“எப்பவுமே நீங்க ரொம்ப நல்லவங்க இரக்கமுள்ளவங்கனு சுத்தி இருக்கிறவங்க கிட்ட சொல்லிக்காதிங்க… உங்களோட அன்பும் இரக்கமும் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்களுக்கே பலவீனமா மாறிடும்… உங்களைக் கட்டுப்படுத்தணும்னு நினைக்கிறவங்க முதல்ல உங்களோட பலவீனத்தைப் புரிஞ்சிக்கிட்டு அதை வச்சு காய் நகர்த்துவாங்க… நம்மளோட மோசமான குணங்கள் மட்டும் தான் பலவீனமா அமையணும்னு இல்ல… நம்ம நல்ல குணங்களும் சில நேரங்கள்ல நம்மளை பலவீனமாக்கிடும்… நீங்க நியாயம் தர்மம்னு யோசிக்கிற ஆளா இருப்பிங்க, ஆனா உங்க எதிராளி அதுலாம் கிலோ என்ன விலைனு கேக்குற ஆளா இருப்பாங்க… உங்க ரெண்டு பேரோட மோதல்ல ஆப்வியஸ்லி உங்களுக்குத் தான் சேதாரமும் காயமும் அதிகமா இருக்கும்… சோ நல்லவங்களா இருங்க, நான் நல்லவன்னு டிஸ்ப்ளே பண்ணி காட்டிக்காதிங்க, அது எப்பவுமே உங்களுக்கு எதிரா போய் தான் முடியும்”
-நித்திலா
கிருஷ்ணராஜசாகர் ராந்த்வாவின் சட்ட நிபுணர்கள் குழுவோடு விவாதித்துக்கொண்டிருந்தான்.
காரணம், சமீபத்தில் ராந்த்வா நிறுவன தயாரிப்பான கூந்தலுக்கான சீரம் ஒன்று பாட்டிலில் சீப்பு வடிவமைப்பில் அமைந்த மூடியோடு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஈ-காமர்ஸ் தளங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் நைகாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ராந்த்வாவின் போட்டி நிறுவனமான ஆயுஷ்வேத் அதற்கு போட்டியாக கூந்தல் சீரம் ஒன்றை அதே வடிவ பாட்டில் மற்றும் சீப்பு மூடியுடன் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
ஒரே வடிவமைப்பில் இரு நிறுவனங்களின் பொருட்கள் இருக்கும் போது முந்தைய நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்வது வழக்கம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இந்திய வணிக உலகில் இம்மாதிரி ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டு தீர்க்கப்பட்டும் உள்ளன. அதை உதாரணம் காட்டி ராந்த்வாவின் சட்ட நிபுணர்கள் கட்டாயம் வழக்கு போட்டால் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வருமென நம்பிக்கையோடு உரைத்தார்கள்.
கூடவே கூந்தல் சீரம் பாட்டிலின் சீப்பு வடிவ மூடிக்குக் காப்புரிமை பெறுவது சிறந்தது என அறிவுறுத்தினர்.

“ஓ.கே! அப்ப சீக்கிரமே கேஸ் ஃபைல் பண்ணுறதுக்கான புரொசிஜரை ஆரம்பிச்சிடுங்க… இப்ராஹிம், சால்வ் திஸ் பேட்டண்ட் ரைட் இஷ்யூ அஸ் சூன் அஸ் பாசிபிள்”
கட்டளைகளை மடமடவென விடுத்தவன் சட்ட நிபுணர்கள் குழு கலைந்ததும் இப்ராஹிமிடம் ஆயுஷ்வேத்தின் சேர்மன் பற்றி வினவினான்.
