சைக்கோபாத்களை Primary psychopaths, Secondary Psychopaths (Sociopaths), Dissocial Psychopaths, Pseudopsychopaths என நான்கு வகைப்படுத்தலாம். Primary Psychopaths என்பவர்கள் பிறக்கும்போதே குறைவான ஆர்ப்பிட்டோஃப்ரண்டல் கார்டக்ஸ் மற்றும் உணர்வு செயலிகள், சிறிய அமிக்டலா, அமிக்டலாவுக்கும் ப்ரீ ஃப்ரண்டல் கார்டக்சுமிடையே உள்ள இணைப்புகளில் வேறுபாடுகள், நீளமான மற்றும் பெரிய கார்பஸ் கலோசம் கொண்ட மூளை அமைப்போடு பிறப்பார்கள். சாதாரண மனிதர்களுடைய மூளையோடு ஒப்பிடும்போது இந்த ப்ரைமரி சைக்கோபத்களின் மூளை அதிக தீட்டா மூளை அலைகளை விழித்திருக்கும்போது கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஒரு உணர்வின் நரம்பியல்ரீதியான அனுபவத்துக்கும் உடல்ரீதியான எதிர்வினைக்குமான இணைப்பே இருக்காது.”
-By Dan Baxter, ESTP Primary psychopath and psychopathy Researcher
விண்டேஜ் ஆம்பியன்சுடன் ஜொலித்த கபேயின் உள் அலங்காரத்தை ரசனையுடன் பார்த்தபடி முரளிதரனுக்காகக் காத்திருந்தாள் இதன்யா.
அவள் பொன்மலையிலிருந்து சென்னைக்குத் திரும்பி அன்றோடு ஒரு வாரம் கடந்துவிட்டிருந்தது. கட்டாயம் ஓய்வு தேவை என்ற மருத்துவரின் ஆலோசனையை ஒதுக்கிவிட்டு மறுநாளே வங்கி கிளைக்கு நேரடியாகப் போய் நின்றவள் தனது கணக்கில் நடந்த குளறுபடிகள் பற்றி மேலாளரிடம் பேசிவிட்டாள்.
அவரும் இது தொழில்நுட்பக்கோளாறாகத் தான் இருக்க முடியும் என்றார். வங்கியின் தலைமை அலுவலகத்துக்குத் தகவல் அனுப்பி நடந்த குளறுபடிகளுக்கான காரணம் என்ன என்று விசாரித்து இதன்யாவுக்குத் தகவல் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தார் மேலாளர்.
அவளது பணியிடைநீக்கம் பிரச்சனையை விட தலையை வண்டாகக் குடைந்தது ஏகலைவன் மருத்துவமனையில் அவனையறியாது சொல்லி விட்டுப் போன சொற்கள். கிட்டத்தட்ட ஒரு வாக்குமூலமென இதன்யாவின் காவல்துறை மூளை அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறது எட்டு நாட்களாக.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஓரளவுக்கு மேல், தான் மட்டுமே அதை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்வதை விட கொலையாளியைப் பற்றிய ஊகத்தைச் சொன்ன முரளிதரனிடமே பேசிவிடுவோமே என்று எண்ணித் தான் அவரை கபேக்கு வரச் சொல்லியிருந்தாள் அவள்.
அவர் வரும்வரை கபேயின் உள் அலங்காரத்தை கேரமல் லாட்டேவை ருசித்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள்.
கிட்டத்தட்ட இருபது நிமிடம் கழித்து “குட் நூன் இதன்யா மேடம்” என வணக்கம் வைத்தபடி வந்தார் முரளிதரன்.
“குட் நூன் முரளி சார்… சண்டேவும் அதுவுமா உங்களைத் தொந்தரவு பண்ணுனதுக்குச் சாரி” என இதன்யா மன்னிப்பு வேண்ட
“இட்ஸ் ஓ.கே மேடம்… நீங்க காரணம் இல்லாம கூப்பிட்டிருக்க மாட்டிங்கனு எனக்குத் தெரியும்” என்றவர் கபே சிப்பந்தியிடம் தனக்கு ஒரு அமெரிக்கானோவைச் சொல்லிவிட்டு இதன்யாவின் பணியிடைநீக்கத்தில் எதுவும் மாற்றம் உண்டா என விசாரித்தார்.
இதன்யாவோ வாய்ப்பே இல்லை என்பது போல உதடு பிதுக்கினாள்.
“பேங்க் மேனேஜர் ஹெட் ஆபிசுக்கு இன்ஃபார்ம் பண்ணிருக்கார்… அவங்க என்ன பிரச்சனைனு சொன்னதும் எனக்கு நியூஸ் வரும்” என்றாள்.
கூடவே “என்ன ஆதாரத்தை நான் காட்டுனாலும் என்னை சஸ்பெண்ட் பண்ணுன முடிவை டிப்பார்ட்மெண்ட்ல மாத்திக்கவா போறாங்க முரளி சார்? மாத்துனா அவங்க முதலாளிக்குக் கோபம் வந்துடாது?” என்றாள் விரக்தியோடு.
“என்ன மேடம் நீங்களே இப்பிடி பேசலாமா?” என முரளிதரன் அவளுக்கு ஆறுதல் சொல்லும்போது அமெரிக்கானோவும் வந்துவிட அதை அருந்தியபடி இதன்யா எதற்காக அழைத்தாள் என்பதை அவள் சொல்ல சொல்ல கேட்க ஆரம்பித்தார்.
“நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகுற அன்னைக்கு என்னைப் பாக்க ஏகலைவன் அங்க வந்திருந்தான்”
முரளிதரனின் புருவங்கள் யோசனையில் நெறிந்தன.
“என் அக்கவுண்ட்ல நடந்த குளறுபடிக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்குறதை கர்வமா சொல்லிக் காட்டுனான்… அவனுக்கும் கிளாராவுக்கும் சம்பந்தம் இருக்குனு சொல்லி இனியா கேஸ்ல அவனை அரெஸ்ட் பண்ணுனதுக்கு என்னைப் பழி வாங்கிட்டதா சொல்லி சிரிச்சான்… பட் நான் உங்களை வரச் சொன்னது இதைச் சொல்லுறதுக்காக இல்ல… அன்னைக்கு அவன் என் கிட்ட கவனக்குறைவா சில வார்த்தைகளை விட்டான்”
நிறுத்திய இதன்யா “குறுகுன நேரத்துல சக்சஸ்ஃபுல்லான ப்ளானை போடுறதுல நான் கில்லாடி” என்ற ஏகலைவனின் கூற்றை முரளிதரனிடம் கூறிவிட்டு அவரது பதிலுக்காகக் காத்திருந்தாள்.
“வாட்? இது நான் சொன்ன பாயிண்டோட ஒத்துப்போகுதே”
முரளிதரனும் இப்போது யோசனையில் ஆழ்ந்தார். இதன்யா கடைசி மிடறு லாட்டேவைக் காலி செய்தவள் “சட்டத்துக்கும் நமக்கும் தேவையான ஆதாரம் கிடைச்சுதால இனியா கேஸ் முடிஞ்சிட்டதா நாம நினைச்சோம்… பட் இந்தக் கேஸ் அதுவா முடிஞ்சுதா இல்ல யாரோ பின்னாடி இருந்து வேலை பாத்து கேஸை முடிச்சு வச்சாங்களானு சந்தேகமா இருக்கு முரளி சார்” என்றாள்.
“அப்ப அந்த எவிடென்ஸ் எல்லம ஃபேப்ரிகேட்டட்னு சொல்லுறிங்களா மேடம்?” தனது சந்தேகத்தைக் கேட்டார் முரளிதரன்.
இல்லை என மறுத்தாள் இதன்யா.
“அந்த எவிடென்ஸ் எல்லாமே உண்மையானது தான்… அதுல எனக்குச் சந்தேகமில்ல… ஆனா இந்தப் பொருள் எல்லாம் பின்னாட்கள்ல எவிடென்சா பயன்படுத்தலாம்னு யாரோ பத்திரப்படுத்தி நம்ம கவனத்துக்கு வராம பாத்துக்கிட்டாங்களோனு எனக்குச் சந்தேகம் வருது சார்”
“அந்த யாரோ ஏகலைவனா இருக்கலாம்னு நினைக்குறிங்களா?”
“ஆமா சார்… அந்தாளால இல்லாத ஒன்னை இருக்குற மாதிரி இட்டுக் கட்ட முடியுதுனா இந்தக் கொலைப்பழியை அந்தாளு இன்னொருத்தர் மேல திசை திருப்பிருக்க முடியாதா என்ன? அந்தாளால சாட்சி ஆதாரங்களைக் கலைக்கவும் முடியும்.,.. உருவாக்கவும் முடியும்… ஒன்னு அவர் தன்னைக் காப்பத்திக்க இதை செஞ்சிருக்கணும்… இல்லனா நிஷாந்தைக் காப்பாத்தச் செஞ்சிருக்கணும்… நிஷாந்த் கொலை நடந்தப்ப சென்னைல இருந்ததுக்கு ஸ்ட்ராங்கான அலிபி அண்ட் எவிடென்ஸ் இருக்குறப்ப அவனைக் காப்பாத்த ஏகலைவன் இவ்ளோ தகிடுதத்தம் பண்ணுனார்ங்கிற பாயிண்ட் அடிபட்டுப் போயிடுது… சோ என் என்னோட சந்தேகம் எல்லாம் ஏகலைவன் மேல மட்டும் தான்”
“உங்க டவுட் நியாயமானது.. பட் லாஜிக் இடிக்குதே”
“எனக்கு என்னோட டவுட் க்ளியர் ஆகணும்… அதுக்காக தான் நான் உங்க கிட்ட சஜஷன் கேக்கலாம்னு வரச் சொன்னேன்”
முரளிதரன் நெற்றியைத் தடவி யோசித்தார்.
“மொபைல் அண்ட் லேப்டாப்பை ஏகலைவன் தான் குடுத்தார்னு சொன்ன முத்து கோர்ட்ல அந்தர் பல்டி அடிச்சான்… அவ்ளோ நாள் அமைதியா இருந்த கலிங்கராஜன் வீட்டு கார்டனர் திடீர்னு வந்து கிளாராவோட நடவடிக்கைல சந்தேகம் இருக்குறதா கேசுக்கு முக்கியமான ஆதாரத்தைக் கொண்டு வந்து குடுத்தார்… நம்ம கிளாராவை சஸ்பெக்ட் லிஸ்டுல இருந்து அக்யூஸ்ட் லிஸ்டுல சேர்த்ததே அதனால தானே… ஒருவேளை கிளாராவ மாட்டிவிடணும்னு யாரோ இதெல்லாம் பண்ணிருப்பாங்களா?”
“கிளாராவுக்கு எதிரிகள் யாருமில்ல முரளி சார்… நவநீதத்துக்கும் ஜானுக்கும் அந்தம்மா மேல வெறுப்பு இருந்தாலும் அவங்க இந்தளவுக்குப் போகமாட்டாங்கனு தோணுது… எங்கயோ எதையோ நம்ம மிஸ் பண்ணிட்டோம்னு மூளை குறுகுறுக்குது ”
“ஃபர்தரா என்ன பண்ணலாம்னு இருக்கிங்க மேடம்?”
இதன்யா மென்மையாகப் புன்னகைத்தாள்.
“நான் என்ன ஆதாரத்தைக் காட்டுனாலும் குறைஞ்சது என்னை ரெண்டு மாசம் சஸ்பென்சன்ல உக்கார வைக்காம ஓயமாட்டான் அந்த ஏகலைவன்… என்கொயரி டைம்லயே அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்… சோ என் டவுட்டைக் கிளியர் பண்ணிக்கலாம்னு நான் முடிவு பண்ணிருக்கேன் முரளி சார்”
“தட் மீன்ஸ்?”
“ரெண்டு மாசம் சும்மாவே இருந்தா போலீஸ்கார மூளை துரு பிடிச்சிடும்… மனசுல சந்தேகம்னு ஒன்னு வந்துட்டா உடனே அது உண்மையா பொய்யானு ஆராய்ஞ்சு பாத்துடணும்… அதுவும் எங்க சந்தேகம் வந்துச்சோ அங்கயே” என இதன்யா கூறவும் முரளிதரனின் முகத்தில் பதற்றம்.
“நீங்க மறுபடியும் பொன்மலைக்குப் போகப்போறிங்களா மேடம்?”
“யூ கேட்ச் மை மைண்ட்வாய்ஸ் முரளி சார்”
“எதுக்கு மேடம்? கேஸ் முடிஞ்சாச்சு… மறுபடியும் உள்ள இறங்கி வேற எதுவும் பிரச்சனைல மாட்டிக்கிட்டிங்கனா உங்க பேரண்ட்ஸ் துடிச்சுப் போயிடுவாங்க” என அக்கறையாய் அறிவுரை கூறினார்.
இதன்யாவிடம் மீண்டும் மென்மையானப் புன்னகை.
“நான் சாவையே கண் முன்னாடி பாத்துட்டு வந்துட்டேன் சார்… இதுக்கு மேல என்ன இருக்கு! என் சர்வீஸ்ல ஒரு மர்டர் கேஸ் என்னைக் கடைசி வரைக்கும் சந்தேகத்தோட அலைய விட்டதா எந்த ஒரு ரெக்கார்டும் இருக்கக்கூடாது… அது என் வேலைக்கு அசிங்கம்… சும்மா இருக்குற டைம்ல என் சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிக்கலாம்னு இருக்கேன்… அதுக்கு உங்க ஹெல்பும் வேணும்”
முரளிதரனுக்கு இதன்யாவின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்தது. இருப்பினும் அவளுக்கு உதவ அவர் தயாராக இருந்தார்.
“என்ன உதவினு சொல்லுங்க மேடம்?”
“எனக்கு ஒரு கன் லைசன்ஸோட வேணும்… அதுவும் லீகலா”
துப்பாக்கி எதற்கு என முரளிதரன் யோசித்தாலும் பின்னர் பொன்மலையில் இதன்யாவுக்கு நடந்தேறிய விபத்து நினைவுக்கு வந்ததால் அவளது பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு உதவுவதாக வாக்களித்தார்.
“உங்களுக்கு லீகலா வேற எந்த உதவி வேணும்னாலும் நீங்க என் கிட்ட கேக்கலாம் மேடம்… பட் பி ஷேஃப்… இப்பவும் சொல்லுறேன் ஏகலைவன் இஸ் நாட் அ டேரக்ட் அஃபண்டர்… அவர் தான் கொலையாளிங்கிறதுக்கு எந்த ஆதாரமும் இல்ல… அவரே வாயைத் திறந்து சொன்னா மட்டும் தான் சாத்தியம்… சோ நீங்க யோசிச்சு மூவ் பண்ணுங்க… ஆல் த பெஸ்ட்”
இதன்யாவிடம் கை குலுக்கியவர் கிளம்பிவிட அவளும் கபேயை விட்டு வெளியேறினாள்.
கபேயின் தரிப்பிடத்தை அடைந்து பைக்கில் சாவியை முடுக்கியவளின் காதில் திடுதிடுப்பென ஒரு இளம்பெண்ணின் சிடுசிடுப்பு குரல் கேட்டது. அதை அப்படியே கண்டுகொள்ளாமல் இதன்யா போயிருக்கலாம். ஏனெனில் இம்மாதிரியான கபேக்களுக்குக் காதல் பறவைகளும், இளசுகளும் வருவது இயல்பான ஒன்று.
ஆனால் அவளால் அதை அலட்சியம் செய்துவிட்டு நகர முடியவில்லை. காரணம் அந்த இளம்பெண்ணின் குரலைத் தொடர்ந்து ஒலித்த ஆடவனின் குரல். அக்குரலின் சொந்தக்காரன் நிஷாந்த். விசாரணையின் போது பேசியதால் அவனது குரல் அவளுக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது. அந்தக் குரலைக் கூட அலட்சியம் செய்யலாமென விட்டுவிடுங்கள். ஆனால் குரல் ஒலித்த தொனி, பேசுபொருள் எல்லாமுமாகச் சேர்ந்து தான் இதன்யாவை அங்கே பசை போட்டு ஒட்டினாற்போல நிற்க வைத்தது.
“ஏன் பேபி கோவப்படுற? இப்ப தான் இனியா கேஸ் முடிஞ்சிருக்கு… மாமா அவரோட செல்வாக்கை பயன்படுத்தி என் கேஸையும் உடைச்சிடுவார்டி பட்டு… நீ சும்மா சும்மா என் கிட்ட எரிஞ்சு விழுந்து என் மூடை ஸ்பாயில் பண்ணாத… கிடைச்ச லீவ்ல அம்மா கிட்ட பொய் சொல்லிட்டு ஃப்ளைட் பிடிச்சு உன்னைப் பாக்க வந்திருக்கேன்… இப்பிடி கோவப்பட்டு மாமா மனசைக் கஷ்டப்படுத்தலாமா நீ?”
இதெல்லாம் நிஷாந்த் உதிர்த்த கொஞ்சல்மொழிகள். விசாரணையின்போது இனியாவின் காதலனாகத் தன்னைக் காட்டிக்கொண்டவன் வேறு ஒரு இளம்பெண்ணிடம் கொஞ்சிக்கொண்டிருக்கிறானா? ஒருவேளை இது அவனைப் போலவே குரல் கொண்ட வேறொரு இளைஞனாக இருக்கலாம் அல்லவா!
நம்பிக்கையோடு திரும்பிய இதன்யாவின் பார்வையில் விழுந்தவன் சாட்சாத் நிஷாந்தே தான். அவன் நின்றிருந்த கோலம் இதன்யாவைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இனியாவின் காதலன் என்று அழுது கதறியவன் இங்கோ இன்னொரு இளம்பெண்ணின் இடையை வளைத்து அணைத்து அவளது கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிக்கொண்டிருந்தான்.
“நான் இனியாவ கொலை பண்ணிட்டேன்னு நீங்க பழி போட்டா கூட நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன்… ரேப் பண்ணிட்டேன்னு… என் இனியா மேடம் அவ… அவளை நான் எப்படி?”
விசாரணையின்போது அவன் திக்கித் திணறி அழுது நடித்து தண்ணீர் குடித்த காட்சி இதன்யாவின் கண் முன் வந்து போனது.
காதலி இறந்தாலோ மனைவி மறைந்தாலோ சம்பந்தப்பட்ட ஆண் தனது வாழ்க்கையையே வெறுத்து துறவியாகி விடவேண்டுமென சொல்லும் அளவுக்கு இதன்யா ஒன்றும் பிற்போக்குவாதி இல்லை.
ஆனால் காதல் கொண்ட மனம் இவ்வளவு எளிதில் மாறி இன்னொருவர் மீது மையல் கொள்ளுமென நம்புவதற்கு அவள் முட்டாளுமில்லை.
இந்த நிஷாந்திடம் ஏதோ தவறு உள்ளது. விசாரணையின்போது அடுத்தடுத்து பொய் சொல்லித் தப்பிக்கப் பார்த்தவன் தானே! அவனையும் அந்த இளம்பெண்ணையும் தொடர முடிவு செய்தாள் இதன்யா.
இருவரும் கபேக்குள்ளே போக அவளும் முன்னெச்சரிக்கையாய் பைக்கின் பேகில் வைத்திருந்த முகக்கவசத்தை அணிந்துகொண்டு மீண்டும் கபேக்குள்ளே போனாள்.
தலைக்காயத்தால் அவளது கூந்தல் வெட்டப்பட்டு கழுத்தளவு நின்றது. கூடவே முகத்தையும் மறைத்தாயிற்று. இனி நிஷாந்தால் தன்னை அடையாளம் காண இயலாது என்ற நம்பிக்கையோடு உள்ளே போனவள் நிஷாந்தும் அந்த இளம்பெண்ணும் பேசுவதைக் கேட்கும் தூரத்தில் அமர்ந்து காபி ஒன்றை ஆர்டர் செய்தாள்.
அவர்களும் ஆர்டர் செய்துவிட்டுக் காதல் கிளிகளாக மிழற்றுவார்கள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அந்த இளம்பெண்ணும் நிஷாந்தும் தாங்கள் ஒன்றும் வழக்கமான காதலர்கள் இல்லை என்பதை தங்களின் பேச்சின் மூலம் இதன்யாவுக்கு நிரூபித்தார்கள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

