“எங்க வீட்டுக்குப் பக்கத்துல புதுசா ஒரு ஃபாஸ்ட் ஃபுட் செயின் ஓப்பன் பண்ணிருக்காங்க… அங்க மேக் அண்ட் சீஸ் ரொம்ப நல்லா இருக்கும்னு என் ஃப்ரெண்ட் சொன்னா… சாப்பிடலாம்னு ஆசைப்பட்டாலும் கையில காசு இல்ல… என்னோட யூடியூப் சேனலோட ஃபர்ஸ்ட் பேமெண்ட் இன்னும் வந்து சேரல… அந்த ஷாப்பை க்ராஸ் பண்ணுறப்பலாம் சீஸ் பேக் பண்ணுற வாசனை மூக்கைத் துளைக்கும்… சாப்பிடக் குடுத்து வைக்கலனு ரொம்ப ஏக்கமா இருந்துச்சு… ஸ்டடி டேபிள்ல தலை வச்சு சோகமா படுத்து கனவுல மேக் அண்ட் சீஸை சாப்பிட்டிருந்தப்ப திடீர்னு ப்ரட் க்ரம்ப்சும் சீஸும் பேக் பண்ணுன வாசனை ரொம்ப பக்கத்துல வந்துச்சு… அட கனவுல சாப்பிடுறப்ப நிஜமாவே வாசனை வருமா? சந்தேகப்பட்டு கண்ணை திறந்து பாத்தா டேபிள்ல என் முன்னாடி அலுமினியம் ஃபாயில் ரேப்பரால மூடுன மேக் அண்ட் சீஸ் பவுல் இருந்துச்சு… ஃபாயிலை தாண்டி உருகியிருந்த சீஸை ஆட்காட்டிவிரலால தொட்டு டேஸ்ட் பண்ணி பாத்தேன்… அடடா! சொர்க்கம்னா மேக் அண்ட் சிஸ் தான் கிடைக்கிற இடம் தான்பா… நாக்கைச் சப்பு கொட்டிச் சொல்லிட்டுத் திரும்பிப் பாத்தா அப்பா என்னைப் பாத்து சிரிச்சி சாப்பிடச் சொல்லிட்டுப் போறார்… இப்ப சொல்லுறேன், சொர்க்கம்னா அது மேக் அண்ட் சீஸ் வாங்கிக் குடுக்குற அப்பா இருக்கிற இடம் தான்”
-நித்திலா
சாகர் நிவாஸ், போட் க்ளப் சாலை, சென்னை…
அம்ரித்தைக் கிருஷ்ணராஜசாகர் சென்னைக்கு அழைத்து வந்து அன்றோடு மூன்றாவது நாள்.
ஆனந்த்சாகர் முதலில் நித்திலாவைப் பற்றி கேள்வியாய் கேட்டு கிருஷ்ணராஜசாகரைத் துளைத்தெடுத்தார்.
“அவளுக்கும் எனக்கும் ஒத்துவராதுப்பா… அதுக்காக என் பிள்ளை கஷ்டப்படணுமானு கேட்டேன்… அவனோட ஃபியூச்சர் நல்லா இருக்கணும்னு என் கூட அனுப்பி வச்சிட்டா… மனசு மாறுச்சுனா அவளே இங்க வருவா… நம்ம யாரும் அவளைக் கட்டாயப்படுத்தவேண்டாம்” என்று சொல்லி அவரது வாயை அடைத்துவிட்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நர்மதாவுக்கு அவன் சொன்னதில் பாதி உண்மை என்பது தெரியும். ஆனால் அம்ரித்தின் வருங்காலத்திற்காக நித்திலா அவனை இங்கே அனுப்பி வைத்திருக்கிறாள் என்று சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை.
சொன்னபடி அவளே பிள்ளையை ஒப்படைக்கும்படி செய்துவிட்டான். தனியாய் அழைத்து கேட்டபோது கூட குயுக்தியாய் புன்னகைத்தானே தவிர என்ன செய்து காரியம் சாதித்தான் என்பதை கூறவில்லை.
நர்மதாவின் துப்பறியும் மூளை அம்ரித்தின் அன்புக்கு முன்னே அடங்கிப்போனது. இன்றில்லை என்றாலும் என்றாவது ஓர்நாள் நித்திலாவும் சாகர் நிவாசுக்கு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை!
அம்ரித்துக்குச் சாகர் நிவாசின் பெரிய தோட்டமும் குளமும் பிடித்திருந்தது. அதை விட கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து தரையில் விடாமல் தூக்கி வைத்துக் கொஞ்சிய தந்தையை மிகவும் பிடித்திருந்தது.
சமையலறை பக்கம் செல்லாத நர்மதா பேரனுக்காக ஹார்ஷ்ப்ரவுன் சமைத்துத் தருவதும், வீட்டில் கூட தனது ஆளுமையை விட்டுக் கொடுக்காத ஆனந்த்சாகர் அவனுடன் யானை அம்பாரி விளையாடுவதும் என அந்த வீட்டின் சூழலே வேறுவிதமாக மாறியிருந்தது.
அன்னையோடு கபேக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் பழகியவனுக்குச் சாகர் நிவாசின் பணியாட்களும் நண்பர்களாகத் தெரிய, பணக்காரவீட்டு வாரிசு என்ற திமிரின்றி அவர்களையும் ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்று அழைத்து அவர்களின் நன்மதிப்பை வாங்கிவிட்டான் அம்ரித்.
அவனைத் தன்னுடைய அறையில் தங்கவைத்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
வந்த முதல் நாளிரவு மகனுக்குத் தன் கையால் உணவூட்டி தன்னருகே படுக்க வைத்த போது விசித்திரமான வகையில் ஆர்ப்பரிப்பற்ற அமைதியொன்று அவனது ஜீவனுக்குள் ஊடுருவுவதாய் உணர்ந்தான்.
காலையில் எழுந்த போது அவனது நெஞ்சாக்கூட்டுக்குள் புகுபவனைப் போல ஒண்டி உறங்கிய அம்ரித்தை விலக்கி அலுவலகம் போகவே விருப்பமில்லை.
பைத்தியக்காரத்தனமாய் மனம் மகன் என்ற செண்டிமெண்டில் விழுந்துவிட்டதென எண்ணிக்கொண்டான். ஆனால் அதிலும் அவனுக்கு ஒரு நன்மை வாய்த்தது, ஆனந்த்சாகரின் உருவில்.
ஆம்! இத்தனை நாட்கள் தாமரை இலை தண்ணீராய் இருந்த மைந்தன் பேரனிடம் அன்பை அள்ளிக்கொட்டுவதைப் பார்த்த பின்னர் சாகர் குழுமத்தின் தலைமை பற்றி அவர் எடுத்திருந்த முடிவுகளை மீண்டும் ஒருமுறை சீர்தூக்கிப் பார்க்கும் யோசனை பிறந்தது.
அது குறித்து நர்மதாவிடம் வெளிப்படையாகவே கலந்தாலோசனை செய்தார் அவர். கிருஷ்ணராஜசாகருக்கு மைந்தன் தன்னோடு இருப்பதில் ஆத்மதிருப்தி இருந்தாலும் அவனது முக்கிய நோக்கமே சாகர் குழுமம் சந்தீப்பின் கைவசம் போய்விடக்கூடாதென்பது தானே.
அதற்கான துருப்புச்சீட்டாக அம்ரித்தைப் பார்த்தவன் இனி எக்காரணம் கொண்டும் நித்திலாவிடம் அவனை ஒப்படைக்கக்கூடாதென்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டான்.
கூடவே சந்தீப் – நிஹாரிகாவிடம் அம்ரித்தின் வருகை பற்றி தெரிவிக்கவேண்டாமென அன்னைக்கு அன்புக்கட்டளை இட்டிருந்தான்.
அவர் காரணம் கேட்டதற்கு “அவங்களுக்கு அம்ரித் இங்க வந்த நியூஸ் சர்ப்ரைஸா இருக்கட்டும்மா” என்று சொல்லிவிட்டான்.
கூடவே இன்னொரு நபருக்கும் அம்ரித் பற்றியோ நித்திலா பற்றியோ தகவல்கள் செல்வதை அவன் விரும்பவில்லை. அந்நபர் ஜனார்தனன்.
எந்த ஜனார்தனனுக்குத் தனது உடல்நிலை பற்றிய உண்மை தெரியவேண்டாமென நித்திலா பயந்தாளோ அதே ஜனார்தனனுக்குத் தன் மைந்தனைப் பற்றிய விவரமும் தெரியவேண்டாமென கிருஷ்ணராஜசாகர் நினைத்தான்.
நிஹாரிகா வாயிலாக அத்தகவல் ஜனார்தனனை அடைய வாய்ப்புள்ளது என்பதே அவளுக்கும் சந்தீப்புக்கும் விவரம் சொல்லவேண்டாமென தடுக்க முக்கியக்காரணம்.
அம்ரித் விரும்பிய ப்ளேஸ்டேசனை வாங்கி கொடுத்ததும் தந்தையும் மகனும் விளையாடித் தீர்த்தனர்.
முதலில் எளிமையான கேம்களாக ‘மை ஃப்ரெண்ட் பெப்பா பிக்’, ‘பா கண்ட்ரோல் தி மூவி’ போன்றவற்றை விளையாடச் சொல்லிக்கொடுத்தான் கிருஷ்ணராஜசாகர்.
பின்னர் போரடிக்கவே இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து விளையாடக் கூடிய கேம்களை விளையாட ஆரம்பித்தனர் தந்தையும் மகனும்.

வீட்டுக்கு வந்திருந்த இப்ராஹிம் கிருஷ்ணராஜசாகரின் அலுவல் ரீதி மொபைலில் பேசியவாறு பரபரப்பாக இருந்தான். இரண்டு நாட்களாக கிருஷ்ணராஜசாகர் எந்த அலுவலையும் கவனிக்காமல் வீடே கதியாய் கிடந்ததே அதற்கு காரணம்.
“டாடி ஸ்மாஷ் ஹிம்… இப்பிடி இப்பிடி அடிங்க… உங்களுக்கு அடிக்கவே தெரியல டாடி.. மிஸ்தர் இன்க்ரதிபிள் இவ்ளோ ஸ்லோவா ஓடமாட்டார்”
கிருஷ்ணராஜசாகரின் அறைக்குள் கேட்டது அம்ரித்தின் குரலே.
காலையிலேயே தந்தையும் மகனும் சேர்ந்து ப்ளேஸ்டேசனில் ‘தி இன்க்ரடிபிள்ஸ்’ கேம் விளையாடிக்கொண்டிருந்தனர்.
கிருஷ்ணராஜசாகர் தான் மிஸ்டர் இன்கரடிபிள். அம்ரித் எலஸ்டி கேர்ள். இப்ராஹிம் அவர்களிடம் சிக்கிக்கொண்டதால் ‘வயலட்’ கதாபாத்திரத்தை அவனிடம் கொடுத்து ஒரு கண்ட்ரோலரையும் கொடுத்து விளையாட வைத்தனர் தகப்பனும் மகனும்.
ஆனந்த்சாகர் தான் ‘டாஷ்’. வீட்டில் வயதில் பெரியவரான அவருக்கு இளைய கதாபாத்திரத்தை ஒதுக்கியவன் அவரது பேரன்தான்.
“தாத்தாக்குக் கேம் தெரிஞ்சதும் மிஸ்தர் இன்க்ரதிபிளை குடுங்க டாடி” என்ற ஆலோசனை வேறு.
இடையிடையே வந்த அழைப்புகளுக்குப் பதிலளிக்கிறேனென இப்ராஹிம் நழுவிக்கொண்டான்.
அவனிடம் தனது சொந்த உபயோகத்துக்கான மொபைலையும் கொடுத்து அனுப்பிவிட்டான் கிருஷ்ணாராஜசாகர்.
அவன் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருக்கையில் கிருஷ்ணராஜசாகரின் சொந்த உபயோகத்துக்கான மொபைல் அலறியது.
இதில் யார் அழைக்கிறார்கள் என்று தொடுதிரையைப் பார்த்தவன் ஸ்ரீநயனியின் புகைப்படம் தெரியவும் உடனே பேசிக்கொண்டிருந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு அவளது அழைப்பை ஏற்றான்.
“அண்ணா”
“மேம் நான் இப்ராஹிம்”
“ஹாய்! எப்பிடி இருக்கிங்க?”
சினேகமாகக் குசலம் விசாரித்தாள் ஸ்ரீநயனி.
“டூயிங் குட் மேம்… நீங்க எப்பிடி இருக்கிங்க? சார் கிட்ட பேசணுமா?”
“இல்ல… அண்ணி கிட்ட பேசணும்”
“மேம்”
குழப்பத்தோடு இழுத்தான் இப்ராஹிம்.
“நேத்து நைட் அண்ணா அனுப்புன வாட்சப் இமேஜை இன்னைக்கு நைட் பாத்தேன்… அண்ணாவும் அவரோட சன்னும் இருக்கிற இமேஜ்… அதான் அண்ணி கிட்ட பேசலாம்னு ஆசைப்பட்டேன்”
ஸ்ரீநயனிக்கு நித்திலா என்றால் உயிர். நித்திலா திடுமென அண்ணனின் வாழ்க்கையிலிருந்து விலகி மாயமானதும் தமையன் மீதும் குடும்பத்தினர் மீதும் கோபப்பட்டு அவர்க்ளை ஒதுக்கிவிட்டு வெளிநாடு சென்றவள். இப்போது மருமகனைக் கண்டதும் மனம் மகிழ்ந்து தனது அண்ணியிடம் பேச ஆவலாய் அழைத்திருக்கிறாள்.
அவளுக்கு மட்டும் கிருஷ்ணராஜசாகரின் திட்டம் தெரிந்துவிட்டால் மொத்தமும் பாழாகிவிடும். பொய் சொல்லி மறைக்கலாம் என்றாலோ ஸ்ரீநயனி பொய்களைக் கண்டறிவதில் வல்லவள்.
அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே சிக்கித் தவிக்க விரும்பாத இப்ராஹிம் நேரே கிருஷ்ணராஜசாகரிடம் மொபைலை நீட்டினான்.
அழைத்தவள் ஸ்ரீநயனி என்றதும் உடனே வாங்கி பேச ஆரம்பித்தான் அவன்.
“நயனிம்மா ஹவ் ஆர் யூடா?”
“ஃபைன்… அண்ணி எங்க?”
எடுத்ததும் நித்திலாவைப் பற்றி ஸ்ரீநயனி கேட்க கிருஷ்ணராஜசாகர் அவளிடம் உண்மையைக் கூறிவிடலாமா அல்லது மறைத்துவிடுவோமா என இருமனதாகத் திண்டாடினான்.
இதுவரை தங்கையிடம் பொய் சொன்னதில்லை அவன். சொல்லவும் வராது.
“அவ வரலடா… நான் அம்ரித்தை மட்டும் தான் அழைச்சிட்டு வந்தேன்”
மறுமுனையில் ஆழ்ந்த அமைதி.
“நயனி ஆர் யூ தேர்?”
“ம்ம்… ஏன்ணா உனக்கு அண்ணி மேல இவ்ளோ வெறுப்பு? இத்தனை வருசத்துல குறைஞ்சிருக்கும், நீ ஃபேமிலியா வாழ ஆரம்பிச்சட்டனு நான் என்னென்னவோ யோசிச்சு சந்தோசப்பட்டேன்ணா… நீ மறுபடியும் எனக்கு ஏமாற்றத்தைக் குடுத்துட்ட”
தங்கையின் குரல் நலிந்து ஒலிக்கவும் கிருஷ்ணராஜசாகரின் மனம் வருந்தியது.
“அவ வரமாட்டா நயனி… ஆக்ஸ்வலி என்ன நடந்துச்சுனா” என ஆரம்பித்தவன் தங்கையிடம் தான் செய்துமுடித்த காரியத்தை விளக்கிமுடித்தான்.
ஸ்ரீநயனி தமையன் செய்த காரியத்தை எண்ணி பதறிப்போனாள்.
“என்ன காரியம் பண்ணி வச்சிருக்கண்ணா? இது தப்பு… நல்லாருக்கிற அண்ணிக்கு கேன்சர் ரெக்கரன்ஸ்னு சொல்லிருக்க… அவங்க மனசு எப்பிடி துடிச்சிருக்கும்? இப்ப வரைக்கும் அவங்க பயத்துலயும் கவலையும் நொறுங்கிப்போயிருப்பாங்கண்ணா”
“எனக்கு வேற வழி தெரியல நயனி… நீ மறந்துட்டியா? நாலு வருசத்துக்கு முன்னாடி நான் அவளால…. ப்ச்… அதுக்குப் பனிஷ்மெண்ட் வேண்டாமா? ஃபேமிலிய தவிர வேற எந்த வெளியாளையும் நம்பாத உன் அண்ணா அவளை ரொம்ப நம்புனேன்… பட் நித்திலா என் நம்பிக்கைக்குப் பாத்திரமா நடந்துக்கல… என்னை முட்டாள் ஆக்கிட்டுப் போனவ அவ… யாரை வேணும்னாலும் மன்னிக்கலாம், ஆனா நம்மளை முட்டாள் ஆக்குனவங்களை மன்னிக்கமுடியாது நயனி”
“அவங்க அப்பிடி செஞ்சிருப்பாங்கனு நீ நம்புறியாண்ணா?”
“அவளை நம்புறதுக்கு எந்தக் காரணமும் இல்லனு சொல்லுறேன்”
“நம்ம காரியத்துக்கு நீ அவங்களோட வீக் பாயிண்டை யூஸ் பண்ணிருக்க… இது தப்பு… பாவம்”
ஸ்ரீநயனி நர்மதாவின் மகளாக தமையனுக்கு நியாயம் கற்பித்தாள். அவளது மூத்த சகோதரன் அதை கேட்கும் மனநிலையில் இல்லை.
“எனக்கு அம்ருவோட அன்பு வேணும் நயனி… அது போதை மாதிரி என்னைப் பிடிச்சிடுச்சு… இனி அவனோட அன்பு இல்லாம என்னால வாழமுடியாது… நித்திலாக்கு உண்மை தெரிய வர்றதுக்குள்ள அம்ரு முழுக்க முழுக்க என் மகனா மாறிருப்பான்… அவளே வந்து கூப்பிட்டாலும் அவன் போகமாட்டான்”
“அப்ப மகனுக்காக அண்ணி நம்ம வீட்டுல இருந்தாங்கனா நீ அவங்களை மன்னிப்பியா?”
தங்கையின் ஆசையைக் கேட்டதும் கிருஷ்ணராஜசாகருக்குச் சிரிப்பு வந்தது.
“அவளை மன்னிக்கிற அளவுக்கு நான் பைத்தியக்காரன் இல்ல… இன்னொரு தடவை என் கூட வாழ்க்கைய ஷேர் பண்ணிக்கிறதுக்கு நித்திலாவும் முட்டாள் இல்ல… அவன் கூப்பிட்டும் அம்ரு போகலனா தனியா இருப்பாளே தவிர மறுபடி நம்ம வீட்டுக்கு வரமாட்டா”
அது என்னவோ உண்மை தான். நித்திலாவைப் பற்றி ஸ்ரீநயனி நன்றாக அறிவாள்!
“நீ லாஜிக்கா பேசுறண்ணா… பட் ஒரு விசயத்தை மறந்துட்ட… உன் தங்கச்சியும் ஒரு கேன்சர் சர்வைவர்… என் கிட்ட இப்பிடி ஒருத்தவங்க விளையாடுனா நீ என்ன பண்ணுவண்ணா?”
அந்தக் கேள்விக்குக் கிருஷ்ணராஜசாகரிடம் பதிலில்லை.
“நீ இப்ப எமோஷ்னலி ஹர்ட் பண்ணுறது எனக்கு நம்பிக்கை குடுத்தவங்களை… அவங்க மட்டும் இல்லனா கேன்சருக்கு முன்னாடி எனக்கு இருந்த பயமும் கழிவிரக்கமும் என்னைக் கொன்னுருக்கும்ணா”
கிருஷ்ணராஜசாகர் மௌனம் சாதித்தான்.
“நீ புரிஞ்சிக்கமாட்ட… இந்த நாலு நாள்ல அண்ணி மனசளவுல எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க? உனக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லனு சொல்லுறல்ல, அப்ப அவங்களுக்குத் தண்டனை குடுக்குறதுக்கு மட்டும் உனக்கு என்ன உரிமை இருக்கு?”
“போதும் நயனி… எனக்குச் சரி தப்பை பத்தி கவலை இல்ல… நான் என் மேல உண்மையான அன்பு காட்டுறவங்களை பத்தி மட்டும் தான் கவலைப்படுவேன்… ஐ கேர் அபவுட் அவர் ஃபேமிலி…. ஐ கேர் அபவுட் மை சன்… பட் ஐ டோன்ட் கேர் அபவுட் தட் நித்திலா… இதுக்கு மேல ஆர்கியூ பண்ண எனக்கு தெம்பில்ல நயனி… இப்ப உனக்கு நைட் டைம் தானே… போய் தூங்கு”
அவ்வளவு தான்! அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ஸ்ரீநயனிக்கு நித்திலாவை நினைத்து பாவமாக இருந்தது. ஒரு காலத்தில் அவளைத் தனது ரோல்மாடலாக வைத்திருந்தவள் ஸ்ரீநயனி. கல்லூரி நாட்களில் அவளிடம் பேசுவதற்காக வேண்டுமென்றே அவளது வகுப்புக்குப் போவாள்.
அண்ணனின் மனைவியாக அவள் தன் வீட்டுக்கே வந்ததில் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தவள் அண்ணனின் வாழ்க்கையை விட்டு அவள் விலகிய போது அடைந்த அதிர்ச்சிக்கும் அளவேயில்லை.
எப்போது அண்ணனிடமிருந்து வந்த செய்தியில் அம்ரித்தின் முகத்தைப் பார்த்தாளோ அப்போதே நித்திலாவைப் பார்த்தது போல மகிழ்ந்தாள். ஆனால் தமையனோ எவ்வளவு பெரிய அனர்த்தத்தை செய்து வைத்திருக்கிறான்? நித்திலாவுக்கு உண்மை தெரியவரும் போது அவள் கட்டாயம் உடைந்து போவாள்.
அவள் நித்திலாவை எண்ணி வருந்த சிம்லாவில் நித்திலாவோ மைந்தனின் நினைவில் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள். நான்கு நாட்களாக கபே பக்கம் எட்டிப் பார்க்காமல் வீட்டில் அடைந்து கிடந்தாள்.
இன்னும் மூன்று நாட்களில் கீமோதெரபிக்காக அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவாள். அதன் பின்னர்?
மாபெரும் கேள்விக்குறி அவள் எதிரே இருக்கிறது. கிருஷ்ணராஜசாகரோடு போனாலும் அம்ரித் அவளிடம் தவறாமல் வீடியோ கால் பேசுகிறான். சாகர் நிவாஸ் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறதென ஒவ்வொரு முறையும் அவன் கூற கூற இத்தனை நாட்கள் அவனும் தானும் வாழ்ந்த வீட்டை சாகர் நிவாசோடு ஒப்பிட்டுப் பார்ப்பாள் நித்திலா.
தனது கோபத்திற்காக செல்வந்தக்குடும்பத்தில் வளர வேண்டிய மகனை நடுத்தர வாழ்க்கைக்குக் கட்டாயப்படுத்திவிட்டோமோ என்ற குன்றல் அவளை வாட்டியெடுத்தது.
நர்மதாவும் ஆனந்த்சாகரும் அவனை அன்பாய் கவனித்துக்கொள்வார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தன்னைப் பற்றி அவர்கள் கிருஷ்ணராஜசாகரிடம் கட்டாயம் விசாரித்திருப்பார்கள். அவன் என்ன சொல்லி சமாளித்திருப்பான்? இப்படியெல்லாம் சிந்தனைகள் தறிகெட்டு ஓடும்.
மருத்துவர் கொடுத்த மருந்துகளை வேளை தவறாமல் உண்ணவைப்பது, அவளை இலகுவாக உணரவைக்க அவ்வபோது அரட்டையடிப்பது என விக்ரம் நல்ல நண்பனாக அவளைக் கவனித்துக்கொண்டான்.
அவனும் சாவித்திரியும் இல்லையென்றால் நித்திலாவின் எண்ணங்களே அவளுக்கு எமனாக மாறியிருக்கும். மொத்தத்தில் சாமர்த்தியமாகச் சொல்லப்பட்ட ஒரு பொய்யால் ஒருவரை அரை உயிராக்க முடியுமென கிருஷ்ணராஜசாகர் நிரூபித்துவிட்டான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

