மஞ்சமும் கூடமும் மயக்கம் தரவே,
கஞ்சத்தனம் ஏனோ அவனின் சிரிப்பில்!
பஞ்சணை வீட்டின் பகட்டை ரசிக்க,
நஞ்சென முறைத்தே நச்சரிக்கிறானே!
-அட்சரனின் வேதா
ராஜேஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். வந்ததிலிருந்து வீட்டில் கனத்த மௌனம் நிலவியது. இந்த மௌனத்திற்கான பிள்ளையார்சுழி மருத்துவமனைக்குச் சதானந்தன் பதறியடித்து வந்த நொடியில் போடப்பட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வந்தவர் மகனிடம் தப்பித்தவறிக்கூட என்ன ஏதென்று விசாரிக்கவில்லை. நேரே வேதவதியிடம்தான் போனார். அவளும் நடந்ததில் ஒரு வரியைக் கூட மறக்காமல் புத்திசாலி மாணவி வகுப்பறையில் ஆசிரியரின் கேள்விக்கு மூச்சுவிடாமல் பதிலளிப்பது போல சொல்லி முடித்தாள்.
சதானந்தனின் முகத்தில் கோபாக்கினி சுடர் விடும்போதே செவிலி ஒருவர் வந்து அந்த மருத்துவமனை பஸ்மமாகாமல் காப்பாற்றிவிட்டார், ராஜேஸ்வரிக்கு மயக்கம் தெளிந்த தகவலைச் சொன்னவராய்!
சதானந்தன் பரபரப்புடன் ஓடியவர், ராஜேஸ்வரி ஜம்மென்று மருத்துவமனைப் படுக்கையில் அமர்ந்திருக்கவும் ஒரு நொடி கண் கலங்கிப் பின்னர் புன்னகைத்தார்.
“வீட்டுக்குப் போகலாம் ராஜி” இதைத் தாண்டி சதானந்தனும் எதுவும் கேட்கவில்லை, ராஜேஸ்வரியும் எதுவும் சொல்லவில்லை.
இதோ வீட்டுக்கு வந்ததும் ராஜேஸ்வரிக்கு ஜூஸ் போட்டுக் கொடுத்துவிட்டு மேலே தனது அறைக்குச் செல்ல வேதவதி முயலும்வரை அந்த வீட்டில் அமைதியின் ஆதிக்கமே!
சரியாக அவள் முதல் படியில் காலடி எடுத்து வைக்கையில், “அம்மா வேதா! உன் அத்தை ஜூஸ் குடிச்சிட்டாளா?” என்று கேட்டார் சதானந்தன்.
“குடிச்சிருப்பாங்க மாமா! என்ன விஷயம்?” என்றபடி வந்தவளிடம்,
“உன் அத்தைய இங்க கூப்பிடு. அப்படியே உன் புருசனையும் கூப்பிடு” என்று சொல்லி அவளை அதிர வைத்தார்.

வேதவதி நேரே ராஜேஸ்வரியின் அறைக்குப் போனவள், சதானந்தன் அவரை ஹாலுக்கு அழைத்தார் என்று சொல்லிவிட்டுப் பரிதாபமாக அவரது முகத்தைப் பார்த்தாள்.
“என்னாச்சுடா?”
“இல்ல.. உங்க மகனையும் கூப்பிடச் சொன்னாங்க. நீங்க கூப்பிடுறீங்களா அத்தை?”
தயங்கியவளின் சிகையைக் கோதிவிட்டவண்ணம், “மீடியேட்டர் வச்சு பேசிக்கிற உறவு இல்ல உங்களுக்குள்ள. ஒரே வீட்டுல இருக்கப்போறீங்க. முகம் கொடுத்துப் பேசுறதுக்குப் பழகிக்கணும் வேதா. சரியா?” என்று சொல்லி அவளை அட்சரனின் அறைக்கு அனுப்பிவைத்தார்.
அவள் போய் கதவைத் தொட்டபோது அது உட்பக்கம் தாழிடப்பட்டிருப்பது தெரிந்தது. கதவைத் தட்டினாள் வேதவதி.
சில நொடிகள் அவளது கை கதவோடு உறவாடிய பிறகு கொஞ்சமாய்க் கதவு திறந்து அதில் அட்சரனின் முகமும், அவனது வெற்றுத்தோளும் தெரிந்தது. உதட்டில் கொள்ளிவாய்பிசாசு போல சிகரெட் எரிந்துகொண்டிருக்க, அவனது வெற்றுத்தோளை விட சிகரெட்டின் புகைதான் வேதவதியைப் பதறி விலகித் திரும்பி நிற்கவைத்தது.
“மாமா உங்களைக் கீழ கூப்பிட்டாங்க”
“நீ போ!” என்றபடி கதவை அடைக்கப் போனவன்,
“இல்ல… உடனே” என்றவாறு வேதவதி திரும்பியதும்,
“அப்ப இப்படியே வரட்டுமா?” என்று கதவைத் திறந்துகொண்டு வெளியே வர, வெறும் கூர்க்கா பேண்ட் மட்டும் அணிந்து நின்றவனைப் பார்க்கப் பயந்து வேதவதி கத்தாதக் குறை. அதற்குப் பதிலாகத் திரும்பி நின்றுகொண்டாள். நாசியில் சிகரெட் புகையோடு கலந்து ஏறியது பாலைப்பூவின் நறுமணம்.
“சீக்கிரமா வரச் சொன்னாங்க”
“ஹாஸ்பிட்டல் மெடிசின் வாடை அடிக்குது. இப்படியே வரமுடியாதுனு உன் நோமா கிட்ட சொல்லு. ப்பே!” என்று அலட்சியமாகக் கையசைத்தவன் உள்ளே போக,
“இந்தக் கருமாந்திரம் பிடிச்ச சிகரெட் நாத்தத்துக்கு மெடிசின் வாடை எவ்வளவோ மேல்” என்று சத்தமாகவே முணுமுணுத்துவிட்டு இடத்தைக் காலி செய்தாள் வேதவதி.
“எதே?” அவள் பேசியது காதில் விழுந்து அவன் உக்கிரமாகிக் கேட்பதற்குள் படிகளில் இறங்கி காணாமலும் போயிருந்தாள்.
அட்சரன் குளித்து வேறு உடை மாற்றி வந்ததும் ராஜேஸ்வரியிடம் சென்றான்.
“இப்ப ஓகேவா நீங்க?”
“எனக்கு என்ன ஆச்சு? ஜஸ்ட் மயக்கம்” என்றவரின் அருகே அமர்ந்தவன் அவரைத் தோளோடு அணைத்துக்கொள்ள, ராஜேஸ்வரி மைந்தனின் கன்னத்தில் விளையாட்டாக அடித்தார்.

“ஒன்னுமில்லடா எனக்கு” என்று அவர்கள் கொஞ்சுவதைச் சில நொடிகளுக்கு மேல் காணப் பிரியமில்லாதவரைப் போலத் தொண்டையைச் செருமினார் சதானந்தன்.
“உன் மகன் கிட்ட அந்தத் தாலி செயினை எடுத்துட்டு வரச் சொல்லு ராஜி”
அவ்வளவுதான்! சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவனின் முகத்தில் மீண்டும் குடியேறியது கொம்பேறிமூக்கனாய் அவனுக்குள் வியாபித்திருந்த கோபம்.
“அது எதுக்கு? தேவையில்லாம…”
“ஒவ்வொருத்தரையா ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்க நினைக்குறானா ராஜி?” கணீரென சதானந்தனின் கேள்வி ஒலித்ததும் ராஜேஸ்வரியின் கண்கள் மகனிடம் திரும்பின.
அட்சரன் கடுப்பைத் தனக்குள் மறைத்துக்கொண்டு எழுந்தவன், அவனது அறைக்குப் போய் மாங்கல்யம் கோர்க்கப்பட்ட முத்துமாலையோடு திரும்பி வந்தான்.
சதானந்தன் தானும் எழுந்து மனைவியையும் எழுப்பிவிட்டவர், “பூஜை ரூம்ல வச்சு அந்தத் தாலியை நம்ம மருமகளோட கழுத்துல போடச் சொல்லு ராஜி” என்றார் அவனைப் பார்க்காமல்.
தந்தையும் மகனும் முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளாததன் மர்மம் என்னவெனப் புரியாமல் விழித்த வேதவதிக்கு, மீண்டும் அட்சரனின் கையால் தாலி செயினைக் கழுத்தில் வாங்கிக்கொள்ளவே விருப்பமில்லை.
“மாமா… வேண்டாமே”
தனக்குப் பதிலாக அவளிடமிருந்து எதிர்ப்பு வரவும் சின்னதாய் ஒரு புன்னகை அட்சரனின் வதனத்தில். அதைக் கவனித்துவிட்டார் சதானந்தன்.
“இப்ப என்ன நடந்திருக்குச்சுனு உனக்குச் சிரிப்பு வருது?”
யாரிடமோ பேசுவது போலன்றி மகனிடமே வந்து நேரடியாக வினவினார் அவர். அக்காட்சியைக் கண்டதும் ராஜேஸ்வரிக்கு மீண்டும் மயங்கிவிடுவோமோ என்ற பயம்.
அதே ஆச்சரியம் அட்சரனின் விழிகளிலும்!
“என்கிட்டவா பேசுறீங்க?” என்று நம்ப முடியாமல் கேட்டான்.

“இங்க சிரிச்சவன் யாரு? நீதானே?” என்று மீண்டும் கணீர் கேள்வி.
அட்சரன் பதில் பேசாமல் நிற்கவும் கோபத்தோடு அவனை ஏறிட்டார்.
“அத்தனை பேர் நிறைஞ்ச சபைல நீ ஏன் வேதாவோட பேரை இழுத்த?”
“அப்ப அவதான் சட்டுனு கண்ணுல பட்டா”
“கண்ணுல பட்டா சொல்லிடுவியாடா நீ? என்ன நினைச்சிட்டிருக்க? நாம என்ன செஞ்சாலும் இவன் கேள்வி கேக்கமாட்டான்னு திமிராகிடிச்சா? மீசை முளைச்சு ஆளும் உயரமா வளர்ந்துட்டா என்ன வேணும்னாலும் செய்வியா நீ? எத்தனை வருஷம் ஆனாலும் நான் உனக்கு அப்பன். அதை மறந்துடாத. இதுநாள் வரை நீ செஞ்ச எதையாச்சும் நான் கேள்வி கேட்டிருக்கேனா? இல்ல, ஏன்னா நீ தப்பா எந்தக் காரியமும் பண்ணுனதில்ல, வழிதவறிப்போனதில்ல. ஆனா இப்ப நடந்த பிரச்சனைல உன் பக்கமும் தப்பிருக்குனு ஒத்துக்காம நீ ஆடுற இந்த ஆட்டம் இருக்குதே, எல்லைய தாண்டிடுச்சு அச்சு.”
கம்பீரமாய், எச்சரிக்கும் தொனியில் அவர் பேசப் பேச அட்சரனின் பிடிவாதம் கரைந்தது அவனையறியாமல். ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நிமிர்ந்தே நின்றான்.
“அந்தச் சபைல உன் ஃப்ரெண்டைக் காப்பாத்தணும்னு வேதாவ பலிகடா ஆக்க நினைச்சது உன் சுயநலத்தைக் காட்டுதுடா”
“நான் இவளை யூஸ் பண்ணிக்கலப்பா. சத்தியமா எனக்கு அந்த நோக்கமே இல்ல”
“அப்ப நீ வேதாவ விரும்புறியா?” அசாதாரணமானக் கேள்வியைச் சாதாரணமாகக் கேட்டார் சதானந்தன். அட்சரனுக்கு அந்தக் கேள்வியில் மூச்சடைத்தது போன்ற உணர்வு.
“நான்… போயும் போயும் இவளை விரும்புவேன்னு நினைக்குறீங்களா?” என்றான் வேண்டுமென்றே அலட்சியமாய்.
“அப்ப ஏன்டா அத்தனை பொண்ணுங்க இருக்குறப்ப இவதான் என் கூட இருந்தான்னு சொன்ன? ஒன்னு நீ உன்னோட ஃப்ரெண்ட் வாழ்க்கைக்காக சுயநலமா நடந்துக்கிட்டதை ஒத்துக்க. இல்லன்னா வேதாவ விரும்புறதை ஒத்துக்க”
இரண்டு தினங்கள் காலில் சலங்கை கட்டாதக் குறையாக ஆடித் தீர்த்தவன், சதானந்தனின் பேச்சில் வாயடைத்துப் போய் நின்ற கோலம் வேதவதியின் மனதுக்கு உவப்பாய்!
அட்சரன் தனது சுருள் கேசத்தைப் பொறுமையின்றி கோதிக்கொண்டவன், “சரிப்பா! நான் அந்த நேரத்துல நதியோட வாழ்க்கை கெட்டுப்போகக்கூடாதுனு மட்டும்தான் யோசிச்சேன். நான் சுயநலமா நடந்துக்கிட்டேன். ஒத்துக்குறேன். அதுக்குனு… எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை ஏன்பா?” என்றான் எரிச்சலை அடக்கியவனாக.
சதானந்தன் இப்போது வெற்றிச்சிரிப்பு சிரித்தார்.
“நீ ஏன்பா இதைத் தண்டனைனு நினைக்குற? எந்த ஒரு வினைக்கும் எதிர்வினைனு ஒன்னு இருக்கும். நீ செஞ்ச வினையோட எதிர்வினை இது. இதைத் தண்டனைனு நினைக்காம நீ செஞ்ச காரியத்தோட பலன்னு நினைச்சுக்க. ஆம்பளைத்தனம்னா மீசை வச்சுக்குறது, தாடி வளக்குறது, கல்யாணம் பண்ணி புள்ளைக்கு அப்பன் ஆகுறதும் இல்லடா. தன்னால நடந்த தப்பை ஏத்துக்கிட்டு அதைச் சரி செய்ய நினைக்குற நியாயபுத்தி இருக்குதே, அதுதான் ஆம்பளைத்தனம்”
அட்சரன் பெருமூச்சு விட்டவன் எதுவும் பேசாமல் வேதவதியிடம் வந்து நின்றான்.
“வா!”
அவளது பதிலை எதிர்பார்க்காமல் கையைப் பிடித்து இழுத்தவனைச் சன்ன எரிச்சலோடு ஏறிட்டவள் தனது கையை விடுவித்துக்கொண்டாள். அந்தப் பார்வையில் ‘நீ என்னைத் தொடாதே’ என்ற செய்தி கட்டளையாய்த் தெரிந்தது.
“நீ வாடா வேதா”
ராஜேஸ்வரி மருமகளைப் பூஜையறைக்குள் அழைத்துச் செல்ல, அட்சரனும் அவனைத் தொடர்ந்து சதானந்தனும் வந்தார்கள். ராஜேஸ்வரி வேதவதியை விளக்கேற்றச் சொன்னார். பின்னர் அட்சரனைத் தவிர அனைவரும் சாமி கும்பிட்டார்கள்.
“வேதா கழுத்துல இந்தத் தாலிய போட்டுவிடு” இம்முறை கட்டளையிட்டவர் சதானந்தன்.
அட்சரன் அவர் சொன்னது போல எவ்வித மறுப்பும் காட்டாமல் வேதவதியின் கழுத்தில் தாலி செயினைப் போட்டுவிட்டான்.
“ஹேப்பி? நான் போகட்டுமா?” என்று கிளம்ப எத்தனித்தவனைக் கையமர்த்தினார் சதானந்தன்.
“ராஜி”
அவர் சொன்னதும் ராஜேஸ்வரி குங்குமச்சிமிழை எடுத்து அட்சரனிடம் கொடுத்தார்.
“வேதாவோட வகிட்டுல குங்குமம் வச்சு விடு”
அட்சரனின் மனம் ‘அந்தக் குங்குமச்சிமிழைத் தட்டிவிடு, அல்லது அதிலுள்ள குங்குமத்தை வேதவதியின் தலையில் கொட்டு’ என்று கிறுக்குத்தனமான யோசனைகளைச் சொன்னாலும், தெளிவாக யோசிக்கும் மூளை இது சரியானச் சந்தர்ப்பம் இல்லையெனப் பாடம் எடுத்தது.

இறுதியில் மூளையே ஜெயித்தது. அட்சரனின் கைவிரல் குங்குமத்தோடு வேதவதியின் வகிட்டைத் தொட்டு மீண்டது. குங்குமச்சிமிழை மீண்டும் தாயிடமே கொடுத்தான் அவன்.
“நல்லா கேட்டுக்க! வேதாவோட படிப்பு முடிஞ்சதும் உங்க ரெண்டு பேருக்கும் நம்ம ரிலேட்டிவ்ஸை அழைச்சு ரிசப்ஷன் வைப்போம். இந்த உறவை ஏத்துக்கவும் புரிஞ்சிக்கவும் உங்க ரெண்டு பேருக்கும் நிறைய கால அவகாசம் இருக்கு. உங்க ரெண்டு பேருக்கு நடுவுல இருக்குற சுவர் தற்காலிகமானது. அதைக் கடந்து சுமூகமா பழகப் பாருங்க. ரெண்டு குடும்பத்துக்கும் அதுதான் வேணும்” என்ற சதானந்தன், ராஜேஸ்வரியை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
பூஜையறையில் நின்ற வேதவதியை முறைத்துவிட்டு அட்சரனும் போய்விட, அவளுக்கோ கடவுளின் முன்னே இதெல்லாம் நடக்க வேண்டுமா என்ற சங்கடம். அதைக் காட்டிக்கொள்ளாமல் அவளும் வெளியேறினாள்.
ராஜேஸ்வரியும் சதானந்தனும் அமர்ந்து ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாதவளாய் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் போய்விட்டாள்.
ஆடம்பரமான அறைதான். அழகான உள்கட்டமைப்பும் மனதை அள்ளியது. திறந்திருந்த பால்கனி கதவின் வழியே காற்று அள்ளிக்கொள்ளத் துடித்தது அவளை. படபடத்த மனதுக்கு ஒரு ஆசுவாசம் தேவைப்பட்டது. அப்போதுதான் டீபாய் மீது சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த மொபைல் அவளது பார்வைக்குப் பட்டது.
“அச்சோ! சென்னைக்கு வந்ததும் கால் பண்ணுறேன்னு அம்மா கிட்ட சொல்லிருந்தேனே”
மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டவள் காற்றில் படபடத்த துப்பட்டாவைப் பிடித்தபடி போனோடு பால்கனிக்குச் சென்றாள். அங்கே நின்றவள் அன்னையின் மொபைலுக்கு அழைத்தாள்.
“வேதா! அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே தங்கம்?” தழுதழுத்தது கனகவல்லியின் குரல்.
‘இங்கே ஒருவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை’
மனதுக்குள் சொல்லிக்கொண்டவள், “பிரச்சனை எதுவுமில்லமா. எல்லாம் நார்மலா தான் இருக்கு” என்றாள்.
“அது… அவர்.. மாப்..”
“ம்மா” அழுத்தமாய்த் தடுத்தது வேதவதியின் குரல். ஏனோ அந்த அழைப்புக்குரியத் தகுதி அட்சரனுக்கு இல்லை என்ற எண்ணம் அவளுக்கு.
“மாப்பிள்ளைனு கூப்பிட வேண்டிய அவசியமில்லம்மா. பரஸ்பர மரியாதையும் அன்பும் இல்லாதப்ப முறை சொல்லிக் கூப்பிடுறதால மட்டும் அங்க உறவு பலமாகிடுமா?”
வெறும் அழைப்புக்கே மகள் மறுப்புரை வாசிக்கவும் மனம் கனத்தது கனகவல்லிக்கு.
“எதுவும் சொன்னாரா உன்னை?” மனம் தாங்காமல் கேட்டார்.
“அவர் சிரிச்ச முகமா அழைச்சுப்பார்னு உனக்குத் தோணுச்சாம்மா? கல்யாணம் நடந்த விதத்தை வச்சுப் பார்த்தா அது சாத்தியம்னு தோணுதா உனக்கு?”
“எல்லாம் சரியா இருக்குனு சொன்னியே வேதா”
“சரியா இருக்குனுதான் சொன்னேன். பிரச்சனை தீர்ந்துடுச்சுனு சொல்லலையே. அது சீக்கிரத்துல தீர்ந்து போற பிரச்சனையும் இல்லம்மா. என் இடத்துல நான், அவர் இடத்துல அவர் – எங்களுக்கான இடத்துல நாங்க ரெண்டு பேரும் சரியா இருக்குறோம். நீ எதை நினைச்சும் வருத்தப்படாத. நைட் அப்பா வந்ததும் பேசுறேன். ட்ராவல் பண்ணுனதுல உடம்பு வலி. நான் குளிச்சிட்டுத் தூங்குறேன்”
சொன்னவள் பேசிவிட்டுத் திரும்பியபோதே நாசிக்குள் ஏறியது சிகரெட் நெடி.
“சைக்!” எரிச்சலோடு பார்த்தவளுக்குப் பக்கவாட்டுப் பால்கனியில் நின்றிருந்தான் அட்சரன்.
இரு பால்கனிகளுக்கும் இடையே ஒரு அடி தூரம் மட்டுமே. இருவரது அறையும் அடுத்தடுத்து என்பதால் அடுத்தடுத்தப் பால்கனிகளில் இருவரும் ஒரே நேரத்தில் வந்து நின்றார்கள்.
அட்சரன் ஆசுவாசத்துக்காகத் தேடுவது வெண்குழல் பெண்ணைத்தான். அதே நேரம் வேதவதி அவளது அன்னையிடம் பேசியதைக் கேட்கவும் நேர்ந்தது.
‘ஐயோ அம்மா’ என்று அழுது அரற்றாமல் அவள் சுருக்கமாய்த் தெளிவாய்ப் பேசியதைக் கேட்டவனுக்கு, அவளைச் சமாளிக்கவும் விருப்பமற்ற இந்தத் திருமணத்திலிருந்து சுமூகமாகத் தப்பிக்கவும் ஒரு உபாயம் தோன்றியது.
அதை மனதில் வைத்துக்கொண்டே அவளைப் பார்த்தபடி நின்றவன், அவள் சட்டெனத் திரும்பியதும் வேண்டுமென்றே உதடு குவித்துப் புகையை குப்பென புகைவண்டி போல வெளியேற்ற, வேதவதியோ கடுப்பாக வாய்க்குள் முணுமுணுத்தாள்.
“ஏய்! என்ன முணுமுணுக்குற?” என்று வம்பு வளர்ப்பதற்காகவே கேட்டான் அட்சரன்.

“எனக்குப் பேர் இருக்கு. ஏய் ஓய்னு கூப்பிட்டா எனக்குக் காது கேக்காது”
“அப்படிங்களா? சரிங்க! மிஸஸ் வேதவதி அட்சரன்! தாங்கள் வாய்க்குள் என்ன முணுமுணுத்தீர்கள்?”
திருமதி அட்சரன் என்ற அழைப்பு அவளுக்கு வேப்பிலைச்சாறில் வேகவைத்த பாகற்காய் கூட்டு சாப்பிடுவது போல அத்துணை கசப்பாய் இருந்தது.
முகத்தைச் சுழித்தவள், “குப்குப்னு புகை விடுற அந்த வாய்க்குள்ள பிஜிலி வெடிய கொளுத்திப் போடணும்னு சொன்னேன்” என்று கடுகடுத்துவிட்டு அங்கிருந்து போய்விட்டாள். அவள் சொன்ன வெடி விவகாரம் கொஞ்சம் எரிச்சல் மூட்டினாலும், தன்னைப் போலவே அவளுக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்பது உறுதியானதில் அட்சரனுக்குக் குஷியே! அதைவிடப் பெரிய சந்தோஷம், தந்தை தன்னிடம் முகம் கொடுத்துப் பேசியதுதான்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

