“அதிகாரம் மனிதர்களைக் கெடுப்பதில்லை. மாறாக அதிகாரமளிக்கக் கூடிய உயர்பதவிகளில் அமரும் முட்டாள்களே அந்த அதிகாரத்தைக் கெடுத்து துஷ்பிரயோகம் செய்கின்றனர்”
-ஜார்ஜ் பெர்னாட்ஷா
அருள்மொழி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த செய்தி அவனது கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியலையை உண்டாக்கியது. அவன் வெளியே வந்த தினத்தை மாவட்டம் தோறும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து கொண்டாடிய வீடியோவெல்லாம் செய்தி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி ஆளுங்கட்சியினரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்தன.
ராமமூர்த்தி இனி கட்சித்தலைமை தனக்குத் தான் என்று நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அருள்மொழியின் நிபந்தனை ஜாமீன் அவரது தலையில் இடியாய் வந்து இறங்கியது.
இருப்பினும் தனது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாது பூங்கொத்துடன் அரசியல் ரீதியான சந்திப்பை முடித்துக் கொண்டார். மாவட்டம் வட்டம் என முக்கிய பிரமுகர்கள் வந்து அவனைச் சந்திக்க கட்சி தலைமை அலுவலகத்தில் பூங்கொத்துடன் நின்ற காட்சியைக் கடுப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார் மனிதர்.
அதே நேரம் யாழினியோ மகிழ்ச்சியுடன் இளைய சகோதரன் தலைமையில் அனைத்து முக்கிய பிரமுகர்களுடன் அடுத்தக்கட்ட கட்சிப்பணிகள் குறித்து கலந்தாலோசனையில் ஈடுபட ஆரம்பித்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ராமமூர்த்தியும் வேறு வழியின்றி பிணக்கை வெளிக்காட்டிக் கொள்ளாதவராக கலந்தாலோசனையில் அமர்ந்தார். அதில் வைக்கப்பட்ட முக்கிய வேண்டுகோளே வானதி வழிமொழிந்திருந்த அரசியல் நாகரிகம் தான்.
அதை பற்றி யாழினி பேச்செடுக்கும் போதே கட்சிப்பிரமுகர்கள் முகத்தில் விசித்திரமான பாவனை வரவும் ராமமூர்த்தி விசமமாகச் சிரித்துக் கொண்டார்.
“எதிர்கட்சிக்காரன் கூட கொஞ்சி குலாவணும்னு சொன்னா கட்சிக்காரன் எவன் இவ பேச்சைக் கேப்பான்? இத்தனை வருசம் இருந்த பனிப்போரை மறந்துட்டு பொது இடங்கள்ல சந்திச்சா சகஜமா பேசணும்னு சொல்லுறாளே இந்தப் பொண்ணு, நிஜமாவே இவ என் அண்ணனுக்குத் தான் பிறந்தாளா? அவர் சாகுற வரைக்கும் வீரபாண்டியனை எதிரியா தானே நினைச்சார்… அது சரி, கத்துக்குட்டிய நம்பி கட்சிய குடுத்தா அதுங்க நம்மள பைத்தியக்காரனாக்கி தான வேடிக்கை பாக்கும்?”
மேற்காணும் எதையும் வெளியே சொல்லும் தைரியம் இல்லாததால் தனக்கு வாய்த்த அடிமையான மனசாட்சியிடம் புலம்பித் தீர்த்தபடி அடுத்து அருள்மொழி ஆற்றவிருக்கும் உரையைக் கேட்க தயாரானார் ராமமூர்த்தி.
முதலில் கட்சிப்பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்தான் அவன். தனது பதினான்கு நாட்கள் சிறைவாசத்தில் தனக்காகப் பரிந்து ஊடகங்களிடம் அவர்கள் அளித்த பேட்டிகள், தொண்டர்களை கட்டுக்குள் வைத்திருந்தது என ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைமைகளை பெயர் குறிப்பிட்டு பாராட்டவும் அவர்களுக்குப் பெருமை பிடிபடவில்லை.
“உங்களோட இந்த ஆதரவு என்னைக்குமே எனக்கு வேணும்… அதே நேரம் கட்சி ஹெட் ஆபிஸ் முன்னாடி நம்ம தொண்டர்கள் மேல லத்தி சார்ஜ் பண்ணுன போலீஸ் ஆபிசர்ஸ் பத்தி இன்னைக்கு கமிஷ்னர் கிட்ட கட்சி சார்பா கம்ப்ளெய்ண்ட் குடுக்கலாம்னு இருக்கோம்… அதுக்கு முன்னாடி அவங்க விசாரணைக்கு நம்ம ஒத்துழைக்கணும்… அப்புறம் மாவட்ட வாரியா ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் மத்தில பேசுறதுக்கான ஏற்பாட்டை அந்தந்த மாவட்ட தலைமை தான் முன்னெடுத்து செய்யணும்… ஸ்டேட் கவர்மெண்ட் பத்தி அவங்களுக்கு என்ன ஐடியா இருக்குனு நான் தெரிஞ்சிக்கணும்… அப்கமிங் சி.எம் கிட்ட அவங்க என்ன எதிர்பாக்குறாங்கனு தெரிஞ்சிக்கிட்டா அதுக்கு ஏத்த மாதிரி எலக்சன் மேனிஃபெஸ்டோ ரெடி பண்ண இப்பவே ப்ரிப்பேர் ஆகிடலாம்”
அவன் வரிசையாக அடுக்கியவற்றை அங்கிருந்த ஒருவர் கூட மறுப்பு தெரிவிக்காது மலர்ந்த முகத்துடன் தலையாட்டுவதைக் கண்டு யாழினிக்கு மகிழ்ச்சி. ராமமூர்த்திக்கோ தனது குட்டு வெளிவந்துவிடுவோமோ என்று அடிவயிற்றில் பயம் விசித்திர உணர்வாய் உருண்டோடத் துவங்கியது.
அந்நேரத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவரான கவியன்பன் எழுந்தார்.
முகம் விகசிக்க “உங்களோட சிந்தனை செயல் எல்லாமே வேற கோணத்துல இருக்கு தம்பி… உங்க மூலமா புதுவகையான அரசியலை கத்துக்குறதுக்கு போனதலைமுறையான நாங்க தயாரா இருக்கோம்… இந்த தேர்தல்ல தனி மெஜாரிட்டில ஜெயிச்சு சுந்தரமூர்த்தி ஐயாவோட கனவை உண்மையா மாத்தி காட்டுவோம்” என்று பூரிப்புடன் பேச அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியுடன் அதை ஆமோதித்தனர்.
இவ்வளவையும் காண காண ராமமூர்த்திக்கு உள்ளுக்குள் எரிச்சலோ எரிச்சல்!
ஆனாலும் அனைவரும் பாராட்டும் போது, தான் மட்டும் அமைதி காத்தால் அதற்கு தப்பர்த்தம் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் வேண்டாவெறுப்பாய் அண்ணன் மகனை புகழ்ந்து வைத்தார்.
ஒருவழியாக பொதுக்கூட்டம் முடிவடையவும் அனைவரும் கலைய யாழினியின் உதவியாளர் ஏதோ முக்கிய அலுவல் பற்றி கூறவும் அவள் கிளம்பிவிட ராமமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் மட்டும் அந்த அறையில் மிச்சமிருந்தனர்.
வெளியேற எத்தனித்தவரை “சித்தப்பா கொஞ்சம் நில்லுங்க.. உங்க கூட நான் கொஞ்சம் பேசணும்” என்ற அருள்மொழியின் குரல் தடுத்து நிறுத்தியது.
இவன் என்ன பேசப் போகிறான் என்ற திடுக்கிடலோடு ஆதரவாளர்களை அனுப்பிவிட்டு அவனருகே வந்தவரை “வாங்க ஆபிஸ் ரூம்கு போய் நிதானமா பேசலாம்” என்று அழைத்துச் சென்றான் அருள்மொழி.
நேரே முன்னொரு காலத்தில் சுந்தரமூர்த்தியின் அலுவலக அறையாக இருந்த அறைக்குள் அவருடன் பிரவேசித்தவன் வெகு உரிமையுடன் கட்சித்தலைவருக்குரிய இருக்கையில் அமரவும் ராமமூர்த்திக்கு உள்ளுக்குள் புகைந்தது.
அதுவும் அவனுக்கு முன்னே இருந்த ‘அருள்மொழி – தலைவர், தமிழக முன்னேற்ற கழகம்’ என்ற சிறிய பெயர்ப்பலகை அவருக்குள் ஒவ்வாமையை உண்டாக்கியது.
அருள்மொழி அவரது முகபாவனைகளைக் கவனித்தபடியே கோப்பு ஒன்றினை எடுத்து அவர் முன்னே வைத்தான். ராமமூர்த்தி புரியாமல் விழிக்கவும்
“கெட்வெல் குரூப் யூனிகார்ன்ல இன்வெஸ்ட் பண்ணுனது பத்தின ஃபுல் டீடெய்லும் இந்த ஃபோல்டர்ல இருக்கு… அண்ட் இது நீங்க தொழில்துறை அமைச்சரா இருந்தப்ப கெட்வெல் குரூப்போட சிஸ்டர்ன் கன்சர்ன்கு டெண்டர் அலாட் பண்ணுனது சம்பந்தப்பட்ட பேப்பர்ஸ்… இது வெறும் சாம்பிள் தான்… மெயின் டாக்குமெண்ட்ஸ் ஆர் ஆன் தி வே” என்று கூறிவிட்டு மற்றொரு கோப்பினையும் மேஜை மீது வைத்துவிட்டு அதனருகே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தில் தந்தையுடன் சிரித்தபடி நின்றிருந்த ஆதித்யனை பொருள்விளங்கா பார்வை பார்த்தான் அருள்மொழி. அடுத்த நொடி சித்தப்பாவின் முகத்தில் அவனது பார்வை நிலைத்தது.
ராமமூர்த்தி தனது மூக்குக்கண்ணாடியைக் கழற்றி மாட்டிக்கொண்டார். உலர்ந்த உதடுகளை நாவினால் ஈரப்படுத்திக் கொண்டார். தொண்டையும் வறண்டு போயிருக்க வேண்டும். அதை எச்சில் விழுங்குகையில் அசைந்த தொண்டைப்பகுதி தசைகளை வைத்து கண்டுகொண்டான் அருள்மொழி.
ஒரு மனிதன் எம்மாதிரியான சூழலில் இவ்வாறு எதிர்வினையாற்றுவான் என்பதை புரிந்துகொள்ள முடியாதளவுக்கு அருள்மொழி ஒன்றும் அறிவீனன் இல்லையே!
இந்த மனிதரிடம் ஏதோ தவறு உள்ளது! அந்தத் தவறுக்கு தனது மூத்த சகோதரனும் உடந்தை! இவ்விருவர் செய்த தவறு தந்தைக்குத் தெரிந்தே நடந்தேறியிருக்கிறது!
எனினும் செய்தவரின் வாய் வார்த்தையில் அதை உறுதி செய்துகொள்ள விரும்பி காத்திருந்தான் அவன்.
ராமமூர்த்தி மெதுவாய் இயல்புநிலைக்குத் திரும்பியவர் “இதெல்லாம் பழைய டீலிங் அருள்… அண்ணனுக்கும் இத பத்தி நல்லா தெரியும்… அரசியல்ல இந்த மாதிரி டீலிங்கெல்லாம் சகஜம் அருள்… கவர்மெண்ட் டெண்டரை அவங்களுக்குக் குடுத்தா பதிலுக்கு அவங்க பணமா நமக்குத் திருப்பிக் குடுக்குறது தான் வழக்கமா இருந்துச்சு… இத மாத்துனவன் நம்ம ஆதி தான்! பணமா குடுத்தா என்னைக்கு இருந்தாலும் மாட்டிப்போம்னு சொல்லி யூனிகார்ன் குரூப்ல புதுசா ஆரம்பிச்ச தொழில்ல முதலீடா நமக்கான பங்கை வாங்க சொன்னவன் சாட்சாத் ஆதியே தான்!” என்று அவசர அவசரமாய் கூறினார்.
இறந்தவன் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கும் எண்ணம்! இத்தனைக்கும் ஆதித்யன் ஒன்றும் நீதி வழுவாதவன் இல்லை என்பதை அருள்மொழியே அறிவான்! ஏனெனில் அடிப்படையில் அவனும் ஆதித்யனைப் போலவே ஒரு வணிகன்! வணிகத்தின் நீதி என்பதே இலாபம் சம்பாதிப்பது மட்டும் தான் என்பது எழுதப்படாத விதி! அதை கடைபிடிப்பவனுக்கு முதலீட்டைப் பெருக்கும் எண்ணமிருந்தது தவறில்லை என்பது அருள்மொழியின் கருத்து!
