“கிராமப்புறங்களில் வாழும் நாளொன்றுக்கு நூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வரை சம்பாதிக்கும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பொதுமுடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி, இந்திய கிராமப்புற குடும்பங்களில் மாதாந்திரம் செலவு போக மிச்சமிருக்கும் உபரித்தொகையான ஆயிரத்து நானூற்று பதிமூன்று ரூபாய் அவர்களின் கடனை அடைப்பதற்கே சரியாக இருக்கிறது. ஒன்றிய அரசு அறிவித்த 22.50 பில்லியன் டாலர் மதிப்பிலான நிவாரண தொகுப்பின்படி 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவும், 200 மில்லியன் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் ஐநூறும், 80 மில்லியன் முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் ஆயிரமும், இலவச சமையல் எரிவாயு குடுவைகளும் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுமென உத்திரவாதம் அளித்தாலும் இது வெகு தாமதமான நிவாரண உதவி எனவும், இதை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தாது விட்டுவிட்டதால் இத்திட்டத்தின் பலன் ஏழை எளியோர்களைச் சென்றடைய தவறிவிட்டது எனவும் புதுடெல்லி அம்பேத்கார் பல்கலைகழகத்தின் பொருளாதார உதவி பேராசிரியர் தீபா சின்ஹா தெரிவித்துள்ளார்”
-குணால் புரோஹித், அல் அஜீரா.
ஜனவரி 5, 2022 அன்று அதிகாலை பொழுது…
சேர்ந்தவிளை கிராமத்தில் சூரியன் உதிப்பதற்கு முந்தைய அதிகாலை நேரத்தில் அந்தக் கிராமத்தின் கால்வாயின் சிமெண்ட் படிகட்டுகளில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தது ஒரு சிற்றுருவம்.
துணி துவைப்பது என்றால் சோப்பு போட்டு அலசுவது இல்லை. வெறும் நீரில் துணியை முக்கி எடுத்து படிக்கட்டில் இரண்டு முறை அடித்து மீண்டும் நீரில் அலசி பிழிந்து வைப்பது தான். சோப்பு வாங்கும் அளவுக்கெல்லாம் வசதி இல்லை.
அவ்வுருவத்தின் அருகே கிடந்த மூட்டையில் மாற்றுத்துணி இருந்தது போல. அதை நனையாதபடி வைத்துவிட்டு படிக்கட்டில் அமர்ந்தபடியே தன்னிடமிருந்த அலுமினிய சட்டியால் நீரை வாரி தன் தலையிலும் உடம்பிலும் ஊற்றிக் கொண்ட அந்த உருவம் ஒரு மூதாட்டி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பஞ்சாய் நரைந்திருந்த வெண்சிகையை குளிர்நீர் நனைத்ததும் சிலிர்த்துக் கொண்டது அவரது தோல் சுருங்கிய மேனி.
குளித்து முடித்து மூட்டையிலிருந்த இன்னொரு சேலை ப்ளவுசை அணிந்த பிறகு கதிரவன் கிழக்கில் உதிக்க தலை மேல் கை கூப்பி “முருகா! எல்லாரையும் காப்பாத்துப்பா” என்று வேண்டிக்கொண்டு பக்கத்திலிருந்த பிள்ளையார் கோவிலை நோக்கி நகர்ந்தார்.
அதன் வெளியே அரச இலையில் திருநீறு வைக்கப்பட்டிருக்க அதை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்ட நேரத்தில் ஆண்கள் வரும் அரவம் கேட்டது.
“இந்தத் தடவை சந்தைல மாட்டை விக்கலாம்னு இருக்கேன் மாயாண்டி… பால் நின்னு போனத வச்சு நான் என்ன பண்ணப் போறேன்? அதை அடிமாட்டுக்கு வித்தா வளத்த புண்ணியத்துக்குத் துட்டு கிடைக்கும்”
“நம்ம பட்டியூருக்காரன் இப்ப அடிமாட்டுக்கு மாடு வாங்குறானாம்… இந்த புதன்கெழமை அவன் கிட்ட பேசி முடிச்சிருவோம் சந்தபாண்டிண்ணே”
அந்த இருவரின் குரலும் செவியில் விழுந்ததும் பதற்றத்துடன் கோவிலிலிருந்து கால்வாயை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அம்மூதாட்டி. ஆனால் வயோதிகம் வேகநடையை அனுமதிக்காததால் அவர்கள் இருவரும் அம்மூதாட்டியை நெருங்கி விட்டனர்.
“ஏலேய்! முன்னாடி போறது யாருல?” தனது பெரிய தொண்டையிலிருந்து ஊருக்கே தண்டோரா போடுவது போல கேட்டார் சந்தனபாண்டி.
“நம்ம மூட்டை கெழவிண்ணே” என்றான் மாயாண்டி அலட்சியமாக.
உடனே தன் தலையிலடித்தபடியே “அடச்சீ! காலங்காத்தால அந்தப் பிச்சைக்கார கெழவி மூஞ்சில முழிச்சா நாளும் பொழுதும் வெளங்குமா?” என்று வெறுப்புடன் பேசியபடியே கடந்தார் சந்தனபாண்டியன்.
மாயாண்டியோ “ஏய் கெழவி! உன் கிட்ட எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் எங்கண்ணன் வாய்க்காலுக்கு வாரப்ப நீ அவரு முன்னாடி வராதனு?” என்று அதட்ட
“அதுக்கு தான் நான் காலம்பற வாரேன்யா… உங்க கண்ணுக்கு அகப்படாம குளிச்சுட்டுப் போறவ இன்னிக்குக் கொஞ்சம் அசந்துட்டேன்” என்று உரைத்தவாறே நடந்தார் வயோதிகப்பெண்மணி.
“க்கும்! பிச்சைக்காரிக்கு என்ன குளியல் வேண்டியது கெடக்கு?”
முணுமுணுத்துவிட்டு வேகமாய் கால்வாயை நோக்கி முன்னேறினான் அந்த மாயாண்டி.
அந்த வயோதிகப்பெண்மணியோ தடுமாறியபடியே கால்வாயை அடைய, அதற்குள் அங்கே கிடந்த அவரது துணிமூட்டையை கால்வாயில் எறிய தூக்கியிருந்தான் மாயாண்டி.
அந்த மூதாட்டி பதறியடித்து “எய்யா! தண்ணில போட்டுடாத… இந்தக் கெழட்டு சென்மத்துக்குனு உள்ளதே அந்த மூட்டை மட்டும் தான்” என்று கெஞ்ச
“என்னமோ இதுக்குள்ள தங்கமும் வைரமும் வச்சிருக்க மாதிரில்லா கெழவி பதறுது… இத்துப்போன கந்தல்துணி மூட்டைக்கு சேர்ந்தவிளை வாய்க்கா படி கேக்குதோ?” என ஏளனமாக கூறினார் சந்தனபாண்டி.
“நீங்க வேறண்ணே! பிச்சை எடுக்குறதுக்கு ஒவ்வொரு வீடா வாரப்ப அகப்பட்டத சுருட்டி இந்த மூட்டைல ஒளிச்சு வச்சிருக்காளோ என்னவோ? அதான் கெழவி பதறுதா” என்றான் கொஞ்சமும் இரக்கமுமின்றி.
அந்த மூதாட்டியின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.
கையெடுத்து அவர்களைக் கும்பிட்டவர் “அதுல துணிய தவிர வேற எதுமில்ல சாமி… இந்த வயசுல திருடி பொழைச்சு நான் என்னத்த கிழிக்கப் போறேன்? என் மூட்டைய குடுத்துடுய்யா… நான் இனிமே ஐயா வார நேரத்துல இங்க இருக்க மாட்டேன்” என்று கெஞ்சி கேட்க மாயாண்டி அந்த மூட்டையை அவரருகே வீசினான்.
என்ன கோணத்தில் வீசினானோ அது சரியாக மூதாட்டியின் முகத்திலேயே விழுந்து வைக்க அது விழுந்த வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தார் அவர்.
அதை கண்டதும் மாயாண்டி பெரிய நகைச்சுவை போல சிரிக்க சந்தனபாண்டியனோ
“என்னல இளிப்பு? அவ துணிய பிழிஞ்சு வச்சிருக்கா பாரு… அதையும் மொகறைல அள்ளி வீசு” என்று கட்டளையிட்டார்.
அவரது கட்டளையை மாயாண்டி நிறைவேற்றவும் துவைத்து பிழிந்து வைத்திருந்த ஈரச்சேலை அடுத்து வந்து விழுந்தது.
அந்த மூதாட்டி தடுமாற்றத்துடன் எழுந்தவர் மெதுவாகத் தனது மூட்டையையும் ஈரச்சேலையையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தளர்ந்த நடையுடன் கிளம்பினார்.
அவரது முதுகுக்குப் பின்னே சந்தனபாண்டியும் மாயாண்டியும் பேசும் ஏளன வார்த்தைகள் விழாமல் இல்லை. எளியவரை அடித்து இன்புறும் வலியவர் நிறைந்த உலகில் அவரைப் போல ஆதரவற்ற முதியவர்களின் நிலை இது தான்!
மனம் வலிக்க சாலையைக் கடந்தவர் சாலையின் மறுபக்கம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பூமாரியையும் சுப்புசாமியையும் கவனித்துவிட்டார்.
இருவரும் கடின உழைப்பாளிகள்! யாரையும் எள்ளி நகையாடும் குணமற்றவர்கள்! முக்கியமாக ஊரார் விளிப்பது போல ‘மூட்டை கிழவி’ என அவரை அழைக்காமல் பாசமாய் ‘ஆத்தா’ என்று மதிப்பாய் அழைப்பவர்கள்!
அவர்களை நெருங்கியதும் “என்ன மாரி, பழத்தோட்டத்துக்குக் கெளம்பியாச்சா?” என்று விசாரித்தார் அவர்.
“ஆமாத்தா… இன்னிக்குக் கொய்யாபழம் கொறைஞ்ச விலைக்குக் கிடக்குதாம்… வாங்கிட்டேன்னா மார்க்கெட்டுல போய் வித்து காசு பாத்துடலாம்லா” என்று பதிலளித்தாள் பூமாரி.
சுப்புசாமியோ அவரது தோளில் கிடந்த சேலையில் மண் ஒட்டியிருப்பதைப் பார்த்ததும்
“சீலை ஏன் மண்ணா இருக்குத்தா? கை தவறி கீழ போட்டுட்டியா?” என கேட்க
“இல்லய்யா! நான் குளிச்சுட்டுச் சாமி கும்புட்டுட்டு இருந்தப்ப சந்தபாண்டிய்யா வந்துட்டாவ… நான் அங்க இருந்தது அவருக்குப் பிடிக்கல… அதான் மாயாண்டிய விட்டு என் துணிய தூக்கி எறிய சொல்லிட்டாவ… அதான்…” என்று தளர்ந்த குரலில் இழுத்தார் அப்பெண்மணி.
வயோதிகத்தில் பிள்ளைகளின் ஆதரவற்று மனம் சோர்ந்து வாழும் அம்மூதாட்டிக்கு இம்மாதிரியான தொல்லை கொடுப்பதால் என்ன தான் கிடைக்கிறதோ இந்தக் கயவர்களுக்கு?
“அந்த மாயாண்டி சந்தனபாண்டிய்யாவுக்கு எடுப்பு… காசுக்காக அவிய என்ன சொன்னாலும் செய்வான் அந்தப் பய” என்று பொருமித் தீர்த்தாள் பூமாரி.
அம்மூதாட்டியோ “நீ எதுவும் பேசாதத்தா… அந்தய்யா கிட்ட நீ வட்டிக்குக் காசு வாங்கிருக்க… இது மட்டும் மாயாண்டி காதுல விழுந்துச்சுனா…” என்று தயக்கமாக கூற
“நாங்க வட்டிக்குக் காசு வாங்குனதால அவரு பண்ணுன அநியாயத்த கேக்கப்படாதா? சரி அவிய ரெண்டு பேரும் போய் தொலையுதாவ… நீ பாத்து போ” என்றான் சுப்புசாமி.
மூதாட்டிக்குக் கண்ணீர் நிரம்பிவிட்டது. பத்து மாதம் சுமந்து பெற்ற மகன் வீட்டை விட்டு துரத்தி ஆண்டுகணக்காகிறது. இது வரை அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று கூட கண்டுகொள்ளவில்லை.
ஆனால் எந்த வித சொந்தமும் இல்லாத இவர்கள் தனக்காக வருந்துகிறார்களே! கண்ணைத் துடைத்தபடி மெதுவாய் தனது இருப்பிடமான கூட்டுறவு பால்பண்ணையை அடைந்தார்.
அங்கே சொக்கலிங்கம் பாலை அளந்து பெரிய அலுமினிய கொள்கலனில் ஊற்றிக் கொண்டிருந்தார். மூதாட்டியைக் கண்டதும் ஆதுரமாய் புன்னகைத்தவர்
“குளிச்சாச்சா? அப்பிடியே வீட்டுப்பக்கம் போத்தா… செண்பகம் இன்னைக்கு இட்லிக்குப் போட்டிருக்கா… போய் வாங்கி சாப்புடு” என்க
“சரிங்கய்யா” என்று கரம் குவித்துவிட்டு தனது பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஊருக்குள் இருக்கும் சொக்கலிங்கத்தின் வீட்டை நோக்கி நடந்தார்.
செல்லும் வழியில் ஊரின் அம்மன் கோவில் கோபுரம் தெரிய அதை வணங்கிவிட்டு தன் நடையைத் தொடர்ந்தார். தெருவின் இரு புறமும் அமைந்திருந்த வீடுகளின் இல்லத்தரசிகள் வாசல் தெளித்து கோலத்துடன் கதிரவனை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
ஆனால் சொக்கலிங்கத்தின் மனையாள் செண்பகமோ இந்த வேலைகளை எல்லாம் அதிகாலையிலேயே முடித்து விடுவதால் இப்போது அவர் வீட்டருகே செல்லும் போதே சாம்பாருக்குத் தாளிக்கும் மணமும் மிக்சியில் சட்னி அரைக்கும் சத்தமும் முறையே நாசிக்கும் செவிக்கும் வேலை வைத்தது.
மூதாட்டியோ முன்வாயில் வழியே செல்லாது பின்வாயிலை அடைந்தார். அங்கிருந்தபடியே “செண்பாம்மா” என்று குரல் கொடுக்க அடுத்த சில நிமிடங்களில் ஒரு தட்டில் ஆவி பறக்கும் இட்லிகளும் சிறு கிண்ணங்களில் சட்னி சாம்பாரையும் எடுத்துக் கொண்டு தனது வந்தார் சொக்கலிங்கத்தின் இல்லத்தரசி.
வந்தவர் மூதாட்டியின் பாத்திரத்தில் இட்லிகளை வைத்து சாம்பாரையும் சட்னியையும் ஊற்றினார்.
“எத்தனை வாட்டி முன்வாச வழியா வாங்கனு சொல்லிருக்கேன் ராசம்மாத்தா?”
ஆதங்கத்துடன் ஒலித்தது செண்பகத்தின் குரல்.
மூதாட்டியோ சிரித்தவர் “இந்த ஊருல என்னைய ராசம்மானு பேர் சொல்லி கூப்புடுறது நீங்க மட்டும் தான்மா… உங்க வீட்டையும் சுப்புசாமி வீட்டையும் விட்டா எனக்கு கதி ஏது சொல்லுங்க… நான் முன்வாச வழியா வந்தா எதிர்த்தவீட்டு மீனாம்மா ஏசுது” என்றார்.
உடனே செண்பகம் வெகுண்டுவிட்டார்.
“அவ யாரு என் வீட்டுக்கு வாரவியள ஏசுததுக்கு? அவ புருசனை மாதிரி கந்துவட்டிக்கு விட்டா நாங்க பொழைக்கோம்? எல்லாருக்கும் தள்ளாமை வரும்னு ரொம்ப வசதியா மறந்துடுவாவ போல… நான் சொல்லுதேன், இனிமே நீங்க முன்வாச வழியா தான் வரணும்”
“இல்லம்மா…”
“சும்மா இழுக்காதிய ராசம்மாத்தா… அவளுக்குத் தோட்டம் துரவுனு ஏகப்பட்டது இருக்கு… போதாதுக்குப் புருசன் வேற வட்டிக்கு விடுற சித்தைக்காசுல தங்கமும் வைரமுமா வாங்கி பூட்டுதான்… அதுக்குனு இரக்கமில்லாம நடந்துக்குறது நல்லாவா இருக்கு? இப்பிடிலாம் கேடுகெட்டத்தனம் பண்ணிட்டு இவிய குடும்பம் அம்மனுக்குக் கோபுரம் கட்டலனு யாரு அழுதாவ? முதல்ல சகமனுசன் கிட்ட மனுசத்தனத்தோட நடந்துக்கணும்… அப்புறம் சாமி கிட்ட போய் கொட்டலாம்… இவ புருசன் ஊரை அடிச்சு உலையில போட்ட காசுல கட்டுன கோயில் கோபுரத்த அந்த முத்தாரம்மனே ஏத்துக்க மாட்டா”
“நீங்க தான் இப்பிடி சொல்லுதியம்மா… ஆனா மனுசமக்க எல்லாரும் பாவம் பண்ணிட்டு அத தீர்த்துக்குறதுக்கு கோயிலுக்குக் கோடி கோடியா கட்டிக் குடுக்குறது எப்பவுமே நடக்குறது தானே… நான் ஒரு கோட்டிக்காரி… உங்களுக்குக் காலம்பற வேலை இருக்கும்…. நான் உங்க வேலைய கெடுக்கேன் பாருங்க… நீங்க வேலைய பாருங்கம்மா… நான் மதியம் வாரேன்”
விடைபெற்று நடந்தவரின் கண்கள் சொக்கலிங்கத்தின் வீட்டிற்கு எதிரே இருந்த சந்தனபாண்டியின் இல்லத்தை நோக்கியபோது முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார் அவரது மனைவி மீனாட்சி.
“இந்தப் பிச்சைக்கார கெழவிய காலம்பற பாத்தா ஒரு காரியமும் வெளங்காதே”
சமுதாயத்தில் எல்லாவித சௌகரியத்துடனும் வாழும் மக்களுக்கு ஏனோ ஒரு நாளை நெட்டித் தள்ளுவதே பெரும் சாதனையாக இருக்கும் விளிம்புநிலையில் இருக்கும் வறிய மக்களின் துயரம் புரிவதே இல்லை! அனுபவிக்காத வரை வறுமையும் துயரமும் அவர்களுக்கு வெற்று வார்த்தை தான் போல!
மீனாட்சியின் வசைமொழிகள் வழக்கமான பேச்சு இது தான்! அதை ஒதுக்கிய ராசம்மா என்ற அம்மூதாட்டியின் கையிலிருந்த பாத்திரத்தைப் போல அவரது மனமும் செண்பகத்தின் பேச்சால் நிறைந்திருந்தது.
எளியவரை துச்சமாய் கருதும் சந்தனபாண்டி, அவர் வீசும் சில்லறைக்காக எத்தகைய அநியாயத்தையும் தயக்கமின்றி செய்யும் மாயாண்டி, ஆதரவற்றவர் மீது வன்மம் கக்கும் மீனாட்சி போன்றோர் இருக்கும் இதே உலகத்தில் தானே சொக்கலிங்கம், செண்பகம், சுப்புசாமி, பூமாரி போன்றோரும் வாழ்கின்றனர்.
ஏன் தனக்கு அமைந்த சொந்தங்கள் சந்தனபாண்டியாகவும் மீனாட்சியாகவும் அமைந்தன? கேள்வி மனதில் எழுந்தாலும் கடவுளுக்குத் தன் மீது ஏதோ கொஞ்சம் இரக்கம் இருந்ததால் தான் சில நல்லவர்களை தனக்குத் துணையாக நடமாட விட்டிருக்கிறார் என்று எண்ணியபடியே பால்பண்ணையை அடைந்தார் ராசம்மா.
அங்கே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தவர் பக்கத்திலிருந்த பஞ்சாயத்து தண்ணீர் குழாயில் கை கழுவி விட்டு வந்து மீண்டும் அங்கேயே அமர்ந்தார்.
அந்த இடம் தான் வெயில், மழை, குளிர் என அனைத்திலிருந்தும் அவருக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறது. சில இரவு நேரங்களில் அவருக்குத் துணையாய் தெருநாய்களும் அங்கே உறங்குவதுண்டு. தனக்குக் கிடைத்த உணவை அவற்றுடன் பகிர்ந்து கொள்வார் ராசம்மா.
அவை வாலை ஆட்டும் போது மனம் நெகிழும் அவருக்கு. வலிக்க வலிக்க பெற்ற மகன் வீட்டை விட்டு துரத்திவிட்டான்! ஆனால் என்றோ ஓர்நாள் வைத்த ஒரு கவளம் சோற்றுக்காக எப்போது எதிர்பட்டாலும் வாலை ஆட்டும் நாய்களின் விசுவாசம் ராசம்மாவை நெகிழச் செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லையே!
