“நேத்துதான் உன்னைக் கையில வாங்குன மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு இருபத்தெட்டு வயசுனா என்னால நம்பவே முடியல அச்சு”
பின்னே நின்று தொண்டையைச் செருமினார் சதானந்தன்.

“அடுத்த வருஷம் அவனோட புள்ளையக் கையில வாங்குன அப்புறமாச்சும் உன் மகன் வளர்ந்துட்டான்னு நம்புவியா ராஜி?”
ராஜேஸ்வரி சிரிக்க அட்சரன் “உஃப்” என்று பெருமூச்சு விட்டான்.
“பேரப்புள்ளைக்கு ஆசைப்பட்டா ஆச்சா?” என்று முரண்டியபடி எழுந்தவனை நமட்டுச்சிரிப்போடு பார்த்தவர் “மே கடைசிலதான் வளர்பிறை முகூர்த்தம் வருது. அதுல ஒரு நாளைக் குறிப்போம் நாங்க” என்றார் அமர்த்தலாக.
அட்சரன் சட்டெனத் திரும்பிப் பார்த்தவன் “ம்மா! நீங்க பேரப்புள்ளைய அமேசான்ல ஆர்டர் போட்டுக்கோங்க” என்று முறைப்போடு சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் போய்விட்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ராஜேஸ்வரி கணவரை முறைத்தார்.
“எதுக்கு அவனை வம்பு பண்ணுறீங்க?”
“இந்தச் சின்னக் கிண்டலைக் கூட உன் மகன் தாங்கமாட்டானா? வேதாவ வார்த்தைக்கு வார்த்தை காலை வாருறானே”
அவர்கள் இருவரும் கீழ்த்தளத்துக்குச் சென்றுவிட அட்சரன் குளித்து உடைமாற்றியபோதே மொபைலும் கையுமாக வந்தாள் வேதவதி.
“அப்பா கால்ல இருக்காங்க” என்றபடி மொபைலை நீட்டினாள் அவனிடம்.
மொபைலை வாங்கிக்கொண்டவன் “சொல்லுங்க மாமா!” என்க
“பிறந்தநாள் வாழ்த்துகள் மாப்பிள்ளை” என்றார் கஜேந்திரன்.
“தேங்க்யூ மாமா!” என்றவனைக் கனகவல்லியும் வாழ்த்த “இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு அம்மாவத்தான் கேக்கணும்… வேதாவா? அவளுக்கு எக்ஸாம் இருக்குல்ல. படிக்கணும்… சரிங்க மாமா. ஹான்! கண்டிப்பா” என்று பேசிவிட்டு வேதவதியிடம் மொபைலைக் கொடுத்தான்.
“என் மாமனார் மாமியாருக்கு இருக்குற அக்கறை உனக்கு என் மேல இல்ல”
“என்னது?”
“ஹான் நொன்னது. இன்னைக்கு எனக்கு பர்த்டே. எனக்காக ஏதாச்சும் ஸ்பெஷலா செஞ்சியா நீ?”
குறை சொன்னவனின் மூக்கைப் பிடித்துக்கொண்டாள் வேதவதி கடுப்போடு.
“இன்னொரு வார்த்தை பேசுனா மூக்கைப் பிச்சு எறிஞ்சிடுவேன்.” என்ற மிரட்டல் வேறு.
அவள் அழுத்திப் பிடித்ததில் மூக்கு சிவந்து அவன் மூச்சு விடத் தவிக்கப் பரிதாபப்பட்டு விடுவித்தாள்.
“பிறந்தநாள் அன்னைக்கே என்னைப் பரலோகத்துக்கு ஃப்ளைட் ஏத்த ப்ளான் பண்ணுற பாத்தியா?” என்றவன் மூக்கைத் தடவிக்கொண்டான்.
அவர்கள் பேசும்போதே கீழ்த்தளத்தில் ஒரே ஆரவாரம்.
வேதவதி ஓடிப்போய் எட்டிப் பார்த்தாள். அருள்மொழியும் வானதியும் வந்திருந்தார்கள்.
“வானு வந்திருக்கா. கூடவே அருள் ப்ரோவும் வந்திருக்காங்க” சொன்னவள் அப்படியே கீழ்த்தளத்துக்கு ஓடிவிட அவளைத் தொடர்ந்து அட்சரனும் வந்து சேர்ந்தான்.
“ஹேப்பி பர்த்டே அச்சு” என்று வாழ்த்தியபடியே அவனை அணைத்துக்கொண்டாள் வானதி.
“தேங்க்ஸ்” என்றவன் அவளைத் தோளோடு அணைத்தபடி “ஹவ் டூ யூ ஃபீல் நியூ மம்மா?” என்று கிண்டலாகப் பேச ராஜேஸ்வரியும் சதானந்தனும் மகிழ்ச்சியில் திணறிப்போனார்கள்.
“டேய் அருள்!” என்ற ராஜேஸ்வரியிடம்
“வீ ஆர் ப்ரெக்னெண்ட் ஆன்ட்டி” என்றான் அருள்மொழி நல்ல பிள்ளையாக. இலக்கியா எடுத்த பாடம் வேலை செய்துவிட்டது.
“எவ்ளோ சந்தோஷமான செய்தியைச் சொல்லிருக்க. இரு இரு! இப்ப வர்றேன்”
சமையலறைக்குள் ஓடிப்போனவர் கையில் பாயாசம் நிரம்பிய கிண்ணத்தோடு வந்து இருவருக்கும் ஊட்டிவிட்டார்.
“அரசியல்ல இறங்கப்போறனு கேள்விப்பட்டேன். வானதியையும் கவனமாப் பாத்துக்க அருள்” என்றார் சதானந்தன் அக்கறையோடு.
“கண்டிப்பா அங்கிள்”
தம்பதிகள் இருவரும் பேசிவிட்டு ராஜேஸ்வரியின் கைமணத்தில் தயாரான காலையுணவைச் சாப்பிட்டக் கையோடு அவரவர் அலுவலகத்துக்குக் கிளம்பினார்கள்.
அட்சரனும் ஹெல்வட்டாஸுக்குக் கிளம்பினான்.
“நீயும் வாயேன்” என்று வேதவதிக்கு அழைப்பு வேறு.
படிக்கவேண்டும் என்றவளைப் பிடிவாதம் பிடித்துப் புத்தகங்களோடு சேர்த்து அள்ளிக் காரில் அமரவைத்தவன் தன்னோடு அழைத்துப் போய்விட்டான்.
“அங்க வந்தா எனக்குப் படிக்கவே தோணாது”
“இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டே. நீ என்கூட இருக்கணும்னு ஆசைப்படுறேன். அவ்ளோதான்”
இதற்கு மேல் என்ன சொல்வது?
ஹெல்வட்டாஸில் இலக்கியாவும் சஞ்சயும் வாங்கி வைத்திருந்த கேக்கை வெட்டிவிட்டு அட்சரன் அவனது வேலையில் ஆழ்ந்துவிட வேதவதி அவளது புத்தகத்தில் மூழ்கிவிட்டாள்.
சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால் அட்சரன் அந்த அறையில் இல்லை.
“அட்சரன் எங்க?” என்று ஸ்டூடியோவுக்குள் போய் இலக்கியாவிடம் விசாரித்தாள்.
“அச்சு டெரஸ்ல இருக்குறான். ரைட்டர் ஒருத்தர் கூடச் சின்னதா ஆர்கியூமெண்ட். மூட் ஆஃப் ஆகிட்டான்”
வேதவதி மொட்டைமாடிக்கு வந்து பார்க்க அங்கே கிடந்த இருக்கையில் சரிந்து புகைத்துகொண்டிருந்தான் அட்சரன்.
பார்க்கும்போதே வருத்தம் வேதவதிக்கு.
“கொஞ்சம் நகருங்க” அவனை இடித்துக்கொண்டு அமர்ந்தவள் அடுத்த பஃபுக்காகச் சிகரெட்டை வாயில் வைக்கப் போகும் முன்னர் அவனது கையைப் பிடித்துக்கொண்டாள்.

“நோ” அதட்டலாய் ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது அவனை நோக்கி.
“டென்ஷனா இருக்கு வேதா”
“எல்லாருக்கும் டென்ஷனா இருக்கு. அதுக்காக எல்லாருமே ஸ்மோக் பண்ணிட்டே திரியுறாங்களா? குடுங்க அதை” என்று சிகரெட்டைப் பிடுங்கித் தனது காலடியில் போட்டுச் செருப்பால் நசுக்கினாள் வேதவதி.
அட்சரன் அவளைத் தடுக்கவில்லை.
“ப்ச்! இதை விட்டுத் தொலைங்களேன்! எனக்காக! ப்ளீஸ்! ஒரு சிகரெட்ல இருக்குற ஏழாயிரம் கெமிக்கல்ஸ்ல கிட்டத்தட்ட எழுபது கெமிக்கல்ஸ் கார்சினோஜன் (புற்றுநோய் காரணி). படிச்சவர்தானே நீங்க? ஏன் இந்தப் பழக்கம்?”
“பழகிப்போச்சு” எங்கோ பார்த்தபடி சொன்னவனின் மோவாயைப் பற்றித் தன்பக்கம் திருப்பினாள் வேதவதி.
“பழகிப்போறதுக்குப் பேர்தான் பழக்கம். அது நல்லதா இருந்தா தொடரணும். கெட்டதா இருந்தா விட்டுடணும். இது உங்க உயிரைக் குடிச்சிடும்.”
“காட்! ஐ அம் நாட் அ செயின் ஸ்மோக்கர்” சலித்தபடி எழுந்தான் அட்சரன்.
“பட் நான் பாக்குறப்ப எல்லாம் நீங்க சிகரெட்டும் கையுமாதான் இருக்கீங்க. உங்களுக்கு இது தப்புனு எடுத்துச் சொல்லுற உரிமை எனக்கு இருக்குங்கிற நம்பிக்கைல சொல்லுறேன். எனக்கு அப்பிடி எந்த உரிமையும் இல்லனு நினைச்சீங்கனா யூ கேரி ஆன். என் ஸ்பேஸ்ல நான் இருந்துப்பேன் இனி.”
அமர்ந்தபடியே கடைசி எச்சரிக்கையாய் அவள் சொல்லவும் அட்சரன் பின்னந்தலையின் கூந்தலைக் கோதிக்கொண்டான்.
“அப்பிடி உர்ருனு முகத்தை வச்சுக்காத. கொஞ்சம் கொஞ்சமா ஸ்மோக் பண்ணுறதை நிறுத்த ட்ரை பண்ணுறேன்”
அவன் சொன்னதுதான் தாமதம் வெற்றிச்சிரிப்போடு எழுந்தவள் அவனது கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள்.
“இந்தக் கொஞ்சலுக்குக் குறைச்சலில்ல. ப்பே”
அவளது தலையைப் பிடித்து விளையாட்டாய்த் தள்ளிவிட்டான் அட்சரன்.
கடுப்பான மனம் இலகுவாகிப்போனது அவளது அண்மையில்.
அன்றைய மதியமும் ராஜேஸ்வரி மகனின் பிறந்தநாளுக்காய்த் தடபுடலாய் விருந்து சமைத்திருந்தார். சூப்பர் மார்க்கெட் ஊழியர்களுக்கும் சேர்த்தே சாப்பாடு தயாராகியிருந்தது.
அதைப் பாக்ஸ்களில் அடுக்கி அங்கே கொண்டு போய்க் கொடுக்க உதவுவதாகச் சொல்லி வீட்டுக்கு வந்துவிட்டாள் வேதவதி.
எப்போதும் சாப்பாடு கொண்டு செல்லும் சதானந்தன் செய்வார். அவர் மீதமிருக்கும் கிளைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்குக் காரில் சாப்பாடு கொண்டு போய்விட நுங்கம்பாக்கம் கிளை ஊழியர்களுக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை வேதவதி ஏற்றுக்கொண்டாள்.
“இதுல பருப்பு பாயாசம் இருக்கு வேதா. இதை வளர்மதிகிட்ட குடுத்துடு. அந்தப் பொண்ணு எல்லாருக்கும் கப்ல ஊத்திக் குடுத்துடுவா”
“சரி அத்தை”
சாப்பாடு அடங்கிய பாக்ஸ்களை ஸ்கூட்டியில் வைத்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தவள் வளர்மதியிடம் அவற்றைக் கொடுத்துவிட்டாள்.
“நீங்க சாப்பிட்டாச்சா?” என விசாரித்தபடியே வாங்கிக்கொண்டார் அவரும்.
“இனிமேதான்கா. அத்தை உங்க எல்லாருக்கும் குடுத்துட்டு வரச் சொன்னாங்க. நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நான் வீட்டுக்குக் கெளம்புறேன்”
மதிய விருந்தைக் குடும்பமாய் அமர்ந்து சாப்பிட்ட பிறகு அட்சரன் இரவு வீடு திரும்ப நேரமாகும் என்றான் பெற்றோரிடம்.
“பர்த்டே பார்ட்டி குடுக்குறதா ப்ராமிஸ் பண்ணிருக்கேன்”
சதானந்தன் ஒரு பார்வை பார்த்தவர் “எதுவா இருந்தாலும் லிமிட்டா இருக்கணும். நீ இப்ப குடும்பஸ்தன். அதை மறந்துடாத” என்றார்.
“எப்ப நான் லிமிட்டைக் கிராஸ் பண்ணுனேனாம்?”
அவன் கேட்டதும் வேதவதி பக்கெனச் சிரித்துவிட்டாள். அவன் அவளை முறைத்தான்.
“எனக்கு விரோதி வீட்டுக்கு வெளிய இல்ல. தேன்மலைல இருந்து தாலி கட்டிக் கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ள உக்கார வச்சிருக்கேன்”
“சும்மா இருடா!” என்று ராஜேஸ்வரி அவனது முதுகில் அடி வைக்கவும் அடங்கினான்.
அவன் ஹெல்வட்டாஸுக்குக் கிளம்புகையில் “பர்த்டே பார்ட்டி குடுத்தே ஆகணும்னு சஞ்சயும் அருளும் சொல்லுறாங்க. அருள் கூட ரொம்ப வருஷம் கழிச்சு செலிப்ரேட் பண்ணப்போற பார்ட்டி வேதா. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்றான் வேதவதியிடம்.
“தேன்மலைல நடந்த பேச்சிலர் பார்ட்டி மாதிரி டான்ஸ் ட்ரிங்க்ஸ் எல்லாமேவா?”
அட்சரன் நாக்கைக் கடித்துக்கொண்டவன் “இன்ஸ்டால வீடியோ பாத்தியா?” என்று கேட்க ஆமெனத் தலையாட்டினாள் வேதவதி.
“அவ்ளோ இருக்காது. இது சிம்பிளா கொஞ்சமா” என்று கையால் அளவு காட்டினான் அவன்.
“என்னமோ பண்ணுங்க. என்ஜாய் யுவர் டே”
அட்சரன் அவளை இறுக அணைத்தவன் “யூ ஆர் த பெஸ்ட் பொண்டாட்டி இன் த வேர்ல்ட்” என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் முத்தமிட
“இது ஐஸ் இல்ல. அண்டார்ட்டிகா” என்றவள் சிரித்தாள் அவனைக் கிண்டல் செய்து.
அவனுக்கும் தனக்குமான அழகான இயல்பான உரையாடல்களில் இதுதான் கடைசியென அவளுக்கும் தெரியாது. அவளுக்காகக் காற்றில் முத்தமிட்டு டாட்டா காட்டிய அட்சரனுக்கும் தெரியாது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