ராமமூர்த்தியும் ஆதித்யனும் இவ்வாறு யூனிகார்ன் குழுமத்தின் வாயிலாக செய்த பணப்பரிவர்த்தனைகள் தவறு என்று அவன் சொல்லவில்லை. அந்த நிகழ்வுகளுக்குச் சற்றும் சம்பந்தமற்ற தான், கைதான சமயத்தில் ராமமூர்த்தி தரப்பிலிருந்து யாருமே தன்னை சந்திக்கவில்லை என்பதையும் பழைய ஒப்பந்தங்கள் குறித்து ராமமூர்த்தி மூச்சு கூட விடவில்லை என்பதையும் யாழினி கூற கேட்டவனின் மனம் சித்தப்பாவின் நடவடிக்கையை சோதித்துப் பார்க்கச் சொல்லவும் தான் கோப்புகளை அவரிடம் காண்பித்து பேசினான்.
அவர் அதில் பதற்றமடையவும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் “டென்சன் ஆகாதீங்க சித்தப்பா… இந்த கேஸ் இன்னும் பெருசானா மாட்டப் போறது நீங்க தான்… அது நடக்க நான் விடமாட்டேன்… ஏன்னா எனக்கு இப்ப கட்சியோட எதிர்காலம் தான் முக்கியம்… ஊழலை ஒழிக்கப் போறேன்னு நாளைக்கு நான் பிரச்சாரம் பண்ணுனா உன் கட்சிலேயே ஊழல் செஞ்சவன் இருக்கானேனு யாரும் என்னை பாத்து விரல் நீட்டி பேசிடக்கூடாதுங்கிறது மட்டும் தான் இப்போதைக்கு என்னோட கவலை… சோ இனி வர்ற காலங்கள்ல பியாண்ட் மை நாலேட்ஜ், கட்சில இருக்குற யாரும் எந்த டீலிங்கும் பேசக்கூடாது… எதுவா இருந்தாலும் முதல்ல என்னோட கவனத்துக்கு வரணும்… இத சொல்ல தான் உங்கள கூட்டிட்டு வந்தேன்… இது மட்டுமில்ல, இன்னும் இந்தக் கட்சில யார் யார் என்னென்ன ஏமாத்துவேலை பண்ணிருக்காங்கங்கிற டீடெய்ல்ஸ் முழுக்க இந்த மாசத்துக்குள்ள என் கைக்கு வந்துடும்… அத வச்சு தான் அவங்க எல்லாரையும் என்னோட கண்ட்ரோலுக்கு கொண்டு வரப்போறேன்” என்றான் நிதானமாக.
ராமமூர்த்தி திடுக்கிட்டு நிமிர்ந்தவர் “என்னப்பா இது? அரசியலுக்கு வர்றதே இப்பிடி சம்பாதிக்கிறதுக்கு தானே! அத வச்சு கட்சியாளுங்கள மிரட்டுறது தப்புப்பா” என்று படபடக்கவும்

“ஈசி ஈசி! ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறீங்க? நான் இத வச்சு யாரையும் மிரட்டப்போறதில்ல சித்தப்பா… யாரும் எனக்கெதிரா போகாத வரைக்கும் இந்த எவிடென்ஸ் எல்லாமே என் கிட்ட பத்திரமா இருக்கும்… எனக்கு வேண்டியது பணம் இல்ல… ஏன்னா என்னோட பிசினஸ் எனக்குக் கொட்டிக் குடுக்காத பணத்தையோ பாலிடிக்ஸ் குடுத்துடப் போகுது? ஐ வான்ட் பவர்… அதுக்கு குறுக்க யாரும் வந்தா சமாளிக்கிறதுக்கான வெப்பன்ஸ் தான் இந்த எவிடென்ஸ் எல்லாமே! சோ நீங்க ஒரி பண்ணாம கட்சிவேலைய கவனிங்க… ரொம்ப நேரம் உங்கள போரடிச்சிட்டேன் போல… இப்போ நீங்க கிளம்பலாம்” என்று இலைமறைக்காயாக எச்சரிக்கை விடுத்து அவரை அனுப்பி வைத்தான்.
ராமமூர்த்தி சிந்தனைவயப்பட்டவராய் வெளியேற தனது சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டவனின் கரங்கள் நாற்காலியின் கைப்பிடியை அழுத்தமாய் வருடத் துவங்கியது.
**********
இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சில் தலைமை அலுவலகம்…
வானதி பரபரப்பாக அங்கிருந்த வெள்ளை போர்டில் எழுதிக் கொண்டிருந்தாள். அதில் மூன்று பிரிவுகளில் எண்கள் எழுதப்பட்டிருக்க அவளது குழுவினர் அதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
“நாளைக்கு ஆஷிஸ் வித்தியாலயால நடக்கப் போற ஃபங்சனுக்கு அருள்மொழி சீஃப் கெஸ்டா போறார்… ஆக்ஸ்வலி அவர் அங்க போகணுங்கிறதுக்காகவே அரேஞ்ச் பண்ணுன ஃபங்சன் அது… அங்க இருக்குற ஹையர் செகண்டரி ஸ்டூடண்ட்சோட அவர் கலந்துரையாடப் போற வீடியோ நமக்கு ரொம்ப முக்கியம்… சோ அந்த ஏரியாக்கு வீடியோ வேன்ஸ் அனுப்ப வேண்டியது அவசியம்” என்றவள் மார்க்கரால் வெள்ளை போர்டில் ஆங்கிலத்தில் VV என்று எழுதப்பட்டிருந்த பிரிவில் எத்தனை வேன்களை அனுப்ப வேண்டும் என்பதை எழுத குழுவினரும் அதை குறித்துக் கொண்டனர்.
குழுவிலிருந்து ஒரு பெண் எழுந்து “டோர் டு டோர் கேன்வாஸிங்குக்கு தேவையான பேட்ஜ், பேம்ப்லட்ஸ் டிசைன்லாம் முடிஞ்சிடுச்சு நதி… சோ அதுவும் எந்தெந்த ஏரியாக்கு எவ்ளோனு சொல்லிடலாமே” என்று கூற வெள்ளை போர்டில் DD என்று எழுதப்பட்டிருந்த பிரிவில் இப்போது எண்கள் நிரம்ப ஆரம்பித்தது.
மூன்றாவது பிரிவான Influencer Call பகுதியில் மார்க்கரால் தட்டியவள் “நம்ம டீடெய்ல் கலெக்ட் பண்ணுன தொகுதிகள் போக பேலன்ஸ் இருக்குற கான்ஸ்டிடுவன்சிஸ்ல இருக்குற இன்ஃப்ளூயன்சர்ஸ்கு கால் பண்ணி மக்களோட மனநிலை எப்பிடி இருக்கு, என்ன செஞ்சா அவங்க அருள்மொழி பக்கம் சாய்வாங்கங்கிற டீடெய்ல்ஸை கலெக்ட் பண்ணிடுங்க” என்று டெலிகாலர்களின் தலைமைப்பொறுப்பாளருக்குக் கட்டளை விதித்தாள்.
அன்றைய மீட்டிங் முடிந்துவிட நிதர்சனாவுடன் தனது அலுவலக அறையை அடைந்தாள் வானதி.
“திருச்சி டிஸ்ட்ரிக்ட்ல இருக்குற தொகுதிகள்ல மட்டும் கொஞ்சம் இண்டர்ன்ஸ் ரெக்ரூட் பண்ணுனா நல்லா இருக்கும் நதி… அந்த ஏரியால டேட்டா கலெக்ட் பண்ணுறதுக்கு இன்ஃப்ளூயன்சர்ஸ் மட்டும் போதாதுப்பா”
நிதர்சனாவின் யோசனையை ஏற்ற வானதி “ஓகே! அப்ப இண்டர்ன்ஷிப்புக்கு கால்ஃபர் பண்ணுறது சம்பந்தமா ஹெச்.ஆர் டிப்பார்ட்மெண்ட் கிட்ட நான் பேசிடுறேன்… எனி வே சென்னை சரவுண்டிங்ல இன்ஃப்ளூயன்சர்ஸோட ஒர்க்ஸ் ரொம்ப திருப்தியா இருக்கு சனா” என்று கூறிவிட்டு மனிதவளத்துறையின் தலைமைக்கு அழைத்து இண்டர்ன்ஷிப் குறித்த விவரத்தைத் தெரிவித்து விட்டாள்.
