வேனலின் தகிப்பைத் தணிக்கும்
வேங்குழல் கீதம் அவள்!
பாலைவனத்தில் பாயும் ஊற்றாய்
பசும் சோலையாய் அவன்!
மண்ணில் விழுந்த மழைத்துளியும்
கடலில் கரையும் உப்புமாய்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இரண்டறக் கலந்ததுவே இதயங்கள்!
-அட்சரனின் வேதா
கடல் அலைகளில் காலை நனைத்துக்கொண்டிருந்தாள் வேதவதி. அவளது ஒரு கரம் பாதுகாப்புக்காய் அட்சரனின் புஜத்தைப் பற்றியிருந்தது. அவன் அருள்மொழியிடம் போனில் பேசிக்கொண்டிருந்தான்.
பேச்சின் முடிவில் “கொஞ்சம் நடக்கலாமா? எனக்கு உன் கிட்ட பேசணும்” என்றான் வேதவதியிடம். அவளும் அலையில் விளையாடுவதைக் கைவிட்டவளாய் அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.
“நேத்து ஏன் திடீர்னு நீ எமோஷனல் ஆன வேதா?”
வேதவதி பதில் சொல்லாமல் நடக்கவும், “எனக்குத் தெரியும். சம்திங் இஸ் ஈட்டிங் யூ. அந்தச் சம்திங்கோட பேரு பிருந்தா. சரியா?” என்று கேட்டு நடந்தவளை நிற்க வைத்தான் அட்சரன்.
ஆனால் இப்போதும் அவள் வாயைத் திறக்கவில்லை. தனது மனதில் இருந்த கலக்கத்தை அறிந்துகொண்டானே என்ற திகைப்பு அவளது நடையை மட்டும்தான் நிறுத்தியிருந்தது. அவளது வாய் திறக்கவில்லை.
அட்சரனுக்கு அவளது இயல்பு புரிந்ததால் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். எப்போதும் சினேகம் மட்டுமே தெரியும் அணைப்பில் இன்று ஏதோ ஒன்று கூடுதலாய்! அந்த ஏதோ ஒன்று வேதவதியைத் திணறடிக்கப் போதுமானதாய்!
“எனக்கும் அவளுக்கும் பிரேக்கப் ஆகிடுச்சு.”
“என்னது?” இவ்வளவு நேரம் அமைதி காத்தவள் தன்னையறியாமல் முகம் விகசிக்கக் கத்திவிட்டாள்.
பின்னர் அட்சரன் தன்னைக் குறுகுறுவெனப் பார்க்கவும், சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு, “என்னது? ஏன்?” என்று துக்கம் விசாரிப்பதைப் போல நடித்தாள்.
அட்சரன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டான். “ஏய்! நீ ரொம்ப சந்தோஷமா இருக்கல்ல இப்ப. நடிக்காத” என்றவனிடம் ஒரேயடியாக மறுத்தாள் அவள்.
“நான் நடிக்கல! எனக்கு நிஜமாகவே உங்க பிரேக்கப் நியூஸ் கஷ்டமா தான் இருக்கு” குரலில் இருந்த சோகம் கண்களில் இருந்த குதூகலத்தை மிஞ்சாமல் சதி செய்ததை அவள் அறியமாட்டாளே!
“உனக்கு நடிக்க வரல வேதா” என்றவன் சத்தமாகச் சிரித்துவிட்டான்.
“மூணு மாசமாகுது இது நடந்து. எங்களுக்குள்ள இருக்குறது பியூர் புரொபஷனல் ரிலேஷன்ஷிப் தான்”
வேதவதியோ மனதுக்குள் மையம் கொண்ட மென்புயலொன்று தரும் சிலிர்ப்பையும் சிரிப்பையும் மறைக்கவியலாதவளாய் தத்தளித்தாள்.
“உங்களுக்குக் கஷ்டமாவே இல்லையா?” இதைக் கேட்டபோது மெய்யான அக்கறையில் அவளது குரல் கனிந்திருந்தது.
“என்ன கஷ்டம்? அதெல்லாம் ஒன்னுமில்ல.”
காதலித்தால் தானே கஷ்டம்! ஆனால் வேதவதியின் மனமோ அட்சரன் அவனது மனக்கஷ்டத்தை மறைக்க முயல்கிறான் என்றே எண்ணியது. ஆறுதலாக அவனது கையைப் பற்றிக்கொண்டவள், “நீங்க மனசுக்குள்ள கஷ்டத்தை மறைக்கிறீங்கனு தோணுது அட்சரன்” என்றாள் மென்மையாக.
அட்சரனின் புருவங்கள் சுருங்கின. அவனது முகத்தில் விகசிப்பும் குறும்பும்! முதல் முறையாக அவள் அவனைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறாள்!
தேன்மலையில் ‘சார்’ என்ற விளிப்பு மட்டுமே! அதன் பின்னர் நடந்த கலவரத்தில் அவளுக்கும் அவனுக்குமான உரையாடல்கள் எதிலும் வேதவதி அவனைப் பெயர் சொல்லியோ ஏதாவது முறை சொல்லியோ அழைத்ததில்லை. உண்மையாகச் சொல்லப்போனால் அவனை எப்படி அழைப்பது என்பதே மாபெரும் புதிராய் இருந்தது அவளுக்கு. இதோ இந்த நொடியில் அந்தப் புதிருக்கான அவசியமே இல்லாது போன உணர்வு! அந்த உணர்வு அவனது பெயரை உரிமையாய் உச்சரிக்க வைத்திருந்தது.

“நீ சொல்லுறப்ப என் பேரே அழகான மாதிரி இருக்கு” என்றான் அவன்.
“ஆனா உங்க பேச்சு கிரிஞ்சா இருக்கு” அவள் முகத்தை அஷ்டகோணலாக்கியதும் சில இன்ச் இடைவெளியில் இருந்தவளைத் தன்னோடு சேர்த்து இழுத்துத் தோளணைத்துக்கொண்டான் அட்சரன்.
“அழகான எல்லா தருணத்தையும் கிரிஞ்சுனு சொன்னா நாளை பின்ன அனுபவிக்குறது எந்த மெமரியும் மிச்சம் இருக்காது. எனக்கு உன் கூட இந்த மாதிரி நிறைய மெமரி வேணும், திரும்பிப் பார்த்து என்ஜாய் பண்ணுறதுக்கு” என்றான் அவன் அவளது கண்களில் தனது கண்களைக் கலக்க விட்டவனாய்!
“நாம கூலிங் ஆஃப் பீரியட்ல இருக்கோம்” நினைவூட்டியவளின் கண்களில் விஷமத்தனம்!
“இனி அதுக்கு அவசியமில்லனு எனக்குத் தோண ஆரம்பிச்சு மூணு மாசம் ஓடிப்போச்சு. உனக்கு என்ன தோணுது?”
‘மறுப்பாய் ஏதும் சொல்லிவிடாதே’ என்ற மன்றாடல் அட்சரனின் விழிகளில்!
“எனக்கு யோசிக்கத் தெரியல. முடிவும் எடுக்கத் தெரியல” சாதாரணமாய் சொன்னவள், “நீங்க சொன்னா நான் கேட்டுக்கிறேன்” என்றாள் வெள்ளந்தியாய்.
ஒருவர் உங்கள் மீது, உங்களின் முடிவுகளின் மீது முழுமையான நம்பிக்கையை வைக்கும்போதுதான் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை உடையும் வகையில் ஏதேனும் சின்னதாய் ஒரு தவறு செய்தாலும் நீங்கள் அந்நபரை இழந்து விடுவீர்கள். பாவம்! உறவுகள், காதல் குறித்த அனுபவமற்ற அட்சரனுக்கு இதெல்லாம் எங்கிருந்து தெரியப்போகிறது? இன்னுமே கூட தன் மனதில் வேறொருத்தியின் மீது காதல் இல்லை என்று சொல்ல அவனுக்கு விருப்பம் வரவில்லை. அது தான் வேடிக்கை.
தன் மீது அவள் நம்பிக்கை வைத்ததே அவனுக்கு மாபெரும் கர்வமாய்! தோளோடு தோள் அணைத்து மணலில் கால் புதைய கடற்கரையில் நடந்து சலித்துக் கதைகள் பேசி இருவரும் வீடு திரும்பியபோது ராஜேஸ்வரியும் சதானந்தனும் அவர்களுக்காகக் காத்திருந்தார்கள்.
“ஏன் இவ்ளோ நேரம்?” என்று விசாரித்த அன்னையிடம், “சும்மா பீச்சுக்குப் போயிட்டு வந்தோம்மா” என்றான் அட்சரன்.
இரவுணவு சாப்பிடுகையில் மெதுவாகத் தொண்டையைச் செருமினார் சதானந்தன். ஒரே நேரத்தில் மூவரின் தலைகளும் உயர்ந்தன.
“இந்தச் செமஸ்டர் லீவ்ல ரிசப்ஷன் வச்சிடலாமா?”
ராஜேஸ்வரி வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்? அவரது முகத்தில் சந்தோஷம் பொங்கியது. அட்சரனுக்கும் வேதவதிக்கும் மறுப்பில்லை. அவரும் இத்தனை மாதங்களாக அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணைகளைப் பார்க்கிறாரே! மூவருமே தலையாட்டினார்கள்.
“அப்ப செமஸ்டர் முடிஞ்சதும் முறைப்படி கல்யாணம் பண்ணி அந்தக் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணனும். அதையும் ஞாபகம் வச்சுக்கோங்க. நான் சம்பந்திகிட்ட இதைப் பத்திப் பேசிடுறேன். அதுவரைக்கும் உன் மகனை எந்தக் கிறுக்குத்தனமும் பண்ணக்கூடாதுனு சொல்லி வை.”
சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்கையில் அட்சரனுக்கு வார்த்தையால் குட்டு வைத்துவிட்டுப் போனார் சதானந்தன். அவர் போனதும், “இப்ப நான் என்ன கிறுக்குத்தனம் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போறார்?” என அவன் சிடுசிடுத்தான்.
“நல்லதுக்குத்தான் சொல்லுவாங்கனு கேட்டுக்கணும்” பூனை போல இருந்துகொண்டு அமைதியாய் அவனுக்கு அறிவுரை சொன்ன வேதவதி, அவனது சிடுசிடுப்பு தன் பக்கம் பாயும் முன்னர் இடத்தைக் காலி செய்துவிட்டாள்.
ஆனால் ஒன்று, அன்றிரவு இருவருக்குமே அவ்வளவு எளிதில் உறக்கம் வந்துவிடவில்லை. நேரம் போகாமல் போனை நோண்டிக்கொண்டிருந்தவளுக்குத் திடுமென ஏதோ எண்ணம் உதயமாக, அட்சரனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்தாள்.
அதில் இருந்தவை எல்லாம் புத்தகங்கள் பற்றிய மதிப்பாய்வு வீடியோக்கள், நண்பர்களுடனான அவனது சில தருணங்கள் மட்டுமே! ஆனால் ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகம். அதில் சில எழுத்தாளர்களும் இருந்தார்கள். சிலர் அவனைப் பாராட்டியிருந்தார்கள். புத்தகங்களும், எழுத்தும் ஜென் ஜி (Gen Z) தலைமுறையை ஈர்க்க அவனும் ஒரு காரணமென புகழ்ந்திருந்தார்கள்.
ஒவ்வொரு வீடியோவாகப் பார்த்தவளுக்கு அருள்மொழியின் பேச்சிலர் பார்ட்டி வீடியோவைப் பார்த்ததும் சட்டென எழுந்து அமர்ந்துவிட்டாள். ஆண்கள் தங்களது நண்பர்களோடு இருக்கையில் முற்றிலும் வேறு நபர்களாக இருப்பார்கள். இறுக்கம், கடினமான உடல்மொழி, ஆட்டிடியூடை கழற்றிவைத்துவிட்டு இயல்பான மனிதனாக மாறிவிடுவார்கள்.
சஞ்சய், அருள்மொழி, அட்சரன் மூவரும் அந்த வீடியோவில் அப்படித்தான் தெரிந்தார்கள் வேதவதியின் கண்களுக்கு. ஏதோ டீனேஜ் பையன்கள் போல அப்படியொரு ஆட்டம் பாட்டம்! அனிருத்தில் ஆரம்பித்து சந்தோஷ் நாராயணனில் தொடர்ந்து சாய் அபயங்கரில் முடிந்த பாடல்களின் தொகுப்புக்குக் கால் வலிக்காமல் உடல் வலிக்காமல் ஆடித் தீர்த்திருந்தார்கள்.
திறந்த வாயை மூடவில்லை வேதவதி.
“அடப்பாவி! தரை லோக்கலா ஆடுறான். என்கிட்ட போடுற சீன் என்ன? இங்க ஆடுற ஆட்டம் என்ன?”

சொல்லும்போதே சிரிப்பு வந்தது அவளுக்கு. வேலை, குடும்பம், பொறுப்பு என இத்துணை இறுக்கங்களுக்கு மத்தியில் அவர்களுக்கான இளைப்பாறுதல்கள் இந்த மாதிரி தருணங்கள் என்று புரிந்தது.
மறுநாள் காலையில் ஹெல்வட்டாசுக்குக் கிளம்ப லினன் ஷர்ட் கூர்க்கா பேண்ட் சகிதம் வந்தவனை ஏற இறங்கப் பார்த்தவளுக்கு இரவு பார்த்த வீடியோவின் ஞாபகம் வராமல் இல்லை.
“என்ன அப்படிப் பார்க்குற?” புருவங்களை உயர்த்தி வினவியவனிடம்,
“எப்பவுமே ஏன் பிளெய்ன் ஷர்ட் போடுறீங்க? முந்தாநாள் கோடு போட்ட ஷர்ட் ஒன்னு போட்டிருந்தீங்கல்ல, அது ரொம்ப நல்லா இருந்துச்சு. அது போல அப்பப்ப போட்டா என்ன?” என்றாள் அவள்.
“அப்படியா? ஒன் மினிட்.”
கண் சிமிட்டிவிட்டு உள்ளே போனவன் திரும்பி வந்தபோது வெளிர் பெய்ஜ் வண்ணத்தில் அடர் பெய்ஜ் வண்ணக் கோடுகள் போட்ட லினன் சட்டை, அதற்குப் பொருத்தமாய்க் கருப்பு வண்ணக் கூர்க்கா பேண்ட் அணிந்திருந்தான்.
“சூப்பரா இருக்கு! இனிமே அடிக்கடி இந்த பேட்டர்ன் ஷர்ட்டும் மிக்ஸ் பண்ணி போடுங்க” என்றவள் கிளம்பப் போக, அவளது கையைப் பற்றித் தடுத்தவன், “நீ சொன்னதால நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திருக்கேன். எனக்கு ரிவார்டு, போனஸ் எதுவும் கிடையாதா?” என்று வினவ, “என்கிட்ட பைசா இல்ல” என்று கை விரித்தாள் வேதவதி.
அட்சரன் அவளை முறைத்தவன் பின்னர் உல்லாசமாய் கண் மூடிச் சிரித்துக் கரங்களை விரித்துக் காட்டினான். “ஹக் மீ” அன்றொரு நாள் கொடுத்த அதே ஷாரூக்கான் போஸ்.

வேதவதி அவனது கையைத் தட்டிவிட்டாள். “எந்தக் கிறுக்குத்தனமும் பண்ணக்கூடாதுனு மாமா சொல்லிருக்கார்.”
“ஹக், கிஸ் கிறுக்குத்தனம் கிடையாது புருசன் பொண்டாட்டிக்கு நடுவுல. அதுதான் இண்டிமசியோட பாலபாடம்” அவன் சொன்னபடியே கண்களில் மையலோடு நெருங்கவும், தனது கையால் அவனுக்கு அணையிட்டுத் தடுத்தாள் வேதவதி.
“நீங்க கிட்ட வந்தாலே படபடனு இருக்கு. இதுல ஹக், கிஸ் வேறயா? தள்ளிப் போங்க.”
சொன்னவள் அங்கிருந்து ஓடி மறைந்துவிட, அட்சரனும் ஹெல்வட்டாசுக்குக் கிளம்பிப் போய்விட்டான். போய் சில மணி நேரங்களில் பீனிக்ஸ் பப்ளிஷிங் ஹவுஸிலிருந்து அழைப்பு. வேதவதியைச் சந்திக்க விரும்புவதாக ஆசிரியர் கூற, அட்சரன் கைகடிகாரத்தைப் பார்த்தான்.
இன்னும் அரைமணி நேரத்தில் அவளுக்குக் கல்லூரி முடிந்துவிடும். அழைத்து வருவதாகச் சொல்லித் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தவன் நேரே கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.

காரிடாரில் நடந்துவந்தவள் அவனே உள்ளே வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட, “உன் ஸ்கூட்டியை மினியன் கிட்ட கொடுத்து வீட்டுல டிராப் பண்ணச் சொல்லிடு. நீ என் கூட வா. பீனிக்ஸ்ல இருந்து உன்னை மீட் பண்ண வரச் சொல்லிருக்காங்க” என்றான்.
அவளோடு வந்த பிரியம்வதா வேதவதியின் கையைப் பற்றிக் குலுக்கினாள். “வாவ்! நீ சாதிச்சிட்ட வேதா” என்று அவளை அணைத்தவாறே குதித்தவளிடம்,
“பார்த்துக் குதிங்க ரெண்டு பேரும். பில்டிங் பழசு” என்றான் அட்சரன்.
“டூ ஓல்டு ஜோக் ப்ரோ. ரொம்ப கிரிஞ்ச்” என்று கேலியாய்ப் பதில் சொல்லிவிட்டுப் பிரியம்வதா கிளம்ப, அட்சரனுடன் மகிழ்ச்சியாய் நடந்தாள் வேதவதி.
“உனக்கு டென்ஷன் இல்லல்ல?”
“சேச்சே! இப்ப நான் ரொம்ப தெளிவா இருக்கேன்” என்றாள் புன்னகையோடு.
அதே தெளிவும் தைரியமும் ஃபீனிக்ஸ் பதிப்பகத்தின் ஆசிரியரைச் சந்தித்து உரையாடியபோதும் அவளிடம் இருந்து துளி கூட விலகவில்லை. அவளது எழுத்தும் தெளிவான அணுகுமுறையும் எழுத்துலகம் பற்றிய அவளது பார்வையும் பிடித்திருந்ததால் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ராயல்டி சதவிகிதம், தனது கமிஷன் என அனைத்தையும் அட்சரன் பேசி முடித்தான். இன்னும் இரண்டே நாட்களில் பணம் வங்கிக் கணக்கு வந்து சேருமென்ற உறுதியோடு ஆசிரியர் வேதவதிக்குக் கைகுலுக்கி விடை கொடுத்தார்.
வீடு வந்து சேர்ந்ததும் ராஜேஸ்வரியிடம் இந்நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டாள் வேதவதி.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு வேதா. உனக்குக் குலாப் ஜாமூன் பிடிக்கும்ல. இன்னைக்குச் செய்யுறேன்” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்திவிட்டுக் குலாப் ஜாமூன் செய்வதில் பிஸியானார்.
வேதவதி தனக்கும் அட்சரனுக்கும் மதிய உணவைப் பரிமாறிக்கொண்டாள். இருவரும் சாப்பிடும்போது இன்னும் சில சந்தேகங்களை அவனிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டவள், சாப்பிட்டு முடித்து அவன் கிளம்புகையில் அவனது கையைப் பிடித்து நன்றியோடு “தேங்க்ஸ்” என்றாள்.
அட்சரனுக்கு மனநிறைவுதான். ஆனால் அவளைச் சீண்டாவிட்டால் அவனது நாள் இனிமையடையாதே! கையை விலக்கியவன்
“யாருக்கு வேணும் உன் தேங்க்ஸ்? ப்பே” என்று அலட்சியமாய்க் கையசைக்க,
“அதென்ன ப்பே? அந்த வார்த்தையைக் கேட்டாலே எனக்கு இரிட்டேட் ஆகுது” என்றவள் நறுக்கென்று அவனது புஜத்தில் கிள்ளிவைத்தாள்.
“அம்மாஆஆஆ!” அட்சரன் அலற, “என்னடா அச்சு?” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் ராஜேஸ்வரி.
“ஒன்னுமில்லம்மா” என்றவன் குரலைத் தணித்து,
“கிள்ளவா செய்யுற? உன் ராயல்டில இருந்து இதுக்குனு ரெண்டு பர்செண்டேஜ் ஆட்டையைப் போடுறேன் பாரு” என்று மிரட்டிவிட்டுக் கிளம்பினான். கதவருகே சென்றவன் உதட்டைக் குவித்து முத்தமிடுவது போலச் சைகை செய்ததில் வேதவதியின் காது மடல்கள் கூடச் சிவந்து போயின.
மனதில் இதமும் இனிமையுமான உணர்வொன்று பீடித்துக்கொண்டது. என்றுமில்லா ஏகாந்த மனநிலை! அட்சரனின் சின்ன சின்ன சீண்டலும் குறும்பும் அவளுக்கே பிடித்துப் போனதற்கான அறிகுறி இது என்பதை உணர்ந்தவளுக்குத் தான் அவனை நேசிக்க ஆரம்பித்துவிட்டோமெனப் புரிந்துபோனது.
“இந்த டூ கே ஜெமினி கணேசனை யாருக்குத்தான் பிடிக்காது” என்று செல்லமாக அலுத்துக்கொண்டாள்.
மாலையில் தந்தை வீடு திரும்பும் நேரத்தை ஊகித்து அவரது போனுக்கு அழைத்து விவரத்தைக் கூறியவளுக்குச் சொல்லும் முன்னரே கண்ணீர் வந்துவிட்டது.
“உங்க லைப்ரரில என் புக் இருக்கும்பா. எனக்கு இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நான்… எழுத ரொம்பவே யோசிச்சேன்பா. அட்சரன் தான் எனக்கு…” வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணறினாள். மறுமுனையில் கஜேந்திரனின் நிலையும் அதுவே. ஆனால் அனுபவச்சாலி சீக்கிரம் சமாளித்துக்கொண்டார்.
“ரொம்ப சந்தோஷமடா. இன்னும் எழுதணும். நிறைய பேர் உன் எழுத்தைப் படிக்கணும்” என்று வாழ்த்தினார்.
கனகவல்லி மகளிடம் பேசும்போதே, “நான் கூட அவசரப்பட்டு உன்னைச் சம்பந்திக் குடும்பம்கூட அனுப்பிட்டோமோனு நிறைய தடவை யோசிச்சிருக்கேன் வேதா. ஆனா இதுதான் உனக்கான வாழ்க்கைனு கடவுள் தீர்மானிச்சு வச்சிருக்கார். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்த தருணம் தான் தப்பே தவிர உங்க ரெண்டு பேர் மேலயும் எந்தத் தப்பும் குறையும் இல்ல. சதா அண்ணன் பேசுனார் நேத்து. உன் பரீட்சை முடிஞ்சதும் கல்யாணம் வச்சுக்கலாமானு கேட்டார். எனக்கும் உன் அப்பாக்கும் பரிபூரண சம்மதம் வேதா” என்றார்.
வேதவதி அவர்களிடம் பேசி முடித்தபோதே குலாப் ஜாமூன் தயாராகி கிண்ணத்தில் ஜீராவில் குளித்தபடி அவளது கையில் வந்து அமர்ந்தது. ஒரு ஸ்பூன் எடுத்து ஊட்டிவிட்ட ராஜேஸ்வரி,
“இது போல நிறைய புக் போடணும். ஒவ்வொரு தடவையும் உனக்கு நான் குலாப் ஜாமூன் செஞ்சு கொடுக்கணும்” என்றதும் அவரை அணைத்துக்கொண்டாள் அவள்.
“நீங்க ஏன் மத்த மாமியார் போல இல்ல?” என்று சிறுபிள்ளைத்தனமானக் கேள்வி வேறு.
“உன்னை மாதிரி மருமகள் கிட்ட அதிகாரம் பண்ணத் தோணுமாடி? சாப்பிடு” என்று அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டுப் போனார். இரவில் வீடு திரும்பிய சதானந்தனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதும் மகிழ்ந்து போனார். தந்தைக்கும் மகனுக்கும் இனிப்பு கொடுக்கப்பட்டது.
“உங்க மருமகள் கிட்ட கொடுத்து விடுங்க” என்று சொல்லிவிட்டு மாடியறைக்குப் போய்விட்டான் அட்சரன். வேதவதியும் கிண்ணத்தோடு அவனது அறைக்கு வந்து சேர்ந்தாள். உள்ளே நுழையும்போதே சிகரெட் நெடி. பால்கனியில் நின்றுகொண்டிருந்தவனின் எதிரே போய் நின்றாள் அவள்.
“என்ன முறைப்பு?” என்றபடி சிகரெட்டை அணைத்தான் அவன்.
“இந்தக் கருமத்தை விடக்கூடாதா?” என்றவள் குலாப் ஜாமூன் கிண்ணத்தை அவன் கையில் திணித்தாள்.
“ஒன் மினிட்.” அவன் வரும்வரை பீன்பேக்கில் சரிந்து அமர்ந்துகொண்டாள் வேதவதி.
திரும்பி வந்தவன் முகம் கழுவியிருந்தான்.
“இப்ப சிகரெட் ஸ்மெல் வருதா?”
“இல்ல.”
“அப்ப தள்ளி உட்காரு” என்றபடி அவளை இடித்துக்கொண்டு பீன்பேக்கில் அமர்ந்தான் அட்சரன்.
குலாப் ஜாமூன் கிண்ணத்தைக் காட்டியவளிடம், “கதைல மட்டும் விதவிதமா ரொமான்ஸ் சீன் எழுதுற. நிஜத்துல தத்தி…” என்றவன் முடிக்கும் முன்னரே முழு குலாப் ஜாமூன் அவனது வாயை அடைத்திருந்தது. அவன் திணறியபடி அதைச் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தவள் சிரித்தாள்.
அவளது அண்மையில் இன்று ஏனோ புதியதொரு மயக்கம் பிறந்தது அட்சரனுக்கு. சிரிக்கும் செவ்விதழ்கள் மீது புதியதொரு ஆசை அவற்றை ஆட்கொள்ள வேண்டுமென்று.
கிண்ணத்தில் ஜீராவில் கிடந்த இன்னொரு குலாப் ஜாமூனை எடுத்தவன், “உனக்கு?” என்று விஷமத்தனமாய்க் கேட்க,
“கொஞ்சூண்டு” என்றாள் அவனது எண்ணமறியாத வேதவதி.
“நீ எனக்கு இன்னும் ரிவார்டு தரல.” பேசியபடியே ஊட்டியவன் அவள் பாதி கடிக்கும்போதே மீதியைக் கடித்துச் சுவைக்க, முடிவில் இரு இதழ்களும் குலாப் ஜாமூனைப் பங்கு போடும்போதே உரசிக்கொண்டன.

வேதவதி திடுக்கிட்டு விலகுகையில், ஜீராவுடன் சேர்ந்த அட்சரனின் கரம் அவளது பின்னங்கழுத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, அந்நொடியில் இரு ஜோடி உதடுகளும் குலாப் ஜாமூனோடு சேர்த்து முத்தத்தையும் பரிமாறிக்கொண்டன. இம்முறையும் மூச்சு வாங்கியது வேதவதிக்கு. ஆனால் சி.பி.ஆர் கொடுத்து ஒரு முறை உயிரைக் காத்தவனுக்கு இம்முறை இரக்கம் வரவில்லை.
மென்மையின் இலக்கணமே தெரியாதவனின் முத்தம் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணமாய் நீண்ட அந்த இதழணைப்பின் ஆரம்பத்தைத் தீர்மானித்தவனே முடிவையும் தீர்மானித்து அவளது இதழ்களுக்கு விடுதலை கொடுத்தான். மூச்சு வாங்கப் பிரிந்தவளால் அவனை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அட்சரன் அவளது கன்னத்தைத் தாங்கி முகத்தைப் பார்க்க, நாணச்சிரிப்பில் சிவந்திருந்தது வேதவதியின் வதனம்.
“இன்னொரு ரிவார்டு ப்ளீஸ்” ஏக்கமாகச் சொன்னவன் மீண்டும் அவளது உதட்டை நெருங்க, அவனது சட்டை காலரைப் பிடித்துத் தள்ளினாள் வேதவதி.
சட்டென எழுந்துகொண்டவள் அவனது கரம் பட்ட கன்னங்களும் கழுத்தும் ஜீராவின் பிசுபிசுப்போடு இருக்கவும், “உங்களால இங்க எல்லாம் ஜீரா ஒட்டிருச்சு” என்று பற்களைக் கடிக்க,
“நான் வேணும்னா கிளீன் பண்ணட்டுமா?” என்று மையல் பார்வையோடு எழுந்தான் அட்சரன்.
“கொன்னுடுவேன் உங்களை” என்று மிரட்டியவள் அவனை பீன்பேக்கில் தள்ளிவிட்டு ஓடினாள் அங்கிருந்து.
அட்சரன் பேக்கில் சரிந்து அமர்ந்தவன், “மேரேஜ் லைஃப் இவ்ளோ ஸ்வீட்டா இருக்கும்னு தெரியாம அநியாயமா ஃபைவ் மன்த்ஸை வேஸ்ட் பண்ணிட்டியேடா” என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டான் ஏக்கத்தோடு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

