“இன்னைக்கு கேங் மீட். சஞ்சய் அவனோட புது கார் பத்தி அறுத்துட்டு இருந்தான். இலக்கியா எப்போவும் போல அவளோட போன்ல பிஸி. அச்சு கேரளாக்குப் போறானாம். ஏதோ மலையாளி ரைட்டர் கூட டீல் போல. இத்தனை வருஷத்துல உன்னோட பிரசன்னம் இல்லாம குரூப் வைப் கம்ப்ளீட் ஆகுறதே இல்ல அருள். லண்டன்ல இது பனிக்காலம்ல. Take care.”
–வானதியின் கடிதம்…
ஜஸ்டிஸ் டுடே செய்தி தொலைக்காட்சி நெட்வொர்க், ராஜா அண்ணாமலைபுரம்…
வழக்கமான எடிட்டோரியல் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. அன்றைய பிரைம் டைம் செய்திகளைத் தீர்மானிக்கும் மீட்டிங் அது. அதில் நிர்வான் வனம் பற்றிய குறிப்புகளைக் காட்டிக் பேசிக்கொண்டிருந்தாள் அவள் – வானதி.

தமிழக முதலமைச்சர் ஜெயசந்திரனின் மகள். அதைத் தாண்டி தனக்கென ஒரு அடையாளத்தைப் பத்திரிகை துறையில் உருவாக்கிக்கொண்டிருப்பவள். இருபத்து நான்கு வயதில் பத்திரிகை துறையில் புலனாய்வுப் பத்திரிகையாளராகத் துடிப்பாகப் பணியாற்றிக்கொண்டிருப்பவள், கடந்த எட்டு மாதமாகச் சேகரித்த தகவல்கள், ஃபீல்டுக்குச் சென்று எடுத்த பேட்டிகள், ஆடியோ ரெக்கார்ட் போன்ற தரவுகளை வைத்து அங்கிருந்த சக ஊழியர்களிடம் விவரங்களைக் கூறிக்கொண்டிருந்தாள்.
“இந்த போட்டோ அசாம்ல இருந்து அவங்க கொண்டு வந்த யானைகளை நிர்வான் வனத்துல இருக்குற உயிரியல் பூங்காவுக்குள்ள இறக்கிவிடுறப்ப எடுத்தது. அவ்ளோ பெரிய யானைகளை அசாம்ல இருந்து குஜராத் கொண்டு வர்றதுக்காகச் செடேட்டிவ் குடுத்திருக்காங்க. டோஸேஜ் அதிகமாகி அந்த யானைகள்ல, மத்த விலங்குகள்ல எதுவும் உயிரிழந்திருந்தா கூட உண்மை வெளிய வராது. இதெல்லாம் மிருகவதைல சேராதா? அங்க நடக்குறது அனிமல் ரெஸ்கியூ இல்ல. அனிமல் டிரேடிங். ஐ ஹேவ் சாலிட் ப்ரூஃப் டு ப்ரூவ் தட்!”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவள் பேசுவதைக் கேட்டபடி பேனாவைச் சுழற்றிக்கொண்டிருந்தான் தலைமை எடிட்டரும் ஜஸ்டிஸ் டுடேவின் உரிமையாளனுமான விஷ்ணு பிரகாஷ்.
“வெல்! அப்ப இதை பிரைம் டைம் நியூஸ்ல போட்டுடலாம்.”
“அவங்க மேல ஆல்ரெடி சுப்ரீம் கோர்ட்ல கேஸ் நடக்குது. இப்ப நாம நியூஸ் போட்டா பிரச்சனையாகாதா?” – என்றாள் இன்னொரு புலனாய்வுப் பத்திரிகையாளரான யசோதரா.
“ஆகணும்னு தானே போடப்போறோம்” சொன்னவனின் இதழ்களில் மர்மப்புன்னகை.
“பட் சீஃப்..”
“இது வானதியோட எட்டு மாச உழைப்பு. இதை இக்னோர் பண்ணுறது அவளோட டெடிகேஷனையும் இக்னோர் பண்ணுறதுக்குச் சமம். பிரைம் டைம் நியூஸ்ல நிர்வான் வனம் பத்தி வந்தாகணும். இதோட பின்விளைவுகளைப் பத்தி அப்புறமா யோசிக்கலாம். ஊடக தர்மம் எதுவோ அதை ஃபாலோ பண்ணுவோம் முதல்ல.”
விஷ்ணுபிரகாஷ் தீர்மானமானக் குரலில் சொன்னதும் வெற்றிப்புன்னகை வானதியின் இதழில்.
“குட் ஜாப் மை டியர் ஸ்டார் ரிப்போர்ட்டர்!” கைகுலுக்கிவிட்டுச் சென்றான் விஷ்ணுபிரகாஷ்.

அந்நிறுவனத்தின் இதர ஸ்டார் ரிப்போர்ட்டர்களான ஸ்ராவணியும், யசோதராவும் பாராட்டிவிட்டுப் போனார்கள் வானதியை. அவளுக்கு முன்னரே ஜஸ்டிஸ் டுடேவின் புலனாய்வுப் பத்திரிகைப் பிரிவின் கீழ் பல வைரலான விவகாரங்களை வெளிக்கொணர்ந்தவர்கள் இருவரும்.
தனது சீனியர்களின் பாராட்டால் அன்றைய தினம் வானதிக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சொன்னபடியே அன்றைய முக்கியச் செய்திகளில் முதல் செய்தியாக நிர்வான் வனம் பற்றிய செய்தி வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களோடு வெளியானது.
“நிர்வான் வனம் பற்றி பேச நம்முடன் இணைகிறார் ஜஸ்டிஸ் டுடேவின் பத்திரிகையாளரான வானதி ஜெயசந்திரன்.”
அந்த ஆதாரங்களைச் சேகரித்தவள் என்ற முறையில் வானதியும் இடையிடையே பேசினாள்.

“மான்கடா குழுமம் அவங்களைப் பில்கேட்ஸ் போல ஒரு சேவையுள்ளம் கொண்டவங்களா காட்டிக்க நினைக்குறாங்க. பில்கேட்ஸ் மேல வந்திருக்குற மோசமான அலிகேஷனை ஒதுக்கிவச்சாலும் வேக்சினேஷன் ஃபீல்ட்ல அவர் மேல எண்ணற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணமா இருக்கு. அவரைப் பின்பற்றுற மான்கடா குழுமமும் சந்தேகத்துக்கு இடமான வேலைகளைச் செய்யுறதா உலகளவுல இருக்குற விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுறாங்க. அழிஞ்சுக்கிட்டிருக்குற வனவிலங்குகளை அவங்க வெளிநாடுகள்ல இருந்து கொண்டு வர்றதுக்கு CITES அனுமதி வாங்கணும். அது அங்க முறைப்படி வாங்கப்படல. சமீபத்துல அசாம்ல இருந்து அவங்க கொண்டு வந்த யானைகள் போக்குவரத்து அனுமதி இல்லாம கொண்டுவரப்பட்டவை. வனவிலங்கு பாதுகாப்புங்கிற பேருல அங்க நடக்குறது வியாபாரம். அந்த வியாபாரம் வருங்காலத்தைக் குறிவச்சு நடக்குது. அதுக்கான ஆதாரத்தை நாங்க முன்வச்சிட்டோம். விலங்கு நல ஆர்வலர்கள், விலங்கு நல அமைப்புகள் எல்லாம் இனி அவங்க கடமையைச் செய்வாங்க.”
ஒரு பக்கம் ஜஸ்டிஸ் டுடேவின் சமூக வலைதளக் குழுவினர் தீயாய் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பான அதே நேரத்தில் முகப்புத்தகத்திலும் ட்விட்டரிலும் வரிசையாய் நியூஸ் கார்டுகள் பதிவேற்றப்பட்டு அந்தப் பதிவுகளின் லைக், கமெண்ட், பகிர்வுகளும் எகிற ஆரம்பித்தன.
அன்றைய தினம் மாலைக்குள் தேசிய ஊடகங்களும் நிர்வான் வனம் பற்றிய விவாதமேடைகளை நடத்தின. வானதி உற்சாகமாய் வீட்டுக்குக் கிளம்புகையில் அவளது தோழி இலக்கியாவிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது.
“கங்கிராட்ஸ் நதி! உன் முகம் நியூஸ்ல வந்துச்சு… ஃபைனலி நாம ஜெயிச்சிட்டோம் மாறா மொமண்ட். இன்னைக்கு உன் ட்ரீட்!”
“ட்ரீட்லயே கண்ணா இரு. அப்பிடிப் பார்த்தா நீங்க மூணு பேரும் அடிக்கடி ட்ரீட் வைக்கணும்டி.”
“பின்ன? கல்யாணம் வேற ஆகப்போகுது. உன் என்கேஜ்மெண்டுக்குக் குடுக்க வேண்டிய ட்ரீட் பாக்கியிருக்கு. சோ இன்னைக்கு கேங் ட்ரீட். நான், அச்சு, சஞ்சய் மூணு பேரும் இப்பவே தாஜ் கோரமண்டல் போறோம். வந்துடு நீயும்.”
“அடியே! எனக்கு இந்த மாசம் இன்னும் சம்பளம் வரலடி” வானதி அங்கலாய்க்க, “முதலமைச்சர் மகளா இருந்துட்டு இப்பிடி கஞ்சூஸ் மாதிரி பேசுறியே. உன் காதுல இருக்குற டயமண்ட் ஸ்டட்டை அடமானம் வச்சா நான் குட்டியா ஒரு ஹோட்டலே ஆரம்பிக்கலாம்” என்றாள் இலக்கியா கேலியாக.
“உனக்கு இப்ப அந்த ஸ்டட் வேணுமா? இல்ல ட்ரீட் வேணுமா?”
“எனக்கு ட்ரீட் தான் வேணும்” இலக்கியா ஆவலாய்ச் சொல்ல, சிரித்தபடியே கிளம்பினாள் வானதி.
காரிலேறியதும் ஏதோ நினைவுக்கு வந்தவளாகத் தனது மொபைலில் இருக்கும் ஏர்வே பில் நம்பர் ஒன்றை சர்வதேச கொரியர் நிறுவனம் ஒன்றின் வலைதளத்தில் டிராக் செய்தாள். அவள் டிராக் செய்த ஏர்வே பில்லுக்குச் சொந்தமான பொருளானது, நாளை சம்பந்தப்பட்டவரைப் போய் சேருமெனப் போட்டிருந்தார்கள். நிம்மதிப் பெருமூச்சு ஒன்று அவளிடம்.

காரை வேகமாக கிளப்பியவள் தாஜ் கோரமண்டலை அடைந்தபோது அவளுக்கு முன்னரே குழுமியிருந்தார்கள் அவளது நண்பர் குழாம். அட்சரன், இலக்கியா, சஞ்சய் – இம்மூவர் தான். மூவரும் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள். தமிழ் மொழி மீது அலாதி காதல். மூவரும் சேர்ந்து ‘ஹெல்வட்டாஸ்’ என்ற பெயரில் இலக்கிய முகமை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். பதிப்பகத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே பாலம் போலச் செயல்பட்டு ராயல்டி உட்பட அனைத்தையும் பேசி முடிப்பவர்கள் இலக்கிய முகவர்கள் எனப்படும் லிட்டரரி ஏஜெண்டுகள். அட்சரன் இலக்கிய முகவனாகவும், இலக்கியா எடிட்டராகவும் பொறுப்புகளை நிறைவேற்ற, சஞ்சய் அவர்களோடு இணையும் எழுத்தாளர்களுக்கு மார்க்கெட்டிங் வேலையைச் செய்வான்.
மூவரும் ஒற்றுமையாய் அத்தொழிலை நடத்த வானதி மட்டும் தப்பிப் பத்திரிகை துறை பக்கம் கரை ஒதுங்கிவிட்டாள். அவளைப் பார்த்ததும் மூவரும் ஆர்ப்பரிப்போடு வரவேற்றார்கள்.

அட்சரனிடம் பிஸ்ட் பம்ப் கொடுத்தவள், “வாழ்த்து சொன்னதுக்குப் பதிலா ஆளுக்குக் கொஞ்சம் பில் அமௌண்ட்டைச் ஷேர் பண்ணுங்களேன்” என்க,
“ஹான்! ஆசைதான் உனக்கு. ஒழுங்கா நீ ஃபுல் பில்லையும் பே பண்ணனும். ரெண்டு ட்ரீட் இன்னைக்கு” என்றான் சஞ்சய் சாமர்த்தியமாய்.
அட்சரன் போனில் மூழ்கி யாரிடமோ பேச ஆரம்பிக்கவும் வானதி அவனை அதிருப்தியாய் பார்த்தாள்.
“மலையாளி ரைட்டர் ஒருத்தவங்க, ஏதோ டவுட்டாம்” என்றான் அவன்.
சஞ்சய் அவனது புதிய காரின் பிரலாபங்களை அள்ளிவிட, இலக்கியாவோ அசுவாரசியத்துடன் மொபைலில் மூழ்கிவிட்டாள்.
ஒருவழியாக அட்சரன் போன் பேசி முடித்ததும் மற்ற மூவரும் என்ன உணவு ஆர்டர் செய்வதெனப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அவரவர் பிடித்த உணவை ஆர்டர் செய்தபோது வானதிக்கு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்தது.
“இன்னைக்கு நாங்க உன்னை டிவில பார்த்தோம் வானு. கங்கிராஜுலேஷன்ஸ்!”
அவளோடு சேர்ந்து இன்னும் இரு பெண்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுமம் அது. வானதியின் தந்தையுடைய பூர்வீகமான தேன்மலை எனும் மலை கிராமத்திற்குச் சிறுவயதில் விடுமுறை விடும்போது அவள் போவதுண்டு. அப்படிப் போகிறபோது அவளுக்குப் பழக்கமானப் பெண்கள்தான் வேதவதியும் யாழினியும். அட்சரன், இலக்கியா, சஞ்சய் போல இவர்களும் வானதிக்கு நெருக்கமானத் தோழியரே!
“யார்? மலை கிராமத்து மல்லிகைகளா?”
அவள் வாட்ஸ்அப்பில் தட்டச்சு செய்வதைப் பார்த்துச் சஞ்சய் கேலி செய்யவும் அவனது புஜத்தில் கிள்ளினாள் இலக்கியா.
“சும்மா கிண்டல் பண்ணாத அந்தப் பொண்ணுங்களை.”

“மல்லிகைகளைப் பத்திப் பேசுனா ரோஜாமுள்ளுக்குக் கோவம் வருது.” மீண்டும் கிண்டல் செய்து கிள்ளு வாங்கிக்கொண்டான் அவன்.
வானதி அவர்களிடம் பேசிவிட்டு உணவை ருசிப்பதில் ஆழ்ந்தாள்.
“இன்னும் கொஞ்ச நாள்ல வானதிக்குக் கல்யாணத்துக்காகத் தேன்மலைக்குப் போகத்தானே போறோம். அப்ப பாத்துக்கலாம் அந்த மலை கிராமத்து மல்லிகைகளை. கிராமத்துப் பொண்ணுங்க எல்லாம் ரொம்ப போல்டா இருக்கும். குறைஞ்சது நீ பத்து செருப்படி வாங்குவடா.”
இலக்கியா சஞ்சயைச் சபிக்க மற்ற இருவரும் சிரித்தார்கள்.
“அட துரோகிகளா! சிரிக்குறீங்க. நான் செருப்படி வாங்குறதுல அவ்ளோ குஷியோ? இந்த இடத்துல என் நண்பன் அருள் இருந்திருக்கணும்…” எனப் பேச்சுவாக்கில் சஞ்சய் வாயை விட்டுவிட அனைவரிடமும் அதீத அமைதி.
சாப்பாட்டை வாயருகே கொண்டு போன வானதியின் கண்களில் மெல்லிய ஏக்கமும் இயலாமையும் படர்ந்தது. இனி எங்கிருந்து அவளுக்கு உணவு இறங்கும்?
இந்த நால்வர் கூட்டணி ஒரு காலத்தில் ஐவர் குழுவாக இருந்தது. அந்த ஐவர் குழுவின் ஜாலியான பட்டாசு அருள்மொழி. அவன் இருக்குமிடத்தில் பரபரப்புக்கும் அதிரடிக்கும் குறைவிருக்காது.
அட்சரன் தொண்டையைச் செருமினான்.
“ஒரு யூரோப் டூர் பிளான் பண்ணலாம். நாம எல்லாரும் சேர்ந்து லண்டன் போய் அருளை டார்ச்சர் பண்ணலாம்” என அவன் சொன்னதும் மீண்டுமொரு அங்கலாய்ப்பு வானதியிடம்.
“நான் வர்றது தெரிஞ்சா அவன் ஓடிப்போய்டுவான்.”
“அதெல்லாம் போகமாட்டான். நீயும் ஆதர்ஷும் ஹனிமூனுக்கு லண்டன் வர்றதா சொன்னா அவன் ரொம்ப சந்தோஷப்படுவான்” என்று தோழியின் வாட்டத்தைப் போக்க முயன்றாள் இலக்கியா.
வானதியின் சிரம் மறுப்பாக அசைந்தது.
“நான் எழுதுற லெட்டர் எதுக்கும் அவன் பதில் சொன்னதில்ல. எல்லா சோசியல் மீடியாலயும் என்னை பிளாக் பண்ணிருக்கான். உங்க கூட பேசுறான்ல, இந்த பன்னிரண்டு வருஷத்துல என்கிட்ட ஒரு வார்த்தை பேசிருப்பானா? நானும் ஃபேக் ஐடில அவனை சோசியல் மீடியால ஃபாலோ பண்ணலாமானு யோசிப்பேன். அப்புறம் அது அல்பத்தனமா இருக்குனு விட்டுடுவேன். உங்களுக்கு எதுவும் ஞாபகம் இருக்கா? அவன் இங்க இருந்து தர்மலிங்கம் சித்தப்பா கூட லண்டன் கிளம்புறதுக்கு முன்னாடி நான் அவனை எதுவும் சொல்லி ஹர்ட் பண்ணுனேனா? எனக்கு எதுவுமே புரியல.”
அட்சரன் அவளது கையைப் பற்றினான்.
“நதி! காம் டவுன். அவனுக்கு… அவனுக்கு எதுவும் ஞாபகம் இல்லனு சொன்னானே? மறந்துட்டியா? அவன் பெரிய டராமாவோட இங்க இருந்து போனான் நதி. உன்கிட்ட ஏன் இந்த ஒதுக்கம்னு கேட்டதுக்கு உன்னைப் பத்தி எதுவுமே ஞாபகமில்லனு சொன்னானே. தெரிஞ்சும் நீ ஏன் உன்னைக் குத்தம் சொல்லுற? உன்னால எப்பவும் அருளை ஹர்ட் பண்ண முடியாது. எங்க சிரி பாப்போம்.”
வானதி சிரிக்க முயன்றாள்.
“கடுப்பா புள்ளை பெத்து அதுக்கு அடுப்புனு பேர் வச்ச மாதிரி கேவலமா சிரிக்காம அழகா சிரிக்கணும்”
அட்சரன் கிண்டல் செய்யவும் வானதியிடம் மெய்யாகவே சிரிப்பு துளிர்த்தது.
அதன் பிறகு ட்ரீட் அறுசுவையோடு அற்புதமாய் ருசித்தது அவர்களுக்கு. கை கழுவ இலக்கியாவோடு போன போது எதையோ சொல்ல வருவதும் தவிர்ப்பதுமாக இலக்கியா இருப்பதைக் கண்டுகொண்டாள் வானதி.
“என்னடி ஆச்சு? உன்னால எதையும் என்கிட்ட மறைக்க முடியாது. சொல்லிடு.”
இலக்கியா சங்கடமாய்ப் புன்னகைத்தாள்.
“அது… அருள் இன்னும் கொஞ்ச நாள்ல இங்க வரப்போறான். நேத்து அச்சுக்கு சேட் பண்ணுப்ப சொன்னானாம்.”
கேட்டதும் வானதிக்கு எப்படி எதிர்வினையாற்றுவதெனப் புரியவில்லை. ஒரு பக்கம் சந்தோஷத்தில் மூச்சு முட்டியது. இன்னொரு பக்கமோ யாரோ ஒருத்தி போலத் தன்னிடம் இச்செய்தி வெகு தாமதமாக வந்து சேர்ந்ததில் தன்னை மட்டும் வேற்று மனுஷியாகப் பார்க்கிறானே என அருள்மொழி மீது வருத்தம் வந்தது.
ஆனால் அவனுக்கு அவளை நினைவில்லையே!
‘இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் ஒரு முறை கூடவா அவனுக்கு என்னைப் பற்றிய ஞாபகங்கள் வந்திருக்காது? ஞாபகம் வரவேண்டுமென நான் எழுதும் கடிதங்களில் இருக்கும் ஒரு வார்த்தை, ஒரு எழுத்து கூடவா எங்களது நட்பை அவனுக்கு நினைவூட்டியிருக்காது? தொடர்புகொள்ளவே முடியாதபடி என்னை ஏன் அவன் விலக்கி வைத்திருக்கிறான்?’
யோசித்ததில் கண்கள் கலங்கின வானதிக்கு.
“நீயாச்சும் சொன்னியேடி. அச்சு என்கிட்ட மூச்சு கூட விடல.”

“உன்கிட்ட சொல்லவேண்டாம்னு அருள் சொல்லிருக்கான்.”
“என்கிட்ட… அப்ப வானதினு ஒருத்திய அவனுக்குத் தெரியும். ஆனா அவ கூட இருந்த ஃப்ரெண்ட்ஷிப், அவ கூட இருந்த மொமண்ட்ஸ் மட்டும் ஞாபகம் இல்லையா? அவன் என்னை மறக்கல. அவன் என்னை அவாய்ட் பண்ணுறான். உங்களுக்குப் புரியல. உங்களுக்கு இதை நிரூபிக்கவும் என்கிட்ட ஆதாரம் இல்ல. ஆனா அவன் மனசுல என்னைப் பத்தின ஞாபகம் எதுவும் அழியல.”
இலக்கியா தோழியை அணைத்துக்கொண்டாள்.
“அவன் தான் வரப்போறானே? கண்டிப்பா உங்க வீட்டுல தான் தங்குவான். சட்டையைப் பிடிச்சுக் கேளு, ஏன்டா என்னை அவாய்ட் பண்ணுறனு. முகத்தை இப்பிடி வச்சுக்காத. ஆதர்ஷ் திடீர்னு வீடியோ கால் பண்ணுனார்னா பயந்துடப்போறார்” எனக் கேலி செய்து தோழியை இயல்புக்குக் கொண்டு வந்தாள் அவள்.
ஆதர்ஷ் – டி.என் நெட்வொர்க் என்ற தொலைக்காட்சி குழுமத்தின் வாரிசு. அவனுக்கும் வானதிக்கும்தான் திருமணத்தை நிச்சயித்திருந்தார் முதலமைச்சரும் வானதியின் தந்தையுமான ஜெயசந்திரன். அவனும் பதவிசாகப் பழகினான். தினமும் ஒரு முறையாவது நலம் விசாரிப்பான். இதையெல்லாம் அறிந்தவர்கள் வானதியின் நண்பர்கள்.
அதனால் அவனது பெயரைச் சொல்லி வானதியைச் சமாதானப்படுத்துவது இலக்கியாவுக்கு எளிதாக இருந்தது. அவளும் சமாதானமடைந்தாள். அன்று ஹோட்டலில் இருந்து கிளம்பியபோது அருள்மொழியிடம் கேட்பதற்கு எண்ணற்ற கேள்விகள் வானதியின் மனதில் உதயமாகின.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

