“தவறுகளைச் செய்யத் தூண்டுவது அதிகாரமல்ல, பயம் மட்டுமே! அதிகாரத்திலிருப்பவர்களை அந்த அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் தான் தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது. அதிகாரத்தின் மீதான பயமோ அதற்குட்பட்டவர்களைச் சிதைத்துவிடுகிறது”
-ஆங் சான் ஷ்யூகி
அருள்மொழியின் பதினான்கு நாட்கள் சிறைவாசம் அவனுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது. சிறைவாசத்தின் இடையே கட்சிப்பிரமுகர்களுக்கு அவனைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது கூட முக்கியச் செய்தியாக சில நாட்களுக்குப் பேசப்பட்டது.
அவனது வழக்கறிஞரும் யாழினியும் அகத்தியனுடன் அருள்மொழியைச் சந்திக்க இரு முறை வருகை தந்தனர். அடுத்தக்கட்ட நீதிமன்ற விசாரணையில் அவனுக்குக் கட்டாயம் ஜாமீன் கிடைத்துவிடும் என நம்பிக்கையுடன் உரைத்தார் வழக்கறிஞர்.
இதற்கிடையே வழக்கறிஞர் குறித்த விவரங்களை வானதி விசாரித்ததாக யாழினி கூறியபோது அவளுக்கு ஏன் தனது வழக்கறிஞர் பற்றிய விவரங்கள் தேவைப்படுகிறது என அருள்மொழியின் மூளை சந்தேகத்துடன் கேட்டுக்கொண்டது.
அவர்கள் விடைபெற்றதும் அவன் மனம் முழுவதும் அவளைப் பற்றிய சிந்தனைகளே! தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தன்னை இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கலாம் என கனவு கண்டிருப்பாள்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இப்போது தான் சிறையில் அடைக்கப்பட்டதும் எங்கே தேர்தல் வரை உள்ளேயே இருந்து விடுவானோ என்ற கவலை வந்திருக்கும். அவனுக்காக இல்லையென்றாலும் வாங்கிய காசுக்காகவேனும் அவள் கவலைப்பட்டுத் தானே ஆகவேண்டும் என்ற எண்ணம்!
அவள் நிறையவே தான் மாறிவிட்டாள் அருள் என்றது அவனது மனசாட்சி. அப்படியா என்று உடனே கேள்வி கேட்டது மூளை.
அவளது மாற்றத்தை உணர்ந்த மூளையோ இதற்கு முன்னர் அவளைச் சந்தித்திருந்த கல்லூரி தருணங்களை எண்ணிப் பார்க்கத் துவங்கியது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் மவுண்ட் கல்லூரியில் பேச்சிலர் ஆப் மாஸ் மீடியா மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது கல்லூரி நூலகத்தில் தான் அவளை முதன் முதலாகச் சந்தித்தான் அருள்மொழி.
அப்போது அவள் பொலிட்டிக்கல் சயின்ஸ் இளங்கலை முதலாமாண்டு மாணவி. முகத்தை மறைத்தபடி புத்தகத்துடன் அமர்ந்திருந்தவளைக் கண்டுகொள்ளாது வழக்கமான அலட்சியத்துடன் நண்பர்கள் சூழ அவள் அமர்ந்திருந்த பெரிய மேஜையில் கிடந்த இருக்கையில் அமர்ந்தான் அருள்மொழி.
“மச்சி நல்லவேளை அட்வர்டைசிங் சப்ஜெக்ட்ல இருந்து தப்பிச்சிட்டோம்… கன்ஸ்யூமர் பிஹேவியர், மீடியா ப்ளானிங்னு இந்த வாரம் முழுக்க மண்டை காயுதுடா”
சொன்னவன் அருள்மொழியே தான்! அவன் சொன்னதும் அவனருகே அமர்ந்திருந்தவன் அவனுக்கு ஹைஃபை கொடுத்த சத்தமே யாரோ கன்னத்தில் பளாரென அறைவது போன்ற அதிர்வை உண்டாக்க முகத்தை மறைத்திருந்த புத்தகத்தை மெதுவாக இறக்கினாள் வானதி.
சுழித்திருந்த புருவத்துடன் அருள்மொழி மற்றும் அவனது நண்பர் குழாமை முறைத்தவள்
“எக்ஸ்யூஸ் மீ! முதல்ல லைப்ரரில சைலண்டா இருக்கணும்ங்கிற பேஸிக் மேனரை கத்துக்கோங்க… அப்புறமா கன்ஸ்யூமர் பிஹேவியரைப் பத்தி படிக்கலாம்” என்று எரிச்சலுடன் கூறிவிட்டு புத்தகத்துடன் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அருள்மொழிக்கோ புத்தகம் மறைத்த வதனத்தினளான இந்தச் சிறுபெண் தன்னையும் தனது நண்பர்களையும் திட்டிவிட்டு மன்னிப்பு வேண்டாமல் அலட்சியமாய் வெளியேறுகிறாளே என்ற திகைப்பு!
இது வரை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் அவனைச் சீனியர் என்று அழைத்து மரியாதையுடன் கடப்பது தான் வழக்கம்! முதுகலை மாணவர்களோ சினேகப்புன்னகையுடன் அவனிடம் பழகுவார்கள்!
அதற்கு காரணம் அவனது தந்தையின் அரசியல் பின்புலம் தான்! ஆனால் இன்று ஐந்தடி உயர புடலைங்காய்கு லாங் ஸ்கர்ட் போட்டு விட்டது போல தோற்றமளித்த ஒரு மாணவி அவனையும் அவனது நண்பர்களையும் திட்டிவிட்டு சென்றுவிட்டாள்!
“டேய் கொசு மாதிரி இருந்துட்டு நம்மளையே கலாய்ச்சிட்டுப் போகுது பாருடா”
எகிறிய நண்பனை அடக்கியவன் நேரே சென்றது நூலகரிடம். அவர் முன்னே இருந்த கணினியில் இப்போது வெளியேறியவளின் விவரம் கண்டிப்பாக இருக்கும். அடுத்த நபர் வெளியேறும் வரை அவளைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பக்கத்தை நூலகர் மூடமாட்டார் என்பதால் நண்பர்களை அவரிடம் புத்தகங்கள் குறித்து பேச சொல்லிவிட்டு கணினி திரையைக் கவனித்தான் அருள்மொழி.
Name : M. Vanathy
Dept : BA Political Science – First Year
Book Name : Political Theory by D.C.Bhattacharyya
Mobile No : +91 **********
வேண்டிய விவரங்களை மனனம் செய்தவன் நண்பர்களுடன் அங்கிருந்து விடைபெற்றான்.
அதன் பின்னர் அவளைச் சந்தித்த தருணத்தை எண்ணிப் பார்த்தவனுக்குச் சிறைச்சாலை என்னவோ மவுண்ட் கல்லூரியின் கேரிடார் போல தோற்றமளிக்க அருள்மொழிக்குத் தனது இப்போதைய நிலையை நினைத்துச் சிரிப்பு தான் வந்தது.
அன்றிருந்த வானதியிடம் கொட்டிக் கிடந்த அலட்சியத்திற்கும் இன்றைக்கு அவள் காட்டும் அலட்சியத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது! அவளது இந்த அலட்சியம் ஒருவேளை பிறவிக்குணமாக இருக்கலாம்! ஆனால் அது தான் அருள்மொழிக்கு எரிச்சல் மூட்டுகிறது!
அந்த எரிச்சலுக்குக் காரணகர்த்தாவான வானதியோ ஐ.பி.சியின் தலைமை அலுவலகத்தில் அவனது தேர்தல் வியூகத்திற்கான வேலைகளில் மும்முரமாகி இருந்தாள்.
அருள்மொழியின் கைதினால் தேர்தல் வியூகத்தில் எவ்வித சுணக்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது ஏ.கேவின் கட்டளை. அதை மீறாதவர்களாய் சென்னை வார் ரூமில் வேலையில் மூழ்கியிருந்தனர் ஐ.பி.சியின் சென்னைக் குழுவினர்.
அன்றைய தினம் ஐ.பி.சி அலுவலகத்திற்கு யாழினி வருகை தந்திருந்தாள். கூடவே த.மு.க கட்சியின் ஐ.டி.விங் மாநில பொறுப்பாளரும் வருகை தந்திருந்தார். யாழினியிடம் அருள்மொழியின் ஜாமீன் குறித்து விசாரித்தாள் வானதி.
“நெக்ஸ்ட் ஹியரிங்ல கண்டிப்பா ஜாமீன் கிடைச்சிடும்னு எங்க அட்வகேட் நம்பிக்கையா சொல்லுறார் வானதி… கேஸ்ல சொல்லப்பட்ட இன்சிடெண்ட்ஸ் நடந்தப்ப அருளுக்கும் யூனிகார்ன் குரூப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லங்கிறத முகாந்திரமா வச்சு ஜாமீனுக்கு அப்ளை பண்ணலாம்னு சொன்னார்… லாஸ்ட் ஹியரிங்ல வெறுமெனே இந்த கேஸுக்கும் அருளுக்கும் சம்பந்தமில்லனு சொன்னது மாதிரி இல்லாம அவர் சொல்லுற பாயிண்ட்சுக்கு ஏத்த மாதிரி வலுவான எவிடென்சையும் கலெக்ட் பண்ணிருக்கார்… சோ எனக்கும் இந்தத் தடவை ஜாமீன் கிடைச்சிடும்னு நம்பிக்கை வந்துடுச்சு… ஒரு தடவை ஒரே ஒரு தடவை ஜாமீன்ல அருள் வெளிய வந்துட்டா போதும்… அதுக்கு மேல இந்த கேஸை எப்பிடி நீர்த்து போக வைக்கிறதுனு எங்க அட்வகேட் பாத்துப்பார்”
யாழினி இவ்வாறு கூறவும் வானதி அருகே நின்றிருந்த நிதர்சனா வானதியிடம் கண்களாலேயே பார்த்தாயா, நீ ஆதாரம் கொடுக்காமலே அருள்மொழி வெளியே வரப் போகிறான் என்க அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவளைத் தன்னருகே குனியுமாறு வேண்டினாள் வானதி.
குனிந்தவளின் செவியில் “ஆப்டர் ஆல் ஒரு சாதாரணப்பொண்ணான நானே இவ்ளோ டாக்குமெண்ட்ரி எவிடென்ஸ் கலெக்ட் பண்ணுறப்ப இவங்க அப்பாயிண்ட் பண்ணிருக்குற லாயர், இந்தியாவுலயே பெஸ்ட் லாயர்னு பேர் வாங்குனவர்… அவருக்கு இதெல்லாம் ஜுஜூபி… நெக்ஸ்ட் ஹியரிங்குக்கு அப்புறம் ரிலீஸ் ஆகுறவன் என்ன மாதிரி மைண்ட்-செட்ல இருப்பான்னு பாக்குறதுக்கு தான் நான் வெயிட் பண்ணுறேன்” என்று முணுமுணுக்க நிதர்சனாவின் சிரமும் அசைந்தது.
பின்னர் யாழினியிடம் திரும்பியவள் “நானும் அருள் சாருக்கு ஜாமீன் கிடைக்குறதுக்கு ப்ரே பண்ணிக்கிறேன் மேம்… நம்மளோட நெக்ஸ்ட் லெவல் ப்ளானை உங்க கிட்ட எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுறதுக்கு தான் இந்த மீட்டிங்” என்ற முகவுரையுடன் தனது அடுத்த கட்ட திட்டத்தை விளக்க ஆரம்பித்தாள்.
ஐ.டி.விங் பொறுப்பாளரிடம் “உங்களோட ஐ.டி விங்குக்கு கீழ எத்தனை ஃபேஸ் புக் பேஜஸ், குரூப்ஸ் வரும்? அதுல என்ன மாதிரியான ஆக்டிவிட்டீஸ் நடந்துட்டிருக்கு? டிவிட்டர் ஹாண்டில் பண்ணுறது யார்? ரெகுலரா அதுல ட்வீட்ஸ், ட்ரெண்டிங்ஸ் நடக்குதா? உங்க கண்ட்ரோல்ல இருக்குற யூடியூப் சேனல்ஸ் லிஸ்ட் இருக்குதா?” என்று வரிசையாக கேள்விகளைக் கேட்டுத் தள்ள அவரும் சளைக்காது பதிலளித்தார்.
அவர்களது ஐ.டி.விங்கின் கட்டுக்கோப்பைக் கண்டு திகைத்த வானதி அதை கூறியும் விட பொறுப்பாளரோ “ஆல் கிரெடிட்ஸ் கோ டூ ஆதி சார்… அவர் இந்த ஐ.டி விங்கை ஸ்ட்ராங் ஆக்குறதுக்கு கிட்டத்தட்ட மூன்றரை வருசம் ஹார்ட்வொர்க் பண்ணிருக்கார் மேம்… அதோட விளைச்சல மட்டு தான் நீங்க இப்ப பாக்குறீங்க” என்றார் தன்னடக்கத்துடன்.
அதை கேட்ட யாழினியின் வதனம் பெருமிதத்தில் மிளிர்ந்தது. வானதியும் அவரது கூற்றை ஆமோதித்தவள்
“கண்டிப்பா… இப்ப நம்மளோட மெயின் டார்கெட் யார்னா எந்தக் கட்சியும் சாராம இருக்குற நடுநிலைவாதிகள்… அவங்களோட ஓட்டு நமக்கு வேணும்னா அவங்களுக்கு அருள்மொழி மேல ஒரு சாப்ட் கார்னர் வரணும்” என்றாள்.
அவளைத் தவிர மற்ற மூவருக்கும் அவள் சொல்ல வருவது புரிந்தால் தானே! எனவே புரியும் விதமாக விளக்க ஆரம்பித்தாள்.
“ஒரு க்ளாஸ் ரூம் இருக்கு… அங்க ஸ்டூடண்ட்ஸ் ரெண்டு குரூப்பா பிரிஞ்சிருக்காங்க… அந்த ரெண்டு குரூப்பும் எதுக்கெடுத்தாலும் போட்டி போடுவாங்க… சண்டை போடுவாங்க… அது ஹோம் ஒர்க் செஞ்சு கிளாஸ் டீச்சர் கிட்ட குட்நேம் வாங்குறதா இருந்தாலும் சரி, செய்யாம வந்து அவங்க கிட்ட பனிஷ்மெண்ட் வாங்குறதா இருந்தாலும் சரி…. ஒருத்தருக்கு இன்னொருத்தர் சளைச்சவங்க இல்லனு ப்ரூவ் பண்ணிட்டே இருப்பாங்க… அதே கிளாஸ்ல மூனாவதா ஒரு குரூப்பும் இருக்கு… அது இந்த ரெண்டு குரூப் கூடவும் சேராம தான் உண்டு, தான் வேலையுண்டுனு இருக்குற ஸ்டூடண்ட்ஸ் அவங்க… அப்ப அந்த கிளாஸ் லீடரை செலக்ட் பண்ணுறதுக்கான டைம் வருது… ரெண்டு குரூப்லயும் ஒவ்வொரு ஸ்டூடண்ட் எழுந்து நிக்குறாங்க… கிளாஸ் டீச்சரும் அவங்களுக்கு யாரெல்லாம் சப்போர்ட் பண்ணுறீங்கனு ஹேண்ட் ரெய்ஸ் பண்ணச் சொன்னப்ப ரெண்டு பேருக்கும் ஈக்வல் சப்போர்ட் வருது… ஆனா மூனாவதா இருக்குற குரூப் ரெண்டு பேருக்குமே சப்போர்ட் பண்ணாம வழக்கம் போல அமைதியா இருக்காங்க… அவங்களோட சப்போர்ட் வேணும்னா அந்த ரெண்டு க்ரூப்ல ஒரு குரூப் மேல அவங்களுக்கு மதிப்பு வரணும்… அப்பிடி இருக்குறப்ப ஏ க்ரூப் ஸ்டூடண்ட்ஸ்லாம் சேர்ந்து பி குரூப்ல கிளாஸ் லீடருக்கு நின்ன பையனை புல்லி பண்ணுறாங்க… அவனோட குரூப் இல்லாத நேரத்துல தனியா மாட்டுனவனை கிண்டல் பண்ணி அவங்க பண்ணுன டார்ச்சரை மூனாவது குரூப்ல ஒரு ஆள் பாத்துட்டான்…
அவன் மறுநாள் தன்னோட குரூப் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட பி குரூப் ஸ்டூடண்ட் பத்தி சொல்லவும் அவங்க எல்லாருக்கும் அந்த பி குரூப் ஸ்டூடண்ட் மேல இரக்கம் வந்துடுச்சு… தனியா சிக்குனவனை டார்ச்சர் பண்ணுன ஏ குரூப் ஸ்டூடண்ட்ஸ் இப்போ மூனாவது குரூப்புக்கு வில்லன்களா தெரிஞ்சாங்க… அன்னைக்கு கிளாஸ் டீச்சர் மறுபடியும் ஹேண்ட் ரெய்ஸ் பண்ணச் சொன்னப்ப பி குரூப்புக்கு சப்போர்ட்டா தான் மூனாவது குரூப் ஸ்டூடண்ட்ஸ் கை தூக்குனாங்க… ஃபைனலி பி குரூப் ஸ்டூடண்ட் கிளாஸ் லீடர் ஆயிட்டான்… இப்போ புரியுதா?”
குட்டிக்கதையைக் கூறிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்த்தாள் வானதி.
யாழினியும் நிதர்சனாவும் அவள் கூற வருவதைப் புரிந்து கொண்டு புன்னகைக்க ஐ.டி.விங் பொறுப்பாளரும் தலையசைத்தார். இருந்தாலும் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினார்.
“ஆல்ரெடி அருள்மொழி சாரை டேமேஜ் பண்ணுற மாதிரி சோஷியல் மீடியால ஆப்போசிட் பார்ட்டி என்னென்னமோ பண்ணுறாங்க மேம்… இப்ப அதுக்கு நம்ம பதில் சொல்லாம இருந்துட்டா இந்த நடுநிலைவாதிகள் கவனம் அருள் சார் மேல திரும்புனு நினைக்கிறிங்களா?”
வானதி மறுப்பாய் தலையசைத்தவள் “அவங்களுக்கு நீங்க பதில் சொல்லணும்… ஆனா அதை அவங்க பாணியில சொந்த வாழ்க்கையோட முடிச்சு போட்டுச் சொல்லக்கூடாது… கருத்தியல் ரீதியான மோதல்னு ஒன்னு உண்டு… அதாவது எங்களுக்கு எதிரி அவங்களோட கருத்துக்கள் தானே தவிர அவங்க இல்லனு உங்க கண்ட்ரோல்ல இருக்குற சோஷியல் மீடியா டீம் மக்களுக்குப் புரியவைக்கணும்… தனிமனித தாக்குதல்களை எங்கயும் பண்ணக்கூடாது… அப்பிடி அவங்க தனிமனித தாக்குதல் பண்ணுற இடத்துல கருத்தியல் ரீதியா கேள்வி கேட்டுட்டு நகர்ந்துடணும்…
கூடவே அரசியல்ல எந்த மாதிரியான சிச்சுவேசன்ல அருள்மொழி இறங்குனார்ங்கிறத அடிக்கடி மக்களுக்கு நியாபகப்படுத்திட்டே இருக்கணும்… அப்பா அண்ணனை இழந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால செய்யாத தப்புக்கு ஜெயிலுக்குப் போனவர் மேல மக்களுக்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்கு… அத வளக்கணும்… அத வச்சு ஓட்டுக்களை கவர் பண்ணணும்… உங்களை மாதிரியே ஆப்போசீட் தரப்பும் சோஷியல் மீடியா டீம் வச்சிருப்பாங்க… அவங்களோட ஒவ்வொரு கண்டெண்டையும் உங்க கட்சி சாராத நடுநிலைவாதி பாக்குறப்பவும் ‘ச்சே! இந்த அருள்மொழிய ஏன் இவங்கல்லாம் ரவுண்ட் கட்டி அடிக்குறாங்கனு’ அருளுக்காக அவங்க ஃபீல் பண்ணணும்… அப்பிடி பண்ணனும்னா அதுக்கு நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? எதிர் தரப்பு ஆட்கள் செய்யுற ஒவ்வொரு விசயத்துக்கும் விளக்கம் குடுக்காம அருள்மொழி மக்களோட மக்களா பயணிக்கிற நிகழ்வுகளை அடிக்கடி அவங்க பார்வைக்குக் கொண்டு போறது தான்… சோ எதிர் தரப்பு ஏதோ சொந்தப்பகைய வச்சு அருள்மொழிய டார்கெட் பண்ணுறாங்கனு தோணும்… அதே நேரம் அருள்மொழியோ மக்களை பத்தி மட்டுமே யோசிக்கிறார்னு தோணும்… இது தான் நடுநிலைவாதிகளோட ஓட்டுக்களை அட்ராக்ட் பண்ணுற டெக்னிக்” என்று கூறிவிட்டு தனது ஆட்காட்டிவிரல் மற்றும் பெருவிரல் இரண்டையும் குவித்து அதில் வைத்திருந்த பேனாவைச் சுழற்றினாள்.
இப்போது அங்கிருந்த மூவரின் வதனமும் மிளிர்ந்தது. குறிப்பாக யாழினிக்கு இதையே தானும் கடைபிடித்தால் என்ன என்ற எண்ணம் உதயமானது.
வானதியிடம் அதை தெரிவிக்க “அப் கோர்ஸ் மேம்! ஆப்போசிட் தரப்பு உங்க மேல கண்டிப்பா சகதிய வாரி அடிப்பாங்க… நீங்க அதை துடைக்கிறதுல நேரத்த வேஸ்ட் ஆக்காம மக்களுக்காக நீங்க உழைக்கிறீங்கனு காட்டுங்க… அப்புறம் பாருங்க ரிசல்ட்டை… கூடவே ஆளுங்கட்சிக்காரங்களயோ மினிஸ்டர்களையோ உங்க கட்சியாளுங்க மீட் பண்ணுனா அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க சொல்லி ஸ்ட்ரிக்டா ஆர்டர் போடுங்க… அதுக்கு அப்புறம் மொத்த சோஷியல் மீடியாலயும் உங்க கட்சி புகழ் தான்! மார்க் மை வேர்ட்ஸ்” என்றாள் அவள்.
அம்முறை ஐ.பி.சியில் நடைபெற்ற மீட்டிங்கில் யாழினியின் மனம் நிறைந்து போனது. வானதியோ அடுத்தக் கட்ட தேர்தல் வியூகத்தில் இறங்கிவிட அச்சூழலில் தான் அருள்மொழியின் மீதான வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அடுத்த விசாரணைக்கு வந்தது.
இம்முறை சி.பி.ஐ தரப்பில் சாட்டப்பட்ட குற்றங்களை அடிப்படையாக வைத்தே அருள்மொழியின் வழக்கறிஞர் ஜாமீன் கோரினார்.
“சி.பி.ஐ தரப்பில் சொல்லப்பட்ட குற்றங்கள் நிகழ்ந்த காலத்தில் எனது கட்சிக்காரர் யூனிகார்ன் குழுமத்தில் வெறும் பங்குதாரர் மட்டுமே. அக்காலக்கட்டத்தில் குழுமத்தில் வந்த முதலீடுகளை பங்குதாரர் என்ற ரீதியில் மட்டுமே அவர் அறிவார். தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுப்பதோடு அதை நிரூபிக்கும் வாய்ப்பாக ஜாமீன் கோரியுள்ளார்”
நீதிபதி இருதரப்பு வாதங்களையும் விசாரிப்பதை பார்த்துக் கொண்டிருந்த அருள்மொழிக்கு இம்முறையாவது ஜாமீன் கிடைக்குமா என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை!
ஆனால் நீதிபதியோ அருள்மொழிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிவிட அவனாலேயே அதை நம்ப முடியவில்லை.
நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்தவனை அகத்தியன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
“இனிமே யாராலயும் உன்னை எதுவும் பண்ண முடியாது அருள்… வா! நம்ம கட்சி உனக்காக காத்திருக்கு”
அருள்மொழி அவரைத் தோளணைத்துக் கொண்டவன் “இந்த பதினாலு நாள் அரசியலோட இன்னொரு முகத்த எனக்கு காட்டிடுச்சு மாமா… இங்க சரி, தப்பு, நியாயம், அநியாயம்னு எதுவுமில்ல… இங்க எல்லாமே பவர் மட்டும் தான்… அது நம்ம கையில இருந்தா எத பத்தியும் கவலைப்பட தேவையில்ல… ஐ வாண்ட் தட் பவர்… என்னை அரெஸ்ட் பண்ணுறப்ப என் மனசுல தோணுனது என்ன தெரியுமா? இதுக்கு அப்புறம் என் மேல யாரும் கை வைக்க தயங்குற அளவுக்கு எனக்குப் பவர் வேணும்ங்கிறது மட்டும் தான்… அதுக்காக இனிமே நான் டே அண்ட் நைட்டா ஒர்க் பண்ண தயாரா இருக்கேன்” என்றான் தீர்மானமாய்.
பணம், பதவியை விட அதிக போதை தரக்கூடியது அதிகாரம். மற்ற இரண்டையும் சாதாரண பட்சிகளோடு ஒப்பிட்டால் அதிகாரமானது பருந்திற்கு இணையானது. மனிதனின் அதிகார தாகம் அவனை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும்!
ஒரு அரசாங்கத்தின் சாராம்சமே அதிகாரம் தான். அத்துடன் மனித கரங்களில் இருக்கும் அதிகாரமானது எப்போது வேண்டுமானாலும் துஷ்பிரயோகம் பண்ணப்படும் என்ற ஜேம்ஸ் மேடிசனின் மேற்கோள் தான் எத்துணை உண்மையானது!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction