வேண்டாம் என நீ வேரறுத்த போதும்,
மீண்டும் முளைத்தேன் மீட்சி கொண்டே!
துளிர்த்த பின்னே துணை எதற்கு?
தனித்து வளருவதே தவம் எனக்கு!
–அட்சரனின் வேதா
“அப்படி என்ன சொல்லி வச்ச அச்சு? ஒரே அழுகை அந்தப் பொண்ணு. பாக்கவே பாவமா இருந்துச்சுடா. முகமெல்லாம் சிவந்து போச்சு.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஸ்ரீமயாவின் கதை நிராகரிக்கப்பட்ட பிறகு நடந்த அனைத்தையும் அட்சரனிடம் சொல்லிவிட்டு, ஆதங்கமாய் வினவினார் ராஜேஸ்வரி. அட்சரன் அசட்டையாய்த் தோள்களைக் குலுக்கினான்.

“அவ எழுதுனது என்னவோ அதைத்தான் சொன்னேன். அந்தப் பொண்ணு ‘இன்ஸ்பிரேஷன்’ங்கிற பேருல பேமஸான இங்கிலீஷ் ஃபேண்டசி நாவல்கள்ல இருந்து சீனைத் திருடி எழுதி வச்சிருக்கா. அப்பிடிப்பட்ட கதையை எப்பிடி என்னால பப்ளிஷிங் ஹவுசுக்கு அனுப்ப முடியும்? எழுதணும்னு யார் வேணும்னாலும் நினைக்கலாம்மா. ஆனா சிலரால மட்டும்தான் அந்த எழுத்துக்கு உயிர் கொடுத்து நடமாட வைக்க முடியும். அந்தத் திறமை ஸ்ரீமயா கிட்ட இல்ல.”
“இப்பிடிப் பேசுனா என்னடா அர்த்தம்?”
“அவளுக்குக் கற்பனாசக்தினு ஒன்னு இல்லனு அர்த்தம். ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி அது. அதுவே இல்லாம நாலு இடத்துல படிச்ச கதைகள், பாத்த படங்கள்ல இருந்து சீனைத் தூக்கி அப்பிடியே கதைல போடுறதுக்குப் பேரு படைப்பாற்றல் இல்ல; அதுக்குப் பேரு திருட்டுத்தனம். அவளை அறியாம கூட அவ அதைச் செஞ்சிருக்கலாம். யாராச்சும் ஒருத்தர் இதை அவளுக்குச் சொல்லிப் புரியவைக்கணும்ல. அன்ஃபார்ச்சூனேட்லி எனக்கு ஸ்பூன் பீடிங் எல்லாம் பண்ண வராது. உண்மை என்னவோ அதைப் போட்டு உடைச்சுட்டேன். அதனால அவ மனசு உடைஞ்சு போச்சுனா நானா பொறுப்பு?”
அலட்சியமாகக் கேட்டவனைக் கவலையோடு பார்த்தார் ராஜேஸ்வரி. எல்லா நேரத்திலும் இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நடந்துகொள்வது சரிவராதே என்ற கவலை அவருக்கு. அதோடு ஒரு பெண்பிள்ளை கண்ணீர் சிந்துகிறாளே என்ற பரிதாபமும் கூட. பெண் கண்ணீர் சிந்தினால் அதற்கு காரணமானவர்களை அந்தக் கண்ணீர் சுடும் என்று நம்புபவர் அவர்.
அதனால் தான் இவ்வளவு தூரத்திற்கு மைந்தனிடம் எடுத்துரைத்தார். ஆனால், அவரது மகனுக்கு அத்தகைய செண்டிமெண்டுகளில் உடன்பாடு இல்லை. எப்போதும் போலத் தோள்களைக் குலுக்கியபடி அவரிடமே அதே தொனியில் பேசிவிட்டான். இத்தனையையும் வேடிக்கை பார்த்தபடி டேப்லெட்டில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார் சதானந்தன்.
