பசியினால் திருடுகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள் கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை.
-பிடல் காஸ்ட்ரோ
மவுண்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டி…
கல்லூரியின் கலையரங்கமானது மாணவர்களால் நிரம்ப ஆரம்பித்தது. அன்றைய தினம் அருள்மொழி அக்கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாட இருந்தான். அதற்கான பரபரப்பு அங்கே இருக்கும் ஒவ்வொருவரிடமும் நிரம்பி வழிய பேராசிரியர்கள் மாணவர்களை கலையரங்கத்திற்கு செல்லும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர்.
இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் மட்டும் கலந்தாலோசனையில் பங்கேற்கலாம் என்று கல்லூரி நிர்வாக தரப்பில் அறிவிப்பும் கலந்து கொள்வதற்கான விண்ணப்பமும் ஒரு வாரத்திற்கு முன்னரே அளிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பம் செய்தவர்களுக்கு அவர்களுக்கான இருக்கை எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி ஆரம்பித்திருந்தது. கல்லூரி பணியாட்களும் ஐ.பி.சியின் களப்பணியாளர்களும் இந்தப் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்க அவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் வானதி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் இன்னும் ஒரு முறை சரி பார்க்கும் படி யாழினியிடமிருந்து செய்தி வரவும் பாதுகாப்புக்கான பொறுப்பாளரை அழைத்து உறுதிபடுத்திக் கொண்டவள் யாழினியிடம் அருள்மொழி இப்போது வந்தால் சரியாக இருக்குமென கூறிவிட்டாள்.
அவளோ “வாட்? அவன் கிளம்பி ஹாஃப் அண்ட் ஹவர் ஆகுது வானதி… இன்னுமா காலேஜுக்கு வரல?” என்று கேட்க வானதி குழம்பிப் போனாள்.
அவனும் யாழினியும் தங்கியிருந்த ரிசார்ட்டானது கல்லூரியிலிருந்து வெகு சமீபம் தான். பின்னர் ஏன் அவன் இன்னும் வந்து சேரவில்லை என்ற யோசனையுடன் நின்றவளை எதிர்கொண்டார் கல்லூரி முதல்வரின் உதவியாளர்.
“மேம் அருள் சார் வந்துட்டார்னா ப்ரோகிராமை ஸ்டார்ட் பண்ணிடலாம்”
அவரிடம் அருள்மொழி சீக்கிரம் வந்துவிடுவானென கூறிவிட்டு கல்லூரியின் வாகன தரிப்பிடத்தை நோக்கி நகர்ந்தவளின் கண்கள் அதற்கு முன்னர் வந்த ஆங்கிலேயே பாணியில் கட்டப்பட்டிருந்த அந்தக் கல்லூரியின் கேரிடாரை நோட்டமிட்டது.
இதே இடத்தில் தான் ஒரு பனிமூட்டமான நாளில் அவள் யுவராஜை முதல் முதலில் பார்த்தாள். அவளும் அவளது பெற்றோரும் வந்து நின்ற போது “மகேந்திரன் அங்கிள்” என்றபடி அங்கிருந்து தானே ஓடி வந்தான்.
அன்றைய தினம் முழுவதும் அவர்களுடன் இருந்து கல்லூரி அட்மிஷன் வேலைகள் அனைத்திலும் உதவியாக இருந்தவன் பெற்றோரை பிரிந்து விடுதி வாழ்க்கையை ஏற்கும் கலக்கத்துடன் இருந்த வானதிக்கு நம்பிக்கையூட்டினான்.
அதையெல்லாம் இப்போது நினைத்தால் தான் கலங்குவது உறுதி என யுவராஜின் நினைவுகளை ஓரங்கட்டியவள் வாகனத்தரிப்பிடத்திற்கு சென்று பார்க்க அங்கே அருள்மொழிக்காக ஏற்பாடு செய்திருந்த காரும் ஓட்டுனரும் இருக்க அவன் மட்டும் மிஸ்ஸிங்.
நேரே ஓட்டுனரிடம் சென்று விசாரிக்க அவரோ “சார் வந்ததும் பாடிகார்ட்ஸை ஸ்டேடியத்துக்குப் போகச் சொல்லிட்டு என்னை இங்கேயே நிக்கச் சொன்னார் மேடம்” என்றார்.
“அப்ப அவர் எங்க போனார்?”
“நீங்க அவரைத் தேடி வருவீங்கனு சொன்னவர் உங்களை இந்த காலேஜ் கேண்டீனுக்கு வரச் சொல்லிட்டு அதோ அந்தப் பக்கம் போனார் மேடம்”
ஓட்டுனர் கை காட்டிய திக்கில் இருப்பது கல்லூரி கேண்டீன். அங்கே அருள்மொழிக்கு என்ன வேலை என்ற யோசனையுடன் முன்னேறி நடந்தவள் மாணவர் நடமாட்டமற்ற கேண்டீனுக்குள் நுழைந்ததும் கேண்டீன் ஊழியர்கள் ஒரு நொடி அவளைக் கவனித்துவிட்டு மீண்டும் தங்களது வேலையில் ஆழ்ந்தனர்.
வானதியின் பார்வை அந்தப் பெரிய கேண்டீனை அலசி ஆராய அதன் கடைக்கோடியில் கிடந்த நாற்காலி ஒன்றில் சாவகாசமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து காபியை அருந்திக் கொண்டிருந்த அருள்மொழி அவளது பார்வை வலையில் சிக்கிக் கொண்டான்.
“அங்க எல்லாரும் இவனுக்காக காத்திருக்காங்க… இவன் என்னடானா ரிலாக்சா உக்காந்து காபி குடிச்சிட்டிருக்கான்… இவனோட மண்டைக்கனத்துக்கு ஒரு எண்ட் கார்டே இல்லையா கடவுளே?”
அவனது செய்கையை நொந்து கொண்டபடி அவன் அமர்ந்திருந்த இடத்தை அடைந்தவள்
“உனக்கு திடீர்னு அம்னீஷியா வந்துடுச்சா?” என்று தீவிரக்குரலில் வினவ
“இல்லையே! ஏன் கேக்குற?” என்றபடி கடைசி மிடறு காபியை அருந்திவிட்டு எழுந்தவன் அவனுக்குச் சற்று தள்ளி இருந்த குப்பைத்தொட்டியின் அடிப்பகுதியை மிதிக்க அது வாயைத் திறந்து கொண்டது.
காலி பேப்பர் கோப்பையை அதனுள் வீசியவன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்து கொள்ள வானதியோ கேண்டீன் ஊழியர்கள் தங்களை கவனிப்பதை அறிந்து இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
“ஏன் கேக்குறேன்னா நீ ஊட்டிக்கு வந்தது இந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட கலந்துரையாடல் நடத்துறதுக்கு… ஆனா அத மறந்துட்டு என்னமோ ஊட்டிக்கு வெகேசன் வந்தவன் மாதிரி ரிலாக்சா காபி குடிச்சிட்டிருக்க? ஸ்டூடண்ட்ஸ், பிரின்சிபல், கரெஸ்பாண்டண்ட்னு எல்லாருமே ஸ்டேடியத்துல உனக்காக காத்திட்டிருக்காங்க… கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா உனக்கு?” என்று திட்டித் தீர்த்தாள் அவள்.
அருள்மொழியோ தனது ஆட்காட்டிவிரலால் காதைத் தொட்டுக் காட்டிவிட்டு
“உன் கிட்ட இருந்து வெறும் ஹண்ட்ரெட் சென்டிமீட்டர்ஸ் டிஸ்டன்ஸ்ல தானே இருக்கேன்… நீ சாதாரணமா பேசுனாலே எனக்குக் கேக்கும் வானதி… ஏன் மைக்கை முழுங்குனவளாட்டம் இவ்ளோ லவுடா கத்துற?” என்றான் குரலில் ஏளனம் காட்டி.
வானதி அவனது பேச்சால் உண்டான எரிச்சலை அவர்கள் இருக்கும் நடுவே கிடந்த மேஜையில் தனது கையால் குத்தி தீர்த்துக் கொண்டாள்.
அருள்மொழிக்கு அது நகைச்சுவையாக இருந்தது போல. கேலிச்சிரிப்பொன்று மெதுவாக முகிழ்த்தது அவனது இதழில்.
“கூல் பேபி… உனக்கு இந்த இடம் எப்படியோ எனக்கு இந்த கேண்டீன் ரொம்ப ஸ்பெஷல்… ஏன்னா உன்னை செகண்ட் டைம் இங்க தான் மீட் பண்ணுனேன்… நியாபகம் இருக்குதா?” என்று வினவியவனை ஏறிட்டவை வானதியின் வெறுமையான விழிகளே!
ஆம்! அவனது வார்த்தைகள் கிளறிய நினைவுகளை சடுதியில் அவளது மூளை திரும்பிப் பார்த்த தருணத்தில் அவளது விழிகள் ஜீவனை இழந்திருந்தது.
“இந்தக் குளிர்ல போய் ஐஸ் க்ரீம் சாப்பிடுறியேடி பாண்டா… வினோதப்பிறவி நீ”
யுவராஜின் குரல் அவள் செவியில் ஒலிக்க ஐஸ் க்ரீம் சுவைத்தபடி மொபைல் நோண்டிக் கொண்டிருந்த அன்றைய வானதி சட்டென தலையை உயர்த்தி அவனை குறும்பாய் ஏறிட்டாள்.
“நான் ஒயிட் வாக்கர்ஸ் பரம்பரையாக்கும்… இந்த ஐஸ் க்ரீம் குளிர்லாம் எனக்கு ஜுஜூபி”
“ஷப்பா… கேம் ஆப் த்ரான்ஸ் ஃபேனுங்க தொல்லை தாங்கலப்பா” என்று சலித்து கொண்ட யுவராஜை போலியாய் முறைத்தவள் ஸ்பூன் நிறைய ஐஸ் க்ரீமை அள்ளி அவன் மீது வீச யுவராஜின் அடர்பச்சை வண்ண ஹென்லே டீசர்ட்டில் ஸ்ட்ராபெர்ரி வாசத்துடன் ஐஸ்க்ரீம் ஒட்டிக்கொண்டது.
“ஏய் பிசாசு! ஏன்டி ஐஸ் க்ரீமை எறிஞ்ச?” டீசர்ட்டை உதறியவனை விசமமாகப் பார்த்தாள் வானதி.
“ஒரு ஸ்பூனுக்கே இப்பிடி கைய காலை உதறுனா எப்பிடி யுவா? இன்னும் இவ்ளோ இருக்கே” என்றபடி கப்பிலிருந்த ஐஸ்க்ரீமை காட்டியவள் அவன் மீது கொட்ட வரவும் வேகமாக எழுந்து கொண்டான் யுவராஜ்.
மேஜையின் எதிரெதிரே இருவரும் நிற்க “இங்க பாரு… என் மேல ஐஸ்க்ரீம் பட்டுச்சுனா அவ்ளோ தான்” என்று மிரட்டியவனிடம்
“பட்டுச்சுனா என்ன பண்ணுவீங்க சார்?” என்றபடி நெருங்கினாள் வானதி.
அவனோ இங்கே நின்றால் தானே என் மீது வீசுவாய் என்றபடி வேகமாக ஓட ஆரம்பிக்க வானதியும் அவனைத் துரத்தியபடி வேகமாக ஓடியவள் அவள் அணிந்திருந்த வெட்ஜஸ் காலணி சறுக்கியதில் அங்கே வந்த அருள்மொழி மீது மோதிக்கொண்டு விழ அருள்மொழியின் டீசர்ட்டும் ஐஸ்க்ரீமுக்குப் பலியானது.
வானதி தலையில் அடிபட்டுவிடக்கூடாதென கவனமாக விழுந்து வைத்தவள் வலித்த கரத்தை தடவியபடியே எழுந்தாள்.
அவளெதிரே நின்ற அருள்மொழி டீசர்ட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன்
“ஐஸ்க்ரீம் அப்புறம் சாப்பிட்டுக்கலாம்… முதல்ல கேண்டீன்ல எப்பிடி நடந்துக்கணுங்கிற பேசிக் மேனரை கத்துக்க” என்றபடி அவளுக்காக ஓடி வந்த யுவராஜை பார்த்தபடி கூற வானதி அவனை முறைத்தபடி நின்றாள்.
“ஆர் யூ ஓகே நதி? வலிக்குதா?” என்றபடி அவளது முழங்கையைத் திருப்பி பார்த்த யுவராஜிடம் வலியில்லை என்று கூறியவள் தங்கள் இருவரையும் பார்த்தபடி நின்ற அருள்மொழியிடம் ஐஸ்க்ரீமைக் கொட்டியதற்காக மன்னிப்பு வேண்டினாள்.
அவனோ “உன் சாரிய நீயே வச்சுக்க… அண்ட் யுவா இது கேண்டீன்… ஐ அக்ரி, ஊட்டில பீச் இல்ல தான்… அதுக்குனு நீ உன் லவ்பேர்ட் கூட கேண்டீன்ல ரன்னிங் ரேஸ் வைக்குறதுலாம் அநியாயம் மேன்… சோ நெக்ஸ்ட் டைம் ஸ்பாட்டை மாத்தி ரொமான்ஸ் பண்ணுங்க… வரட்டுமா?” என்று இருவரையும் சீண்டிவிட்டு இடத்தைக் காலி செய்தான்.
அவன் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தில் யுவராஜ் சங்கடமாக உணர வானதியோ
“ஹி இஸ் ரைட்… நெக்ஸ்ட் டைம் நம்ம வேற எங்கயாச்சும் ஓடி பிடிச்சு விளையாடலாம்” என்று குறும்பாக கண் சிமிட்ட
யுவராஜ் முதலில் அதிர்ந்தவன் பின்னர் அவளது விரித்த கூந்தலைக் கலைத்துவிட்டு “அவன் தான் உளறுறான்னா நீ அவனுக்கு மேல உளறுற… ஐஸ்க்ரீம் திங்கிறேன்னு எங்க டீசர்ட்டை நாசம் பண்ணுனது போதும்… கிளாசுக்குக் கிளம்பு ஆத்தா” என்று அவளை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான்.
அருள்மொழி தன் முன்னே அமர்ந்திருந்தவளின் முகத்தினருகே சொடுக்கிட்டுக் காட்ட வானதி நிகழ்காலத்திற்கு வந்தாள்.
“என்ன மலரும் நினைவுகளா? ப்ச்… ஆனா அதுக்குச் சொந்தமானவன் இல்லனு உனக்குக் கஷ்டமா இருக்குல்ல… ஆனா பாரேன், நான் தோக்கணும்னு நீ அவனுக்கு ஐடியா குடுத்து சி.பி.எல் எலக்சன்ல ஜெயிக்க வச்ச… இப்ப நான் ஜெயிக்கணும்னு நீ உழைச்சு ஓடா தேயுற… காலம் ரோலர்கோஸ்டர் மாதிரினு இப்ப நான் நம்புறேன்மா” என்றபடி இரு கரங்களையும் உயர்த்தியவனை உணர்ச்சியற்ற விழிகளால் ஏறிட்டாள்.
அவளது இந்த அமைதி அவனுக்கு இன்னும் உற்சாகமூட்ட “இந்த எலக்சன் முடிஞ்சதும் ஐ வில் பி த கிங்… ஆனா அப்பவும் நீ எனக்காக வேலை செஞ்ச ஒரு சர்வன்ட் மட்டும் தான்” என்று கர்வமாய் மொழிந்தான் அருள்மொழி.
வானதிக்கு அவனது இந்தக் கர்வப்பேச்சு ஒன்றும் புதிதில்லை. ஆனால் இதற்கு பதிலளிக்கவில்லை என்றால் இனி வரவிருக்கும் நாட்களில் இவன் தன்னை துச்சமாகத் தான் நடத்துவான் என்பதை புரிந்து கொண்டவள் அவனை வெட்டுவது போல பார்த்தபடி எழுந்தாள்.
“வாட்? கம் அகெய்ன்… இந்த எலக்சன் முடிஞ்சதுக்கு அப்புறம் நீ கிங்கா இருக்கலாம்… ஆனா இந்த கிங்குக்கு வியூகம் வகுத்துக் குடுத்த கிங்மேக்கரா அங்க வந்து நிக்கப் போறவ நான் தான்… சோ எலக்சன் வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசி… சரியா? பிகாஸ் அது வரைக்கும் உன்னை பொம்மை மாதிரி ஆட்டி வைக்கப் போற சூத்திரதாரி நான் தான்… அதை புரிஞ்சுகிட்டு நடந்துக்க… போய் ஸ்டூடண்ட்சை மீட் பண்ண ரெடியாகு”
வெகு அலட்சியமாகப் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவளை பார்த்தபடி கைகளை மேஜையில் குத்திக் கொண்டான் அருள்மொழி. அவள் சென்று சில நொடிகளில் யாழினியின் உதவியாளன் வந்து அவனை அழைக்க வானதியின் பேச்சு உண்டாக்கிய எரிச்சல் சற்றும் குறையாது எழுந்தவன் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து கலையரங்கத்தை நோக்கி சென்றான்.
அங்கே அவனுக்காக மாணவ மாணவிகள் காத்திருக்க மேடையில் நாற்காலிகள் கல்லூரி முதல்வர், தாளாளர் மற்றும் சில பேராசிரியர்களால் நிரப்பப்பட்டிருந்தது. அருள்மொழியின் விழிகள் அந்த கலையரங்கத்தை அளவிட ஆங்காங்கே அவனது பாதுகாப்புக்கு நின்றிருந்த பாதுகாவலர்கள், ஐ.பி.சியின் களப்பணியாளர்களோடு யாழினியுடன் அமர்ந்திருந்த வானதியும் அவனது பார்வையில் விழுந்தாள்.
தன்னால் உடைக்க முடியாதளவுக்கு அவள் வெகு அழுத்தக்காரியாக மாறிவிட்டாள் என்பதை அவனால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. எனக்குக் கீழ் தான் நீ என்றவனது கர்வத்தை உன்னை ஆட்டிவைப்பவளே நான் தான் என்று அடித்து நொறுக்கி விட்டு இப்போது அமைதியாய் அமர்ந்திருக்கிறாள்!
ஏனோ அருள்மொழியால் அவளது இந்த அழுத்தத்தைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இருப்பினும் நேரம் கடப்பதை கருத்தில் கொண்டு மேடைக்குச் சென்றான் அருள்மொழி.
தன் முன்னே அமர்ந்திருந்த மாணவர்களைக் கண்டதும் தனக்குள் இவ்வளவு நேரம் செயல்பட்டுக்கொண்டிருந்த வானதியின் மனவலிமையை உடைக்கவிரும்பிய கல்லூரி மாணவன் அருள்மொழியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு அரசியல்வாதி அருள்மொழியாய் புன்னகைத்தபடி வணக்கம் கூறினான்.
அரங்கம் மாணவர்களின் கைதட்டலால் ஆர்ப்பரிக்க இருக்கையில் அவன் அமர நிகழ்வும் ஆரம்பித்தது. ஆனால் இவ்வளவு நேரம் தன்னை அமைதியாய் காட்டிக்கொண்டபடி யாழினியோடு பேசிக்கொண்டிருந்த வானதிக்குள் பழைய வானதி விழித்து யுவராஜின் நினைவுகளைச் சமாளிக்க முடியாமல் கதறிக்கொண்டிருந்தாள்.
எவ்வளவு மன உறுதி கொண்டவர்களும் பலவீனமாகும் தருணம் ஒன்று வரும்! அப்போது அவர்கள் உடைந்திருப்பார்கள்! இப்போது வானதியின் வாழ்வில் அத்தருணம் வந்துவிட்டது! அவளும் மெதுவாக உடையத் துவங்கினாள்!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction