“Action speaks louder than words என்பார்கள். அதாவது வெற்று வார்த்தைகளைச் சொல்லாமல் செயலில் காட்டுவதே சிறந்தது. ஆனால் சில நேரங்களில் வாய் வார்த்தைகள் மட்டுமன்றி மனிதர்களின் செயல்களும் போலியாய் மாறிவிடுகின்றன. நேரத்துக்குத் தகுந்தாற்போல, ஆட்களுக்குத் தகுந்தாற்போல தங்களது நாக்கை மாற்றி மாற்றி பேசுபவர்கள் சந்தர்ப்பவாதிகள். அவர்கள் நமக்காக ஏதேனும் செய்தால் கூட அதில் அவர்களுக்கான ஆதாயம் கட்டாயமாக ஒளிந்திருக்கும். இத்தகைய மனிதர்களின் வார்த்தைகள் மட்டுமல்ல, செயல்களும் கூட நேரத்துக்குத் தகுந்தாற்போல மாறிப் போகும்”
-தக்ஷிண்யா
ஹோட்டல் க்ராண்ட் மவுண்டின் ஹில் வியூ பகுதி…
ஆரோஹியும் தக்ஷிண்யாவும் பனீர் ஸ்கியூவரைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். சற்று முன்னர் தான் ருத்ரதேவ் அழைத்திருந்தான்.
அவனது பெற்றோரும் அத்தை மாமாவும் ஹோட்டலுக்கு வருவதாகச் சொன்னவன் தனது அலுவலைப் பற்றியும் கூறி சற்றுநேரம் கழித்து வருவதாகச் சொன்னான்.
தக்ஷிண்யாவும் ஆரோஹியை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு வந்தவள் காலையுணவோடு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆரோஹி பனீரை மென்றபடி “இன்னும் ஏன் தேவ் மாமா வரல?” என்று கேட்க
“அவருக்கு ஆபிஸ்ல இம்பார்ட்டெண்ட் ஒர்க் இருக்குதாம்… இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவார்” என்றபடி தக்ஷிண்யா சாப்பிட்டு முடிக்கையில் தான் ருத்ரதேவின் பெற்றோரும் அத்தை மாமாவும் அவர்கள் இருக்குமிடத்துக்கு வந்தனர்.
“ருத்ராவோட கெஸ்ட் எங்க இருக்காங்கப்பா?”
ஹில் வியூ பகுதிக்கான பொறுப்பாளரிடம் லோகநாதன் கேட்க “அந்த லாஸ்ட் டேபிள்ல அவங்களும் ஒரு குட்டிப்பொண்ணும் இருக்காங்க சார்… உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டிருக்காங்க” என்றார் அவர்.
“ஓ.கேப்பா… நீங்க போய் மத்த வேலைய பாருங்க… நாங்க பேசி முடிச்சதும் உங்களுக்குக் கால் பண்ணுறேன்… ஸ்வீட் மட்டும் அனுப்பி வைங்க” என்று லோகநாதன் கூற பொறுப்பாளரும் சென்றுவிட்டார்.
ஆரோஹி தக்ஷிண்யாவிடம் தனக்கு பீட்சா வேண்டுமென அடம்பிடித்துக் கொண்டிருக்கையில் “ஹலோம்மா” என்று இனிமையாக அழைத்தபடி அவர்களின் மேஜையருகே தனது கணவர், சகோதரர் மற்றும் லலிதாவுடன் வந்து நின்றார் சசிகலா.
தக்ஷிண்யா புன்னகையுடன் அவர்கள் பக்கம் திரும்பியவள் அடுத்த நொடியே சிரிப்பைத் தொலைத்து சிலையானாள்.
அவளது கண்கள் அங்கிருந்த நால்வரையும் இலக்கற்று வெறிக்க அவர்களோ அவளது முகஜாடையைக் கண்டதும் ஒரு கணம் என்ன பேசவென தெரியாமல் விழித்தனர்.
ராஜேந்திரன் மட்டும் திகைப்பு விலகாமல் “நீ… நீ… தக்ஷி… என் பொண்ணு…” என்று தந்தியடிக்க அவ்வளவு நேரம் செய்வதறியாது நின்ற லலிதா படுவேகமாக அவரது கையைப் பற்றினார்.
“என்னங்க…. இவ” என்று அவரும் திணற தக்ஷிண்யாவுக்கு மெதுவாக உணர்வு வந்தது.
விழிகளில் இருந்த இலக்கற்ற பார்வை மறைந்து இப்போது வெறுப்பும் கோபமும் குடிகொண்டது.
கண்களின் வெறுப்பை நாவுக்குக் கொண்டு வந்தவள் லலிதாவிடம் “நானே தான்… தக்ஷிண்யா அலையஸ் தாட்சாயணி… உங்க புருசனோட முன்னாள் மனைவி தேவிகா பெத்த பொண்ணு… யாரை பாக்கணும்னு நான் ஏங்கி ஏங்கி உங்க வீட்டு முன்னாடி பதினாலு வருசத்துக்கு முன்னாடி வந்து நின்னு அழுதேனோ அவர் பெத்த பொண்ணு… என்ன இன்னுமா ஞாபகம் வரல மிசஸ் ராஜேந்திரன்?” என்று துவேசத்துடன் வினவ அவரோ இடியோசை கண்ட நாகம் போல அஞ்சி ஒடுங்கினார்.
லோகநாதன் திகைத்து நிற்கையிலேயே சசிகலாவின் வதனத்தில் புன்னகையும் கண்களில் கண்ணீரும் நிரம்பிவிட்டது.
வேகமாக தக்ஷிண்யாவின் அருகே வந்தவர் அவளை அணைத்துக் கொண்டார்.
“என் தங்கம்! இத்தனை வருசமா எங்க இருந்த நீ? ருத்ரா காதலிக்கிறது உன்னை தானா? தக்ஷிண்யாங்கிற பேரை கிட்டத்தட்ட மறந்தே போனதால அது நீயா தான் இருப்பனு நான் நினைக்கலடா… அப்பிடியே என் பாட்டி ஜாடை… என்னை உனக்கு ஞாபகம் இருக்குதாடா? உன் அத்தை சசி” என்று பாசத்தைக் கொட்டிக் கேட்டவர் மீண்டும் ஒரு முறை அவளது வதனத்தை ஏக்கத்துடன் நோக்கினார்.
தக்ஷிண்யா அவரை விலக்கி நிறுத்தியவள் “எப்பிடி மறக்க முடியும்? உங்க யாரையும் நான் மறக்க மாட்டேன்… நீங்கல்லாம் எனக்கும் எங்க அம்மாக்கும் என்னென்ன பண்ணுனிங்கனு அவ்ளோ சீக்கிரம் மறந்துடுமா?” என்று இறுகிய குரலில் கூற சசிகலாவின் கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டது.
“உனக்கு எங்க மேல கோவம் இருக்குறது நியாயம் தான்” என்று அவர் கூறும் போதே இடைமறித்தாள் அவள்.
“இவங்க எல்லாரும் எங்கம்மாவ விரோதியா பாத்தாங்க… நீங்க அவங்களோட ஃப்ரெண்ட் தானே… உங்களால எங்கம்மாக்கு நடந்த அநியாயத்தை தடுத்திருக்க முடியும்… ஆனா நீங்க பண்ணல… ஏன்னா இதோ நிக்குறாங்களே உங்களோட நாத்தனார், எங்கம்மாவைத் துரத்திட்டு இவங்களை அந்த இடத்துல உக்கார வைக்குறதுக்கு நீங்களும் துணை போயிருக்கீங்க… என் பார்வையில நீங்க எல்லாருமே குற்றவாளிங்க தான்”
அவள் பேச பேச சசிகலா மனமுடைந்தார் என்றால் ராஜேந்திரனோ பேச்சில் தேவிகாவை நினைவுபடுத்தும் தக்ஷிண்யாவை அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரருகே நின்றிருந்த லலிதாவுக்கோ கணவரின் பார்வை அவள் மீது படுவதைக் கண்டதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அவரது தோளைப் பற்றி தன் புறம் திருப்பியவர்
“நீங்க ஏன் இவளைப் பாக்குறிங்க? இவளோட அம்மா உங்களுக்குப் பண்ணுன துரோகத்தை மறந்துட்டிங்களா? அந்த தேவிகாவால நீங்க பட்ட அவமானம் போதாதா? இங்க பாருங்க, என்னைக்குமே நான் மட்டும் தான் உங்க மனைவி… சர்வா மட்டும் தான் உங்க வாரிசு… இவ அந்த தேவிகாவோட பொண்ணு மட்டும் தான்” என்று படபடக்க தக்ஷிண்யாவுக்கு அவரது பதற்றமும் பயமும் வியக்கத்தக்க வகையில் சிரிப்பைக் கொடுத்தது.
ஏளனமாகச் சிரித்தவள் “இவரோட துணை இல்லாம குழந்தை பெத்துக்க எங்கம்மா என்ன குந்திதேவியா? மிசஸ் ராஜேந்திரன், அன்னைக்கு சொன்னதை தான் இப்பவும் சொல்லுறேன், நீங்க எப்பவும் என் அப்பாவுக்கு ஐ மீன் மிஸ்டர் ராஜேந்திரனுக்கு ரெண்டாம் தாரம் தான்… என் அம்மா வேண்டாம்னு ஒதுக்குனவரைத் தான் நீங்க கல்யாணம் பண்ணிருக்கீங்க… இந்த உண்மைய உங்களால மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது” என்கவும் லலிதா தனது காதுகளைப் பொத்திக் கொண்டார்.
“போதும்டி! இன்னொரு தடவை அப்பிடி சொல்லாத… இவர் எனக்கு மட்டும் தான் சொந்தம்… உங்கம்மா தான் இடையில வந்த பிடாரி… அந்தப் பிடாரி பெத்துப் போட்ட பிசாசு நீ, என் மருமகனை திட்டம் போட்டு வளைக்கப் பாக்குற” என்று அவர் கத்த லோகநாதன் தங்கையைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.
“பழசை பேசாத லல்லி… நம்ம வீட்டுப்பையன் இந்தப் பொண்ணை விரும்புறான்”
உடனே ஆவேசம் மின்னியது லலிதாவின் விழிகளில்.
“இவ என் மருமகனுக்குப் பொண்டாட்டியா வர நான் என்னைக்குமே சம்மதிக்க மாட்டேன்”
“அது என் பையன் சம்பந்தப்பட்ட விசயம் லல்லி… ருத்ரா தக்ஷிய தான் லவ் பண்ணுறான்… அதுல அவன் உறுதியா இருந்தான்னா நானே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பேன்… உன்னோட அதிகாரத்தை என் பிள்ளை வாழ்க்கையில காட்டாத” என்று சீறினார் சசிகலா.
தக்ஷிண்யா அனைவரையும் பேசவிட்டு வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த ராஜேந்திரனை வெறுப்பு நிரம்பிய விழிகளால் அளவிட்டாள்.
அவரது கண்களில் இருந்த கண்ணீரை ஏனோ அவளால் நம்ப முடியவில்லை.
“தக்ஷி!” என்றபடி அவளிடம் பேச எத்தனித்தவரை கரம் உயர்த்தி நிறுத்துமாறு தடுத்தாள் தக்ஷிண்யா.
“நீங்க எதுவும் பேசவேண்டாம்… உங்களால உங்க பொண்டாட்டி மரியாதையையும் காப்பாத்த முடியல, பொண்ணோட மரியாதையையும் காப்பாத்த முடியல… புருசனா மட்டுமில்ல அப்பாவாவும் நீங்க தோத்து பதினாலு வருசம் ஆகிடுச்சு மிஸ்டர் ராஜேந்திரன்… உங்களை மாதிரி முதுகெலும்பு இல்லாதவரை என்னோட அப்பானு சொல்லிக்கிறதை விட சாகுற வரைக்கும் எங்கம்மாவோட கனவுக்கு உறுதுணையா நின்னு, அவங்களுக்கு இந்தச் சமுதாயத்துல மரியாதையான வாழ்க்கைய ஏற்படுத்திக் குடுத்த கமல்நாத் அங்கிளை கார்டியன்னு சொல்லிக்குறதுல தான் எனக்குச் சந்தோசம்… அவர் தான் எங்கம்மாவ உண்மையா காதலிச்சவர்… எங்கம்மாவோட இழப்பை தாங்கிக்க முடியாம அந்த மனுசன் கண் காணாத இடத்துக்குப் போயிட்டார்… அம்மாக்கும் உங்களுக்கும் இடையில இருக்குற காதலோட அடையாளம் தான் நான்னு அடிக்கடி நீங்க சொல்லுவிங்களே, அது உண்மையில்ல… இதோ நிக்குறாளே இவ தான், இந்த ஆரோஹி தான் உண்மையான காதலுக்குப் பிறந்தவ… எந்த ஒரு மனுசனால தன்னோட பொண்டாட்டிய மதிக்க முடியலையோ அவனால அவளைக் காதலிக்கவும் முடியாது… நீங்க என்னைக்கும் எங்கம்மாவ உண்மையா காதலிச்சிருக்க வாய்ப்பே இல்லை… யூ ஆர் அ ஃபெயில்ட் ஃபாதர் அண்ட் ஃபெயில்ட் ஹஸ்பெண்ட்”
கண்கள் சிவக்க அத்தனை நாட்கள் மனதில் இருந்த வெறுப்பு முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் தக்ஷிண்யா.
சசிகலா அவளை அமைதிப்படுத்துவதற்காக அவளருகே வந்தவர் “பழசை பேசி பிரயோஜனமில்ல தக்ஷி… இன்னைக்கு நடக்குறதை பத்தி பேசுவோமே… என் மகன் உன்னை ரொம்ப காதலிக்குறான்மா… நீயும் அவனும் சேர்ந்து வாழப் போற வாழ்க்கைய பத்தி மட்டும் பேசுவோம்டா” என்று கூற
“எதுக்குப் பேசணும்? ருத்ராவும் உங்க ஃபேமிலி தான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என் மனசுல இருக்குற காதல் துடைச்சுப் போட்ட மாதிரி மறைஞ்சிடுச்சு… இப்ப எனக்கு அவரைப் பிடிக்கல… அவங்க அத்தைக்குப் பிடிக்காத என்னை அவரும் லைஃப் பார்ட்னரா ஏத்துக்க மாட்டார்… சோ இந்த மோதிரத்தோட சேர்த்து என்னை பத்தின நினைவுகளையும் அவரை மறந்துடச் சொல்லுங்க” என்று தீர்மானமாக கூறியவள் நடந்த களேபரங்களை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த ஆரோஹியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள்.
“தக்ஷி கொஞ்சம் நில்லும்மா” என்று கெஞ்சிய சசிகலாவின் குரலும், “வந்த துயரம் வாசலோட போச்சுனு சந்தோசப்படு சசி” என்று வஞ்சத்துடன் ஒலித்த லலிதாவின் குரலும் தக்ஷிண்யாவை சீக்கிரம் இங்கிருந்து செல் என்று சொல்லாமல் சொல்ல அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினாள் அவள்.
அதே நேரம் க்ளாம்பிங் ப்ராஜெக்டுக்கான ஒப்பந்தத்தை பேசி கையெழுத்துவிட்டு மகாதேவுடன் ஹோட்டலுக்குக் கிளம்ப ஆரம்பித்தான் ருத்ரதேவ்.
“அண்ணிய பாக்குறதுக்கு அவ்ளோ அவசரம்”
மகாதேவின் கிண்டல்களை புன்சிரிப்புடன் கடந்தவன் “சார் மட்டும் என்னவாம்? பிரகிக்காக அடிச்சுப் பிடிச்சு ஓடுறவன் தான்டா நீ” என்று அவனை கேலி செய்யவும் மகாதேவின் முகம் வாடியது.
ருத்ரதேவ் அதை கவனித்துவிட்டு என்னவென வினவ ஒன்றுமில்லை என்று கூறி சமாளித்தான் அவன்.
அவன் எதையோ மறைக்கிறான் என்று புரிந்துகொண்டவன் அதற்கு மேல் வற்புறுத்தி கேட்க விரும்பாமல் தனது உதவியாளரிடம் மொபைலை வாங்கிக் கொண்டான்.
முக்கியமான வணிக ஒப்பந்தங்கள், அலுவல்களுக்கிடையே மொபைலை உபயோகிப்பது அவனுக்குப் பிடிக்காது என்பதால் அச்சமயங்களில் அவனது மொபைல் உதவியாளர் வசம் சென்றுவிடும்.
“எதுவும் முக்கியமான கால் வந்துச்சா?”
“சசி மேடம் கால் பண்ணுனாங்க சார்… நீங்க மீட்டிங்ல இருக்கீங்கனு சொன்னேன்… மீட்டிங் முடிஞ்சதும் உங்களை கால் பண்ண சொன்னாங்க”
ருத்ரதேவ் தாமதிக்காமல் சசிகலாவுக்கு அழைக்க அவரோ சுரத்தற்ற குரலில் வீட்டுக்கு வருமாறு கூறிவிட்டார்.
“ஏன் வீட்டுக்கு வரச் சொல்லுறிங்கம்மா? தக்ஷிய பாத்திங்களா? அவளும் உங்க கூட வீட்டுல தான் இருக்காளா?” என்று கேட்க
“நாங்க இன்னும் ஹோட்டல்ல தான் இருக்கோம் ருத்ரா… வீட்டுக்குக் கிளம்பப் போறோம்” என்றார் சசிகலா.
“தக்ஷி?” என்று மீண்டும் அவன் கேட்க
“நீ வீட்டுக்கு வா ருத்ரா… விளக்கமா பேசிக்கலாம்” என்றவர் அழைப்பைத் துண்டிக்கவும் அவசரமாக அங்கிருந்து வீட்டுக்குச் செல்ல காரைக் கிளப்பினான் ருத்ரதேவ்.
வேகமாக காரை விரட்டி பிருந்தாவனத்துக்கு வந்து சேர்ந்தவனை அழுது சிவந்த கண்களுடன் லலிதா வரவேற்க சசிகலாவோ சோகத்தைச் சுமந்த வதனத்துடன் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தார். பெரியவர்கள் கோவிலுக்குச் சென்றிருக்க மாலினியும் கல்லூரிக்குச் சென்றுவிட்டதால் இப்போது அவர்கள் ஐவர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
ருத்ரதேவ் தாயாரின் முன்னே கிடந்த டீபாயில் மோதிர டப்பாக்கள் இருப்பதை பார்த்தபடி அவரருகே அமர்ந்தான்.
“என்னாச்சும்மா?” ஆதுரத்துடன் அவன் கேட்க சசிகலாவால் பதிலளிக்க முடியவில்லை.
எனவே அந்தக் கடமையைச் செய்ய முன்வந்தார் லலிதா.
மனதிலிருக்கும் விஷத்தை நாக்கில் தடவியபடியே “அந்தப் பொண்ணை பாக்குறதுக்கு நாங்க ஹோட்டலுக்குப் போனோம் ருத்ரா… ஆனா அவ எங்களை மட்டுமரியாதை இல்லாம பேசி அவமானப்படுத்திட்டா” என்றார்.
லோகநாதன் தங்கையை கண்டிப்பது போல பார்க்க அவரோ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
“உன்னை அவளுக்குச் சுத்தமா பிடிக்கலையாம்… இந்த மோதிரத்தோட சேர்த்து அவளைப் பத்தின ஞாபகத்தையும் குழி தோண்டி புதைச்சிடச் சொன்னாடா ருத்ரா” என்றவர் ஏதோ பேச வந்த ராஜேந்திரனை கண்களால் அடக்கினார்.
ருத்ரதேவ் புரியாமல் பார்க்கவும் “அவ எங்க எல்லாரையும் அவமானப்படுத்தி அனுப்பிட்டா ருத்ரா… அத்தை சொல்லுறதை கேளுடா… அவ உனக்கு வேண்டாம்… உன்னைப் பிடிக்காதுனு உதாசீனப்படுத்துனவளை நீ ஏன்டா நினைக்கணும்? எவ்ளோ சீக்கிரம் அவளை மறக்க முடியுமோ மறந்துட்டு புதுவாழ்க்கைய வாழ ஆரம்பிடா” என்று என்னென்னவோ கூறினார் அவர்.
முதலில் தக்ஷிண்யா தனது குடும்பத்தினரை அவமானப்படுத்துவாளா என்பதே சந்தேகம் தான் அவனுக்கு. கூடவே அவள் தன்னை பிடிக்காது என்ற சொன்னதை அவனால் நம்பக்கூட முடியவில்லை.
உடனே மொபைலை எடுத்து தக்ஷிண்யாவுக்கு அழைத்தான் அவன்.
அதை கண்டதும் லலிதாவுக்குச் சர்வமும் ஆட்டம் கண்டது. தக்ஷிண்யாவைப் பற்றி தவறாக சொல்லி ருத்ரதேவின் மனதில் வெறுப்பை உண்டாக்கலாம் என அவர் கண்ட கனவை அவரது மருமகன் அவரின் கண்ணெதிரிலேயே பகற்கனவாக்கி கொண்டிருப்பதை அவரால் தாங்க முடியவில்லை.
ராஜேந்திரனோ லலிதாவை அதிர்ச்சியாய் பார்த்தார். இதே வார்த்தைகள் பல வருடங்களுக்கு முந்தைய சம்பவத்தை நினைவுபடுத்தியது அவருக்கு.
“உங்க பொண்டாட்டி எங்க எல்லாரையும் அவமானப்படுத்திட்டா… ஆனா நீங்க நான் சொல்லுறதை நம்ப மாட்டிங்க… யாருக்காக உங்களை வருசக்கணக்கா காதலிச்ச என்னை வேண்டாம்னு ஒதுக்கிட்டு போனிங்களோ அவ உங்க முதுக்குக்குப் பின்னாடி இன்னொருத்தன் கூட கள்ளத்தனமா உறவு வச்சிருக்கா… அதை என் கண்ணால பாத்தேன்”
ஒருவேளை அன்று இவள் கூறியது உண்மையா என்பதை ஆராய்ந்து முடிவெடுத்திருக்க வேண்டுமோ என வெகு தாமதமாக யோசித்தார் ராஜேந்திரன்.
அவரது மனைவியோ ருத்ரதேவை தக்ஷிண்யாவின் எண்ணுக்கு அழைக்கவிடாமல் போராடிக்கொண்டிருந்தார்.
“உன்னை வேண்டாம்னு சொன்னவளுக்கு நீ ஏன் ருத்ரா கால் பண்ணுற? அவ இல்லைனா வேற பொண்ணா இல்ல? நான் உனக்கு ஏத்த பொண்ணைப் பாத்து கட்டி வைக்குறேன்டா”
ஆனால் ருத்ரதேவ் அதை கேட்க வேண்டுமல்லவா! அவன் தக்ஷிண்யாவின் எண்ணுக்கு அழைப்பதில் மும்முரமாக இருந்தான்.
அவனைத் தடுத்தார் லோகநாதன்.
“என்னப்பா?”
“லல்லி சொல்லுறது உண்மை தான்… அந்தப் பொண்ணு உன்னைப் பிடிக்கலனு சொல்லிட்டுப் போயிட்டா” என்றார் அவர்.
உடனே சசிகலாவைப் பார்த்தான் ருத்ரதேவ். அவரோ மோதிரத்தை வெறித்தார்.
அப்படி என்றால் தக்ஷிண்யா தன்னைப் பிடிக்கவில்லை என்று தான் சொல்லிவிட்டாள் போல! ஏன் அப்படி கூறினாள்? திடீரென அவளுக்கு என்னவாயிற்று? குழப்பத்தில் அவனுக்குள் ஏமாற்றம் நெருப்பைப் போல பற்றிக்கொள்ள ஆரம்பிக்கவே வீட்டினர் எவ்வளவோ தடுத்தும் அவளிடம் நேரடியாக கேட்க காரைக் கிளப்பினான் அவன்.
லலிதா எவ்வளவோ கூறியும் கேட்காமல் காரை அங்கிருந்து விரட்டிக்கொண்டு அவன் செல்ல மற்ற மூவரும் அடுத்து என்ன நடக்குமோ என மனம் சோர்ந்து போய் நின்றனர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