“மகனுக்கு நல்லது கெட்டது சொல்லித் தர வேண்டிய பொறுப்பு அப்பாக்கும் இருக்கு” என ராஜேஸ்வரி குத்தலாகச் சொல்லவும், சதானந்தனின் கண்கள் மட்டும் அவர் பக்கம் திரும்பின. கூடவே மைந்தனையும் ஏறிட்டார். ‘இவனா நான் சொல்லிக் கேட்பவன்?’ எனும் பெருமூச்சுடன் மீண்டும் டேப்லெட்டில் கண்ணானார். வந்ததே ராஜேஸ்வரிக்கு ஆதங்கம்.
“ரொம்ப நல்லது. நாளைக்கு இதே மாதிரி வேற ஒரு சம்பவம் நடக்கும். அப்பவும் நெருப்புக்கோழி மண்ணுக்குள்ள தலையைப் புதைச்சுக்குற மாதிரி டேப்லெட்டுக்குள்ள புதைச்சுக்கோங்க.”
“ராஜி…” மனைவியை அமைதியாக்க அவர் முயல, “பேசாதீங்க நீங்க” என்று பதிலுக்கு ராஜேஸ்வரி அடக்கியதும் கப்சிப் தான். இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அட்சரனின் இதழ்களில் சிரிப்பு முகிழ்த்தது.
“பாருங்க! அப்பாவால உங்களையே சமாளிக்க முடியல. அவர் எப்பிடி என்னைக் கண்டிப்பார்னு நினைக்குறீங்க? ரிலாக்ஸ்மா.” அவரது தோளில் தட்டிவிட்டுத் தனது அறைக்குப் போனான் அட்சரன். அறைக்குள் சென்றதுமே அருள்மொழியிடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுடா.”
“வானதியோட வருங்கால புருஷன் ஆதர்ஷ் பத்தி உனக்கு ஏதாச்சும் தெரியுமா?” எடுத்ததும் அவன் கேள்வி கேட்கவும் அட்சரனுக்கு முதலில் குழப்பம்.
“இதை ஏன்டா விசாரிக்குற? அதெல்லாம் உன் அங்கிளுக்குத்தான் தெரியும். ஏன் தப்பா எதுவும் கேள்விப்பட்டியா?”
“தப்பா ஏதாச்சும் நியூஸ் கிடைச்சா அது எனக்குச் சாதகமா இருக்கும் அச்சு.” தெளிவாய்ப் பிசிறு தட்டாமல் அருள்மொழி சொல்லவும், அட்சரனுக்கு முதலில் வியப்பு. பின்னர் அவன் சொன்னதன் அர்த்தம் வேறு எதுவாகக் கூட இருக்கலாமென எண்ணியவனாக, என்ன சாதகமென வினவினான்.
“நான் சொன்னேன்ல! ஐ ஹேவ் அ பிளான். ஆதர்ஷ் மேல சின்னதா ஒரு பிளாக்மார்க் இருந்தா கூட போதும். என் பிளானை என்னால வெற்றிகரமா செயல்படுத்த முடியும்.”
“நீ என்ன பேசுறனு புரிஞ்சுதான் பேசுறியா அருள்? இது வானதியோட வாழ்க்கை. அவ நம்ம ஃப்ரெண்ட்.”
“நோ! நாட் அட் ஆல்! அவ ஜெயசந்திரனோட மகள். அவ்வளவுதான்.”

அருள்மொழியின் குரலில் என்றுமில்லாத அளவுக்கு வெறுப்பு இழையோடியது. இது நல்லதுக்கான அறிகுறியில்லை என்று அட்சரனுக்கு மூளையில் அலாரம் அடித்தது.
“தப்பு அருள். இதை விடத் தப்பா எதையும் செஞ்சிடாத. வானதி தைரியமானவதான். ஆனா எவ்வளோ தைரியமான பொண்ணுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அவளோட பலவீனம் அவங்கப்பா மேல அவ வச்சிருக்குற நம்பிக்கை. அதுதான் அவ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கக் காரணம். எதையும் பண்ணி அதை உடைக்குறேன்னு அவளை உடைச்சிடாத.”
மறுமுனையில் அருள்மொழி சிரித்தான். அந்தப் பேச்சைத் தொடர அவன் விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டான் அட்சரன்.
பெருமூச்சோடு, “நீ என்ன பிளான் வேணும்னாலும் போடு. ஆனா அது வானதியைப் பாதிக்காம பாத்துக்க. அவளுக்கு ஒன்னுனா நிச்சயம் நான் வருவேன்” என்றான் அழுத்தமாய்.
“விடுடா நல்லவனே! உன் ஃப்ரெண்டை நான் ஒன்னும் பண்ணிடமாட்டேன்.”
“நீயும் என் ஃப்ரெண்ட் தான். அதனாலதான் உன்னை எந்தத் தப்பும் பண்ணவிடமாட்டேன்னு சொல்லுறேன்.”
“சரி, தப்புங்கிறது ஒவ்வொருத்தர் பாக்குற கோணத்துல இருக்கு அச்சு. எனக்குச் சரினு தோணுறது உனக்குத் தப்புனு தோணலாம். இப்ப இல்லனாலும் பியூச்சர்ல தோணலாம்.”
“லாயர்ல! அதான் பாயிண்டா பேசுற. விடு நண்பா. ரொம்ப போரடிக்குது இந்தப் பேச்சு.”
அட்சரன் இவ்வாறு சொல்லவும் அருள்மொழியும் பேச்சை மாற்றினான். தோழர்கள் இருவரும் மறுநாள் ஹெல்வட்டாசில் சந்திக்கலாமெனத் தீர்மானித்தார்கள். பொறுமையாய்த் தனது அறைக்குள் வந்து ‘பீன்பேக்கில்’ சரிந்தவனுக்கு வானதியிடமிருந்து வாட்ஸ்அப்பில் தகவல் வந்தது.
“ஒரு மாசத்துக்கு எத்தனை கிலோ இரும்பு கம்பி திங்குற அச்சு?” வினோதமான இக்கேள்வியில் சட்டெனச் சிரித்தவன், “ஏன் உனக்கும் பங்கு வேணுமா?” என்று விளையாட்டாகப் பதில் செய்தி அனுப்பிவைத்தான். அதற்குச் சிவப்பு வண்ணக் கோபக்கார எமோஜி வந்தது அவளிடமிருந்து.
“என் பிரண்ட் ஒருத்தி இன்னைக்கு உனக்கு புக் ரிலேட்டடா கால் பண்ணிருக்கா. நீ அவளைக் கடிச்சு வச்சிருக்க. ஏன்டா இப்பிடி? நீ ஸ்ட்ரா போட்டு அவ ரத்தத்தை மட்டும் உறிஞ்சாதக் குறைனு புலம்புறா.” வாய்ஸ் நோட் ஒன்றை ஆதங்கத்தோடு அனுப்பிவைத்தாள் வானதி. அட்சரன் யோசித்தான். பின்னர்தான் காலையில் வந்த மொபைல் அழைப்பு நினைவுக்கு வந்தது அவனுக்கு.
“யாரு? அந்த வேதாவா?” முழு உரையாடலிலும் அவனுக்குத் தெளிவாய் மனதில் பதிந்தது ‘வேதா’ என்ற பெயர் மட்டுமே. உரையாடலின் சாராம்சம் எல்லாம் மறந்து போயிருந்தது அவன் இருந்த பிசியில்.
“அவளேதான்.”
“யார் ஆத்தரோ அவங்க என்கிட்ட பேசிருக்கணும் நதி.”
“அவ கொஞ்சம் கூச்ச சுபாவம் அச்சு. சட்டுனு வெளியாளுங்க கிட்ட பேசமாட்டா. அதான் அவளுக்குப் பதிலா யாழினி பேசிருக்கா உன்கிட்ட.”
அட்சரன் மோவாயை வருடியவன், “லிசன் நதி! பேசுறதுக்கே யோசிக்குற பொண்ணு அப்பிடி என்ன புரட்சிகரமா எழுதிடப்போறா?” என்றான் அலட்சியமாக.
“ஏன்டா, புரட்சிகரமான புத்தகங்களுக்கு மட்டும்தான் வாசகர் வட்டம் இருக்குனு சொல்லுறியா? போன மாசம் கூட ஒரு ரொமாண்டிக் காமெடி புக்கை எவரெஸ்ட் பப்ளிஷிங் ஹவுசுக்கு அனுப்பி வச்சியே.”
இருவரும் மாறிமாறி வாய்ஸ் நோட் அனுப்பிவைத்து தங்கள் பக்கத்து வாதத்தைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள்.
“என்ன ஜெனர் வேணும்னாலும் எழுதட்டுமே! கம்யூனிகேஷன்ல சிக்கலுள்ள பொண்ணோட கதைல என்னைப் பிரமிக்க வைக்குற மாதிரி எதுவும் இருக்காதுனு நான் அழுத்தமா நம்புறேன். அதோட உன் மூலமா காண்டாக்ட் டீடைல்ஸ் கிடைச்சுதுனு என்கிட்ட பேசுனவங்க சொல்லலை.”
வானதி அந்த வாய்ஸ் நோட்டைக் கேட்ட பிறகு ஏதோ தட்டச்சு செய்தாள். “நீ என் மேரேஜுக்குத் தேன்மலைக்கு வர்றல்ல? அங்க உனக்கு அவளை அறிமுகப்படுத்துறேன். அவ கதையை நீ படிச்சுப் பாரு. அவ ஒரு ஜெம்னு புரியும்.”
“அதையும் பாத்துடுவோம். அந்த மலைக்கிராமத்து எழுத்தாளினி அப்பிடியென்ன எழுதிட்டானு அங்க வந்து படிச்சுத் தெரிஞ்சுக்குறேன். நீ வேற எதையும் மைண்ட்ல போட்டுக்காம கல்யாணத்தை என்ஜாய் பண்ணு. இப்பவாச்சும் ஒரு பொண்ணா இருக்க ட்ரை பண்ணு.”
குழந்தைப் பருவத்திலிருந்தே பழகும் நண்பனின் உரிமை அல்லவா இந்தக் கேலிப்பேச்சு. பதிலுக்கு அவனைக் கேலி செய்து அதை டேலி செய்துகொண்டாள் வானதி.
“டேய் அச்சு! டின்னர் சாப்பிட வர்றியா?” கீழே இருந்து அவனது அன்னையின் குரல் கேட்டது. மொபைலை அறையிலேயே சார்ஜ் போட்டுவிட்டுச் சாப்பிடப் போய்விட்டான் அட்சரன்.
அதே நேரம் தேன்மலையில் மகளிடம் தான் கொண்டு வந்த மலையாள நாடோடி கதையாடல்களைக் கொண்ட புத்தகமான ‘ஐதிக்யமாலாவைக்’ காட்டிப் பேசிக்கொண்டிருந்தார் கஜேந்திரன்.
“என் பிரண்ட் ஒருத்தர்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன் வேதாம்மா. இதுல ஃபேமஸான நிறைய கதைகள் இருக்கு. இதைப் பாரு, இதுல யட்சன் பத்தி குறிப்பு இருக்கு.”
“யட்சனா? வேண்டாம்பா. இன்னைக்குக் காலைல ரோஜாக்கா சொன்னதே திக்குனு இருக்குப்பா.” கஜேந்திரன் மகளின் மருண்ட விழிகளைப் பார்த்துச் சிரித்துவிட்டார்.

“அதெல்லாம் அந்தக் காலத்துல சொல்லி வச்ச கதைகள். ஆனா இப்பவும் நம்ம ஊருலயே காட்டுக்குள்ள யட்சன் நடமாடுறான்னு சொல்லுறாங்க. கதைங்கிறது பின்னாட்கள்ல வரலாறா மாறும்னு உங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு. அப்பிடித்தான் யட்சன் யட்சி கதைகளும் வரலாறு மாதிரி மாறிப்போச்சு வேதா.”