இன்ஃப்ளூயன்சர்கள் என்பவர்கள் ஒவ்வொர் தொகுதியிலும் ஐ.பி.சிக்காக கள விவரங்களைச் சேகரிப்பவர்கள். அவர்கள் சேகரித்துத் தரும் தகவல்களும் தேர்தல் வியூகம் அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த இன்ஃப்ளூயன்சர்களில் மாணவர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என அனைத்துப் பிரிவினரும் அடக்கம்.
அவர்களிடம் தகவலைச் சேகரிக்கும் டெலிகாலர்கள் அவர்களின் பொறுப்பாளர்களிடம் ரிப்போர்ட் செய்யவேண்டும். அந்தப் பொறுப்பாளர்கள் தலைமை பொறுப்பாளருக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க அந்த அறிக்கையே பொலிட்டிக்கல் இண்டலிஜென்ஸ் எனப்படும் அரசியல் நுண்ணறிவு பிரிவினரிடம் அனுப்பப்படும்.
இங்கே வெள்ளை போர்டில் எழுதப்படும் அனைத்தையும் செய்து முடிப்பவர்கள் தான் ஃபீல்ட் டீம் எனப்படும் களப்பணியாளர்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி தொண்டர்களின் உதவியும் அவசியம். ஆனால் த.மு.க கட்சி விசயத்தில் அது இழுபறியாகவே இருந்தது.
காலங்காலமாக கடைபிடிக்கப்படும் தேர்தல் யுத்திகளை விடுத்து அதற்கென கார்ப்பரேட் கம்பெனியை அகத்தியன் அணுகியது கட்சியினரில் பழமைவாதிகளுக்குப் பிடிக்கவில்லை.
“நாங்க கட்சிக்காக வேர்வை சிந்தி உழைக்கிற மாதிரி அந்த கம்பெனிக்காரங்க உழைப்பாங்களா? எங்களுக்கும் இந்தக் கட்சிக்கும் இடையில பல வருச உறவு இருக்கு… நேத்திக்கு வந்த கம்பெனிக்காரங்க எங்களுக்கு ஆர்டர் போடுறத எங்களால ஏத்துக்க முடியாது”
இவை அனைத்து மாநில தேர்தல்களிலும் அரங்கேறும் காட்சிகள் தான்! பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்கியம் கேட்பதற்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம்! ஆனால் நடைமுறையில் புதியன புகுவதற்குள் அதை புகுத்த நினைப்பவர்கள் ஒரு வழியாகி விடுவார்கள்!
தமிழக முன்னேற்ற கழகம் கட்சியின் விவகாரத்திலும் அதே தான் நடந்தேறியது. அரசியல் நுண்ணறிவு பிரிவில் இருந்த நிதர்சனா தங்களது செயல்திட்டங்களில் சில, கட்சித்தலைமையால் ஒதுக்கப்படும் போது கடுப்பில் வானதியிடம் புலம்புவதுண்டு.
அவளும் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பி வைப்பாள்.
மனிதர்களின் இயல்பான குணம் புதியவற்றை அத்துணை எளிதில் அவர்களை ஏற்றுக்கொள்ளவிடாது. அப்படியே பிரயத்தனப்பட்டுப் புதுமையைத் திணித்தாலும் பழம்பெருமை பேசுவதில் பிடித்தம் உள்ளவர்களுக்கு புதுமையினால் நன்மை விளைந்தாலும் அந்நன்மைகள் ருசிப்பதில்லை.
அதற்கு அரசியல் மட்டும் விதிவிலக்கில்லை என்பது வானதிக்கு நன்றாகவே தெரியும் இத்தனை சவால்களையும் தாண்டி தான் யாழினியும் அகத்தியனும் ஐ.பி.சியுடனான தங்களது ஒப்பந்தத்தை இப்போது வரை காப்பாற்றி வருகின்றனர் என்பதையும் அவள் அறிவாள்.
இதோ இப்போது இன்ஃப்ளூயன்சர்கள் தரும் தரவுகள் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை தமிழக முன்னேற்ற கழகம் கட்சித்தலைமைக்கு அனுப்பும் வேலை அவளுக்கு மிச்சமிருக்கிறது.
அவர்கள் சேகரிக்கப் போகும் விவரங்கள் இவை தான்!
- குறிப்பிட்ட தொகுதியில் செல்வாக்கு மிக்க கட்சிப்பிரமுகர் யார்?
- அவருக்கு ஆதரவு எத்தனை சதவிகிதம்? எதிர்ப்பு சதவிகிதம் என்ன?
- அவர் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கும் விசயங்கள்
- கடந்த ஐந்தாண்டுகளில் அவர் மீது ஏதெனும் வழக்கு பதிவாகியுள்ளதா? அந்த வழக்கினால் அவரது செல்வாக்கு சரிந்துள்ளதா?
இந்தத் தரவுகளை அடிப்படையாக வைத்து அவளது தலைமையில் தயாராகும் அறிக்கை தான் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கப் போகிறது!
இவற்றை சிந்தித்தபடியே தனது கணினியின் திரையைப் பார்த்தவளின் விழிகள் டெஸ்க்டாப்பில் அவள் வைத்திருந்த “TMK Party’s Stronghold in Tamilnadu” என்ற டாக்குமெண்டைத் திறந்தாள்.
தோராயமாக 140 தொகுதிகளைக் கொண்ட அட்டவணை ஒன்று அவள் கண் முன் விரிய அவளது விழிகள் நிலைத்தது என்னவோ ‘மேலூர் – மதுரை’ என்ற கட்டத்தின் மீது தான்!
“மதுரை எங்கய்யாவோட கோட்டை… இங்க ஒரு செங்கல்லை விக்கணும்னா கூட அவரைக் கேக்கணும்… அப்பிடி இருக்குறப்ப அவரு ஷாப்பிங் மால் கட்டணும்னு ஆசைப்பட்ட லேண்டை நீ வாங்கிடுவியா? வாங்கிட்டு அதுல நிம்மதியா வீடு கட்டி வாழ்ந்துடுவியா? நீ வாங்கப் போறது துண்டு நிலம்… அதுக்காக எங்கய்யா முழு ஏரியாவையும் விட்டு வைக்க முடியுமா? மகேந்திரா நீ ஒரு சாதாரண பொதுப்பணித்துறை எஞ்சினியர்யா… போதாததுக்குக் காலேஜ் படிக்குற பொம்பளப்புள்ள வேற இருக்கு… பாத்து சூதானமா நடந்துக்க… இல்லனா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ”
அசரீரியாய் கேட்ட மிரட்டலில் அன்று போல இன்றும் வானதியின் மோவாய் இறுகியது. கரங்களை மேஜையில் அழுத்தமாய் பதித்தவள் “அந்தக் கோட்டையோட கடைசி செங்கல் வரைக்கும் உருவி அதை தரைமட்டமாக்க தான நான் இருக்கேன்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று கடினக்குரலில் உரைத்தவாறு மீண்டும் ‘மேலூர் – மதுரை’ என்ற வார்த்தைகளையே பார்க்க ஆரம்பித்தாள் தீராத வஞ்சினத்துடன்.
பழிவெறி என்ற உணர்வுக்கு ஆட்படாத மனிதர்கள் மிகவும் குறைவு. என்றோ உங்களுக்கு நேர்ந்த தவறுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கிவிட்டால் அந்தத் தவறினால் உண்டான வலியிலிருந்து விடுபட்டுவிடுவோம் என நீங்கள் நம்பினால் கட்டாயம் நீங்கள் ஒரு அறிவிலி! ஏனெனில் ஒரு முறை பழிவெறி படர்ந்த உங்களது மனதில் மீண்டும் நிம்மதியின் காலடி பதிவது கடினம்!
பழிவெறியானது நமது உணர்வு ரீதியான காயங்களை ஆற்றுவது போன்ற மாயையைக் கொடுத்தாலும் உண்மையில் அவற்றைக் குத்திக் கிளறி நமது வேதனையை அதிகமாக்கவே செய்யும்! இதில் வேடிக்கை என்னவென்றால், பழி வாங்கிய பிறகு ஜெயித்து விட்டதாக கொக்கரிக்கும் மூளைக்கு அந்த வெற்றியால் கடந்த காலத்தில் அனுபவித்த வேதனை எதுவும் மாறப்போவதில்லை என்பது புரிவதே இல்லை!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction