குழந்தைகளுக்குப் இளஞ்சிறார்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதும் சாத்தானிஷ வழிபாட்டின் முக்கியமான சடங்காகும். 2016ல் கேரள காவல்துறையினர் சாத்தான் கல்ட் கும்பலைச் சேர்ந்த பதினோரு பேரைக் கைது செய்தார்கள். அவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் பல ஆண்டுகளாக வன்புணர்வு செய்து வந்தது தெரிய வந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களின் ஊடுருவலால் போதைப்பொருள் மாஃபியாவும் பெருகியுள்ளது என்கிறார்கள் கேரள காவல்துறையினர். சாத்தானிஷத்தில் ஈடுபடுபவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை சுலபமாகப் பணமீட்டும் முறையாகத் தெரிகிறது. இத்தகைய சாத்தான் வழிபாட்டாளர்கள் தங்களது சாத்தானிஷ கொள்கைகளை டாட்டூ குத்திக்கொள்வது, அந்தக் கொள்கைகள் பதித்த டீசர்ட் அணிவது மூலம் பரப்புவார்களாம். ராஜீவ் சிவசங்கர் என்ற பத்திரிக்கையாளர், கேரளாவின் வணிக தலைநகரமான கொச்சி இத்தகைய சாத்தான் வழிபாட்டு கும்பல்களின் பிரதான பகுதி என்கிறார். இந்த கல்ட்டானது கொச்சி துறைமுகத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் அவர். இது 2000ல் ஃப்ரெஞ்ச் சுற்றுலா பயணிகளால் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. இத்தகைய குழுக்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களே. அவர்களிலும் இளைஞர்களே இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுவால் ஈர்க்கப்படுகிறார்கள்.
-From Internet
“இளம்பெண் இனியாவின் படுகொலை வழக்கில் குற்றவாளியான தொழிலதிபர் ஏகலைவன் சக்கரவர்த்திக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றம். ஏகலைவனின் மிரட்டலுக்குப் பயந்து ஆதாரங்களை மறைக்க உதவியாக இருந்த பாதிரியார் உட்பட நான்கு பேருக்கு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி”
“தமிழ்நாட்டின் தலைநகரத்தை உலுக்கிய இளம்பெண் பிரகதியின் வழக்கில் குற்றவாளி யாரென கண்டுபிடிக்க முடியவில்லை. கொலைகாரன் இருள் இணையத்தில் இயங்கும் ரெட்ரூம் எனப்படும் வன்கொடுமை நேரலை தளத்தின் மூலமாக பிரகதியைக் கொலை செய்வதை நேரலையாக ஒளிபரப்பியது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இருள் இணையத்தில் அவ்வளவு எளிதில் பயனரின் அடையாளத்தையும் ஐ.பி முகவரியையும் கண்டறிய முடியாதென சைபர் க்ரைம் போலீசார் கூடுதல் தகவல். கொலை நடந்த தொழிலதிபருக்குச் சொந்தமான பங்களாவில் கொலைகாரனின் எந்த தடயமும் சிக்கவில்லை என்று தடயவியல் ஆய்வாளர்கள் பதில். பங்களாவைச் சுற்றியிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் கொலைகாரன் செயலிழக்கச் செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரகதியைக் கொலை செய்தவர் யார் என்பது மர்மமாகவே உள்ளது”
குமாரியோடு சேர்ந்து தொலைகாட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர் மிச்செல், ஜென்னி மற்றும் நித்திலராஜன்.
அவர்களுக்கு அதில் என்ன புரிந்துவிடப்போகிறதென குமாரி எண்ணிவிட மிச்செல்லோ “அப்ப அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்களோ குமாரி ஆன்ட்டி? அதுக்காக தான் அப்பா காலையிலயே கிளம்பி போனாங்களா?” என்று கேட்டு அவரை அதிரவைத்தாள். பதினைந்து வயது பெண்ணுக்கு இது கூடவா புரியாது?
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
குமாரி தடுமாற்றத்துடன் “ஆ..ஆமா மிச்செல்… அம்மா வந்துடுவாங்க… அப்பா உங்கம்மாவை அழைச்சிட்டு வந்துடுவார்.. இந்த நியூஸ் எல்லாம் போரடிக்குது… வேற சேனல் பார்ப்போம்” என்று சேனலை மாற்றினார்.
ஜென்னியோ “இனியாக்காவ கொலை பண்ணுனது ஏகலைவன் அங்கிள் தானா?” என்று கேட்டு அவருக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தாள்.
இந்தப் பிள்ளைகளுக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறதென திகைப்பில் ஆழ்ந்தவரை இயல்புக்குக் கொண்டு வந்தது அழைப்புமணியின் ஓசை.
கலிங்கராஜன் வந்துவிட்டார் என்பதை உணர்ந்து ஓடிப்போய் கதவைத் திறந்த குமாரி அங்கே கலிங்கராஜனோடு நின்று கொண்டிருந்த கிளாராவைப் பார்த்ததும் கண்ணீரோடு ஓடிப்போய் அணைத்துக்கொண்டார்.
“எப்பிடி இருக்க கிளாராம்மா? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிஞ்சிட்டியே”
கிளாராவால் பதில் சொல்ல முடியவில்லை. அவரது வாடிய வதங்கிய தோற்றம் குமாரிக்கு வருத்தத்தைக் கொடுத்தது.
“வா உள்ள வா… நீங்களும் வாங்க சார்”
கலிங்கராஜனும் கிளாராவும் உள்ளே வர ஜென்னியும் நித்திலனும் ஓடி வந்து அவளை முழங்காலோடு அணைத்துக்கொண்டார்கள்.
“எங்கம்மா போனிங்க? அக்கா மாதிரி நீங்களும் காணாம போயிடுவிங்களோனு நான் பயந்துட்டேன்” நித்திலராஜன் விசும்பினான்.
அவனைத் தூக்கி முகமெங்கும் முத்தமிட்டாள் கிளாரா.
“எங்கயும் போகலடா… உங்களை எல்லாம் புரிஞ்சிக்காம இத்தனை நாள் எவ்ளோ தப்பா பேசி திட்டிருப்பேன்? அதுக்கு பனிஷ்மெண்டா கடவுள் என்னைக் கொஞ்சநாள் ஹாஸ்டல்ல அடைச்சு வச்சிருந்தார்… இப்ப நான் திருந்திட்டேன்… அதான் கடவுள் என்னை உங்க கிட்ட அனுப்பி வச்சிட்டார்” என்றாள் மகனிடம்.
“அப்ப இனியாக்காவும் வந்துடுவாளா?” என்று நித்திலராஜன் ஆர்வமாகக் கேட்கவும் கிளாராவிடம் விம்மல்.
கொஞ்சம் கொஞ்சமாக விம்மல் அழுகையாக வெடித்தது.
அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்தவளிடமிருந்து கலிங்கராஜன் மகனை வாங்கிக்கொண்டார்.
குமாரியிடம் அவனையும் ஜென்னியையும் அவர்கள் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். மிச்செல் மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
கலிங்கராஜன் கிளாராவின் தலையில் ஆதுரமாக கோதிக்கொடுத்தார்.
“அழாத கிளாரா”
“அவனுக்கு எப்பிடி சொல்லி புரியவைப்பேன் அவனோட அக்காவ கடவுள் அவர் கூடவே வச்சுக்கிட்டார்னு”
சிறை நாட்கள் கிளாராவுக்கு நிறைய விசயங்களைப் புரியவைத்திருந்தன. அதில் ஒன்று இனியாவின் மரணத்துக்குத் தானும் பொறுப்பாளி என்பது. ஆம்! அவள் நினைத்திருந்தால் அழுது, அரற்றி, சண்டை போட்டாவது கலிங்கராஜனையும் இனியாவையும் ஒன்று சேர்த்திருக்க முடியும். தந்தையும் மகளும் பாசமாக இருந்திருந்தால் அவளது கவனம் வேறு எங்கும் போயிருக்காது. அவளும் அநியாயமாக இறந்திருக்க மாட்டாளே என்ற ஆதங்கம் கிளாராவுக்கு.
அதை அழுகையாகக் கொட்டித் தீர்த்தாள். மிச்செல் அவளிடம் பேசவில்லை. ஆனால் அவளது கண்களும் கலங்கின. அன்னை அழுகிறாளே என்ற வருத்தத்தில் இல்லை. தமக்கையின் மீதான பாசத்தில்!
“நான் நினைச்சிருந்தா என் மகளோட சாவை தடுத்திருக்க முடியும்… என் கிட்ட கிடைக்காத பாசத்தை தான அவ நிஷாந்த் கிட்ட தேடுனா… நான் ஒழுங்கான தகப்பனா இருந்திருந்தா என் பொண்ணு உயிரோட இருந்திருப்பா” என்று கலிங்கராஜனும் தன் பங்குக்கு உடைந்த குரலில் பேச மிச்செலுக்கும் அழுகை வந்துவிட்டது.
அவள் விசும்ப ஆரம்பிக்கவும், பெற்றோர் இருவரும் தங்களது அழுகையை நிறுத்திவிட்டு மிச்செல்லைக் கவனித்தார்கள்.
இனியா விசயத்தில் நேர்ந்த தவறு இனி எந்தக் குழந்தைகள் விசயத்திலும் நடந்துவிடக்கூடாதென்ற தீர்மானத்தோடு கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்கள் கலிங்கராஜனும் கிளாராவும்.
“அழக்கூடாது மிச்செல்… அப்பா இருக்கேன்ல” என்று மகளின் தோளில் தட்டிக்கொடுத்தார் அவர்.
கிளாரா அவளுக்கு ஆறுதல் சொல்லவில்லை என்றாலும் மகளின் கரத்தைப் பற்றி ஆதுரமாக வருடிக்கொடுத்தாள்.
அவளையாவது சமுதாயத்திலுள்ள தீக்கண்களை எதிர்க்கும் துணிவோடு வளர்க்க வேண்டுமென இருவரும் எண்ணிக்கொண்டார்கள்.
கலிங்கராஜன் மிச்செல்லிடம் “நீ போய் உன் தம்பி தங்கச்சி கூட பேசு… இனிமே நீ தான் இந்தவீட்டோட மூத்த மக… உன்னையும் உன் தம்பி தங்கச்சிங்களையும் இனியா எவ்ளோ பாசமா பொறுப்பா பாத்துக்கிட்டாளோ அதே மாதிரி நீ இனிமே அவங்களைப் பாத்துக்கணும்… இனியாவ நினைச்சு இனிமே யாரும் இந்த வீட்டுல அழக்கூடாது… அவ எங்கயும் போகல… நம்ம கூட தான் இருக்கா… போடாம்மா” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அவள் போனதும் “நீ ரூமுக்கு வா கிளாரா.. உன் கிட்ட முக்கியமான விசயம் பேசணும் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அறைக்குள் போய்விட்டார்.
கிளாராவுக்கோ கலிங்கராஜனிடம் தனியே பேச தயக்கம். சிறைச்சாலையிலிருந்து பொன்மலைக்கு வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
இதுநாள் வரை தனது அறை என்று உரிமையுடன் புழங்கிய அறைக்குள் செல்லவே கிளாராவுக்குத் தர்மசங்கடமாக இருந்தது.
“கிளாரா” கலிங்கராஜனின் குரல் உரக்க ஒலித்ததும் வேகமாக அங்கே சென்றாள்.
“சொல்லுங்க”
தலையைக் குனிந்தபடி நின்றவளை உணர்வற்ற விழிகளால் பார்த்தவர் “நடந்த எதையும் அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது கிளாரா… ஆனா அதையே நினைச்சிட்டிருந்தா பாதிக்கப்படப்போறது என்னவோ நம்ம பசங்க தான்… அவங்களுக்காக நம்மளோட விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நல்ல அப்பா அம்மாவா நாம வாழணும்” என்றது தான் தாமதம் கிளாரா ஓடிச்சென்று அவரது காலில் விழுந்து கதறத் துவங்கினாள்.
“என்னை மன்னிச்சிடுங்க ராஜ்… உங்களுக்கு நான் செய்ய நினைச்சது கேவலமான துரோகம்,… நம்ம உறவை நம்ம காதலை கொச்சைப்படுத்துனவ நான்… ஒருத்தரோட வெளித்தோற்றத்தைப் பாத்தும், சக்கரையான பேச்சைப் பாத்தும் மயங்கக்கூடாதுனு எனக்குப் புரிய வைக்க கடவுள் எனக்கு இவ்ளோ பெரிய சோதனைய குடுத்தார்னு நினைச்சுக்குறேன்… என்னை மன்னிச்சு உங்க மனைவியா ஏத்துக்கோங்கனு கேக்குற அருகதைய நான் இழந்துட்டேன் ராஜ்… உங்க மனசுல என் மேல வெறுப்பு இருந்தா அதை தூக்கி எறிஞ்சிடுங்க… எனக்காக நீங்க அதை மட்டும் செய்ங்க… ப்ளீஸ்”
மண்டியிட்டபடி கரங்கூப்பி மன்னிப்பு வேண்டினாள் அவள்.
ஏகலைவன் கிளாராவை எழுப்பிவிட்டார்.
“குடும்பத்துக்கு நேரம் செலவளிக்காம பிசினஸ் பிசினஸ்னு ஓடி எல்லா தப்புக்கும் பிள்ளையார்ச்சுழி போட்டவன் நான்… நியாயப்படி நான் தான் பெரிய பாவி… என்னால நல்ல தகப்பானவும் இருக்க முடியல… நல்ல புருசனாவும் நடந்துக்க முடியல… நானும் மன்னிப்பு கேக்கணும் கிளாரா… உன் கிட்ட மட்டுமில்ல… என் பொண்ணு இனியா கிட்டவும்… பிறந்ததுல இருந்து அவளுக்கு எதையும் செய்யாத இந்த பாவிய மன்னிச்சுடும்மானு கதறியழணும்… ஆனா நான் எங்க போய் அவளைத் தேடுவேன்? அவங்கம்மா மாதிரி அவளும் காத்தோட காத்தா போயிட்டாளே?”
கிளாராவுக்கும் கலிங்கராஜனுக்கும் மீண்டும் இனியாவின் மரணத்தின் போது உண்டான வேதனை கிளர்ந்தெழ காரணம் ஏகலைவன் என்ற கொலைகாரனை வெகு அருகில் வைத்துக்கொண்டு பெண்ணைக் கொன்றவனோடு உறவாடியிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி!
இருவரும் அழுது ஓய்ந்த பிறகு கலிங்கராஜன் இனியாவிற்கு செய்யவேண்டிய இறுதி காரியங்களை முறைப்படி செய்து முடிக்க விரும்புவதாக கிளாராவிடம் கூறினார்.
“செய்ங்க ராஜ்… அதை செஞ்சா அவ ஆத்மா சாந்தியடையும்னு நீங்க நம்புறிங்கனா தாராளமா செய்யுங்க” என்றாள் அவள்.
“அவளுக்கு நியாயம் கிடைக்க போராடி உயிரை விட்ட முருகையாக்கும் ஒரு மகன் ஸ்தானத்துல இருந்து இறுதி காரியத்தைச் செய்யப்போறேன் கிளாரா… என் மகளோட சாவுக்குக் காரணமானவனை பிடிக்க உதவுன இதன்யா மேடம், முரளி சார், மார்த்தாண்டன் சார், மகேந்திரன் சார் நாலு பேரையும் அழைக்கப்போறேன்… அவளுக்குப் பிடிச்ச எல்லாரையும் வரவழைச்சு இறுதி காரியத்தை முறையா பண்ணிடப்போறேன்”
“ராஜ்… அப்ப நிஷாந்தையும் கூப்பிடுங்க”
கிளாரா அழுத்தமாகச் சொல்லவும் கலிங்கராஜன் யோசித்தார்.
“யோசிக்காதிங்க… நம்ம பொண்ணு அவனை மனசார காதலிச்சிருக்கா… அவனும் அவளை விரும்பிருக்கான்… அவன் வரலனா அவ ஆத்மாக்குச் சாந்தி கிடைக்காது”
மகளுக்காக நிஷாந்தை அழைக்கச் சம்மதித்தார் கலிங்கராஜன்.
“நமக்கு இடையில நடந்த கசப்பான சம்பவத்தை எல்லாம் மறந்துட்டு நம்ம பசங்களுக்கு நல்ல பேரண்ட்சா இருக்க முயற்சி பண்ணுவோம்”
கலிங்கராஜன் கை நீட்ட கிளாரா தனது கரத்தை அவளது கைக்குள் புதைத்தாள்.
அதே நேரம் மாபெரும் வேலையை முடித்துவிட்டு திருநெல்வேலி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தார்கள் இதன்யா, முரளிதரன், மார்த்தாண்டன் மற்றும் மகேந்திரன் நால்வரும்.
“இனியா கொலை குற்றவாளி ஏகலைவன் தான் பிரகதியையும் கொன்னிருப்பார்னு நினைக்குறிங்களா?”
“அந்தக் கேஸ் விசாரணை சென்னையில போயிட்டிருக்கு… இதுவரை ஆதாரம் எதுவும் சிக்கலனு சைபர் கிரைம் ஆபிசர்ஸ் சொல்லிருக்காங்க… சோ போகப்போக ஆதாரங்கள் கிடைச்சா உண்மையான குற்றவாளி யாருனு தெரியவரும்,… அதுக்கு முன்னாடி நம்ம கணிப்போட பேசவேண்டாமே” என சாமர்த்தியமாகப் பதிலளித்தார் முரளிதரன்.
“இனியா கேஸ்லயும் ஆரம்பத்துல பெருசா ஆதாரம் எதுவும் கிடைக்கல… அப்புறம் ஒவ்வொரு ஆதாரமா கிடைச்சுதுல்ல… அதே மாதிரி பிரகதி கேஸ்லயும் கிடைக்கும்னு நினைக்குறிங்களா?”
“கிடைச்சா நல்லதுனு நினைக்குறோம்… பை த வே, அந்தக் கேஸ் எங்க கண்ட்ரோல்ல இருக்குற கேஸ் இல்ல… அதை பத்தி எங்க கிட்ட கேக்குறதுக்குப் பதிலா சம்பந்தப்பட்ட ஆபிசர் கிட்ட நீங்க கேக்கலாம்” இது இதன்யாவின் பதில்.
ஒருவழியாக பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தது.
பிறகு காவல்துறை ஆணையரை சந்தித்துவிட்டு வெளியே வந்தார்கள் சிறப்பு விசாரணை குழுவினர்.
வரும் வழியில் உதவி ஆணையர் கமலேஷை எதிர்கொண்டாள் இதன்யா.
“கங்கிராஜுலேசன்ஸ் மிசஸ் இதன்யா ப்ராணேஷ்… இந்த வாரமாச்சும் வீட்டுக்கு லஞ்சுக்கு வருவியானு என் மிசஸ் கேக்க சொன்னா… ப்ராணேஷும் வந்தார்னா ரொம்ப சந்தோசப்படுவோம்” என்றார் அவர்.
இதன்யா புன்னகையோடு “இந்த வீக்கெண்ட்ல எனக்குச் சென்னைக்கு ஃப்ளைட் கமல் சார்… ஒன்னு செய்யலாம்… ஃப்ரைடே ஆப்பிள் ட்ரீல ட்ரீட் வைங்க… மேடமை அழைச்சிட்டு வாங்க” என்றாள்.
“ஷ்யூர்… இப்பவே டேபிள் ரிசர்வ் பண்ணிடுறேன்.. அப்புறம் போலீஸ்காரம்மா சாக்குபோக்கு சொல்லக்கூடாது” என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் கமலேஷ்.
முரளிதரனும் ஞாயிறன்று தான் இதன்யாவுடன் சென்னைக்குக் கிளம்பவிருக்கிறார்.
இப்போது நால்வரும் பொன்மலைக்குத் திரும்பி மிச்சமிருக்கும் டாக்குமெண்ட்களில் கையெழுத்திட்டுவிட்டால் வேலை முடிந்தது.
பின்னர் பொன்மலைக்கும் தனக்குமான உறவு முடிந்துவிடுமென எண்ணியபடி காவல் வாகனத்திலேறினாள் இதன்யா.
செல்லும் வழியில் தான் மகேந்திரன் அந்தச் சந்தேகத்தைக் கேட்டார்.
“எல்லா குற்றத்தையும் ஒத்துக்கிட்ட ஏகலைவன் பிரகதிய கொலை பண்ணுனதையும், ரசூல் பாய் வீட்டுக்கு விஷம் கலந்த சாப்பாடு அனுப்புனதையும் ஒத்துக்கல… அப்பிடினா என்ன அர்த்தம் மேடம்?”
இதன்யா வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தவள் “ஒருவேளை இதெல்லாம் செஞ்சது வேற யாரோ ஒருத்தரா இருக்கலாம்” என்றாள்.
அவரிடம் இலகுவாகச் சொல்லிவிட்டாலும் பிரகதிக்கு நேர்ந்த முடிவு ஏகலைவனின் கைவரிசை என்பதில் அவளுக்கு எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ரசூல் பாய் வீட்டுச் சாப்பாட்டில் விஷம் வைக்கப்பட்டதை மட்டும் அவளால் ஏகலைவனின் கணக்கில் எழுத முடியவில்லை. யார் அந்த நபர் என சிந்தித்தபடி பொன்மலை நோக்கி பயணித்தாள் இதன்யா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