இரவுணவுக்காகச் சட்னியைத் தாழித்தபடியே மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் கனகவல்லி. வேதவதிக்கு மலையாள எழுத்துகளை வாசிக்கத் தெரியாது. ஆனால் கஜேந்திரனுக்கு மலையாளம் பேசவும் எழுதவும் வரும் என்பதால் மகளுக்கு அதிலிருக்கும் சாராம்சத்தை விளக்கினார்.
“நாராயணனோட நிதிகள், மகாநிதிகளோட காவலர்கள்தான் இந்த யட்சர்கள். இவங்க ஒவ்வொருத்தரும் நிலம், காடு, நீர்நிலைனு ஒவ்வொன்னுக்கு அதிபதியா இருப்பாங்க. இவங்க குபேரனோட வேலையாட்கள். அந்தக் காலத்துல இந்த மாதிரி யட்சன் யட்சியைச் சொல்லி குழந்தைங்க குறும்பு பண்ணுறப்ப அடக்குவாங்க. பாக்க அழகா உயரமா இருக்குற யட்சனை ஒரு தடவை பாத்துட்டோம்னா அவன் நம்மளை மயக்கிடுவானாம். யட்சனும் யட்சியும் இருக்குற இடத்துல பாலைப்பூவோட வாசம் வீசும். இவங்களோட அழகான தோற்றத்துக்குப் பின்னாடி பயங்கரமான இன்னொரு முகமும் இருக்கு. மனுஷங்களை மயக்கி அவங்க ரத்தத்தைக் குடிச்சிடுவாங்கனு சிலர் சொல்லுவாங்க. இந்தப் புத்தகத்துலயும் சில குறிப்புகள் அப்பிடி இருக்கு.”
அவர் சொல்லச் சொல்ல வேதவதிக்கு அடிவயிற்றில் பிரளயம். “போதும்பா. நைட் நேரத்துல பேச வேண்டிய விஷயமா இது?” என்று முகம் வெளிறியவளுக்கு, அன்றைய இரவில் உறக்கத்தில் யட்சனைப் பற்றிய கனவுகள்தான்.
உயரமாய்ச் சந்தன நிறத்தில் சுருள் முடியுடன் வந்த யட்சன், “வேதா… அம் ஐ ரைட்? பியூச்சர்ல இந்தப் பேர்ல ஹெல்வட்டாஸை யாரையும் காண்டாக்ட் பண்ணுனாங்கன்னா, ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிப்பேன், அவங்க கதையை ஏத்துக்குறதுக்கு” என்றான் பேச்சுவழக்கு தமிழில்.
சொன்னதுமே அவனது சந்தன நிற முகம் கொடூரமாய் மாறிப்போக, பயத்தில் அலறியபடி எழுந்து அமர்ந்தாள் வேதவதி. பக்கத்தில் ஒரு சொம்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் குடித்தவளுக்குச் சம்பந்தமற்ற புள்ளிகளை இணைக்கும் தனது கனவு விசித்திரமாகத் தோன்றியது.
மெதுவாகக் கண்கள் சுவர்க்கடிகாரத்தை நோட்டமிட்டன. அதிகாலை மூன்றரை மணி. இந்நேரத்தில் காணும் கனவு பலிக்குமே! ஒரு பக்கம் பைத்தியக்காரத்தனமாக இப்படி யோசித்தாலும், அடுத்த நொடியே படித்தப் பெண்ணின் பகுத்தறிவு விழித்துக்கொண்டது. பொதுவாக நமது மனதைப் பாதித்த சம்பவங்கள், இரவு உறங்குவதற்கு முன்னர் கேட்ட வார்த்தைகள் எல்லாம் நமது மனதின் அடியாழத்தில் உறைந்து கனவாக வருமென எங்கோ படித்திருக்கிறாள் வேதவதி.

