“அரசியலில் ஆர்வமில்லை என்பவர்களுக்கும் அரசியலில் பங்கேற்க விரும்பாதவர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையே தங்களை விட தகுதியில் குறைந்தவர்களால் ஆளப்படுவதே!
-ப்ளேட்டோ
தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம்…
மூவரணியாய் அருள்மொழி கொடுத்த பணியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக சந்திரகுமாருடன் தெய்வநாயகமும் மந்திரமூர்த்தியும் கிட்டத்தட்ட உறுதிமொழியளித்து கொண்டிருந்தனர்.
அருள்மொழியுடன் அமர்ந்திருந்த யாழினிக்கும் இளைய சகோதரனின் இந்த நகர்வில் சம்மதமே! தங்களை குறைத்து மதிப்பிடும் சித்தப்பாவுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க இளைய சகோதரன் என்ன செய்தாலும் ஆதரவளிக்கத் தயாராக இருந்தாள் யாழினி.
இருவருக்கும் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறவன் அவளது கணவன் அகத்தியன். ராமமூர்த்தியில் ஆரம்பித்து இந்த மூவரையும் கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்திருப்பதோடு அடிப்படையில் ஊடகவியலாளன் என்பதால் அரசியல் நகர்வுகளை மனைவிக்கும் மைத்துனனுக்கும் அடிக்கடி சுட்டிக் காட்டுவான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
யாழினி அந்த மூவரையும் கவனமாக அவர்களது மதுரை மாநாடு வேலைகளைச் செய்து முடிக்கும் படி கட்டளையிட்டாள்.
“சித்தப்பாவுக்கு நம்ம போட்டிருக்குற ப்ளான் எதுவுமே தெரியக்கூடாது… கட்சித்தலைமைக்கு எதிரா ரொம்ப ஸ்மார்ட்டா மூவ் பண்ணுறதாவே அவர் நினைச்சிட்டிருக்கணும்… ஒரு கட்சில இரட்டை தலைமைங்கிறதுலாம் அரசியலைப் பொறுத்தவரைக்கும் கோமாளித்தனம்… அந்தக் கோமாளித்தனத்துக்கு நம்ம இடம் குடுக்க கூடாது… அதோட ராமமூர்த்திக்கு மட்டுமில்ல அருள்மொழிக்கும் ஒரு சொல் தான்… நீங்க அவனோட நம்பிக்கைக்கு பாத்திரமா ஆனிங்கனா உங்களோட அரசியல் வாழ்க்கைல இன்னும் உயரத்துக்கு நீங்க போகலாம்… இல்லனா எப்போவுமே சித்தப்பாவோட கைத்தடியா தான் இருக்கணும்… இத மனசுல வச்சிட்டு வேலைய ஆரம்பிங்க… சீக்கிரமா வேட்புமனு தாக்கல் பண்ணுறதுக்கும் தயாராகுங்க”
சுந்தரமூர்த்தியின் புத்திரச்செல்வங்களின் பார்வை தங்கள் மீது பட்டதே போதுமென்று எண்ணிய மூவருக்கும் உச்சி குளிர்ந்து போய்விட்டது. தங்களது சட்டமன்ற உறுப்பினர் கனவுகளுடன் கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து விடைபெற்றனர் மூவரும்.
அவர்கள் சென்றதும் யாழினி தம்பியை மனமுவந்து பாராட்டினாள்.
“உன்னோட மூவ்ஸ் எல்லாமே சித்தப்பாக்குப் பெரிய அடியா இருக்கும் அருள்… இன் ஃபேக்ட் உன்னோட ரீசண்ட் மூவ்ஸை பாத்ததுக்கு அப்புறம் இனிமே என்னோட சஜஷன்ஸ் எதுவுமே உனக்குத் தேவைப்படாதுனு தோணுது… ஒரு பொலிடீசியனா நீ ரொம்பவே தேறிட்டடா தம்பி”
அருள்மொழி தமக்கையின் பாராட்டை தலை குனிந்து ஏற்றுக்கொண்டான்.
“இனிமே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க… பசங்க உன்னையும் மாமாவையும் ரொம்பவே மிஸ் பண்ணுறாங்க… இந்த அரசியல் விளையாட்டுல நீ உன் ஃபேமிலிய மறந்துட்ட… மாமா உனக்கு மேல” என்றான் அவன்.
யாழினி தனக்கே அறிவுரை கூறும் இளைய சகோதரனை கூர்மையாகப் பார்த்தவள் அவனது மேஜையிலிருந்த பேனா ஸ்டாண்டிலிருந்து ஒரு பேனாவை எடுத்து மேஜை மீது வைத்து சுற்றியபடியே
“நீ சொன்ன அட்வைஸை நீயும் ஃபாலோ பண்ணுனா நல்லா இருக்கும் அருள்” என்று கூறவும் அருள்மொழியின் முகத்தில் புரியாத பாவனை!
“எனக்கு நீ சொல்லுறது புரியலக்கா”
“உனக்கு வானதிய முன்னாடியே தெரியும்ல?”
யாழினியின் கேள்வியில் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது “தெரியும்… அவளும் என்னோட காலேஜ் தான்” என்றான் வெகு நிதானமாக.
யாழினி அவனது நிதானத்தை மெச்சிக்கொண்டவள் “அது மட்டும் தானா?” என்று வினவ
“வேற என்ன?” என்று அவனிடமிருந்து கேள்வி வந்தது.
“வேற ஒன்னுமில்லடா… லீவ் தட்… நீ காலேஜ் டேய்ஸ்ல யாரையோ லவ் பண்ணிருக்கேனு ஸ்டூடண்ட்ஸ் கிட்ட சொன்னியே, அது உண்மையா?”
“யாழிக்கா வாட் டூ யூ வாண்ட்? ஓபனா கேளு”
“நீ வானதிய லவ் பண்ணுனியா அருள்?”
யாழினியின் கேள்விக்கு அவன் என்ன பதில் கூறுவான்? ஆம் என்று கூறுவான் எனில் யாழினி இதை பற்றி வானதியிடம் இதை பற்றி பேச முனையக்கூடும்.
இல்லையென்று மறுத்தால் அவன் பொய்யனாகி விடுவான். மற்றவர்களிடம் எப்படியோ தனது குடும்பத்தினரை பொறுத்த வரை எவ்வித பொய்யும் உரைக்க அவன் விரும்புவதில்லை. அது அவனது தந்தை சுந்தரமூர்த்தியின் பழக்கம்.
“நம்ம வெளியுலகத்துல எப்பேர்ப்பட்ட தகிடுதத்தம் வேணாலும் செய்யலாம்… ஆனா குடும்பத்தாளுங்களுக்கு மட்டும் சாகுற வரைக்கும் உண்மையா இருக்கணும்… ஏன்னா நம்ம இவ்ளோ கஷ்டப்படுறதே அந்தக் குடும்பத்துக்காக தானே!”
அவரது இந்த வார்த்தையைத் தான் ஆதித்யனும் அருள்மொழியும் விடாது கடைபிடித்து வந்தனர். இப்போதும் அதை மீறும் எண்ணமில்லாதவனாக
“ஆமா! நான் லவ் பண்ணுனேன்… அவ என்னை ரிஜக்ட் பண்ணிட்டு வேற ஒருத்தனை லவ் பண்ணுனா… இடைல அவங்க பேரண்ட்ஸ் இறந்ததும் காலேஜ் ட்ராப் அவுட் ஆனா… அப்புறம் அவளுக்கு என்னாச்சுனு எனக்குத் தெரியல… இத்தனை வருசம் கழிச்சு கேம்பெய்ன் மேனேஜரா என் முன்னாடி வந்து நிக்குறா… லவ் பண்ணுனவனை கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைனு இருப்பானு நினைச்சேன்… பட் அன்பார்சூனேட்லி அவ லவ் பண்ணுனவன் இறந்துட்டான்… ஏன் இறந்தான் எப்பிடி இறந்தான்னு தெரியல… ஆனா அவ ரொம்ப மாறிட்டா… அது மட்டும் நல்லா தெரியுது” என்று ரத்தின சுருக்கமாக நடந்ததை கூறினான்.
யாழினி அனைத்தையும் கேட்டு முடித்தவள் “பாவம்! அந்த டீனேஜ்ல பேரண்ட்சும் இல்ல, லவ் பண்ணுனவனும் இறந்துட்டான்னா அந்தப் பொண்ணு எவ்ளோ உடைஞ்சு போயிருப்பால்ல… ஐ ஃபீல் வெரி பேட் ஃபார் ஹெர்” என்றாள் இரக்கத்துடன்.
“தப்பி தவறி இத அவ கிட்ட சொல்லிடாத… அந்தம்மாக்கு யாரும் அவ மேல இரக்கப்பட்டா பிடிக்காது… மூக்குக்கு மேல கோவம் வரும்” என்றான் அவன்.
“நோ நோ! நான் இரக்கப்படல… அவளுக்கு நடந்ததுக்காக வருத்தப்படுறேன்… அவ்ளோ தான்… ஷீ இஸ் வெரி ஸ்ட்ராங்க்டா அருள்… ஐ அட்மயர் ஹெர்”
இருவரும் சற்று நேரம் அரசியலை மறந்து சாதாரணமாக பேசிக்கொண்டிருப்பது யாழினியின் மொபைலுக்குப் பொறுக்கவில்லை போல. உடனே இசைத்து அவர்களது கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது.
அழைத்தவன் அகத்தியன்! யாழினி அழைப்பை ஏற்றதும் அவன் கேட்ட கேள்வி ஒன்றே ஒன்று தான்!
“ஐ.பி.சி தரப்புல இருந்து யாராச்சும் கட்சிக்குக் கால் பண்ணுனாங்களா?”
யாழினி இல்லையென பதிலளிக்கவும் “சி.எம்மோட ப்ரஸ் மீட் வரைக்கும் அந்த இண்டர்ஷிப் பிரச்சனை போயிடுச்சு யாழ்… இதால நம்ம தேர்தல் வேலைல நிறைய ட்ராபேக் வரும்… அருள் என்ன பண்ணுறான்?” என்று படபடத்தான் அகத்தியன்.
யாழினி அருள்மொழியிடம் மொபைலை நீட்ட அவனிடமும் அகத்தியன் அதே கேள்வியைத் தான் கேட்டான்.
“யெஸ்டர்டே வானதி என்னை மீட் பண்ணணும்னு கேட்டாங்க மாமா… எனக்கும் அந்த ப்ராப்ளம் கொஞ்சம் சீரியஸ்னு தான் தோணுது… நீங்க டென்சன் ஆகாதீங்க… நான் இப்பவே வானதி கிட்ட பேசிடுறேன்” என்று கூறிவிட அகத்தியனும் அமைதியானான்.
அவனிடம் பேசி முடித்த பிறகு அருள்மொழி தனது அறையிலிருந்த தொலைகாட்சியை உயிர்ப்பிக்க அதில் வீரபாண்டியன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் த.மு.க கட்சியையும் ஐ.பி.சியையும் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
“த.மு.க தலைவர் ஒன்னை புரிஞ்சிக்கணும்… குறை கேக்க போறேன்னு மக்களை சந்திச்சு நாடகம் போட்டாலோ, மனுங்கிர பேர்ல நாலஞ்சு வெள்ளை பேப்பரை கொண்டு வந்து கவர்மெண்ட் டிப்பார்ட்மெண்டுல நீட்டுனாலோ மட்டும் போதாது… உண்மையாவே மக்கள் மேல அக்கறை இருக்கணும்… இப்பிடி சின்னப்பசங்களோட உழைப்பை உறிஞ்சுற ஒரு கார்பரேட் கம்பெனி கூட கூட்டணி வச்சு தேர்தலை எதிர்கொள்ள போற கட்சிக்கா உங்கள் ஓட்டு? இத மக்கள் தான் முடிவு பண்ணணும்”
அவரது பேச்சில் அருள்மொழிக்கு எரிச்சல் மண்டியது.
“இந்தாளு வேற எதுக்கெடுத்தாலும் அடிவயித்துல இருந்து கத்துவார்… இப்பிடிப்பட்ட கோமாளிங்கள எல்லாம் அப்பா எப்பிடிக்கா ஹேண்டில் பண்ணுனாரோ?
“அரசியல்ல எல்லாருமே கோமாளிங்க தான் அருள்… இன்க்ளூடிங் யூ… ஆனா இங்க இருக்குற கோமாளிங்க எல்லாருமே காரியக்கார கோமாளிங்க… ஏ.சி ரூம்ல பிசினஸ் மேனா இருந்த நீ ஏன் மொட்டை வெயில்ல ஒவ்வொரு கிராமமா போய் மக்களை சந்திக்கணும்னு என்ன அவசியம்? நீ நினைச்சிருந்தா ஜம்முனு அந்த வேலைய பாத்துட்டு இருந்திருக்கலாமே! ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்குற? நீ அவங்க மனசுல இடம் பிடிச்சா தான் உன்னால அரசியல்ல நீடிச்சு நிக்க முடியும்னு தானே! அதுவும் ஒரு வகையான கோமாளித்தனம் தான்டா… இப்ப இந்தப் பிரச்சனைய எப்பிடி சால்வ் பண்ணுறதுனு யோசி”
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அறைக்கதவைத் தட்டிவிட்டு யாரோ உள்ளே வரும் அரவம் கேட்க இருவரும் ஒருசேர திரும்பிப் பார்த்தனர்.
வந்தவள் வானதி தான்! யாழினி அங்கே இருப்பாள் என எதிர்பார்க்காதவள் பிரச்சனை பெரிதான கடுப்பில் உள்ளே வரும் போதே
“இப்ப சந்தோசமா உனக்கு? நேத்துல இருந்து உன்னை மீட் பண்ணுறதுக்கு நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்… ஆனா நீ வேணும்னே என்னை அவாய்ட் பண்ணுனதோட பலனை பாத்தியா? சி.எம்மோட ப்ரஸ் மீட் வரைக்கும் பிரச்சனை போயிடுச்சு” என்று எரிச்சல் மண்டிய குரலில் படபடத்துக் கொண்டே வந்தாள்.
அங்கே இருந்த யாழினியைக் கண்டதும் ஒரு நொடி அமைதியானாள்.
“மேம் நீங்க இங்க…” என்று தயங்கியவள் என்ன பேசுவதென தெரியாது விழிக்க யாழினியோ
“ஹேய்! இட்ஸ் ஓகே… ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் தி கரெண்ட் ப்ராப்ளம்… இப்ப என்ன பண்ணலாம்னு நீங்க பேசி முடிவு பண்ணுங்க… எனக்குக் கொஞ்சம் ஒர்க் இருக்கு… நான் கிளம்புறேன்” என்றபடி எழுந்தாள்.
அருள்மொழியிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றவள் வெளியேறியதும் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் வானதி.
அருள்மொழி தனது ஆட்காட்டிவிரலால் நெற்றியில் கீறிக்கொண்டவன் “நீங்க இண்டர்ன்ஷிப்புக்கு ஆள் எடுக்குறப்ப பண்ணுன மிஸ்டேக்கால தான் இந்த பிராப்ளம் கிரியேட் ஆகிருக்கு… அதுக்கு நீ என் கிட்ட எரிச்சல்பட்டு எதுவும் ஆகப் போறதில்ல” என்றான் அலட்சியமாக.
வானதி அவனைப் பார்த்த பார்வையில் அந்த அறையின் வெப்பநிலை சில டிகிரி செல்சியஸாவது உயர்ந்திருக்கும்!
“நாங்க இண்டர்ன்ஷிப்புக்கு ஆள் எடுத்தது உங்க பார்ட்டிக்காக வேலை செய்யுறதுக்கு தானே… யூ நோ ஒன் திங்க்? நாங்க எல்லா ஸ்டேட்லயும் இந்த மாதிரி இண்டர்ன்ஷை ரெக்ரூட் பண்ணுறது வழக்கம் தான்… ஆனா டி.என் மாதிரி எங்கயும் பிரச்சனை வந்தது இல்ல”
“இப்ப பிரச்சனை எங்களாலனு சொல்லுறியா?”
“அப்கோர்ஸ்… உங்க கட்சி மேல இருக்குற கடுப்புல ரூலிங் பார்ட்டி எங்க தலைய உருட்டுறாங்க… ஆனா இதுல அடி வாங்கப் போறது இத்தனை நாள் ராத்திரி பகலா கண் முழிச்சு நாங்க ப்ளான் பண்ணுன தேர்தல் வியூகம் தான்! மக்கள் மனசுல நீங்களும் மத்த கட்சிக்காரங்க மாதிரி தான்னு ஒரு எண்ணம் வர்றதுக்கு இந்தப் பிரச்சனை ஒன்னு போதும்” என்றாள் வானதி கோபத்துடன்.
அருள்மொழி தண்ணீர் தம்ளரை அவளருகே நகர்த்தியவன் “குடி” என்கவும் அவள் அலட்சியமாகத் தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.
“இப்பிடி ஆட்டிட்டியூட் காட்டுனா என் பக்கத்துல இருந்து ஒரு செங்கல்ல கூட நான் நகர்த்த மாட்டேன்” என்றவன் அவள் மீண்டும் அவன் புறம் திரும்பியதும் கண்களால் கண்ணாடி தம்ளரை காட்ட வானதி வேறு வழியின்றி தண்ணீரைக் குடித்தாள்.
தம்ளரை மேஜை மீது வைத்தவள் “இப்ப சொல்லு… உங்க பார்ட்டி தரப்புல இதுக்கு என்ன பதிலடி குடுக்க போறிங்க? அத வச்சு தான் ஐ.பி.சி சார்பா நாங்க பதில் சொல்ல முடியும்” என்றாள்.
அருள்மொழி தனது கரங்களை தலைக்கு அண்டை கொடுத்து நாற்காலியில் சாய்ந்து கொண்டபடியே
“இதுல தனித்தனியா ரிப்ளை குடுக்குறத விட நம்ம ஒன்னா சேர்ந்து பதிலடி குடுத்தா என்ன?” என்று வினவ

“நம்மளா?” என்றாள் வானதி வெடுக்கென்று.
“ஐயோ அம்மா! நம்ம மீன்ஸ் என்னோட பார்ட்டியும், உன்னோட ஐ.பி.சியும் தான் தாயே! நீயா எதாச்சும் ஏடாகூடமா யோசிச்சு என் தலைய உருட்டாத” என்றபடி தனது கைகளை குவித்து வணக்கம் போட வானதியும் அமைதியாய் சிந்திக்க துவங்கினாள்.
சில நிமிட யோசனைக்குப் பிறகு “ஐடியா” என்றவள் அருள்மொழி அசிரத்தையாய் உச்சு கொட்டவும் புருவத்தைச் சுழித்தாள். உடனே ஆர்வமாய் கவனிப்பது போல அவன் காட்டிக்கொள்ளவும் இறங்கி வந்து தனது திட்டத்தை விளக்கினாள்.
முழுவதுமாய் கேட்டு முடித்த அருள்மொழி “ம்ம்! சூப்பர் ப்ளான்… இது மட்டும் நடந்துச்சுனா வீரபாண்டியன் அன் கோ சைலண்ட் மோடுக்குப் போயிடுவாங்க… ஓகே! எப்ப ப்ளானை எக்ஸிகியூட் பண்ணப் போற?” என்று வினவ
“அது உன் ஷெட்யூலை பொறுத்து தான் இருக்கு… நாளைக்கு நீ ஃப்ரீனா நான் இப்பவே அதுக்கான வேலைய ஆரம்பிச்சிடுவேன்” என்றாள் வானதி.
அருள்மொழி சங்கரை அழைத்து நாளைய தினம் ஏதேனும் நிகழ்வில் பங்கேற்க வேண்டுமா என்று கேட்க இல்லையென பதில் வரவும் “ஓகே! டுமாரோ ஐ வில் பி யுவர்ஸ்” என்றவன் வானதி முறைக்கவும் “ஊஃப்ஸ்” என்றபடி மூச்சை வெளியேற்றினான்.
“அதுக்கு அர்த்தம் நாளைக்கு முழுக்க நான் உங்க கன்சர்ன்ல இருக்க ரெடிங்கிறது தான்… நீயா எதாச்சும் யோசிச்சு முறைக்கிறத முதல்ல நிறுத்து வானதி… பிகாஸ் ஓவரா முறைச்சிட்டே இருந்தா பொண்ணுங்க குண்டாயிடுவாங்களாம்… ரீசண்டா வந்த ரிசர்ச் முடிவுல சொல்லிருக்காங்க” என்று கேலியாய் பேச்சை முடித்தான் அவன்.
வானதி அவனது ஐ.பி.சி வருகை உறுதியானதும் எழுந்தவள் “அந்த இடியட் ரிசர்ச்சர் நேம் அருள்மொழி தான” என்றபடி அங்கிருந்து வெளியேறினாள். அருள்மொழி செல்பவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தவன் அவனையறியாது முறுவலித்தான். எல்லாம் ஒரு நொடி தான்! அதன் பின் அவனது வேலைகள் அவனை இழுத்துக்கொள்ள மெதுவாய் வானதியை மறந்து வேலையில் ஆழ்ந்து போனான் அருள்மொழி.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction