இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை என பிறர் சொல்லும்போது அது நமக்கு வெறும் பூமர்த்தனமான தத்துவம் மட்டுமே. அதை நாமே அனுபவத்தில் உணரும்போது அந்தத் தத்துவம் எத்துணை உண்மையானது என்பது புரியும். அதிலும் “நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல” என்று அனைவராலும் உதாசீனப்படுத்தப்பட்ட பெண்ணொருத்தியின் வாழ்வில், தனது அன்பால் அரவணைத்து, நேசத்தால் நெக்குருகச் செய்து, காதலையும் கனிவையும் திகட்ட திகட்ட அள்ளித் தரும் நபர் ஒருவர் வரும்போது அவளுக்கு மேற்சொன்ன தத்துவத்தின் அர்த்தமும், வாழ்க்கையின் தாத்பரியமும் முழுமையாக புரியும், எனக்குப் புரிந்தது போல!
–ஆரபியின் சிந்தனை சிதறல்கள்
நதியூர்…
“இந்தா ஆரு உனக்குப் பிடிக்கும்னு மகிழம்பூ தேன்குழல் பண்ணி எடுத்துட்டு வந்தேன்… இதைச் சாப்பிட்டுக்கிட்டே உன் ஃப்ரெண்ட் கிட்ட பேசு”
சிறிய தட்டு நிறைய மகிழம்பூ தேன்குழல்களையும், சூடாக தேநீரையும் ஆரபியிடம் கொடுத்தார் கனிமொழி, சுடர்விழியின் உடன்பிறந்த தமக்கை.
சுடர்விழி நொடித்துக்கொண்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அடுத்த வீட்டுக்குப் போற பொண்ணுக்குச் சமைக்க வீட்டைப் பாத்துக்க சொல்லித் தர உன்னை வரச் சொன்னா நீ அவளுக்குச் சாப்பாடு குடுக்குறதும், டீ போட்டுக் குடுக்குறதுமா இருக்குற” என குறைபட்டுக்கொண்டார்.
கையில் வைத்திருந்த முறத்தில் கோதுமையைப் புடைத்து பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்தபடி பேசிக்கொண்டிருந்தார் அவர்.
கனிமொழியோ ஆதுரத்துடன் ஆரபியைப் பார்த்தார். அவருக்குப் பெண் குழந்தை என்றால் கொள்ளைப்பிரியம். அவரது தங்கை சுடர்விழியோ வயதான காலத்தில் ஆண்பிள்ளை என்றால் தன்னையும் கணவரையும் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணம் கொண்ட சராசரி நடுத்தர குடும்பத்துப்பெண்மணி.
இருவருக்கும் ஒரே முகூர்த்தத்தில் மணமானது. கருவுற்றது கூட சில மாதக்கணக்கிலான இடைவெளியில் தான். பெண் குழந்தை வேண்டுமென தவமிருந்த கனிமொழிக்கும் ஆத்மநாதனுக்கும் மகேஷ் வந்து பிறந்தான். கடவுள் கொடுத்த மகவை எவ்வித குறையுமின்றி அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
அதிலிருந்து மூன்று மாத இடைவெளியில் சுடர்விழிக்கு ஆரபி பிறந்தாள். பெண் குழந்தை என்றதுமே சுடர்விழியின் முகம் வேப்பெண்ணெய் குடித்தது போல மாறிவிட்டது.
அதற்கு மாறாக அவரது கணவர் ஞானசேகரன் மகளை அள்ளி அணைத்துக் கொஞ்சினார். சுடர்விழியின் தந்தையோ பேத்தி தன் குடும்பத்தின் மகாலெட்சுமி என்று கையில் வைத்து தாங்கினார்.
ஆசையாக அவளுக்கு ஆரபி என பெயரிட்டதும் அவரே. அலமேலுவுக்கு இருந்த ஒரே ஒரு குறை அனைவரும் குழந்தையை தங்கத்தொட்டிலில் இட்டு தாங்காத குறையாக கவனித்தாலும் பெற்றவளான சுடர்விழி ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற சுணக்கத்தோடு அவளைக் கவனிப்பது மட்டுமே!
அதற்காக சுடர்விழி கொடுமைக்கார தாய் என்று சொல்லிவிடமுடியாது. பலவீனமான கர்ப்பப்பை, இரண்டு பிரசவம் எல்லாம் தாங்காது என்ற மருத்துவரின் அறிவுரையும், அவ்வபோது நலிவுறும் உடல்நிலையும் ஆண்குழந்தை பிறந்திருந்தால் தங்களின் வாரிசாக இருந்து தன்னையும் கணவரையும் பார்த்துக்கொள்வானே என்ற ஆதங்கத்தை அவருக்குள் விதைத்திருந்தது.
ஆரபிக்கு அனைவரும் கொடுக்கும் செல்லம் அவளைத் தடம் மாறி செல்ல வைத்துவிடக்கூடாதென்ற அக்கறையும் அவருக்கு இருந்தது. எனவே குடும்பத்தார் அனைவரும் அன்பைக் கொட்டினாலும், அதில் ஒரு சதவிகிதத்தைக் குறைத்துக்கொண்டு கண்டிப்பை மட்டும் காட்டியே ஆரபியை வளர்த்தார் சுடர்விழி.
ஞானசேகரன் மனைவிக்குக் கட்டுப்பட்ட கணவன். மனைவி எது செய்தாலும் மகளின் நலனுக்கென அழுத்தமாக நம்புபவர். மளிகை கடை நடத்துபவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் சிக்கனமாகக் குடும்பம் நடத்தி, சேமித்து மகளைப் படிக்கவும் வைக்கும் திறமைச்சாலியான மனைவிக்கு மகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டுமென்ற பொறுப்பு கொஞ்சம் அதீதமாக இருப்பதாக எண்ணிக்கொண்டார்.
ஆரபிக்கு வேண்டிய யாவும் கிடைத்தன. விவரம் தெரிகிற வயதில் அதீத கண்டிப்போடு அன்னையின் அன்பும் கிடைத்தது. மகன் இல்லை என்ற மனக்குறை சுடர்விழியின் மனதின் ஒரு ஓரமாக ஒதுங்கிவிட்டது. அவ்வபோது சுற்றத்தார் “என் மகன் லோன் எடுத்திருக்கான்… ஓட்டுவீட்டை நாங்க கான்கீரீட் வீடா மாத்தப்போறோம்” என்று தங்கள் புதல்வர்களின் பெருமையைப் பேசும்போது கொஞ்சம் சுணங்குவார். அவ்வளவு தான்!
எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தபோது அச்சம்பவம் நடந்து ஊரார் முன்னிலையில் தலைகுனிவானதும் முற்றிலும் மாறிப்போனார் சுடர்விழி. மகள்மீது வெறுப்பு எல்லாம் வரவில்லை. ஆனால் ஒருவித ஒதுக்கமும் விரக்தியும் வந்தது என்னவோ உண்மை.
பின்னர் எத்தனையோ மாப்பிள்ளை வீடுகள் பார்த்தும் அன்பரசன் மட்டுமே ஆரபிக்கு ஏற்ற வரனாக நீடித்து நின்றான். இதோ இந்த மாத இறுதியில் திருமணம்.
திருமணத்திற்கு பிறகு மனைவி வேலைக்குச் செல்வதில் தனக்குப் பிடித்தமில்லை என அன்பரசன் சொல்லிவிட்டான். நிலபுலன்கள் கொண்ட குடும்பம், சொந்தத் தொழில் செய்யப்போகும் கணவன் இருக்கும்போது நீ ஏன் வேலைக்குப் போகவேண்டுமென சுடர்விழி – ஞானசேகரனும் கூறிவிட ஆரபி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டாள்.
மூன்று மாத நோட்டீஸ் காலத்திற்கான பணத்தை அன்பரசனே கட்டிவிட அவள் நதியூருக்கு வந்துவிட்டாள். ஒரு வாரம் ஆகிவிட்டிருந்தது அவள் இங்கே வந்து.
திருமணம் எவ்வித குளறுபடியும் இல்லாமல் நடைபெறவேண்டுமென சுற்றியுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்திருந்தார் சுடர்விழி.
மகளின் இளமைப்பருவம் முழுவதும் படிப்பு, வேலை எனக் கழிந்துவிட்டதால் சமையல் மற்றும் குடும்பப்பொறுப்பைக் கற்றுக்கொடுக்கும்படி தனது தமக்கையிடம் கேட்டுக்கொண்டார்.
“சீரும் செட்டுமா குடும்பம் நடத்த உன் கிட்ட கத்துக்கணும்னு அம்மா சொல்வாங்க சுடர்… நீ என்னடானா என்னைப் போய் ஆரபிக்குக் குடும்பப்பொறுப்பைக் கத்துக் குடுனு சொல்லுற” என்று அதிசயித்தபடி தான் நதியூருக்கு வந்து இறங்கினார் கனிமொழி.
அவருக்குத் தங்கையின் வீடும், நதியூர் கிராமமும் மிகவும் பிடித்தவை. அங்கே சிலுசிலுவென வீசும் காற்றும் வற்றாமல் ஓடும் தாமிரபரணியின் கால்வாயும் ஊரெங்கும் செழித்து நிற்கும் மரங்களும் பார்க்க பார்க்கத் தெவிட்டாது கனிமொழிக்கு. கூடவே ஆரபி என்றால் அவருக்கு உயிராயிற்றே! கரும்பு தின்னக் கூலியா என்று தங்கை மகளுக்குப் பிடித்த நொறுக்குத்தீனிகளைச் செய்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.
இதோ ஒரு வாரமாக ஆரபிக்கு அவர் சமைக்கக் கற்றுக்கொடுக்கிறார். முதலில் கொஞ்சம் ருசி கூட குறைய இருந்தாலும் பின்னர் ஆரபிக்கு ஓரளவுக்கு நன்றாகவே சமைக்க வந்துவிட்டது.
இருக்கிற மூன்று வாரங்களில் தன் பெற்றோருக்குத் தனது கையால் சமைத்துப் போடவேண்டுமென்ற ஆசையைத் தீர்த்துக்கொண்டிருக்கிறாள் அவள்.
ஓய்வாக அமர்வது என்னவோ மாலைப்பொழுதுகளில் தான். அது அன்பரசனிடம் அவள் பேசும் பொழுது.
அந்நேரத்தில் யாரும் அவளைத் தொந்தரவு செய்வதில்லை. பின்னர் இரவுணவுக்கான வேலையை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆரபி பேச்சை முடிப்பாளென அனைவருக்கும் தெரியுமே!
இன்னும் இருபது நாட்கள் இந்த வீட்டில் இருப்பாள். பின்னர் இப்படி அவளுக்குச் செய்து கொடுக்கும் பாக்கியமெல்லாம் எப்போது கிடைக்குமோ?
இதைச் சொல்லி சுடர்விழியின் வாயை ஒவ்வொரு முறையும் அடைத்து விட்டுத் தங்கை மகளுக்கு ஆசை தீர சிற்றுண்டிகள் செய்து கொடுப்பார் கனிமொழி.
“நாளைக்கு நகை வாங்க போக நல்ல நாள்னு அம்மா சொன்னாங்க அக்கா… நம்ம போயிட்டு வந்துடுவோமா?”
“ஆருவையும் அழைச்சிட்டுப் போகலாமே?”
சுடர்விழி அவசரமாக மறுத்தார்.
“வேண்டாம்கா… நடந்த பிரச்சனை என்னனு உனக்கு நல்லா தெரியும்… கல்யாணத்துக்கு முன்னாடி அவளை எங்கயும் அழைச்சிட்டுப் போகவேண்டாம்னு நினைக்கேன்கா… மறுபடி எதுவும் பிரச்சனை வந்துச்சுனா என் புருசனை உயிரோட பாக்க முடியாது… பாவம் அந்த மனுசன்”
கனிமொழி தங்கையின் கையை அழுத்தி ஆரபியைக் காட்டினார்.
“அவ காதுல விழுந்துடப்போகுது” என்று எச்சரித்தார்.
சுடர்விழி அமைதியாகிவிட்டார்.
அதே நேரம் ஆரபியோ அன்பரசனிடம் திணறலோடு பேசிக்கொண்டிருந்தாள். அன்னையும் பெரியன்னையும் தனது பேச்சைக் கேட்டுவிடக்கூடாதென மகிழம்பூ தேன்குழல் அடங்கிய தட்டோடு வீட்டின் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்துக்கு ஓடிவந்து அமர்ந்துவிட்டாள்.
“அம்மா என்னை விடமாட்டாங்க அன்பு… ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க” என்று கெஞ்சினாள்.
“அத்தைய நான் சம்மதிக்க வைக்குறேன் ஆரு… நீ மனசு வை… அது போதும்” மறுமுனையில் அன்பரசன் பிடிவாதம் பிடித்தான்.

எனக்காக இவள் இதைக் கூட செய்யமாட்டாளா என்ற ஆதங்கம் அவனுக்கு. ஆரபி தொடர்ந்து மௌனம் காக்கவும் அவன் அவளைச் சரிகட்டும் படலத்துக்குத் தயாரானான்.
“நானே நேர்ல வந்து அத்தை கிட்ட பேசுறேன்”
உடனே அவள் பதறிப்போனாள்.
“வேண்டாம் அன்பு… அம்மா இந்த விசயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட்” என்று அவள் படபடக்க
“நீ அவங்களுக்குப் பொண்ணுனா என்னோட வருங்கால மனைவி… இன்னும் இருபது நாள்ல மனைவியா ஆகவும் போற… உன்னை நான் உரிமையோட கூட்டிட்டுப் போகக்கூடாதா?” என்று அவனும் படபடத்தான்.
ஆரபிக்கோ அன்பரசனுக்கும் சுடர்விழிக்கும் இடையே மாட்டி விழிக்கும் விருப்பமில்லை.
“சரி… உங்களுக்கு உரிமை இருக்குல்ல… நீங்களே நேர்ல வந்து உங்க மாமியார் கிட்ட பேசி உங்களுக்கு வேணுங்கிறதை நடத்திக்கோங்க… சப்போஸ் அவங்க ‘நோ’ சொன்னா நானும் சம்மதிக்கமாட்டேன்.. அப்புறம் என் மேல வருத்தப்படக்கூடாது”
“அவங்க சம்மதிப்பாங்க”
தீர்மானமாக உரைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் அன்றிரவே வீட்டில் வந்து நிற்பானென ஆரபி எதிர்பார்க்கவில்லை.
“கல்யாணம் ஆகப்போகுது… ஒழுங்கா சேலை கட்டி பழகு” என்ற அன்னையின் அதட்டலுக்குப் பணிந்து சென்னையிலிருந்து வந்த நாளிலிருந்து விதவிதமாக காட்டன் புடவை அணிந்து வலம் வருபவளுக்கு வீட்டுக்கு வந்ததும் அன்பரசனின் பார்வை தன் மீது படிந்த விதத்தில் வெட்கம் பிடுங்கித் தின்றது.
“வாங்க அன்பு” என்றவளின் அருகே செல்லப்போனவன் திடீரென கொலுசொலி கேட்கவும் நின்றுவிட்டான்.
“வாங்க மாப்பிள்ளை… அண்ணன் மதினி எல்லாம் சவுக்கியமா இருக்காங்களா? ஏன் நிக்குறிங்க? ஆரு மாப்பிள்ளைக்கு சேர் எடுத்துப் போடு”
பரபரப்போடு அன்பரசனை வரவேற்றார் கனிமொழி.
அவரைத் தொடர்ந்து புடவை தலைப்பில் கைகளைத் துடைத்துக்கொண்டு வந்த சுடர்விழியும் மருமகனை வரவேற்று மகளை அவனுக்குக் காபி எடுத்து வருமாறு விரட்டினார்.
“முதல்ல தண்ணி கொண்டு வா ஆரு… அப்புறமா காபி போடலாம்”
ஆரபி ஹாலிலிருந்து கிளம்பும்போதே அன்பரசனின் பார்வை முதுகைத் துளைப்பது போல உணர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள்.
அவன் இரு பெண்மணிகளும் அறியாவண்ணம் கண் சிமிட்டவும் சட்டென திரும்பி சமையலறைக்குள் ஓடி மறைந்தாள்.
உள்ளே வந்து சமையலறை மேடை மீது சாய்ந்து படபடவென அடித்த இதயத்தை நிதானத்துக்குக் கொண்டு வந்தாள்.
வெறும் கண்சிமிட்டலும், பார்வை வருடலும் கூட இத்தகைய சிலிர்ப்பைக் கொடுக்குமா என்ன? இவன் கண்களில் ஏதோ உள்ளது!
“என்ன இது? வீகன் லவ்வுக்கே இப்பிடி புலம்புறியே… உன் ஆளு நான்-வெஜ் வரைக்கும் யோசிக்குறவன்” மனசாட்சி வேறு அவர்களின் உரையாடலை ஞாபகப்படுத்தி தொலைக்க தன் வீட்டின் சமையலறை அவளுக்கு வேறேதோ உலகம் போல தோன்றியது.
காபி பொடி எங்கே? பால் எங்கே? சர்க்கரை எங்கே? கேஸ் லைட்டர் எங்கே?
ஒவ்வொன்றையும் அவள் தேடித் தத்தளித்தபோதே கனிமொழி அங்கே வந்துவிட்டார்.
“நான் காபி போடுறேன்… நீ மாப்பிள்ளைக்குத் தண்ணி குடுத்துட்டு வா” என்றவர் அடுப்பை பற்ற வைத்து காபிக்குப் பாலைச் சுடவைக்க
“ஐயோ பெரியம்மா, நானா?” எனப் பதறினாள் ஆரபி.
இன்னொரு முறை அன்பரசனின் பார்வைத்தீண்டல்களில் சிக்கி அவஸ்தையுற வேண்டுமா? இன்பமான அவஸ்தை தானே என்று மனம் சொன்னாலும் சுறுசுறுவென உள்ளுக்குள் கிளறும் உணர்வைச் சமாளிக்க அவள் அல்லவா கஷ்டப்படுகிறாள்.
“ஆரு”
ஹாலில் இருந்து சுடர்விழியின் குரல் கேட்டதும் வேகமாகச் சொம்பு ஒன்றில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு விரைந்தாள் ஆரபி.
“அதில்லங்க மாப்பிள்ளை… உங்களுக்கு இல்லாத உரிமையா? ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி எப்பிடி மாப்பிள்ளை அனுப்புறது? ஊர்க்காரங்க ஒன்னுக்கிடக்க ஒன்னு பேசுவாங்க”
தயக்கத்தோடு சுடர்விழி அன்பரசனிடம் பேசுவதைக் கேட்டபடி அவனிடம் தண்ணீர் சொம்பினை நீட்டியவள் பவ்வியமாக வந்து அன்னையின் அருகே நின்று கொண்டாள்.
குனிந்த தலையை நிமிர்த்தினால் தானே அவனது விழிகளைச் சந்திக்கவேண்டும்? நிமிர்த்தவே வேண்டாம் என தீர்மானித்தாள் அவள்.
அன்பரசன் தண்ணீரைக் குடித்து முடித்தவன் நிதானமாக “ஊர்க்காரங்களைப் பத்தி ஏன் யோசிக்குறிங்க அத்தை? உங்க மகளை நான் என்னோட சரிபாதியா ட்ரீட் பண்ணுறதுல உங்களுக்குச் சந்தோசமா இல்லையா?” என்க
“சந்தோசம் மாப்பிள்ளை” என பதிலளித்த சுடர்விழியின் வதனத்தில் தான் எவ்வளவு பெருமிதம்!
“அப்ப நான் ஆரம்பிக்கப்போற தொழிலுக்கு அவ வந்து உரிமையா எடுத்து செஞ்சா தானே நல்லா இருக்கும்?”
சுடர்விழி யோசிக்கும்போதே மளிகைக்கடையிலிருந்து அரக்க பறக்க வந்துவிட்டார் ஞானசேகரன்.
“வாங்க மாப்பிள்ளை! உங்க பைக்கை ரங்கநல்லூர்ல பாத்ததா கடைக்குப் பொருள் வாங்க போன பையன் சொன்னான்… உடனே ஓடிவந்தேன்… மாப்பிள்ளைக்குக் காபி குடுத்தியா சுடர்?”
அன்பரசன் மரியாதைநிமித்தம் எழுந்தவன் அவரையும் தன்னருகே அமரச் சொல்லி வந்ததற்கான காரணத்தைக் கூறினான்.
முதலில் ஞானசேகரனும் தயங்கினார். ஆனால் மருமகனாக வரிக்கப்பட்டவன் அமைதியாகப் பேசுவது போல தெரிந்தாலும் அதில் தொக்கி நின்ற பிடிவாதம் தனியே தெரிவதை அறியாதவரா அவர்?
எனவே சம்மதித்துவிட்டார்.
“மாப்பிள்ளைய வாசல் வரைக்கும் போய் வழியனுப்பி வச்சிட்டு வா ஆரு” என்றார் ஞானசேகரன்.
ஆரபி புடவை நுனியைத் திருகியபடி அன்பரசனைப் பின்தொடர்ந்தாள். அவர்களின் வீட்டுத்தாழ்வாரத்தை வெளியாரின் பார்வைக்குப் படாதபடி அடர்த்தியான சரக்கொன்றை மரத்தின் கிளையொன்று மறைத்திருக்கும். அங்கே வந்ததும் பெரியவர்கள் வரவில்லை என்பதை உறுதி செய்த அன்பரசன் ஆரபியை இடையோடு சேர்த்தணைத்து தன்னோடு இணைத்துக்கொண்டான்.
ஆரபி தடுமாறியபோதே “உன்னை புடவைல பாக்குறப்ப அப்சரஸ் போல இருக்கடி ஆரு” என்று மென்மையாகச் சொன்னவனின் விரல்களுக்குப் புடவையின் இடைவெளி தயவு செய்ய வசமாகச் சிக்கிக்கொண்டது ஆரபியின் மெல்லிடை.
அவனது விரல்களின் தீண்டல் அவளுக்குள் மோனநிலையை உருவாக்கியபோதே விலக்கி நிறுத்தியவன் “நாளைக்கும் எனக்குப் புடவை தரிசனம் வேணும்… இப்பவே சொல்லிட்டேன்… அப்புறம் சுடிதாரை மாட்டிட்டு வந்து என்னை நோகடிச்சிடக்கூடாது ஆரு” என்றான்.
வெட்கத்துடன் தலையாட்டி அனுப்பி வைத்தவள் மறுநாள் அவன் வந்தபோது கிளிப்பச்சையில் சிவப்பு கோடுகளிட்ட காட்டன் புடவை அணிந்து தயாராக இருக்கவும் அன்பரசனின் கண்கள் ராஜபோக விருந்தாக ஆரபியை ரசிக்க ஆரம்பித்தன.
இருவரும் வீட்டாரிடம் சொல்லிவிட்டு பைக்கில் கிளம்பி போய் நின்ற இடம் பிரபலமான வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் ஸ்தாபனம். அங்கே அவர்கள் வந்திருப்பது அன்பரசனின் ஜூஸ் பாருக்குத் தேவையான ஜூசர்கள் இன்னும் சில உபகரணங்களை வாங்குவதற்கு.
இதை அவனே செய்திருக்கலாம். ஆனால் ஆரபி இல்லாமல் எதையும் ஆரம்பிக்க அவனுக்கு விருப்பமில்லை.
நல்ல தரமான வணிக ஜூசர்களை அவளை வைத்தே தேர்வு செய்ய சொன்னான். ஆரபியும் தயக்கமின்றி அவனுக்குத் தேவையானவற்றை தேர்வு செய்தாள்.
“நாங்க பொருள் எல்லாத்தையும் பேக் பண்ணி ஆலங்குளத்துக்கு டோர் டெலிவரி பண்ணிடுவோம் சார்… நீங்க பே பண்ணிட்டுக் கிளம்பிடலாம்” என்றார்கள் கடை சிப்பந்திகள்.
அன்பரசனும் ஆரபியும் பணம் செலுத்திவிட்டுக் கிளம்பினார்கள். நினைத்ததை விட வெகுசீக்கிரத்தில் பொருட்களை வாங்கிவிட்டதால் ஆரபியோடு நேரம் செலவளிக்க விரும்பினான் அவன்.
ஆரபிக்கோ அவனது ரசனைப்பார்வை கொடுக்கும் அவஸ்தை வேறு! எனவே வீட்டுக்குப் போகத் துடித்தாள்.
“இவ்ளோ அவசரமா வீட்டுக்குப் போய் என்ன பண்ணப்போற? ரெண்டு பேரும் நல்ல ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுட்டு அப்புறமா வீட்டுக்குப் போகலாம்”
“இல்ல அன்பு… புரிஞ்சிக்கோங்க… அம்மா எதாச்சும் சொல்லுவாங்க”
“அவங்க பெர்மிசனோட தானே உன்னை அழைச்சிட்டு வந்திருக்கேன்… அப்புறம் ஏன் உன்னைத் திட்டப்போறாங்க? உனக்கு என் கூட வர விருப்பமில்லையா ஆரு?”
“நான் எப்ப அப்பிடி சொன்னேன்?”
“நீ சொல்லல… ஆனா விடாம டார்ச்சர் பண்ணுறியே அந்தப் புடவை நுனி, அது சொல்லுது, யூ ஃபீல் அன்கம்ஃபர்டபிள்னு… சொல்லு, நான் ஏதாச்சும் தப்பா நடந்துக்கிட்டேனா?”
“ஏன் இப்பிடிலாம் யோசிக்குறிங்க அன்பு? நீங்க தப்பா நடந்துக்கல… ஆனா உங்க பார்வை இருக்கே அதுல கொஞ்சம் கூட நேர்மை இல்ல… எல்லை மீறி போகுது… அது எனக்கு ஒரு மாதிரி வெக்கமா இருக்குங்க”
அவனது இதழ்கள் சிரிப்பில் துடிப்பதைக் கண்டதும் தன் தலையில் குட்டிக்கொண்டாள்.
அசடு வழிந்தபடியே “மைண்ட்வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டேன்ல” என்று அவள் கேட்க அன்பரசன் சத்தமாக நகைத்தான்.
பின்னர் ஆரபியைத் தன்னருகே வருமாறு அழைத்தான். அவள் வரவும் காதருகே குனிந்து
“இன்டிமசில ஒரு புருசன் நேர்மையா இருக்கவே கூடாது ஆரு… சில நேரம் திருடன் மாதிரி யாருக்கும் தெரியாம ஒய்ப் கூட ரொமான்ஸ் பண்ணணும்… சில நேரம் கொள்ளைக்காரன் மாதிரி அவளோட மொத்த அழகையும் கொள்ளையடிச்சிட்டுப் போயிடணும்… சில சோதனையான நேரத்துல பிக்பாக்கெட் மாதிரி கிடைச்சது வரை இலாபம்னு கிடைக்குற கிஸ்சோ, ஹக்கோ போதும்னு இருந்துடணும்” என்றான் இரகசியக்குரலில்.

ஆரபி அவனது சிகையைக் கலைத்துவிட்டவள் “இப்பிடியெல்லாம் யாரு உங்களுக்குப் பேசச் சொல்லித் தர்றாங்க?” என்க
“அடுத்தவங்க பேச்சைக் கேட்டு அப்பிடியே பேச அன்பரசன் ஒன்னும் கிளி இல்ல… புலி… அதுலயும் ரொமான்ஸ் புலி… டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்றான் அவன் அமர்த்தலாக.
“சரிங்க ரொமான்ஸ் புலி… இப்பிடி வேகாத வெயில்ல நின்னு மணிக்கணக்கா பேசி புலி மாதிரி இருக்குறவர் ஜாகுவார் மாதிரி ஆகிடாதிங்க… பைக்கை கிளப்புங்க… உங்க ஆசைப்படி ஹோட்டல்ல சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்”
ஆரபி சம்மதித்ததும் திருநெல்வேலியில் நல்ல ஹோட்டலில் மதியவுணவை முடித்த பிற்பாடு அவளை வீட்டில் கொண்டு போய் விட்டான் அன்பரசன். பின்னர் பெரியவர்களிடம் விடைபெற்றவன் ஆரபியை வழியனுப்ப வருமாறு கண்களால் கேட்டுக்கொள்ள அதற்கு முன்னர் ஞானசேகரனே மருமகனை வழியனுப்ப வந்துவிட அன்பரசனின் இந்த ஆசை நிராசையானது.
ஆரபி நமட்டுச்சிரிப்போடு அவனுக்குக் கையசைத்து விடை கொடுத்தாள்.
கோணலாகப் போய் திக்குத் தெரியாத காட்டில் நின்ற தன் வாழ்க்கை ஒருவழியாகச் சரியான பாதைக்குத் திரும்பிவிட்ட திருப்தி அவளுக்கு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