ஒருவேளை முந்தைய தினம் வானதி பரிந்துரைத்த நிறுவனத்தில் தனது கதை நிராகரிக்கப்பட்டதால் இத்தகைய கனவு வந்திருக்குமோ? யோசித்தபடியே படுக்கப்போனவளுக்கு உறக்கம் வருவேனா என்றது. டேட்டாவை ஆன் செய்து இணையத்தில் உலாவ ஆரம்பித்தாள்.
வழக்கம் போலச் சில நிமிடத் தாமதத்திற்குப் பிறகு வாட்ஸ்அப் குழுவில் வானதியும் யாழினியும் அடித்த அரட்டைகள் மளமளவென நோட்டிபிகேஷன்களாக வந்தவண்ணம் இருக்கவும், போனை சைலண்டில் போட்டாள் அவள். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட செய்திகள். ஒவ்வொன்றாக வாசித்தவள் இறுதியாக வானதி குறிப்பிட்டிருந்த செய்தியைக் கண்கள் ஆச்சரியத்தில் விரிய வாசித்தாள்.
“அச்சு என் மேரேஜுக்குத் தேன்மலைக்கு வருவான். அங்க வந்ததும் வேதாவை அவன் கிட்ட இண்ட்ரோ குடுத்து அவ கதையை படிக்க வச்சிடுவோம். அவன் கிட்ட சொன்னதுக்கு அவனும் சம்மதிச்சிட்டான்.”
வேதவதியின் தகர்ந்து போன நம்பிக்கை, இரும்புத்துகள்களை ஈர்க்கும் காந்தமாய் வானதியின் செய்தியைப் படித்ததும் மீண்டும் ஒன்று திரளத் தொடங்கியது. அவளது நண்பனுக்கு என் கதை பிடிக்குமா? நகம் கடித்து யோசித்தவளுக்குத் திடுமென அந்த நண்பனின் பெயர் வினோதமாகப் பட்டது.
“அச்சுவா? இது என்ன விசித்திரமான பேரா இருக்கு?”
யோசித்தபடியே அடுத்த செய்தியைப் படித்தவளுக்கு விசித்திரப் பெயருக்கான விடை கிடைத்தது. “அச்சுவா? இது என்ன பேர் வானு?” – யாழினி.
“அவன் பேர் அட்சரன். சுருக்கமா நாங்க எல்லாரும் அச்சுனு கூப்பிடுவோம்” – வானதி.
“அச்சு… அச்சுவெல்லம்… நோ நோ! கொஞ்சமும் பொருந்தாது. அந்த மனுஷன் பேசுறப்ப பச்சை மிளகாய் ஜூஸ் குடிச்ச மாதிரில்ல காட்டமா இருக்கு.”
யாழினி சொன்னதற்கு வானதி சிரித்திருந்தாள். இப்போது அந்தச் சாட் முழுவதையும் வாசிக்கும் வேதவதியும்தான். இன்னும் அவளது செவிகளில் அவனது, அந்த அட்சரனது குரல் ஒலிப்பது போல ஒரு மாயை. கறாரான குரலில் அத்தனை அழுத்தம்! அத்தனை அலட்சியம்!
“அட்சரன்… அச்சு.”
காரணமில்லாமல் அவனது பெயரை உச்சரித்தாள் வேதவதி. உச்சரித்து முடிக்கையில் வித்தியாசமானதொரு உணர்வு அவளுக்குள். சற்று முன்னர் கண்ட கனவின் பாதிப்பாகக் கூட இருக்கலாம். வெறும் குரல் பதிவை வைத்தே அவனைக் கடினமானவனாக, திமிர்ப்பிடித்தவனாக உருவகப்படுத்திவிட்டது வேதவதியின் மனம். வேதவதியின் மனம் கொண்ட உருவகமும், அட்சரனுக்கு அவளைப் பற்றி இருக்கும் எண்ணமும் அவர்களின் சந்திப்பில் மாறுமா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