“இன்னும் எனக்கு எதிரா சதி திட்டம் போடுறதை அவர் நிறுத்தலையா? என் காதுக்கு வர்ற செய்தி எல்லாம் வித்தியாசமா இருக்கு இப்ராஹிம்”
“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவரும் அவரோட சன்னும் ஏதோ பெருசா திட்டம் போடுறாங்க… நம்ம செக்யூரிட்டிய டைட் பண்ணுன விசயம் அவங்க காதுக்குப் போயிருக்கு… சோ வேற விதமா யோசிப்பாங்க”
“ஓ.கே… நம்ம அப்பாயிண்ட் பண்ணுன கார்ட்ஸ், அவங்களோட பேக்ரவுண்ட் என்னனு தரோவா செக் பண்ணிடு” என்றவன் ஏதோ யோசித்தவனாக “புதுசா அப்பாயிண்ட் பண்ணுன நானியோட ஃபேமிலி பத்தி விசாரிச்ச தானே?” என்று கேட்க
“அவங்களும் அவங்க பையனும் மட்டும் தான் இருக்காங்க சார்… ஹஸ்பெண்டை பிரிஞ்சு வாழுறாங்கனு ஏஜென்சில சொன்னாங்க… நானும் ஒரு தடவை போலீஸ் வச்சு என்கொயரி பண்ணிட்டேன்… பாஸ்ட் த்ரீ இயர்சா ரஜீஷா அவங்க பையன் முரளி கூட தனியா தான் வாழுறாங்க சார்… கார்ட்ஸ் பத்தி விசாரிச்சிடுறேன்” என்றான் இப்ராஹிம்.
அவன் கிளம்ப எத்தனிக்கையில் “இப்ராஹிம்” என்ற கிருஷ்ணராஜசாகரின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.
“சார்”
“லாஸ்ட் வீக் சவிதா பர்மான் குடுத்த பார்ட்டிக்கு நிஹாரிகா போயிருக்கா… பார்ட்டிக்குப் போற அளவுக்கு அவங்க க்ளோஸ் ஆனதுக்கு எதுவும் காரணம் இருக்குமா?”
ஆயுஷ் பர்மான் பத்திரிக்கையாளர் பேட்டியில் கிருஷ்ணராஜசாகர் மீது காட்டிய காழ்ப்புணர்ச்சியை இப்ராஹிம் அறிவான். சாகர் நிவாசில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதற்கு காரணமே அந்நிகழ்வு தானே!
அன்றிலிருந்து கிருஷ்ணராஜசாகரும் சிலரை வைத்து ஆயுஷ் பர்மானின் கோரமங்களா வீட்டை கண்காணிக்க ஆரம்பித்திருந்தான்.
அங்கே நடந்த பார்ட்டியில் நிஹாரிகா கலந்துகொண்ட தகவலை அவனுக்கு அந்நபர் அவனிடம் பகிர்ந்துகொண்ட போதே ஏதோ தவறாக உணர்ந்தான்.
அதை பற்றி இப்ராஹிமிடம் கலந்தாலோசிக்க எண்ணினான்.
“எதிரிக்கு எதிரி நண்பன்ங்கிற ரீதியா இந்த மீட்டிங் அமைஞ்சிருக்குமோனு சந்தேகமா இருக்கு சார்”
“சம்திங் ராங்… பை த வே, இதால அம்ருவோட பர்த்டே பார்ட்டில எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது… இப்ப இருக்கிறதை விட செக்யூரிட்டி இன்னும் பலமா இருக்கணும்”
“கண்டிப்பா சார்… நான் ஈவெண்ட் ப்ளானிங் கன்சர்ன் கிட்ட செக்யூரிட்டி பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டேன் சார்… நீங்க டென்சன் இல்லாம பர்த்டே பத்தி மட்டும் யோசிங்க”
“ஓ.கே… யூ மே கோ நவ்”
இப்ராஹிம் அங்கிருந்து அகன்றதும் கிருஷ்ணராஜசாகர் யோசனையில் ஆழ்ந்தான்.
ஒரு பக்கம் அம்ரித்திற்கு சிம்லாவுக்குச் செல்லும் எண்ணம் வலுபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நித்திலா அவனைச் சீண்டுகிறாள்.
இன்னும் சில வாரங்கள் ஆர்.ஜே பியூட்டியின் தயாரிப்பான சரும பாதுகாப்பு பொருட்கள் விற்பனைக்கு வரவிருந்தன. அதை சந்தைப்படுத்துதற்கான விளம்பரங்கள் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
வணிகத்தில் அவனோடு மோதி ஜெயிக்க முடியாத ஆயுஷ் பர்மானும் திலீப் பர்மானும் அவனது சொந்த வாழ்க்கையில் பிரச்சனையை உண்டாக்க சதி தீட்டுகிறார்கள்.
அவர்களின் சதி எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலிருந்து அவனது குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிருஷ்ணராஜசாகருக்கு இருக்கிறது
இதில் எதை பற்றி யோசிக்க என்று புரியாமல் திணறிப்போனான்.
இதே திணறல் தான் நித்திலாவுக்கும் இருந்திருக்குமோ? தனது வருகையை எண்ணி அவளும் இப்படி தான் என்ன செய்வதென புரியாமல் திணறியிருப்பாளோ?
தேவையின்றி நித்திலாவைப் பற்றி ஏன் யோசிக்கிறோமென புரியவில்லை கிருஷ்ணராஜசாகருக்கு.
மாலை சாகர் நிவாசுக்கு வந்த போது ஆங்காங்கே உலாவிக்கொண்டிருந்த பாதுகாவலர்கள் அவனுக்குள் நிம்மதியை உண்டாக்கினார்கள்.
வீட்டினுள் நுழைந்தவன் அம்ரித் இல்லாமல் தனியே அமர்ந்திருந்த ரஜீஷாவிடம் அவன் எங்கே என விசாரித்தான்.
“அம்ரு அவங்க தாத்தா கூட கார்டன்ல இருக்கான் சார்”
“அப்பா அதுக்குள்ளவா வந்துட்டார்?”
ஆச்சரியமாக வாய் விட்டு கேட்டவனுக்கு “நித்திலா மேமோட ஃபாதர் வந்திருக்காங்க சார்” என்ற பதில் கிடைத்தது.
இப்போதெல்லாம் அடிக்கடி ஜனார்தனனை சாகர் நிவாசில் பார்க்க முடிகிறதென இப்ராஹிம் கூறியிருந்தான். அவர் வரும் நேரங்களில் பெரும்பாலும் கிருஷ்ணராஜசாகர் அலுவலகத்தில் இருப்பான்.
அவரைப் பார்த்து நாளாகி விட்டதால் மரியாதை நிமித்தம் விசாரித்துவிட்டு வருவோம் என எண்ணினான்.
அவர்கள் இருக்கும் தோட்டத்திற்கு சென்றவன் அங்கே ஜனார்தனனிடம் குளத்திலிருக்கும் தாமரைகளைக் காட்டி பேசிக்கொண்டிருந்த மைந்தனைப் பார்த்ததும் அவர்களை நெருங்கினான்.

“இது எல்லாம் நானும் நர்மு பாட்டியும் வளத்தது தாத்தா… நான் சிம்லாக்குப் போனதுக்கு அப்புறம் இதை யார் பாத்துப்பாங்கனு தெரியல”
மீண்டும் சிம்லாவா? அம்ரித்தின் பேச்சு வேப்பங்காயாக கசந்தது.
எப்படியாவது இவன் சிம்லாவுக்குச் செல்லும் எண்ணத்தை மறக்கவேண்டுமென நான் பிரம்ம பிரயத்தனம் செய்கிறேன். இவன் என்னவென்றால் மூச்சுக்கு முன்னூறு முறை சிம்லா சிம்லா என்கிறானே என்ற அயர்ச்சி!
“எப்பிடி இருக்கிங்க மாமா?”
மாமனாரைக் குசலம் விசாரித்தான் கிருஷ்ணராஜசாகர்.
அவனைக் கண்டதும் குளத்தின் கரையில் அமர்ந்திருந்த ஜனார்தனன் மரியாதைநிமித்தம் எழுந்தார்.
“எனக்கென்ன மாப்பிள்ளை? ரொம்ப நல்லா இருக்கேன்… நீங்க எப்பிடி இருக்கிங்க?”
“எனக்கென்ன மாமா? என் அம்ரு குட்டி இருக்கிற வரைக்கும் நான் ரொம்ப ஹேப்பியா இருப்பேன்”
அம்ரித்தின் முகம் தந்தையைக் கண்டதும் பூரித்தது.
“நித்திம்மா எங்கடா?”
“நித்திம்மா ரூம்ல இருக்காங்க டாடி”
பதில் சொல்லிவிட்டு மீண்டும் குளத்தின் தாமரைகளில் கவனமானான் அம்ரித்.
“இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தா… அவ ஃப்ரெண்ட் ஒருத்தர் கால் பண்ணுனார்… பேசிட்டு வர்றேன்னு போனா”
“ஓ! உங்க பொண்ணு இங்க வந்ததுல நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கிங்கல்ல மாமா?”
“என் சந்தோசத்துக்கு என்ன குறை மாப்பிள்ளை? நாலு வருசமா மனசு நொந்ததுக்கு என் மகளைக் கடவுள் கண்ணுல காட்டிட்டார்னு ரொம்ப சந்தோசமா இருக்கேன்”
“பட் அந்த சந்தோசம் ரொம்ப நாள் நிலைக்காது போலயே மாமா”
ஜனார்தனனின் முகத்தில் யோசனையின் ரேகைகள் படர்வதைப் பார்த்தபடி உரைத்தான் கிருஷ்ணராஜசாகர்.
“ஏன் அப்பிடி சொல்லுறிங்க மாப்பிள்ளை?”
“உங்க பேரனுக்கும் மகளுக்கும் இங்க இருக்க பிடிக்கலையாம்… சீக்கிரமே சிம்லாவுக்குப் போகணும்னு ரெண்டு பேரும் சொல்லிட்டிருக்காங்க… என் மகன் கூட நிரந்தரமா வாழுற சந்தோசம் இந்த ஜென்மத்துல எனக்குக் கிடைக்காதுனு நினைக்கேன்”
ஜனார்தனன் வேதனையில் முகம் சுருக்கினார். அவரின் நிலையும் தன் நிலையும் ஒன்று தான் என தோன்றியது கிருஷ்ணராஜசாகருக்கு. மற்றவர்களைப் போல அவரது உணர்வுகளையும் வைத்து விளையாடவேண்டுமென அவன் அத்தகவலைக் கூறவில்லை.
தனது மனதின் வேதனையைப் புரிந்துகொள்ள அவரால் மட்டுமே முடியுமென தோன்றியதால் கூறினான்.
அவர் வேதனையுறவும் சங்கடமாகிவிட்டது அவனுக்கு.
“எந்த வயசுலயும் பிள்ளைங்களை பிரிஞ்சிருக்கிறது வேதனை தான் மாப்பிள்ளை… நான் அதை அனுபவிச்சவன்… என் பொண்ணு இருக்காளா இல்லையானு தூக்கம் வராம எத்தனை நாள் பித்து பிடிச்சு அலைஞ்சிருப்பேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்… இன்னொரு தடவை அதே நிலமை வந்துச்சுனா என்னால அதை தாங்கிக்க முடியாது மாப்பிள்ளை”
“நீங்க வாய் விட்டுச் சொல்லிட்டிங்க… என்னால சொல்ல முடியல… கிரிஷ்னாலே கல்நெஞ்சக்காரன்னு ஒரு இமேஜை க்ரியேட் பண்ணி வச்சிருக்கேனே, அதை உடைக்க மனசு வரல மாமா”
“நீங்க ஏன் நித்திம்மா கிட்ட பேசி பாக்கக்கூடாது?”
கிருஷ்ணராஜசாகர் சிரித்தான். அவள் தான் என் மகனை என்னை விட்டுப் பிரிக்க துடிக்கிறாள் என இவரிடம் சொன்னால் எப்படி இருக்கும்?
வேண்டாம்! இந்த மனிதரின் மனதை வேதனைப்படுத்தக்கூடாது. எப்படி யோசித்தாலும் தனது பேச்சை நித்திலா கேட்க வேண்டுமென கட்டாயப்படுத்தும் உரிமை தனக்கு இல்லை என்ற உண்மையை அறிந்தவன் கிருஷ்ணராஜசாகர். எனவே மாமனாரின் யோசனைக்குச் சிரிப்பை பதிலாக அளித்தான்.
“என்னால முடிஞ்ச வரைக்கும் அம்ருவ நான் சந்தோசமா எல்லா வசதி வாய்ப்புகளோடயும் வளக்கணும்னு ஆசைப்படுறேன்… அவனோட சிம்லா ஆசைய சீக்கிரமா மறந்துடுவான்னு நம்புறேன்… நிறைய நேரம் நம்பிக்கை மட்டும் தான் நம்மளை இயல்பா நடமாட வைக்கும் மாமா… நீங்க அம்ரு கூட பேசிட்டிருங்க… நான் வர்றேன்”
மாமனாரிடம் பேசிவிட்டு வீட்டுக்குள் வந்தான் கிருஷ்ணராஜசாகர். அவனது அறை இருக்கும் தளத்தை அடைந்தவன் இன்னும் நித்திலா விக்ரமிடம் பேசிக்கொண்டிருக்கவும் தனது செவியை அவளது பேச்சில் பதித்தபடி கௌச்சில் சரிந்தான்.
நித்திலா அவனை ஓரக்கண்ணில் பார்த்தபடியே விக்ரமிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.
“ஆமா! பர்த்டே முடிஞ்சதும் நானும் அம்ருவும் அங்க இருப்போம்… அம்ருக்கு அவனோட க்ளைடர் ஸ்கூட்டர்ல விளையாடணும்னு ஆசையா இருக்குதாம்… ஞாபகம் இருக்குதா விக்கி? நீயும் நானும் சேர்ந்து வாங்குனோமே”
பேச்சினிடையே அவள் கலகலவென சிரிப்பது கிருஷ்ணராஜசாகரின் செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
அவன் முகத்தைச் சுளிப்பதை ரசித்தபடி மனதுக்குள் குதூகலித்தாள் நித்திலா.
“நீ ஏர்ப்போர்ட்டுக்கு வந்துடு விக்கி… போற வழில ஒரு தாபா இருக்கு, அங்க சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு… நம்ம மூனு பேரும் அங்க சாப்பிட்டுட்டுப் போலாம்”
மறுமுனையில் விக்ரம் ஏதோ சொல்லவும் “ஏய்! நான் உன் கிட்ட காசு கேட்டேனாடா? என் பிள்ளை என் கிட்ட திரும்பி வந்ததுக்கு நான் வைக்குற ட்ரீட்னு நினைச்சுக்க விக்கி” என்றாள் நித்திலா.
அம்ரித் அவளோடு சிம்லாவுக்கு வருவான் என்பது உறுதியானதைப் போல பேசிக்கொண்டிருந்ததாலா அல்லது விக்ரமிடம் சிரித்து சிரித்து பேசியதாலா என்று தெரியவில்லை, நித்திலாவின் பேச்சைக் கேட்க கேட்க கிருஷ்ணராஜசாகருக்கு ஒரு மூட்டை மிளகாயைத் தனியாளாக சாப்பிட்டது போன்ற எரிச்சல்.
“ஓ.கே விக்கி… பை”
அழைப்பை பேசி முடித்துவிட்டு அமர்ந்திருந்தவளிடம் “அம்ரு உன் கூட வருவான்னு அவ்ளோ நம்பிக்கையா?” என சீண்டலாக கேட்டான் கிருஷ்ணராஜசாகர்.
“என் நம்பிக்கை இருக்கட்டும்… உங்க பயம் நாளாக நாளாக அதிகமாகுது போலயே”
கேட்டபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் நித்திலா.
“முடிஞ்சா அம்ருவ இங்கயே இருனு சொல்லிப் பாருங்க… அவன் கட்டாயம் கேக்கமாட்டான்… எனி ஹவ், என் பையன் கூட நீங்க கொண்டாடப் போற ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் பர்த்டே இது தான்… சந்தோசமா கொண்டாடிக்கோங்க சாகர்… இந்த சான்ஸ் இனிமே உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது”
மெய் தான்! கடந்த சில நாட்களாக அம்ரித்தின் சிம்லா புராணம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிறந்தநாள் கழித்து அனுப்பி வைப்பதாக கிருஷ்ணராஜசாகர் அவனைச் சமாளித்துக்கொண்டிருக்கிறான்.
பிறந்தநாள் கொண்டாட்டம், அதன் பிரம்மாண்டத்தில் மைந்தன் மீண்டும் தன்னுடன் இருந்துவிடுவான் என்ற அற்ப நம்பிக்கை.
மகனது சிம்லா ஆசையைக் கூட சமாளித்துவிடலாம். ஆனால் நித்திலாவின் குத்தல் பேச்சை தான் அவனால் சமாளிக்க முடியவில்லை.
சீற்றத்தோடு கௌச்சிலிருந்து எழுந்தவன் “ஷட்டப் நித்திலா… என் மகனை எப்பிடி என் கூடவே வச்சிக்கணும்னு எனக்கு நல்லா தெரியும்” என்க
“அப்ப எதுக்கு ஃபீவர் வந்தவன் மாதிரி உங்க குரல் நடுங்குது சாகர்? ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க, எல்லா வசதியும் ஆடம்பரமும் ஒரு நாள் திகட்டிப் போகும்… வந்த புதுசுல எதுல்லாம் அம்ருக்குப் பிரமிப்பைக் குடுத்துச்சோ அதுல்லாம் இப்ப அவனுக்குத் திகட்டிடுச்சு… அவன் கூட இருக்குற கொஞ்சநாளை சந்தோசமா கழிக்க பாருங்க” என நக்கலாக உரைத்துவிட்டு எழுந்தாள் நித்திலா.
“எங்க போற?”
“எங்க போனா உங்களுக்கு என்ன?”
“வெளியே சுத்த போறதா இருந்தா கார்ட்சை கூட்டிட்டுப் போ”
“ஷப்பா! நான் ஒன்னும் வி.ஐ.பியோ செலிப்ரிட்டியோ இல்ல… இந்தக் கார்ட்ஸ், செக்யூரிட்டிலாம் பாத்தா எனக்கு எரிச்சலா இருக்கு சாகர்”
“கார்ட்ஸ் இல்லாம நீ பார்க்கிங்குக்குப் போய் கார் எடுக்க முடியாது… நான் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டிருக்கேன்”
நித்திலா விறுவிறுவென அவனருகே வந்தவள் “நீங்க என்ன ப்ரூவ் பண்ணணும்னு நினைக்கிங்க சாகர்?” என்று கேட்க
“நத்திங்… உங்கப்பா வந்திருக்கார்ல” என்றான் அவன்.
“அவர் கிட்ட ஏதாச்சும் பேசி என்னையும் அம்ருவையும் சிம்லாக்குப் போகவிடாம தடுக்க ப்ளான் பண்ணுறிங்களா?”
இதுவரை அவன் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதால் சந்தேகத்தோடு அந்தக் கேள்வியைக் கேட்டாள் நித்திலா.
கிருஷ்ணராஜசாகர் புருவங்கள் எரிச்சலில் சுருங்க இல்லையென மறுத்தான்.
“அவர் திரும்பிப் போறப்ப நீ கூட போகவேண்டாம்னு சொல்ல வந்தேன்… நீயா எதையும் கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்ல… எனக்கு ஆயிரம் டென்சன் இருக்கு… நீ வேற உன் பங்குக்கு என்னை இரிட்டேட் பண்ணாத”
“அடுத்தவங்களை இரிட்டேட் பண்ணி கார்னர் பண்ணி காரியம் சாதிச்சப்ப சந்தோசமா இருந்துச்சுல்ல… தனக்குனு வர்றப்ப தான் வலிக்குது”
குத்தலாகச் சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தாள் நித்திலா.
கிருஷ்ணராஜசாகர் பெருமூச்சுடன் தன்னெதிரே சுவரில் கிடந்த புகைப்படத்தைப் பார்த்தான்.

அதில் அவனும் அம்ரித்தும் சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
இனி இந்தப் புகைப்படம் தான் தனக்கு நிரந்தரமோ? வேதனை மண்ட அதை வெறித்தபடி நின்றான் கிருஷ்ணராஜசாகர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

