அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும்.
அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் செய்து பெரிய பெரிய கொள்கலன்களில் அடுக்கி வைப்பதை ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்பாள் அவள்.
அவளுக்கும் அவளது கசின்களுக்கும் முக்கிய வேலையே வடகத்தை காகமோ, அங்கே வரும் குரங்குகளோ கபளீகரம் செய்துவிடாமல் காவல் காப்பது தான். வெயில் ஏறிவிட்டால் மொட்டைமாடியில் ஒரு குச்சியை வைத்து அதில் தான் உபயோகித்த பழைய சௌரி முடியை மாட்டி விடுவார் செண்பகம். காகத்தை விரட்ட அவர் கையாளும் எளிய வழிமுறை அது தான்!
மாலை ஆனதும் மதிய வெயிலில் சுக்கு போல காய்ந்த வடகத்தை துணியின் பின்பகுதியில் தண்ணீர் தெளித்து பிரித்தெடுப்பார்கள். அதை காற்று புகாத பெரிய கொள்கலன்களில் அடைத்து பத்திரப்படுத்தும் செண்பகம் மகள்கள் விடுமுறைக்காலம் முடிந்து அவரவர் புகுந்த வீட்டிற்கு கிளம்பும் தருவாயில் ஆளுக்கொரு கொள்கலனாக கொடுத்து அனுப்புவார்.
எண்ணெய்யில் போடும் போது சீரகமணத்துடன் மொறுமொறுவென பொரியும் அந்த வடகம் இருந்தால் குழம்போ தொடுகாயோ கூட வேண்டாம் குட்டிமாவிற்கு.
இதோ இப்போது மொட்டைமாடியில் காய வைக்கப்பட்டுள்ள ஈடு அவள் சென்னைக்கு எடுத்துச் செல்வதற்காக புஷ்பம்மாவின் கைப்பக்குவத்தில் தயாரானது தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
புஷ்பம்மா கடைசியாக மிச்சமிருந்த கூழினை துணியில் வட்டவடிவ வடகங்களாக இட்டுக்கொண்டிருந்த போது கீழே ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்கவே குட்டிமா அவரிடம்
“இப்போ நம்ம வீட்டுக்கு யார் வர்றாங்க புஷ்பாக்கா? ஒருவேளை சாந்தி பெரியம்மாவா இருக்குமோ?” என்று வினவ
“நேத்து தானே அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்தோம்… இது வேற யாரோ குட்டிமா… நீ போய் யார்னு பாரு… அக்கா கை கழுவிட்டு வர்றேன்… இன்னும் மத்தவங்க எழுந்திரிக்கல… அதனால சத்தம் போடாம போய் பாரு” என்று அவளைக் கீழே அனுப்பி வைத்தார்.
குட்டிமா மட்டப்பாவிலிருந்து எட்டிப் பார்த்த போது ஆட்டோ கிளம்பியிருந்தது. அப்படி என்றால் அதில் வந்த நபர் கேட்டினைத் தாண்டி திண்ணையில் அமர்ந்திருக்க வேண்டும் என்ற ஊகத்துடன் கீழே சென்றவள் திண்ணையையும் வீட்டையும் பிரிக்கும் பெரிய மரக்கதவைத் திறக்க அங்கே ஷோல்டர் பேக் மற்றும் ரோலர் சூட்கேஸ் சகிதம் நின்றிருந்தான் சின்னா.
வழக்கம் போல கிளச்சில் அடங்கிய கூந்தல், தொளதொள டீசர்ட் மற்றும் பட்டியாலாவில் நின்ற மனைவியின் முகத்தில் ஆங்காங்கே வடகத்திற்கான கூழ் தீற்றியிருப்பதைக் கண்டவன் அவள் கரங்களையும் கவனித்துவிட்டு “வேலையா இருந்தியா குட்டிமா?” என்று கேட்டது தான் தாமதம் குட்டிமாவிற்கு காது மூக்கிலிருந்து புகை வராத குறையாக கடுப்பானாள்.
“இல்லயே! தூங்கிட்டிருந்தேன்… ஆட்டோ சத்தம் கேட்டதும் எழுந்திருச்சு வந்தேன்” என்றாள்.
சின்னா அவள் நின்ற கோலத்தையும் சொன்ன பதிலையும் ஒப்பிட்டுப் பார்த்து குழம்பியவன் “தூங்கிட்டிருந்தவ முகத்துல எப்பிடி மாவு ஒட்டுச்சு?” என்று கேட்க
“தெரியுதுல்ல… அப்புறம் என்ன கேள்வி வேலையா இருந்தியா குட்டிமானு? சரி அதை விடு… நீ ஏன் இங்க வந்த?” என்று வந்தவனை அப்படியே வழியனுப்பி வைத்துவிடும் பாவனையில் அவள் கேட்டாள்.
அந்தக் கேள்வியில் சின்னாவிற்குள் எரிச்சல் மூள “ஏன்டி நீ மட்டும் தான் வரணும்னு மிஸ்டர் ஈஸ்வரமூர்த்தி உயில் எதையும் எழுதி வச்சிட்டுப் போயிருக்காரா? இது உனக்குத் தாத்தா வீடுனா எனக்கு ஆச்சி வீடு… நான் எப்போ வேணாலும் இங்க வருவேன்… நீ மூஞ்சில மாவு பூசுற வேலைய பாரு போ” என்று தனது ஷோல்டர் பேக்கால் அவளை இலேசாக இடித்து விட்டு உள்ளே செல்ல குட்டிமா தடுமாறியவள் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.
“வந்ததும் வராததுமா குட்டிமானு சொல்லி என்னை இரிட்டேட் பண்ணவா செய்யுற? நீ தலைகீழ நின்னாலும் நான் உன் கூட சென்னைக்கு வர மாட்டேன்” என்று சூளுரைத்துவிட்டு எங்கே அவன் உரத்தக்குரலில் பேசி உறங்குபவர்களை எழுப்பி விடுவானோ என்ற அவசரத்தில் அவன் பின்னே ஓடினாள்.
“ஆச்….” என்று உச்சஸ்தாயியில் கத்தவிருந்தவனின் வாயை குட்டிமாவின் தளிர்க்கரம் மூடவும் அவன் குரல் எழுப்பமுடியாது திணற
“சத்தம் போடாத… அம்மா, அத்தை, ஆச்சி மூனு பேரும் டயர்ட்ல தூங்குறாங்க… உனக்கு எது வேணாலும் என் கிட்ட கேளு” என்றாள் அவள்.
அவளது பேச்சில் சின்னாவின் கண்களில் குறும்பு கூத்தாட “என்ன கேட்டாலும் தருவியா பொண்டாட்டி?” என்று அவன் கேட்கவும்
“டபுள் மீனிங்கா? போடா… போய் குளிச்சிட்டு வா… காபி போட்டு வைக்கிறேன்… அதை விட்டுட்டு எதாச்சும் அழிச்சாட்டியம் பண்ணுனேனு வையேன், காபில காபி பவுடருக்குப் பதிலா வென்னி போடுற அடுப்புக்கு வச்சிருக்குற உமிய அள்ளி கொட்டிருவேன்” என்று குட்டிமா மிரட்டவே அவள் செய்வதற்கு தயங்காதவள் என்பதை புரிந்து கொண்டு சின்னா அவளது அறையை நோக்கி சென்றான்.
உள்ளே நுழைந்தவன் அரவம் எழுப்பாமல் குளித்து உடைமாற்றி விட்டு சமையலறைக்கு வந்த போது காபி கோப்பை கரங்களில் திணிக்கப்பட்டது.
“ப்ச்… ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாதுனு சொல்லுற மாதிரி செங்கோட்டைக்கு வந்தும் உன்னோட ஹாட் வாட்டர் காபிய தான் குடிக்கணுமா?”
மைண்ட்வாய்ஸ் என்று நினைத்து சற்றே உரத்தக்குரலில் முணுமுணுத்தவனை வஞ்சகமின்றி முறைத்த குட்டிமா அவன் கரத்திலிருக்கும் கோப்பையை பிடுங்க முயன்றாள்.
“டேய் சின்னா! என்னடா திடீர்னு வந்திருக்க? அன்னைக்கு நான் குட்டிமாக்கு ரிட்டர்ன் டிக்கெட் போட்டாச்சானு கேட்டதுக்கு கூட போக தெரிஞ்சவளுக்கு வரத் தெரியாதானு சினிமா டயலாக் பேசுனீயேடா”
மகனின் முன்னறிவிப்பற்ற வருகையில் இனிமையான அதிர்ச்சி தாக்கியதால் உண்டான சந்தோசத்தை வார்த்தைகளில் கொட்டி சந்திரகலா பேச அது முறையே சின்னாவிற்கு பயத்தையும் குட்டிமாவிற்கு ஆத்திரத்தையும் ஒருங்கே துளிர்க்க வைத்தது.
“என்னை பெத்த தாயே! தப்பான நேரத்துல சரியா வந்து இவ கிட்ட மாட்டி வச்சிட்டியே… இதுக்கு என்ன பேச்சு பேசப்போறாளோ?” என்று மனதுக்குள் சின்னா பதபதைக்க
“போகத் தெரிஞ்சவளுக்கு வரத் தெரியாதானா கேட்டிருக்க… எவ்ளோ ஆட்டிட்டியூட் உனக்கு… இரு மகனே, இன்னைக்கு உனக்கு கோலப்பொடில சுட்ட தோசை தான் ப்ரேக்ஃபாஸ்ட்” என்று தன் மனதுக்குள் கறுவிக்கொண்டாள் குட்டிமா.
அவள் எண்ணவோட்டத்தை அறிந்தவனாக அன்னையிடம் சென்ற சின்னா “அது எப்பிடிமா என்னை மாட்டி விடணும்னா நீ அலாரம் வைக்காமலே எழுந்திருக்குற?” என்று கேட்டபடி அவரது தோளில் கைபோட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டான்.
குட்டிமா அவனை முறைத்தவள் பூரணி அந்தப் பக்கமாக வரவும் வேலை செய்வது போல காட்டிக்கொண்டாள்.
இவ்வாறு நேரம் செல்ல அன்று தாமதமாக விழித்தெழுந்த செண்பகம் அண்ணனின் பேரனைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காத குறை தான். போதாக்குறைக்கு புஷ்பம்மாவும் அன்றைய சமையலில் எல்லாமே சின்னாவிற்கு பிடித்ததாகச் செய்யப்போவதாய் அறிவிப்பு கொடுக்க குட்டிமா நேற்று திருமண வீட்டுக்குக்குப் போட்டு சென்ற உடைகளை துவைக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தாள்.
“பட்டுப்புடவைய துவைக்கப் போறாளா? என்னாச்சு உங்க பேத்திக்கு?” என்று பூரணி புரியாது கேட்க
“அவ குளிச்சிட்டுப் பொறுமையா வரட்டும்… சென்னைல தனியா எல்லா வேலையையும் அவ தானே செய்யணும்… இங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமே மதினி” என்று வழக்கம் போல மருமகளுக்குப் பரிந்து பேசிய சந்திரகலா அனைவரின் வாயையும் அடைத்துவிட குட்டிமாவும் குளித்துவிட்டு பட்டுப்புடவைகளைத் தவிர மற்றைய ஆடைகளைத் துவைத்து பின்பக்க ஆற்றில் அலச சென்றுவிட்டாள். அத்தோடு சின்னா கழற்றிப் போட்ட உடைகள் வேறு!
“நானும் வரட்டுமா குட்டிமா?” என கேட்ட புஷ்பம்மாவை சமையலைக் கவனிக்குமாறு பணித்தவள் ஸ்படிகம் போல தெளிந்து கிடந்த தண்ணீரை ரசித்தபடி படிக்கட்டில் அமர்ந்து டப்பில் வைத்திருந்த துணியை ஒவ்வொன்றாக அலசத் துவங்கினாள்.
சிறிது நேரத்தில் பூஜைக்கு நீர் வேண்டுமென வெண்கல சொம்புடன் செண்பகமும், பாட்டிக்குத் துணையாக வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு சின்னாவும் அந்தப் பக்கம் வரவும் துணிகளைப் பிழிந்தபடி தலை நிமிர்ந்தாள் குட்டிமா.
கொளுத்தவில்லை என்றாலும் கதிரவனின் கதிர்கள் அன்று உருவாக்கிய கதகதப்பில் அவளின் நெற்றியில் துளிர்த்த வியர்வைத்துளிகள் வைரங்களாய் மின்ன செண்பகத்திடமிருந்து சொம்பினை வாங்கி தெளிந்த இடத்திலிருந்து தண்ணீரை மொண்டு கொடுத்தாள் அவள்.
“இந்த ஆறு முன்னை விட இப்போ அகலமான மாதிரி இருக்கே ஆச்சி… வேலை எதுவும் பாத்தீங்களா?” என்று சின்னா விசாரிக்க
“ஆகாயத்தாமரை அங்க இங்க முளைச்சுதுல்ல சின்னா, உன் கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துக்கு அப்புறம் க்ளீன் பண்ணுனோம்… அதான் உன் கண்ணுக்கு ஆறு அகலமான மாதிரி தெரியுது போல… ஹூம்! ஒரு காலத்துல இந்த ஆத்தங்கரை தான் உங்க தாத்தாவுக்கு ஓய்வா உக்காந்திருக்குற இடம்… அதுக்கப்புறம் குட்டிமா அந்த இடத்தைப் பிடிச்சா… இப்போ அவளும் கல்யாணம் ஆகி உன்னோட சென்னைக்கு வந்துட்டா… இந்த ஆறு மறுபடியும் தனியா ஆயிடுச்சு” என்றார் செண்பகம்.
சின்னா அவரது தோள்களைக் கட்டிக்கொண்டவன் “ஆறு எப்போவும் தனியா இருக்குறதில்லயே ஆச்சி… கொஞ்சதூரம் ஓடுனதும் அதுக்குனு கடல் ராஜா காத்திருக்கார்… அவரோட சங்கமம் ஆனதும் ஆறும் கமிட் ஆகிடுதுல்ல… இதனால தான் ரிவர்ஸ்சை பொண்ணுங்களோட கம்பேர் பண்ணுறாங்க போல” என்றான் குறும்பாக மிளிரும் விழிகளால் குட்டிமாவை பார்த்தபடியே.
அவனது குறும்புப்பேச்சை ரசிக்க மனமில்லாதவளாக “கடல்ல கலக்காத ஆறும் தமிழ்நாட்டுல இருக்கு ஆச்சி… அதனால சும்மா டயலாக் பேசவேண்டாம்னு உன் பேரன் கிட்ட சொல்லு” என்றாள் அவள்.
செண்பகம் பேரன் பேத்தியின் இந்த வாய்ப்போரை வழக்கமான கேலிப்பேச்சு என்று எண்ணி சிரித்தார்.
தொடர்ந்து “ஆறும் கடலும் கலக்குற இடம் தான் வளமான வண்டல் மண் இருக்குற கழிமுகமா உருவாகுது குட்டிமா… அங்க தான் பயிர் செழிச்சு வளரும்… கடல்ல சேராத ஆறு கழிமுகத்தை உருவாக்காதுடா” என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட ஆச்சியின் பேச்சில் யோசனைவயப்பட்டவளாக நின்ற குட்டிமாவைப் பார்த்தபடி படிக்கட்டில் அமர்ந்துகொண்டான்.
அவன் தன்னைக் கவனிப்பதை அறிந்து துணியை அலச ஆரம்பித்தவளிடம் “கேட்டியா? எப்பிடி கடல்ல கலக்காத ஆறு கழிமுகத்தை உருவாக்காதோ அதே மாதிரி தான் சின்ன சின்ன விசயத்துக்காக பிரிஞ்சிருக்குற கணவனும் மனைவியும் என்னைக்கும் நல்ல வாழ்க்கைய வாழ முடியாது குட்டிமா” என்றான் எடுத்துச் செல்லும் குரலில்.
குட்டிமாவோ “தத்துவம் பேசுறதுல உன்னை அடிச்சுக்க ஆளே இல்ல… ஆனா ரியாலிட்டில நீ எதையும் ஃபாலோ பண்ண மாட்ட… உனக்கு உன்னோட பிடிவாதம் தானே முக்கியம்… வேண்டாம்டா… நான் எதுவும் சொல்லிடப்போறேன்” என்று கடுகடுத்துவிட்டு மீண்டும் அவனது டீசர்ட்டைத் தண்ணீரில் மூழ்கடித்தாள்.
அவனை மூழ்கடிக்க முடியாத கோபம் அவளது செய்கையில் பட்டவர்த்தனமாகத் தெரிவதை கண்டுகொண்ட சின்னா கொஞ்சம் ஜெர்க் ஆனாலும் அப்படியே விட மனமில்லாமல் “இல்லடா குட்டிமா…” என்று இழுத்தான்.
“போதும், குட்டிமா குட்டிமா குட்டிமா… எத்தனை குட்டிமா? இன்னொரு தடவை நீ குட்டிமானு கூப்பிட்டேனு வையேன் நிஜமாவே இதை உன் மண்டைல போட்டுருவேன்” என்று காலி டப்பை உயர்த்தினாள் அவனது மனைவி.
“அடியே என்னைப் பாத்தா பாவமா தெரியலயா?” என்று கண்களில் திகிலுடன் நகர்ந்தவன் அந்நேரம் பார்த்து அவனது மொபைல் இசைக்கவும் காதுக்குக் கொடுத்தான்.
“சாகேத் ஹியர்” என்றவன் மறுமுனையில் பேசியவர்களிடம் தான் இரண்டு தினங்கள் விடுமுறை எடுத்திருப்பதாகச் சொல்லவும் இரண்டு நாட்கள் கழித்து தன்னை அவனோடு அழைத்துச் செல்ல எண்ணும் அவனது திட்டத்தைப் புரிந்துகொண்டாள் குட்டிமா.
“போடா! நான் உன் கூட வந்தா தானே” என்று அப்போதும் சிலிர்த்துக் கொண்டவள் அன்றைய தினம் மாலை வரை அதே மனநிலையில் தான் இருந்தாள்.
மாலையில் அன்னை, மாமியார், புஷ்பம்மாவுடன் கோவிலுக்குச் செல்ல புறப்பட்டவள் தங்களுடன் சின்னாவும் வருகிறான் என்றதும் மறுக்க எத்தனித்தாள். ஆனால் அன்னையிடம் வாதாட சக்தியின்றி கிளம்பிவிட்டாள்.
கோவிலுக்குச் சென்று அம்மன் முன்னே கண் மூடி நிற்கும் போது அவளது மொபைல் கீதமிசைத்தது.
எடுத்தவள் தொடுதிரையைக் காண, அழைத்தது அவள் பணியாற்றிய நிறுவனத்தின் மேலாளர். அவர் ஏன் தனக்கு அழைக்கிறார் என்ற கேள்வியுடன் அழைப்பை ஏற்றாள் குட்டிமா.
“தேவி மேடம் நீங்க டி.டி.எஸ் ரிட்டர்ன் ஃபைல் பண்ணுற டேட்டுக்கு முன்னாடி ஆபிஸ்கு வந்துடுவீங்கள்ல?”
“நான் ரெசிக்னேசன் குடுத்துட்டேனே நாராயணன் சார்”
“பட் உங்க ரெசிக்சேனசனை எம்.டி ரிவோக் பண்ணிட்டார் மேடம்… நீங்க மறுபடியும் கம்பெனில ஜாயின் பண்ணப்போறிங்கனு உங்க ஹஸ்பெண்ட் நம்ம எம்.டிய மீட் பண்ணுறப்ப சொல்லிட்டார்”
உடனே அவளது விழிகள் அம்மன் சன்னதியில் கண் மூடி நின்ற கணவனிடம் பாய்ந்தது.
இவன் எம்.டியை சந்தித்து எனக்காக பேசினானா? இவனுக்காக தானே நான் ராஜினாமா செய்ததே! பின் ஏன் அவரைச் சந்தித்து நான் மீண்டும் பணியில் சேரப்போவதாக வாக்களித்தான்?
கேள்விகள் ஒவ்வொன்றாய் கிளர்ந்தெழ கணவனது புதிரான நடவடிக்கைகளால் உண்டான குழப்பத்தைக் கிரகித்த குட்டிமா மேலாளரிடம் பேசிவிட்டு அவனருகே வந்து நின்றாள்.
“யார் பேருக்கு அர்ச்சனை பண்ணணும்?”
அர்ச்சகர் சந்திரகலாவிடம் கேட்க “என் மகன், மருமகள் பேர்ல தான் பண்ணணும்” என்றபடி அர்ச்சனைத்தட்டை நீட்டினார்.
“நம்ம குழந்தேள் பேருக்குத் தானே… பேஷா பண்ணிடலாம் சந்திராம்மா… ராசி நட்சத்திரம் சொல்லுங்கோ” என்றார் அர்ச்சகர்.
மாமியாருக்கு முன்னே முந்திக்கொண்ட குட்டிமா அர்ச்சகரிடம் “சாகேதராமன், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம்… ஜானகிதேவி, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம்” என்று தங்களது திருநாமங்களுடன் ராசி நட்சத்திரத்தை ஒப்பித்தாள்.
அர்ச்சகர் கருவறைக்குள் சென்றதும் விழி மூடி வேண்டிக்கொண்டவளை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு மீண்டும் அவளின் நேசம் தனக்குச் சொந்தமாக வேண்டுமென அம்மனிடம் வேண்டுதல் வைத்தான் ஜானகிதேவியின் கணவனான சாகேதராமன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

