“விருப்புக்கும் வெறுப்புக்கும் நடுவுல ஒரு மெல்லிய கோடு தான் இருக்கும்னு சொல்லுவாங்க… அந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கமா இந்தப் பக்கமானு அல்லாடுற நிலமையில இருக்குறவங்களுக்குத் தான் அதோட சிரமம் தெரியும்… ரெண்டு பக்கத்துக்குமே சாதக பாதகம் இருக்கும்… எதை தேர்ந்தெடுக்கிறது எதை விலக்குறதுனு புரியாம ஊசலாடுறவங்களோட நிலமை ரொம்ப பரிதாபமானது… அந்த ஊசலாட்டத்தை அனுபவிக்கிறவங்கிற முறைல ஒரு அட்வைஸ் சொல்லுறேன், விருப்போ வெறுப்போ அதை வெளிப்படையா காட்டிருங்க… அட்லீஸ்ட் நம்ம உணர்ச்சிகளை மறைக்கலங்கிற நிம்மதியாச்சும் மிஞ்சும்”
-நித்திலா
ஆனந்த்சாகர் உடைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த மகளை ஆதுரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீநயனி தனது ஸ்வெட்டரை எடுத்து வைத்துவிட்டு தந்தையிடம் வந்து அமர்ந்தாள்.
“உங்க பேரனுக்குக் குடுக்குறதுக்கு கிப்ட் எதுவும் வச்சிருக்கிங்களாப்பா?”
ஆனந்த்சாகர் மௌனமாகச் சிரித்தார். அந்த மௌனத்தின் பின்னே இருக்கும் வலி ஸ்ரீநயனிக்குப் புரிந்தது. நித்திலாவும் கிருஷ்ணராஜசாகரும் அம்ரித் முன்னே சண்டை போடுவார்கள் என நர்மதா அவனை அவர்களோடு ஒரே அறையில் இருக்க அனுமதித்ததில்லை.
அப்போதெல்லாம் அவனோடு இருந்தவர்கள் நர்மதாவும் ஆனந்த்சாகரும் தானே! பேரனும் மனைவியும் ஆசையாய் தாமரை வளர்த்த கதையை அவன் சொல்ல ஆர்வமாகக் கேட்ட தருணம் எல்லாம் அவரது மனதில் இன்னும் இனிக்கிறதே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவரது மனம் அம்ரித்தை நாடியது. கூடவே இரு ஆண் பிள்ளைகளில் ஒருவன் கூட ஒழுங்கான இல்லற வாழ்க்கையை வாழவில்லை என்ற துக்கம் அவருக்கும் இருந்தது. என்ன தான் செல்வந்தராக இருந்தாலும் அவரும் தகப்பன் தானே!
ஸ்ரீநயனி தந்தையின் மனமறிந்த மகளாக ஆறுதல் கூறினாள்.
“எல்லாம் மாறும்பா… நம்பிக்கையா இருங்க”
“நீயாச்சும் நல்லபடியா குடும்பம் குழந்தைனு வாழணும் நயனிம்மா… உன் அண்ணனுங்களை மாதிரி தனியாளுங்களா நின்னுடாதடா… எனக்கு இருக்குற ஒரே நம்பிக்கை நீ மட்டும் தான்… வாழ்க்கைத்துணை இல்லாத வாழ்க்கை பூஜ்ஜியம் நயனி… ஒருத்தனுக்கு இருந்தும் பிரயோஜனமில்ல… இன்னொருத்தனுக்கு வாழ்க்கைய காப்பாத்திக்க தெரியல… நீ மட்டுமாச்சும் சந்தோசமா நிறைஞ்ச வாழ்க்கை வாழணும்டா”
“எனக்கு மாப்பிள்ளை எதுவும் பாத்திருக்கிங்களாப்பா?”
ஆனந்த்சாகர் மீண்டும் சிரித்தார்.
“இல்லடா”
“அப்ப ஏன் இப்பவே கவலைப்படுறிங்க? உங்க பொண்ணு ஔவையார் காரைக்கால் அம்மையார் மாதிரி வாழ்க்கைய துறந்துடுவானு பயமா? ஐ ப்ராமிஸ், எனக்கேத்த லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிப்பேன்… நீங்க சந்தோசப்படுற மாதிரி வாழ்ந்து காட்டுவேன்… ரொம்ப யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகாதிங்கப்பா”
தந்தையும் மகளும் பேசிக்கொண்டிருந்த போது அங்கே வந்தான் கிருஷ்ணராஜசாகர்.
“நயனி நீ ரெடியா?”
ஸ்ரீநயனி எழுந்தாள்.
“நான் ரெடியாகிட்டேன்ணா… நீ லக்கேஜ் பேக் பண்ணிட்டியா?”
“ம்ம்”
ஸ்ரீநயனியும் கிருஷ்ணராஜசாகரும் சிம்லாவுக்குச் செல்லவிருக்கின்றனர்.
ஸ்ரீநயனிக்கு அம்ரித்தையும் நித்திலாவையும் பார்க்கவேண்டும் போல இருந்தது. கிட்டத்தட்ட அறுபது நாட்கள் கழிந்துவிட்டனவே!
கிருஷ்ணராஜசாகர் வெறுமையான தனது வாழ்க்கையை இனியாவது அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ளவேண்டுமென்ற எண்ணத்தோடு சிம்லாவுக்குத் தங்கையோடு வருவதாகக் கூறினான்.
முதலில் இச்செய்தியைக் கேட்டதும் அவனது பெற்றோருக்கு நம்பிக்கை இல்லை. மீண்டும் ஏதாவது குறுக்குவேலை செய்து அம்ரித்தைப் பிரிக்கப் பார்க்கிறான் என்று சந்தேகித்தனர். ஆனால் கிருஷ்ணராஜசாகரின் மனதில் வந்த மாற்றத்தை ஒருவன் அவர்களுக்குப் புரியவைத்தான்.
அவன் ராகுல்! சிரஞ்சீவி – காவேரியின் மருமகன்! கிருஷ்ணராஜசாகரின் நண்பன்!
அம்ரித்தின் பிறந்தநாளுக்கு வர கிளம்பிய தருணத்தில் சைந்தவிக்கு வாந்தியும் மயக்கமுமாகிவிட அவன் வரவில்லை. சைந்தவி கருவுற்ற தகவலை நண்பனிடம் பகிர்ந்துகொள்ள அவனது எண்ணுக்கு அழைத்த போது தான் சாகர் நிவாசில் நடந்த அனர்த்தங்கள் அனைத்தும் ராகுலுக்குத் தெரிய வந்தது.
மனைவியை மாமியார் வசம் ஒப்படைத்துவிட்டு நண்பனைக் காண வரலாமென்றாலோ சைந்தவி அவனைப் போகவிடவில்லை. கணவனின் அருகாமையை அவள் நாட ராகுலும் வீடியோ காலில் நலம் விசாரித்தான்.
கிருஷ்ணராஜசாகரின் உடல்நிலை தேறி அவன் வழக்கம் போல அலுவலகம் செல்ல ஆரம்பித்த பிறகு ஒருநாள் வருகை தந்தவன் மீண்டும் நித்திலா அவனைப் பிரிந்த தகவல் தெரிந்ததும் வருத்தப்பட்டான்.
அவர்களின் பிரிவுக்கான காரணத்தைக் கேட்டறிந்தவனின் மனம் குற்றவுணர்ச்சியில் தவித்தது. இப்ராஹிம் கிருஷ்ணராஜசாகருக்குச் சொன்ன அறிவுரையைக் கேட்டவன் தனது எண்ணத்தையும் வெளிப்படையாகக் கூறிவிட்டான்.
“நீ நித்திலாவ எவ்ளோ லவ் பண்ணுனனு எனக்குத் தெரியும் கிரிஷ்… உன் நடவடிக்கைய அவ சந்தேகப்பட்டது தப்பு தான்… நீ சொன்ன வார்த்தைய பத்தி விளக்கம் கேக்காம அவ அவசரப்பட்டு பிரிஞ்சு போயிருக்கக்கூடாது… ஆனா நித்திலா நிலமைய கொஞ்சம் யோசிச்சுப் பாரு…
அவளோட உடம்புல குறை இருக்குனு சொல்லி சொல்லி மனசை ரணமாக்கி வச்சிருந்த உன் மாமியாரும் நிஹாரிகாவும் அவளுக்குள்ள விதைச்ச இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்ஸை நீ எப்பவாச்சும் போக்கணும்னு முயற்சி பண்ணுனியா? அவளைக் கல்யாணம் பண்ணிக்க காரணம் லவ்னு சொல்லாம நயனிக்காக கல்யாணம் பண்ணிக்கலாம், அப்புறம் டிவோர்ஸ் பண்ணிக்கலாம்னு அக்ரிமெண்ட் மாதிரி பேசுனவன் நீ… உன் மனசுல இருக்குற லவ்வ நீ அவ கிட்ட சொல்லவேல்ல… சொல்லித் தான் புரியணுமானு என் கிட்ட வியாக்கியானம் வேற பேசுன… போதாக்குறைக்கு அவளுக்கு நீ இரக்கப்பட்டு வாழ்க்கைப்பிச்சை போட்டனு நிஹாரிகா வேற அப்பப்ப கிண்டல் பண்ணுவா… இதுல்லாம் சேர்ந்து நித்திலாக்குள்ள இன்செக்யூரிட்டிய உருவாக்கிருக்கும் கிரிஷ்… அதனால தான் நீ ஒன்-நைட் ஸ்டாண்ட்னு சொன்னதும் அவ துடிச்சிருப்பா… அவ மேல தப்பே இல்லனு நான் சொல்லமாட்டேன்… நீ அவ மேல காட்டுனது இரக்கமில்ல, லவ்னு புரிஞ்சிக்கிறதுக்கான வாய்ப்பை நித்திலாக்குக் குடுக்கல… அட்லீஸ்ட் இப்பவாச்சும் புரிய வைக்க ட்ரை பண்ணு… இல்லனா உன் வாழ்க்கை அர்த்தமில்லாததா மாறிடும்”
இப்ராஹிமின் அறிவுரையும் ராகுலின் பேச்சும் தான் கிருஷ்ணராஜசாகர் மீண்டும் நித்திலாவைத் தேடி செல்ல காரணம். ராகுல் கூறிய அனைத்தும் உண்மை தானே! தன்னுடைய காதலை புரிய வைக்காமல் விட்ட தவறை சரி செய்ய விரும்பியவன் தங்கை சிம்லாவுக்குச் செல்ல போவதாக கூறியதும் தானும் வருவதாகக் கூறினான்.
முதலில் ஸ்ரீநயனியால் நம்ப முடியவில்லை. இதுவும் தமையனின் திட்டங்களில் ஒன்றாக இருக்குமோ என பெற்றோரைப் போல அவளும் ஐயம் கொண்டாள்.
ஆனால் கிருஷ்ணராஜசாகர் இல்லையென மறுத்தான். அவன் இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரியது என எண்ணி அவளும் தன்னுடன் அவனை அழைத்துச் செல்ல சம்மதித்தாள்.
இதோ அவன் உடைமைகளை எடுத்து வைத்துவிட்டுத் தங்கையைத் தேடி வந்துவிட்டான்.’
ஆனந்த்சாகர் அவனுக்குப் பெரிதாக எந்த அறிவுரையும் கூறவில்லை.
“கோவப்படாம செஞ்ச தப்பை சரி பண்ணு கிரிஷ்… நிதானம் பிரதானம்… ரெண்டு பேர்ல ஒருத்தர் இறங்கி வந்தா தான் உங்க லைஃப் சீராகும்… நித்திலாக்கு அம்ருவோட பாதுகாப்பு பத்தி இருக்குற சந்தேகத்தை எப்பிடியாச்சும் சரி பண்ணு… ஆல் த பெஸ்ட் கிரிஷ்”
அவனது சிரத்தை வளைத்து நெற்றியில் முத்தமிட்டார் ஆனந்த்சாகர். இம்மாதிரியான காட்சிகள் எல்லாம் இரு மகன்களும் வளர்ந்த பிறகு சாகர் நிவாசில் நடந்ததில்லை.

யாருடைய பேச்சையும் செவிமடுக்காத கிருஷ்ணராஜசாகர் முதல் முறையாக தந்தையின் பேச்சை மனதில் பதிய வைத்துக்கொண்டான்.
அங்கே வந்த நர்மதா அம்ரித்திற்காக அவரும் குளத்தில் அவன் வளர்த்த தாமரைகளும் காத்திருப்பதாகக் கூற சொன்னார். போனதும் அவனது முகத்தை வீடியோ காலில் பார்க்க ஏற்பாடு செய் என வேண்டுகொள் விடுத்தார்.
கிருஷ்ணராஜசாகர் ஸ்ரீநயனியிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டுமென அழைத்துச் செல்ல ஆனந்த்சாகரும் நர்மதாவும் தனித்து விடப்பட்டனர்.
மூத்தவனின் வாழ்க்கை சீராகிவிடுமென நம்பிக்கை பிறந்தது இருவருக்கும். ஆனால் சந்தீப்பின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கிறதே! அடுத்த கவலை முளைத்தது.
இன்னும் சில தினங்களில் சந்தீப் – நிஹாரிகா விவாகரத்து வழக்கின் முதல் ஹியரிங் வரப்போகிறது.
மைந்தன் இப்போது என்ன நிலமையில் இருக்கிறானோ என இருவரது மனமும் இளையவனை எண்ணி துடித்தது.
அதே துடிப்பு சைலேந்திரிக்கும் இருந்தது.
மகள் செய்த மடத்தனத்தை எண்ணி அவர் வருந்தாத நாளில்லை. தேவையில்லாமல் அவள் மனதில் வெறுப்பை ஊற்றி வளர்த்ததன் பலனை இப்போது அனுபவிப்பது அவர் தானே!
ஒரே பெண்பிள்ளை செல்வந்த குடும்பத்தில் திருமணமாகி மகாராணியாக வாழ்வாளென அவர் கண்ட கனவு இப்படி சிதைந்துவிட்டதே என அவர் வருந்தாத நாளில்லை.
ஆனால் ஜனார்தனன் இதை கண்டுகொள்ளவில்லை. அவரது மகளைப் பிரிந்த துன்பத்தில் நூறில் ஒரு பங்கு துன்பம் கூட நிஹாரிகாவின் மணமுறிவு விவகாரத்தில் சைலேந்திரிக்கு இல்லை என்பது அவரது எண்ணம்.
அம்மாவும் மகளும் எப்படியோ போங்கள் என அவர் ஒதுங்கிக்கொண்டார்.
“அவ மேல உங்களுக்குக் கொஞ்சம் கூட பாசமில்லையாங்க?”
சில நேரங்களில் மனம் பொறுக்காமல் கேட்பார் சைலேந்திரி.
“குழந்தைய கொல்ல பாத்தவ மேல பாசம் காட்டுற அளவுக்கு எனக்குப் பெரிய மனசு இல்ல… ஏதோ என் மாப்பிள்ளை இரக்கப்பட்டு அவ மேல சந்தேகமில்லனு போலீஸ்ல சொன்னார்… இல்லனா உன் மகள் இந்நேரத்துக்கு ஜெயில்ல களி தின்னுட்டிருந்திப்பா… அப்பிடி ஒரு சம்பவம் நடக்கலனு சந்தோசப்படு”
ஜனார்தனன் குத்தலாகப் பதில் சொல்லிவிடுவார். எனவே இப்போதெல்லாம் சைலேந்திரி தனது வருத்தத்தை அவரிடம் கூறுவதில்லை.
“நான் சொன்ன மாதிரி சரியான நேரத்துல ஒரு குழந்தை மட்டும் இருந்திருந்தா இப்பிடி ஒரு நிலமை நிஹிக்கு வந்திருக்குமா?” என புலம்புவார், மனதிற்குள் தான்.
சம்பந்தப்பட்ட நிஹாரிகாவோ மருத்துவமனையில் இருந்தாள். அவள் எதிர்பார்த்தது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் அவளை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து வந்திருந்தது.
விவாகரத்திற்கான ஹியரிங்குக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வந்த காரியம் மட்டும் கைகூடிவிட்டால் சந்தீப் மீண்டும் தன்னுடன் வாழ ஆரம்பித்துவிடுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளுக்கு.
பரிசோதனை முடிவுகளுக்குக் காத்திருந்தவளுக்கு மருத்துவர் நல்ல செய்தியையே கூறினார்.
“யூ ஆர் ப்ரெக்னெண்ட் மிசஸ் சந்தீப்”
நிஹாரிகா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இறுதியில் அவளும் தாயாகிவிட்டாள். இந்தக் குழந்தை தன்னையும் சந்தீப்பையும் பிணைக்கும். அவன் கட்டாயம் குழந்தைக்காக ஏற்றுக்கொள்வான்.
அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவனை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்.
மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு அவர் கொடுத்த அறிவுரைகளை கேட்டுவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினாள்.
வீட்டுக்கு வந்தவள் இனி தான் எதையும் இழக்கப்போவதில்லை என்ற சந்தோசத்தில் திளைத்திருந்தாள்.
சாகர் குடும்பத்தின் மருமகள் என்ற கௌரவம், சந்தீப்பின் மேலாண்மைக்குக் கீழே இருக்கும் நிறுவனங்களின் பங்குகள், காதல் கணவன் சந்தீப், இந்தப் பணக்கார வாழ்க்கை – எதையும் அவள் இழக்கப்போவதில்லை.
அனைத்தையும் அவளுக்கு மீட்டுத் தரும் கருவி அவளது வயிற்றில் உதித்துவிட்டதே! அமெரிக்க மருத்துவரின் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டதில் மாதவிடாய் ஒழுங்காகி ஹார்மோன் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டதால் குழந்தை பெற தயாரானாள் நிஹாரிகா.
ஆனால் சந்தீப் அவளோடு முகம் கொடுத்து பேசுவதில்லை. மாதாமாதம் ஓவலேசன் தேதியை மனதில் வைத்து காத்திருப்பாள் நிஹாரிகா.
சந்தீப் தான் வேறு அறைக்குப் போய்விட்டானே! அவர்களின் திருமண நாளன்று இரவு சந்தீப் போதையிலிருந்ததை பயன்படுத்திக்கொண்டாள்.
அவள் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் நிலைக்கு இறங்கிவிட்டவள் தாயான மகிழ்ச்சியை கணவனிடம் பகிர்ந்துகொள்ள அவன் வீட்டுக்கு வரும் நேரத்திற்காக காத்திருந்தாள்.
சந்தீப்பும் வந்து சேர்ந்தான். அவனது அறைக்குப் போக முயன்றவனைத் தடுத்தாள் நிஹாரிகா.
“வெட்டிங் ஆனிவர்சரி அன்னைக்கு நடந்தது ஆக்சிடெண்ட்… மறுபடியும் அது நடக்காது நிஹாரிகா”
“நான் உங்களைத் தடுத்ததுக்குக் காரணம் அதில்ல சந்தீப்”
“வேற என்ன?”
“ஐ அம் ப்ரெக்னெண்ட்”
சந்தீப் ஒரு கணம் கண் கலங்கினான். மனதுக்குள் மத்தாப்பூவாய் சந்தோசம் பரவியது. அவனுக்குள் நிகழ்ந்த உணர்ச்சி போராட்டத்தைக் கண்டுகொண்டாள் நிஹாரிகா.
“இனிமே நீங்க டிவோர்ஸ் பண்ணுற முடிவை மாத்திப்பிங்கல்ல சந்தீப்?”
சந்தீப் உணர்ச்சிமிகுதியில் ஆமென சொல்ல துடித்த போதே நிஹாரிகா குறுக்கே பேசினாள்.
“மாத்தி தான் ஆகணும் சந்தீப்… நீங்க உங்க முடிவை மாத்திக்கலனா நான் இந்த பேபிய அபார்ட் பண்ணிடுவேன்”
அடுத்த நொடி சந்தீப்பின் கண்கள் கோபத்தில் சிவந்தன.
“பைத்தியமா நீ? நம்ம பிரச்சனைக்குக் குழந்தை என்னடி பண்ணும்?”
“அப்பா துணை இல்லாம சிங்கிள் மதரா குழந்தைய வளக்குறதுலாம் என்னால முடியாது சந்தீப்… இந்த சொசைட்டி கண்டபடி பேசுறதை என்னால தாங்கிக்க முடியாது… நீங்க டிவோர்ஸ் முடிவை மாத்திக்கலனா நான் அபார்சன் பண்ணுற முடிவை மாத்திக்க மாட்டேன்”
பொறுமைச்சாலி, இளகிய மனம் கொண்டவன் என்றெல்லாம் பெயர் வாங்கிய சந்தீப் அவளது இந்த பேச்சில் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டான்.
“என் பொறுமைய சோதிக்காத நிஹாரிகா… இவ்ளோ நாள் காதலைக் காட்டி நீ செஞ்ச தப்புக்கு என்னை தாளம் போட வச்ச… இப்ப குழந்தைய ஆயுதமா யூஸ் பண்ணுற… நீ எல்லாம் என்ன பொண்ணுடி?”
“செண்டிமெண்டா அட்டாக் பண்ண பாக்குறிங்களா சந்தீப்? நான் சொன்னா சொன்னது தான்”
சவால் விட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தாள் நிஹாரிகா.
சந்தீப் என்ன செய்வதென புரியாமல் கோபத்தோடு நின்றான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

