கடவுள் எனும் கணக்காசிரியர் நமக்கு அளித்த வாழ்க்கை கணக்கின் விதிகள்:
அன்பானவர்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். மதியாதவர்களைக் கழித்து விடுங்கள். நல்லோர் நட்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எந்த உறவும் உங்கள் சுயமரியாதையைச் சீண்டாதபடி விதிகளை வகுத்துக் கொள்ளுங்கள்.
–ஆரபியின் சிந்தனை சிதறல்கள்
“குழந்தையோட பேரை இந்த விரலி மஞ்சளால அரிசில எழுதுங்கோ”
ஐயர் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தாம்பளத்தில் பரப்பி வைத்திருந்த அரிசியில் விரலி மஞ்சளை எழுதுகோலைப் போலப் பிடித்து ‘ஆரண்யா’ என்று எழுதினான் அன்பரசன்.
அவனருகே குழந்தையை மடியில் கிடத்தி அமர்ந்திருந்த ஆரபியின் கண்கள் பெயரைத் தேர்ந்தெடுத்த தருணத்தை நினைத்துக் கண்ணீரைக் கசிந்தன.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அந்தச் சமயத்தில் அன்பரசனுக்கு ஆரபி தேர்ந்தெடுத்த பெயரைத் தங்கள் குழந்தைக்கு வைக்க விருப்பமே இல்லை எனலாம்.
ஆண் குழந்தை என்றால் ‘அனிருத்’ பெண் குழந்தை என்றால் ‘அவந்திகா’ எனத் தீர்மானமாக மனைவியிடம் கூறியிருந்தான். ஆரபியோ இருவரது பெயரையும் சேர்த்து ஒலிப்பது போல ‘ஆரண்யா’ ‘ஆரண்யன்’ என்ற பெயரைத் தன் குழந்தைக்காகத் தேர்ந்தெடுத்திருந்தாள்.
அதை சொன்னபோது அன்பரசன் கேலியாய் சிரித்தது கூட நினைவிருக்கிறது.
“நம்ம வாழ்க்கை இருக்குற லெச்சணத்துல ரெண்டு பேரோட நேமையும் சேர்த்து குழந்தைக்கு வைக்கிறது ஒன்னு தான் குறைச்சல்”
ஆரபி பழைய சம்பவங்களை நினைத்து மனம் கொதிப்பதை வேறு யார் கவனித்தார்களோ இல்லையோ அவளது ஆச்சி அலமேலு கவனித்துவிட்டார்.
வளைகாப்பு முடிந்ததும் பேத்தி மகளோடு திருநெல்வேலிக்குச் செல்ல மறுத்துத் தன்னோடு இந்த வீட்டுக்கு வந்த போதே அலமேலுவின் மனதில் உறுத்தல் எழுந்தது.
ஆரபியின் அன்னை சுடர்விழியும் தந்தை ஞானசேகரனும் அவளது புறக்கணிப்பால் மனம் நொந்து போனதையும், அதை ஆரபி அலட்சியம் செய்ததும் அலமேலுவுக்குப் பெரிய அதிர்ச்சி.
அதை விடப் பெரிய அதிர்ச்சி வளைகாப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பேத்தியை அவளது கணவன் அன்பரசன் வந்து பார்க்கவில்லை. போனில் நலம் விசாரிப்பானோ என்னவோ! அது அலமேலுவுக்குத் தெரியாது.
அதற்கும் மேலே இன்னொரு அதிர்ச்சி பிரசவத்திற்கு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட பேத்தி தனது கணவனுக்கு மருத்துவமனையில் சேர்ந்த தகவலைச் சொல்லக்கூடாதெனக் கட்டளை விதித்தது.
அப்படி என்ன கணவனிடமும் பெற்றோரிடமும் அவளுக்குக் கோபம் என்பது அலமேலுவுக்குப் புரியவில்லை. ஏனெனில் ஆரபிக்குக் கோபம் வந்து அவர் பார்த்ததில்லை.
அன்பரசனைப் பற்றியும் அவருக்குத் தெரியும். திருமணமான நாளிலேயே ஆரபியின் உறவினர்கள் இனி தனக்கும் உறவினர்கள் என்பதை செயலில் காட்டியவன். பேத்திமீது அளவற்ற அன்பு கொண்டவன்.
இதோ அவளருகில் அமர்ந்திருப்பவனின் முகத்தில் இருந்த கலக்கமும், பேத்தியின் கொந்தளிப்பான வதனமும் அவர்களிடையே உள்ள பூசலின் அளவு பெரியதென்று அல்லவா சொல்கின்றன!
அலமேலு கண்களை மூடித் தென்காசி காசி விஸ்வநாதரிடம் பேரன் – பேத்தியின் வாழ்க்கை சீரடைய வேண்டுமென வேண்டிக்கொண்டார். அவர்களுக்காக இல்லையென்றாலும் இதோ புதிதாய் உதித்திருக்கிறாளே கொள்ளுப்பேத்தி இவளுக்காக இருவரின் வாழ்வும் சீரடைந்தே ஆகவேண்டும்.
பெயர் சூட்டும் நிகழ்வு இனிதே முடிவடைந்ததும் குழந்தையின் தாய் தந்தை இருவரும் அவரவர் பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்கும்படி ஐயர் கூறினார்.
மார்த்தாண்டனும் மனோகரியும் சேர்ந்து நிற்க ஆரபியும் அன்பரசனும் அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டார்கள்.
அடுத்து சுடர்விழியும் ஞானசேகரனும் வர, ஆரபியின் கண்கள் எரிமலையாயின.
இருவரும் தயங்கி நிற்கவும், அன்பரசன் ஆரபியின் கையைப் பற்றியபடி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டான்.
எப்படியும் ஆரபி அவனைத் திட்டித் தீர்க்கத் தானே போகிறாள். இதற்கும் சேர்த்தே திட்டிக்கொள்ளட்டும் என்பது அவன் எண்ணம்.
ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு நிமிர்ந்த அவனது மனைவி அவளது பெரியம்மா பெரியப்பாவை அழைத்தாள்.
“எனக்கு அம்மா அப்பாவா இருந்து என்னை ஜாக்கிரதைய பாத்துக்கிட்டவங்க நீங்க தானே… டெலிவரிக்காக ஆபரேசன் தியேட்டர் போற வரைக்கும் நீங்களும் பெரியப்பாவும் என் கூடவே இருந்திங்கல்ல பெரியம்மா… மத்தவங்களை விட உங்க ஆசிர்வாதம் தான் எனக்கும் என் குழந்தைக்கும் வேணும்” என்றாள் அவள்.
அப்போது கூட அவள் அன்பரசனைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளாததை அலமேலுவைப் போலவே இன்னும் இரண்டு ஜீவன்கள் புரிந்துகொண்டன.
அதில் ஒருவர் மார்த்தாண்டன், இன்னொருவன் அருண். நடந்த அனைத்தையும் அறிந்தவர்கள் என்ற முறையில் அன்பரசனை ஆரபி ஒதுக்கி வைப்பதை எண்ணி அவர்களால் வருத்தப்பட முடியவில்லை.
ஆரபியின் பெரியம்மா கனிமொழியும், பெரியப்பா ஆத்மநாதனும் வந்து நிற்கவும் அன்பரசனும் அவளும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டார்கள்.
கூடவே அவர்களின் மைந்தன் மகேஷ் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை குழந்தை ஆரண்யாவின் கையில் வைத்தான்.
“என்னப்பா காசு நல்லா புரளுது போலயே?” என்று கங்கா கேலி செய்ய
“அவன் தாய்மாமன் ஆகிட்ட குஷில இருக்கான் கங்கா” என்றார் அவனது அன்னை கனிமொழி.
“தாய்மாமா ரெண்டு பவுன்ல ஒரு செயின் போட்டா நல்லா இருக்கும்” என கங்காவின் கணவர் பரணிநாதன் கிண்டல் செய்தார்.
“எல்லாரும் உன்னைச் சாக்கா வச்சு என் பாக்கெட்டுக்கு ஆப்பு வைக்காங்க அம்முக்குட்டி” எனக் குழந்தையை ஆரபியிடமிருந்து வாங்கி கொஞ்ச ஆரம்பித்தான் மகேஷ்.
ஆரபி கங்காவிடம் ஸ்ருதி வரவில்லையா என்று கேட்க “அவளுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குடா… அதான் வரல” என்றார் அவர்.
மனோகரி பேத்திக்கு வாங்கிய தங்க செயினை மருமகளிடம் கொடுத்தார்.
“நீங்களே போட்டு விடுங்க அத்தை” என்றவளிடம்
“குழந்தை கழுத்துல போடப்போற முதல் நகைய அவ அம்மா போட்டுவிட்டா நல்லா இருக்கும்மா” என்றார் மனோகரி.
மகேஷிடம் இருந்து குழந்தை அன்பரசனின் கைக்கு மாறியிருந்தாள். ஆரபி அவளுக்குச் செயினைப் போட்டுவிட்டதும் மனோகரி குழந்தையை வாங்கிக்கொண்டார்.
குழந்தையைக் கொஞ்சியவர் “இன்னும் மூனு மாசத்துல அம்முக்குட்டி ஆச்சி வீட்டுக்கு வந்துடுவல்ல தங்கம்” என்று சீராட்டியபடி நகர்ந்துவிட ஆரபியின் மனமோ அங்கே போகவேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்தது.
அலமேலுவிடம் வந்து அமர்ந்த மனோகரி பேத்தியைக் காட்டி பேசிக்கொண்டிருக்க அந்த முதியப்பெண்மணிக்கோ கவனம் எல்லாம் பேத்தி மீதே!
அவளிடம் பேசியே ஆகவேண்டுமெனத் தீர்மானித்தவர் “அம்மாடி மனோ, நீயும் உன் சம்பந்தாரினியும் உங்க பேத்திய கொஞ்சுங்க… எனக்குக் கொஞ்சம் படுத்தா தேவலனு இருக்கு” என்றபடி எழுந்தார்.
“நீயும் பெரிய மாப்பிள்ளையும் எல்லாத்தையும் பாத்துக்கோங்க கனி” என்று பெரிய மருமகள் பெரிய மருமகனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆரபியைத் தன்னோடு அழைத்துக்கொண்டார் அவர்.
போகும் போதே அன்பரசனிடம் “நீயும் வாப்பா… உன் கிட்ட முக்கியமான விசயம் பேசணும்” என்றார்.
இருவரும் அலமேலுவின் அறைக்கு வந்ததும் அதிகம் தாமதிக்காமல் “உங்க ரெண்டு பேருக்குள்ளவும் அப்பிடி என்ன தான் பிரச்சனை?” என விசாரித்தார்.
இருவரிடமும் க்ஷண நேர அதிர்ச்சி வெளிப்பட்டதைக் கண்டுகொண்டது அவரது அனுபவச்சாலி மூளை.
“அதுல்லாம் ஒன்னுமில்ல ஆச்சி… உங்களுக்கே தெரியும்ல, சரியா தூக்கம் இல்லாம ஆரு கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்சா இருக்கா… மத்தபடி ஒன்னுமில்ல” என அன்பரசன் சமாளிக்க ஆரபியும் வெறுமெனே தலையாட்டி வைத்தாள்.
அலமேலு அதை நம்ப வேண்டுமே!

“பொண்டாட்டி பிரசவத்துக்காக அவ பிறந்த வீட்டுக்குப் போனதும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி அவளைப் பாக்க வருவான் புருசன்… பிரசவ நேரத்துல புருசன் தன் கூடவே இருக்கணும்னு ஆசைப்படுவா பொண்டாட்டி… நீங்க ரெண்டு பேரும் இதுக்கு விதிவிலக்கா இருந்ததுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியாது… கேட்டாலும் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பொய் சொல்லுவிங்க… அந்தச் சிரமம் உங்களுக்கு வேண்டாம்… ஆனா ஒன்னு, தாமரை இலை தண்ணி மாதிரி வாழவா இவங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சோம்னு உங்களைப் பெத்தவங்க கவலைப்படுற மாதிரி நடந்துக்காதிங்க… ஆரும்மா! ஆஸ்பத்திரில பிடிவாதமா நீ பேசுனது இப்பவும் என் கண்ணுக்குள்ளவே நிக்குது… நீ பிடிவாதம் பிடிச்சு முதல் தடவையா அப்ப தான் பாத்தேன்… ஐயா அரசு! பொண்டாட்டி ஆஸ்பத்திரில சேர்ந்த விசயத்தைச் சொல்லணும்னு நீ எதிர்பாத்தது தப்பில்ல… ஆனா அவ எந்த நிலமைல இருக்கானு புரிஞ்சிக்காம பிரசவம் ஆன பச்சை உடம்புக்காரி கூடச் சண்டை போட்டது எந்த விதத்துல சரினு சொல்லு… யாருமே பாக்கலனு நீங்க செய்யுற ஒவ்வொரு காரியமும் யாரோ ஒருத்தர் கண்ணுல கட்டாயம் சிக்கும்”
ஆரபி அன்பரசனைக் குற்றம் சாட்டுவது போலப் பார்த்தாள். என்.ஐ.சி.யூவிலிருந்து குழந்தையையும் அவளையும் தனி அறைக்கு மாற்றியபிறகு மருத்துவமனைக்கு வந்தவன் ஏன் தனக்கு மருத்துவமனையில் சேர்ந்த தகவலைச் சொல்லவில்லையெனச் சண்டை போட்டதை அவளால் மறக்க முடியுமா!
அங்கே யாருமில்லை என்று நினைத்து அவன் கத்தி விட்டான். அது பாட்டியின் கவனத்தை எப்படியோ ஈர்த்திருக்கிறது. இவனால் இன்னும் என்னென்ன சங்கடத்தை அனுபவிக்க வேண்டுமோ!
அன்பரசன் அவனது சுபாவத்திற்கு பொருந்தாவிதமாய் அமைதியாய் நின்றான் என்றால் ஆரபியோ முற்றிலும் வேறொருத்தியாய் அவனைத் துவேசமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அலமேலுவுக்கு அவர்களின் வாழ்க்கையை எண்ணிப் பயம் பிறந்தது.
“உங்களைவிட வயசுல பெரியவ சொல்லுறேன்… இந்தக் கோவத்தைத் தூக்கிப் போடுங்க… அதீதமான எதிர்பார்ப்பும் அதிகமான பிடிவாதமும் தான் நிறைய சந்தர்ப்பங்கள்ல உறவுகளோட பிரிவுக்குக் காரணமா இருக்கும்… புரிஞ்சு நடந்துக்கோங்க… அம்முக்குட்டி அழுற மாதிரி இருக்கு… போங்க”
இருவரும் அலமேலுவின் அறையிலிருந்து வெளியேறி ஆரபியின் அறைக்கு ஆரண்யாவைத் தூக்கிக்கொண்டு சென்றனர்.
குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டி உறங்க வைத்தாள் ஆரபி. அன்பரசன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தான். சுழித்திருந்த அவனது புருவங்கள் எதையோ தீவிரமாகச் சிந்திக்கிறானென ஆரபிக்குத் தெரிவித்தது.
குழந்தை ஆழ்ந்து உறங்கியதை உறுதிபடுத்தியவள் உடலை உறுத்திய பட்டுப்புடவையை மாற்றலாமெனக் கட்டிலில் அடுக்கி வைத்திருந்த ஃபீடிங் நைட்டி ஒன்றை எடுத்ததும் அன்பரசனுக்கு இப்போது அறையை விட்டு வெளியே போகவேண்டுமெனப் புரிந்துவிட்டது.
செல்லும் முன்னர் மனைவியிடம் தன் மனதிலுள்ளதை சொல்ல ஆசைப்பட்டான்.
“ஆரு உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”
“உங்க எதிர்ல தானே நிக்குறேன்… சொல்லுங்க”
“நமக்குள்ள இருக்குற பிரச்சனை தீரும்னு எனக்கு நம்பிக்கை இல்ல”
அவன் முடிக்கும் முன்னரே சீற்றத்தோடு அவனை ஏறிட்டாள் ஆரபி.
“டிவோர்ஸ் வேணுமா உங்களுக்கு?”
அன்பரசன் அதிர்ந்தான்.
“கத்தாத ஆரு… நான் டிவோர்ஸ் பத்தி யோசிக்க கூட இல்ல” என்றான்.
“ஓ! முன்னாடி சொன்னிங்களே, அதே மாதிரி ஊருக்காகப் புருசன் பொண்டாட்டியா ஒரே ரூம்ல இருந்துப்போம்னு சொல்ல வர்றிங்களா?”
ஆற்றாமையோடு ஒலித்தது அவளது குரல். அன்பரசன் பதில் சொல்லாமல் தலையை ஆமோதிப்பாய் அசைத்தான்.

“ஊருக்காக வாழத் தான் என்னைக் கல்யாணம் பண்ணுனிங்களா? லிட்ரலி யூ ஆர் டெஸ்ட்ராயிங் மை லைஃப் அன்பு (Literally you are destroying my life)” என்று கொதித்துப் போய்க் குற்றம் சாட்டினாள் அவன் மனைவி.
“ஐ டோண்ட் இன்டெண்ட் டு டூ தட் (I don’t intend to do that)… நான் தெரிஞ்சு எந்தத் தப்பையும் பண்ணல ஆரு… இப்ப கூட உனக்காகத் தான் நான் இந்த முடிவை எடுத்தேன்… நம்ம தனித்தனியா பிரிஞ்சோம்னா பெரியவங்களால அதை ஏத்துக்க முடியாது… நம்ம குழந்தைக்கும் அது நல்லது இல்ல”
ஆரபி தலையை உலுக்கிக்கொண்டாள்.
“நீ எப்ப நம்ம வீட்டுக்கு வரணும்னு ஆசைப்படுறியோ அப்ப வா”
“அங்க வர்றதுக்கு எனக்கு விருப்பமில்ல”
அன்பரசன் மனைவியின் மனநிலை என்னவெனப் புரியாமல் குழம்பிப் போனான்.
“உன் மனசுல என்ன இருக்கு ஆரு? மத்தவங்களுக்காக மனமொத்த தம்பதி மாதிரி வாழலாம்னு சொன்னாலும் கோவப்படுற… என் வீட்டுக்கு வர இஷ்டமில்லனு சொல்லுற… நான் என்ன தான் செய்யணும்னு எதிர்பாக்குற? நான் பண்ணுன தப்புக்கு உன் கால்ல இருக்குற செருப்பை வச்சு நாலு அடி கூட அடிச்சுக்க… இப்பிடி என்னைக் குழப்பத்துல தள்ளி வேடிக்கை பாக்காத… என் பொண்டாட்டிக்கு என் கூட வாழப் பிடிச்சிருக்கா, பிடிக்கலையா, என் குழந்தையோட நாங்க ரெண்டு பேரும் ஒரே குடும்பமா வாழுவோமா, இந்த வாழ்க்கை நிலைக்குமானு யோசிச்சு யோசிச்சே நான் பைத்தியமாயிடுவேன்டி”
அன்பரசன் தனது மனதை அழுத்திக்கொண்டிருந்த பயத்தின் பாரம் தாங்காமல் வெடித்துவிட்டான்.
ஆரபியால் அவன்மீது பரிதாபப்பட முடியவில்லை. இப்போது அன்பரசனுக்கு இருக்கும் இதே குழப்பங்கள் தானே அன்று அவளுக்கும் இருந்தன. வயிற்றுப்பிள்ளையோடு அவள் என்னவெல்லாம் யோசித்திருப்பாள்? எப்படி எல்லாம் பயந்திருப்பாள்?
உலகத்துக்காக மனைவியாக வாழ வேண்டுமென்றால் என்னுடன் இரு, இல்லையெனில் இப்போதே வீட்டை விட்டுச் சென்றுவிடு எனச் சொன்னவன் இவன் தானே!
கணவனை விட்டு விலகினால் தங்க தாம்பளத்தில் வைத்துத் தாங்கும் பெற்றோரா அவளுக்கு வாய்த்திருக்கிறார்கள்! இவனை விட்டால் போக்கிடம் இல்லை என்ற நிலையில் இருந்தவளிடம் என்னவெல்லாம் பேசிக் காயப்படுத்தினான். இப்போது அவனுக்கே அது திரும்பும்போது வலிக்கிறதாக்கும்?
அன்பரசனைப் போலவே என் பிடிவாதம் தான் முக்கியமென ஆரபியால் யோசிக்க முடியவில்லை. அவனது வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை என்றாலும் போய்த் தான் ஆகவேண்டும். ஏற்கெனவே ஆச்சிக்கு ஐயம் வந்துவிட்டது.
கூடவே அவள் ஒன்றும் பிறவி கோபக்காரி இல்லை. பிரசவ சமயத்தில் அவளுக்கு நேர்ந்த அனுபவங்களால் சீண்டப்பட்டு கோபத்தில் உழலுபவள். பிரசவத்திற்கு பின்னால் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவளைத் தாறுமாறாகப் பேச வைக்கிறது. அவ்வளவே!
அவள் மனதில் என்ன இருக்கிறதென அவளுக்கே தெரியாத நிலை. அன்பரசனிடம் என்னவெனக் கூறுவாள்?
சில நிமிட யோசனைக்குப் பிறகு “மூனு மாசம் டைம் குடுங்க… நானும் அம்முக்குட்டியும் வந்துடுவோம்” என்றாள்.
அன்பரசனின் முகம் மகிழ்ச்சியில் பூரித்தது. மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்டவன் “தேங்க்ஸ் ஆரு” என்றான். ஆரபி அவனது கையை விலக்கிக்கொண்டாள்.
“மத்தவங்க நிலமைய புரிஞ்சிக்காம வார்த்தையாலயும் செயலாலையும் வதைக்குறதுக்கு நான் ஒன்னும் தி கிரேட் அன்பரசன் இல்லங்க”
அழுத்தம் திருத்தமாகச் சொன்னவள் வெளியே செல்லும்படி கூற அன்பரசனின் கண்கள் பனித்தன. எத்தனை முறை மன்னிப்பு வேண்டினாலும் ஆரபியின் மனதில் பட்ட காயத்தை ஆற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டவன் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

