சைக்கோ அனாலிசிஸ் மற்றும் சைக்கோடைனமைட் தெரபி – இவை இரண்டும் சைக்கோதெரபி முறைகளாகும். இவை இரண்டுமே பிரச்சனைக்குரிய குணாதிசயங்கள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை மாற்றியமைக்கக்கூடிய சிகிச்சை முறைகளாகும். அதிலும் சைக்கோ-அனாலிட்டிக்கல் சம்பந்தப்பட்ட தெரபிகள் தெரபிஷ்டுக்கும் நோயாளிக்குமிடையே நல்லதொரு நட்பை உருவாக்கும். அதன் மூலம் நோயாளியின் பாதிப்பு எவ்வளவு தீவிரம் என்பதை தெரபிஷ்ட் தெரிந்துகொள்ள முடியும். அதோடு நோயாளிகள் தெரபிஷ்டுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை வைத்து தங்களது குணநலன்களைப் புரிந்து கொள்வார்கள். சைக்கோ அனாலிசிஸ் சிக்மண்ட் ஃப்ராடுடன் சேர்த்து பேசப்பட்டாலும் அவரது காலத்தில் இருந்த முறையைத் தாண்டி அது நிறைய மாறுதலுக்குட்பட்டு விரிவடைந்திருக்கிறது தற்போது.
-American Psychological assoiciation
இதன்யா மூச்சிறைக்க இரகசியப்பாதையின் வழியே நடந்து வந்து சக்கரவர்த்தி தேயிலைத்தோட்டத்திலிருந்து கீழ்நோக்கி சரிந்த சரிவு முடிந்து சமதளம் ஆரம்பித்திருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அவள் நின்ற இடத்திலிருந்து தலைக்கு மேலே காக்கை கூட்டம் பறந்து கொண்டிருந்தது. அவற்றின் கதறல் இன்னும் ஓய்ந்த பாடில்லை.
நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தவளின் பார்வை வட்டத்தில் விழுந்தது அக்காட்சி. மிகவும் கொடூரமான காட்சியும் கூட.
ஒரு காகத்தை கூர்மையான கம்பின் முனையில் குத்திக் கொலை செய்து கம்பை யாரோ அங்கே ஊன்றியிருந்தார்கள். அந்தக் காக்கை இறந்ததற்காக தான் மற்ற காகங்கள் கரைந்து கொண்டிருந்தன.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அனாவசியமாக ஒரு உயிரை எடுக்கும் எண்ணம் மனோவியாதி பிடித்தவர்களுக்கு மட்டும் தான் வருமென நினைத்தவள் திடுமென இது ஏன் சாத்தான் வழிபாட்டு குழுவினரின் வேலையாக இருக்கக்கூடாதென யோசித்தாள்.
யோசித்தபடியே சரிவின் மேலே இருந்த சி.சி.டி.வி கேமராவை உற்று நோக்கினாள் அவள்.
இக்காட்சியைத் தான் மானிட்டரில் பார்த்துவிட்டுத் திகைத்துப் போயிருந்தான் ராக்கி. உடனே ஜூம் செய்து பார்த்தபோது அவனாலும் காக்கை கம்பில் குத்திவைக்கப்பட்டதைப் பார்க்க முடிந்தது.
உடனே மூளை பரபரவென வேலை செய்தது. ஒருமுறை ரோஷண் சாத்தானுக்குக் காகம் ஒன்றை பலி கொடுத்தான்.
அவர்கள் குழுவில் புதிதாக ஒருவனுக்கு தலைமை குருவுக்கான அனைத்துச் சடங்கு முறைகளையும் கற்றுக்கொடுத்த பிறகு காகம் ஒன்றை இவ்வாறு நள்ளிரவில் சாத்தானுக்குப் பலி கொடுப்பார்கள். முத்துவுக்காக ரோஷண் இதே போல சடங்கு ஒன்றை செய்ததாக ராக்கிக்கு ஞாபகம்.
இனியாவின் வழக்கு முடிந்ததும் காவல்துறை செய்த முதல் வேலையே ரோஷணின் கல்ட் குழுவிலிருந்த உறுப்பினர்கள் அனைவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து இனி சாத்தான் வழிபாடு எல்லாம் செய்யக்கூடாது குறிப்பாக காட்டுக்குகைக்கு யாரும் செல்லக்கூடாதென எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியிருந்தார்கள்.
சில நாட்கள் காவல்துறையினர் அங்கே கண்காணிக்க கூட செய்தனர். இப்போது சி.சி.டிவி வைத்து கண்காணிப்பு தொடர்கிறது. இந்நிலையில் மீண்டும் காகம் பலி கொடுக்கப்பட்டதை வைத்துப் பார்த்தால் இன்னுமே சாத்தான் வழிபாட்டு குழுவினர் இயங்கிக்கொண்டிருப்பது போல் அல்லவா தெரிகிறது!
எதையோ யோசித்தவன் முந்தைய இரவில் இதன்யா நின்ற இடத்திலுள்ள கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்க்கலாமென அதை ஓடவிட்டான்.
ஆனால் அந்தக் கேமராவில் குறிப்பிட்ட நேரத்தில் எதுவும் பதிவாகாமல் வெறுமெனே அந்தக் காலத்து டி.வியில் கேபிள் கனெக்சன் கட் ஆனால் புள்ளி புள்ளியாக வருமே அது போல இரைச்சல் மட்டுமே பதிவாகியிருந்தது!
ராக்கி பார்த்துக்கொண்டே இருக்கும்போதே திடீரென கேமராவில் பதிவான காட்சிகள் ஓடத்துவங்கின. ஆனால் அதில் சொல்லிக்கொள்ளும்படி யாரும் வரவில்லை. ஜூம் செய்து பார்த்தபோது காகம் ஒன்று கம்பில் உதிரம் வழிய வழிய குத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்படி என்றால் கேமரா வேலை செய்யாத நேரத்தில் தான் யாரோ காகத்தைக் கொன்று இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று யோசித்தவனுக்குப் பின்னர் வேலையில் கவனம் செல்லவில்லை.

அதே நேரத்தில் இதன்யாவோ அங்கே எதுவும் காலடித்தடங்கள் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தாள். காலடித்தடங்களே இல்லை. யாரோ ஒருவர் செய்யாமல் இக்காரியம் நடந்திருக்காது.
அவளது கண்களுக்கு எந்தத் தடயமும் அகப்படவில்லை. எனவே அங்கிருந்து கிளம்பினாள் இதன்யா.
மனம் என்னவோ இது சாத்தான் வழிபாட்டுக்குழுவின் வேலையாக இருக்குமென்றே நம்பியது. இதைப் பற்றி மார்த்தாண்டனிடம் பேசவேண்டுமென்ற முடிவோடு காவல்நிலையத்தை நோக்கி நடக்கும்போது ராக்கி அவசரமாக எங்கேயோ போவதைக் கவனிக்க நேர்ந்தது.
ஒருவேளை அண்ணனின் இடத்தை நிரப்ப தம்பி முயல்கிறானோ? சந்தேகம் முகிழ்த்தது இதன்யாவின் மனதில்.
ஐயத்தோடு காவல்நிலையத்துக்குள் வந்தவள் மார்த்தாண்டனிடம் தான் பார்த்த காட்சியைப் பற்றி கூறிவிட்டாள்.
“எலக்சன் வரப்போறதால பணப்பட்டுவாடாவ தடுக்குற வேலையில கொஞ்சம் என்கேஜ் ஆகிருக்கோம் மேடம்… ஸ்டேசன்ல உள்ளவங்க எல்லாருக்கும் செக்போஸ்ட்ல தான் டியூட்டி… அதனால தான் முன்ன மாதிரி ஊர்ல நடக்குறதை கண்காணிக்க முடியல… அந்த இடத்துலயும் சி.சி.டி.வி கேமரா வைக்க டிப்பார்ட்மெண்ட்ல பேசுறேன்” என்றார்.
“பேசுங்க மார்த்தாண்டன் சார்… சிலரோட மூடத்தனத்தால இன்னொரு உயிர் இந்த ஊருல போகக்கூடாது” என்றாள் இதன்யா தீவிரமானக் குரலில்.
அதே நேரம் ராக்கி தேவாலயத்தில் பாதிரியார் பவுலிடம் தீவிரக்குரலில் பேசிக்கொண்டிருந்தான்.
“கொஞ்சநாள் அமைதியா கிடந்தவங்க மறுபடியும் எழுந்து ஆட்டம் போட ஆரம்பிச்சிட்டாங்க ஃபாதர்… இது எங்க போய் முடியப்போகுதுனு தெரியல… மறுபடியும் பிரச்சனை ஆச்சுனா போலீஸ் என்னைச் சந்தேகப்படுவாங்களோனு பயமா இருக்கு ஃபாதர்… இப்ப அண்ணாவும் இல்ல, பத்ராவும் இல்ல… நீங்க மட்டும் தான் எனக்குனு இருக்கிங்க… சப்போஸ் என்னைப் போலீஸ் பிடிச்சுட்டுப் போனாலும் நீங்க என்னை வெளிய எடுத்துடுவிங்க தானே ஃபாதர்?”
கல்லூரிப்படிப்பை முடிக்கப் போகிறான். இன்னும் தைரியமில்லாமல் பேசுகிறான். அவனைத் தோளோடு அணைத்துக்கொண்டார் பாதிரியார் பவுல்.
“நீ மனசு மாறி நல்ல வழில போறப்ப உன்னை யாரும் தொந்தரவு பண்ணாம பாத்துக்க வேண்டியது என்னோட கடமை… உன் பாதுகாப்பு என்னோட பொறுப்பு ராக்கி… நீ உன் ஃபியூச்சர்ல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுப்பா… உன்னோட பதற்றம் போலீசை சந்தேகப்படவைக்கும்… எந்தத் தப்பும் செய்யாதவன் எதுக்கும் பயப்படவேண்டியது இல்ல”
அவர் தைரியம் கொடுத்ததில் தலையை ஆட்டினான் ராக்கி.
அன்று மாலை முபீனாவைக் கணினி வகுப்பிலிருந்து பொன்மலைக்கு அழைத்து வந்த இதன்யாவின் காதில் முருகன் கோவிலில் இருந்து வந்த ஒலிபெருக்கி அறிவிப்பு விழுந்து வைத்தது.
“ஊர் மக்களுக்கு ஒரு அறிவிப்பு… நம்ம ஊர் முருகன் கோவில்ல இன்னைக்கு ராத்திரி ஊர்க்கூட்டம் போடப்போறோம்… ஊர்த்திருவிழா தடைபட்டுப் போனதால ஊருக்குள்ள அசம்பாவிதம் நிறைய நடந்துடுச்சு… அதனால பங்குனி மாசம் உத்திரத்துல திருவிழாவை நடத்தலாம்னு கோவில் கமிட்டி முடிவு பண்ணிருக்கு… திருவிழா வரி விவரம் பத்தி பேச ராத்திரி தவறாம ஊர்க்கூட்டத்துல எல்லாரும் கலந்துக்கணும்னு கோவில் கமிட்டி சார்பா கேட்டுக்குறோம்”
இதன்யாவுக்கு இத்தகைய திருவிழாக்கள், ஊர்க்கூட்டங்கள் எல்லாம் புதிது. ஆர்வத்தோடு ரசூல் பாயிடம் அதை பற்றி விசாரித்தாள் அவள்.
“வழக்கமா தைப்பூசம் திருவிழா நம்ம ஊர் கோவில்ல சிறப்பா நடக்கும் மேடம்… பூங்குன்றம், திருநெல்வேலில இருந்து கூட மக்கள் கூட்டம் கூட்டமா வருவாங்க… இந்தத் தடவை திருவிழா தள்ளிப் போய் ஊர்ல கொடூரமான ரெண்டு சாவு வேற நடந்திருக்கு… அதனால தெய்வக்குத்தம் ஆகிருக்குமோனு கோவில் கமிட்டி நினைக்குறாங்க…. என்னைக் கேட்டிங்கனா திருவிழா நடத்தாம ஊரே இருளடைஞ்சு போன மாதிரி தான் தெரியுது… அது மட்டும் நடந்துச்சுனா ஊருக்கு ஒரு பாசிட்டிவான வைப்ஸ் கிடைக்கும்”
இரவானதும் பொடியன் ஒருவன் ரசூல் பாயை ஊர்க்கூட்டத்துக்கு அழைக்க அவரும் கிளம்பினார்.
இதன்யாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தங்களது மதத்துக்குச் சம்பந்தமற்ற நிகழ்வு பற்றிய கூட்டத்துக்கு ரசூல் பாய் ஏன் செல்கிறார் என்ற திகைப்பை கேள்வியாக்கி அஸ்மத்தின் செவிகளில் போட்டுவிட்டாள் அவள்.
“இந்த ஊருல காலங்காலமா எல்லா மதத்துக்காரங்களும் ஒற்றுமையா பழகி வாழ்ந்துட்டிருக்கோம் மேடம்… எங்களுக்குள்ள இதுவரை மதத்தை அடிப்படையா வச்சு எந்தச் சண்டை சச்சரவும் வந்ததில்ல… திருவிழா நல்லபடி நடக்க எங்க சமுதாயத்துல இருந்து ஒத்துழைப்பு குடுப்போம்… அதான் ஊர்க்கூட்டம் வச்சதும் முபீ வாப்பாவ அழைச்சிட்டுப் போறாங்க… நம்ம ஃபாதரும் அங்க போவாரு”
சாத்தான் வழிபாட்டுக்குழுவை வைத்து பொன்மலை மீது இதன்யாவுக்கு எக்கச்சக்க அதிருப்தி இருந்தது. இப்போதும் இருக்கிறது. அதையும் தாண்டி மதவேறுபாடின்றி பழகும் மக்கள் அவளைக் கவர்ந்தார்கள்.
கூடவே ஒரு பெருமூச்சும் வெளிப்பட்டது அவளிடம்.
ஒருபக்கம் மதவேறுபாடின்றி பழகும் மக்கள்! இன்னொரு பக்கம் சாத்தான் மீது நம்பிக்கை வைத்து சின்னஞ்சிறு உயிர்களில் ஆரம்பித்து மனித உயிர் வரை பலி கொடுக்கத் தயங்காத முட்டாள் கூட்டம்! பலவித மனிதர்களின் கலவையாய் பொன்மலை இதன்யாவை வழக்கம் போல திகைப்பில் ஆழ்த்த தவறவில்லை.
ஊர்க்கூட்டம் முடிய நடுநிசி ஆகிவிடுமென்பதால் ரசூல் பாய்க்குச் சாப்பாடு எடுத்துவைத்துவிட்டு பெண்கள் மூவரும் சாப்பிட்டார்கள். முபீனா கணினி வகுப்பு அனுபவங்களை விவரிக்க அஸ்மத் அதை ஆச்சரியத்துடன் கேட்க இதன்யாவோ இவை அனைத்தையும் தாண்டி கம்பில் குத்திவைக்கப்பட்டிருந்த இறந்த காக்கையைப் பற்றி மட்டுமே சிந்தித்தபடி சாப்பிட்டு முடித்தாள்.
அதே நேரம் பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியில் இருக்கும் தனது பங்களாவில் ஓய்வாக அமர்ந்திருந்தார் கலிங்கராஜன்.
சற்று முன்னர் தான் ஊர்க்கூட்டம் பற்றி கோவில் கமிட்டியினர் அவருக்கு மொபைலில் தகவல் தெரிவித்திருந்தார்கள்.
“இது உங்க கொள்ளுத்தாத்தா காலத்துல இருந்து வழிவழியா உங்க குடும்பத்துக்கு முதல்மரியாதை குடுக்குற கோவில்… இந்த வருசம் திருவிழாக்கு ஒரு வீட்டுக்கு ரெண்டாயிரம் ரூவா வரி போட்டிருக்கோம்.. முதல் வரிய உங்க கிட்ட வாங்குறது தான் வழக்கம்” என்றார் கோவில் தர்மகர்த்தா பொன்னுரங்கம்.
“நீங்க நம்ம ஊரு ஆள் ஒருத்தரை அனுப்பிவைங்க… வரிய குடுத்து விடுறேன்… அது போக கோவிலுக்கு எதுவும் வேணும்னா தயங்காம சொல்லுங்க… என் பங்கை குடுக்க நான் தயாரா இருக்குறேன்”
“ரொம்ப சந்தோசங்கய்யா… கோவிலுக்கு ஏறுற படிக்கட்டுக்குப் பக்கவாட்டுல சுவர் கட்டுனா நல்லா இருக்கும்… ஐயா அதை மட்டும் முடிச்சுக் குடுத்திங்கனா சந்தோசம்” பொன்னுரங்கத்தின் குரலில் பணிவு சொட்டியது.
கலிங்கராஜன் சில நொடிகள் யோசித்து பின்னர் தனது முடிவைத் தெரிவித்தார்.
“திருவிழாக்கு இன்னும் நாள் இருக்கே… கவலையேப்படாதிங்க.. எனக்குத் தெரிஞ்ச பில்டரை வச்சு பக்கவாட்டுச்சுவரைக் கட்டி முடிச்சுக் குடுத்துடுறேன்… இன்னும் ரெண்டு நாள்ல அந்த பில்டரை ஊருக்கு வந்து கோவில் கமிட்டிய பாக்க சொல்லுறேன்… என்ன மாதிரி கட்டணும்னு நீங்க சொல்லிட்டிங்கனா அவர் நல்லபடியா செஞ்சு குடுத்துடுவார்… கோவிலுக்காக வேற ஏதாச்சும் நான் செய்யணுமா?”
“நீங்க இதை செய்யுறதா வாக்கு குடுத்ததே சந்தோசங்கய்யா… நாளைக்க்கு நானே பாளையங்கோட்டைக்கு வந்து உங்களைச் சந்திச்சு முதல் வரியை வாங்கிக்குறேன்”
“சரி… நல்லது”
பொன்னுரங்கத்தின் அழைப்பைத் துண்டித்துவிட்டு விச்சிராந்தியாக அமர்ந்தவரின் மனதில் தான் எத்துணை அலைக்கழிப்பு! முருகனுக்கு இதெல்லாம் செய்தால் அவன் தனது அலைக்கழிப்பைக் குறைக்க மாட்டானா என்ற நப்பாசை!
இதெல்லாம் முருகனை நம்பாது வழிதவறி போன போதே யோசித்திருக்க வேண்டும் முட்டாள் என அவரது மனசாட்சி கலிங்கராஜனை வாட்டியெடுக்க உள்ளுக்குள் நிகழ்ந்த குழப்பமான போராட்டத்தை மறைத்தபடி கண் முடி அமர்ந்திருந்தவர் மீண்டும் மொபைல் சிணுங்கவும் கண்களைத் திறந்தார்.
தொடுதிரையில் வந்த பெயரைக் கண்டதும் பேயைக் கண்டது போல பதறியடித்து அழைப்பை ஏற்றார்.
“ஹ..ஹலோ”
“ஊர் கோவில் கமிட்டில இருந்து உன் கிட்ட எதுவோ கோரிக்கை வச்சிருக்காங்க போல?”
“ஆஆ.. மா”
“அதை நிறைவேத்துறதா சொல்லிக்கிட்டு ஊர்ப்பக்கம் வந்துடாத… அப்பிடி வந்தனா என்ன நடக்கும்னு ஞாபகம் இருக்குல்ல?”
“இல்ல… இல்ல… நான் வர மாட்டேன்”
“அந்தப் பயம் உனக்கு எப்பவும் இருக்கணும்… ஊர்த்திருவிழாக்கு வரணும்னு ஆசையா இருக்குதா?”
போலி பச்சாதாபம் கொட்டியது மறுமுனையில் கேட்ட குரலில்.
“ஆ…மா”
உடனே கடுமையான சிரிப்பொலி கேட்டது. அது காதைத் துளைப்பது போல கொடூரமாக ஒலிக்கவும் கலிங்கராஜன் மொபைலை செவியிலிருந்து சில செண்டிமீட்டர்கள் விலக்கி வைத்தார்.
“ஏய்.. லைன்ல இருக்கியா இல்லையா?”
அந்தக் குரல் கர்ஜிக்கவும் அவசரமாக மொபைலைக் காதில் ஒற்றினார்.
“இருக்கேன்… சொல்லுங்க”
“ஊர்த்திருவிழாக்கு வரணும்னு ஆசை இருந்துச்சுனா தாராளமா வா… ஆனா அந்த போலீஸ்காரி கிட்ட நீயோ உன் பசங்களோ பேசுறதைப் பாத்தேன்னா, என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்ல?” மீண்டும் கர்ஜனை.
“தெரியும்… நான் பேசமாட்டேன்… பசங்களை அங்க அழைச்சிட்டு வரப்போறதில்ல… ப்ளீஸ் என் பசங்களை எதுவும் பண்ணிடாத”
“நீ உன்னோட எல்லைல இருந்தனா நான் உன்னையும் உன் பசங்களையும் எதுவும் பண்ணமாட்டேன்… தப்பித் தவறி உன் லிமிட்டைக் க்ராஸ் பண்ணுன, உன் பசங்க மூனு பேரும் உன் மூத்தப்பொண்ணு மாதிரி பொணமா கிடைப்பாங்க ஜாக்கிரதை.. உனக்கு உன் மூத்தப்பொண்ணை விட இந்த மூனு பேரை தானே ரொம்ப பிடிக்கும்? அவங்களை பொணமா பாக்க ஆசை இருந்துச்சுனா அந்த போலீஸ்காரி கிட்ட பழக விடு”
“ஐயோ அப்பிடிலாம் எதுவும் பண்ணிடாத… நான் சத்தியமா என் பசங்களை அங்க அழைச்சிட்டுவரமாட்டேன்… இதன்யா மேடம் கிட்ட பழகவும் விடமாட்டேன்.. நீ சொன்னதுக்காக என் சொந்த ஊரை விட்டு இவ்ளோ தூரம் என் பசங்களை அழைச்சிட்டு வந்திருக்கேன்… அப்புறம் ஏன் மறுபடி அவங்களை அங்க கூட்டிட்டுப் போகப்போறேன்?”
கலிங்கராஜன் பேசிக்கொண்டிருக்கையிலேயே அழைப்பு துண்டிக்கப்பட்டது. அவரது நிம்மதி அடியோடு தொலைந்து போனது. இப்படி தான் அலுவலகத்திலிருந்தபோது இந்த எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசியவனுடைய மிரட்டலை கலிங்கராஜன் மதிக்காமல் இருந்திருப்பார், அவன் மட்டும் அந்த இரகசியத்தைச் சொல்லாமல் இருந்திருந்தால்.
ஆனால் சொன்னானே! சொன்னதோடு மட்டுமன்றி அவர் மட்டும் தான் சொல்வதைக் கேட்காவிட்டால் காவல்துறையிடம் இந்த இரகசியத்தைச் சொல்லிவிடுவேன் என்று மிரட்டவும் செய்தானே! அதற்கு பிறகும் அக்குரலுக்குரியவனை குறைத்து எடைபோடுவது தவறென தோன்றியது கலிங்கராஜனுக்கு.
அவன் சொன்னது போலவே குழந்தைகளோடு வீட்டைக் காலி செய்துவிட்டார். இனி பொன்மலையின் மண்ணைத் தன் குழந்தைகள் மிதிக்கக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
இதுவரை தனது குடும்பத்தில் வீசிய புயல்கள் போதும். இனியாவது தன் பிள்ளைகள் நிம்மதியாக இருக்கவேண்டுமென ஒரு தந்தையாக கலிங்கராஜனின் மனம் யோசிக்க ஆரம்பித்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

