அந்தப் பரந்து விரிந்து ஹாலில் நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. அதன் நடுநாயகமாக ஒரு மேஜையில் பல சேனல்களின் ஒலிவாங்கிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்க அதன் பின்னே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர் ராகவும் அவந்திகாவும். அவர்களை பேட்டியெடுக்க வந்திருந்த நிருபர்களுக்காகத் தான் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நாற்காலியில் அமர்ந்திருந்த நிருபர்களின் கவனம் முழுவதும் ராகவ் மற்றும் அவந்திகாவின் மீதே நிலைபெற்றிருந்தது.
அவர்கள் இருவரின் முகங்களையே எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பது என்று சலித்துப் போன நிருபர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர்.
ராகவ் அதற்குப் பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டிருந்தான். தானும் அவந்திகாவும் முதல் பார்வையிலேயே காதலில் விழுந்ததாக ஒரு கதையை எடுத்துவிட்டவன் அவர்கள் அதை நம்பும்படி சில பல பொய்களை அடுக்கினான்.
“உங்களோட இந்தத் திடீர் கல்யாணத்துக்குக் காரணம் என்ன மிஸ்டர் கபூர்?” என்று கேட்ட நிருபரைப் புருவம் உயர்த்திப் பார்த்தான் ராகவ்.
அவன் அருகில் இருந்த அவந்திகா அந்த நிருபரிடம் “சார் ப்ளீஸ் ராகவ் கபூர்னு மென்சன் பண்ணுங்க… பிகாஸ் மிஸ்டர் கபூர்ங்கிற பேருல தான் நான் ஏமாந்து போயிட்டேன்” என்று வேண்டாவெறுப்பாய் புன்னகைத்தபடி கூற
தன்னருகில் கருகமணி, குங்குமம் சகிதம் அக்மார்க் மனைவியாய் இருந்தவளின் காதில் “லுக் ஜான்சிராணி! நான் இண்டர்வியூ குடுக்கிறது அந்த ரூமர்ஸை பொய்னு நிரூபிக்கத் தான்… நீ இப்பிடி ஏதாச்சும் உளறி வச்சு அவங்களைக் கண்டபடி யோசிக்க வைக்காதே” என்று அவளை அமைதி காக்கும்படி அறிவுறுத்தினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவந்திகா தலையைச் சிலுப்பியவள் “என்னால அமைதியா இருக்க முடியாதுடா.. நீ பாட்டுக்குக் கண்டதும் காதல்ங்கிற மாதிரி அவங்க காதுல பூ சுத்துற… நான் அதைக் கேட்டுட்டுச் சும்மா இருக்கணுமா…எனக்கு அதைக் கேட்டாலே இரிட்டேட்டா இருக்கு..” என்று பிடிவாதமாய்க் கூற
ராகவ் சிகையைச் சலிப்புடன் கோதிக் கொண்டவன் “ஓ மை காட்! எந்த நேரத்துல இந்தப் பொண்ணை டிசைன் பண்ணுன நீ? ஐ அம் கெட்டிங் சிக் ஆஃப் ஹெர் ஆட்டிட்டியூட்” என்று முணுமுணுக்க
அவந்திகா வெகுண்டுப் போய் “உன்னை யாரு மேன் மேனேஜ் பண்ணச் சொன்னது? நான் சொன்னேனா? பெரிய இவனாட்டம் டயலாக் பேசி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன் நீ தான்” என்று பதிலடி கொடுக்க
அதைக் கண்ட நிருபர்களில் ஒருவர் “சார் எங்களை வரச் சொல்லிட்டு நீங்களும் மேடமுமே பேசிட்டிருக்கிங்க? எதுவும் முக்கியமான விஷயமா?” என்று கேட்க
ராகவ் ஒரு சமாளிப்புப் புன்னகையுடன் அவர்களிடம் திரும்பியவன் “நாட் அ பிக் டீல்.. மேடம் அவங்களோட ஹனிமூன் டெஸ்டினேசனை சேஞ்ச் பண்ணச் சொல்லுறாங்க…” என்று சொல்லவும் அங்கே அனைவரும் நமட்டுச்சிரிப்புடன் அவந்திகாவைப் பார்க்க அவள் ராகவை முறைக்கத் தொடங்கினாள்.
ராகவ் அவள் புறம் திரும்பியவன் “நீ சொன்ன இடத்துக்கே போகலாம் ஜானு… இப்போ ஹேப்பியா?” என்று கேட்டபடி இதழ் விரித்துப் புன்னகைக்க அவனது காந்தப்புன்னகையில் தன்னையறியாது மெய் மறந்து நின்ற அவந்திகா சரியென்று தலையசைத்துவிட்டு கன்னம் குழியப் புன்னகைத்தாள்.
நிருபர் கூட்டத்தினர் இதற்கு மேலும் இது காதல் திருமணமா என்று கேட்பதில் அர்த்தமில்லை என்று புரிந்துகொண்டு அமைதியாகிவிட, அந்த அழகான ஜோடியை ஃப்ளாஷ் வெளிச்சம் நனைக்கத் தொடங்கியது.
பளிச் பளிச்சென்று மின்னிய ஃப்ளாஷ் வெளிச்சம் கண்ணைக் கூசக் கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டவள் கண்ணை மறுபடி விழித்துப் பார்க்கையில் எங்கும் இருள் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்தது. அவள் இப்போது அவளது அறையில் படுக்கையின் மீது அமர்ந்திருந்தாள்.
கண்கள் தானாகவே ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் டிக் டிக் என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த கடிகாரத்தின் மீது படிய நேரம் காலை ஐந்து மணி என்று அறிவித்தது அது.
“ச்சே! கனவா” என்று முணுமுணுத்த அவந்திகாவுக்கு அப்போது தான் உறைத்தது அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமென்பது. ஒரு வேளை இப்படி நடந்துவிடுமோ என்று ஒரு கணம் நினைத்து மருண்டவள் பின்னர் எல்லாம் நேற்றைய சம்பவங்களின் பாதிப்பு தான் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.
நேற்று நிச்சயம் முடிந்ததும் ஒரு பெண் அவள் அருகில் வந்து நின்றது அவளது கையைக் குலுக்கி வாழ்த்து சொன்னது எல்லாமே அவளுக்கு நினைவிலிருந்தது. அதைத் தொடர்ந்து ராகவ் சொன்ன விஷயங்களை எண்ணிப் பார்க்கத் தொடங்கினாள்.
“லுக் தியா! காதலிச்சுக் கல்யாணம் பண்ணுறதுக்கும் கட்டாயத்துக்குக் கல்யாணம் பண்ணுறதுக்கும் வித்தியாசம் இருக்கு. நானும் அவந்திகாவும் ரொம்ப டீப்பா லவ் பண்ணுறோம்… பட் இதெல்லாம் சொன்னாலும் உனக்குப் புரியாது… எங்களைக் கொஞ்சம் தனியா விடுறியா ப்ளீஸ்?” என்று கேட்டுக்கொள்ளவே அந்தப் பெண் வேறு வழியின்றி அவளது தந்தையிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.
ராகவ் தன்னையே விழியகல நோக்கிக் கொண்டிருக்கும் அவந்திகாவைப் பார்த்தவன் “என்னாச்சு ஜான்சிராணி? இந்நேரத்துக்கு நீ ஒரு பெரிய சண்டைக்குத் தயாராகியிருக்கணுமே! பட் ரொம்ப சைலண்டா இருக்கியே! ஐ கான்ட் பிலீவ் திஸ்” என்று சொன்னது தான் தாமதம் அவந்திகா தீபாவளி பட்டாசாய் வெடிக்கத் தொடங்கினாள்.
“எல்லாருமா சேர்ந்து என் கிட்ட எவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சிட்டிங்க? இதுக்கெலாம் நீ தான் ஐடியா குடுத்திருப்ப! நான் தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொன்னேனே… அப்போ ஏன் இந்த என்கேஜ்மெண்ட் டிராமா?”
“எல்லாம் அவங்களுக்காகத் தான்” என்ற ராகவ் கௌசல்யாவைக் காட்ட அவந்திகா சற்று அமைதியானாள். அவள் அமைதியானதும் அவன் பேசத் தொடங்கினான்.
“தேவையே இல்லாம என்னால கஷ்டப்பட்டது நீயும் அவங்களும் தான்… நீ இதை ஈஸியா உதறித் தள்ளிட்ட… பட் அவங்க அப்பிடி இல்லையே… ஷீ இஸ் வெரி வெரி சென்சிடிவ்… எல்லா அம்மாவுமே அப்பிடி தான்… யூ நோ வாட்! இப்போ என் மனசு லேசா ஆயிடுச்சு அவந்திகா… இவ்ளோ நாள் அவங்களைப் பார்க்கிறப்போ ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியோட சங்கடமா இருக்கும்… ஆனா இப்போ அவங்க சந்தோசமா இருக்கிறதைப் பார்த்து எனக்கு மனசுக்கு நிம்மதியா இருக்கு”
“ஆனா எனக்கு இல்லை… எனக்கு என் லைஃபை பத்தி ஏகப்பட்ட கனவு இருக்கு ராகவ்.. அது எதுக்குமே நீ சரிப்பட்டு வரமாட்டே! எனி ஹவ் என்கேஜ்மெண்ட் தானே முடிஞ்சிருக்கு… கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு… அதுக்கு முன்னாடி என் டிரீம் பாயை நான் கண்டுபிடிச்சுடுவேன்” என்றாள் அவந்திகா தீவிரக்குரலில்.
ராகவ் அதைக் கேட்டவன் அடக்கமுடியாமல் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அவர்கள் நிற்பது ஹாலின் ஒரு ஓரமாகத் தான் என்றாலும் அங்கே அமர்ந்திருந்த அனைவரின் செவியையும் அந்தச் சிரிப்புச்சத்தம் தீண்டி அவர்கள் இதழையும் மலரவைக்க அவர்களின் கவனம் இருவரையும் நோக்கித் திரும்பியது.
அவந்திகா அதைப் பார்த்துவிட்டு “ஷ்ஷ்! சத்தம்போட்டு சிரிக்காதே… எல்லாரும் நம்மளைத் தான் பார்க்கிறாங்க” என்று சொல்ல
ராகவ் வயிற்றைப் பிடித்தடி நின்றவன் இன்னும் சிரிப்பு அடங்காத குரலில் “உனக்கு எவ்ளோ ஓவர் கான்ஃபிடென்ஸ் அவந்திகா? வீ ஆர் என்கேஜ்ட்… ஆனா நீ இன்னும் ஆறு மாசத்துல டிரீம் பாயைக் கண்டுபிடிப்பேனு என் கிட்டவே சொல்லுற… ஐ லைக் திஸ் ஆடிட்டியூட்… பட் ஐ அம் சாரி, அப்பிடி யாரும் உன் லைஃப்ல இனி வரப் போறது இல்லை… ராகவோட ஃபியான்ஸியை யாரால காதலிக்க முடியும்?” என்று அமர்த்தலாக மொழிய
அவந்திகா தன் நெற்றியைத் தொட்டுக் காட்டி “இங்க பாரு! என் நெத்தியில ‘ராகவின் ஃபியான்ஸி’ அப்பிடினு எழுதி ஒட்டிருக்கா என்ன? நீ எல்லாம் என்ன பிஸினஸ் பண்ணுறியோ போ” என்று கேலியாகச் சொல்ல
“இஸிண்ட்? நாளைக்குக் காலையில வரைக்கும் வெயிட் பண்ணு ஜான்சிராணி… நான் சொன்னதுக்கான அர்த்தம் புரியும்” என்று மட்டும் கூறிவிட, அவன் அப்படி என்ன தான் செய்யப் போகிறான் என்று யோசிக்கும் முன்னரே ராகவின் தந்தை, பெரியப்பா மற்றும் சித்தப்பா வந்துவிட அவன் அவர்களிடம் ஐக்கியமானான்.
அவந்திகாவுக்கும் என்ன தான் அவன் மீது அதிருப்தி இருந்தாலும் அதைப் பெரியவர்களிடம் காட்டிக் கொள்ளாமல் இன்முகத்துடனே நடந்துகொண்டாள். இவ்வளவு நாள் அவளைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லாத சுமித்ராவே கூட அவளை மெச்சுதல் பார்வை பார்த்துவைக்க அந்த நாள் நல்லவிதமாகவே முடிந்தது.
ஆனால் ராகவ் என்ன செய்யப் போகிறான் என்ற யோசனையில் உழன்றவளுக்கு வேறு எதிலும் சிந்தனை செல்லவில்லை. அதை எண்ணியபடியே உறங்கிப் போனவளுக்கு அதிகாலை நேரத்தில் இப்படி ஒரு கனவும் வந்துவிடவே சொல்லவா வேண்டும்! அவள் மனம் அது இஷ்டத்துக்குக் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட ஆரம்பித்துவிட்டது.
வழக்கமாக கௌசல்யாவே வந்து உலுக்கினாலும் ஆறு மணிக்கு முன்னர் எழுந்திராத அவந்திகா அன்று அதிகாலை ஐந்து மணிக்கே கொட்டக் கொட்ட விழித்தபடி தனது அறையில் அமர்ந்திருந்தாள். ஒருமணி நேரத்தை நெட்டித் தள்ளியவள் ஆறு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து அலுவலகம் செல்லத் தயாரான போது வெளியே செய்தித்தாள் கொண்டு வரும் நபரின் சத்தம் கேட்டது.
ரகுவரன் வழக்கம் போல அதை வாங்கிப் பிரித்தபடி வராண்டாவில் அமர்ந்தவர் அதிலுள்ள செய்தியைப் பார்த்ததும் “கௌசி! கொஞ்சம் இங்கே வந்து பாரேன்” என்று உற்சாகக் குரலில் மனைவியை அழைக்க கௌசல்யாவும் என்னவோ ஏதோவென்று வராண்டாவுக்கு வந்தவர் கணவர் கையிலுள்ள செய்தித்தாளைக் கண்டதும்
“நியூஸைப் பார்த்துட்டா இவ்ளோ ஆர்ப்பாட்டம்?” என்று மீண்டும் வீட்டினுள் செல்ல முயல
“கௌசி கௌசி! நில்லும்மா… இங்கே பாரு” என்று செய்தித்தாளின் முதல் பக்கத்தின் கீழ்ப்பகுதியைக் காட்ட அங்கே வருணும் பிரதியுஷாவும் இருக்க அவர்கள் அருகில் அவந்திகாவும் ராகவும் புன்னகை பூத்த முகத்தோடு நின்றனர்.
கீழே ‘கபூர் குழும வாரிசுகளின் எளிமையான(?) நிச்சயதார்த்தம்’ என்ற தலைப்பில் அரைப்பக்கத்துக்குச் செய்திகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தது. அதை ரகுவரன் பெருமையுடன் வாசித்துக் காட்ட கௌசல்யாவின் முகம் அதைக் கண்டதும் பெருமையில் விகசித்தது.
“இதை யாரு பார்க்காங்கலோ இல்லையோ ரேகா கண்டிப்பா பார்க்கணும் ரகு… என் பொண்ணைப் பத்தி கன்னாபின்னானு பேசுனாங்களே, இனிமே அவங்களே சொன்னாலும் யாரும் அவந்திகாவைப் பத்தி தப்பா நினைக்கமாட்டாங்க ரகு” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவந்திகா அவர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கேட்டு வராண்டாவுக்கு வரவே, கௌசல்யா பெருமையுடன்
“பாரு என் மருமகன் எவ்ளோ புத்திசாலித்தனமா வேலை பார்த்திருக்கார்னு” என்று சிலாகிக்க
அவந்திகா “அப்பிடி என்ன பண்ணுனான் உங்க மருமகன்?” என்று உதட்டைச் சுழித்தபடி ரகுவரனிடம் இருந்து செய்தித்தாளை வாங்கியவள் அதிலுள்ள தங்கள் நால்வரின் புகைப்படத்தையும் கண்டு ஒரு நிமிடம் வாயைப் பிளந்துவிட்டாள்.
ராகவின் “நாளைக்குக் காலையில வரைக்கும் வெயிட் பண்ணு ஜான்சிராணி… நான் சொன்னதுக்கான அர்த்தம் புரியும்” என்ற வார்த்தையின் முழு அர்த்தம் அவளுக்கு இப்போது புரிந்தது.
“ராகவோட ஃபியான்ஸியை யாரால காதலிக்க முடியும்?” என்றவனின் குரல் இப்போதும் காதருகே கேட்பதைப் போன்ற பிரம்மை அவளுக்கு. காதைத் தேய்த்துக் கொண்டபடி விழித்தவள் அவன் எவ்வளவு கேடித்தனமாக யோசிக்கிறான் என்று எண்ணினாலும் அந்த நேரத்தில் ரகுவரனும் கௌசல்யாவும் வருங்கால மருமகனைப் பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டதும் அவளுக்கு உள்ளுக்குள் உருகிவிட்டது.
கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்கள் தன்னைச் சொந்தமகளாகத் தாங்கியவர்களுக்குத் தன்னால் கொடுக்க முடிந்த குறைந்தபட்ச சந்தோசம் இந்தத் திருமணம் தான் என்று புரிந்து கொண்டாள். ஆனால் அதே நேரம் ராகவின் அலட்சியமானப் போக்கை எண்ணினால் அவளுக்கு எரிச்சல் உச்சிக்கு ஏறியது.
அவளது வாழ்க்கையில் இப்படி அகந்தையே உருவானவனைச் சந்திப்போம் என்று அவந்திகா கனவில் கூட நினைத்ததில்லை. அதிலும் ராகவ் என்பவனின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் அலட்சியமும் அகம்பாவமும் மட்டுமே நிறைந்துள்ளது என்று எண்ணும் போதே இத்திருமணம் எட்டிக்காயாகக் கசக்க ஆரம்பித்தது.
இதை தடுத்து நிறுத்தவும் முடியாமல் அதே நேரம் ராகவ் என்ற ஒருவனைச் சகித்துக் கொள்ளவும் இயலாமல் கடுப்பின் உச்சத்துக்குச் சென்றாள் அவள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


