“வழக்கமான வாழ்க்கை நமக்கு போரடிக்கிறப்ப நம்மளை ரெஃப்ரெஷ் பண்ணிக்கிறதுக்காக சில டிஸ்ட்ராக்சன்ஸ் நமக்குத் தேவைப்படுது… அது பெரிய அளவுல நடக்குற பார்ட்டியா தான் இருக்கணும்னு அவசியமில்ல… ரொட்டீன் லைஃப்ல இருந்து விலகி நம்மளை ஆசுவாசப்படுத்திக்க பீச்ல சுண்டலை கொறிச்சிட்டே நடக்குற சின்ன வாக்கா கூட இருக்கலாம்… இந்த பீச் வாக்கை எனக்கு இன்ட்ரோ பண்ணுனது நித்திலா…. உஃப்… அவளைப் பத்தி யோசிக்க வேண்டாம்னு நினைச்சாலும் சில நேரத்துல அவ செஞ்ச சின்ன சின்ன நல்ல விசயங்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கும்… அதுல இதுவும் ஒன்னு… இப்பவும் சில நேரம் பீச்ல வாக் போறப்ப மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்… பிசினஸ் டென்சனை விட்டுட்டு கொஞ்சநேரம் அம்மாவோட மடில படுத்தா நல்லா இருக்கும்… எது எப்படியோ வழக்கமான வேலைகள்ல இருந்து நம்ம எல்லாருக்குமே ஒரு டிஸ்ட்ராக்சன் தேவைப்படும்… அந்த டிஸ்ட்ராக்சன் இல்லாம ஓடுனோம்னா ஸ்ட்ரெஸ், டிப்ரசன்னு சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட அலையணும்”
-கிரிஷ்
கோரமங்களா, பெங்களூரு…
புது பங்களா ஓரளவுக்குப் பழகிவிட்டது நிஹாரிகாவுக்கு. சாகர் நிவாஸ் போலவே பணியாட்களுக்கோ ஆடம்பரத்துக்கோ குறைவில்லாத பங்களா. போதாக்குறைக்கு அந்தப் பகுதியில் இருக்கும் அவளைப் போன்ற பணக்காரவீட்டுப்பெண்கள் சிலரின் அறிமுகமும் நட்பும் கிடைத்துவிட்டதால் நேரம் போவதே தெரியவில்லை.
அதில் முக்கியமானவர் சவிதா பர்மான். ஸ்பா ஒன்றில் அவரைச் சந்தித்த கணத்திலேயே நட்பு முகிழ்த்தது அவர்களுக்குள்.
பின் சவிதா அவரது பங்களாவில் கொடுத்த பார்ட்டிக்கு நிஹாரிகா போயிருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அங்கே திலீப் பர்மானின் அறிமுகம் கிடைத்தது. கூடவே தன்னையும் தன் காதல் கணவனையும் குடும்பத்தை விட்டு விலக்க காரணமான கிருஷ்ணராஜசாகரைப் பழி தீர்க்கும் உபாயமும் கிடைத்தது.
திலீப் பர்மானின் நிறுவனம் ராந்த்வாவுக்குப் போட்டி நிறுவனமென அவளுக்குத் தெரியும். சந்தீப்பிடம் சரும பாதுகாப்பு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பிக்கச் சொல்லும் எண்ணம் நிஹாரிகாவுக்கு இருந்தது.
எப்படியாவது கிருஷ்ணராஜசாகரின் ராந்த்வா சரும பாதுகாப்பு நிறுவனத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடவேண்டுமென்ற வெறி! அதை வெளிப்படையாகவே சவிதாவிடம் அந்தப் பார்ட்டியில் கூறியிருந்தாள் அவள்.
சவிதாவோடு இருந்த திலீப் பர்மானோ “தொழில்ல அடிக்கிறதை விட சொந்த வாழ்க்கையில அடிக்கிறது தான் ஒருத்தரை ஒரேயடியா அழிக்கிறதுக்கான வழி மிசஸ் சந்தீப்” என்றான் குயுக்தியோடு.
நிஹாரிகாவுக்கு அந்த ஆசையும் இருந்ததே! கிருஷ்ணராஜசாகரின் சொந்த வாழ்க்கையை நாசமாக்க எதையும் செய்ய தயார் என்றாள்.
திலீப் பர்மான் உடனடியாக அவளை நம்பிவிடவில்லை. சந்தீப்போடு வணிக ஒப்பந்தம் போட்டு சருமபாதுகாப்பு நிறுவனமொன்றை ஆரம்பித்து கிருஷ்ணராஜசாகரை அழிக்கலாம் என்ற ஆசையைக் காட்டி தந்தையோடு போட்டிருந்த சதி திட்டத்திற்கு அவளையும் கூட்டாளி ஆக்க திட்டமிட்டான்.
நிஹாரிகா மீது முழு நம்பிக்கை வந்த பிறகு தங்களின் திட்டத்தைக் கூறினான்.
“கிருஷ்ணராஜசாகரை கொலை பண்ணுறதுக்கு நாங்க செட் பண்ணுன ஆளுக்கு இப்ப தான் சரியான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு… சாகர் நிவாஸ்ல நடக்கப்போற பர்த்டே பார்ட்டில வச்சு அவன் வேலையை முடிச்சிடுவான்… பட் அதுல ஒரு சின்ன சிக்கல்”
“என்ன சிக்கல்?”
“சாகர் நிவாஸ்ல இப்ப செக்யூரிட்டிய ரொம்ப டைட் பண்ணிருக்காங்க… அதை மீறி அந்த கில்லர் உள்ள நுழைய உங்க உதவி தேவை மிசஸ் சந்தீப்”
“கவலையே படாதிங்க… நான் அந்த ஆளை உள்ள அழைச்சிட்டுப் போறேன்… பர்த்டே பார்ட்டி முடிஞ்சதும் அவன் கிருஷ்ணராஜசாகரைக் கொல்லுறதை நான் என் கண்ணால பாத்து ரசிக்கணும்… என் சந்தீப்பை குடும்பத்தை விட்டுப் பிரிச்சவனோட உயிர் போறதை நான் பாக்கணும்”
நிஹாரிகா கண்களில் குரூரம் மின்ன உரைத்தாள்.
அவளிடம் சதி திட்டத்தின் இலக்கு அம்ரித் சாகர் என்ற உண்மையை திலீப் பர்மான் திறமையாக மறைத்துவிட்டான். எப்பேர்ப்பட்ட அரக்கியாக இருந்தாலும் குழந்தையைக் கொல்ல துணை போகமாட்டாள் என்பது திண்ணம்.
அரசல் புரசலாக அம்ரித்தைப் பற்றி நிஹாரிகாவிடம் விசாரிக்கும் போதே அம்ரித் பற்றிய அவளது மனநிலையைத் தெரிந்துகொண்டான். ஒவ்வொரு முறை அம்ரித்தைப் பற்றி கேட்கும் போதும் கிருஷ்ணராஜசாகரை விட்டு விலகினால் அவன் நன்றாக இருப்பான், இல்லையெனில் தகப்பன் புத்தி வந்துவிடுமென கூறினாள் அவள்.
எனவே அவளிடம் குழந்தையைக் கொலை செய்யப்போகும் திட்டத்தைக் கூறாமல் கிருஷ்ணராஜசாகரைக் கொல்லப்போவதாகப் பொய் சொல்லி சம்மதிக்க வைத்தான் திலீப் பர்மான்.
கிருஷ்ணராஜசாகரால் சந்தீப் ‘சாகர் குழுமத்தின்’ தலைமை பொறுப்பில் அமர முடியாமல் போனதென்ற ஆத்திரம் தனியே வந்த பிறகும் நிஹாரிகாவுக்குத் தணியவில்லை.
தன்னையும் சந்தீப்பையும் திட்டம் போட்டு வெளியே அனுப்பியவனைப் பழி வாங்க தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்குத் திலீப் பர்மானின் இத்திட்டம் சாதகமாகப் போய்விட்டது.
இளகிய மனம் கொண்ட தன் கணவனை வேதனைக்குள்ளாக்கிய கிருஷ்ணராஜசாகருக்கு மரணமே தண்டனை என தனது மனதின் வக்கிரத்திற்கு சால்ஜாப்பு சொல்லிக்கொண்டாள் நிஹாரிகா.
குடும்பத்தை விட்டு ஒதுக்கிவைத்தாலும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தனக்கும் சந்தீப்புக்கும் அழைப்பு வருமென அழுத்தமாக நம்பினாள் அவள்.
அவளது நம்பிக்கையை உடைக்காமல் நர்மதாவும் அம்ரித்தின் பிறந்தநாளுக்காக இளைய மகனையும் மருமகனையும் அழைத்திருந்தார்.
அந்த தகவலை திலீப் பர்மானிடம் மொபைல் மூலம் பகிர்ந்து கொண்டிருந்தவள் ஷூ கால்களின் சத்தம் கேட்கவும் அழைப்பைத் துண்டித்தாள்.
முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டவள் “வாங்க சந்தீப்” என்றாள்.
சந்தீப்போ அப்படி ஒருத்தி இருப்பதை கண்டுகொள்ளாமல் செல்லவும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள்.
“இன்னும் என் மேல உள்ள கோவம் குறையலையா சந்தீப்?”
சந்தீப் அவளிடம் பேசாமல் இருக்கவும் கைகளைப் பற்றிக்கொண்டாள் நிஹாரிகா.
“ப்ளீஸ்! என் கிட்ட பேசாம இருக்காதிங்க சந்தீப்… நான் கோவத்துல நித்திலாவ அப்பிடி திட்டிட்டேன்”
சந்தீப் அசூயையுடன் தனது கைகளை விலக்கிக்கொண்டான்.
மீண்டும் கண்டுகொள்ளாத பாவனையுடன் ப்ளேசரைக் கழற்றி வீசியவன் முகம் கழுவ சென்றுவிட்டான்.
நிஹாரிகா அவனை எப்படி சமாதானம் செய்வது என்பதை அறியாமல் வழக்கம் போல விக்கித்துப் போய் நின்றாள்.
பெங்களூரு வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் சந்தீப்பின் கோபம் தீரவில்லை.
எப்படி நித்திலாவைப் பற்றி மோசமாகப் பேசலாமென சாகர் நிவாசில் சண்டையிட்டதோடு சரி. பெங்களூருவில் வீடு வாங்கி, அலுவலகத்தை இங்கே மாற்றிக்கொண்டது, மனைவிக்காக வீட்டில் பணியாட்களை நியமித்தது என எத்தனையோ வேலைகளை மனைவிக்காகச் செய்தாலும் அவளிடம் பேச மட்டும் மறுத்துவிட்டான் சந்தீப்.
இந்தச் செய்தியை இன்னும் தனது அன்னையிடம் கூட அவள் பகிர்ந்துகொள்ளவில்லை.
சொன்னால் வருத்தப்படுவாரே என்ற எண்ணம். அவனது பாராமுகம் கூட கிருஷ்ணராஜசாகர் மீது அவளுக்கு வன்மம் உண்டாக காரணமாக அமைந்தது என்று கூறலாம்.
சந்தீப்பின் பாராமுகத்தை இப்படியே விட்டால் அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுமே! விடக்கூடாது என தீர்மானத்தோடு நின்றாள் நிஹாரிகா.
குளியலறையிலிருந்து வந்தவன் நிதானமாக இலகுவான உடைக்கு மாறும் வரை பொறுமை காத்தவள் அவன் வெளியேற எத்தனிக்கவும் “நில்லுங்க சந்தீப்” என்றாள்.
சந்தீப்பும் நின்றவன் என்னவென கண்களால் வினவினான்.
“நீங்க என் கூட பேசலைனா நான் டாக்டர் குடுத்த மெடிசின்ஸ் எதையும் சாப்பிடமாட்டேன்”

அவளது பிடிவாதத்தில் முகம் இறுகியவன் கோபத்தோடு ஏதோ சொல்ல வந்தான். பின்னர் கோபத்தைக் கைவிட்டான்.
“உனக்கு என்ன தோணுதோ அதை தானே இப்ப வரைக்கும் செஞ்சிட்டிருக்க… மெடிசின்ஸ் எடுத்துக்குறதும் எடுத்துக்காம போறதும் உன்னோட இஷ்டம்… என்னை எமோஷ்னல் ப்ளாக்மெயில் பண்ணுறதை விட்டுட்டு உருப்படியா ஏதாவது வேலைய பாரு”
அலட்சியமாக சொல்லிவிட்டு நகரப்போனவனைத் தடுத்தாள் அவள்.
“என்னை ஒரேயடியா வெறுத்திட்டிங்களா சந்தீப்? நடந்தது சின்ன பிரச்சனை தானே? எனக்கும் நித்திலாக்கும் இதுவரை சண்டையே வந்ததில்லையா?”
“உங்க சண்டைய பத்தி நான் எப்பவும் கேள்வி கேட்டதில்ல நிஹாரிகா… இந்தத் தடவை நீ அண்ணியோட கேரக்டரை அசிங்கப்படுத்துன… என் அண்ணனோட ஒய்ப் அவங்க… ஒரு பையனோட அம்மாவும் கூட… அவங்களைப் போய் என்னோட சேர்த்து வச்சு பேச உனக்கு எப்பிடி தோணுச்சு? நீ பேசுனதை நினைச்சு பாத்தா உனக்கே அருவருப்பா இல்லையா? ஏன் இப்பிடி மாறிட்ட நிஹாரிகா? இல்ல, இது தான் உன்னோட உண்மையான குணமா? கிரிஷ் அண்ணாவும் நயனியும் சொல்லுற மாதிரி நான் தான் உன்னைப் புரிஞ்சிக்க லேட் பண்ணிட்டேனோ?”
சந்தீப்பின் சாரமாரியான கேள்விகள் எதற்கும் பதில் இல்லை நிஹாரிகாவிடம்.
நித்திலாவைக் காயப்படுத்தும் வெறி! அவளைக் காயப்படுத்த எந்த எல்லைக்கும் போவது இதெல்லாம் கிட்டத்தட்ட நிஹாரிகாவின் குணம். பாவம், இத்தனை நாட்கள் சந்தீப் அவனது கண்ணையும் மனதையும் மறைத்த காதல் திரையை விலக்கிவிட்டு சமீபத்தில் தானே நிஹாரிகாவின் சுயரூபத்தைப் பார்த்திருக்கிறான்! அவனால் எப்படி அதை சீரணிக்க முடியும்?
இது தான் எனது குணமென நிஹாரிகாவாலும் அவனிடம் ஒப்புக்கொள்ள முடியாது. அன்பானவள், பழக இனிமையானவள் என்ற முகமூடியை அணிந்து தானே அவனது மனதை தன்வசப்படுத்தினாள். அதெல்லாம் சாகர் குழுமத்தின் வாரிசை தன் மீது காதலில் விழவைப்பதற்காக போட்ட நாடகமென எப்படி தன் வாயால் கூறுவாள்?
நாடகமாக இருந்தாலும் சந்தீப் மீது அவள் கொண்ட காதல் உண்மையானது. ஆழமானதும் கூட. தனது குணத்தினால் அதை இழக்க அவள் தயாராக இல்லை.
நிஹாரிகாவின் மௌனம் சந்தீப்பின் கேள்விகளுக்குப் பதிலாக அமைந்ததுவிட்டது. அவன் விரக்தியோடு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
******
சாகர் நிவாஸ்…
ரஜீஷா தனது வேலைநேரம் முடிந்ததும் நித்திலாவிடம் சொல்லிக்கொள்ள வந்தார்.
சிம்லாவில் வுட்பெக்கர் கபேயின் செயல்பாடுகளைப் பற்றி விக்ரமோடு போனில் பேசிக்கொண்டிருந்தவள் ரஜீஷா வந்ததும் பேச்சை நிறுத்தினாள்.
“நான் கிளம்புறேன் மேடம்”
எப்போதும் நித்திலாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பும் போது ரஜீஷாவின் முகத்தில் புன்னகை இருக்கும். இன்று அது மிஸ்சிங். நித்திலா புருவம் சுருக்கி யோசிக்கும் போதே ரஜீஷாவின் நெற்றியில் புதிதாக தெரிந்த வீக்கம் அவளது கருத்தில் பதிந்தது.
“ஒரு நிமிசம் ரஜீஷா… கொஞ்சம் இங்க வாங்க”
கிளம்பப்போனவரை தன்னிடம் வரும்படி அழைத்தாள் அவள். ரஜீஷாவும் ஒருவித பதற்றத்துடன் அவளருகே வந்தார்.
“உக்காருங்க”
இருக்கையைக் காட்டினாள் அவள். ரஜீஷா அமரத் தயங்கவும் அவள் எழுந்துகொண்டாள்.
“உங்க நெத்தில என்ன வீக்கம்? எங்கயும் இடிச்சிட்டிங்களா?”
ஆதுரமாய் கேட்டாள். ரஜீஷாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. தொண்டைக்குள் ஏதோ அடைத்ததை போல உணர்ந்தவர் வெறுமெனே தலையாட்டி வைத்தார்.
அப்போது தான் அவர் அணிந்திருந்த டாப்பின் த்ரீ போர்த் ஸ்லீவைத் தாண்டி கையிலிருந்த சிவப்பு நிற தடிப்புகள் நித்திலாவின் பார்வைக்குக் கிடைத்தன.
வரி வரியாய் சிவந்து தடித்திருந்தைப் பார்த்தால் யாரோ அடித்தது போல் அல்லவா இருக்கிறது!
“என்னாச்சு? இதுல்லாம் என்ன ரஜீஷா?”
வெகு சிரமத்துடன் அழுகையை அடக்கிக்கொண்டவர் “எனக்கும் என் புருசனுக்கும் சின்ன பிரச்சனை மேடம்… அதுல அவர் என்னை அடிச்சிட்டார்” என்றார்.
“அவர் அடிக்கிற வரைக்கும் நீங்க என்ன பண்ணிட்டிருந்திங்க?” என்று சிடுசிடுத்தபடி காயத்திற்கு போடும் களிம்பினை வைத்திருக்கும் முதலுதவிப்பெட்டியை எடுத்தாள் நித்திலா.
களிம்பை அவரிடம் நீட்டியவள் “இதை போட்டுக்கோங்க… இனிமே உங்க புருசன் உங்களை அடிக்க வந்தார்னா எதிர்க்க கத்துக்கோங்க” என்றாள் கண்டிக்கும் குரலில்.
கண்ணீரை மறைத்தபடி களிம்பை வாங்கிக்கொண்ட ரஜீஷா “மேடம்” என்க
“சொல்லுங்க” என்றாள் அவள்.
“அம்ருவோட பர்த்டே வரப்போகுதுல்ல… அன்னைக்கு செக்யூரிட்டிய இன்னும் டைட் பண்ணச் சொல்லுங்க… இதை நான் கிரிஷ் சார் கிட்ட சொல்ல முடியாது… நீங்க அவரோட ஒய்ப்… நீங்க சொன்னா அவர் கேட்டுப்பார்” என்றார் அவர்.
நித்திலாவுக்குப் பெருமூச்சு வந்தது. என் பேச்சை கேட்டு தான் அவன் மறுவேலை பார்ப்பான்! நான் சொன்னாலும் அவன் கண்டுகொள்ளமாட்டான் என அலட்சியமாக நினைத்தாள்.
இருப்பினும் கிருஷ்ணராஜசாகரிடம் பேசுவதாகச் சொல்லி அவரை அனுப்பிவைத்தாள்.
ரஜீஷா சொன்னதை கிருஷ்ணராஜசாகரிடம் கூறிய போது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அவன் அதை ஆமோதித்தான்.
நித்திலாவுக்குத் திகைப்பில் ஒன்றுமே புரியாத நிலை.
“ஏன் இப்பிடி முழிக்கிற? நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கலாம்”
“க்கும்! இந்த ரூல் எனக்கு மட்டும் அப்ளிக்கபிள் இல்ல போல”
வாய்க்குள் முணுமுணுத்தாள் அவள்.
“உன் பேச்சைக் கேக்கணும்னா நீ நல்லதா எதாச்சும் சொல்லணும்… எப்பவும் என் பிள்ளைய என் கிட்ட இருந்து பிரிக்கிறதை பத்தி மட்டுமே பேசுறவ சொல்லுறதை நான் எப்பிடி கேக்க முடியும்?”
குத்தலாகப் பேசிவிட்டு எழுந்தான் அவன்.
“இல்லனா மட்டும் கேட்டுட்டு தான் நீங்க மறுவேலை பாப்பிங்க… உங்க கிட்ட இருக்கிற கார்ட்ஸ்ல கொஞ்சம் பல்க்கான ஆளை ரஜீஷா வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியுமா?”
“ஏன்? அவங்களுக்கு என்ன பிரச்சனை?”
“எனக்கு என்ன பிரச்சனையோ அதே பிரச்சனை தான் அவங்களுக்கும்”
“புரியல”
“அவங்க ஹஸ்பெண்ட் தான் பிரச்சனை”
எனக்கு நீ தான் பிரச்சனை என்பதை சொல்லாமல் சொன்னவளை கிருஷ்ணராஜசாகரால் முறைக்க மட்டுமே முடிந்தது.
“அந்தாள் ரஜீஷாவை அடிச்சிருக்கான்… அவங்க நெத்தி வீங்கியிருக்கு… கையில வரி வரியா சிவந்து தடிச்சிருக்கு… இந்த மாதிரி மிருகத்தை நாலு சாத்து சாத்துனா தான் வழிக்கு வருவான்… எவ்ளோ திமிரு, இதுல்லாம் டொமஸ்டிக் வயலன்ஸ்… போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி முட்டிக்கு முட்டி தட்டணும் அந்த ராஸ்கலை”
நித்திலா கடுப்பில் பொரிந்து தள்ள கிருஷ்ணராஜசாகர் அவளது பேச்சின் நடுவே சிரித்து வைத்தான்.
“சிரிக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய காமெடி ஒன்னும் நான் பண்ணல”
“பொண்டாட்டிய புருசன் அடிச்சா மட்டும் தான் டொமஸ்டிக் வயலன்ஸா? புருசனை பொண்டாட்டி அடிச்சா அதை சட்டம் விசாரிக்காதா?”
“ஏன் விசாரிக்காது? இப்ப கூட ஜானிடெஃப் கேஸ்ல ஆம்பர் ஹெட்…”
நித்திலா உதாரணம் காட்டி பாவனையோடு பேசிக்கொண்டிருக்கும் போதே, விசமச்சிரிப்பு கிருஷ்ணராஜசாகரின் இதழில்.
இவன் எதற்கு சிரித்து தொலைக்கிறான்? கடுப்பில் பேச்சை பாதியில் நிறுத்தினாள் அவள்.
கிருஷ்ணராஜசாகர் தனது கன்னத்தைத் தடவிக் காட்டியவன் “என்னைக் கூட கன்னத்துல விரல் தடம் பதியுற அளவுக்கு ஒருத்தி அடிச்சா… அவ மேல டொமஸ்டிக் வயலன்ஸ் கம்ப்ளைண்ட் குடுக்கலாமானு யோசிக்கிறேன்” என்றான்.
கன்னச்சதையை நாக்கால் உந்தி தள்ளியபடி அவன் சொன்ன விதத்தில் நித்திலா வாயடைத்துப்போனாள்.
“சப்போஸ் இதை காரணமா காட்டி லீகலா என் பிள்ளைய என் கூடவே வச்சிக்க முடியும்னா கட்டாயம் நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன் ஸ்வீட் ஹார்ட்”
உடனே நித்திலாவின் கண்கள் கலவரம் கொள்வதை ரசித்தவன் திடீரென ஏதோ உறுத்த ரசிப்பதை நிறுத்தினான்.
“நீ என்ன சொன்ன? ரஜீஷாவோட ஹஸ்பெண்ட் அவங்களை அடிச்சாரா?”
“ஆமா!”
“ஹவ் இஸ் இட் பாசிபிள்?” என்று குழம்பியவனின் காதில் நித்திலாவின் வார்த்தைகள் எதுவும் ஒலிக்கவில்லை.
அதற்கு மாறாக “அவங்களும் அவங்க பையனும் மட்டும் தான் இருக்காங்க சார்… ஹஸ்பெண்டை பிரிஞ்சு வாழுறாங்கனு ஏஜென்சில சொன்னாங்க… நானும் ஒரு தடவை போலீஸ் வச்சு என்கொயரி பண்ணிட்டேன்… பாஸ்ட் த்ரீ இயர்சா ரஜீஷா அவங்க பையன் முரளி கூட தனியா தான் வாழுறாங்க சார்…” என்ற இப்ராஹிமின் குரல் மட்டுமே கேட்டது.
ஏதோ தவறு நடக்கிறது! கணவனைப் பிரிந்த பெண்மணி என்று தானே இப்ராஹிம் கூறினான். ஒருவேளை கணவன் திரும்பி வந்திருக்கலாம். திரும்பி வந்தவன் ஏன் மனைவியை காயமடையும் அளவுக்கு அடித்திருப்பான்?
கிருஷ்ணராஜசாகர் இப்ராஹிமின் எண்ணுக்கு அழைத்து விவரத்தைக் கூற நித்திலாவோ அவனது பேச்சுக்குக் காரணம் புரியாமல் விழித்தாள்.
“எதுவோ தப்பா நடக்குது இப்ராஹிம்… இன்னொரு தடவை ரஜீஷா பத்தி விசாரிச்சிடு”
ரஜீஷாவைப் பற்றி விசாரிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது? நித்திலா அவனிடம் கேட்கும் முன்னர் பரபரப்போடு அங்கிருந்து சென்றுவிட்டான் கிருஷ்ணராஜசாகர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

