சலசலத்து ஓடும் குண்டாற்றின் நீரோட்டத்திற்கு எதிராக புஷ்பம்மாள் துணியை அலசுவதை வேடிக்கை பார்த்தபடி படித்துறையில் அமர்ந்து கால்களை நீரில் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவள். நீரின் ஜில்லிப்பு கால்களினூடே உடலுக்குள் பரவி அந்தக் காலைப்பொழுதின் குளுமையில் இன்னும் இருபது சதவிகிதத்தை இலவச இணைப்பாக அளித்ததைப் போல உணர்ந்தாள்.
“குட்டிமா நீ சின்னப்புள்ளையா இருக்கச்ச ஒரு தடவை இதே படிக்கட்டுல பின்னாடி பாக்க உக்காந்து விளையாடுறேனு சொல்லி தண்ணிக்குள்ள விழுந்துட்ட… அது உனக்கு ஞாபகம் இருக்குதா?”
புஷ்பம்மா கேட்டதும் குட்டிமாவிற்கு சிறுவயதில் ஜலப்பிரவாகத்தினுள் விழுந்து மூக்கு மற்றும் வாயை குண்டாறு தண்ணீருக்கு வாடகைக்கு விட்ட நினைவு மெதுவாய் மூளைக்குள் அலையடித்தது.
களுக்கென்று நகைத்தவள் “ஆமாக்கா நல்லா ஞாபகம் இருக்கு… அப்பா மட்டும் வந்து என்னைத் தூக்கலனா நான் அப்போவே குண்டாத்து தண்ணில ஜலச்சமாதி ஆகிருப்பேன்” என்று கூற
“அட கழுதை! வாய கழுவு… கல்யாணம் ஆகி மூனு மாசம் கூட முழுசா முடியல… அதுக்குள்ள உன் வாய்ல நல்ல நல்ல வார்த்தைலாம் வருது பாரேன்… எல்லாம் பெரியம்மா குடுக்குற செல்லம்” என்றபடி அள்ளி முடிந்த கொண்டையும் குண்டாற்றின் நீரில் நனைந்த பெரிய கட்டம் போட்ட காட்டன் சேலையுமாக அவளைக் கடிந்த புஷ்பம்மாவிற்கு நடுத்தர வயது தான்.
தென்மலையில் பணியாற்றிய கணவனை இளம்வயதிலேயே இழந்து பிறந்த ஊரான செங்கோட்டைக்குப் பிழைப்புக்காக வந்தவரை அரவணைத்துக் கொண்டவர் இப்போது அவரால் பெரியம்மா என்று அழைக்கப்படும் தூரத்து உறவினரும் குட்டிமாவின் பாட்டியுமான செண்பகம் தான். குட்டிமாவை குழந்தை பிராயத்திலிருந்து தூக்கி வளர்த்தவரும் புஷ்பம்மா தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அந்த உரிமையில் தான் அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் அவர்.
அப்போது “புஷ்பா காத்தாலயே என்னடி அரட்டை? இன்னுமா துணிய அலசி முடிக்கல?” என்ற வெண்கலக்குரல் ஈஸ்வரபவனத்திலிருந்து கேட்டது.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் குட்டிமாவின் பாட்டியும் அந்த ஈஸ்வரபவனத்தின் உரிமையாளினியும் புஷ்பம்மாவின் பெரியம்மாவுமான செண்பகம் தான்.
இன்னும் நான்கு வருடங்களில் எண்பதைத் தொடப் போகிறார் என்று கற்பூரம் அடித்துச் சொன்னால் கூட அவரைக் காண்பவர்கள் அறுபதுக்கு மேல் மதிக்க மாட்டார்கள்.
எல்லாம் அந்தக் கால உணவு என்று பெருமையோடு கூறிக்கொள்பவர், மகள் வயிற்று பேத்தியும் புஷ்பம்மாவும் துணி துவைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள ஆற்றிற்கு சென்று இரண்டு மணி நேரங்கள் கடந்து விட்டதால் பூஜையறையிலிருக்கும் வெண்கல சொம்போடு வீட்டின் பின்பக்க தோட்டத்தை நோக்கி நடைபோட்டார்.
அது அவரது கணவரின் தந்தை கட்டிய பழங்காலத்து வீடு. அப்போதே வீட்டிலிருப்பவர்கள் குளிக்கும் வகையில் பின்பக்கம் ஓடிய ஆற்றின் கரையில் படிக்கட்டையும் கட்டி வைத்துவிட்டார். அது அவர்களது குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் பகுதி என்பதால் மரங்கள் அடர்ந்த அப்பகுதியை முன்பு பெண்கள் குளிக்க உபயோகித்து வந்தனர்.
ஆனால் ஈஸ்வரமூர்த்தியின் காலத்தில் தோட்டத்தில் கிணறு தோண்டப்பட்டதும் அந்த ஆற்றங்கரையானது துணி துவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
மிச்சமிருக்கும் நேரங்களில் அவரது ஏழு புத்திரச்செல்வங்களும் விளையாடும் இடமும் அது தான். பின்னாட்களில் அவரது பேரப்பிள்ளைகளுக்கும் அதுவே விளையாடுமிடமாய் மாறிப்போனது.
அவர்களில் குட்டிமாவிற்கு அந்த ஆற்றங்கரை படிக்கட்டில் அமர்ந்து நீரில் கால்களை அடித்தபடி தோட்டத்து மாங்காய் நெல்லிக்காயைச் சுவைப்பது, புஷ்பம்மாவிடம் வம்பிழுத்தபடி நதி நீரை அவர் மீது ஊற்றி விளையாடுவது எல்லாம் விருப்பமான பொழுதுபோக்கு.
இதோ திருமணமாகி கிட்டத்தட்ட எண்பத்திரண்டு நாட்கள் கழித்து பாட்டியைக் காண வந்திருந்த சமயத்திலும் ஆற்றங்கரை படிக்கட்டும் புஷ்பம்மாவும் அவளை விடவில்லை.
“ஆத்து தண்ணில விளையாண்டா ஜலதோசம் பிடிச்சிக்கும்னு சொன்னாலும் இந்தக் குட்டிமா கேக்கவே மாட்டா… முன்னவாச்சும் நம்ம வீட்டுப்பொண்ணு… இப்போ கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்குப் போயாச்சு… அவ மாமியாருக்கு மருமகளோட நகத்துல அடிபட்டா கூட கண்ணுல ஜலம் வந்துடும்… இதுல இவ ஜலதோசத்தை இழுத்து வச்சுட்டானா அவளுக்கு ஜன்னியே கண்டுடும்… மகாதேவா இந்தப் பொண்ணுக்கு எப்போ தான் பொறுப்ப குடுக்கப் போற?”
தன் போக்கில் எல்லாம் வல்ல ஈசனிடம் புலம்பியபடி பூஜையறையில் தண்ணீர் வைத்திருக்கும் வெண்கலச்சொம்புடன் தோட்டத்து கேட்டை தாண்டி ஆற்று படிக்கட்டை அடைந்திருந்தார் செண்பகம்.
குட்டிமா அரவம் கேட்டுத் திரும்பி பார்த்த போது அப்போது தான் மெதுவாய் செங்கோட்டை மண்ணை முத்தமிட உதித்திருந்த ஆதவனின் கதிர்கள் பட்டு காதுகளிலிருந்து வைரத்தோடுகள் வெட்டி மின்ன நெற்றியில் திருநீறு துலங்க நின்று கொண்டிருந்தார் அவளது பிரியத்துக்குரிய ஆச்சி.
“என்ன தண்ணில ஆட்டம் போட்டாச்சா? போட்டிருந்த நைட் டிரஸ் ஃபுல்லா ஈரமாயிட்டு… சந்திரகலா மட்டும் உன்னை இப்போ பாத்தானு வையேன், ஆச்சி வீட்டுக்குச் சீராட வந்த என் மருமகளை இப்படி தண்ணில விளையாட விட்டு வேடிக்கை பாக்கீங்களே அத்தைனு என்னைத் தான் குறை சொல்லுவா” என்று முழங்கினார் செண்பகம்.
புஷ்பம்மா துணிகளை பிழிந்து டப்பில் வைத்தவர் “மெட்ராசு ஊர்ல ஆறு இல்லாத குறைக்கு இங்க வந்து விளையாடுறானு உங்க அண்ணன் மகளைச் சமாதானம் செய்யுங்க பெரியம்மா… அதுக்குனு குட்டிமா தண்ணில விளையாடாம இருக்கணுமா?” என்று குட்டிமாவிற்கு பரிந்துகொண்டு வர
“அடியே நீ குடுக்குற செல்லம் தான் இவ இன்னும் விளையாட்டுப்பொண்ணாவே இருக்கா… நீ துணி துவைச்சதும் இவ அதுக்கு உதவுனதும் போதும்… ஒழுங்கா போய் துணிய உலற வை… இவளுக்கு மாங்கா பச்சடி பிடிக்குமேனு நேத்தே மணி கிட்ட சொல்லி நாலு மாங்காவ பறிச்சு வச்சிருக்கேன்… சீக்கிரம் சமையல் வேலைய ஆரம்பி… நானும் ரெண்டு பதிகத்தை படிச்சுட்டு வந்துடுறேன்” என்று படபடவென பொறிந்தவர் படிக்கட்டில் இறங்க அதற்குள் எழுந்த குட்டிமா அவரிடமிருந்து சொம்பினை வாங்கிக் கொண்டாள்.
