“மனுசங்க எல்லாருமே ஏதோ ஒரு கட்டத்துல தடுமாறுவாங்க… தப்பான முடிவை எடுப்பாங்க… அந்த முடிவு தப்பானதுனு காலப்போக்குல புரியுறப்ப அதால பாதிக்கப்பட்டவங்க கிட்ட மன்னிப்பு கேக்குறவங்க ரொம்ப சிலர் மட்டும் தான்… அப்ப மேக்சிமம் மக்கள் என்ன பண்ணுவாங்க? நான் செஞ்சது தப்பே இல்லனு ஸ்ட்ராங்கா ஆர்கியூ பண்ணுவாங்க… தன்னோட தப்பால பாதிக்கப்பட்டவங்களையே ப்ளேம் பண்ணுவாங்க… சில விசித்திரமான கேரக்டர்ஸ் சம்பவத்துக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஆளை கனெக்ட் பண்ணி தன்னோட தப்பை அவங்க மேல பூசி அசிங்கப்படுத்துவாங்க… இப்பிடி விதவிதமான கேரக்டர்சை யாரெல்லாம் ஃபேஸ் பண்ணுறாங்களோ அவங்களுக்குக் காலப்போக்குல மனுசங்களை கையாளுற வித்தை தெரிஞ்சிடும்… எப்பேர்ப்பட்ட எமகாதகனையும் ரொம்ப ஈசியா ஃபேஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க… இது என்னோட சொந்த அனுபவத்துல நான் கத்துக்கிட்ட பாடம்… I hope it’ll helpful to you”
-நித்திலா
சாகர் நிவாஸ்…
காவல்துறை அதிகாரியின் முன் விசாரணைக்காக அமர்ந்திருந்தாள் நித்திலா. முதல் ஆளாக அவளை விசாரிக்க காரணம், குற்றம் நடந்த இடத்தில் அவள் இருந்தாள் என்பதே!
“நீங்களும் மிஸ்டர் கிருஷ்ணராஜசாகரும் நாலு வருசமா பிரிஞ்சு இருந்திருக்கிங்க… அந்தப் பிரிவுக்கு என்ன காரணம்னு நான் கேக்கமாட்டேன்… ஆனா அந்தப் பிரிவால உண்டான வேதனை மிஸ்டர் கிருஷ்ணராஜசாகரை பழிவாங்க உங்களைத் தூண்டிருக்கலாம்… அதனால நீங்களே ஆளை ஏற்பாடு பண்ணி அவரைக் கொலை பண்ண முயற்சி பண்ணிருக்கலாம்னு நான் யோசிக்கலாம் தானே?”
மிகவும் சாதுரியமாக அவளைச் சந்தேகத்துக்குரிய நபர்கள் பட்டியலில் இணைத்தார் காவல்துறை ஆய்வாளர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நித்திலாவின் உதடுகள் விரக்தியில் வளைந்தன.
“அவரைப் பழி வாங்கணும்னு நான் நினைச்சிருந்தா, ஏன் அவரோட வீடு வரைக்கும் வந்திருக்கப்போறேன்? அவர் சிம்லாவுல இருந்தப்பவே ஆள் வச்சு கொன்னுருக்கலாமே”
“பாயிண்ட்…. ஓ.கே! உங்களுக்கு யார் மேலயாச்சும் சந்தேகம் இருக்கா மிசஸ் கிருஷ்ணராஜசாகர்?”
“அன்னைக்குச் சம்பவம் நடந்த இடத்துக்கு என் மகனை அழைச்சிட்டுப் போனவங்க இந்த வீட்டோட ரெண்டாவது மருமகள் நிஹாரிகா… நான் போய் பாத்தப்ப சாகர் என் மகனைக் காப்பாத்த தோட்டாவ கையில வாங்கி ரத்தத்தோட நின்னார்… அடுத்த தோட்டாவ வயித்துல வாங்கி என்னையும் காப்பாத்துனார்… அப்ப அந்த இடத்துல நான், சாகர், அம்ரு, அந்த கில்லர் நாலு பேர் மட்டும் தான் இருந்தோம்… அம்ருவ அங்க அழைச்சிட்டுப் போன நிஹாரிகாவ காணும்”
“ஓ.கே… மிசஸ் சந்தீப்புக்கும் உங்களுக்கும் எதுவும் பிரச்சனை, முன்விரோதம் இருக்கா?”
“அவ என்னோட ஸ்டெப் சிஸ்டர்… அவளுக்குச் சாகர் மேல வெறுப்பும் கோவமும் இருந்துச்சு… ஏன்னா கொஞ்சநாளுக்கு முன்னாடி சாகர் க்ரூப் ரெண்டா பிரிஞ்சு சந்தீப்பும் அவளும் வீட்டை விட்டுப் போறதுக்குச் சாகர் தான் காரணம்னு அவ நினைச்சா”
“அப்ப அவங்க தான் உங்க ஹஸ்பெண்டை கொலை பண்ணுறதுக்கு கில்லரை வர வச்சாங்கனு சொல்லுறிங்களா?”
“உறுதியா சொல்ல முடியல… பட் நிஹாரிகா அப்பிடி செய்யக்கூடிய ஆள் தான்”
“தேங்க்யூ மிசஸ் சாகர்… என்கொயரிக்கு நல்லா கோ-ஆப்ரேட் பண்ணுனிங்க… பை த வே, மிஸ்டர் சாகர் சொல்லப்போற ஸ்டேட்மெண்டை வச்சு தான் உங்களை சஸ்பெக்ட் லிஸ்ட்ல இருந்து நீக்க முடியும்”
“நோ ப்ராப்ளம் சார்… ஐ வில் வெயிட்”
நித்திலா அங்கிருந்து வெளியேறியதும் ஸ்ரீநயனியை அழைத்தார் ஆய்வாளர்.
அவளும் நித்திலாவைப் போல நிஹாரிகா மீது தான் சந்தேகம் என்றாள். ஆய்வாளர் முன்பே பாதுகாவலர்களை விசாரித்திருந்தார்.
எனவே தீக்ஷித்தை கிருஷ்ணராஜசாகர் சந்திக்கவேண்டுமென சொல்லி நிஹாரிகா அழைத்துச் சென்றது, சி.சி.டி.வி செயலிழப்பு அனைத்தையும் அவர் அறிவார்.
ஸ்ரீநயனி தமையனின் தொழில் போட்டியையும் காரணமாகக் கூறினாள். அவளிடம் தகவல்களை வாங்கிவிட்டு கிருஷ்ணராஜசாகரின் உதவியாளன் என்ற முறையில் இப்ராஹிமை விசாரித்தார்.
அவன் தொழில் போட்டியின் காரணமாக ஆயுஷ் பர்மான் பத்திரிக்கையாளர் மத்தியில் வன்மத்தைக் கக்கியதையும் அதை தொடர்ந்து சாகர் நிவாசுக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதையும் கூறினான்.
கூடவே சமீபநாட்களில் பர்மான் குடும்பத்தினரோடு நிஹாரிகாவுக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கத்தையும் பதிவு செய்தான்.
பின்னர் விக்ரம், சாவித்திரி, தேவராஜன், சிரஞ்சீவி, காவேரி போன்றோரும் விசாரிக்கப்பட்டனர். நெருங்கிய உறவினர் என்ற முறையில் சைலேந்திரியும் ஜனார்தனனும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.
சைலேந்திரி பெரிதாக உபயோகமான செய்தி எதையும் கூறவில்லை. ஆனால் ஜனார்தனன் நிஹாரிகாவுக்குத் தன் மகள் மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் மறைக்காமல் கூறினார்.
“என் பொண்ணு சந்தோசமா இருக்கக்கூடாதுனு அம்மாவும் மகளும் நிறைய சதி செஞ்சாங்க சார்”
நர்மதாவும் ஆனந்த்சாகரும் இளைய மருமகள் கொலை செய்யுமளவுக்குப் போகமாட்டாள் என அழுத்தம் திருத்தமாக உரைத்தனர்.
அடுத்து சந்தீப்பின் முறை.
அவன் தான் கண்ட காட்சியை மறைக்காமல் கூறினான். கூடவே அம்ரித்தைக் குளத்தினருகே கூட்டி சென்றவள் தன் மனைவி என்பதையும் தான்.
“உங்க ஒய்புக்கு ஏன் உங்க அண்ணி மேல வெறுப்பு?”
“என் ஒய்பும் அண்ணியும் ஸ்டெப் சிஸ்டர்ஸ்… என் மாமாவோட செகண்ட் ஒய்ப் தான் நிஹியோட அம்மா… என் மாமா அவளோட பயாலஜிக்கல் ஃபாதர் இல்ல… என் மாமா மேல அவளுக்கு ரொம்ப அன்பு… பட் மாமாவோட அம்மாக்கு நிஹாரிகா தன் பையனோட ரத்தம் இல்லங்கிற வெறுப்பு எப்பவுமே உண்டுனு சொல்லிருக்கா… அவங்க அண்ணி கிட்ட பாசத்தையும் அவ கிட்ட வெறுப்பையும் காட்டுனதா சொல்லுவா… அத்தையையும் அவங்க ரொம்ப கொடுமைப்படுத்துனாங்களாம்… அது தான் அண்ணிய அவங்க ரெண்டு பேரும் வெறுக்குறதுக்குக் காரணம்னு நிஹி என் கிட்ட சொல்லிருக்கா சார்”
“உங்க ஒய்ப் மேல எல்லாரும் சந்தேகப்படுறாங்க… திடீர்னு பர்மான் ஃபேமிலியோட அவங்க ஏன் நெருங்கணும்? கில்லரை ஏன் தோட்டத்துக்கு அழைச்சிட்டுப் போகணும்? நீங்க இதை பத்தி என்ன நினைக்குறிங்க?”
சந்தீப் சங்கடமாகப் பார்த்தான்.
“தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் அவங்க தண்டிக்கப்படணும், அது நிஹாரிகாவா இருந்தாலும் கூட… வேற எதுவும் சொல்ல வழியில்ல சார்”
இந்தளவுக்கு நியாயவானாக இருக்கிறானே என அடுத்து நிஹாரிகாவை அழைத்தார் காவல் ஆய்வாளர்.
வந்தவளோ அவரைக் கண்டுகொள்ளாமல் இருக்கையில் அமர்ந்ததோடு மொபைலில் யாரிடமோ பேசினாள்.
“என்கொயரில இருக்கப்ப மொபைல் யூஸ் பண்ணாதிங்க”
“நான் என் லாயர் கிட்ட பேசிட்டிருக்கேன் சார்… அவர் வந்ததுக்கு அப்புறம் தான் உங்களோட கேள்விக்கு நான் பதில் சொல்லுவேன்”
அவள் காட்டிய மிடுக்கு போலியோ என்று சந்தேகித்தார் காவல் ஆய்வாளர். காரணம் அவளது அளவுக்கு மீறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
பல நேரங்களில் குடும்பச்சண்டைகள் இம்மாதிரி கொலை முயற்சிகளுக்குக் காரணமாக அமைவது வழக்கம். மேல்தட்டினர் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
“உங்களோட நடவடிக்கை சந்தேகத்தைக் கிளப்புதுனு இப்பவே உங்களை என்னால அரெஸ்ட் பண்ண முடியும் மிசஸ் சந்தீப்… காலை கட் பண்ணிட்டு என்கொயரிக்கு கோ-ஆப்ரேட் பண்ணுங்க”
ஆய்வாளர் கறாராகப் பேசவும் அழைப்பைத் துண்டித்தாள் நிஹாரிகா.
மனதில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நிமிர்வாக அமர்ந்தாள்.
“வந்த எல்லாரும் உங்க மேல தப்பு இருக்கும்னு சந்தேகப்படுறாங்க”
“அவங்க சந்தேகத்துக்கு நான் ஒன்னும் பண்ணமுடியாது சார்”
“சட்டம் சந்தேகப்பட ஆரம்பிச்சாலும் இதே பதிலை தான் சொல்லுவிங்களா?”
நிஹாரிகா வாயடைத்துப் போனாள். சந்தீப் இருக்கிறான். அவன் என்னைக் காப்பாற்றுவான். நான் என்ன செய்தாலும் என்னைக் காக்க அவன் வருவான்!
“நீங்க ஏன் கில்லரை வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வந்திங்க?”
“அந்தாள் கில்லர்னு எனக்குத் தெரியாது இன்ஸ்பெக்டர் சார்… கிரிஷ் மாமாவோட ஃப்ரெண்ட் மெக்கலமோட பி.ஏ கோவால இருந்து வர்றதா சொன்னார்… அவர் தான்னு நினைச்சு அழைச்சிட்டு வந்தேன்”
“அப்பிடி இருந்தாலும் ஏன் அவரை கார்டனுக்கு அழைச்சிட்டுப் போகணும்?”
“ஃப்ளாரண்டுக்குக் கூட்டம் பிடிக்காதுனு சொன்னார்… அதான் நான் அவரை கார்டனுக்கு அழைச்சிட்டுப் போனேன்”
“சரி! அம்ரித்தையும் ஏன் அங்க கூட்டிட்டுப் போனிங்க?”
“அவன் என் ஸ்டெப் சிஸ்டரோட சன்… எனக்கு அவ மேல பெருசா அன்பு கிடையாது… பட் அம்ரித்தை எனக்குப் பிடிக்கும்… அவன் கூட கார்டியலான ரிலேசன்ஷிப் வேணும்னு ஆசைப்பட்டேன்… குளத்துல அவன் தாமரை வளக்குறான்… அதை வச்சு கான்வர்சேசன் பில்ட் பண்ணலாம்னு அங்க கூட்டிட்டுப் போனேன்”
“பட் சம்பவம் நடந்தப்ப நீங்க அங்க இல்லனு சந்தீப்பும் நித்திலாவும் சொல்லுறாங்க”
“அம்ரித் கூட பேசிட்டிருந்தப்ப அவனுக்கு நான் வாங்குன கிப்டை குடுக்கணும்னு தோணுச்சு… சர்ப்ரைசா குடுத்தா அவன் சந்தோசப்படுவான்னு அவனுக்குத் தெரியாம சுத்து வழில வீட்டுக்குள்ள போனேன்”
அன்று அம்ரித்திடம் அந்தப் பொய்யைச் சொல்லிவிட்டுத் தான் நிஹாரிகா வீட்டைச் சுற்றி முன்பக்கம் வழியே மீண்டும் வீட்டுக்குள் சென்றாள். அம்ரித்தை விசாரித்தாலும் அவன் இதையே தான் சொல்வான் என்பதால் கொஞ்சம் நிம்மதி அவளுக்கு.
ஆய்வாளர் அவள் சொன்ன அனைத்தையும் கேட்டவர் பர்மான் குடும்பத்தோடு ஏன் திடீர் நெருக்கமென வினவினார்.
நிஹாரிகா எள்ளலாக நகைத்தவள் “எங்களை மாதிரி ஹை-சொசைட்டி பீபிள் ஃப்ரெண்ட்லியா பழகுறது வாடிக்கை தான் சார்” என்றாள் திமிராக.
காவல்துறை ஆய்வாளர் அனைத்தையும் கேட்டவர் கிருஷ்ணராஜசாகர் கண் விழித்ததும் அளிக்கப்போகும் வாக்குமூலத்தில் கொலையாளியைப் பற்றிய உண்மைகள் அவிழும் என்ற முடிவுக்கு வந்தார்.
கான்ஸ்டபிளிடம் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்கப்படும் வராமல் இருந்த குடும்ப நண்பர்கள், உறுப்பினர்களின் பட்டியலைத் தயார் செய்யும்படி பணித்துவிட்டு சாகர்நிவாசை விட்டு கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் நிஹாரிகா நிம்மதி பெருமூச்சு விட்டாள். அப்போது அவளது மொபைலில் வழக்கறிஞரிடமிருந்து அழைப்பு வந்தது.
கிருஷ்ணராஜசாகர் கண் விழித்தால் தன் கதி அதோகதி என்பதை மறந்து வழக்கறிஞரிடம் சிடுசிடுத்தாள் அவள்.
“இனிமே உங்க உதவி எனக்குத் தேவையில்ல சார்… நானே இன்ஸ்பெக்டரை சமாளிச்சிட்டேன்… ஷப்பா, ஒரு சின்ன பொய்யை மறைக்குறதுக்கு எவ்ளோ கஷ்டப்படவேண்டியதா இருக்கு? அடுத்து என்கொயரிக்குக் கூப்பிட்டாங்கனா நீங்க வாங்க”
பேசிவிட்டுத் திரும்பியவள் அங்கே நின்று கொண்டிருந்த நித்திலா மீது மோதினாள்.
கொஞ்சம் கூட அவளை எதிர்பார்க்கவில்லை நிஹாரிகா. தான் பேசியதைக் கேட்டிருப்பாளோ? ஐயமும் அச்சமும் கலந்து எழ அவளைப் பார்த்தாள்.
நித்திலாவின் கண்கள் நிச்சலனமாக இருந்தன. உடல்மொழியிலும் கோபமில்லை. அப்பாடா என நிஹாரிகா நிம்மதியுற்ற அடுத்த நொடி அவளது கன்னத்தில் பளாரென அறை விழுந்தது.
நிச்சலனமான விழிகளுடன் நின்றவள் தான் அவளை அறைந்திருந்தாள். நித்திலா அறைந்ததில் நிஹாரிகாவின் கன்னம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது. கன்னத்தில் நித்திலாவின் கரம் வரியாகப் பதிந்து போனது.
தாடையோடு சேர்த்து காதைத் தாக்கிய வலியில் கண்ணீர் மல்க நின்றாள் நிஹாரிகா.
“உனக்கு என் மேலயும் சாகர் மேலயும் கோவம்னு எனக்கு நல்லா தெரியும்… அதுக்கு என் பிள்ளைய ஏன்டி கொலை பண்ண பாத்த? நீ மனுஷியே இல்ல… மிருகம்”
நித்திலாவின் வார்த்தைகளில் அதிர்ந்து போனாள் நிஹாரிகா. அவள் அம்ரித்தை கொலை செய்ய முயலவில்லையே! அவள் குறி வைத்தது கிருஷ்ணராஜசாகரைத் தானே!
தைரியத்தைத் திரட்டிக்கொண்டு “உன் புருசனை தொழில் விரோதத்துல எவனோ கொலை பண்ண வந்திருக்கான்… அதுக்கு நீ என்னை பலிகடா ஆக்கப் பாக்குறியா?”
“நடிக்காத நிஹாரிகா… அந்தக் கில்லர் அம்ருவ குறி வச்சதை நான் பாத்தேன்… சாகர் மட்டும் அங்க போகலனா என் பிள்ளை இந்நேரம்,…”

பேச்சை நிறுத்தியவள் நிஹாரிகாவின் இன்னொரு கன்னத்தில் அறைந்தாள்.
“என் பிள்ளைய கொல்ல நினைச்சதுக்கு நீ அனுபவிப்ப நிஹி… சட்டத்துல இருந்து நீ தப்பிக்கலாம்… ஆனா கடவுளோட தண்டனைல இருந்து நீ தப்பிக்கவே முடியாதுடி”
குரல் உயர்த்தாமல் முகம் சுளிக்காமல் வயிற்றெரிச்சலோடு சபித்துவிட்டு விறுவிறுவென தனது அறைக்கு வந்துவிட்டாள் நித்திலா.
அங்கே அம்ரித் உறங்கிக்கொண்டிருந்தான்.
மகனருகே அமர்ந்தவள் அவனது சிகையை நடுங்கிய கரங்களால் சரி செய்தாள்.
கண்ணீர் பொங்கியது. நான்கு வயது சிறுவனைக் கொல்லும் வெறிக்கு என்ன காரணம்? தொழில் விரோதமா அல்லது குடும்பத்தின் நடந்த சண்டையா?
எதுவாக இருந்தாலும் அதில் அம்ரித்தின் தவறு இல்லையே! இவன் தனது மகனாக சிம்லாவில் வாழ்ந்து கொண்டிருந்த போது இம்மாதிரி எந்த அனர்த்தங்களும் நிகழவில்லை.
இப்போது நிகழ்வதற்கு காரணம் அம்ரித் கிருஷ்ணராஜசாகரின் மகனாக அறியப்பட்டதே! போதும்! இவன் அம்ரித் சாகராக இருந்தது போதும்! இதற்கு மேல் தனது அம்ருவாக மட்டுமே இருக்கட்டும்! அது தான் அம்ரித்துக்கும் பாதுகாப்பு!
மைந்தனின் நெற்றியில் முத்தம் வைத்த நித்திலா கிருஷ்ணராஜசாகருக்கு நினைவு திரும்பட்டுமென காத்திருக்க ஆரம்பித்தாள்.
அதே நேரம் நித்திலாவிடம் அறை வாங்கிவிட்டு வேதனையோடு தனது அறைக்கு வந்தாள் நிஹாரிகா.
அங்கே அவளுக்காக காத்திருப்பவனைப் போல அமர்ந்திருந்தான் சந்தீப்.
அவனிடம் நடந்ததைக் கூறினால் மாட்டிக்கொள்வோமென கண்ணீரைத் துடைத்தபடி சாதாரணமாகக் காட்டிக்கொண்டாள் நிஹாரிகா.
“இன்ஸ்பெக்டர் கிட்ட ரொம்ப சாதுரியமா பேசி தப்பிச்சிட்ட போல”
சந்தீப்பின் குரல் குற்றம் சாட்டவும் நிஹாரிகாவின் இயல்பான பாவனை மாறியது. பீதியில் முகம் வெளிறியது அவளுக்கு. காவல்துறை ஆய்வாளரிடம் ஃப்ளாரண்ட் டி க்ரூஸை கிருஷ்ணராஜசாகர் சொல்லி தான் வீட்டுக்குள் அழைத்துப்போனென அவள் சொன்னதை சந்தீப்பிடம் அவர் கூறிவிட்டாரே!
நிஹாரிகாவுக்கு அதெல்லாம் தெரியாதல்லவா! அவளது பயமே வேறு!
ஒருவேளை வழக்கறிஞரிடம் பேசியதை கணவனும் கேட்டிருப்பானோ? அப்படி கேட்டு தன்னை வெறுத்துவிட்டால் என்ன செய்வது? சந்தீப் இல்லாத வாழ்க்கையை தன்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாதே!
பயத்துடன் அவனருகே ஓடியவள் சந்தீப்பின் காலடியில் அமர்ந்தாள்.
“நான் எதுவும் செய்யல சந்தீப்… திலீப் தான்…”
அவள் முழுவதுமாக முடிப்பதற்குள் அவளைத் தன்னிடமிருந்து விலக்கித் தள்ளிவிட்டு எழுந்தான் சந்தீப்.
சில அடிகள் விலகிப்போய் விழுந்தவளின் மனமெங்கும் அவ்வளவு வலி! இத்தனை நாட்கள் சந்தீப்பின் காதலை மட்டும் பார்த்தவள் அவள்! சமீபத்திய விலகலைக் கூட தாங்கிக்கொண்டாள், ஆனால் இந்த வெறுப்பை எப்படி எதிர்கொள்வாள்? ஆரம்பமே மூச்சு முட்டுகிறதே!
சமாளித்துக்கொண்டு எழுந்தவள் சந்தீப்பை ஓடிச் சென்று அணைத்துக்கொண்டாள்.
“என்னை மன்னிச்சிடுங்க சந்தீப்… புத்தி கெட்டுப் போய் பண்ணிட்டேன்… இனிமே சத்தியமா எந்த தப்பும் செய்யமாட்டேன்”
சந்தீப் அவளது அணைப்பை விலக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
“என்னை விடு நிஹாரிகா”
கடித்த பற்களினூடே வார்த்தைகளைத் துப்பினான். ஆனால் நிஹாரிகா இம்மியளவு கூட அசைந்து கொடுக்கவில்லை.
“உங்கண்ணாவ அழிக்கணும்னு மட்டும் தான் நினைச்சேன்… அம்ருவ அவங்க டார்கெட் பண்ணுவாங்கனு நான் யோசிக்கல சந்தீப்… குழந்தைய கொல்லுற அளவுக்கு நான் கேவலமானவ இல்ல… ப்ளீஸ் சந்தீப்! என்னை வெறுத்துடாதிங்க” என கண்ணீர் பெருக்கினாள்.
சந்தீப்பின் மனதுள் வினோதமான உணர்வொன்று எழுந்தது. அது கோபமா வெறுப்பா இயலாமையா என அவனால் பகுத்தறிய முடியவில்லை.
நிஹாரிகா மீதான அவனது காதல் ஒரு புறம், உடன்பிறந்த தமையன் ஒரு புறம்! என்ன செய்வான் அவன்?
மனைவி செய்த தவறு ஒன்றும் சிறிய தவறல்ல. கிருஷ்ணராஜசாகர் அவளுக்குப் பிடிக்காதவனே என்றாலும் அவனது உயிரை எடுக்க எப்படி நிஹாரிகா துணை போகலாம்?
நிஹாரிகாவைக் காப்பாற்றி தான் ஆகவேண்டுமா? நீ காதலித்திருக்கிறாயே, காப்பாற்றுவது உன் கடமை என்றது ஓரவஞ்சனை காட்டும் மனம். ஆனால் நியாயவாதியான மூளையோ மனைவியே ஆனாலும் கொலைக்குத் துணை போனவளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவது அதர்மம் என்றது.
எதன் பேச்சைக் கேட்பான் அவன்? அவன் ஒன்றும் கிருஷ்ணராஜசாகரைப் போல பந்தபாசத்துக்குக் கட்டுப்படாதவன் அல்ல. ஸ்ரீநயனியைப் போல நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரர் வகையறா நியாயவானும் அல்ல!
அன்பையும் பாசத்தையும் கொட்டத் தெரிந்த சராசரி மனிதன் அவன்! இளகிய உள்ளமும், நேசிப்பவர்களை சந்தேகிக்காத குணமும் கொண்ட சந்தீப் சாகர் அவன்! எனவே தமையனிடம் நிஹாரிகாவுக்காக பரிந்து பேச முடிவு செய்தான்.
ஆனால் அவனது ஒட்டுமொத்த இயல்பையும் மறுநாள் கண் விழிக்கப் போகும் கிருஷ்ணராஜசாகரின் ஒரே ஒரு நிபந்தனையும் பின்வரும் நாட்களில் நடந்தேறப் போகும் சம்பவமும் மாற்றப்போகிறதே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

