“ஒரு அழகான தோட்டத்தை அழிக்க சின்ன தீக்குச்சி போதும்… அதே மாதிரி அழகான வாழ்க்கைய துவம்சம் பண்ண Ego இந்த மூனெழுத்து போதும்… ஈகோவோட பாதிப்பு எல்லாத்தையும் இழந்த அப்புறம் தான் நமக்கு உறைக்கும்… பட் நோ யூஸ், இழந்த எல்லாம் நமக்குத் திரும்ப கிடைக்காது… ஈகோவால நம்ம இழந்தது பணம் பதவி புகழா இருந்தா கொஞ்சவருசம் கழிச்சு திரும கிடைக்கலாம்… ஆனா இரத்தமும் சதையுமான உறவுகளை இழந்துட்டோம்னா கட்டாயம் நமக்கு திரும்ப கிடைக்கமாட்டாங்க… இதெல்லாம் எனக்குப் புரிய வந்தப்ப காலம் கடந்து போச்சு… நான் நினைச்சிருந்தா நித்திலாவோட ஒன்நைட் ஸ்டாண்ட் விவகாரத்துல ஒளிஞ்சிருக்கிற உண்மைய அவ கிட்ட சொல்லிருக்கலாம்… அப்ப எனக்குள்ள வந்த கோவமும் ஈகோவும் அமைதியாக்கிடுச்சு… அவளும் அம்ருவும் மறுபடி சிம்லாவுக்குப் போயிடுவாங்கனு நான் கொஞ்சமும் நினைச்சுப் பாக்காத டைம் அது… பட் இப்ப அவங்க போயிட்டாங்கனதும் என்னோட இழப்பு வீரியம் கூடி தெரியுது… கொஞ்சம் என்னோட ஈகோவ இறக்கி வச்சா நான் இழந்தவங்களை திரும்பி என் கூட சேர்த்துக்க முடியும்னு நம்புறேன், பல நேரங்கள்ல நம்பிக்கை மட்டும் தானே நம்மளை வாழ வைக்குது”
-கிரிஷ்
லாங்வுட், சிம்லா…
அம்ரித் நொடிக்கொரு முறை வாயிலுக்கும் வீட்டுக்குமாய் நடையாய் நடந்து கொண்டிருந்தான்.
அவனது கண்களில் இருந்த ஆர்வத்திற்கும் பரபரப்புக்கும் காரணம் ஸ்ரீநயனி இரண்டு மாதங்களுக்கு பிறகு அவனைக் காண வருவதாகக் கூறியிருந்ததே!
இந்த அறுபது நாட்களில் அவன் கிருஷ்ணராஜசாகரையும் தாத்தா பாட்டியையும் மிகவும் தேடினான். ஆனால் நித்திலாவின் வார்த்தைகளை மீறி கிருஷ்ணராஜசாகரின் எண்ணுக்கு அவனது டேபிலிருந்து ஒரு வீடியோ அழைப்பு கூட செல்லவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நித்திலா மைந்தனின் மனநிலையைப் புரிந்துகொண்டாள். அப்பாவிடம் பேசு என அவள் வற்புறுத்தவில்லை. அதேநேரம் அவனிடம் பேசக்கூடாதென நிபந்தனையும் விதிக்கவில்லை.
மீண்டும் கிருஷ்ணராஜசாகரிடம் உறவாடினான் என்றால் ஏற்கெனவே நடந்த அனைத்தும் மீண்டும் நடக்குமென மட்டும் கூறினாள். நான்கு வயது அம்ரித் அன்னைக்கு அங்கே கிடைத்த வசவு, அவமரியாதையை மறக்கவில்லை. கூடவே தந்தை துப்பாக்கியால் காயமடைந்தது வேறு அவ்வபோது இரவில் கனவாக வந்து மிரட்டியது.
தந்தையிடம் பேசினால் மீண்டும் அது போல அவனுக்கு ஆபத்து வந்துவிடுமென பயந்த அம்ரித் அன்னையின் பேச்சை மீறவில்லை.
ஆனால் ஸ்ரீநயனியிடம் மட்டும் தினமும் பேசுவான். நடந்த சம்பவங்களால் ஓய்ந்து போயிருந்த நித்திலாவுக்கும் ஸ்ரீநயனியின் நட்பு தேவைப்பட்டது.
சாகர் குழுமத்தின் முக்கியமான இயக்குனர்களில் அவளும் ஒருத்தி என்பதால் அவளால் நினைத்த நேரத்தில் அண்ணியைக் காண சிம்லாவுக்கு வரமுடியவில்லை என்றாலும் வீடியோ காலில் உரையாடிக்கொள்வாள்.
நித்திலா கிருஷ்ணராஜசாகரின் உடல்நிலை தேறிவிட்டதையும், நிஹாரிகாவை சந்தீப் விவாகரத்து செய்யவிருப்பதையும் அவள் வாயிலாக தெரிந்துகொண்டாள்.
நிஹாரிகாவின் நிலையை எண்ணி அவளுக்கு வருத்தமே வரவில்லை. அவ்வளவு கல்நெஞ்சக்காரியா தான் என ஸ்ரீநயனியிடம் கூட ஒருமுறை கேட்டாள்.
“ஷீ டிசர்வ்ஸ் திஸ்”
இதுவே ஸ்ரீநயனியின் பதில். கூடவே நடந்த கொலைமுயற்சியில் அவளது பங்கு இல்லை என கிருஷ்ணராஜசாகரே காவல்துறையிடம் கூறிவிட்டானாம். அவன் வேறு ஏதேனும் திட்டம் போட்டிருப்பான் என அனுபவப்பட்டவள் எண்ணிக்கொண்டாள்.
ஸ்ரீநயனிக்கு வாய்ப்பு கிடைத்ததும் சிம்லாவுக்கு வருவதாகக் கூறினாள். எனவே தான் அம்ரித்துக்கு நிலை கொள்ளவில்லை.
அவனது பரபரப்பைக் கவனித்த நித்திலா சாப்பிட வருமாறு அழைத்தாள்.
“அத்தை வந்ததும் சாப்பிடுறேன் நித்திமா” என்று சொல்லிவிட்டான் அவளது அருமை மகன்.
மூவருக்கும் சமைத்துவிட்டு ஸ்ரீநயனியின் வருகைக்காக காத்திருந்தாள் நித்திலா.
விக்ரம் அவளை விமானநிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக சென்றிருந்தான்.
“அம்ரு! ஜூஸ் மட்டுமாச்சும் குடிடா”
வீட்டின் வெளியே கிடந்த பாறையில் அமர்ந்து கால்களால் புல்லைச் செதுக்கிக்கொண்டிருந்தவன் உற்சாகமாகக் கத்தினான்.
“விக்கி அங்கிள் கார் வருது”
அவனது உற்சாகத்தைத் தனக்குள் வாங்கிக்கொண்டு நித்திலாவும் வீட்டை விட்டு வெளியே வந்தாள். விக்ரமின் கார் வந்து நிற்கவும் முகமலர்ச்சியோடு “அம்ருவோட அத்தை வந்தாச்சு” என இராகமாகக் கூறியவள் காரிலிருந்து முதலில் வெளியே தெரிந்த முரட்டு ஜீன்ஸ் அணிந்த நீளமான கால்களைப் பார்த்ததும் அமைதியானாள்.
விக்ரம் சராசரி உயரம் தான். ஸ்ரீநயனியும் நித்திலாவும் ஒரே உயரம் கொண்டவர்கள். அவளுக்குத் தெரிந்து பனைமரத்தில் பாதியாய் வளர்ந்த இரு ஆடவர்கள் கிருஷ்ணராஜசாகரும் சந்தீப்பும் மட்டுமே.
சந்தீப் இங்கே வருவதற்கு எந்த அவசியமும் இல்லை. அப்படி என்றால் வந்திருப்பவன் கிருஷ்ணராஜசாகரே தான்.
அவளது முகம் கடுகடுக்கத் துவங்கிய அடுத்த நொடி அவனே இறங்கினான்.
அவனைக் கண்டதும் அம்ரித் உற்சாகத்தோடு ஓடிப்போய் முழங்கால்களைக் கட்டிக்கொண்டான்.
“ஐ மிஸ் யூ டாடி”
அம்ரித்தின் குரலில் இருந்த ஏக்கம் கிருஷ்ணராஜசாகரை உருக்கிவிட அவனைத் தூக்கி முத்தமழை பொழியத் துவங்கினான்.

நித்திலா அவனை அடுத்து இறங்கிய ஸ்ரீநயனியிடம் என்ன இது என்பது போல கண்களால் வினவினாள்.
ஸ்ரீநயனியோ “எனக்கு எதுவுமே தெரியாது அண்ணி… அண்ணாவைக் கேளுங்க” என்று கிருஷ்ணராஜசாகரைக் கை காட்டினாள்.
உடனே கிருஷ்ணராஜசாகரிடம் நித்திலாவின் பார்வை திரும்ப அவன் வெகு கவனமாக அவளைத் தவிர்த்துவிட்டு அம்ரித்திடம் பேசிக்கொண்டே நித்திலாவைக் கடந்து போனான்.
போனவனின் முதுகிலிருந்த பெரிய பேக் நித்திலாவை இடிக்க தடுமாறப்போனவளை பிடித்தாள் ஸ்ரீநயனி.
எதுவும் அறியாதவனைப் போல நின்று கொண்டிருந்த விக்ரமை அவளது பார்வை அடுத்து சுடத் தொடங்கியது.
“ஐயையோ! எனக்கு ஒன்னுமே தெரியாது நித்தி… உன் நாத்தனார் கிட்ட கேட்டுக்க” என்று ஸ்ரீநயனியை மாட்டிவிட்டு வீட்டுக்குள் ஓடப்பார்த்தான்.
அவனை வேகமாகத் தடுத்தாள் நித்திலா.
“பொய் சொல்லாத விக்கி… நான் கால் பண்ணுனப்ப நீ எடுக்கல… நீயும் இவங்க கூட சேர்ந்து ஏதோ திருட்டுத்தனம் பண்ணுற”
மிரட்டியவளிடம் என்னவென கூறுவான் விக்ரம்?
ஸ்ரீநயனி இரு தினங்களுக்கு முன்பு அவனிடம் உதவி கேட்டதை சொல்லமுடியுமா? அண்ணனையும் அண்ணியையும் இணைக்க விரும்பி கேட்டவளுக்கு மறுப்பு கூற அவனுக்கு விருப்பமில்லை.
சம்மதித்தவன் அதை நித்திலாவிடம் மறைத்துவிட்டான். சொன்னால் அவள் வேறு ஏதேனும் விபரீத முடிவுக்கு வருவாளே!
திருதிருவென விழித்தவனை நல்லவேளையாக ஸ்ரீநயனி காப்பாற்றினாள்.
“ரொம்ப பசிக்குது அண்ணி… உங்க என்கொயரிய அப்புறமா வச்சுக்கோங்க… முதல்ல எனக்குச் சாப்பாடு போடுங்க”
ஸ்ரீநயனி பசியென புலம்பவும் நித்திலா அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
கூடவே வந்த விக்ரம் “ஆமா! எனக்கும் நல்ல பசி” என்கவும்
“நீ செஞ்ச வேலைக்குப் பச்சத்தண்ணி கூட தரமாட்டேன்… ஓடிடு” என அவனை மிரட்டிய நித்திலா வீட்டுக்குள் வந்ததும் பார்த்த காட்சியில் கண் கலங்கிப்போனாள்.
சோபாவில் சாய்ந்தாற்போல அமர்ந்திருந்த கிருஷ்ணராஜசாகரின் மார்பில் அம்ரித் கோழிக்குஞ்சாய் ஒடுங்கியிருந்தான்.
“இங்கயே இருங்க டாடி…. நீங்க நான் நித்திம்மா மூனு பேரும் ஒன்னா இருந்தா எவ்ளோ ஜாலியா இருக்கும்?”
குழந்தைக்கு எல்லாமே ஜாலி தான்! ஆனால் ஈகோ தணலாய் கொட்டிக் கிடக்கும் இரு இதயங்கள் ஒரே இடத்தில் எப்படி ஒன்றாய் வாழமுடியும் என்பது நித்திலாவின் கேள்வி.
“அம்ரு குட்டியோட ஆசை எல்லாத்தையும் டாடி நிறைவேத்துவேன்”
கிருஷ்ணராஜசாகர் பேசியது அவளுக்கு நகைப்பூட்டியது.
என்னையும் அம்ரித்தையும் மீண்டும் தொந்தரவு செய்யக்கூடாதென சொல்லியும் வந்திருக்கிறான். இந்த முறை என்ன திட்டம் வைத்திருக்கிறானோ!
கடுகடுப்பு, கோபம் எல்லாம் நீங்கிய பெருமூச்சொன்றை வெளியிட்டவள் “நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா நயனி… நான் ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்து வைக்குறேன்” என்றாள்.
ஸ்ரீநயனி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வந்ததும் அவளுக்கும் விக்ரமுக்கும் காலையுணவைப் பரிமாறினாள்.
பேச்சினிடையே தந்தையைப் பற்றியும் மாமனார் மாமியாரைப் பற்றியும் விசாரித்தாள்.
மெதுவாக கொலை முயற்சி விசாரணை எந்தளவில் உள்ளது என்பதையும் வினவினாள்.
“போலீஸ் ஏதோ ப்ளான் பண்ணிருக்காங்கண்ணி… நம்ம சந்தேகப்பட்ட எல்லாரையும் க்ளோஸா வாட்ச் பண்ணுறாங்க… ரஜீஷா கிடைச்சாங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணுறாங்க… பட் கில்லரோட சம்பந்தம் இருக்குறவங்க எப்பிடி நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க?”
“அவங்க நல்லவங்க தான் நயனி… டேரக்டா கில்லரை பத்தி சொல்லாம என்னை வார்ன் பண்ணுனாங்க”
ஸ்ரீநயனி சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் தனது உடமைகள் அடங்கிய பேக்கைத் தூக்கிக்கொண்டாள்.
நித்திலா வியப்போடு பார்க்கும் போதே “அம்ரு குட்டி! அத்தை ஒன் வீக் ஜாலியா விக்கி அங்கிள் கூட சிம்லாவ சுத்தி பாக்கப்போறேன்… பட் விக்கி அங்கிளை விட உனக்குத் தான் சிம்லாவை பத்தி நல்லா தெரியுமாமே? நீயும் என்னோட விக்கி அங்கிள் வீட்டுக்கு வர்றியா?” என்று கேட்டவளிடம் அம்ரித்தும் வருவதாகச் சம்மதித்தான்.
பின்னர் சிறிய பேக்கில் அவனது உடைகளை அள்ளி வைத்த ஸ்ரீநயனி நித்திலாவின் ஆச்சரியப்பார்வையைக் கண்டும் காணாதவளைப் போல அவனை அழைத்துக்கொண்டாள்.
“என்ன விக்கி இதுல்லாம்?”
அங்கலாய்த்த நித்திலா விக்ரமிடம் கேட்டாள்.
“அது… மிஸ்டர் சாகர் எல்லாத்தையும் சொல்லுவார் நித்தி… ஒன் வீக் அம்ரு எங்க கூடவே இருக்கட்டும்” என்றான் அவன்.
அம்ரித்தை இவர்களோடு அனுப்பிவிட்டு கிருஷ்ணராஜசாகரோடு தான் மட்டும் இங்கே தனியாக இருக்கவேண்டுமா?
அதற்கு இங்குள்ள மலைக்குன்றுகளில் ஏதேனும் ஒன்றின் மீதிருந்து குதித்துவிடலாமென எண்ணினாள் அவள்.
மனதில் நினைப்பதை எல்லாம் வெளியே சொல்லிவிடமுடியாதே! அதிலும் ஸ்ரீநயனியிடம் கண்டிப்பு தொனியில் பேச விரும்பாதவள் நித்திலா.
எனவே வேறு வழியின்றி ஆர்வத்தோடு கிளம்பிய அம்ரித்தை விக்ரம் மற்றும் ஸ்ரீநயனியோடு அனுப்பி வைத்தாள்.
மகிழ்ச்சியாக டாட்டா காட்டிய அம்ரித்தை வழியனுப்பி வைத்தவளின் செவியில் “என்னோட லக்கேஜை உன் ரூம்ல வச்சிடுறேன் நித்தி” என கிருஷ்ணராஜசாகர் கூறியது விழுந்த அடுத்த நொடி கடுப்பு தலைக்கேற ஹாலுக்குப் போனாள்.
அங்கே அவன் இல்லை. அவளது அறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.
உடனே அங்கே சென்றவள் குளியலறையின் கதவை மடமடவென தட்டினாள்.
“உனக்கு மேனர்ஸே கிடையாதா நித்திலா?”’
உள்ளே இருந்தவன் கத்தவும் தட்டுவதை நிறுத்திவிட்டு அவன் வருவதற்காக காத்திருந்தாள்.
காத்திருக்கும் போது தனது மெத்தை மீது அவன் வீசிவிட்டுச் சென்றிருந்த டீசர்ட்டைப் பார்த்தவள் கடுப்போடு அதை தரையில் எறிந்து செருப்புக்காலால் மிதிக்கப்போன நொடியில் குளியலறைக்கதவு திறந்து கிருஷ்ணராஜசாகர் வெளியே வந்தான்.
நித்திலாவின் கையிலிருந்த தனது டீசர்ட்டை வாங்கிக்கொண்டு அணிந்தவன் “நீ என்ன நினைக்குறனு எனக்குப் புரியுது நித்தி… நம்ம அவ்ளோ வார்ன் பண்ணியும் இவன் வந்துட்டானேனு உனக்குக் கோவம்… உன் கோவம் நியாயமானது தான்… பட் என் தரப்புலயும் கொஞ்சம் நியாயம் இருக்கு… அதை உன் கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றான்.
“சொல்லிட்டுப் போக வந்தவருக்கு ஏன் இவ்ளோ லக்கேஜ்?”
சந்தேகமாகக் கேட்டாள் நித்திலா.
கிருஷ்ணராஜசாகர் கண்களைச் சுருக்கியவன் “நாட் பேட்! நீ இப்ப கொஞ்சம் புத்திசாலி ஆகிட்ட… நான் அதுக்காக மட்டும் வரல” என்றான்.
மீண்டும் இவன் என்னிடமிருந்து அம்ரித்தைப் பிரித்துவிடுவானோ? பயமும் கோபமும் ஒரு சேர எழுந்தது நித்திலாவுக்கு.
“மறுபடியும் கேவலமா ப்ளான் பண்ணிருக்கிங்களா? இந்தத் தடவை எனக்கு என்ன வியாதி இருக்குனு ஏமாத்துறதா உத்தேசம்?”
“இனி நீ ஏமாறமாட்டனு எனக்குத் தெரியாதா? போன தடவை உன் கிட்ட நான் நடந்துக்கிட்ட விதத்துக்குக் காரணம் நீ என்னை பிரிஞ்சதை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டது தான்… உன்னோட ஈகோவும் இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்சும் நம்மளை பிரிச்சிடுச்சுனு நினைச்சேன்… ஆனா நான் சொன்ன வார்த்தைய கேட்டு நீ பிரியுற முடிவுக்கு வந்திருக்கனு தெரிஞ்சதும் உன் மேல இருந்த கோவம் குறைஞ்சுது… அப்பவும் நீ என்னை நம்பலங்கிற எரிச்சல் குறையல… இந்த தடவை நான் வந்தது நம்ம லைஃபுக்கு செகண்ட் சான்ஸ் குடுனு கேக்குறதுக்காக… உனக்கு என் கிட்ட என்னெல்லாம் கேக்கணும்னு தோணுதோ எல்லாத்தையும் கேளு… நான் விளக்கம் குடுக்க ரெடியா இருக்கேன்”
நித்திலாவால் கிருஷ்ணராஜசாகரின் இந்த தலைகீழ் மாற்றத்தை நம்ப முடியவில்லை.
கிருஷ்ணராஜசாகர் அவளருகே வந்தவன் “பிலீவ் மீ நித்தி” என மென்மையாக உரைத்து நித்திலாவின் கைகளைப் பற்றப் போன தருணத்தில் அவனை விலக்கிவிட்டாள்.
“ஒன்-நைட் ஸ்டாண்டுக்கு என்ன விளக்கம் வச்சிருக்கிங்க?”
“முதல்ல அதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சா நீ இப்பிடி உளறமாட்ட”
“அர்த்தம் புரியாத அளவுக்கு நான் ஒன்னும் தத்தி இல்ல… சம்பந்தமில்லாத ரெண்டு பேர் ஒரே ஒரு நாள் மட்டும் பிசிக்கல் ரிலேசன்ஷிப் வச்சுக்கிறதை தான் அப்பிடி சொல்லுவாங்க”
“சரி அதிபுத்திசாலி… நீயும் நானும் சம்பந்தமில்லாதவங்களா? நான் தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி நீ… அப்புறம் எப்பிடி நான் அந்த வார்த்தைய சொல்லுவேன்? யோசிக்கவே மாட்டல்ல நீ… இதுல தத்தி இல்லனு பெருமை வேற… உன்னை மாதிரி உலகமகா தத்திய நான் மீட் பண்ணுனதே இல்ல”
“போதும்! நீங்களும் நானும் சேர்ந்து இருந்த அந்த ஒரு நைட்டை நீங்க தான் கொச்சைப்படுத்துனிங்க”
“நைட்டா? அது என்ன சிங்குலர்ல சொல்லுற? நைட்ஸ்… எங்க சொல்லு… நைட்ஸ்”
கிருஷ்ணராஜசாகர் அழுத்தமாக உரைக்கவும் நித்திலாவின் கண்கள் குழப்பத்தில் தவித்தன.
“என்ன நைட்ஸுக்கு ஸ்பெல்லிங் தெரியாதா? N….I…G…H…T..S… நீயும் நானும் கேரளால ஸ்பெண்ட் பண்ணுன நாட்களை எப்பிடி மறந்த நீ?”
அவன் குறிப்பு காட்டி பேசியதில் நித்திலாவின் முகம் சிவந்து போனது. இவனை நம்பி அங்கே போனது தவறோ? அன்று கேட்டபோது இல்லவேயில்லை என்று சாதித்தானே!
தன்னை அவன் ஏமாற்றிவிட்டான் என அறிந்ததும் கோபம் வந்தது.
சுர்ரென்று ஏறிய கோபத்தில் நித்திலா அவனை அறைய கையை ஓங்கினாள். ஓங்கிய கரம் கன்னத்தைத் தொடும் முன்னர் வேகமாகப் பற்றி தடுத்தான் கிருஷ்ணராஜசாகர்.
“நினைக்குறப்பலாம் அடிச்சிக்கனு என் கன்னத்தை உனக்கு லீசுக்கு விட்டிருக்கேனா? ஆ ஊனா கை ஓங்குற” என்று கிண்டலாக உரைத்தவனின் இறுக்கமான பிடியில் கைச்சருமம் எரிந்தது நித்திலாவுக்கு.
“என் கையை விடு… வலிக்குது”
“மரியாதையா விடுங்கனு சொல்லு”
“இப்ப மரியாதை ஒன்னு தான் குறைச்சல்… விடுடா”
செருப்புக்காலால் அவனது காலை மிதிக்கப் போனாள் நித்திலா.
“ஏய்” என்றபடி பதறி விலகியவன் அவளது கையை விட்டான்.
“மனுஷியாடி நீ? எப்பிடி அட்டாக் பண்ணலாம்னு அலையுற லேடி அண்டர்டேக்கர்” என்றபடி அவளது அறையில் கிடந்த பீன்பேக்கில் சரிந்தான்.
கிருஷ்ணராஜசாகர் இவ்வளவு சுவாதீனமாக தனது அறைக்குள் வந்ததையே நித்திலாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனோ அவளுக்குப் பிடித்த பீன்பேக்கை சொந்தம் கொண்டாடுகிறானே!
கடுப்புடன் பீன்பேக்கை நெருங்கியவள் “ஒழுங்கா எழுந்திருச்சு வெளிய போங்க சாகர்… இல்லனா மரியாதை கெட்டுடும்” என்கவும்
“நீ கெடுக்குறதுக்கு மரியாதைனு ஒன்னு என் கிட்ட மிச்சம் இருக்குதா என்ன? என் ரூமுக்கு நீ வந்தப்ப நான் எவ்ளோ டீசண்டா நடந்துக்கிட்டேன்? நீ மட்டும் ஏன் இப்பிடி காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்கிற நித்தி?” என்று இலகுவாக கேட்டபடி ஜம்பமாகக் காலை ஆட்டினான் அவன்.
“நீங்க என்னை பால்கனில தள்ளி கதவை சாத்தலை? நான் செய்யுறதுக்குப் பேர் காட்டுமிராண்டித்தனம்னா, அதுக்குப் பேர் என்ன? லவ்வாங்கியா?”
“ஓ! அது தான் உன்னோட ஆசைனா இப்பவே என் கையை பிடிச்சு இழுத்துட்டுப் போய் பால்கனில தள்ளி கதவை அடைச்சுக்க… அச்சச்சோ! உன்னோட இந்த பக்கிங்ஹாம் பேலஸ்ல பால்கனினு ஒன்னு கிடையாதுல்ல, மறந்துட்டேன் நித்தி… சாரி”
சந்தடி சாக்கில் அவளது வீட்டை பற்றி வஞ்சப்புகழ்ச்சியாக கிருஷ்ணராஜசாகர் குத்திக் காட்டினான்.
அவனது கேலி கிண்டலில் நித்திலாவின் பொறுமை காற்றில் பறந்து அவள் கத்தப் போன தருணத்தில் “டாடி” என்ற அம்ரித்தின் குரல் அவளை அமைதியாக்கிவிட்டது.
அறைக்குள் வந்த அம்ரித் “என்னோட க்ளைடர் ஸ்கூட்டரை மறந்துட்டேன் நித்திம்மா” என்று அதை எடுத்துக்கொண்டான்.
பீன்பேக்கில் சரிந்திருந்த கிருஷ்ணராஜசாகரின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு “பை டாடி” என்றவன் “நித்திம்மாவ திட்டக்கூடாது” என சத்தியம் வாங்கிக்கொண்டு ஓடிவிட்டான். அவன் ஓடிய திக்கை பார்த்துக்கொண்டிருந்த நித்திலா கிருஷ்ணராஜசாகரோடு எப்படி இந்த ஏழுநாட்களைக் கழிக்கப்போகிறோமென கவலையில் ஆழ்ந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

