ஜனவரி 7, 1998ல் ஃபேபியோ டோலிஸ் என்பவரும் அவரது பத்தொன்பது வயது காதலியான சியாரா மேரிணோவும் நள்ளிரவு பப் ஒன்றில் தி பீஸ்ட் ஆப் சாத்தான் இசைக்குழு மற்றும் கல்ட் குழுவினரைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். சிறிது நேரம் கழித்து அந்தக் குழுவின் தலைவனான ஆண்ட்ரியா வோல்பே என்பவன் இந்த ஜோடிகளை பப்பை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளான். அவனும் அவனது குழுவினரும் சேர்ந்து அந்த ஜோடிகளை நகரத்திற்கு வெளியேயுள்ள சோம்மா லம்பார்டோ என்ற இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். வடமேற்கு மிலனிலிருந்து அந்த இடம் கிட்டத்தட்ட முப்பது மைல் தொலைவு. அங்கு வந்ததும் அவர்கள் வட்டமாக குழுமி மதுபானம் அருந்தியதோடு போதைப்பொருட்களையும் உட்கொண்டிருக்கிறார்கள். பின்னர் வேல்பேவுடன் சேர்ந்து ஏனைய எழுவரும் சியாரா மேரினோவை சாத்தானுக்குப் பலியிடவேண்டுமென கூறியிருக்கிறார்கள். சியாரா ‘அன்னை மேரி’ போல தோற்றமளித்தது தான் வோல்பே எடுத்த அம்முடிவுக்குக் காரணமென பின்னாட்களில் விசாரணையின்போது அக்குழுவினர் தெரிவித்தார்களாம். வோல்பேவின் இம்முடிவை டோலிஸ் ஏற்கவில்லை. ஆனால் அந்தக் குழுவினரோ மேரினோவின் இதயத்திலேயே கத்தியால் குத்தி அவளைக் கொலை செய்துள்ளார்கள். தடுக்க முயன்ற ஃபேபியோவை சுத்தியலால் அடித்து கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள். காதல் ஜோடிகள் இறந்ததும் சாத்தான் குழுவின் உறுப்பினர்களிள் ஒருவனான நிக்கோலா ஒனூசன் சபோனே என்பவன் அவர்களின் தொண்டைக்குள் செஸ்ட்நட் இலைகளைத் திணித்திருக்கிறான். பின்னர் சிகரெட் ஒன்றை அவர்களின் உதிரத்தில் தோய்த்து புகைத்தவன் இறந்த சடலங்களை குழிக்குள் தள்ளி மூடியிருக்கிறான். இந்த ஜாம்பிகள் இனி எப்படி வெளிவருகிறார்கள் என்று பார்ப்போமென அவன் பிதற்றியதாகவும் விசாரணையின்போது அவனது குழுவினர் கூறியுள்ளார்கள்.
-From Internet
முரளிதரனோடு வந்த மகேந்திரனின் குழுவினர் ஏகலைவனின் சக்கவர்த்தி தேயிலை தோட்டத்தைச் சல்லடை போட்டுச் சலித்தவர்களாக தேட ஆரம்பித்தார்கள்.
வாயில்காப்போனிடம் “ஏகலைவன் இங்க வந்தாரா?” என்று விசாரிக்க அவர் இல்லை என்றார்.
அவ்வளவு எளிதில் அந்த தேயிலைத்தோட்டத்தை சுற்றி வந்துவிடமுடியாது. பல ஏக்கரில் விரிந்து கிடந்த தோட்டத்தின் எந்த மூலையில் அவன் மறைந்திருக்கிறானோ!
ஓடியோடி தேடியவர்களுக்கு ஏகலைவனோ இதன்யாவோ சிக்கவில்லை. முரளிதரன் சலித்த நேரத்தில் மீண்டும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சார்” என்று பதறிய கான்ஸ்டபிள் ஒருவர் முரளிதரனிடம் ஓடோடி வந்தார்.
“இந்த எஸ்டேட்டோட கீழ்ச்சரிவுல சமதளமா காட்டுக்கு ஒரு பாதை போகுதுல்ல அங்க தான் சார் கன் ஷாட் சவுண்ட் கேக்குது,.. அங்க போனா மேடமைக் கண்டுபிடிச்சிடலாம்” என்றார் அவர்.
முரளிதரனும் மகேந்திரனும் அடித்துப் பிடித்துக்கொண்டு வெளியேறி தேயிலை தோட்ட அலுவலகத்தைச் சுற்றி அந்தப் பாதையைப் பிடிக்க முயன்றார்கள்.
அவர்கள் அங்கே வந்த தருணத்தில் மார்த்தாண்டனின் குழுவினரும் வந்துவிட “ஏகலைவனை எங்கயும் பாத்திங்களா?” என்று கேட்டார் முரளிதரன்.
“இதுவரைக்கும் இல்ல சார்… மூனாவது தடவை கன்ஷாட் சவுண்ட் கேட்டுச்சு… அது அந்தப் பக்கமா தான் வந்துச்சுனு இவர் சொல்லுறார்” என்று மார்த்தாண்டன் புதரும் செடியுமாக வளர்ந்திருந்த இடத்தைக் கை காட்டினார்.
அந்த இடம் முன்பொரு நாள் காக்கை ஒன்று தடியில் குத்திவைக்கப்பட்ட இடம். அது முரளிதரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இதன்யாவோடு அந்தச் சமயத்தில் வழக்கு பற்றி விவரம் திரட்டிய மார்த்தாண்டனுக்கும் மகேந்திரனுக்கும் அந்த இடத்தைப் பற்றி ஏற்கெனவே தெரியுமே!
அங்கே தான் ஏதோ இரகசியம் இருக்கிறதென தங்கள் குழுவினரோடு முரளிதரனையும் அழைத்துக்கொண்டு விரைந்தார்கள்.
அந்த இடத்தில் நிலவொளியைத் தவிர வேறேந்த வெளிச்சத்தின் மூலமும் இல்லை. கான்ஸ்டபிள்கள் கையோடு கொண்டு வந்திருந்த டார்ச்சின் உதவியால் அங்கே சோதனையிட புதர் போல காட்சியளித்த ஒரு இடத்தில் பாறையொன்று விலகியிருப்பது தெரிந்தது.
கூடவே இருந்து சில ஆண்களின் குரலும் திக்கித் திணறி ஒரு பெண்குரலும் கேட்க முரளிதரன் உஷாரானார்.
விலகியிருந்த பாறையை நோக்கி கைகாட்டியவர் குழுவினரிடம் அமைதி காக்கும்படி சொல்லிவிட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டார். பூட்சை கழற்றிவிட்டு செடிகளை மிதித்தபடி கவனமாக உள்ளே போனவர் கண்ட காட்சியில் திகைத்துப் போனார்.
அங்கே போராடி களைத்த தோற்றத்தோடு இதன்யா துப்பாக்கியை ஏந்தியிருக்க ஏகலைவன் தரையில் சரிந்து கிடந்தான். அவனது இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டின் காயங்களிலிருந்து உதிரம் வழிந்து கொண்டிருந்தது.
அவளருகே ராக்கி அரண்டு போன தோற்றத்தில் நின்று கொண்டிருக்க அவனுக்கு அடுத்து முகமெங்கும் கோபத்தோடு நின்றான் நிஷாந்த்.
“மேடம்” முரளிதரன் அழைத்ததும் இதன்யா பரபரப்போடு திரும்பிப் பார்த்தாள்.
“முர..ளி சா..ர்” திக்கித் திணறிப் பேசியவள் தொண்டையைப் பிடித்துக்கொண்டாள்.
“ஆர் யூ ஓ.கே?” என்றவர் “எல்லாரும் உள்ள வாங்க” என்று தன்னோடு வந்தவர்களை அழைக்க மார்த்தாண்டனும் மகேந்திரனும் குழுவினரோடு உள்ளே தடதடவென ஓடி வந்தார்கள்.
இதன்யாவின் தோற்றத்தைப் பார்த்து பதறியவர்கள் அவளுக்குத் தொண்டை நெறிப்பட்டதைக் கேள்விப்பட்டதும் நிஷாந்தும் ராக்கியும் இங்கே எப்படி வந்தார்கள் என்று அவர்களைக் கேள்விகளால் துளைத்தெடுக்க மற்றவர்களோ ஏகலைவனை அங்கே இருந்து தூக்கிச் சென்றார்கள்.
அவனை மருத்துவமனையில் சேர்த்தால் காப்பாற்றிவிடலாமென்ற நம்பிக்கை முரளிதரனுக்கு!
இதன்யா ராக்கியையும் நிஷாந்தையும் விசாரிக்க வேண்டாம் என மூவரிடமும் கேட்டுக்கொண்டாள். ஏகலைவன் பாறைத்துண்டால் தாக்கிய காயமும், தொண்டையும் வலியெடுக்க அவளும் சோர்ந்து போனாள்.
முதலில் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள் அனைவரும்.
பொன்மலைக்கு வந்ததும் காவல் நிலையத்தில் இதன்யாவுக்காக காத்திருந்த ப்ராணேஷ் ஓடி வந்து அவளைத் தாங்கிக்கொண்டான். கூடவே கலிங்கராஜனும் பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தார்.
“உனக்கு என்னாச்சு?” எனப் பதறியவனிடம் இதன்யாவை ஏகலைவன் தாக்கிய விவகாரத்தைக் கூறினான் ராக்கி. அதைக் கேட்டதும் கலிங்கராஜன் கலங்கிப்போனார்.
“சாரி மேடம்” என இரு கரம் கூப்பி மன்னிப்பு வேண்டினார் அவர்.
“மன்னிப்பு எல்லாம் அப்புறமா கேட்டுக்கலாம்.. இப்ப மேடமை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டுப் போகணும் ப்ராணேஷ் சார்” என்றார் மார்த்தாண்டன்.
அடுத்த சில நிமிடங்களில் பொன்மலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏகலைவன் அனுமதிக்கப்பட்டான். அவனால் தாக்குதலுக்கு ஆளான இதன்யாவும் அங்கே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாள்.
மருத்துவர் வரும் முன்னர் எழுத்து மூலமாக ராக்கியையும் நிஷாந்தையும் விசாரிக்கவேண்டாம்; தன்னைக் காப்பாற்றவே அவர்கள் அங்கே வந்தார்கள் என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டுத் தான் சிகிச்சைக்குச் சென்றாள் அவள்.
செல்லும் முன்னர் நிஷாந்தை அவள் பார்த்த பார்வையின் அர்த்தத்தை அவனும் ராக்கியும் மட்டுமே அறிவார்கள். நிஷாந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் ராக்கி.
“மேடம் சரியாகி வந்ததுக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்டா”
போராடி ஒரு சைக்கோபாத் கொலைகாரனைப் பிடித்த பிற்பாடு நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் சிறப்பு விசாரணை குழுவினர்.
முரளிதரனுக்குப் பிடிபடாத விசயம் ஏகலைவனின் தேயிலைத் தோட்டத்தின் அருகிலேயே ஒரு இரகசிய குகை இருந்திருக்கிறது, அங்கேயும் சாத்தான் சிலை இருக்கிறது. அப்படி என்றால் அங்கும் சாத்தான் வழிபாடு நடந்தேறியதா என்பதே!
அவர் மார்த்தாண்டனிடமும் மகேந்திரனிடமும் இது குறித்து பேசிக்கொண்டிருக்கையில் ராக்கி அவர்களிடம் வந்தான்.
“என்னடா?” என மார்த்தாண்டன் அதட்ட
“சார்… அந்தக் குகைய பத்தி பேசுனிங்க… அதான்… “ என்று தயங்கி தயங்கி பேசினான் அவன்.
முரளிதரன் அவனை நிதானமாக உற்று நோக்கினார். இவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என ஊகித்தவர் “வாங்க வெளியே போய் பேசலாம்” என மார்த்தாண்டன் மகேந்திரனோடு ராக்கியையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.
எப்போதும் இந்நேரத்தில் அமைதியாக இருக்கும் மருத்துவமனை அன்று காவல்துறை ஆட்களால் பரபரப்புக்குத் தாவியிருந்தது.
வெளியே இரவு நேர நிலவின் ஒளியும் மலைபிரதேச குளிரும் அந்த பரபரப்பான சூழலின் தீவிரத்தைக் குறைத்து மென்மையைப் புகுத்த முயன்று கொண்டிருந்தன.
“அந்த குகைய பத்தி ஏதோ சொன்னியேப்பா” என்று முரளிதரன் எடுத்துக்கொடுத்ததும் ராக்கி சொல்ல ஆரம்பித்தான்.
“அந்தக் குகையும் காட்டு குகை மாதிரி பழமையானது சார்… ஒரு காலத்துல அந்த எஸ்டேட்டும் காடா இருந்துச்சாம்… அப்புறம் ப்ரிட்டிஷ் பீரியட்ல தான் கொஞ்ச இடத்தை எஸ்டேட்டை மாத்துனதா ஃபாதர் சொல்லுவார்… அந்த குகைய டெமாலிஷ் பண்ணாம அப்பிடியே விட்டுட்டாங்கனு ஒரு தடவை அண்ணா கிட்ட ஏகலைவன் சார் சொன்னாங்க… இப்ப சில வருடங்களா அதை ஏகலைவன் சார் யூஸ் பண்ணிட்டிருக்காங்க”
“எதுக்காக யூஸ் பண்ணுனார்?” – முரளிதரன்.
“சாருக்கும் சாத்தான் வழிபாட்டுல நம்பிக்கை உண்டு சார்… ஆனா அந்த குரூப்ல இருக்குற ஆளுங்க கூட சேர்ந்து கூட்டங்கள்ல கலந்துக்குறது அவரோட தகுதிக்குக் குறைவான காரியம்னு நினைச்சார்… அதனால அவர் மட்டும் வழிபடுறதுக்காகவே ஒரு சாத்தான் சிலைய அந்தக் குகைல நிர்மாணிச்சார்… நான் அங்க போனதே இல்ல… இதெல்லாம் அண்ணா சொல்லி கேட்டிருக்கேன்… அவரைத் தவிர அந்தக் குகைக்குப் போறவங்க அண்ணாவும் பத்ராவும் தான்… அந்த மாதிரி சமயத்துல சில நேரம் பத்ரா ஊருக்குள்ள போய் ஆடு, மாடை அடிச்சுச் சாப்பிட்டுட்டு வந்துடும்… ஊர் மக்களுக்குக் காட்டைப் பத்தி பயத்தை உண்டாக்குனதுல பத்ராவோட பங்கு அதிகம்… சொல்லப்போனா அதுக்காகவே அண்ணா பத்ராவ வளத்தான்னு சொல்லலாம்”
இப்போது மார்த்தாண்டன் இடையில் புகுந்தார்.
“இதெல்லாம் போன தடவை விசாரணைல ஏன்டா சொல்லல?” என அதட்டலாகக் கேட்டார் அவர்.
“ஏகலைவன் சார் மேல உள்ள பயத்துல தான் சொல்லல சார்… எனக்கு அவர் தான் இனியாவைக் கொன்னார்னு சத்தியமா தெரியாது… ஃபாதர் என் கிட்ட எதையோ மறைக்குறார்னு மட்டும் தெரியும்… ஆனா அவர் என்ன செஞ்சாலும் என்னோட நல்லதுக்காக தான் இருக்கும்னு நான் அவர் கிட்ட கேள்வி கேட்டது கிடையாது… ஃபாதர் என்ன சொன்னாலும் நான் கேப்பேன்… அப்பிடி தான் ஒரு நாள் ஏகலைவன் சார் வீட்டுல இருந்து ஒரு பிக் ஷாப்பரை வாங்கிட்டு வரச் சொன்னார்… யாரும் பாத்து என்னனு விசாரிச்சாங்கனா சண்டே க்ளாஸ் குழந்தைங்களுக்கு வாங்குன டிரஸ்னு சொல்லச் சொன்னார் ஃபாதர்… நானும் ஏகலைவன் சார் வீட்டுல இருந்து அந்த பிக் ஷாப்பை வாங்கிட்டு சர்ச்சுக்கு வந்தேன்… அந்த நேரத்துல இதன்யா மேடம் சர்ச்ல இருக்குறதை பாத்ததும் எனக்கு பயம் வந்துடுச்சு… ஏன்னு தெரியல, அவங்களைப் பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கும்… என்னை மறுபடி ஜெயில்ல தூக்கி போட்டுருவாங்களோனு பயம் வரும்.. அவங்க கிட்ட இருந்து ஓடி ஃபாதர் கிட்ட பிக் ஷாப்பரை குடுத்த அப்புறம் தான் எனக்கு நிம்மதி ஆச்சு”
மூவரும் இதைக் கேட்ட பிற்பாடு “ஆ ஊனா ஏகலைவன் மேல பயம்னு எல்லாரும் சொல்லுறிங்க, இதெல்லாம் எங்க கிட்ட இருந்து தப்பிக்கனு இத்தனை நாளா நான் நினைச்சதுண்டு… ஆனா இன்னைக்கு இதன்யா மேடம் இருக்குற நிலமைய பாத்த பிறகு தான் அவன் எதுக்கும் துணிஞ்சவன்னு புரியுது… நீங்க எல்லாரும் அவனுக்குப் பயந்து அவன் சொன்னதைச் செஞ்சதுல ஆச்சரியமே இல்ல… எல்லாருக்குமே அவங்கவங்க உயிரும், அவங்க அன்பு செலுத்துறவங்க உயிரும் முக்கியம் தானே! அவனை மாதிரி கொடூரமான சைக்கோ கிட்ட நான் சிக்கியிருந்தேன்னா என் குடும்பத்தைக் காப்பாத்த நானும் இதே போல தான் நடந்திருப்பேன்” என்றார் மகேந்திரன் மெய்யான வருத்தத்தோடு.
இருப்பினும் மார்த்தாண்டன் ராக்கியை விசாரிப்பதை நிறுத்தவில்லை.
“மேடம் ஏகலைவன் கூட போனது வரைக்கும் ஓ.கே… நீயும் நிஷாந்தும் அந்தக் குகைக்குள்ள எப்பிடி வந்திங்க? உங்களுக்கு மேடம் அங்க இருக்குறது எப்பிடி தெரியும்?” என்று அடுத்தடுத்து கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தார்.
ராக்கி தயக்கத்தோடு முரளிதரனையும் மகேந்திரனையும் ஏறிட்டான்.
அந்தப் பார்வைக்கான அர்த்தம் இவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்களேன் என்பதே!
இதன்யாவும் இப்போதைக்கு அவர்களை விசாரிக்க வேண்டாமென சொல்லிவிட்டாளே!
“விடுங்க மார்த்தாண்டன்… மேடம் ரெகவர் ஆனதும் கலிங்கராஜனோட சேர்த்து ரெண்டு பசங்களையும் விசாரிக்கலாம்… ராக்கி! நீ இப்ப வீட்டுக்குப் போகலாம்” என்றார் முரளிதரன்.
“ரொம்ப நன்றி சார்” என கை கூப்பியவன் “ஃபாதரை ஜெயில்ல போட்டுருவிங்களா சார்?” என்று கேட்ட விதம் அங்கிருந்த மூவருக்குமே மனதைப் பிசைந்தது.
மார்த்தாண்டன் அவனது தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு “அவர் செஞ்சது தப்பு… முக்கியமான ஆதாரங்களை மறைச்சது உன்னோட பாதுகாப்புக்காகனு அவர் சொன்னாலும் சட்டத்துக்கு இந்த அன்பு பாசமெல்லாம் கிடையாதே ராக்கி.. அதுக்குத் தெரிஞ்சது எல்லாம் சரி தப்பு மட்டும் தான்… ஃபாதர் செஞ்சது தப்பு… அதுக்கான தண்டனை அவருக்கு நிச்சயம் உண்டு… நீ இனிமே தனியா வாழ பழகிக்கணும் ராக்கி” என்றார் அவர்.
ராக்கி கண் கலங்கினான். பின்னர் புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “நான் வர்றேன் சார்” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டான்.
அவன் போனதும் சூழ்நிலை இறுக்கமானதைப் போல மூவரும் உணர்ந்தனர்.
“இந்தப் பையனுக்குனு இனிமே யார் இருக்காங்க? பாவம்” என உச்சுக் கொட்டினார் மகேந்திரன்.
“ஃபாதர் அவனுக்கு திருநெல்வேலில வேலை வாங்கி குடுத்திருக்கிறதா கேள்விப்பட்டேன்… அவன் அதை வச்சு பொழைச்சுப்பான்… இந்த மாதிரி பசங்க எல்லாம் காட்டுச்செடிங்க மாதிரி… வெயில் மழை காத்து மாதிரி வாழ்க்கைல வர்ற இன்பதுன்பம், கஷ்ட நஷ்டத்தை அவங்க தனியாளா சமாளிச்சிடுவாங்க.. இந்த சொசைட்டில இவங்க இப்பிடி தான் சர்வைவ் ஆகி வாழணும்” என்றார் முரளிதரன் பெருமூச்சுடன்.
பின்னர் அவர்களுக்கு ஓய்வொழிச்சலாக நின்று பேச நேரமேது?
தமிழ்நாட்டையும் சமூக வலைதளங்களையும் உலுக்கிய இனியாவின் கொலை வழக்கின் பிரதான கொலையாளி பிடிபட்ட தகவல் ஊடகங்களுக்குத் தெரியாமல் போகுமா?
காலையில் சூரியன் உதயமாகும் முன்னர் பொன்மலை அரசு மருத்துவமனை முன்பும், காவல் நிலையம் முன்பும் குவிந்துவிட்டார்கள்.
அவர்களைக் கட்டுப்படுத்துவதே காவல்துறையினருக்குப் பெரிய சவாலாகிப் போனாது.
முரளிதரன் அவரால் முடிந்தவரை அவர்களிடம் நிலமையின் தீவிரத்தை விளக்க முயன்றார்.
“குற்றவாளியை பிடிக்க நடந்த முயற்சில எங்க ஆபிசர் ஒருத்தவங்களுக்குக் காயம்… நிலமை இயல்புக்குத் திரும்புனதும் உங்களுக்கு விலாவரியா எங்க தரப்புல இருந்து ரிப்போர்ட் அனுப்புறோம்”
அவரது விளக்கத்தைக் கேட்குமளவுக்கோ அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் வரை காத்திருக்கும் அளவுக்கோ அங்கே இருக்கும் ஊடகவியலாளர்கள் யாருக்கும் பொறுமை இல்லை.
யார் முதலில் ‘சென்சேஷனல் நியூசை’ வெளியிடுவது என்ற போட்டி அவர்களுக்குள். இப்படிப்பட்ட சூழலில் செய்தியின் உண்மைத்தன்மையைப் பற்றி எல்லாம் அவர்களுக்கு என்ன கவலை?
“தமிழகத்தை உலுக்கிய இளம்பெண் இனியாவின் கொலைவழக்கில் அடுத்த திடுக்கிடும் திருப்பம். கொலையாளியைக் கைது செய்ய போன விசாரணை குழுவிலிருந்த பெண் காவல்துறை அதிகாரியை கொடூரமாகத் தாக்கிய சைக்கோ. திக் திக் திக் தருணங்கள் நிறைந்த பொன்மலை – ஒரு சிறப்பு தொகுப்பு”
அடுத்த சில மணி நேரங்களில் ஒவ்வொரு செய்தி தொலைகாட்சிகளும் இதே செய்தி வெவ்வெறு விதமான ஏற்ற இறக்கங்களோடு பின்னணி இசையோடு ஒரு திகில் படத்திற்குரிய காட்சியமைப்போடு ஒளிபரப்பப்பட்டது. இந்தச் செய்தியைப் பார்த்த வாசுதேவனுக்கும் மயூரிக்கும் உயிரே போய்விட்டது. கதி கலங்கிப் போய் இதன்யாவைப் பார்க்க பொன்மலைக்குச் சென்றிருக்கும் மருமகனின் எண்ணுக்கு அழைத்தார்கள் அவர்கள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

