“புல்நுனியில இருக்கிற பனித்துளி பாக்கிறதுக்கு அவ்ளோ அழகா வைரம் மாதிரி இருக்கும்… ஆனா சூரியன் வந்ததும் உருகி காணாம போயிடும்… உண்மையான வைரம் சூரியனோட எப்பேர்ப்பட்ட வெளிச்சத்துக்கும் ஈடு குடுத்து ஜொலிக்கும்… மாதிரிக்கும் ஒரிஜினலுக்கும் உள்ள டிஃபரன்ஸ் இது தான்… என்ன ஒன்னு, ஒரிஜினல் அடுத்தவங்களால புகழப்படுறதுக்கு ரொம்ப காலம் ஆகும்… ஆனா டூப்ளிகேட் ரொம்ப சீக்கிரம் உச்சாணிக்கொம்புக்குப் போயிடும்… அதனால தானோ என்னவோ நிறைய பேர் ஒரிஜினாலிட்டியோட வாழ விரும்புறதில்ல, யாரோ ஒருத்தரோட மாதிரியா வாழ்ந்து அவங்க புகழ்ல எஞ்சியிருக்கிற துணுக்குகளை வச்சே வாழ்க்கைய ஓட்டிடுறாங்க… How pity!”
-நித்திலா
தி மேபோர்ன் பெவர்லி ஹில்ஸ் ஹோட்டல், பெவர்லி ஹில்ஸ், அமெரிக்கா…
ஹாலிவுட் பிரபலங்களின் வசிப்பிடமான பெவர்லி ஹில்சின் ஆடம்பரமான ஹோட்டல் தி மேபோர்ன். அதன் மேபோர்ன் கபேயில் காலையுணவை அருந்திக்கொண்டிருந்தனர் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள்.
அவர்களில் ஒருத்தியாக அமர்ந்து சாப்பிட்டபடியே மொபைலில் உரையாடிக் கொண்டிருந்தாள் அவள்.
தட்டில் ஃப்ரைட் எக் சாண்ட்விச், பனானா ப்ரெட் புட்டிங், சால்மன் பேவ் கலைநயத்தோடு அடுக்கி வைக்கப்பட்டிருக்க சாண்ட்விச்சை எடுத்துக் கடித்து கண்ணாடி தம்ளர் நிறைய இருந்த ஆரஞ்சு ஜூஸில் ஒரு மிடறு அருந்திவிட்டு தோளில் புரண்ட கூந்தலை ஸ்டைலாக பின்னே தள்ளிவிட்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அவங்க சொல்லுறதை நான் ஏன் கேக்கப்போறேன்மா? நானும் சந்தீப்பும் இங்க வந்தது ஹாலிவுட்டோட ஃபேமஸ் டைரக்டர் ஒருத்தரை மீட் பண்ணுறதுக்காக… ட்ரீட்மெண்ட்னு பொய் சொல்லலைனா என்ன ஏதுனு கேட்டு டார்ச்சர் பண்ணும் அந்தக் குடும்பம்… நேத்து டைரக்டர் ஜேடன் ஹெம்ஸ்வொர்த்தை மீட் பண்ணுனோம்… அவரும் சாகர் எண்டர்டெயின்மெண்டும் சேர்ந்து இன்னும் ஆறு மாசத்துல ஹாலிவுட் மூவி ஒன்னை ப்ரொடியூஸ் பண்ணப்போறோம்… அதுக்கான அக்ரிமெண்டை நேத்தே சைன் பண்ணிட்டோம்… எல்லாமே சீக்ரேட்டா நடந்து முடிஞ்சிருச்சு”
மறுமுனையில் பேசுபவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை, பேசிக்கொண்டிருந்தவளின் முகம் சுருங்கியது.
“வாய்ப்பே இல்ல… இனிமே என் புருசனோட அண்ணன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவே மாட்டார்மா… அவர் இன்னொரு கல்யாணம் பண்ணாதவரைக்கும் என் மாமனாருக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் தான்… போன மாசம் இந்தப் பேச்சுவார்த்தை சண்டையில முடிஞ்சிடுச்சு… அதுவும் நல்லது தான்… என் மாமனார் இதே கோவத்தோட இருந்தார்னா ஒட்டுமொத்த சாகர் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீசும் என் சந்தீப்கு சொந்தமாகிடும்… அதுக்கு அப்புறம் நம்மளை யாரும் எதுவும் கேக்க முடியாது… சரி அதை விடு… அப்பா எப்பிடி இருக்கார்?”
அவள் பேசிக்கொண்டிருக்கையில் திடுமென அவளது தோளில் ஒரு கை தொடவும் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
அங்கே நின்று கொண்டிருந்தான் ஒரு ஆடவன். நல்ல திடகாத்திரமான தேகம், களையான முகம், கனிவு சொட்டும் விழிகள் என பார்ப்பதற்குப் பழக இனிமையானவனாகத் தோன்றினான்.
அவன் சந்தீப் சாகர். அந்தப் பெண் அவனது மனைவி நிஹாரிகா. ஆனந்த் சாகரின் இளையமகனான அவனுக்கும் நிஹாரிகாவுக்கும் திருமணமாகி நான்காண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை.
குழந்தை இல்லை என்பதற்கு பெண்களை மட்டும் குற்றம் சாட்டும் முட்டாள்தனம் ஆனந்த் சாகரின் குடும்பத்தில் யாருக்கும் கிடையாது. அதை ஒரு குறையாக யாரும் எண்ணவில்லை என்றாலும் அதை சாக்காக வைத்தே நினைத்ததை நிறைவேற்றிக்கொள்வாள் நிஹாரிகா.
அவள் செய்யும் தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் கூட “இந்தக் குடும்பத்துக்கு வாரிசை குடுக்கலனு என்னை யாருமே மதிக்கிறதில்ல சந்தீப்” என கணவனிடம் கண்ணைக் கசக்குவாள்.
இப்படி காரியம் சாதித்து தான் கணவனை திரைத்துறையில் முதலீடு செய்யும்படி தூண்டினாள். அதற்காக ஹாலிவுட்டின் இயக்குனர் வரை உதாரணம் கூறி ஆசை காட்டி அமெரிக்கா வரை அழைத்துவந்துவிட்டாள்.
இதுவரை தந்தைக்குத் தெரியாமல் எந்தத் தொழில் முடிவையும் எடுக்காத சந்தீப் சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சனையால் மனவருத்தத்திற்கு ஆளானான். எனவே மனைவி சொல்லே மந்திரம் என அவள் சொன்ன பொய்யை உண்மை என நம்ப வைத்துவிட்டு அவளோடு அமெரிக்காவுக்கு வந்திருக்கிறான்.
சாகர் குழுமம் கால் பதிக்காத தொழிலே இல்லை. திரைத்துறையை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டும்?
சந்தீப் நிஹாரிகாவுக்கு எதிரே கிடந்த இருக்கையில் அமர்ந்து அவன் முன்னே இருந்த தட்டிலிருந்து எக் சாலட் சாண்ட்விச்சை கடித்து டயட் கோக்கினை அருந்தினான்.
“இன்னுமா டென்சன் குறையல சந்தீப்? கண்டிப்பா நம்ம ஜெயிப்போம்… உங்க குடும்பத்துக்கு நீங்க எவ்ளோ புத்திசாலினு புரியும்”

இன்னொரு விள்ளல் சாண்ட்விச்சைக் கடித்தவன் வெறுமெனே தலையாட்டினான்.
“லைகா மொபைல் நெட்வொர்க் கம்பெனி தானே… அவங்க தமிழ் சினிமால கொடி கட்டிப் பறக்கலையா? நம்மளை மாதிரி பிசினஸ் பீபிளுக்குச் சினிஃபீல்டை மட்டும் ஏன் விட்டுவைக்கணும்? நான் இருக்கேன் சந்தீப்… தைரியமா இறங்குங்க”
நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்ன மனைவியின் கையைப் பற்றியவன் காதலோடு முத்தமிட்டான்.
“காரியம் யாவினும் கை கொடுக்கும் மனைவினு பாரதியார் சொன்னது ஞாபகம் வருது நிஹி… லவ் யூ சோ மச்”
நிஹாரிகா கணவனின் புகழ்ச்சியில் நாணினாள். அவளுக்கும் சந்தீப் என்றால் உயிர். காதலித்து மணந்தவர்கள் இருவரும். சந்தீப்பின் காதல் அவனை கண்மூடித்தனமாக நிஹாரிகாவை நம்ப வைத்தது எனில் நிஹாரிகாவின் காதலோ சந்தீப்பை ‘சாகர் குழுமத்தின்’ முடிசூடா அரசனாக்க வேண்டுமென துடித்தது.
அரசனின் மனைவியாக எவ்வித கட்டுப்பாடுமின்றி நினைத்ததை நினைத்த நேரத்தில் வாங்கி அனுபவிக்கும் வாழ்க்கைக்கு அவள் ஏங்கினாள். இப்போதும் அப்படிப்பட்ட வாழ்க்கை தான் என்றாலும் ஒவ்வொரு விசயத்துக்கும் மாமனார் மாமியாரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறதே!
அது கூட பரவாயில்லை. சந்தீப்பை விட இரு வயது மட்டுமே மூத்தவனான அவனது தமையன் கிருஷ்ணராஜசாகரின் குறுக்கீடு ஒவ்வொரு விசயத்திலும் இருப்பது அவளை எரிச்சலுக்குள்ளாக்கியது.
நடந்து முடிந்த சண்டையில் அவனை கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டாள் நிஹாரிகா. சந்தீப்புக்கும் கொஞ்சம் வருத்தம் தான்.
அவளது பேச்சின் எதிரொலியாக கிருஷ்ணராஜசாகர் இனி சந்தீப் – நிஹாரிகா விசயத்தில் தலையிடப்போவதில்லை என்று ஒதுங்கிக்கொண்டது ஒரு விதத்தில் அவளுக்கு நல்லது தான் என்று மனதிற்குள் அற்ப சந்தோசம்.
மாமியாரை அழைத்துக்கொண்டு சிம்லாவுக்குச் சென்றவனின் நிலை என்ன என கணவனிடம் கேட்க நாக்கு துடித்தது. இருப்பினும் நிஹாரிகாவுக்குப் புறம் பேசுவது போன்ற அற்பக்குணங்கள் இல்லை என்று இத்தனை வருடங்கள் சந்தீப்பிடம் அவள் ஏற்படுத்தியிருக்கும் தோற்றம் ஒரேயடியாக கலைந்து போய்விடுமே!
எனவே பட்டும் படாமலும் விசாரித்தாள்.
“அத்தை கோவில் தரிசனத்தை முடிச்சிட்டாங்களா சந்தீப்? இந்நேரம் சென்னைக்குப் போயிருப்பாங்கல்ல?”
“இல்ல நிஹி… அம்மாவும் அண்ணாவும் இன்னும் சிம்லால தான் இருக்காங்க… அண்ணாக்கு அங்க ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொன்னான்”
சந்தீப் சொல்லவும் புருவம் சுருக்கினாள் நிஹாரிகா.
அந்த முக்கியமான வேலை ஏதேனும் புதிய தொழில் முயற்சியாக இருந்துவிட்டால்? அது மாமனாருக்குப் பிடித்துவிட்டால் என்ன செய்வது? உறவுகளின் மகத்துவம் புரியாதவன் என அவருக்கு கிருஷ்ணராஜசாகர் மீது இருக்கும் வருத்தம் போய்விட்டால் சந்தீப்பின் கதி என்ன?
அவளுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓட சந்தீப்போ தங்கை ஸ்ரீநயனியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான்.
ஸ்ரீநயனி சிலிக்கான் வேலி என செல்லமாக அழைக்கப்படும் சான் ஃபிரான்ஷிஸ்கோவின் தென்பகுதியில் கோலோச்சும் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆல்ஃபபேட் இன்கார்பரேசனில் பணியாற்றி வருகிறாள். அவளுக்கு ஏனோ நிஹாரிகாவைப் பிடிக்காது.
திருமணமான புதிதில் அவளிடம் நட்பு பாராட்ட முயன்று தோற்றதால் நிஹாரிகாவும் ஒரேயடியாக அவளிடம் இழைவதில்லை. இவ்வளவு ஏன், அவள் ஸ்ரீநயனியிடம் பேசி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகிறது.
கணவன் தங்கையைப் பற்றி பேசிய எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் வெறுமெனே உம் கொட்டி வைத்தாள் நிஹாரிகா. நாளை ஸ்ரீநயனி தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்வோமென அவன் கூறியதையும் அவள் கவனிக்கவில்லை. பாவம், நிஹாரிகா ஸ்ரீநயனியிடம் அவமானப்படவேண்டுமென விதி இருந்தால் அதை அவளால் மட்டும் தடுக்க முடியுமா என்ன?
*******
லாங்வுட், சிம்லா….
வீட்டிற்குள் அமர்ந்து கண்ணாடி ஜன்னல் வழியே இருளில் கருங்குன்றங்களாய் தோற்றமளிக்கும் பைன் மரக்கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.
அம்ரித் அவனது அறையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.
நித்திலாவின் மனமெங்கும் கிருஷ்ணராஜசாகரைப் பற்றிய சிந்தனைகளே! அவளறிந்த வரையில் காரணமின்றி எந்தக் காரியத்தையும் அவன் செய்யமாட்டான்.
பந்தபாசங்கள் வெற்றிக்குத் தடையென நம்புபவனுக்குத் திடீரென அம்ரித் மீது அளவற்ற அன்பு பொங்குவதற்கு இரத்தச் சொந்தத்தைத் தாண்டி வலுவான காரணம் இருக்கவேண்டுமென அவள் நம்பினாள்.
ஒருவேளை மாமியார் கண்டித்திருப்பாரோ? வாய்ப்பிருக்கிறது. நர்மதாவுக்குத் தன்னைக் கண்ட போது உண்டான ஆற்றாமையை நித்திலாவும் பார்த்தாளே! அவர் தான் கிருஷ்ணராஜசாகரிடம் அம்ரித் குறித்து பேசியிருக்க வேண்டும்.
அன்னையும் மகனுமாகச் சேர்ந்து அம்ரித்தைத் தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ? அர்த்தமற்ற பயம் தோன்றிய அடுத்த நொடியே மறைந்தும் போனது.
நித்திலாவைப் பற்றி நன்கு அறிந்தவர் நர்மதா. கிருஷ்ணராஜசாகரிடம் நித்திலா மறைத்த இரகசியங்கள் கூட நர்மதாவுக்குத் தெரியும். அப்படி இருக்கையில் கட்டாயம் தன்னையும் அம்ரித்தையும் அவர் பிரிக்க நினைத்திருக்க மாட்டார்.
அப்படி என்றால் கிருஷ்ணராஜசாகரின் பிடிவாதத்திற்கு என்ன தான் காரணம்? தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது நித்திலாவிற்கு.
இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் தனக்குப் பைத்தியம் பிடிப்பது நிச்சயமென கிருஷ்ணராஜசாகரைப் பற்றிய சிந்தனைகளை ஓரங்கட்டிவிட்டு உறங்குவதற்காக அவளது அறைக்குள் போக கதவைத் திறந்தவள் கிசுகிசுப்பான குரலில் அம்ரித் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை கேட்டாள்.
“அப்ப நிஜமாவே அவர் என்னோட டாடியா?”
விக்ரமிடம் பேசிக்கொண்டிருப்பான் போல என்றெண்ணி உள்ளே வந்தவளைப் பார்த்ததும் டெலிபோன் ரிசீவரை படக்கென வைத்தான் அம்ரித்.

நித்திலா ஆச்சரியத்துடன் மைந்தனை பார்த்தவாறு படுக்கையை ஒழுங்குப்படுத்தினாள்.
“விக்கி அங்கிள் கிட்ட தானே பேசுன? ஏன் நான் வந்ததும் போனை வச்சிட்ட?”
“அது… அங்கிள் என்னோட டாடிய பத்தி சொன்னாரா, உங்களுக்குப் பிடிக்காதுனு போனை வைச்சிட்டேன் நித்திம்மா”
“உன்னோட டாடியா?”
நித்திலா கேள்வியாக நோக்கியதும் தலையைக் குனிந்துகொண்டே ஆமென்பது போல ஆட்டினான் அவன்.
“ஏன் அம்மாக்குத் தெரியாம அங்கிளுக்குக் கால் பண்ணுன?”
“உனக்கு டாடிய பிடிக்காதுல்ல நித்திம்மா”
தயக்கத்துடன் அவன் இழுக்கவும் நித்திலாவுக்குத் திக்கென்றது. மூன்று வயதில் உன் மகன் திருத்தமாகப் பேசுகிறானே என மற்றவர்கள் புகழும்போது வந்த கர்வமெல்லாம் இப்போது அவன் தயங்கி நிற்கையில் மொத்தமாக வடிந்து போனது.
எனக்குப் பிடிக்காத எதையும் செய்யாத என் பிள்ளை இன்று கிருஷ்ணராஜசாகரின் வருகை எனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அவனைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான். இப்போது நான் செய்ய வேண்டும்?
அவனைத் திட்டி எனக்குப் பிடிக்காத உன் தந்தையைப் பார்க்கக்கூடாது என்று சொல்லலாம். அப்படி சொன்னால் நான் ஒரு ‘டாக்சிக் மதர்’ ஆகிவிடுவேனே!
குழந்தையை ஒரேயடியாக கட்டுப்படுத்தாமல் பிடித்ததை செய்யவிட்டு தவறு செய்யும் போது திருத்தி நல்வழிகாட்டும் மென்மையான வளர்ப்பு தானே இதுநாள் வரை அம்ருவுக்குக் கிடைத்திருக்கிறது.
திடீரென நான் ஏன் ‘டாக்சிக் மதராக’ நடந்துகொள்ள துடிக்கிறேன்? வேண்டாம்! எனது விருப்பு வெறுப்புகளுக்காகவும் அர்த்தமற்ற பயத்திற்காகவும் நான் அம்ரித்தின் ஆசைகளைத் தடை செய்யப்போவதில்லை.
“அம்ரு”
தலை நிமிர்ந்தான் அம்ரித்.
“உனக்கு உன் அப்பா கிட்ட பேசணும்னு ஆசையா இருக்கா?”
ஆமென்பது போல தலையசைத்தான்.
“அப்ப நாளைக்கு நீயும் விக்கி அங்கிளும் டாடிய பாக்க போங்க… நீ என்னெல்லாம் பேசணும்னு ஆசைப்படுறியோ பேசிட்டு வா”
அவ்வளவு தான்! சுவிட்ச் போட்டாற்போல அம்ரித்தின் முகம் பிரகாசமானது.
நித்திலாவின் காலைக் கட்டிக்கொண்டவன் “தேங்க்ஸ் நித்திம்மா” என்க அவனது சிகையைக் கோதினாள் அவள்.
“நீங்களும் வாங்க நித்திம்மா” ஆசையாய் கேட்டான் அம்ரித்.
“எனக்கு கபேல நிறைய வேலை இருக்கு அம்ரு… நீ போய் அப்பாவையும் பாட்டியையும் பாத்துட்டு வா… அங்க குட் பாயா நடந்துக்கணும்… தொந்தரவு குடுக்கக்கூடாது”
“நான் அப்பா கூட ஃபோட்டோ எடுப்பேன்… அதை சுனில் கிட்ட காட்டுவேன்… எனக்கு டாடி இல்லனு அவன் என்னை எவ்ளோ கிண்டல் பண்ணுனான்?”
கண்களை உருட்டி கைவிரலை ஆட்டி அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தது நித்திலாவுக்கு.
அவனை மடியில் வைத்துக்கொண்டாள்.
“ஒவ்வொருத்தரோட கேலி கிண்டலுக்கும் நம்ம பதில் சொல்லணும்னு அவசியமில்ல அம்ரு… கிண்டல் பண்ணுறவங்களை இக்னோர் பண்ணிட்டோம்னா அவங்க வேற வேலைய பாக்க போயிடுவாங்க”
அம்ரித் சிறுவனல்லவா! அன்னையின் இந்த அறிவுரை அவனுக்குப் புரியவில்லை. புரிவதற்கான வயதும் இல்லை. இருந்தாலும் நித்திலா சொன்ன அனைத்துக்கும் ஆமோதிப்பாகத் தலையாட்டினான்.
அம்ரித் புத்திசாலிப்பையன். வயதுக்குரிய குழந்தைத்தனம் இருந்தாலும் அன்னையைச் சிரமப்படுத்தமாட்டான். குழந்தைகளை அன்பினால் மட்டுமே கட்டிப்போட முடியும். அம்ரித்தைக் கட்டிப்போடுமளவுக்கு கிருஷ்ணராஜசாகரால் அன்பு காட்ட முடியாதென திடமாக நம்பினாள் நித்திலா.
அன்பா? அது கிலோ என்ன விலை? எங்கே வாங்கலாம்? என கேட்கக்கூடியவனா அம்ரித்தை அன்பால் குளிப்பாட்டப்போகிறான்.
அம்ரித் போகட்டும். போய் தந்தையைப் பற்றி அறிந்துகொள்ளட்டும். பல நேரங்களில் சொற்களை விட அனுபவங்களே சிறந்த ஆசான்களாக இருக்கும். கிருஷ்ணராஜசாகரின் தாமரை இலை தண்ணீர் குணத்தை அறிந்துகொண்டான் எனில் பின் அவனே அழைத்தாலும் அம்ரித் செல்லமாட்டான்.
இதெல்லாம் நித்திலாவின் நம்பிக்கை! தன்னிடம் பழகியவாறு தான் அம்ரித்திடமும் கிருஷ்ணராஜசாகர் பழகுவான் என்ற தவறான அனுமானம்! தந்தையைப் போய் பார்ப்பதால் என்னவாகி விடும் என்ற எண்ணத்தில் மகனை கிருஷ்ணராஜசாகரை சந்திக்க அனுமதித்த நித்திலா அதற்காக கூடிய விரைவில் வருந்தக் கூடிய நாளும் வரப்போகிறது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

