“யாரையும் வற்புறுத்தி ஒரு காரியத்தைச் சாதிக்கிறது சேடிஸ்ட் மெண்டாலிட்டி… அதுக்காக நமக்கு வேண்டியதை அடுத்தவங்க மனசு கஷ்டப்படுமேனு விட்டுக்குடுக்குறது ஏமாளித்தனம்… சேடிஸ்ட் மெண்டாலிட்டிக்கும் ஏமாளித்தனத்துக்கும் இடையில சின்னதா ஒரு கோடு போகும்… அந்தக் கோடு தான் டிப்ளமசி, அதாவது ராஜதந்திரம்… நமக்கு ஆகவேண்டிய காரியத்தைச் சாதிக்கிறதுக்கு நம்ம கையாளுற வழிமுறை தான் நம்ம சேடிஸ்டா ஏமாளியா ராஜதந்திரியானு தீர்மானிக்கும்”
-கிரிஷ்
விக்ரமைத் தனியே அழைத்துச் சென்ற நித்திலா கடுகாய் பொரிய ஆரம்பித்தாள்.
“ஏன் அந்த மனுசன் முன்னாடி ரிப்போர்ட்டைக் காட்டுன விக்கி? எப்ப என் தலை சாயும்னு காத்திட்டிருக்கார் அவர்… இந்த ரிப்போர்ட் எதுக்கானதுனு தெரிஞ்சுதுனா அம்ருவை என்னை விட்டுப் பிரிச்சிடுவார்… செவண்டி பர்செண்டேஜ் நான் உயிர் வாழ சான்ஸ் இருக்குனு சொன்னதுக்கு தேர்ட்டி பர்செண்டேஜ் அவருக்குச் சான்ஸ் இருக்குனு சந்தோசப்பட்ட மனுசன் அவர்”

நித்திலாவின் இந்தப் பகிரங்க குற்றச்சாட்டை ஏனோ விக்ரமால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிருஷ்ணராஜசாகர் அவ்வளவு மோசமானவன் என்று தோன்றவில்லை.
“ஏன் அவர் அப்பிடி நினைக்கப்போறார் நித்தி? ஹீ காண்ட் பி சஷ் அ க்ரூயல் பெர்ஷனாலிட்டி”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அம்ரித் கூறியதை வைத்து பார்த்தால் கிருஷ்ணராஜசாகர் பாசமுள்ளவன். மைந்தன் மீதுள்ள பாசம் அவனைப் பெற்ற அன்னையின் மீது இருக்காதா? அவள் சாகவேண்டுமென அவன் ஏன் நினைக்கப்போகிறான்?
அப்படி தான் நினைக்கிறான் என்று அடித்துப் பேசினாள் நித்திலா.
“அவருக்கு அம்ரு மேல இருக்குற உரிமையுணர்வு, தனக்கு மட்டும் தான் அவன் சொந்தமா இருக்கணும்ங்கிற பிடிவாதமா மாறிடுச்சு விக்கி… அவருக்கு எப்பவுமே ஃபேமிலி மெம்பர்ஸ் மேல பாசம் உண்டு… தன்னோட வாரிசுங்கிறதை தாண்டி அம்ருவ அழைச்சிட்டுப் போகுறதுல அவர் காட்டுற பிடிவாதம் எனக்குச் சந்தேகத்தை உண்டாக்குது விக்கி… அவர் மட்டும் நல்ல மோட்டிவோட யோசிச்சிருந்தார்னா அம்ருவோட என்னையும் சேர்த்து தான் அழைச்சிருப்பார்… அவருக்கு என்னை ஒய்ப்னு சொல்லிக்கிறதுல பிரஸ்டீஜ் ப்ராப்ளம்… ஆனா அம்ரு மட்டும் வேணும்… நர்மதா ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க… நான் இங்க இருக்குறது தெரிஞ்சும் அவங்க என்னை பாக்கவரலைனா சம்திங் ஃபிஷி விக்கி… சாகர் வழக்கம் போல ஏதோ கேம் ஆடுறார்… அவருக்கு என்னோட மெடிக்கல் கண்டிஷன் தெரியாம இருக்குறது நல்லது”
விக்ரமால் அவளது பேச்சை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த காலத்தின் கசப்பால் இவ்வாறெல்லாம் கிருஷ்ணராஜசாகரைப் பற்றி தவறாக எண்ணுகிறாள் என்பதே அவனது வாதம்.
“எந்த புருசனும் பொண்டாட்டி சாகணும்னு எதிர்பாக்கமாட்டான் நித்தி” என்றான் தீர்மானமான குரலில்.
“ஆனா அவர் எதிர்பாப்பார் விக்கி… அது தான் சாகரோட குணம்… இதை அவரே என் கிட்ட சொன்னார்… யூ நோ ஒன் திங்? என்னோட மெடிக்கல் கண்டிசனைக் காரணமா சொல்லி டிவோர்ஸ் வாங்கிடலாம்ங்கிற நம்பிக்கையில தான் அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதா முன்னாடி என் கிட்ட சொல்லிருக்கார் விக்கி… மத்தபடி குடும்பம் பாசம் பொண்டாட்டி பிள்ளை இதெல்லாம் டைம் வேஸ்ட் சப்ஜெக்ட்ஸ்னு சொல்லுற மனுசன் ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிருப்பார்னு நினைக்குற?”
பேசி முடிக்கும்போதே நண்பனுக்கு உண்மையைப் புரியவைத்துவிடும் வேகத்தில் நித்திலாவின் குரல் நடுங்கியது. கண்களின் வெள்ளைப்படத்தில் ஆங்காங்கே சிவப்புவண்ணத்தில் வரிக்கோடுகள். காரணம் தன்னைப் பற்றி அவளுக்குள் உருவாகியிருக்கும் கழிவிரக்கம்!
“நான் செஞ்ச தப்பு என்ன தெரியுமா? எனக்குச் செண்டிமெண்டே கிடையாது, என் பேரண்ட்ஸ் சிப்ளிங்ஸ் தவிர வேற யார் மேலயும் பாசம் வைக்கமாட்டேன்னு சொன்ன மனுசனை காதலிச்சது தான்”
நித்திலா கூறவும் விக்ரம் திகைத்துப் போய் பார்த்தான். நித்திலா கன்னத்தில் புரண்டோட துடித்த கண்ணீர்த்துளிகளை இமை எனும் அணையைத் தாண்டும் முன்னே துடைத்துக்கொண்டாள்.
ஐ லவ்ட் ஹிம்… சாகுறதுக்குள்ள ஒரே ஒரு தடவை காதலிச்சுப் பாத்துடணும், அந்தக் காதலோட வாழ்ந்து பாத்துடணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்… காதல்னு நான் நினைச்சது நம்புனது எல்லாமே க்ஷணநேரத்து சலனம்னு தெரிய வந்தப்ப நான் உடைஞ்சிட்டேன் விக்கி… என் வயித்துல அம்ரு வரலைனா நான் இவ்ளோ சீக்கிரம் பழையபடி மாறிருக்கமாட்டேன்… நான் சாகரால ரொம்ப காயப்பட்டுட்டேன்… அதை மறந்து இப்பவும் அவர் கிட்ட என்னால முகதாட்சணியத்தோட பேச முடியுதுனா அவர் மேல எனக்கு இன்னும் லவ் இருக்குனு அர்த்தமில்ல… என் பிள்ளையோட பிறப்புக்கு அவரும் காரணம்… அதுக்காக நான் அவரை மதிக்கிறேன்… பட் அந்த மதிப்புக்காக என் பிள்ளைய தாரைவார்க்க முடியாதுல்ல விக்கி”
பேசி முடித்தவளை ஆதுரமாக அணைத்துக்கொண்டான் விக்ரம். அவனுக்கென இருக்கும் ஒரே ஒரு தோழி நித்திலா மட்டுமே. பேச்சுக்குக் கூட அவள் இறந்துவிடுவாள் என்று கூறினால் விக்ரம் பதறிவிடுவான். அவளுக்கே அந்தப் பயம் அடிக்கடி வரும். சமீபத்தில் உடல்நலக்குறைவால் அந்தப் பயம் இன்னும் அதிகரித்திருந்தது. அதற்கு தீர்வாக தங்களின் திருமணம் அமையுமென நம்பியே நித்திலாவை மணக்க சம்மதித்தான்.
“நான் செத்துட்டேன்னா நீ அம்ருவ நல்லா பாத்துக்க விக்கி” என்று அடிக்கடி கூறுவாள் நித்திலா.
“அப்பிடி ஒன்னும் நடக்காது… நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அம்ருவுக்கு நாலு தம்பி நாலு தங்கச்சிய பெத்துக்குடுப்போம்… அதுங்க கல்யாணம் ஆகி பிள்ளைக்குட்டிங்களை பெத்து போடுற வரைக்கும் நீ இருப்ப”
கேலியும் கிண்டலுமாக அவளுக்கு நம்பிக்கை அளிப்பான் விக்ரம்.
இடையில் கிருஷ்ணராஜசாகர் வந்த போதும் அவனுக்கு வருத்தமில்லை. தனக்குப் பதிலாக சட்டப்படியும் தர்மப்படியும் நித்திலாவையும் அம்ரித்தையும் அவன் பார்த்துக்கொள்வான் என தீர்க்கமாக நம்பினான் விக்ரம்.
எனவே தான் அம்ரித் கிருஷ்ணராஜசாகரிடம் பழகுவதை நித்திலா எதிர்த்தாலும் அவன் ஊக்குவித்தான். கிருஷ்ணராஜசாகருக்கும் அம்ரித் மீது அளவுக்கடந்த பாசம் தான். நித்திலா தான் அவனை நம்ப மறுக்கிறாள் என்ற கோணத்தில் யோசித்தான் விக்ரம். ஒரு காலத்தில் அவனைக் காதலித்தேன் என்று அவள் கூறிய பிறகு கிருஷ்ணராஜசாகர் கட்டாயம் அந்தக் காதலுக்குத் தகுதியானவனாக இருந்திருப்பான் என்றே தோன்றியது.
இடையில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அந்த தவறின் காரணமாக இருவரும் பிரிந்திருக்கலாம் என்பது விக்ரமின் ஊகம்.
தனது ஐயங்களை மனதோடு வைத்துக்கொண்டு தோழிக்கு ஆறுதல் கூறியவன் பயாப்சி ரிப்போர்ட் வரும்வரை காத்திருக்கும்படி கூற நித்திலாவும் தற்காலிகமாக அமைதியானாள்.
பயாப்சி ரிப்போர்ட் அவளுக்குக் கொடுக்கப்போகும் அதிர்ச்சியை சீரணித்துக்கொள்ளும் வலிமையை நித்திலாவுக்குக் கடவுள் தான் கொடுக்கவேண்டும்.
******
ஃபாரஸ்ட் ஹில் ரிசார்ட், சிம்லா…
ரிசார்ட்டுக்குத் திரும்பியதிலிருந்து கிருஷ்ணராஜசாகர் பரபரப்போடு இருந்தான். தனது உடமைகளை எடுத்து வைத்த போதும் அடிக்கடி இப்ராஹிமிடமிருந்து வந்த அழைப்புகளை ஏற்றபோதும் அவன் கொஞ்சம் அமைதியிழந்து காணப்படுவதாக நர்மதாவுக்குத் தோன்றியது.
“எப்படியாச்சும் சம்மதிக்க வை இப்ராஹிம்… இன்னைக்கு ஈவ்னிங் வரைக்கும் டைம் இருக்கு”

பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு பின்னர் அமைதி காக்க முடியாமல் வாய் விட்டு கேட்டார் நர்மதா.
“எதுக்காக ரெஸ்ட்லெஸ்சா இருக்க கிரிஷ்?”
கிருஷ்ணராஜசாகர் அன்னையைப் பார்த்த பார்வையில் நம்பிக்கை இல்லை.
“முடிஞ்சதும் சொல்லுறேன்மா”
“அப்ப ஏதோ தப்பு செய்யுற”
நெற்றியைத் தடவிக்கொண்டான் அவன்.
“ஐ அம் நாட் அ கிட்… சரி எது தப்பு எதுனு எனக்குத் தெரியும்”
“யூ ஆர் ரைட்… நவ் யூ ஆர் தி ஃபாதர் ஆப் அ கிட்… ஆனா இப்பவும் உன் குணத்துல எந்த சேஞ்சும் இல்ல… சரி எது தப்பு எதுனு நீ யோசிக்க மாட்ட… உனக்கு எது சரி எது தப்புனு மட்டும் தான் யோசிப்ப”
“நான் ஏன் மாறணும்னு நினைக்கிறிங்கம்மா? சீரியஸ்லி, மாற வேண்டிய அளவுக்கு நான் ஒன்னும் வில்லன் இல்ல”
நர்மதாவுக்கு அயர்வாக இருந்தது. அது என்னவோ உண்மை. அவரது மகன் ஒன்றும் கொடுமைகள் செய்யும் அரக்கன் இல்லை. ஆனால் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி காரியம் சாதிக்கவல்லவன். அவனை எந்த விதத்தில் சேர்ப்பது என்பது இந்நாள் வரை நர்மதாவுக்கு விடை தெரியாத கேள்வி.
நினைத்தது நடக்கவேண்டுமென்பதற்காக தார்மீக அன்பைக் கூட கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்படுவது நல்ல மனிதனுக்கு அழகல்லவே. இதை எடுத்துக் கூறினால் நான் நல்லவன் அல்ல என்பான்.
இப்போது என்ன அனர்த்தம் செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. தாய்மணம் பதறுவது மைந்தனுக்காக இல்லை, ஒருகாலத்தில் மருமகளாக இருந்தவளுக்காக.
அம்ரித்தைத் தன்னோடு அழைத்துச் செல்லும் முடிவில் இருப்பவன் இப்ராஹிமை எதற்காகவோ அனுப்பி வைத்துவிட்டு அலைப்புறுதலோடு உலாவுவதே அதற்கு சாட்சி.
பெருமூச்சுவிட்டவர் “உனக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு எனக்கு அறிவு இல்ல கிரிஷ்… பட் உன்னால இன்னொரு தடவை நித்திலா கஷ்டப்படக்கூடாது” என கறாராக முடித்தார்.
கிருஷ்ணராஜசாகர் அன்னையின் கண்டிப்பு தொனியில் அலைக்கழிப்பு அகன்று புன்னகைத்தான்.
“அவ மேல இவ்ளோ பாசம் இருக்குல்ல… ஏன் நேர்ல மீட் பண்ண யோசிக்கிறிங்க?”
“எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு அவளை நான் மீட் பண்ணுவேன்? அவ பெத்தப்பிள்ளைய பிடுங்கலாம்னு காத்திக்கிட்டிருக்கிறவனோட அம்மா நான்… இது தான் நீ மகனை வளர்த்த லெட்சணமானு அவ கேட்டா என் முகத்தை எங்க கொண்டு போய் வச்சுக்கிறது?”
காட்டமாகக் கேட்டார் நர்மதா. கிருஷ்ணராஜசாகரோ தோளைக் குலுக்கினான். அது உங்கள் பிரச்சனை என்பதே அதற்கு அர்த்தம்!
அதற்கு மேல் அவனிடம் வாதிட விரும்பாமல் தனது உடமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தார். அன்னையின் முகச்சுணக்கத்தை வெகுநேரத்திற்கு கிருஷ்ணராஜசாகரால் தாங்க முடியவில்லை.
“நர்மும்மா”
தன்மையாய் அழைத்தான். நர்மதாவும் திரும்பினார்.
“உங்க மகன் கெட்டவன் இல்ல… அதை மட்டும் நம்புங்க”
நர்மதா அரைமனதாகத் தலையாட்டினார்.
மகனின் அருகே அமர்ந்தவர் “உன்னை நித்திலாக்கு ரொம்ப பிடிக்கும் கிரிஷ்… அந்தப் பொண்ணு உன் மேல ரொம்ப பாசம் வச்சிருந்தா, தெரியுமா?” என்றார்.
கிருஷ்ணராஜசாகர் சத்தம் போட்டு சிரித்தான்.
சிரிப்பென்றால் சிரிப்பு அப்படி ஒரு சிரிப்பு. ஒருவழியாகச் சிரித்து முடித்த பிறகு வந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அன்னையைப் பார்த்தான்.
“மா! உங்களை அவ முட்டாள் ஆக்கிருக்காம்மா… நம்ம ஃபேமிலியாளுங்களைத் தவிர வேற யார் கிட்டவும் நெருங்காத நானே அவளோட பேச்சுல ஏமாந்துட்டேன்மா… என்னை முட்டாள் ஆக்கிட்டு சொல்லாம கொள்ளாம என் வாழ்க்கைய விட்டு போனவ அவ… எனக்கு அவ தேவையே இல்ல… அதுக்காக என் பிள்ளைய என்னால விட்டுட முடியாது… அம்ரித் என் ரத்தம்… அவன் என் கூட இருந்தா தான் கௌரவமான வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும்… இல்லனா ஒவ்வொரு மாசமும் எப்ப பேமண்ட் வரும்னு யூடியூபையும் எப்ப சம்பளம் வரும்னு கபேயையும் கட்டிக்கிட்டு அழுறவளோட மகனா ஒவ்வொரு தேவையையும் மனசுக்குள்ள புதைச்சிட்டு அவன் வாழணும்… கிருஷ்ணராஜசாகரோட மகனுக்கு அப்பிடி வாழணும்னு என்ன தலையெழுத்து? நாங்க பேசி வச்ச மாதிரி எங்க வாழ்க்கைல எல்லாமே நடந்திருச்சிருந்துச்சுனா நானும் தேவையில்லாம அவ என் லைப் ஃபுல்லா என் கூட ட்ராவல் பண்ணுவானு நம்பி ஏமாந்திருக்கமாட்டேன்… அம்ரித்தும் வந்திருக்கமாட்டான்…
சின்ன தடுமாற்றம்… என்னை முட்டாள் ஆக்கிட்டுப் போயிட்டா அவ… அவளை கோவில்ல பாத்தப்ப கூட பெருசா எனக்கு எதுவும் தோணல… எங்கயோ நல்லா இருந்துட்டுப் போகட்டும்னு இக்னோர் பண்ணிட்டேன்… ஆனா என் பிள்ளை இன்னொருத்தனை அப்பானு கூப்பிட்டதை என்னால இக்னோர் பண்ண முடியல… இப்பவும் அம்ரு ஒருத்தனுக்காக தான் அவளுக்கு மரியாதை… அவனை பத்து மாசம் சுமந்து தனியாளா வளத்திருக்கா… அதுவும் நல்லவிதமா வளத்திருக்கா… மத்தபடி எனக்கு அவ மேல துளி கூட அன்போ பாசமோ கிடையாது… அவ நிலமைய பாத்தா இரக்கம் வருதே தவிர, வேற எந்த ஃபீலிங்கும் வரலம்மா… அவ எப்பவுமே என் ஃபேமிலிக்குள்ள வரமுடியாது”
வந்தவர் இத்தனை நாட்கள் அவனுக்குள் ஆறாத ரணமாக இருந்த காயத்தை தனது வார்த்தைகள் கீறிவிட்டதோ என நர்மதா வருந்தினார்.
“கிரிஷ்! சூழ்நிலை கூட அவளைப் பத்தி உன் மனசுல தப்பா தோண வச்சிருக்கலாம்பா”
“உங்க நம்பிக்கைய நான் கெடுக்க விரும்பலம்மா”

சுருக்கமாகப் பேச்சை முடித்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
அன்னையும் மகனும் விமான பிரயாணத்துக்குத் தயாரானபோது இப்ராஹிமும் கிருஷ்ணராஜசாகர் அவனிடம் ஒப்படைத்த வேலையை முடித்துவிட்டு ரிசார்ட்டுக்குத் திரும்பினான்.
“எல்லாரையும் சரிகட்டிட்டேன் சார்… நீங்க நினைச்சது நடக்கும்… பட் நித்திலா மேம் உடைஞ்சுடுவாங்க… பாவம் சார்”
“அவ உடைஞ்சாலும் காத்தோட கரைஞ்சு காணாம போனாலும் ஐ டோண்ட் கேர்… எனக்கு என் மகன் வேணும்… தட்ஸ் ஆல்… உன்னோட லக்கேஜை எடுத்துக்க… நீ லஞ்ச் சாப்பிட்டியா?”
“இல்ல சார்”
“அப்ப சாப்பிட்டுட்டு லக்கேஜை எடுத்துக்க”
அந்த நேரத்திலும் தனது வயிறு காயக்கூடாதென நினைக்கிறான். ஆனால் தொட்டு தாலிக்கட்டிய மனைவியைப் பற்றியோ அவளது மனவருத்தம் பற்றியோ யோசிக்கக்கூட மறுக்கிறான். எப்போதும் போல இப்போதும் கிருஷ்ணராஜசாகரை புரிந்துகொள்ள முடியாதவனாக தனது அறைக்குச் சென்றான் இப்ராஹிம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

