கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கத் திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இளம்பெண். ஒல்லியான மேனி, சுருண்ட நீண்ட கூந்தல் உறக்கத்தால் நெற்றியில் புரள, அதை காதின் பின்புறம் ஒதுக்கியவள், தன் நீண்ட விழிகளைச் சுழற்றித் தன் அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்தாள்.

அவளைப் போலவே ஒல்லித் தேகம்தான். ஆனால் தந்தையின் பால்நிறம், கூர்நாசியை உரித்து வைத்தபடி கழுத்தைத் தொட்டக் கூந்தலுடன், இன்னும் குழந்தைத்தனம் போகாத அந்த முகம் உறக்கத்திலும் அதில் தெரிந்த தெளிவு என அவளை ரசித்தவள், கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் இருக்க, கதவு இன்னும் ஓங்கித் தட்டப்பட்டது.
அவள் இயல்பிலேயே கொஞ்சம் பயந்த சுபாவம் வேறு. என்ன செய்வது என்று புரியாமல் பயந்துகொண்டிருக்க, அந்தச் சத்தம் கேட்டு அவளின் தங்கை விழித்ததை அப்போதுதான் பார்த்தாள்.
அவள் கண்ணைக் கசக்கிக்கொண்டபடி மலங்க மலங்க விழித்துவிட்டுப் படுக்கையை விட்டு இறங்க, பெரியவள் பதறிப்போய் “எங்க போற இந்த நேரத்துல?” என்று கேட்க,
இளையவள் “உனக்குக் கதவு தட்டுற சத்தம் கேக்கலையா? நான் போய் யாருனு பாக்குறேன்” என்று சொல்லிவிட்டுப் படுக்கையறையை விட்டு விறுவிறுவென்று நடக்க, பெரியவள் அவள் பின்னே ஓடினாள்.
சின்னவள் ஒன்றும் இவளைப் போல் அல்ல. அவள் இந்த வயதிலேயே தைரியமானவளாக வளர அவளின் தந்தையும் ஒரு காரணம் என்று நினைத்தவாறே “நீரு கொஞ்சம் நில்லுடி” என்று அவள் பின்னே ஓட, அதற்குள் அவள் கதவைத் திறந்திருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பதைபதைத்த மனதுடன் தங்கையின் அருகில் சென்றவள், வாயிலில் நின்றவர்களைக் கண்டதும் நெற்றியைச் சுருக்கி, ‘இவர்களை எங்கேயோ பார்த்தது போலுள்ளதே’ என்று யோசிக்க, அங்கே நின்ற இரண்டு நடுத்தர வயது ஆண்களுக்கு அந்த இரண்டு பெண்களையும் கண்டு பாசத்தில் கண்கள் கலங்கியது.
பெரியவள் அவர்களைக் கண்டுகொண்ட உற்சாகத்துடன் “மாமா!” என்று விளிக்க, சின்னவள் இன்னும் அவர்களை நம்பாத பாவனையுடன் தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதை அறிந்தவள் தங்கையிடம் “நீரு! இவங்க நம்ம மாமா. அம்மாவோட பழைய ஆல்பத்துல இவங்க போட்டோ இருக்குடி” என்று சொல்லிப் புரியவைக்க, அதன்பின்னர் தான் சின்னவளின் முகத்தில் அந்தச் சந்தேகபாவம் சென்றது.
இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றவள் “உக்காருங்க மாமா. நீங்க வருவீங்கன்னு நான் யோசிக்கவே இல்ல” என்று சொல்லிவிட்டுச் சுவரைப் பார்க்க, அங்கே புகைப்படமாய்த் தொங்கிக்கொண்டிருந்தனர் இந்த இரு பெண்களின் தாய் மதுரவாணியும், தந்தை மதிவாணனும்.

வந்திருந்த அந்த இரண்டு ஆண்களுக்கும் இவர்களின் தாய் உடன்பிறந்த தங்கை. இரத்தப்பாசம் அவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்க, இருவருமே தங்கையை இந்தக் கோலத்தில் காணவா இருபது ஆண்டுகள் கழித்து வந்தோம் என்று உள்ளுக்குள் உருகினர். அங்கே தங்கையின் வார்ப்பாய் நிற்கும் பெரியவளும், அவர்கள் தந்தையின் பிரதிபிம்பமாய் நிற்கும் இளையவளும் அவர்கள் மனதை நிறைவு செய்ய, அவர்களில் மூத்தவர் பேச ஆரம்பித்தார்.
“பாருங்கோடா நான் தான் உங்க பெரிய மாமா வேங்கடநாதன், இவன் என்னோட ஒடம்பிறந்தான் கோதண்டராமன். எங்க ரெண்டு பேரோட தங்கை தான் உங்க அம்மா மதுரா” என்று சொல்லித் தங்களை அறிமுகப்படுத்த, இளையவர் தங்கை மகள்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
“குழந்தே! உன் பேர் என்னடா?” என்று கேட்க,
மூத்தவள் “கிருஷ்ணஜாட்சி மாமா. அப்புறம் இவ பேரு நீரஜாட்சி” என்று கையோடு சிறியவளையும் அறிமுகப்படுத்தினாள்.
இருவரும் தங்கை மகள்களைப் பார்த்துப் புன்னகைத்தவர்கள் “ரெண்டு பேரும் என்ன படிக்கிறேள்?” என்று கேட்க,
இளையவள் “நான் டென்த் போர்ட் எக்ஸாம் எழுதியிருக்கேன். கிருஷ்ணா பிளஸ் டூ எக்ஸாம் எழுதியிருக்கா” என்று தங்களின் கல்வி விவரங்களைத் தெரிவிக்க, இரு சகோதரர்களும் அர்த்தபுஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
பின்னர் இளையவர் “நீங்க ரெண்டு பேரும் எங்காத்துக்கு எங்களோட வர்றேளா? அங்க உங்களுக்குப் பாட்டி, தாத்தா இருக்கா. ரெண்டு மாமிகள் இருக்கா. அது போக விளையாட்டுத் துணைக்கு ரெண்டு அம்மங்கா இருக்கா. மாமா ரெண்டு பேரும் உங்களை நல்லா பாத்துப்போம்டா” என்று தளுதளுத்த குரலில் கூற,
மூத்தவளுக்குத் தினமும் இரவில் தானும் தங்கையும் பயந்துகொண்டே உறங்குவது, மளிகை சாமான் வாங்கச் செல்லும்போது சந்திக்கும் குறுகுறுத்த பார்வைகளைக் கண்டு நடுங்குவது, இது எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு நாட்களாக அவளைப் பின் தொடரும் பக்கத்து வீட்டு இளைஞனின் முகமும் நினைவில் வர, சட்டென்று “சரி மாமா. எங்களையும் உங்க கூடவே கூட்டிட்டுப் போங்க. இங்க தனியா இருக்கப் பயமா இருக்கு” என்று சொல்ல இருவரும் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டனர்.
“சரி! உங்க ஜாமானெல்லாம் எடுத்து வைங்கோ!” என்று இருவரையும் அனுப்பிய கோதண்டராமன், கலங்கிப்போனவராய் சுவரில் கணவருடன் சிரித்துக்கொண்டிருக்கும் தங்கையின் முகத்தைப் பார்த்தவர்,
“அம்மா மதுரா! உன் குழந்தேள் ரெண்டு பேரும் இனிமே நம்மாத்துல வளருவா. நாங்க அவாளைக் கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துப்போம்டா” என்று சொல்லிவிட்டு அந்தப் போட்டோவையும் கழற்றிக் கிருஷ்ணஜாட்சி கொண்டு வந்த பேக்கினுள் வைத்தார்.
இருவரும் தாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டை ஒருமுறை பார்த்துக்கொண்டனர். பின்னர் மாமாக்களின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியேறிய அவர்களுக்கு விதி கடினமான பாதையைச் சென்னையில் போட்டு வைத்துக்கொண்டு காத்திருந்தது.
சென்னை சென்று இறங்கியவர்கள் தங்கையின் மகள்களுடன் வீட்டுக்குள் நுழையும் போது, மனைவியும் அவளது தங்கையும் துளசிமாலையைக் கோர்த்துக்கொண்டிருந்தனர்.

இரு பெண் குழந்தைகளுடன் நுழைந்த கணவன்மார்களைக் கேள்வியாகப் பார்த்தவர்களிடம் கோதண்டராமன் சுருக்கமாக “இவா ரெண்டு பேரும் மதுரவாணியோட குழந்தேள். இனிமே இவா நம்மாத்துல தான் இருக்கப் போறா” என்று சொல்லவும், மூத்த மருமகளும் வேங்கடநாதனின் மனைவியுமான அந்த வைரபேசரி பெண்மணி பொங்கிவிட்டார்.
“யாரைக் கேட்டு இவா ரெண்டு பேரையும் இந்த ஆத்துக்குள்ள அழைச்சிண்டு வந்திருக்கேள்? இது ஸ்ரீநிவாச விலாசம். அனாதை விடுதி இல்ல” என்று காளி சொரூபமாய் நின்ற மனைவியை வேங்கடநாதன் எவ்வளவோ முயன்றும் அமைதிப்படுத்த முடியவில்லை.
கோதண்டராமன் தயக்கத்துடன் “மன்னி! அவாளுக்கு நம்மளை விட்டா இந்த லோகத்துல சொந்தம்னு சொல்லிக்க யாரு இருக்கா? பெத்தவா இல்லாத குழந்தேள் மன்னி” என்று சொல்ல,
பத்மாவதி – அவர் தான் மூத்தவர் வேங்கடநாதனின் மனைவி.
“நீங்க சித்த நாழி சும்மா இருக்கேளா? இவாளைப் பெத்த புண்ணியவதியால அன்னைக்கு என் அண்ணா மணமேடையில அம்போனு நின்னானே, அப்போ அவன் பரிதவிச்சது நேக்கு மட்டும்தான் தெரியும்” என்று சொல்லிவிட்டு அங்கே நின்ற இரு சகோதரிகளையும் எரிப்பது போலப் பார்த்தார்.

அவரருகில் கையைப் பிசைந்தபடி இரு பெண்களையும் பரிதாபமான முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார் பத்மாவதியின் தங்கையும், கோதண்டராமனின் தர்மபத்தினியும், அந்த வீட்டின் இளைய மருமகளுமான மைதிலி. அவராலும் அவரது தமக்கையின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்களின் தாயாரான மதுரவாணி, மைதிலியின் இளம்பிராயத் தோழியுமாவார். இரு பெண்களையும் வாஞ்சையுடன் பார்த்தவர் மனதில், ‘மதுரவாணிக்கு என்னவாகியிருக்கும்’ என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஆனால் அவரது தமக்கை பத்மாவதியின் சிந்தனை வேறுவிதமாகச் சென்றது. அவரது பார்வை மூத்தவள் கிருஷ்ணஜாட்சியின் மீது படும்போது அவர் வியந்தது ஒரு விஷயத்தில்தான். மூத்தவள் அப்படியே நாத்தனாரின் பிரதிபிம்பமாக நின்றதுதான். அதே தேன் நிறம், பெரிய அகண்ட கண்கள், சுருண்ட கூந்தல் என்று இளவயது மதுரவாணியின் பிரதிபிம்பமாக நின்றவளை அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அவளின் அருகில் நின்ற சிறுமி அவளது முட்டைக்கண்ணை உருட்டி அவரை விழிக்க, அவர் “சின்னது தோப்பனாரை உரிச்சு வச்சிருக்கு” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
அதே நேரம் மாடிப்படியில் யாரோ இறங்கி வருவது போலக் காலடியோசை கேட்க, அனைவரும் நிமிர்ந்துப் பார்க்க அங்கே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் பத்மாவதியின் சாயலில் ஆறடி உயரத்தில் ஓர் ஆடவன்.
அவனது பார்வை புதியவர்களான அந்த இரண்டு பெண்களையும் கூர்மையாகத் தாக்க, கிருஷ்ணஜாட்சி அந்தப் பார்வை வீச்சைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள். அவன் தான் ஹர்சவர்தன். வேங்கடநாதன் – பத்மாவதி தம்பதியினரின் மூத்தப் புத்திரன். லண்டனில் எம்.பி.ஏ செய்து கொண்டிருந்தவன் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தான்.
அவன் பத்மாவதியின் அருகில் நின்றவன் “மா! காத்தாலே என்ன பிரச்சனை உங்களுக்கு? இவாள்ளாம் யாரு?” என்றவனின் பார்வை மூத்தவளின் சாயலைப் பார்த்ததும் துணுக்குற்றது.

வேங்கடநாதன் மனைவியை முந்திக்கொண்டு “இவா ரெண்டு பேரும் உன்னோட அத்தை மதுரவாணியோட பொண்ணுங்க. இவா இனிமே நம்மாத்துல நம்மோட தான் இருக்கப் போறா ஹர்ஷா” என்று சொல்ல அவரை உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்தான் அவன்.
அவனது முகமாற்றத்தைக் கண்ட அவனது சித்தி மைதிலி அவன் அருகில் வந்து “ஹர்ஷா! இங்க பாருடா கண்ணா! அவா பாவமோன்னோ. பெத்தவா இல்லாத பெண் குழந்தேள்டா! நம்மாத்துல இருந்துட்டுப் போகட்டுமேடா கண்ணா” என்று தோழியின் மகளுக்காகப் பரிந்துப் பேசியவர், தமக்கையின் விழிவீச்சின் தாக்கத்தில் அமைதியானார்.
வீட்டின் மூத்த இளவரசனான ஹர்சவர்தன் தன்னுடைய தந்தையை நோக்கி “அப்பா, நான் சொல்லுறதைத் தப்பா எடுத்துக்காதிங்க! இவா ரெண்டு பேரும் ஆத்துக்குள்ள வந்தா பிரளயம் வரும்னு தெரிஞ்சுமா அழைச்சிண்டு வந்திங்க? அப்பா புரிஞ்சுக்கோங்க இது நம்ம வீடு, ஆதரவு இல்லாதவங்களை அழைச்சிண்டு வர்றதுக்கு இது ஒன்னும் ரெப்யூஜிஸ் கேம்ப் இல்ல” என்றான் உறுதியாக.
வேங்கடநாதன் ‘மனைவியின் மறு அவதாரமாகப் பிறந்தவன் வேறு எப்படி இருப்பான்’ என்று நொந்துகொண்டபடி மகனிடம் அவர்களுக்காகப் பரிந்து பேச வர,
அவன் “அப்பா எதிர்த்துப் பேசறதா நெனைக்காதிங்க. இவா ரெண்டு பேரையும் எதாச்சும் ஆர்ஃபனேஜ்ல சேர்த்து விடுங்க. அங்கே இவாளை நல்லபடியா பார்த்துப்பாங்க” என்று அவனது அன்னைக்கு ஆதரவாகப் பேசி பத்மாவதியின் மனதைக் குளிர்வித்தான் அவரது சீமந்தப்புத்திரன்.
அவன் பேசி முடிக்கும் போதே “இந்த பட்டாபிராமன் உயிரோட இருக்கறச்ச என் பேத்திகளை ஏன்டா அனாதை ஆசிரமத்துக்கு அனுப்பணும்?” என்றச் சிம்மக்குரல் வீட்டுவாயிலில் இருந்துக் கேட்க, இரு சகோதரிகளுடன் சேர்ந்து மொத்த குடும்பமும் வீட்டின் வாயிலை நோக்கித் திரும்ப, அங்கே நெற்றியில் திருமண் தரித்து நின்ற ஒரு பெரியவரும் அவர் அருகில் நின்றபடி அந்த இரு சகோதரிகளையும் வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீசூர்ணம் அணிந்த அவரின் மனைவியும் இன்னும் இரண்டு பெண்களோடு நின்று கொண்டிருந்தனர்.
அவர்தான் பட்டாபிராம ஐயங்கார். அந்த வீட்டின் பெரியவர். அவரின் அருகில் நின்றப் பெண்மணி சீதாலெட்சுமி தான் வேங்கடநாதன், கோதண்டராமன் மற்றும் மதுரவாணியைப் பெற்றெடுத்த அன்னை. அவருடன் நின்று கொண்டிருந்த இரு பெண்களும் கோதண்டராமன் – மைதிலியின் சீமந்தப்புத்திரிகள்.
மூத்தவள் மைத்ரேயிக்கு ஹர்சவர்தனின் வயதுதான். சாந்தம் தவழும் அவளின் முகமே பார்த்தவுடன் நீரஜாட்சியை கவர்ந்துவிட, அவளைப் பார்த்துச் சினேகமாகப் புன்னகைத்தாள். மைத்ரேயியும் அவளையும், கிருஷ்ணஜாட்சியையும் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்தாள்.
ஆனால் அவளின் அருகில் நின்ற இளையவளோ இவர்கள் இருவரையும் துச்சமாகப் பார்க்க, நீரஜாட்சிக்கு அவளை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது. அவள்தான் ஸ்ருதிகீர்த்தி. மைத்ரேயியின் தங்கை. அவள் அப்படியே பத்மாவதியின் வார்ப்பு.
அவள் கிருஷ்ணஜாட்சியைப் பார்வையால் அளவிட்டவள், அவளது அழகில் பொறாமை கொண்டாள் அக்கணமே.
பின்னர் நீரஜாட்சியைப் பார்த்தவள் மனதில் “இது பொண்ணா பையனா” என்று கேட்டுக்கொண்டாள். நீரஜாட்சியின் கழுத்தளவு முடியும், திலகமற்ற நெற்றியும், அவள் அணிந்திருந்த டாப் மற்றும் பேண்ட்டும் அவளை எந்த விதத்திலும் பெண்ணாகக் காட்டவில்லை தான்.
ஆனால் அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி நீரஜாட்சிக்கு இந்த விஷயங்களில் எல்லாம் ஆர்வமில்லை என்பதால் அவள் இது எதையும் கண்டுகொள்வதில்லை.
தங்களை ரட்சிக்க வந்த பரந்தாமனாக நின்ற தாத்தாவைக் கண்டதும் இரு பெண்களும் முகம் மலர, பட்டாபிராமனுக்குக் கிருஷ்ணஜாட்சியின் சிரிப்பைக் கண்டதும் மதுரவாணியின் கள்ளமற்ற முகம் நினைவுக்கு வர “அம்மாடி மதுரா” என்று தழுதழுத்தக் குரலில் அவளை அழைத்தவர் அவளை அணைத்துக் கொண்டார்.
தாத்தாவின் பாசத்தில் நெகிழ்ந்துப்போய் நின்ற கிருஷ்ணஜாட்சி பேச முடியாமல் கண்ணீரை மட்டும் வடிக்க, நீரஜாட்சியை மார்போடு அணைத்துக்கொண்டார் சீதாலெட்சுமி. ஹர்சவர்தன், பத்மாவதி, ஸ்ருதிகீர்த்தியைத் தவிர மற்ற அனைவரும் இந்தப் பாசப்போராட்டத்தைக் கண்ணில் திரையிடும் கண்ணீருடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.
பத்மாவதியின் மனதில் துவேஷமும், ஸ்ருதிகீர்த்தியின் மனதில் பொறாமையும் கொழுந்துவிட்டு எரிய, ஹர்சவர்தனோ அவர்களைப் போல் அல்லாமல் வீட்டின் அமைதிக்கு இந்தப் பெண்களால் குந்தகம் வருமோ என்ற சந்தேகத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

