“ஹேய் அருள்! நீ லண்டன்ல லா டிகிரி மட்டும் வாங்கல. கோஸ்டிங்லயும் டிகிரி வாங்கிருக்க மேன். இத்தனை லெட்டர் எழுதுறேனே! ஏதாச்சும் ஒன்னுக்கு நீ ரிப்ளை பண்ணுறயா? ஒரு ஹாய் சொல்லக் கூட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் வைக்குற பாரீஸ்டரா மாறிட்ட நீ! ஐ மிஸ் மை ஓல்ட் அருள்.”
–வானதியின் கடிதம்…
முகிலகத்தின் பிரம்மாண்ட கதவுகள் திறக்கவும் உள்ளே போனது வானதியின் கார். காருக்குள் கிண்டியில் ஆரம்பித்த மௌனம் இப்போது வரை நீடித்தது. வானதியின் கார்தான் என்பதால் சோதனைகள் எதுவுமின்றி உள்ளே அனுமதித்தார் காவலாளி.
வழக்கமான நேரத்துக்கு முன்னரே வீட்டை விட்டுக் கிளம்பிய மகள் மீண்டும் வீட்டுக்கு வருவதை, உதவியாளருடன் தலைமைச் செயலகத்துக்குச் செல்லக் கிளம்பி வாயிலருகே வந்துவிட்ட ஜெயசந்திரன் திகைப்போடு பார்த்தார்.
கார்க்கதவு திறந்ததும் இறங்கியவனைப் பார்த்ததும் அவரது விழிகள் நம்பிக்கையின்மையால் அகலமாய் விரிந்தன. அவரைப் பார்த்தவனின் மனதிற்குள்ளும் பல லட்சம் எரிமலைகளின் கொதிப்பு.
வானதி காரைப் பூட்டியவள் “வா!” என்க, அவளோடு வீட்டை நோக்கி நடந்தான் அருள்மொழி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வாயிலருகே கண்களில் அதிர்ச்சியைப் பூசிக்கொண்டு நின்ற தந்தையைக் கண்டதும், அருள்மொழியின் திடீர் வருகையின் விளைவு இந்த அதிர்ச்சி என்று எண்ணிக்கொண்டாள் வானதி.

“எப்பிடி இருக்குறீங்க மாமா?”
கொதிப்பை அடக்கிக்கொண்டு சாமர்த்தியமாய் சாதாரணக் குரலில் வினவினான் அருள்மொழி. ஜெயசந்திரனின் கண்கள் இடுங்கின. இடுங்கிய கண்கள் குவிந்தது என்னவோ அவனது நெற்றியில் இருக்கும் தழும்பின்மீதே!
“என்ன அப்பிடி பாக்குறீங்க மாமா? அடையாளம் தெரியலையா? அருள்மொழி! அருள்மொழி சுந்தரமூர்த்தி.”
தந்தையின் பெயரையும் சேர்த்து இறுமாப்போடு அவன் சொன்ன விதத்தில் ஜெயசந்திரனின் கண்களில் துவேசத்தின் நெருப்பு! அதை அவன் அடையாளம் காணும் முன்னர் போலியான குளிர்ச்சியும் உதட்டில் பொய்யானச் சிரிப்புமாக இரு கரம் நீட்டி அவனை வரவேற்றார் அவர்.
“அட அருள்! வாப்பா! நல்லா வளர்ந்துட்ட. இத்தனை வருஷம் இந்தியா வாசமே ஆகாதுனு இருந்தியே. என்ன திடீர்னு? அதுவும் நம்ம வீட்டுக்கே?”
‘என் வீட்டுக்கு எதற்கு வந்து தொலைத்தாய்?’ எனும் ரீதியிலானக் கேள்வி அதுவென அவர்கள் இருவருக்கும் மட்டும்தான் தெரியும்.
“ஒரு கேஸ் விஷயமா வந்திருக்கேன் மாமா! ஹோட்டல்ல தங்கியிருக்கலாம்தான். ஆனா ‘நம்ம வீடு’ இருக்குறப்ப நீ ஹோட்டல்ல தங்குனியானு அத்தை கோவிச்சுப்பாங்களே! அதான் நேரா இங்க வந்துட்டேன்” என்றான் அருள்மொழி குயுக்தியோடு.
யாருடைய பேச்சை எடுத்தால் ஜெயசந்திரன் அடங்குவார் என்று தெரிந்தே ஆரம்பித்திருந்தான்.
ஜெயசந்திரன் பதிலளிக்கும் முன்னரே “அருள்!” என்று மகிழ்ச்சியோடு ஒரு குரல் அன்பைக் குழைத்து ஒலித்தது.
ஜெயசந்திரனின் மனைவி கயல்விழியின் குரல் அது. ஐம்பது வயதிலும் இருபதின் சுறுசுறுப்பும் கலகலப்புமாய் வந்து நின்றவரின் கண்களில் மெல்லிய கண்ணீர் படலம். ஜெயசந்திரன் ஒதுங்கிக்கொள்ள கயல்விழி மெல்லிய விம்மலோடு அவனது கையைப் பற்றிக்கொண்டார்.
“உள்ள வா!” என்று உரிமையோடு அவனை அவர் அழைத்துச் செல்ல, புகைச்சலோடு இக்காட்சியைப் பார்த்தபடி நின்றார் ஜெயசந்திரன்.
‘இவன் புதுடெல்லிக்குச் செல்வதாகத்தானே தர்மலிங்கம் கூறினான். இங்கே வந்து நிற்கிறானே! ஒருவேளை பழைய ஞாபகங்கள் வந்திருக்குமோ?’
கயல்விழியின் கையைப் பற்றி நடப்பவனின் முதுகை விரோதத்தோடு முறைத்தார் ஜெயசந்திரன். சட்டெனக் கயல்விழி திரும்பியதும் பார்வையை இயல்பாக்கிக்கொண்டார் மனிதர்.
“செகரட்டரியேட்ல ஏதோ மீட்டிங்னு சொன்னீங்களே! நீங்க கிளம்புங்க. அருளை நாங்க நல்லா கவனிச்சுப்போம்” என்று கயல்விழி சொல்லவும் திணறலோடு கிளம்பினார் அவர்.

“வானும்மாவோட கல்யாணத்துக்கு நாள் கம்மியா இருக்கே, நீ எப்ப வருவனு நினைச்சேன். சரியான நேரத்துக்கு வந்துட்ட” எனக் கயல்விழி பேசும்போதே, ஆதித்யனும் அவனது மனைவி ஸ்ரீநிதியும் வந்து சேர்ந்தார்கள்.
அவர்களின் இரண்டு வயது மகனுக்கு ஏதோ தடுப்பூசி போடவேண்டுமெனக் கிளம்பிக்கொண்டிருந்தவர்கள், அருள்மொழியைப் பார்த்ததும் முகம் மலர வரவேற்றார்கள்.
“எங்க கல்யாணத்துக்கு வருவனு ரொம்ப எதிர்பார்த்தோம்டா அருள். நீ அந்த டைம்ல பாரீஸ்டருக்குப் படிச்சிட்டிருந்த. வரமுடியாதுனு தர்மலிங்கம் சித்தப்பா சொன்னார்” என்ற ஆதித்யன் அருள்மொழியிடம் கைகுலுக்கினான்.

ஸ்ரீநிதி அவனிடம் நட்போடு அறிமுகமாகிக்கொண்டாள்.
“இந்த மாமாக்கு குட்மானிங் சொல்லு ஜெயந்தன்” என்று மகனிடம் அருள்மொழியை அறிமுகப்படுத்தவும் செய்தாள்.
அவன் தட்டுத்தடுமாறி “கும்மானின்ன்” என்று சொல்லவும் அருள்மொழி ஆசையாய் அள்ளி முத்தமழை பொழிந்தான்.
“இப்பவே இங்கிலீஷ்ல பேசுறியே குட்டி. மாமா கூட லண்டன் வர்றியாடா?”
குட்டிப்பையனை அருள்மொழி அன்போடு தூக்கிக்கொண்டு கொஞ்சிய விதத்தில் வானதிக்குத்தான் பெரும் மனக்குறை.

‘எல்லார் கிட்டவும் அன்பா பேசுறான். நான் மட்டும் விலகி நிக்கணும்னு சொல்லுறான். இத்தனைக்கும் நான் தானே இவனுக்குக் குளோஸ் பிரண்ட்.’
அவர்களின் பள்ளி காலங்களில் வாஞ்சையாய் அவளது ஷூவின் லேஸை காலில் மாட்டிக்கொள்ளாத வண்ணம் அருள்மொழி கட்டிவிட்டத் தருணங்கள் எல்லாம் அவளது மனக்கண்ணில் திரைப்படமாய் ஓடின.
ஜெயந்தனின் விழிகளில் இருந்த அதே மாசற்ற அன்பும், கூடுதலாக ஏக்கத்தோடு சேர்ந்த கண்ணீர்ப்படலமும் அவளது விழிகளில். ஆனால் கண்டுகொள்ளத்தான் ஆளில்லை.
“குட்டிப்பையனுக்கு வேக்சின் போடணும். நீ ரெஸ்ட் எடு அருள்” என்று ஸ்ரீநிதி ஜெயந்தனை வாங்கிக்கொள்ள, கயல்விழி வீட்டின் வேலையாள் ஒருவரை அழைத்து மேல்தளத்து அறையில் வைக்குமாறு கட்டளையிட்டார்.
“உனக்குப் பிடிச்ச ரூம். போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா. பிரேக்பாஸ்ட் சாப்பிடலாம்” என்றார்.
“அப்ப நாங்க கிளம்புறோம் அருள். வந்து பேசலாம்.” ஆதித்யனும் ஸ்ரீநிதியும் கிளம்பினார்கள்.
அருள்மொழி வானதியைக் கண்டுகொள்ளாமல் மேல்தளத்துக்குச் செல்ல, அவளது மொபைலும் இசைத்தது. கண்ணீரை வெளிக்காட்டாமல் அழைப்பை ஏற்றாள்.
“சொல்லு இந்தர்… ஹான், சரி… நான் வந்துட்டேன்.” பேசிக்கொண்டே தனது அறைக்குள் போய் ஐடி கார்டைக் கழுத்தில் அணிந்துகொண்டவள், “நீ வீட்டுக்கே வந்துட்டியா? உள்ள வரவேண்டியதுதானே? சரி! உன் பைக்லயே நானும் வந்துடுறேன்” என்று சொன்னபடியே வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
மேல்தளத்தில் அவனுக்குப் பிடித்த அறைக்குள் வந்துவிட்ட அருள்மொழி, மெதுவாகச் சாளரங்களைத் திறக்கும்போது முகிலகத்தின் முன்னே நின்ற பைக்கில் ஓர் ஆடவனோடு வானதி ஏறிச் செல்வதைப் பார்த்துவிட்டான். இக்காட்சி தங்களின் சிறுவயதை அவனுக்கு நினைவூட்டப் போதுமானதாய் அமைந்தது.
“இறுக்கமா பிடிச்சுக்க என்னை. இல்லனா விழுந்துடுவ வானதி.”
ஊட்டியில் படித்தபோது பள்ளி வாரயிறுதி நாட்களில் சைக்கிள் ஓட்டுவதை அவர்கள் பொழுதுபோக்காக வைத்திருந்த சமயத்தில், அருள்மொழியின் சைக்கிளில் பின்னே ஏறிக்கொள்வாள் வானதி. குளிர்காற்று முகத்திலடிக்க சைக்கிளில் வலம் வந்த நாட்களின் குளுமை இப்போதும் அவனது நெஞ்சைச் சில்லென்று ஆக்குவதாய்!

இப்படியே விட்டால் மனம் இளகிவிடும். சின்னதொரு இளக்கம் பெரிய பெரிய எத்தனையோ விவகாரங்களில் அவனுக்கு இருக்கும் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும். இது ஆபத்தானது – அவனுக்கும் அவனது மனதில் உருவாகியிருக்கும் திட்டத்துக்கும்.
அந்த அழகான இளம்பிராயத்து நினைவுகள் ஒரு பழைய புத்தகம் போல அத்துணை அற்புதமான தருணங்களை உள்ளடக்கியவை. அந்தப் பழைய புத்தகத்தை பல ஆண்டுகளாக அவன் திறந்து பார்க்கவேயில்லை. ஆனால் அவளது அண்மை வாய்த்ததில் அந்தப் புத்தகத்தின் பக்கமொன்று அதுவாகவே திறந்ததன் அறிகுறியே அவனுக்குள் வந்து போன இந்தச் சின்ன ஜில்லென்ற உணர்வு.
ஜிக்ஸா பஸிலின் (Jigsaw puzzle) அனைத்துப் பீஸ்களையும் ஒட்டினால் கிடைக்கும் அழகான ஓவியமாய் அவனது வாழ்க்கை முழுமைபெற வேண்டுமென அவனுக்கும் ஆசைதான். ஆனால் அதன் ஒரேயொரு மிஸ்சிங் பீஸால் உண்டான இடைவெளி இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. அந்த மிஸ்சிங் பீஸ் யாரென இன்று வரை அவனுக்கும் புரியவில்லை.
இந்த மாதிரி யோசனைகளில் நேரத்தை விரயமாக்காமல் மடமடவெனக் குளித்துக் கயல்விழி பரிமாற காலையுணவை ருசித்துச் சாப்பிட்டான்.
அன்போடு பார்த்துப் பார்த்துப் பரிமாறியவரிடம் “நீங்க சாப்பிட்டீங்களா அத்தை?” என வினவினான் ஆதுரத்தோடு.
“உன் மாமா நான் இல்லாம சாப்பிடமாட்டார்டா அருள். அப்பவே ஆச்சு.”
கயல்விழி வெட்கத்தோடு சொல்லவும் அருள்மொழிக்குச் சின்னதொரு வலி. அந்த மனிதரின் உண்மை ரூபத்தை அறியாமல் இருக்கிறாரே என்ற பரிதாபமும் கூட.
“நீ வானதி கல்யாணத்தை முடிச்சிட்டுத்தானே லண்டனுக்குப் போவ?”
“அத்தை! நான் ஒரு கேஸ் விஷயமா இங்க வந்திருக்கேன். நாளைக்கு நான் டெல்லிக்குப் போகணும். என்னால கல்யாணம் வரைக்கும் இருக்க முடியுமானு தெரியல. நான் ஒர்க் பண்ணுற கன்சர்ன்ல பேசணும்.”
“கூட ரெண்டு நாள் லீவ் தரமாட்டாங்களா அங்க?”
“வானதிக்குக் கல்யாணமாகுறதுக்கு இன்னும் ரெண்டு நாளா இருக்கு?”
“ஒரு பேச்சுக்குச் சொன்னேன்டா அருள். நீ இருக்க முடியாதா?” ஏக்கமாய்க் கேட்டார் அவர்.
“முயற்சி பண்ணுறேத்தை.”
“குட் பாய்.” அவனது கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிவிட்டுப் போனார் கயல்விழி.
காலையுணவை முடித்துவிட்டு உடனடியாக மெரீடியன் லீகல் அசோசியேட்ஸ் மூலமாக மான்கடா குழுமத்தின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டான். மான்கடா குழுமத்தின் வழக்கு முடிவடையும் வரை அவனை இந்தியாவில் தங்குமாறு மெரீடியன் லீகல் அசோசியேட்சில் சொல்லிவிட்டார்கள்.
உடனடியாக அவனுக்கு ஓர் அலுவலகம் வேண்டும். அவன் உதவி என அழைப்பது நண்பர்களையும் அகத்தியனையும் மட்டும்தான். உடனடியாக அட்சரனை அழைத்து விவரம் கூறினான்.
“டோண்ட் வொரி. நான் பாத்துக்குறேன்” என்று உறுதி கொடுத்தான் அவன்.
பின்னர் மான்கடா குழுமத்தின் பிரதிநிதிகளோடு வீடியோ கான்பரன்ஸில் நேரம் வேகமாகப் பறந்தது அவனுக்கு.
முகிலகத்தின் ஓர் அறையில் புகைப்படங்களாய்த் தொங்கிய தனது பெற்றோரைப் பார்க்கும் வரை அவன் இயல்பாகவே இருந்தான். அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் இழப்பின் வலி அதீதமானதாய் உணர்ந்தான்.
மீனாட்சியும் சுந்தரமூர்த்தியும் வெறும் புகைப்படமாய் மாறக் காரணமான துரோகியின் மீது அவனது முழு வஞ்சமும் திரும்பியது.
இன்று அவன் பட்டம் பெற்ற பாரிஸ்டர். ஆனால் சென்னையை விட்டு அவன் கிளம்பியபோது தாய் தந்தையற்ற ஆதரவற்ற சிறுவன். அடுத்தவேளை உணவுக்கு விரோதியின் கையை எதிர்பார்த்திருந்த அனாதைச் சிறுவன். இப்போது பணம், அதிகாரம், அறிவு என அனைத்தும் அதீதமாய் வாய்த்திருந்தாலும் ஏதுமற்ற பன்னிரண்டு வயது சிறுவனாக அவனை உணரவைத்துவிட்டது அந்தப் புகைப்படம்.
புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒருவிதச் சோகத்தைக் கடத்தினார்கள் என்றால், புகைப்படமாய்க் கூட இடம்பெறாத ஒரு ஜீவனின் நினைவு அவனை இன்னும் ரணமாக்கியது.
சரியாக அந்நேரத்தில் ஜெயசந்திரனும் வீட்டுக்குள் வந்தார்.
“சம்பந்திகளோட மாப்பிள்ளை இன்னைக்கு நைட் வர்றதா சொன்னார் கயல். டின்னர் நல்லபடியா சமைக்கச் சொல்லிடு, அவங்க எந்தக் குறையும் சொல்லிடக்கூடாது. வானும்மாவோட கல்யாணத்துக்கு முன்னாடி எந்த நிகழ்வுலயும் யாரும் சின்னதா ஒரு பிரச்சனை கூட வந்துடக்கூடாது.”
மகள் மீதான அவரது பாசம் அருள்மொழிக்கு வெறியேற்றியது.
‘பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் குடும்பத்தை அழித்துவிட்டு இன்று நீ உன் குடும்ப வாரிசின் திருமணத்துக்குத் தயாராகிறாயா?’
வஞ்சத்தில் திளைத்த மனம் தனது திட்டத்தில் சின்னதொரு மாற்றத்தைச் செய்தது. அதைத் தீர்மானித்துவிட்டு மாலை நேரத்தில் அட்சரனிடம் பேசினான் மீண்டும்.
“சொல்லுடா.”
“வானதியோட வருங்கால புருஷன் ஆதர்ஷ் பத்தி உனக்கு ஏதாச்சும் தெரியுமா?” எடுத்ததும் அவன் கேள்வி கேட்கவும் அட்சரனுக்கு முதலில் குழப்பம்.
“இதை ஏன்டா விசாரிக்குற? அதெல்லாம் உன் அங்கிளுக்குத்தான் தெரியும். ஏன் தப்பா எதுவும் கேள்விப்பட்டியா?”
“தப்பா ஏதாச்சும் நியூஸ் கிடைச்சா அது எனக்குச் சாதகமா இருக்கும் அச்சு.”
தெளிவாகப் பிசிறு தட்டாமல் அருள்மொழி சொல்லவும், அட்சரனுக்கு முதலில் வியப்பு.
பின்னர் அவன் சொன்னதன் அர்த்தம் வேறு எதுவாகக் கூட இருக்கலாமென எண்ணியவனாக, “என்ன சாதகம்?” என வினவினான்.
“நான் சொன்னேன்ல! ஐ ஹேவ் அ பிளான். ஆதர்ஷ் மேல சின்னதா ஒரு பிளாக்மார்க் இருந்தா கூட போதும். என் பிளானை என்னால இன்னும் வெற்றிகரமா செயல்படுத்த முடியும்.”
“நீ என்ன பேசுறனு புரிஞ்சுதான் பேசுறியா அருள்? இது வானதியோட வாழ்க்கை. அவ நம்ம பிரண்ட்.”
“நோ! நாட் அட் ஆல்! அவ ஜெயசந்திரனோட மகள். அவ்வளவுதான்.”
அருள்மொழியின் குரலில் என்றுமில்லாத அளவுக்கு வெறுப்பு இழையோடியது. இது நல்லதுக்கான அறிகுறியில்லை என்று அட்சரனுக்கு மூளையில் அலாரம் அடித்தது.
“தப்பு அருள். இதை விடத் தப்பா எதையும் செஞ்சிடாத. வானதி தைரியமானவதான். ஆனா எவ்வளோ தைரியமான பொண்ணுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அவளோட பலவீனம் அவங்கப்பா மேல அவ வச்சிருக்குற நம்பிக்கை. அதுதான் அவ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கக் காரணம். எதையும் பண்ணி அதை உடைக்குறேன்னு அவளை உடைச்சிடாத.”
அருள்மொழி சிரித்தான். அந்தப் பேச்சைத் தொடர அவன் விரும்பவில்லை என்பதை மறுமுனையில் புரிந்துகொண்டான் அட்சரன்.
பெருமூச்சோடு, “நீ என்ன பிளான் வேணும்னாலும் போடு. ஆனா அது வானதியைப் பாதிக்காம பாத்துக்க. அவளுக்கு ஒன்னுனா நிச்சயம் நான் வருவேன்” என்றான் அழுத்தமாய்.
“விடுடா நல்லவனே! உன் பிரண்டை நான் ஒன்னும் பண்ணிடமாட்டேன்.”
“நீயும் என் பிரண்ட் தான். அதனாலதான் உன்னை எந்தத் தப்பும் பண்ணவிடமாட்டேன்னு சொல்லுறேன்.”
“சரி, தப்புங்கிறது ஒவ்வொருத்தர் பாக்குற கோணத்துல இருக்கு அச்சு. எனக்குச் சரினு தோணுறது உனக்குத் தப்புனு தோணலாம். இப்ப இல்லனாலும் பியூச்சர்ல தோணலாம்.”
“லாயர்ல! அதான் பாயிண்டா பேசுற. விடு நண்பா. ரொம்ப போரடிக்குது இந்தப் பேச்சு.”
அட்சரன் சலித்துக்கொள்ள, அலுவலகத்துக்கான இடம் குறித்துப் பேச்சை மாற்றினான் அருள்மொழி.
இரவுணவுக்கு வானதியின் வருங்கால கணவனும் அவனது குடும்பத்தினரும் வந்தார்கள் முகிலகத்துக்கு. ஜெயசந்திரன் முகம் கனிய வரவேற்றார் அவர்களை. மஞ்சுநாத்தும் மாதவியும் வந்ததும் வானதியைப் பற்றி விசாரித்தார்கள். அவள் இன்னும் வேலையில் இருந்து வீடு திரும்பவில்லை என்றதும் மாதவியின் முகத்தில் மெல்லிய வாட்டம்.
“அவ வர்ற நேரம்தான்” எனச் சமாளித்தார்கள் கயல்விழியும் ஸ்ரீநிதியும்.
அருள்மொழி அந்நேரத்தில் அங்கே வரவும் கயல்விழி ஆசையாய் அவனைச் சம்பந்திகளிடம் அறிமுகப்படுத்திவைத்தார்.
“இவன் அருள்! எங்க வீட்டுப்பையன். லண்டன்ல பாரிஸ்டரா இருக்குறான்” சொன்னவர் ஜெயசந்திரனைப் பார்க்க அவரும் தொண்டையைச் செருமினார்.
“என் நண்பர் சுந்தரமூர்த்தியோட மகன். சுந்தரமூர்த்திய மறந்திருக்கமாட்டிங்க மஞ்சுநாத். எங்க கட்சியோட பொருளாளரா இருந்தவர். கட்சிக்காக உழைச்ச போராளிகள்ல ஒருத்தர்.”
பெருமிதமாக உரைப்பதாக மற்றவரின் பார்வைக்குத் தோற்றமளித்தாலும் கடனே என்று ஒப்பிப்பதாகத்தான் தோன்றியது அருள்மொழிக்கு.
“அவர் மறைஞ்ச அப்புறம் என் குடும்ப நண்பர் ஒருத்தரோட லண்டனுக்கு அனுப்பிவச்சோம். கயல் சொன்ன மாதிரி அருள் எங்க குடும்பத்துப்பையன். திறமையானவனும் கூட” என்றார் ஜெயசந்திரன்.
அறிமுகப்படலம், அரட்டை நேரம், கல்யாணம் பற்றி பேச்சு யாவும் முடிந்ததும் இரவுணவுக்கான நேரம் வந்துவிட்டது. கலகலப்பானப் பேச்சோடு நாவுக்கு இனிமை சேர்க்கும் உணவும் கலந்து அந்த இரவை ரசிக்கவும் ருசிக்கவும் தக்க பொழுதாக மாற்றின. இடையே வானதியும் வந்துவிட்டாள்.
“இன்னைக்கு ஃபீல்டுக்குப் போயிருந்தேன் என் டீமோட. வேலை முடிய டைம் ஆகிடுச்சு” என்றவளின் குரலில் தகவல் தெரிவிக்கும் தொனி மட்டுமே. இரவுணவுக்குப் பிறகு ஆதர்ஷோடு தனியே பேசப் போய்விட்டாள் வானதி.
இரு கைகளையும் பின்னே கட்டிக்கொண்டு அவள் நின்ற விதமே ஏதோ சம்பந்தமற்ற நபரிடம் விறைப்பாகப் பேசுவது போன்ற மாயையைத் தோற்றுவித்தது தூரத்தில் இருந்து பார்த்த அருள்மொழிக்கு. ஆதர்ஷ் அவளது தோளை அணைக்க வரும்போதெல்லாம் வெகு சுவாதீனமாக விலகிக்கொண்டாள்.

நிதானமாகத் தண்ணீர் குடித்தபடி இக்காட்சியை வேடிக்கை பார்த்தவன், ஆதர்ஷ் வானதியின் கையைப் பற்ற முயலுவதையும் அவள் விலகுவதையும் புருவச்சுருக்கத்தோடு பார்த்தான். ஏனோ அங்கே போகவேண்டுமெனத் தோன்றியது. தோன்றியதும் தாமதிக்காமல் அந்த இடத்துக்கும் போய் சேர்ந்தான்.
“நாளைக்குச் சின்னதா ஒரு கேண்டில் லைட் டின்னர் போகலாமே பேப்.”
ஆதர்ஷின் ‘பேப்’ அருள்மொழிக்குச் சிரிப்பை வரவழைத்தது. ‘பேப்’ எப்போதோ சுருங்கி ‘பே’ ஆகிவிட்டது. இன்னுமா இந்த விளிப்பு?
சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு “ஹலோ கய்ஸ்” என்றபடி அவர்களை நெருங்கினான். இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.
“ஹாய்” ஒரே குரலில் சொன்னார்கள்.
“உங்க பேரண்ட்ஸ் உங்களைத் தேடுறாங்க ஆதர்ஷ். டைம் ஆகிடுச்சுனு நினைக்குறேன்.”
“ஓஹ்! நான் கிளம்புறேன். குட் நைட் பேப். குட் நைட் அருள்.”
அவன் கிளம்பியதும் பெருமூச்சு விட்டாள் வானதி. “இதுக்கே பெருமூச்சு விட்டா எப்பிடி பேப்?” அருள்மொழி கேலியாய்ச் சொன்னபடி அந்த லானில் வைக்கப்பட்ட ஊஞ்சலில் சாவதானமாக அமரவும் சூடாய் முறைத்தாள் அவனை.
“பேப்னு சொல்லாத அருள்” என்றவள் அங்கிருந்து செல்லப்போக,
“இன்னைக்கு மானிங் ஒரு பையன் கூட பைக்ல போனியே. அப்ப இந்த மாதிரி விறைப்பா இல்லையே நீ. வருங்காலக் கணவர் கிட்ட ஏன் இவ்ளோ ஒதுக்கம்?” என்று மெதுவாக வினவினான்.

அந்தக் கேள்வியில் நின்றாள். அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“இந்தக் கேள்விய கேக்குறதுக்கு நீ யாரு? உனக்குத்தான் நான் யாருனு ஞாபகமில்லயே?” என்றாள் அன்றைய தினம் முழுவதும் அவளை உறுத்திய ஆதங்கத்தைக் கொட்டியவளாய்.
அருள்மொழி ஒரு பக்கம் மட்டும் உதட்டை இழுத்துச் சிரித்தான்.
“நீ யாருனு ஞாபகம் இல்லதான். ஆனா ஒருத்தனோட டச் உனக்கு அன்கம்பர்டபிளா ஃபீல் ஆகுறதைப் பாத்துட்டுத் தூரமா நிக்கவும் பிடிக்கல. இதுக்கே நீ அசௌகரியமா ஃபீல் பண்ணுற. உன்னால எப்பிடி?” என்றவன் வாக்கியத்தை முழுதாய் முடிக்காமல் கேலியாய் உச்சு கொட்டினான்.
“எங்களோடது அரேஞ்ச்ட் மேரேஜ். எடுத்ததும் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணிடமுடியாதுல்ல. இட் வில் டேக் டைம். நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிப்போம்” எனச் சமாளித்தாள் வானதி.
அருள்மொழி தலையாட்டி மறுத்தான் அவளது கூற்றை.
“ஒரு விஷயம் ஆரம்பத்துல ஒட்டலனா அது ஏழேழு ஜென்மத்துக்கும் ஒட்டாது. எனிஹௌ, உன் வாழ்க்கை உன் இஷ்டம். உங்களுக்குள்ள ஜென்ரேசன் கேப் இருக்குனு நினைக்குறேன். அதையும் பாத்துக்க”
தோள்களைக் குலுக்கிவிட்டு அங்கிருந்து போய்விட்டான் அருள்மொழி.
வானதி மட்டும் அங்கேயே தனித்து நின்றாள்.
அவளுக்கும் ஆதர்ஷுக்கும் இடையே ஆறு வயது வித்தியாசம். ஆறு வயது வித்தியாசம் எல்லாம் தலைமுறை இடைவெளியா? சும்மா கதை கட்டுகிறான் என ஒதுக்கத் தோன்றியது.
“சரியான கலகக்காரனா இருக்கான்” வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.
ஆனாலும் அருள்மொழி சொன்னதில் சில விசயங்கள் உண்மைதான். மெய்யாகவே ஆதர்ஷ் நட்பாகத் தோளணைக்க வந்தாலும் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ ஓர் ஒவ்வாமை. அவள் ஒன்றும் பத்தாம்பசலி இல்லை. மாநகரத்தில் வளர்ந்தவள். ஆண்பெண் நட்பு சகஜம் என்பதை அறிந்தவள். அவளுக்கு வருங்கால கணவனின் அண்மை அந்நியமாய் அசௌகரியமாய்த் தோன்றுவது இயல்பில்லையே!
இது சரியாக வருமா? – வானதி குழம்பினாள் முதல் முறையாக!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