“என்னடிமா பண்ணுற? பூஜைக்கு ஜலம் வேணும் குட்டிமா”
“தெரியுது ஆச்சி… ஏன் நான் ஜலம் மொண்டு குடுத்தா உன் மகாதேவன் வேண்டானு சொல்லிடுவாரா?”
ஏட்டிக்குப்போட்டியாய் பேசியபடி துணி துவைத்த கசடு நீங்கி ஸ்படிகமாய் ஜொலித்த குண்டாற்றின் நீரை வெண்கலச் சொம்பில் எடுத்துக்கொண்டவள் செண்பகத்திடம் நீட்டினாள்.
அதை வாங்கிக் கொண்ட செண்பகம் புஷ்பம்மா டப்பினை எடுத்துக் கொள்ளவும் “ஹூம்! என் மாமனார் இருந்தப்ப காத்தால நதிக்குப் பூஜை பண்ணாம யாரும் படிக்கட்டுல காலை வைக்க விடமாட்டார்… அது ஒரு காலம்… இப்போ அதெல்லாம் பொறுப்பா பாத்துக்க இங்க யார் இருக்கா?” என்று பெருமூச்சு விட்டபடி வீட்டை நோக்கி நடக்க
“இதுல்லாம் டூ மச் ஆச்சி… இந்த ஆத்துக்குப் பூஜை பண்ணுறதுக்காக என்னோட ரெண்டு மாமாவும் அவங்க வேலைய விட்டுட்டு செங்கோட்டைல இருக்கணும்னு சொல்லுறீயே… இது உனக்கே ஓவரா தெரியலயா செண்பா?” என்று ஈஸ்வரமூர்த்தி அழைக்கும் பெயர்சுருக்கத்தைச் சொல்லி குட்டிமா கேலி செய்யவும்
“வாலுப்பொண்ணு… இன்னும் வாய் குறையல உனக்கு… எல்லாம் சின்னா குடுக்குற செல்லம்” என்று போலியாய் அலுத்துக்கொண்டார் செண்பகம்.
சின்னா என்ற பெயரைச் சொன்னதும் பிரேக் போட்டது போல நின்றாள் குட்டிமா.
புஷ்பம்மாவும் செண்பகமும் அவனைப் பற்றி பேசியபடி முன்னே சென்றுவிட அவளோ அங்கேயே தான் நின்றாள்.
இன்றோடு மூன்று நாட்கள் கழிந்துவிட்டது அவள் சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு வந்து. இன்று வரை அவனிடமிருந்து ஒரு மொபைல் அழைப்பு இல்லை. மெசேஜ் இல்லை. இவ்வளவு ஏன் பார்க்கும் நேரத்தில் எல்லாம் ‘ஆன்லைன்’ என்று பின்மொழி காட்டும் வாட்சப்பில் ‘ஆர் யூ ஓகே பேபி?” என்று விளையாட்டாய் எப்போதும் கேட்கும் அவனது வழக்கமான விசாரிப்பு கூட இல்லை!
மறந்தே விட்டான் அல்லவா! மறக்காமல் எப்படி இருக்கும்! மூன்று வேளை நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போட்டு பணிவிடை செய்து கணவனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் சராசரி மனைவியாக அவள் இருந்திருந்தால் கண்டிப்பாய் ஞாபகம் இருந்திருக்கும் அவனுக்கு!
ஆனால் குட்டிமாவிற்கு அதை தாண்டியும் நிறைய கடமைகள் இருந்ததே! அதில் முக்கியமானது அவள் செய்யும் ‘ஜூனியர் அக்கவுண்டெண்ட்’ வேலை! அந்த வேலை அவளது நாளில் எட்டுமணி நேரத்தை தனதாக்கிக் கொள்ள மிச்சமிருக்கும் பதினாறு மணி நேரங்களை ஆக்கிரமித்துக் கொண்டவன் சின்னா தான்!
ஆனால் அதிலும் அவனுக்கு மனக்குறை வந்த போது தான் குட்டிமா குழம்பிப் போனாள்.
இத்தனைக்கும் அவனும் நிதிப்பிரிவில் உதவி மேலாளராக பிரபல டயர் கம்பெனியில் பணி புரிந்து ஐம்பதில் ஆரம்பிக்கும் ஐந்திலக்க சம்பளம் பெறுபவன். பட்டயக்கணக்காளராக தேர்ச்சி பெற்றவனும் கூட.
நிதி மற்றும் கணக்குப்பிரிவில் இருக்கும் வேலைச்சுமையை அறிந்த அவனே “உனக்கு வர வர என்னை விட உன் ஜாப் முக்கியமா போயிடுச்சுல்ல… யூ ஆர் இக்னோரிங் மீ… இதுக்கு நீ உன்னோட பி.ஜிலயே இருந்திருக்கலாம்… இங்க புருசன் பொண்டாட்டி குடித்தனம் நடத்துற மாதிரி தோணல… ரெண்டு பேச்சிலர் பசங்க ஒரு அப்பார்ட்மெண்டை ஷேர் பண்ணிக்கிட்ட ஃபீல் தான் வருதுடி” என்று எரிச்சல் மண்ட கடிந்து கொண்டதில் தான் பிரச்சனையே ஆரம்பித்தது.
“என்னடா பேசுற நீ? ஒரு ஒய்பா என்னோட கடமைய நான் செஞ்சுட்டு தானே இருக்கேன்… காலைல ஆபிஸ் கிளம்புற அவசரத்துலயும் பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச்னு தனித்தனியா சமைச்சு அதுவும் உனக்குப் பிடிக்குமா பிடிக்காதானு யோசிச்சு சமைச்சு வீட்டை க்ளீன் பண்ணீட்டுத் தானே கிளம்புறேன்… ஈவினிங் வந்ததும் டின்னருக்கு நீ ஹெல்ப் பண்ணுற… ஒருவேளை நம்மளை வேலை வாங்குறானு தோணுதா உனக்கு?”
பதிலுக்கு அவளும் குரலை உயர்த்த புதுமண தம்பதிகளுக்கிடையே முதல் சண்டை இனிதே பிள்ளையார்சுழியுடன் ஆரம்பித்தது.
அதன் முடிவில் “உன்னால வேலையயும் வீட்டையும் ஒரே நேரத்துல கவனிக்க முடியாது… நீ ஜாபை ரிசைன் பண்ணிடு” என்றான் சின்னா.
அவன் சொன்னதும் முதலில் குட்டிமாவிற்கு என்ன பதிலளிப்பது என்றே புரியவில்லை.
“என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறீயா நீ? நான் ஜாப்கு போறதால உனக்கு இப்ப என்ன நஷ்டமா போயிடுச்சு?” என்று அவனிடம் கேட்க
“எனக்குப் பெரிய நஷ்டம் தான்… காத்தால மெஷின் மாதிரி அரக்கப் பறக்க வெந்ததும் வேகாததுமா நீ ஆக்கிப்போடுறத சாப்பிட்டுட்டு அதையே மதியத்துக்கும் எடுத்துக்கிட்டு ஓடிப்போற வாழ்க்கைய வாழணும்னு எனக்கு என்ன விதியா? கொஞ்சம் யோசி, நீ வேலைக்கே போயே தீரணும்னு நமக்கு எந்தக் கட்டாயமும் இல்லடி குட்டிமா… என் சேலரிய வச்சு நம்மளால ஹைஃபையான லைஃபை வாழ முடியும்… அப்புறம் எதுக்கு இவ்ளோ டென்சனோட நீ ஓடணும்?” என்று பதிலளித்தான் சின்னா.
அதை கேட்டதும் தான் குட்டிமாவிற்கு கோபம் உச்சந்தலையில் நர்த்தனம் ஆடத் துவங்கியது.
“சோ ஏதோ ரெண்டு நாள் சாதம் குழைஞ்சு போனதுக்கும், க்ரேவில உப்பு காரம் கூடுனதுக்கும் நான் வேலைய ரிசைன் பண்ணுறது தான் சொல்யூசன்னு தி கிரேட் சின்னா சொல்லுறார்… வாவ்! எனக்கு அப்பிடியே புல்லரிச்சு போச்சு தெரியுமா?” என்று போலியாய் சிலாகித்தவளின் குரல் கோபத்தை மறைத்து வைத்திருந்ததை அவன் மட்டும் அறியாதிருப்பானா என்ன?
அறிந்தும் அவன் பின்விளைவுகளைப் பற்றி யோசியாது பேசிவிட்டான்.
“ரெண்டு நாளா? ஏய் நீ வந்து இந்த ரெண்டு மாசம் இருபது நாள்ல ஒரு நாளாச்சும் நம்ம ஒழுங்கா சாப்பிட்டிருப்போமா? சாப்பாடை விடு… வீட்டைப் பாரு… அந்த மூலைல இருக்குற பேஸ்கட்ல துவைக்காத துணி மலை மாதிரி குவிஞ்சு கிடக்குது… நான் மானிங் குளிச்சிட்டு பெட்ஷீட்ல போட்டுட்டு போன ஈர டவல் ஈவினிங் வரைக்கும் அங்கயே தான் கிடக்குது… சந்தேகமா இருந்தா பெட்ரூமை போய் பாரு… பால்கனி ப்ளான்ட்சுக்கு தண்ணி ஊத்தி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகுது… இப்பிடி எல்லாமே இர்ரெகுலரா நடக்குறதுக்கு காரணம் நீ ஆபிசுக்குப் போற அவசரத்துல வீட்டை கவனிக்காதது தான்… சரி ஆபிஸுக்குப் போனதுக்கு அப்புறம் நீ சேஃப்டியா போய் சேர்ந்தியா இல்லயானு தெரிஞ்சுக்க கால் பண்ணுனா முப்பத்திரண்டு தடவை மிஸ்ட் கால் ஆனதுக்கு அப்புறம் அட்டெண்ட் பண்ணுற… கேட்டா ஒர்க்கஹாலிக்னு சொல்லுவ… கேரிங், லவ், பாண்டிங் எதுவுமில்லாம ரோபோ மாதிரி ஓடவைக்கிற அந்த வேலை உனக்கு வேண்டாம்… ரிசைன் பண்ணிடு”
“வெயிட் அ மினிட்… நீ சொல்லுற அந்த துணி மலை, பால்கனி ப்ளாண்ட்ஸ், அரைகுறை சமையல் இதுல்லாம் உன் பேச்சிலர் லைஃப்ல நீ அனுபவிச்சதே இல்லயா? அப்போலாம் அதுக்காக டென்சன் ஆகி நீ உன்னோட ஜாபை ரிசைன் பண்ணுனியா? புரமோசன் மேல புரமோசன் வாங்கி அசோசியேட் மேனேஜரா ஜம்முனு உக்காந்திருக்க தானே… ஆனா நான் மட்டும் ஜி.எஸ்.டி ஃபைலிங் டியூ டேட்ங்கிறதால உண்டான டென்சன்ல ஒரு நாள் ஒரே ஒரு நாள் கொஞ்சம் விட்டேத்தியா இருந்ததுக்காக ரெசிக்னேசன் வரைக்கும் போகணும்… எந்த ஊர் நியாயம் இது?”
இருவரும் மாறி மாறி வாதம் செய்ததன் விளைவு அடுத்த நாள் ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பி வைத்த குட்டிமா பத்து நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பாட்டி வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
கிளம்பும் போது ஏனோ அவனிடம் சொல்ல வேண்டுமென தோணவில்லை. ஆனால் ஈஸ்வரபவனத்தில் வந்து செண்பகத்தின் கையால் காபி அருந்தியவளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே “ஊருக்குப் போறப்ப நீ தனியா தான் போகணுமா? உன்னை அழைச்சிட்டுப் போக சின்னா வர மாட்டானா?” என்பது தான்.
நான் வந்ததே அவனுக்குத் தெரியாது என்று அவளால் எப்படி பதிலளிக்க முடியும்? இருப்பினும் பத்திரமாக செங்கோட்டைக்கு வந்து சேர்ந்துவிட்டதாக அவனுக்கு மொபைலில் அழைத்துச் சொல்லும்படி செண்பகம் வற்புறுத்தவே வேறு வழியின்றி அவனை அழைத்தாள்.
அழைப்பு ஏற்கப்பட்டும் அங்கே மௌனமொழியின் ஆட்சியே நீடிக்கவும் அழைத்தவளே பேச ஆரம்பித்தாள்.
“நான் செங்கோட்டைக்கு வந்துட்டேன் சின்னா”
இப்போதும் அமைதியே நிலவியது.
“ஆச்சி உன் கிட்ட பேசணுமாம்”
பேசுவானா மாட்டானா என சந்தேகத்துடன் தனது மொபைலை செண்பகத்திடம் கொடுத்தவள் அவர் “சின்னா என் ராஜா எப்பிடிடா இருக்க?” என்று வாயெல்லாம் பல்லாக கேட்கவும் சற்றே பதற்றமடைந்தது உண்மை!
செண்பகத்திற்கு சின்னா என்றால் உயிர்! அவரது அண்ணனின் பேரன் அல்லவா! இப்போது பேத்திக்குக் கணவனும் ஆகிவிட இரட்டை உறவுமுறை உரிமையையும் இரண்டு மடங்காக்கியதால் உண்டான பூரிப்பு அவரது முகத்தில் ஜொலித்தது.
அதை தனது மௌனத்தால் கணவன் அழித்துவிடுவானோ என்ற பயம் குட்டிமாவிற்கு. ஆனால் அடுத்த நொடியே குட்டிமாவின் மனசாட்சி அவளது தலையில் நங்கென்று குட்டியது.
“நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டதுக்காக ஆச்சி கிட்ட ஏன்டி அவன் பேசாம இருக்கப்போறான்? இது தான் நீ அவனை லவ் பண்ணி புரிஞ்சுக்கிட்ட லெட்சணமா? உன் எதிர்கால வாழ்க்கை எனக்கு கண்ணாடி மாதிரி துல்லியமா தெரியுதுடி குட்டிமா… பாரு பாட்டி கிட்ட அவன் ஒழுங்கா தான் பேசுறான்… புஷ்பாக்கா கிட்டவும் பேசுறான் போல… உன் புருசன் பெரியவங்களை மதிக்க தெரிஞ்சவன்டி மண்டூகமே”
உடனே நொடித்துக் கொண்டாள் குட்டிமா.
“ஆமா ஆமா.. அவனுக்குப் பெரியவங்களை மட்டும் தான் மதிக்கத் தெரியும்… என்னோட பீலிங்ஸ்லாம் அவனுக்குப் புடலங்கா மாதிரி தானே”
“ஐயே என்னம்மா நீ சும்மா அந்தப் பையனை குறை சொல்லிட்டே இருக்க… நீ வேணும்னா பாரேன், அடுத்து உன் கிட்ட தான் பேசுவான்” என்று அப்போது கூட அவனுக்கு ஆதரவாய் நின்றது அவளது பாழும் மனசாட்சி.
ஆனால் புஷ்பம்மா பேசிவிட்டு அவளிடம் நீட்டிய பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு மறுமுனையில் மீண்டும் மௌனம் குடிகொள்ளவே தன்னருகே நிற்கும் பெரியவர்களுக்குச் சந்தேகம் வந்துவிடக்கூடாதென ஏதோ சிரித்து பேசி மழுப்பிவிட்டு போனை வைத்தவள் தான் அதன் பின்னர் கடந்த இரண்டு தினங்களாக அவனிடம் பேசுகிறேன் என்று செண்பகம் கேட்கும் போது மட்டும் சொன்னாளேயன்றி சின்னா என்ற ஒருவனது நினைவை அவள் கிட்டத்தட்ட ஓரங்கட்டிவிட்டாள்.
இதோ இப்போது ஆச்சியும் புஷ்பம்மாவும் நினைவு படுத்தவில்லை என்றால் அமைதியாய் ஆதங்கத்துடன் அவளது நாள் கழிந்திருக்கும். ஆனால் சின்னா என்ற பெயர் ஒன்று போதும் அவளை யோசனையில் ஆழ்த்தி செயல்படாவிதத்தில் தடுப்பதற்கு.
“குட்டிமா இன்னும் அங்க நின்னு என்ன பண்ணுற? வா பூஜைக்கு நேரமாகுது… வந்து என்னோட பதிகம் பாடு… உன் கூட சேர்ந்து பாடி ரொம்ப நாளாச்சுல்ல… அப்பிடியே புஷ்பம்மாவுக்கு மாங்கா பச்சடி பண்ணுறதுக்கு உதவி பண்ணுடா செல்லம்”
செண்பகத்தின் குரலில் நிகழ்காலத்துக்கு வந்தவள் தற்காலிகமாய் சின்னாவை தன் நினைவுகளிலிருந்து விடுமுறை கொடுத்து அனுப்பினாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

