“நீங்கள் அனைவராலும் விரும்பப்படவேண்டுமென நினைத்தால், எந்நேரத்திலும் எதையும் சமரசம் (compromise) செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்கள், அப்போது உங்களால் எதையும் சாதிக்க முடியாது”
-மார்கரேட் தாட்சர்
ராமமூர்த்தி தனக்காக கூட்டிய மதுரை மாநாடு அவருக்குப் பதிலாக அருள்மொழிக்கே கட்சித்தொண்டர்களிடையே நற்பெயரையும் செல்வாக்கையும் உருவாக்கிக் கொடுத்தது. அந்த மாநாட்டில் எவ்வித அலட்டலுமின்றி தொண்டர்கள் மத்தியில் அவனாற்றிய உரைக்குப் பிறகு அவன் எள் என்றால் எண்ணெய்யாக நிற்குமளவுக்கு கட்சியின் இளைஞரணியினர் தயாராக இருந்தனர்.
கூடவே புதிய கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியப் பொறுப்பை அவன் கொடுத்த விதம் அதிகாரத்தைத் தங்கள் குடும்பத்தின் வசம் வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை என்ற கருத்தை கட்சி பிரமுகர்கள் மனதில் ஆழமாக பதியவைத்துவிட அரசியல் ஆர்வலர்களின் கவனம் அருள்மொழியின் பக்கம் திரும்பியது.
அதே நேரம் திரும்பியது எதிர்கட்சியின் கவனமும் தான்! வீரபாண்டியன் ஏற்கெனவே அருள்மொழிக்கெதிராக திட்டம் தீட்டிவிட்டு அதை செயல்படுத்துவதற்கான நேரத்திற்காக காத்திருந்தார். அவருக்கு அருள்மொழியின் மாநாட்டு உரையும் அவனது செயல்பாடுகளும் எரிச்சலை உண்டாக்கியது.
அந்த மாநாடு தங்களை போலவே ராமமூர்த்திக்கும் பெரும் அதிருப்தி என்பதை உளவுத்துறையினர் வாயிலாக கண்டறிந்தவர் தன்னைப் போலவே அவரும் அருள்மொழிக்கு எதிராக பெரும் சதியொன்றை அரங்கேற்ற காத்திருப்பதை அரசல் புரசலாக கேட்டறிந்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்ன தலைவரே நம்ம வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சிடும் போலயே? ஆனா அருள்மொழி புத்திசாலி… அந்தாளோட திட்டத்தை மோப்பம் பிடிச்சிடுவான்… அப்புறம் என்ன, இது வரைக்கும் பட்டும் படாமலும் சண்டை போட்டுக்கிற ரெண்டு பேரும் வெளிப்படையா சண்டை போட்டுப்பாங்க” என்று உற்சாகமாக கூறிய செங்குட்டுவனிடம்
“நல்லது தானய்யா! சித்தப்பனும் மகனும் அடிச்சுக்கிட்டு சாகட்டும்! ராமமூர்த்தி திட்டம் ஜெயிச்சுதுனா நமக்கு வேலை மிச்சம்… அதுக்குள்ள அந்த அருள்மொழி கண்டுபிடிச்சிட்டான்னு வையேன், நம்மாளுங்களை வச்சு காரியத்த முடிச்சிடுவோம்… எது எப்பிடியோ வரப் போற எலக்சன்ல நமக்கு எதிரா போட்டி போட அவங்க கட்சில எந்தப் பெரிய தலையும் இருக்கக் கூடாது” என்றார் வீரபாண்டியன் குரூரத்துடன்.
தந்திரமும் குயுக்தியும் அந்த நிறைந்த இரண்டு அரசியல் மூளைகளும் தங்களது சதி திட்டத்தை அரங்கேற்றும் எண்ணத்துடன் கொக்கரித்துக் கொண்டன.
