“எனக்கு இந்தக் கல்யாணத்துல முழு சம்மதம்மா. நேத்து ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க பாளையங்கோட்டைக்கு அலைஞ்சு, பெருமாள்புரத்துல ஒரு வீட்டுக்கு வயரிங் வேலைய வேற முடிச்சேன். அலைச்சல் தாங்க முடியாம உடம்பு வலி. அதான் தூங்கிட்டேன். நான் கடைக்குப் போய் அவ கிட்ட பேசிக்கிறேன்”
“ஏன்பா அவ இவனு ஏன் சொல்லுற? மருமவளுக்குப் பேர் இல்லையா?”
தோட்டத்தில் பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து கொண்டிருந்த ரத்தினவேலுவின் குரல் இடையிட்டது.
“தேவயானி கிட்ட பேசுறேன். இப்ப சந்தோசமா?”
அன்னையும் தந்தையும் முகம் மலர்வதைப் பார்த்தபடி குளிக்கப் போய்விட்டான் அவன்.
அதே நேரம் மணமகளும் கதாநாயகியுமான தேவயானி மொபைலைப் பார்த்தபடி நகம் கடித்துக்கொண்டு மாடிப்படியில் அமர்ந்திருந்தாள்.

ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான அழகு அவளுடையது. பாளையங்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளினியாகப் பணியாற்றி வருகிறாள்.
இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு ஆசிரியை ஆகும் கனவிலிருந்தவளுக்கு நிதர்சனம் தமக்கையின் திருமண ரூபத்தில் வந்து பிடரியில் அடித்து வைக்க, பட்டம் வாங்கிய கையோடு மருத்துவமனையில் வரவேற்பாளினி பணிக்குச் சேர்ந்தாள்.
அவளது தந்தை கைலாசநாதன் வீடுகளுக்கு டைல்ஸ் போடும் பணியை மட்டும் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுப்பவர். இருவரது வருமானமும் மூத்தவள் தேம்பாவணியின் திருமணச்செலவுக்காகச் சேமிக்கப்பட்டது.
பெண் பிள்ளையைப் பெற்றால் திருமணத்தோடு செலவு முடிந்துவிடுமா என்ன? அந்தச் சீர் இந்தச் சீர் என்று வாங்காவிட்டால் எந்த ஆண்பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மனம் குளிர்கிறது?
பொங்கல் சீர், ஆடி சீர், கார்த்திகை சீர், தலை தீபாவளி என ஒருவழியாக செலவு செய்து நிமிர்ந்தபோது தேம்பாவணி கருவுற்றாள். ஐந்தாம் மாதம் பழம் போடுவதற்கு, ஏழாம் மாதம் வளைகாப்புக்கு என ஒரு தொகை செலவானது.
பின்னர் தலை பிரசவம் பெண்ணைப் பெற்றவர்கள் தலையில் விடிந்தது. அதுதான் அவர்கள் பக்கம் வழக்கமும் கூட.
இதோ தேம்பாவணியின் புதல்வனுக்கு இரண்டு வயதாகிறது. அவனது முதல் பிறந்தநாளுக்கு பூந்தி வைத்து புதிய பாத்திரங்கள் எடுத்துக் கொடுக்கும் முறை வரை கேட்டு வாங்கிக்கொண்டார் அவளது மாமியார்.
எல்லாம் முடிந்து ஓய்ந்து தொழில்ரீதியாக ஒரு வீட்டில் டைல்ஸ் பதிக்கச் சென்றபோது சரவணனைச் சந்தித்தார் கைலாசநாதன். அந்நேரம் அவன் மின் இணைப்பு கொடுக்க வந்திருந்தான்.
பார்த்து பழகியதில் பதவிசான பொறுப்பான இளைஞனாகத் தெரிந்தான். கைலாசநாதனின் குடும்பம் குடியிருக்கும் ஆழியூருக்குப் பக்கத்து ஊரான நதியூர்தான் அவனுடைய பூர்வீகம் என்று அறிந்ததும் தெரிந்தவர் மூலம் அவனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். நல்லபடியாகத் தகவல் கிடைத்தது.
“பையனோட அப்பா ப்ரைவேட் ஸ்கூல்ல வேன் டிரைவரா இருக்காரு. ஒரே பையன். போன வருசம் பழைய வீட்டை இடிச்சிட்டுப் புதுசா வீடு கட்டிருக்கான். சொந்தமா மிக்சி, கிரைண்டர், ஃபேன் மாதிரி எலக்ட்ரிக்கல் ஐட்டம் ரிப்பேர் பார்க்குறது, எலக்ட்ரிக்கல் ஐட்டம் ஸ்பேர் பார்ட்ஸ் ஹோல் சேல் பண்ணுற கடை வச்சிருக்கான். அப்பப்ப வயரிங் பண்ண போவான். அவங்கப்பா எனக்குப் பழக்கம். சூதுவாது தெரியாத மனுசன். அந்த மதினியும் வெள்ளந்தி. உங்க பொண்ணு அந்த வீட்டுக்குப் போச்சுனா சொந்த மக மாதிரி பாத்துப்பாங்க”
அந்த நபர் மூலமாகவே திருமணச்சம்பந்தம் பற்றிய பேச்சை எடுத்தவர் ரத்தினவேலுவும் கனகவல்லியும் சம்மதித்ததும் திருமணத்தைப் பேசி முடித்துவிட்டார்.
பெண் பார்க்க வந்த சரவணனைப் பார்த்ததுமே தேவயானிக்குப் பிடித்துப் போய்விட்டது. இயல்பாகப் பேசினான். அவளது அன்னை காமாட்சி தின்பண்டங்கள் அடங்கிய கிண்ணத்தைக் கொண்டு வந்தபோது மாப்பிள்ளை முறுக்கு, ஈகோ இல்லாமல் வாங்கிக்கொண்டான். தனியே பேசியபோது எவ்வித நாடகத்தனமும் இல்லாமல் பேசினான்.
“நான் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்”
“கண்டிப்பா போங்க. அதுக்கு என் அனுமதி ஏன் கேக்குறிங்க? உங்க சம்பளத்தை உங்க வீட்டுக்குக் குடுக்கணும்னு நினைச்சாலும் நோ அப்ஜெக்சன். உங்கம்மா அப்பாக்கு நீங்கதானே பொறுப்பு”

இப்படி பேசுபவனை யாருக்குப் பிடிக்காமல் போகும்! கொஞ்சம் கறார் பேர்வழியாக இறுக்கமாகத் தெரிந்தாலும் நியாயவானாக இருப்பவனை மணக்க அப்போதே முழு மனதோடு சம்மதம் தெரிவித்துவிட்டாள் தேவயானி.
நிச்சயதார்த்தம், முகூர்த்தப்புடவை எடுப்பது என நாட்கள் வேகமாக ஓடியது.
தேவயானிக்கு ஒரே ஒரு நெருடல். வருங்கால மாமனாரும் மாமியாரும் அவளைத் தாங்கினார்கள். ஆனால் கணவனாக வரிக்கப்பட்டவன் மட்டும் விலகி நின்றான். அவனாக ஒரு நாள் கூட மொபைலில் அழைப்பு விடுக்கவில்லை. வாட்சப்பில் பேசவில்லை.
திருமணவாழ்க்கைக்குத் தயாராகும் வாலிப உள்ளத்தில் ஏகப்பட்ட கனவுகள் இருக்கும்தானே! அதை அவன் தன்னுடன் பகிர்ந்துகொள்ளவேண்டுமெனத் தேவயானி விரும்பினாள். ஆனால் அவனோ பட்டும் படாமல் பழகினான்.
இதோ முந்தைய இரவிலிருந்து இப்போது வரை பதினைந்து முறை அவனது மொபைலுக்கு அழைப்பு விடுத்துச் சோர்ந்து போய் கனகவல்லியிடம் முறையிட்டுவிட்டாள்.
யோசனையோடு மாடிப்படியில் அமர்ந்திருந்தவளுக்கு அன்னையின் குரல் கேட்டது.
“இன்னைக்குத் தானே கடைசி வேலைநாள்னு சொன்ன? கிளம்பலையா”
வேலைக்குச் செல்லவேண்டும் என்பது மண்டையில் உறைக்கவும் வேகமாக எழுந்தவள் தற்காலிகமாகச் சரவணனை மறந்துவிட்டுப் பணிக்குச் செல்லத் தயாரானாள்.
அன்றைய தினம் அவள் செல்வி தேவயானி கைலாசநாதனாக வேலைக்குச் செல்லும் கடைசி வேலை நாள் ஆயிற்றே!
திருமணத்திற்காக இருபது நாட்கள் விடுப்பு எடுக்கப்போகிறாள். அடுத்த முறை மருத்துவமனை வாயிலை திருமதி சரவணனாக மிதிப்போம் என்ற நினைவு, சோர்வை எல்லாம் அகற்றிவிட சுறுசுறுப்பாக வேலைக்குக் கிளம்பினாள் தேவயானி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

