“நாலு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்து போலித்தனமாய் ஊர் மெச்ச வேண்டுமெனப் பிரயத்தனப்படும் சினிமாத்தனமான காதலைவிட, திறந்தவெளி நட்சத்திரங்களுக்குக் கீழே கைகோர்த்து நடக்கும் எதார்த்தமான காதலுக்குத்தான் ஆயுள் அதிகம் என்பதை அந்தச் சக்கரவர்த்தி எனக்கு அத்தனை அழகாகக் கற்றுக்கொடுத்தான்.”
-வெண்பா
படுப்பதற்கு ஏதுவாய் சரிந்து கிடந்த கார் இருக்கையில் மெதுவாய் உறக்கம் கலைந்தாள் வெண்பா. கண் திறந்து பார்த்தபோது கிழக்கு வானில் வெள்ளி எட்டிப் பார்த்திருந்தது.
பரபரவெனக் கண்களைத் தேய்த்துக்கொண்டவள் தன்னருகே கிடந்த இருக்கையில் சரிந்து படுத்திருந்த நேத்ரனை அவசரமாய் எழுப்பினாள்.
“நேத்ரன்!”
அவளது கரம் பட்டதும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தான் அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“விடியப் போகுது. நாம இப்ப கிளம்புனாதான் எல்லாரும் கண் முழிக்குறதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போகச் சரியா இருக்கும்”
அவன் சோம்பல் முறித்தபடிக் கார்க்கண்ணாடி வழியே தெரிந்த சூரியகாந்தித் தோட்டத்தைப் பார்த்தான். கிழக்கு வானில் இரவு கரைந்துகொண்டிருந்தது. ஆதவனின் வருகைக்காகச் சூரியகாந்திகள் உற்சாகமாக விழித்திருந்தன.
“நல்லா தூங்குனியா டீச்சரம்மா?” என வாஞ்சையாய் மனைவியிடம் கேட்டான் அவன்.
“ம்ம்! உங்களுக்குக் கஷ்டமா இருந்திருக்கும்ல? காலை சுருக்கிப் படுத்திருந்தீங்களே?” என அவள் கேட்கவும் புன்னகைத்தான்.
“லைட்டா!” என்று கண் சிமிட்டிச் சொன்னவன் பின்னிருக்கையில் கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.
“வா! ஃபேஸ் வாஷ் பண்ணிட்டுக் கிளம்புவோம்”
இருவரும் காரிலிருந்து இறங்கி சூரியகாந்தித் தோட்டத்தில் ஓர் ஓரமாய் முகம் கழுவிக்கொண்டார்கள். விடிந்தும் விடியாமலும் இருந்த நேரத்தில் தோட்டம் ஏதோ கருப்பு வெள்ளை சினிமாவில் வரும் காட்சி போல இருந்தது.
இருவருமாய் சேர்ந்து மீண்டுமொரு முறை அந்தத் தோட்டத்தை ரசித்துவிட்டுக் காரிலேறினார்கள்.
“பாட்டு போடட்டுமா? இல்லனா நான் மறுபடியும் தூங்கிடுவேன்”
“ஃபேஸ் வாஷ் பண்ணுன அப்புறமும் தூக்கம் வருமா?” ஆச்சரியமாய்க் கேட்டாள் வெண்பா.
“நான் தூங்குவேன். தூக்கம்னு வந்துட்டா நான் கும்பகர்ணனோட டூ பாயிண்ட் ஓ வெர்ஷன்”
கேலியாய்ச் சொன்னபடி மியூசிக் சிஸ்டத்தில் மெல்லிசைப் பாடலொன்றை ஒலிக்கச் செய்தபடிக் காரைக் கிளப்பினான் நேத்ரன்.
இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…
உலாப் போகும் மேகம் கனா காணுமே…
விழா காணுமே வானமே…
பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் வரும் பாடலைக் கேட்டபடியே அவனருகே அமர்ந்திருந்தவளுக்கு மெய்யாகவே இப்பயணம் முடியக்கூடாதென்ற ஏக்கம்.
அதிகாலை சாலை இரவு நேரத்தைப் போலவே குறைந்த வாகனங்களோடு அமைதியாய்க் காட்சியளித்தது. அங்கிருந்த இருளை காரின் முகப்பு விளக்கு கிழித்தெறிய காரும் சாலையில் முன்னேறியது.
வரும் வழியில் பனி மழையில்…
பருவ நிலா தினம் நனையும்…
முகிலெடுத்து முகம் துடைத்து…
விடியும் வரை நடை பழகும்…
வான வீதியில் மேக ஊர்வலம்…
காணும் போதிலே ஆறுதல் தரும்…
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்…
பாடல் வரிகளை முணுமுணுத்தபடியே காரை ஓட்டியவனின் மனதில் காலை நேரத்தின் புத்துணர்ச்சி மெதுவாய்ப் பரவ இனி தூக்கமெல்லாம் அவனுக்குத் தூரமே!
“போனதும் கொஞ்சநேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க நேத்ரன்”
அக்கறையாய்ச் சொன்ன மனைவியைத் தலையைத் திருப்பிப் பார்த்தவன் “இன்னைக்கு மறுவீடு இருக்கு. அங்க இருந்து எம்.எல்.ஏ ஆபீஸ் போகணும். சின்னதா ஒரு மீட்டிங் இருக்கு. நான் தூங்குனேன்னா எல்லாமே லேட் ஆகிடும் டீச்சரம்மா. எல்லாத்துக்கும் சேர்த்து நைட் தூங்கிக்கிறேன்” என்று சொல்ல
“எதே? இன்னைக்கு நைட்டும்…” என்று ஆவேசமாய்ச் சொல்ல வந்தவள் சொல்லப்போன வாக்கியத்தின் அர்த்தமுணர்ந்து சட்டெனப் பேச்சைப் பாதியில் கத்தரித்துக்கொண்டாள்.
அவள் நிறுத்திய வாக்கியத்தின் முழு அர்த்தத்தைக் கண்டுகொண்டவனின் இதழோரம் குறுஞ்சிரிப்பின் உதயம்.
“டீச்சரம்மாக்கு எல்லாத்துலயும் அவசரம்” என்று கிண்டலாய்ச் சொன்னபடி அவளது கன்னத்தைக் கிள்ளினான் அவன்.
வெண்பா அவனது கையைத் தட்டிவிட்டவள் “அப்பிடியெல்லாம் இல்லையே! ஒருவேளை நான் கல்யாணத்தை நிறுத்திடலாம்னு சொன்னதை உங்களால மறக்க முடியலையோ என்னமோ? எம்.எல்.ஏக்கு என் மேல க்ரட்ஜ் (பகை) இருக்குனு நினைக்குறேன்.” என்று அப்பாவி போலச் சொல்லவும் சத்தமாய் நகைத்துவிட்டான் நேத்ரன்.
“ஆமா! நீ எனக்கு ஜென்மவிரோதி பாரு. சில் டீச்சரம்மா! நீ ஒண்ணும் முழு மனசா நம்ம கல்யாணத்தை நிறுத்தச் சொல்லலைனு எனக்கும் தெரியும். நீ கண்டபடி யோசிக்காம இருக்குறது நல்லது” என்றான் அமர்த்தலாய்.
காருக்குள் நிலவிய அமைதியும் மெல்லிசையும் திருநெல்வேலியை அடையும் வரை அவர்களுக்குத் துணையாய்!
ராஜவிலாசத்தை அவர்கள் வந்தடைந்தபோது நல்லவேளையாக யாரும் விழித்திருக்கவில்லை. கல்யாணக்களைப்பு!
எப்படி இரவில் யாருடைய உறக்கத்தையும் கெடுக்காமல் வெளியே சென்றார்களோ அதேபோல அமைதியாய்ப் பூனை போல வீட்டுக்குள் நுழையவும் செய்தார்கள்.
சரியாய் அந்நேரத்தில் கீழ்த்தளத்திலிருக்கும் அறைக்கதவு ஒன்று திறக்கும் சத்தம் கேட்கவும் வேகமாய் வெண்பாவோடு சென்று சோபாவுக்குப் பின்னே ஒளிந்துகொண்டான் நேத்ரன்.
“என்ன?” என மிகவும் தணிந்த குரலில் கேட்டவளிடம்
“யாரோ முழிச்சிட்டாங்க. உஷ்” என்று அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினான்.
கொலுசு சத்தம் அங்கே இருந்து மெதுவாய் மறையவும் பெருமூச்சுவிட்டவன் யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்டு வெண்பாவின் கைகளைப் பற்றியபடி சோபா மறைவிலிருந்து எழுந்து வேகமாய்ப் படிகளை நோக்கி ஓடினான்.
அவனோடு சேர்ந்து ஓடியவள் விறுவிறுவெனப் படியேறி தங்களின் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்ததும்தான் மூச்சுவிட்டாள் எனலாம்.
“நல்லவேளை யாரும் பாக்கல!” என்று ஒரே குரலில் சொல்லிக்கொண்டார்கள் இருவரும்.
சட்டென வித்தியாசமாய் உணர்ந்த வெண்பா “நான் இதுவரைக்கும் இப்பிடி ஒளிஞ்சு மறைஞ்சு எதையும் செஞ்சதில்ல. உங்ககூடச் சேர்ந்து நானும் கெட்டுப்போயிட்டேன்” என்று சொல்ல
“வெறும் பார்ட்னரா இருந்தா போரடிக்கும் டீச்சரம்மா. அதான் உன்னை பார்ட்னர் இன் க்ரைமா மாத்திக்கிட்டேன். சப்போஸ் யாராச்சும் நைட் நாம வெளிய போனதைக் கவனிச்சுக் கேள்வி கேட்டாங்கனா உன்னையும் துணைக்கு வச்சுப்பேன்ல. எல்லாம் ராஜதந்திரம் டீச்சரம்மா” என்று பெருமிதமாய்ச் சொன்னான் அவன்.
வெண்பா வாயைப் பிளந்தவள் விளையாட்டாய் அவனது கழுத்தைப் பிடித்தாள்.
“கிரிமினல் கிரிமினல்!” என்று போலிக் கோபத்தோடு சொன்னவள் தட்டுத்தடுமாறிப் படுக்கையில் கால் இடித்ததில் அதிலேயே சரிய அவளோடு சேர்ந்து சரிந்தான் நேத்ரன்.
தேகங்கள் உரசிக்கொள்ள நாசிகள் மட்டும் கட்டுப்பாட்டோடு ஒரு இன்ச் விலகி நின்றன. நேத்ரன் கண்களை இறுக மூடித் தலையை மட்டும் மறுப்பாய் அசைத்தான். அவனது முகத்தில் பிரயத்தனப்பட்டு விலகியிருக்கும் பாவனை!
“உஃப்” என்றபடி அவளிடமிருந்து விலகிப் படுக்கையில் ‘பொத்’தென்று படுத்தான் அவன். இன்னும் முகத்தில் அந்தப் பாவனை மாறவில்லை.
“உன்னை விட்டு விலகி இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா டீச்சரம்மா?”
“யார் விலகியிருக்கச் சொன்னாங்களாம்?”
“யாரும் சொல்லலதான். இது நானே யோசிச்சு எனக்குக் குடுத்துக்கிட்ட சின்ன பனிஷ்மென்ட்.”
வெண்பா சட்டெனப் புரண்டு அவனுக்கு மேலே வந்தவள் “அட கூறுகெட்ட எம்.எல்.ஏவே! நீ எனக்கும்தான் பனிஷ்மென்ட் குடுக்குற” என்று சின்னக் கோபத்தோடு சொல்ல அவன் விழிகளைத் திறந்தான்.
நேத்ரனின் விரல்கள் அவளது வதனத்தை வருடின.
“என்ன? ஒரு பொண்ணு இவ்ளோ வெளிப்படையா பேசுறானு தோணுதா? அதுவும் கல்யாணமே வேண்டாம்னு சொன்னவ இப்ப இப்பிடி பேசுறாளேனு ஆச்சரியமா இருக்குதா?” என அவள் கேள்விக்கணைகளை வீசவும் ‘இல்லை’ என மறுப்பாய்த் தலையசைத்தான் நேத்ரன்.
தன்னோடு சேர்த்து அவளையும் அணைத்தபடி எழுந்தமர்ந்தவன் “நீ என்கிட்ட ஒளிவுமறைவு இல்லாம பேசுறது எனக்குப் பிடிச்சிருக்குடி. ரொம்பக் கவலைப்படாதீங்க டீச்சரம்மா. நமக்கு ஹனிமூன்ல எக்கச்சக்க டைம் இருக்கு. அப்ப நமக்குப் பகலே கிடையாது. எல்லாமே ராத்திரிதான்” என்று கொஞ்சலாய்ப் பேசி அவளது நாசியை நிமிண்ட வெட்கப் பூக்கள் வெண்பாவின் கன்னங்களில் மலர கண்களோ காதலின் எதிர்பார்ப்பைச் சுமந்து நின்றன.
வீட்டினர் எழுவதற்கு நேரமிருப்பதால் இருவரும் அதே இனிய மனநிலையோடு சிறிது நேரம் கண்ணயர்ந்தார்கள். பின்னர் பொறுமையாய் எழுந்து மறுவீடு செல்லத் தயாரானார்கள்.
வெண்பா நேவி ப்ளூவில் பொடிப் பொடியாய்க் கட்டங்களிட்ட பட்டுப் புடவையும் சிவப்பு வண்ணத்தில் கொஞ்சம் எளிமையாய் ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸும் அணிந்து கூந்தலை க்ளட்சில் அடக்கி மல்லிகைச்சரத்தைச் சூடிக்கொள்ள நேத்ரன் அவளது ஆடைக்குப் பொருத்தமாய் அதே நேவி ப்ளூவில் செங்குத்தாய்ப் பெய்ஜ் வண்ணக் கோடுகள் போட்ட லினன் சட்டையும், பெய்ஜ் வண்ண ட்ரவுஸரும் அணிந்துகொண்டான்.
சட்டையின் மேல்பட்டன்கள் திறந்து கிடக்க “இதென்ன ரவுடியாட்டம்?” என மெல்லக் கடிந்தபடி அவற்றைப் போட்டுவிட்டாள் வெண்பா.
“ஸ்டைல் டீச்சரம்மா” என்றவன் அவற்றைக் கழற்றிவிட வெண்பா கடுப்போடு அவனைப் பார்த்தவளாய் மீண்டும் போட்டுவிட்டாள்.

“கவர்ச்சி நடிகராட்டம் இப்பிடி பட்டனைத் திறந்து போடணும்னு அவசியமில்ல. எம்.எல்.ஏ பதவிக்கேத்த மாதிரி ட்ரெஸ் பண்ணக் கத்துக்கோங்க” என்று கறாராய்ச் சொன்னவளைப் புன்சிரிப்புடன் பார்த்தான் நேத்ரன்.
இப்படி வம்பிழுத்துக்கொண்டே இருந்தால் மறுவீடு சென்ற மாதிரிதான் என இருவருக்கும் புரிய ஆயத்தமான கையோடு கீழ்த்தளம் வந்துவிட்டார்கள். அங்கே குடும்பத்தார் ஏற்கெனவே புறப்பட்டிருந்தார்கள்.
காலையுணவுக்குப் புதுமணத் தம்பதிகள் வரவேண்டுமெனக் காத்திருந்தார்கள்.
பளிச்செனப் பட்டுப்புடவையும், அதற்கேற்ற அணிகலன்களும் முகத்தில் துலங்கிய புன்னகையுமாய் வந்த மருமகளைக் கண்டதும் குந்தவையின் மனம் நிறைந்துபோனது.
“வாங்க! சாப்பிடலாம்!” என இருவரையும் அழைத்துப்போய் உணவு மேஜையில் அமரவைத்தார்.
அவரும் அங்கயற்கண்ணியும் அனைவருக்கும் பரிமாற மற்றவர்கள் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள்.
இட்லியைப் பிய்த்தபடி இருவருக்கும் எதிரே அமர்ந்திருந்தாள் நிருபமா.
அவளது கண்களில் அப்படி ஒரு கள்ளக் குறும்பு அலைபாய்ந்தது.
“அக்கா… நேத்து ராத்திரி எனக்குத் தொண்டை கரகரனு இருந்துச்சா… தண்ணி குடிக்கலாம்னு கீழ வந்தேன்,” என்று அவள் மெதுவாக இழுக்க, தோசையைப் பிய்த்துக்கொண்டிருந்த நேத்ரனின் கை அப்படியே அந்தரத்தில் நின்றது. வெண்பாவுக்கோ தொண்டையில் உணவு சிக்கி லேசாகப் புரையேறியது. இருவரின் பார்வையும் சட்டெனத் துர்காவின் மீது குவிந்தது.
“அதுக்கு என்னடி இப்ப?” என்றாள் அவளருகே அமர்ந்திருந்த புவனா இயல்பாக.
“இல்லக்கா… தண்ணி குடிச்சிட்டு இருக்கும்போது, நம்ம வீட்டு மெயின் டோர் சத்தமில்லாமத் திறக்குற மாதிரி இருந்துச்சு. எட்டிப் பாத்தா ரெண்டு பூனைங்க திருட்டுத்தனமா வெளிய போச்சுக்கா. நான்கூட யாராச்சும் திருடனா இருக்குமோனு பயந்துட்டேன். ஆனா அந்தத் திருட்டுப்பூனைங்க விடியற்காலையில கரெக்டா மறுபடியும் வீட்டுக்குள்ளயே வந்து ஒளிஞ்சுக்கிட்டுங்க…” என்று சொல்லியபடியே நேத்ரனையும் வெண்பாவையும் மாறி மாறிப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.
வெண்பாவுக்குச் சட்டென முகம் வியர்த்துவிட, தட்டையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். நேத்ரனோ, மெதுவாய்த் தலையை நிமிர்த்தித் தன் தங்கையை ‘போட்டுக் குடுக்குறியா? உன் மண்டைய பொளக்குறேன் பாரு’ எனப் பார்வையாலேயே மிரட்டினான்.
“என்னடி உளறுற? பூனையா? நம்ம வீட்டுலயா?” எனப் புவனா புரியாமல் கேட்க
“விடுக்கா. பூனைங்கதானே,” என்று சொல்லிவிட்டு வெண்பாவைப் பார்த்துக் கண்ணடித்தாள் நிருபமா.
‘அப்பாடா’ என நேத்ரன் நிம்மதிப் பெருமூச்சுவிட, வெண்பாவோ மேஜைக்கு அடியில் அவனது காலை மெதுவாக மிதித்துத் தன் தர்மசங்கடத்தை வெளிப்படுத்தினாள். நேத்ரனின் இதழ்களில் மட்டும் அந்தத் தருணத்தை ரசித்ததற்கான மெல்லிய சிரிப்பு.
காலை உணவு முடிந்ததும், ராஜவிலாசமே ஒரு சிறிய திருவிழாக் கூட்டம்போலக் கார்களில் ஏறி ரங்கநல்லூரை நோக்கிக் கிளம்பியது.
ரங்கநல்லூரில் செண்பகராமனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஊரே மெச்சும் எம்.எல்.ஏ மாப்பிள்ளையாக வருவதை எண்ணிச் செண்பகராமனுக்கு நெஞ்சமெல்லாம் பெருமிதம். வீட்டின் வாசலில் திருமணத்திற்காகக் கட்டப்பட்டிருந்த வாழைமரங்களும், மாவிலைத் தோரணங்களும் அவர்களை வரவேற்கக் காத்திருந்தன.
கார்கள் வந்து நின்றதும், செண்பகராமனும் உமையாளும் அகமலர்ச்சியோடு ஓடிவந்தனர்.
“வாங்க மாப்பிள்ளை… வாங்க சம்பந்தி!” என்று உளமார்ந்த உபசரிப்போடு வரவேற்றார் செண்பகராமன். உமையாள், ஆரத்தி எடுத்து, மகளுக்கும் மருமகனுக்கும் திலகமிட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.
பிறந்த வீட்டின் வாசற்படியை மிதித்ததும், வெண்பாவின் மனதுக்குள் சொல்ல முடியாத ஒரு நெகிழ்ச்சி. அவளது உணர்வுகளைப் புரிந்துகொண்டவனைப் போல அவளது கைகளைத் தன்பிடிக்குள் அழுத்தமாகப் பொதிந்துகொண்டான் நேத்ரன். அவனது ஸ்பரிசம் கொடுத்த திடத்தில் புன்னகையோடு உள்ளே நுழைந்தாள் வெண்பா.
மகள் மருமகனோடு சுமூகமாக வந்ததே செண்பகராமனுக்குப் பெரும் மகிழ்ச்சி. இனி பிரச்சனை இல்லை என ஆசுவாசமுற்றார்.
மறுவீட்டுக்கான மதிய விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அசைவமும், பலவிதமான இனிப்புகளுமாக இலை நிரம்பி வழிந்தது. மாப்பிள்ளைக்குக் குறை ஏதும் வந்துவிடக் கூடாதெனச் செண்பகராமனும் எழிலனும் பம்பரமாகச் சுழன்று பரிமாறினார்கள்.
தன் கணவன் மரியாதையோடும், உரிமையோடும் உபசரிக்கப்படுவதைப் பார்த்த வெண்பாவின் கண்கள் ஆனந்தத்தில் பனித்தன. விருந்து முடிந்து, ஹாலில் குடும்பமாக அமர்ந்து சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்க, நேத்ரனின் அலைபேசி அதிர்ந்தது.
அழைப்பை ஏற்றுச் சில நொடிகள் பேசியவனின் முகம் அதிகாரத் தோற்றத்திற்கு மாறியது. மொபைலை அணைத்துவிட்டு, ஒரு சிறிய தயக்கத்தோடு அனைவரையும் பார்த்தான்.
“மாமா! கொஞ்சம் முக்கியமான வேலை. நான் உடனே எம்.எல்.ஏ ஆபீஸ் போக வேண்டியிருக்கு. சின்னதா ஒரு ரிவ்யூ மீட்டிங், அதுவும் நான்தான் தலைமையேற்கணும்,” என்றான் நேத்ரன்.
“பரவால்ல மாப்பிள்ளை, நீங்க போயிட்டு வாங்க. பதவிக்கு வந்ததும் வேலை, மக்கள் பணிதானே முக்கியம். தயங்காமக் கிளம்புங்க,” என்று செண்பகராமன் புரிதலோடு சொன்னார்.
நேத்ரன் தயாராகி வெளியே வர, அவனுக்குப் பின்னால் வாசல் வரை தொடர்ந்தாள் வெண்பா.
காரின் கதவைத் திறக்கப் போனவன், மனைவியின் முகத்திலிருந்த லேசான ஏமாற்றத்தைப் பார்த்துச் சட்டெனத் திரும்பினான். சுற்றிலும் யாரும் கவனிக்காதவாறு அவளது கைகளைத் தன் கரங்களுக்குள் சிறைப்பிடித்தான்.
“டீச்சரம்மா! சொன்னேனே, இப்ப முகம் வாடுனா நான் போக முடியுமா? ஈவினிங் வரை உன்கூடவே இருக்கணும்னுதான் எனக்கும் ஆசை. ஆனா, தொகுதி மக்களும் என்ன நம்பி ஓட்டுப் போட்டிருக்காங்களே. அவங்களையும் பார்க்கணும்ல? ம்ம்ம்?” என்று இதமாகக் கேட்டான்.
அவனது கடமையுணர்ச்சியைக் கண்ட வெண்பாவின் முகத்தில் இருந்த வாட்டம் விலகி, அழகிய புன்னகை மலர்ந்தது.
“எனக்குப் புரியுது நேத்ரன். நீங்க பொறுப்பான எம்.எல்.ஏவா இருக்குறதுதான் எனக்கும் பெருமை. போயிட்டு வாங்க,” என்று கண்களால் வழியனுப்பிவைத்தாள்.
“சீக்கிரம் வந்துடுவேன்! மிஸ் யூ!” என்று குரலைத் தாழ்த்தி அவளது கன்னத்தில் தட்டிவிட்டுக் காரில் ஏறினான் நேத்ரன்.
கார் எம்.எல்.ஏ அலுவலகத்தை நோக்கிச் சீறிப்பாய, அவனை வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பிய வெண்பாவின் இதழ்களில், நேத்ரனின் காதலும் அவனது ஆளுமையும் கொடுத்த அசைக்க முடியாத பெருமிதம் ஒட்டிக்கொண்டிருந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