யாருக்கெதிராக இருமுனை சதித்திட்டங்கள் தயாராகிறதோ அந்த அருள்மொழியோ தேர்தலை குறிவைத்து இயங்க ஆரம்பித்திருந்தான். முன்னரே சொன்னது போல அவனது செயல்பாடுகள் அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை மட்டுமன்றி ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது.
விளைவு தினசரி செய்திகளில் அவனைப் பற்றிய ஏதாவது ஒரு செய்தி இடம்பெறுவது வாடிக்கை ஆகிவிட்டது. செய்தித்தாள்களில் ஆரம்பித்து சமூக ஊடகங்கள் வரை எங்கு நோக்கினும் அவனே!
ஐ.பி.சியின் டிஜிட்டல் மீடியா குழுவினரோ மக்கள் இத்தனை ஆண்டு ஆட்சியின் சோதனைகளிலிருந்து தங்களை காப்பாற்ற வந்த ரட்சகனாகவும் தங்கள் துயரங்களைப் போக்கும் கடைசி புகலிடமாகவும் அருள்மொழியைக் கருதும்படி தங்களது யுக்தியை பல்வேறு வீடியோக்கள், சமூக வலைதள பதிவுகள் வாயிலாக தொடர்ந்து மக்கள் மத்தியில் புகுத்தினர்.
இந்நிலையில் தான் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த எல்.ஜே.பியின் தலைமைக்குக் கூட்டணியை முறித்துக் கொண்டது மாபெரும் தவறென்பது புத்தியில் உறைத்தது.
தேசியக்கட்சிகளுக்கு வடக்கில் இருப்பதை போல தென் மாநிலங்களில் செல்வாக்கு இருப்பதில்லை. அதற்கு விதிவிலக்கு கேரளம் மட்டுமே! ஏனைய மாநிலங்களில் தேசியக்கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறலாமே தவிர அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதெல்லாம் வெறும் பகற்கனவு தான்!
ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க அவர்களுக்கு மாநிலக் கட்சிகளின் துணை தேவை! அதே கட்சிகளின் துணையால் தான் நாடாளுமன்ற தேர்தல்களிலும் கணிசமான மக்களவை தொகுதிகளை ஜெயிக்க முடியும்! இது போன்ற காரணங்களால் தான் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளின் துணையை கூட்டணி எனும் ரூபத்தில் நாடி வருகின்றன.
சுந்தரமூர்த்தியின் மறைவுக்கு முன்பு வரை கூட்டணி தர்மத்தை மீறாத எல்.ஜே.பியினர் அவரது மறைவால் தமிழக அரசியலும் த.மு.க கட்சியிலும் உண்டான வெற்றிடத்தை நிரப்ப அவரது கட்சியில் யாரும் வரும் முன்னர் தாங்கள் அந்த இடத்தை அடைய ஆசைப்பட்டு செய்த அரசியல் நோக்கற்ற செயல்களின் விளைவால் தான் அருள்மொழி கூட்டணியை முறித்துக் கொண்டான்.
அதன் பின்னரும் சம்பந்தமற்ற வழக்கில் அவனைச் சிறையில் அடைத்து ஜாமீனுக்கு காக்க வைத்தது போன்ற அசட்டுத்தனங்களை அமோகமாக அரங்கேற்றிவிட்டு, வெகு தாமதமாக செய்த அனர்த்தங்களை அலசி ஆராயத் துவங்கியிருந்தது அதன் தலைமை.
டெல்லியில் கூடிய அவர்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் அவர்களது கடந்தகால தவறுகளை திருத்திக் கொண்டால் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஜெயிக்க வாய்ப்புள்ளது என கட்சியின் மூத்த தலைவர்கள் அறிவுறுத்தினர்.
அதன் விளைவு எந்தெந்த தென்னிந்திய மாநிலங்களில் அதிகபிரசங்கித் தனத்தால் கூட்டணியை முறித்துக் கொண்டார்களோ அங்கெல்லாம் மீண்டும் கூட்டணி தூது விடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே எல்.ஜே.பியின் தமிழகத் தலைவர் யாழினியை அவளது அலுவலகத்தில் பூங்கொத்து சகிதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்து வெளியேறும் தருவாயில் மைக்குடன் வந்து நின்ற நிருபர்களிடம் அது அரசியல் ரீதியான மரியாதைக்குரிய சந்திப்பு என்று பூடகமாக உரைத்துவிட்டு தனது காரிலேறி கிளம்பிவிட்டார் அம்மனிதர்.
அடுத்து மைக் யாழினியிடம் நீட்டப்பட்டது.
“உங்க கட்சிக்கும் எல்.ஜே.பிக்கும் மறுபடியும் கூட்டணியா மேடம்?”
“கூட்டணி பத்தி தனியா முடிவெடுக்குற அதிகாரம் கட்சில எந்த ஒரு தனிநபருக்கும் கிடையாது… இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்”
“நாடாளுமன்ற தேர்தலை மனசுல வச்சு எல்.ஜே.பி காய் நகர்த்துறாங்கனு சொல்லுறாங்களே மேம்?”
“அதை பத்தி நீங்க மிஸ்டர் மனோகர் கிட்ட தான் கேக்கணும்” என எல்.ஜே.பியின் தமிழ்நாடு தலைவரிடம் கேட்குமாறு சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தாள் யாழினி.
உடனே கட்சித்தலைமையிடம் இச்சந்திப்பு குறித்து கூறியவள் அகத்தியனிடம் இம்முறை கூட்டணி வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என ஆலோசனை கேட்டாள்.
சற்று நேரம் யோசித்த அகத்தியன் “கூட்டணிய ஏத்துக்கிறதுல எந்தத் தப்பும் இல்ல யாழ்… பட் இந்தத் தடவை கட்சி தரப்புல கண்டிப்பான நிபந்தனைகளை போடுங்க… எந்தக் காரணத்த வச்சும் அவங்க உங்களை கண்ட்ரோல் பண்ணக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்க… அசம்பிளி எலக்சன்ல அவங்களுக்கு எத்தனை சீட் ஒதுக்கணும், லோக்சபா எலக்சன்ல எத்தனை சீட் ஒதுக்கணும்ங்கிற முடிவெல்லாம் நீங்க எடுக்குற மாதிரி அக்ரிமெண்ட் போடுங்க… லாஸ்ட் டைம் மாதிரி இல்லாம இந்தத் தடவை யூனியன் மினிஸ்ட்ரில உங்க கட்சி அமைச்சர்கள் அதிகமா இருக்கணும்னு கண்டிப்பா சொல்லுங்க… இந்த நிபந்தனைகளுக்கு அவங்க ஒத்துக்கிட்டா கூட்டணி பத்தி பேசுங்க… இதுக்கு மேல அவங்க கூட்டணிக்கு ஒத்துக்கிட்டாலும் அதுலயும் ஒரு ரிஸ்க் இருக்கு… நீங்க இந்தக் கூட்டணில சேர்ந்தா அதை வேற ஆங்கிள்ல ரூலிங் பார்ட்டி விமர்சிப்பாங்க… அருள் மேல இருக்குற சி.பி.ஐ கேஸுக்காக தான் இந்த கூட்டணிக்குச் சம்மதிச்சோம்னு கிண்டல் பண்ணுனா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல யாழ்… சோ யோசிச்சு முடிவு பண்ணுங்க” என்றான்.
யாழினியும் அவன் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டவள் மறுநாள் கட்சித்தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள். அருள்மொழி கோவையிலுள்ள கைத்தறி நெசவாளர்களைச் சந்திக்க செல்வதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அவன் ஒரு வாரகாலமாகவே வீட்டிற்கு வருவதில்லை.
இந்நேரம் இந்தக் கூட்டணி விவகாரம் அவன் காதுக்குப் போயிருக்கும் என்றாலும் இந்த விவகாரத்தில் அவனது நிலைப்பாடு என்னவென தெரிந்து கொண்டு கட்சிப்பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருந்தாள் யாழினி.
அவளது நல்ல நேரமோ என்னவோ அன்றைய தினம் வானதி நிதர்சனாவைச் சந்திக்க வந்திருந்தாள். வந்தவள் நிதர்சனாவின் குழுவினரிடம் பணி தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டதோடு கோயம்புத்தூர் செல்லும் அருள்மொழிக்குத் துணையாக கட்சியினருடன் தங்களது ஐ.பி.சியின் களப்பணி பொறுப்பாளரும் வருவார் என்பதை தெரிவிக்க அவனது அறையை அடைந்தாள்.
அங்கே அவளுக்கு முன்னரே வந்திருந்த யாழினி தீவிரக்குரலில் கூட்டணி குறித்து அருள்மொழியிடம் பேசிக்கொண்டிருக்க கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் வானதி.
“ஹலோ மேம்! லாங் டைம் நோ சீ! ஹவ் ஆர் யூ?”
குசலம் விசாரித்தபடி நாற்காலியில் அமர்ந்தவளிடம் புன்னகை முகமாய் பதிலளித்தாள் யாழினி.
“நாட் பேட் வானதி… ஹவ் ஆர் யூ?” என்றவளிடம் நலம் என பதிலளித்த வானதி தங்களது களப்பணி பொறுப்பாளரின் விவரத்தை அருள்மொழியிடம் தெரிவித்தாள்.
அவனோ “தேங்க்யூ” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு தமக்கையிடம் கவனம் செலுத்த வானதி அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.
ஆனால் யாழினி அவளை அமரச் சொன்னவள் எல்.ஜே.பியின் கூட்டணி தூது விவகாரத்தை அவளிடம் கூற அருள்மொழியோ இதையெல்லாம் ஏன் இவளிடம் கூறுகிறாய் என்று தமக்கையை முறைத்தான்.
யாழினி கூட்டணி பேச்சுவார்த்தையை விவரிக்கும் சுவாரசியத்தில் இளைய சகோதரனின் முறைப்பைக் கவனிக்கவில்லை. ஆனால் வானதி அதை தவறவிடவில்லையே!
அவனது முறைப்பை பொருட்படுத்தும் அளவுக்கு அவளுக்குப் பொறுமையில்லை. ஏனெனில் அவளது மூளை இந்தச் சம்பவத்தைத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேகமாக யோசிக்க ஆரம்பித்திருந்தது.
சடுதியில் யோசித்து முடித்தவளுக்குச் சரியான உபாயமும் தென்பட யாழினியும் அந்தக் கணத்தில் மிகச் சரியாக கூட்டணி பற்றிய வானதியின் கருத்து என்ன என கேட்டு வைத்தாள்.
அவளோ சற்றும் அலட்டிக்கொள்ளாடு “உங்க கூட கூட்டணிய முறிச்ச எல்.ஜே.பி மறுபடியும் கூட்டணிக்கு தூது விடுறாங்கனா அதுக்கு என்ன அர்த்தம்? இங்க இருக்குற நாப்பது லோக் சபா சீட் அவங்களுக்கு முக்கியம்னு அர்த்தம்… இத நீங்க உங்க கட்சியோட வளர்ச்சிக்கு சாதகமா பயன்படுத்திக்கணும்… இத வச்சு கட்சிக்குள்ள நடக்குற கோஷ்டி பூசலுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கணும்” என்று அகத்தியனின் கருத்தை வழிமொழிந்ததோடு தனது யோசனையையும் கூறினாள்.
யாழினிக்குக் கணவனது வார்த்தைகளையே வானதியும் கூறவும் தெளிவு பிறந்தது. அருள்மொழியை கேட்டாயா என்பது போல பார்க்க அவனோ அவளைத் தன்னருகே அழைத்து காதில் ஏதோ முணுமுணுத்தான்.
அதைக் கேட்டதும் “அவங்க கூட கூட்டணி வச்சிக்கிறதுக்கும் உள்கட்சி விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம் வானதி?” என்று இளைய சகோதரனின் கேள்வியை வானதியிடம் வினவினாள் யாழினி.
“இந்த எலெக்சன் முடிஞ்சு ரெண்டு வருசத்துல அகெய்ன் மத்தில எலெக்சன் வரும்…. இப்ப அவங்க கூட கூட்டணி வச்சுக்கிட்டா அடுத்த கவர்மெண்ட்ல கேபினட் மினிஸ்டர் போஸ்ட் வேணும்னு நீங்க டிமாண்ட் பண்ணலாம்… முக்கியமான சில துறைகளுக்கு உங்க கட்சி பிரமுகர்களை மினிஸ்டர் ஆக்கணும்னு அவங்க கிட்ட கண்டிஷன் போடலாம்… அப்பிடி நீங்க செலக்ட் பண்ணுற நபர்கள் உங்க மேல அதிருப்தில இருக்குற நபர்களா இருந்தா ரொம்ப நல்லது… ஏன்னா அவங்களுக்குத் தேவை பதவியும் அதிகாரமும் தான்! அது ஸ்டேட்ல கிடைச்சா என்ன சென்ட்ரல்ல கிடைச்சா என்ன? சோ இது மூலமா உள்கட்சி கோஷ்டி மோதலுக்கு ஒரு முடிவு வரும்… இதுல இன்னொரு பெனிஃபிட்டும் இருக்கு மேம்… ஒரு கட்சி மாநிலத்துல மட்டும் ஸ்ட்ராங்கா இருந்தா பத்தாது… மத்திலயும் அதுக்கு அசைக்க முடியாத செல்வாக்கு இருக்கணும்… அதுக்கு ஆட்சி அதிகாரத்துல ஒரு பகுதி உங்க கிட்டவும் இருக்க வேண்டியது அவசியம் மேம்”
வானதி முடிக்கவும் யாழினியும் அருள்மொழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாழினிக்கு வானதியின் இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. எனவே உற்சாகத்துடன்
“யூ ஆர் அப்சல்யூட்லி ரைட்… அதிருப்தியும் செல்வாக்கும் உள்ளவங்க கட்சில சிலர் இருக்காங்க… அவங்களை லிஸ்ட் அவுட் பண்ணிடலாம்… பட் இது வரைக்கும் எங்க கட்சிய பத்தி நீங்க பண்ணுன ஸ்டடில அப்பிடி யார்லாம் இருக்காங்கனு உங்களுக்குத் தோணுது வானதி? ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம்னு தான் கேக்குறேன்” என்று அவளிடம் வினவ அருள்மொழி தமக்கையைத் தடுக்க எத்தனித்தான்.
“அவங்களுக்கு வேற வேலை இருக்கும் யாழிக்கா… எதுக்கு நம்ம கட்சி விவகாரத்தை அவங்க கிட்ட சொல்லி தொந்தரவு பண்ணுற?” என்றவனிடம்
“நோ ப்ராப்ளம் மிஸ்டர் அருள்மொழி… ஜஸ்ட் என்னோட ஒபீனியனைத் தானே சொல்லுறேன்… அதுல எனக்கு எந்தச் சிரமமும் இல்ல” என்றாள் வானதி புன்னகை பூத்த வதனத்துடன்.
அருள்மொழிக்கு அவள் யாருடைய பெயரை உதிர்ப்பாள் என்பது நிச்சயமாகிவிட்டது. இவள் மட்டும் சித்தப்பாவின் பெயரைக் கூறிவிட்டால் போதும்! ஏற்கெனவே அவர் மீது கடும் அதிருப்தியிலிருக்கும் அவனது தமக்கை ஒட்டுமொத்தமாக தமிழகத்தேர்தலும் ராமமூர்த்திக்குமான உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்!
அவன் தாடை இறுக்க நோக்குவதை அலட்சியப்படுத்திய வானதி “அப்பிடிப்பட்ட செல்வாக்கை கட்சியோட தலைமையாலயும் தலைமைக்கு நெருக்கமானவங்களாலயும் மட்டும் தான் உருவாக்க முடியும் மேம்… தேசிய அளவுல உங்க கட்சி ஸ்ட்ராங்க் ஆகுறதுக்கு ஒரே வழி உன் சித்தப்பாவ யூனியன் மினிஸ்டர் ஆக்குறது தான்… இது மூலமா அவருக்கு உங்க மேல இருந்த அதிருப்தியும் குறையும்… அவரோட கோஷ்டியாளுங்க வாயும் மூடும்” என்று யாழினியிடம் கூற அவள் எண்ணியது ஈடேறியது.
ஆம்! சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்த யாழினி ராமமூர்த்திக்கு சட்டச்சபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டாமென கூறிவிட அருள்மொழிக்கு அதிர்ச்சி!
அவனது அதிர்ச்சியைக் கண்டுபிடிக்காதவளாக அவனிடம் விளக்க ஆரம்பித்தாள்.
“யெஸ் அருள், இது நல்ல ஐடியாவா இருக்கு… இந்த அசம்பிளி எலக்சன்ல சித்தப்பாக்கு சீட் குடுக்க வேண்டாம்… அவருக்குப் பதிலா மதுரைல செல்வாக்கானவர் யாருனு பாத்து சீட் அலாட் பண்ணிடுவோம்… சித்தப்பா கிட்ட பேசி சரிகட்ட வேண்டியது என் பொறுப்பு அருள்… அவரோட அரசியலறிவுக்கு யூனியன் மிஸ்டர் போஸ்ட் தான் ரொம்ப பொருத்தமானதுனு நான் அவர் கிட்ட பேசி புரியவைக்கிறேன்”
அருள்மொழி தமக்கையின் பேச்சை மறுக்க முடியாமல் விழிக்க வானதியோ வெற்றிப்புன்னகையை யாழினி அறியாவண்ணம் சிந்தினாள். ஆனால் அது அருள்மொழியின் பார்வையில் பட்டுவிட்டது.
எவ்வளவு தந்திரசாலி இவள்! தனது தமக்கையின் மனதில் ஒரு விசயம் பட்டுவிட்டால் அதை எக்காரணம் கொண்டும் மாற்றிக்கொள்ளவே மாட்டாள் என்பதை அறிந்துகொண்டு வெகு சாமர்த்தியமாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சித்தப்பாவுக்குச் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டாமென யாழினியின் வாய் வார்த்தையாகவே சொல்ல வைத்து விட்டாளே! சும்மாவே யாழினிக்கு இப்போதெல்லாம் ராமமூர்த்தி என்றால் எட்டிக்காய்! அவளைப் பொறுத்த வரை இளைய சகோதரனுக்குப் போட்டியாய் இருப்பவர்களை அகற்றுவது தான் நியாயம்!
ராமமூர்த்தியை யாழினி சரிகட்டிவிடுவாள்! ராமமூர்த்தியும் தமிழ்நாட்டில் இழந்த அதிகாரத்தை மத்தியில் பெறுவதற்கு ஒப்புக்கொள்வார்! ஆனால் இந்த வானதியின் எண்ணப்படியே எல்லாமும் நடக்க வேண்டுமா என்ற எரிச்சல் அவனுக்கு!
வேறு வழியின்றி தமக்கையிடம் ராமமூர்த்தியைக் கூட்டணி பற்றி பேசுவதற்காக தயார்ப்படுத்தும் படி கூறியவன் வானதியை நோக்க அவளோ தான் வந்த காரியத்துடன் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இன்னொரு காரியத்தையும் இலவச இணைப்பாக முடித்துக்கொண்ட மகிழ்ச்சியுடன் விடைபெற எழுந்தாள்.
எழுந்தவள் அருள்மொழியிடம் “இன்னும் டூ டேய்ஸ்கு நானும் நிதர்சனாவும் லீவ்… ரெண்டு பேரும் மதுரைக்குப் போறோம்” என்றாள்.
மதுரை என்றதும் அருள்மொழியின் புருவங்கள் சுருங்குவதை வேடிக்கை பார்த்தபடியே “எங்க பாட்டியோட நினைவு நாள் வருது… இங்க இருக்குற ஆர்பனேஜ்ல ஒண்டே மீல் செலவை ஏத்துக்கலாம்னு தான் முன்னாடி ப்ளான் பண்ணிருந்தோம்… பட் இப்ப ப்ளானை சேன்ஜ் பண்ணிக்கிட்டோம்” என்றாள்.
அந்த ‘இப்போது’க்கு அர்த்தம் ஒரு மணி நேரத்திற்கு என்பதே! சரியாக ஒருமணி நேரத்திற்கு முன்னர் இந்த அலுவலகத்தில் நுழைந்த வானதி மதுரை மாநாட்டினால் நொந்து போன ராமமூர்த்தியின் நிலையைக் கண்ணாற காண ஆசைப்பட்டு அந்தத் தலைமை அலுவலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் செல்ல முடிவெடுத்தாள்.
தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை கேட்க வந்ததாகச் சொல்லிக்கொள்ளலாம் என்ற முடிவுடன் கதவைத் தட்ட எத்தனித்தவள், அக்கதவு மூடப்படாமல் சற்று இடைவெளி விட்டு திறந்திருக்கவும் தட்டப் போன கரத்தை இறக்கிக் கொண்டாள்.

உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. அதில் ஒரு குரல் ராமமூர்த்தியுடையது! உடனே சுற்றி முற்றி பார்த்தவளின் விழிகளில் சி.சி.டி.வி கேமரா படவும் ஜீன்சின் பாக்கெட்டில் உறங்கிக் கொண்டிருந்த மொபைலைக் காதுக்குக் கொடுத்து பேசுவது போல நடிக்க ஆரம்பித்தாள்.
செவியோ உள்ளே நடந்து கொண்டிருந்த உரையாடலைக் கவனிக்க ஆரம்பித்தது. ராமமூர்த்தி அடிக்குரலில் விளக்கிக் கொண்டிருந்த திட்டத்தைக் கேட்டவளின் முகம் முதலில் பதற்றத்தைத் தத்தெடுத்தாலும் அவளது மூளை வேறு விதமாய் சிந்திக்க துவங்கியது. அதன் முடிவில் அவள் எடுத்த முடிவு தான் மதுரைக்குச் செல்ல வேண்டும் என்பது.
நிதர்சனாவிடம் இதை கூறவும் அவளும் ஒப்புக்கொண்டாள். அதன் பின்னர் தான் அருள்மொழியின் அறைக்கு அவள் வந்து யாழினியுடன் இவ்வளவு நீண்ட உரையாடலை நிகழ்த்த வேண்டியதாயிற்று!
அருள்மொழியிடம் விசயத்தைக் கூறியவள் யாழினியிடமும் அவனிடமும் விடைபெற்றுக்கொண்டாள்! அருள்மொழி அதன் பின்னர் அவளைப் பற்றி யோசியாது நெசவாளர்களைச் சந்திப்பது குறித்து யாழினியிடம் ஆலோசனை கேட்க ஆரம்பிக்க வானதியோ அடுத்த திட்டத்துடன் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேறினாள்தான் செய்த தவறுகளைக் கண்டறிந்து திருத்திக் கொள்ளும் மனிதன் காலம் முழுவதும் தவறு செய்வதும் திருத்திக் கொள்வதுமாகத் தான் இருப்பான்! ஆனால் சாமர்த்தியசாலியோ அவர்களை உற்றுநோக்குவதன் மூலமாக மற்ற மனிதர்கள் செய்த தவறுகளின் வாயிலாக கற்றுக்கொண்ட பாடத்திலிருந்து அந்தத் தவறுகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அத்தவறுகளை மீண்டும் தானும் செய்யாது தப்பித்துக் கொள்வான்!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction