“நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா? கேட்காத வரமா?”
காதில் கீதமிசைத்த மொபைலை போர்வைக்குவியலுக்குள் பொதிந்து கிடந்த தனது தலையை உயர்த்தி பார்த்தான் சின்னா. தொடுதிரையில் சாந்தப்புன்னகை தவழும் அன்னையின் புகைப்படம் ஒளிர்ந்து பச்சை மற்றும் சிகப்பு வண்ண தொலைபேசி அடையாளங்களை நர்த்தனமாட விட்டிருக்க உடனே போர்வையை எறிந்துவிட்டு மொபைலைக் காதுக்குக் கொடுத்தான் அவன்.
“சொல்லுங்கம்மா” பேசும் போதே கைமறைவில் கொட்டாவி வந்துவிட்டது.
“என்ன சொல்லுங்கம்மா? இன்னையோட குட்டிமா செங்கோட்டைக்குப் போய் மூனு நாளாகுதுடா… நீ அவளுக்கு இன்னும் ரிட்டர்ன் டிக்கெட் போடலயா? அங்க போனா அத்தையும் புஷ்பம்மாவும் அவளுக்குக் குடுக்குற செல்லத்துல கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துப்பாடா.. அப்புறம் பூரணி மதினிக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?”
இரவில் சரியாக உறங்காததால் உண்டான கண் எரிச்சலை அனுபவித்தவனின் செவிகளை தன் பங்குக்குப் பதம் பார்த்தார் அவனது அன்னை சந்திரகலா.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சின்னாவிற்கு சில சமயங்களில் உண்டாகும் ஆச்சரியம் அப்போதும் முகிழ்த்தது. இவருக்கு நான் மகனா அல்லது அவள் மகளா? என்னை விட அப்படி என்ன அவள் மீது வாஞ்சை?
ஆனால் அவளது அன்னை பூரணியும் சந்திரகலாவும் இளவயது தோழிகள் என்பதால் இக்கேள்விக்கு அவசியமில்லாது போனது. தங்களது புத்திரச்செல்வங்கள் காதலிப்பதை அறிந்த போது இருவரும் குதூகலத்துடன் சம்மதித்து விட்டனர்.
காதல் திருமணத்திற்கே உரித்தான எந்த எதிர்ப்புமின்றி வெகு சுலபத்தில் நடந்தேறியது தான் அவர்களின் திருமணம். அதனால் தானோ என்னவோ சோதனைகள் திருமணத்திற்குப் பின்னர் வந்திருக்கிறது போல!
அலுப்புடன் “உங்க மருமகள் ஒன்னும் குழந்தை இல்லம்மா… தானா போக தெரிஞ்சவளுக்கு வரவும் தெரியும்” என்று அவசரமாக பதிலளித்தான் சின்னா.
“என்னது? அவளே போனாளா? சின்னா என்னடா சொல்லுற?”
மறுமுனையில் அன்னை திகைத்த பிறகு தான் உண்மையைச் சொல்லிவிட்டோம் என்பதே அவனது புத்திக்கு உறைத்தது.
தன் தலையிலடித்துக் கொண்டு “நான் அப்பிடியா சொன்னேன்? சாரிம்மா… தூக்கம் இன்னும் கலையல… அதான் என்னவோ உளறிட்டேன் போல… குட்டிமாக்கு இன்னும் ஏழு நாள் கழிச்சு தான் ரிட்டர்ன் டிக்கெட் போட்டிருக்கேன்மா… அவ கொஞ்சம் ஸ்ட்ரெஸ்சா ஃபீல் பண்ணுனா… அதான் ஆச்சி கூட பத்து நாள் இருந்துட்டு வானு அனுப்பி வச்சேன்” என்று மூன்று நாட்களுக்கு முன்னர் சொன்ன அதே கதையை மறுபடியும் அன்னையிடம் கூறினான் அவன்.
அந்த அன்னையின் மனம் அதில் குளிர்ந்தது.
“நீயே நேர்ல போய் அவளை அழைச்சிட்டு வரலாம்ல… அப்பிடியே அத்தையையும் புஷ்பம்மாவயும் பாத்த மாதிரி இருக்கும்”
அதை கேட்டதும் சின்னாவின் ஈகோ சிலிர்த்துக் கொண்டது. நான் ஏன் அவளை அழைத்து வர வேண்டும்? சொல்லாமல் கொள்ளாமல் போகத் தெரிந்தவளுக்கு வரத் தெரியாதா?
ஆச்சியைக் காண இன்னொரு முறை சென்றால் போகிறது. கடவுளே கூறினாலும் இம்முறை அவளை அழைத்து வர நான் செல்லப்போவதில்லை.
வைராக்கியமாய் தனக்குள் முழங்கியவன் அன்னையிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
பின்னர் கலைந்து கிடந்த போர்வையை மடித்து வைத்துவிட்டு காலை கடனை முடித்தவனுக்கு காபி குடித்தே ஆகவேண்டும் என மசமசத்த மூளை செல்கள் கட்டளையிடவும் சமையலறைக்குள் புகுந்தான்.
அங்கே அவனை வெறுமை மட்டும் தான் வரவேற்றது. வழக்கமாக இந்நேரத்தில் கிளச்சில் அடக்கப்பட்ட கூந்தலுடன் அஷ்டாவதானம் செய்து சமையல்கலை வல்லுனியாக தன்னை நிலைநிறுத்த போராடும் அவனது மனைவி தான் அங்கே ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பாள்.
உள்ளே நுழைந்ததும் “காபி வேணுமா? ஜஸ்ட் டூ மினிட்ஸ்டா” என்று இரண்டு விரல்களைக் காட்டி தலையைச் சரித்துவிட்டு பாலைச் சுட வைப்பாள்.
காபி குடித்ததும் “கப்பை ஷிங்ல போடுடா… டேப்பை ஒழுங்கா க்ளோஸ் பண்ணு… உடனே மொபைலை எடுத்துக்கிட்டு டைம் வேஸ்ட் பண்ணாம குளிச்சு ரெடியாகு” என்று கட்டளைகள் பறக்கும்.
அவள் சொன்ன அனைத்தையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கு செல்லும் உடையலங்காரத்துடன் அவன் வந்து நிற்கும் போது உணவு மேஜையில் எளிமையாக அவளது கைமணத்தில் ஏதாவது காலையுணவு காத்திருக்கும்.
அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவளது வழக்கமான டாப் லெகின்ஸ், விரித்த கூந்தல் அலங்காரத்துடன் வருபவள் தனக்கும் ஒரு தட்டில் அதை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிட ஆரம்பிப்பாள்.
சில நேரங்களில் அவளுக்காக அவன் காத்திருக்கவும் செய்வான். இருவரும் அரட்டைக்கச்சேரியுடன் காலையுணவை சாப்பிட்டு விட்டு மதியத்திற்கும் அவள் சமைத்ததை எடுத்துக்கொண்டு கிளம்புவர்.
இது தான் அந்த வீட்டில் கடந்த எண்பது நாட்களில் வாடிக்கையாக தென்படும் காட்சி. ஆனால் கடைசி மூன்று நாட்களில் இவை அனைத்தும் மிஸ்சிங்.
இதோ இந்த வெறுமை மட்டுமே அங்கே நீக்கமற நிறைந்துள்ளது. அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. எந்திரம் போல காபி பொடியையும் சர்க்கரையையும் எடுத்தவன் ப்ரிட்ஜிலிருந்து எடுத்த பாலை சுட வைத்தான்.
அவள் சொல்வது போல இரண்டு நிமிடத்தில் தயாரான காபி அவனுக்கு வெந்நீரைப் போன்றிருக்கவே அடுத்த நொடி காபி கோப்பை ஷிங்கில் சென்று அமர்ந்தது.
காலையுணவுக்கு என்ன செய்வது? கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வு. ஸ்விகி ஜொமேட்டோ என அலைபாய்ந்த மூளைக்குள்ளும் அவன் மனைவி வந்து சென்றாள் “இனிமே வீட்டுச்சாப்பாடு தான்” என்று மிரட்டியபடி.
“போடி நீ சொன்னா நான் கேக்கணுமா?” என்று முரண்டிக்கொண்டு ஸ்விகியில் எளிய காலையுணவையும் மதியவுணவையும் ஆர்டர் செய்துவிட்டு குளிக்கச் சென்றுவிட்டான்.
குளித்து அலுவலகத்துக்குத் தயாரானவனின் ஃப்ளாட் அழைப்புமணி இசைக்கவும் கதவைத் திறந்தவன் ஸ்விகி ஊழியர் “சார் யுவர் ஆர்டர்” என்றபடி உணவுப்பொதியை நீட்டவும் வாங்கிக்கொண்டான்.
மறக்காமல் ரேட்டிங் கொடுக்கும்படி சொல்லி சென்றவருக்கு அளித்த நம்பிக்கையைச் சிதைக்க விரும்பாதவனாக அவரது சேவைக்கு ஐந்து நட்சத்திரங்களை செயலியில் கிளிக்கிவிட்டு மொபைலை உணவு மேஜையில் வைத்தவனின் மனம் மீண்டும் போய் நின்ற இடம் அவள் தான்.
“ஆன்லைன் ஃபுட் டெலிவரி பண்ணுறவங்க நம்ம கிட்ட சொத்தையா எழுதி கேக்குறாங்க? ஜஸ்ட் ரேட்டிங் தானே… இவ்ளோ ஹெவி ட்ராபிக்ல அடிச்சு பிடிச்சு ஓடி வந்து, முக்கு முடங்குல இருக்குற நம்ம வீட்டை அலைஞ்சு திரிஞ்சு கண்டுபிடிச்சு சரியான டைமுக்கு குடுக்குறவங்களுக்கு நம்மளால ரேட்டிங் கூடவா குடுக்க முடியாது?”
சொன்னவள் சாட்சாத் அவனது மனைவி தான். உடனே அவனது மனம் அவளின் பிரசன்னத்திற்கு ஏங்கியது. அந்த ஏக்கம் கைகளில் இருந்த சாம்பார் ப்ளஸ் சட்னி கலவையில் குளித்துக் கொண்டிருந்த மினி இட்லிகளைக் கண்டதும் இன்னும் பிரவாகமாய் எழுந்தது.
அது அவளது விருப்ப உணவு அல்லவா! செங்கோட்டையில் ஆச்சி வீட்டில் தினந்தோறும் அவளுக்காக இட்லி சாம்பார் வைத்த நாட்களும் உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் இளம்பருவத்தினர். காலையில் எழுந்ததும் தாத்தாவுடன் தோட்டத்தில் சுற்றுபவர்கள் பின்னர் குளிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஆற்று நீரில் ஆட்டம் போட்டுவிட்டு வந்தால் அவர்களுக்காக கொத்துமல்லி தழை அலங்காரத்துடன் காத்திருக்கும் இட்லி சாம்பார்.
அனைவரும் சாப்பிட்டு எழுந்த பிறகும் கூட “ஆச்சி இன்னும் ரெண்டு இட்லிய சாம்பார்ல மிதக்க விட்டு குடு” என்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருப்பாள் அவள்.
பழைய நினைவுகளை அசை போட்ட மனது பெருமூச்சை வெளியிட்டது.
விரல்கள் இட்லியை விண்டு வாய் வழியே வயிற்றுக்குள் அனுப்பிய தருணத்தில் மனைவியின் கையால் செய்த அரைகுறை சமையலுக்கு அவன் நாவு ஏங்கியது என்னவோ உண்மை!
அவளுக்கு சமைப்பதில் மசாலா அளவு பற்றி தெரியாதிருக்கலாம்! ஆனால் அவனுக்காக அவள் எடுக்கும் மெனக்கெடல் அந்த சமையலைச் சுவையாக்குமே!
“அடேய் அந்தச் சமையலை தான அரைகுறையா வெந்ததும் வேகாததுமா செய்யுறானு நாலு நாளுக்கு முன்னாடி ஒரு குத்தமா சொல்லி ஜாபை ரிசைன் பண்ண வச்ச? இப்போ உங்க நாக்கு ஏங்குதோ?”
நேரங்கெட்ட நேரத்தில் மனசாட்சி வேறு அவனை இடித்துரைக்க மினி இட்லிகள் சாம்பார் சட்னியுடன் குப்பைத்தொட்டியிடம் அடைக்கலம் புகுந்துகொள்ள வீட்டிலிருந்த வெறுமை வயிற்றையும் ஆக்கிரமித்துக் கொள்ள மனைவியின் நினைவுகளுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினான் சின்னா.
அங்கே நுழைந்ததும் அலுவலக வேலைகள் மனதை ஆக்கிரமித்துக் கொள்ள மனைவியின் நியாபகம் சற்றே விலகியது. மனமும் ஏக்கமடங்கி நிர்மலமானது.
அப்போது அவனது நிதித்துறையில் பணியாற்றும் உதவி கணக்காளரான பெண்மணி அன்று தாமதமாக அலுவலகத்திற்கு வரவும் அவன் கேட்ட ரிப்போர்ட்களும் தாமதமானது. கூடவே அவற்றில் சில தவறுகள் வேறு இருக்கவே அந்தப் பெண்மணியை எண்ணெய் இன்றி வாணலி இன்றி வறுக்க ஆரம்பித்தான் சின்னா.
“இஷ்டத்துக்கு லேட்டா வர்றதுக்கு இது ஒன்னும் சத்திரம் சாவடி இல்ல சஹானா… தயவு பண்ணி சாக்குப்போக்கு சொல்லாதீங்க ப்ளீஸ்”
“இல்ல சார் வீட்டுல கொஞ்சம் பிரச்சனை” என்று இழுத்தவரிடம்
“வீடுனு இருந்தா பிரச்சனை இருக்கத் தான் செய்யும் சஹானா… அதுக்குனு ஆபிசை மறந்துடுவீங்களா? ஆபிசுக்குள்ள நுழைஞ்சதும் உங்க கவனம் முழுக்க வேலல இருக்கணுமே தவிர மத்த எதையும் நினைச்சு வேலைய கோட்டை விடக்கூடாது… திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்” என்று கடுகடுத்து அனுப்பி வைத்தான் அவன்.
அப்போது அங்கே வந்த அவனது சகபணியாளனும் நண்பனுமான விவேக் “ஏன்டா காத்தாலயே எல்லாரையும் பிடிச்சு கடிச்சு வைக்கிற? என்ன பிரச்சனை உனக்கு? ஆபிசுக்கு வந்துட்டா வீட்டை மறந்துடணுமா?” என்று அப்பெண்மணிக்கு பரிந்து பேச
“ஆமாடா! இந்த ஆபிஸ் தானே வேலையும் குடுத்து சம்பளமும் குடுக்குது… அப்போ முழுக்கவனமும் இங்க இருக்குறது தானே நியாயம்” என்றான் சின்னா.
“டேய் நீ சொல்லுற மாதிரி ஒர்க்கஹாலிக்லாம் இப்போ யாருமில்லடா… முடிஞ்சளவுக்கு தட்டிக் குடுத்து வேலை வாங்கப் பாரு” என்று கூற ‘ஒர்க்கஹாலிக்’ என்ற ஒற்றை வார்த்தை மீண்டும் அவனுக்கு குட்டிமாவை நினைவூட்டியது.
அலுவலகத்திற்குள் சென்றால் இடியே விழுந்தாலும் அவளது கவனம் உணவு இடைவேளை தவிர மற்ற நேரங்களில் மொபைல் பக்கம் செல்லாது. வேலையில் அத்துணை கண்ணும் கருத்துமாக இருப்பவள் அவள்.
வேலை நேரத்தில் சொந்த விசயங்களைப் பேசுவதெல்லாம் அவளது அகராதியில் மாபெரும் தவறு! அவளின் இந்தக் குணத்தைத் தான் ராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணமாக கூறியிருந்தான் அவன்.
ஆனால் இன்று அவனே ஒரு பணியாளரிடம் வேலை நேரத்தில் சொந்த விசயத்தை மனதில் போட்டு உளப்பிக்கொள்ளக்கூடாதென கட்டளையிட்டிருக்கிறான்.
“உன்னோட சப்-ஆர்டிணேட்கு ஒரு நியாயம், உன் பொண்டாட்டிக்கு ஒரு நியாயமா? இப்போவாச்சும் ஒர்க்கஹாலிக்கா இருக்குறது ஒன்னும் பெரிய குத்தமில்லனு புரிஞ்சுக்கோடா”
அவனது மனசாட்சி கூட குட்டிமாவிற்கு தான் ஆதரவாய் நின்றது. சின்னாவிற்கு அப்போது தான் குட்டிமாவின் பக்கம் இருக்கும் நியாயம் புத்தியில் உறைத்தது. தனது அழைப்பை ஏற்காததற்கு தான் அவளிடம் கத்தியது அதிகப்படியோ என்ற பட்டிமன்றம் இப்போது அவனுக்குள் ஆரம்பித்தது.
இந்நிலை மாலை வரை நீடித்தது. அந்த மாதத்திற்கு தேவையான மளிகை ஜாமான்களை வாங்குவதற்கு சூப்பர் மார்கெட்டிற்கு சென்றவனை அவன் மனைவியின் சகப்பணியாளப்பெண்மணி பார்த்து விட்டார்.
“சார் நீங்க தேவி மேடமோட ஹஸ்பெண்ட் தானே?”
பணியிடத்தில் அவளை தேவி என்றே அழைப்பார்கள் என்பது சின்னாவிற்கு தெரியுமென்பதால் ஆமென தலையசைத்தவன் “நீங்க?” என்று இழுக்க
“நான் ரெஜினா… தேவி மேடமோட கொலீக்… மேடம் வராம எங்க அக்கவுண்ட்ஸ் செக்சன் டல்லடிக்குது சார்… அந்த செக்சனுக்கு நான் நியூவா ஜாயின் பண்ணுனப்ப கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்துச்சு… அப்போ தேவி மேடம் தான் எனக்கு எல்லா வேலை நுணுக்கத்தையும் கத்து குடுத்தாங்க” என்றார் அவர்.
“யா! ஷீ இஸ் அ குட் ட்ரெய்னர்”
“நல்ல கொலீக்கும் கூட… ஈகோ இல்லாம பழகுறதுல அவங்களை அடிச்சுக்க ஆளே இல்ல சார்… ஆனா ஏன் திடீர்னு ஜாபை ரிசைன் பண்ணுனாங்கனு தான் புரியல… அவங்க ரொம்ப அவசரப்பட்டுட்டாங்கனு மட்டும் புரியுது… இன்னும் எம்.டி சாருக்கு அவங்க இடத்துல இன்னொரு ஆளை அப்பாயிண்ட் பண்ண இஷ்டமில்ல… நீங்க கொஞ்சம் அவங்க கிட்ட பேசி அவங்க மனசை மாத்த முடியுமா சார்? அவங்களோட புரொபசனுக்கு நீங்க ரொம்ப சப்போர்ட்டா இருப்பீங்கனு மேடம் அடிக்கடி சொல்லுவாங்க”
அந்தப் பெண்மணி சொன்னதும் முகத்தில் அறை வாங்கியது போல உணர்ந்தான் சின்னா. எப்படி அவரிடம் கூறுவான் நான் தான் அவள் ராஜினாமா செய்ததற்கும் காரணமென்று.
“கண்டிப்பா திடீர்னு எடுத்த முடிவா தான் இருக்கும் சார்… ஏன்னா அவங்க ரிசைன் பண்ணுறதுக்கு முந்துன நாள் ஈவினிங் வீட்டுக்குக் கிளம்புறப்ப கூட பிரிஞ்சி ரைஸ் எப்பிடி பண்ணணும்னு என் கிட்ட ரெசிபி கேட்டுட்டிருந்தாங்க”
அதைக் கேட்டதும் அவனது குற்றவுணர்வு இன்னும் அதிகமானது. ஏனெனில் அவனுக்கு பிரிஞ்சி என்றால் கொள்ளை இஷ்டமென சொல்லியிருந்தானே!
தனக்காகவே யோசித்த மனைவியைக் காயப்படுத்தி அவளை இங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் செல்லும் மனநிலைக்குத் தள்ளிவிட்டோமோ என்று அவனது மனம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
அப்பெண்மணியிடமிருந்து விடைபெற்றவன் கனத்த இதயத்துடன் காரில் அமர்ந்து யோசித்தான். சூப்பர் மார்க்கெட் வாயிலில் குல்பி ஐஸ் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது.
“ஐ! குல்பி ஐஸ்… வாங்கி குடுடா ப்ளீஸ்”
அடைமழை நாளில் இதே இடத்தில் நின்ற காரிலிருந்து அவள் அடம்பிடித்ததும் அவன் மழையில் நனைந்தபடி ஓடிச்சென்று வாங்கி வந்ததும் இடையிலேயே அவளும் நனைந்தபடி ஓடி வந்து அவனிடமிருந்து குல்பியை வாங்கியதும் திரைப்படம் போல கண் முன் ஓடியது.
இதே இடத்தில் கொட்டும் மழையில் குல்பியை ருசித்தபடி நனைந்து கொண்டே காருக்கு ஓடிவந்த நினைவலைகள் அவனது இதழில் சிரிப்பையும் கண்களில் கண்ணீரையும் இதயத்தில் ஏக்கத்தையும் ஒருங்கே உண்டாக்க யோசனைவயப்பட்டவனாக காரைக் கிளப்பினான் சின்னா.
மீண்டும் வெறுமை சூழ்ந்த வீடு அவனை விரக்தியாய் வரவேற்றது. அதை முழுமையடையச் செய்பவள் தான் பல மைல் தொலைவுக்கு அப்பால் அவனைப் பற்றிய சிந்தனையே இல்லாது விடுமுறைக்குச் சென்ற குழந்தையாய் பாட்டி வீட்டில் சீராடிக் கொண்டிருக்கிறாளே என்று ஆதங்கப்பட்டுக்கொண்டபடியே உடையை மாற்றி முகம் கழுவிவிட்டு மனைவியின் மொபைலுக்கு அழைக்கலாமா வேண்டாமா என்று இரட்டைமனமாக அல்லாடினான்.
இறுதியில் அழைத்தே விட்டான். எங்கே தன்னைப் போலவே அமைதியாய் இருந்து அவளும் வதைப்பாளோ என்று ஒரு கணம் தயங்கியவனின் மனதில் சாரலை வீசியது “ஹலோ! சொல்லு சின்னா” என்ற குட்டிமாவின் குரல்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