அப்படியே சுவரில் சாய்ந்து கண் மூடியவர் சில நிமிடங்களில் சிறுவர்களின் குரலில் கண் விழித்தார்.
அங்கே இருந்த நாய்கள் மீது கல்லெறிந்து விளையாடிக் கொண்டிருந்தவர்களை அப்படி செய்யாதீர்கள் என்று தடுக்க முயன்ற ராசம்மாவின் பேச்சை அவர்கள் கேட்டால் தானே!
“நீ வாய மூடு கெழவி… இல்லனா நாய்கு பதிலா உன் மண்டைய கல்லெறிஞ்சு உடைச்சிடுவேன் பாத்துக்க”
சொன்னதோடு கல்லை அவரது தலைக்குக் குறி வைத்த ஒரு சிறுவனின் பிடரியில் பொடேர் என அறை விழுந்தது.
“யம்மோவ்”
அவன் அலற “என்னல எம்மா ஆத்தானு கத்துத? பெரியவிய மேல இப்பிடி தான் கல்லெடுத்து அடிப்பியோ? இரு உங்கப்பன் கிட்ட சொல்லி உன் தொலிய உரிக்க சொல்லுதேன்” என்றபடி அங்கே நின்றிருந்தான் சுப்புசாமி.
“மாமா மாமா அப்பாட்ட சொல்லாத… நான் இனிமே இந்த ஆச்சி மேல கல்லெறிய மாட்டேன்”
தந்தை மீதிருந்த பயத்தில் அச்சிறுவன் பதற சுப்புசாமி அதட்டல் போட்டு அவர்களை அங்கிருந்து விரட்டினான்.
பின்னர் ராசம்மாவிடம் வந்தவன் அவரது பாட்டிலில் தண்ணீரை ஊற்றினான்.
“சாப்பிட்டியாத்தா?”
“சாப்பிட்டேன்யா… சொக்கலிங்கய்யா வீட்டம்மா இட்லி குடுத்தாவ”
“ம்ம்… இன்னைக்குப் பள்ளிக்கொடத்துல வச்சு தடுப்பூசி போடப்போறாவளாம்… பஞ்சாயத்துல இருந்து சொன்னாவ… நீயும் போட்டுக்கிடுதியா?”
“எய்யா அவிய கேக்குற கார்டு எதுவும் என் கிட்ட இல்ல… இந்த வயசுல நான் இருந்து என்ன பண்ண போறேன்? இருக்குற வரைக்கும் இருந்துட்டு சீக்கு வந்தா சீவனை விட வேண்டியது தான்”
“அப்பிடிலாம் சொல்லாதத்தா… போறதா இருந்தா போன வருசம் கொத்து கொத்தா செத்துப் போன மக்களோட நம்ம சீவனும் போயிருக்கும்… ஆண்டவனுக்கு நம்ம மேல ஏதோ இரக்கம் போல… அதான் விட்டு வச்சிருக்கான்… ஆனா பாரு, அதுக்குள்ள மறுபடியும் கிருமி பரவுதாம்… வருசமும் ரெண்டாவுது… அதுக்கு ஒரு முடிவு இல்ல… இப்பிடியே பரவுச்சுனா மறுபடியும் லாக்டவுனை போட்டுடும் கவர்மெண்டு… அதை நெனைச்சா தான் நெஞ்சு பதறுதுத்தா”
“அப்பிடிலாம் ஆகாதுய்யா… போன தடவை வேலை இல்லாதப்பவே ஊரு சனத்துல பாதி பேரு பொழைப்பு சீரழிஞ்ச பொழைப்பா போயிட்டு… முத்தாரமன்னுக்குக் கொடை வச்சாவல்ல… அவ எந்தச் சீக்கும் பரவாம பாத்துப்பாய்யா”
“என்னமோ நீ சொல்லுத… அப்பிடி இருந்தா நல்லது… இல்லனா சோத்துக்கு வழியில்லாம போயிடும்தா… சரி நான் வரட்டா? இன்னிக்கு வி.எம் சத்திரத்துல கடைசி பூச்சு வேலை நடக்கு… இந்த வாரக்கூலி வந்துட்டா சந்தனபாண்டி ஐயாக்கு வட்டி குடுத்துடலாம்” என்றபடி எழுந்தான் சுப்புசாமி.
தன் கண்களிலிருந்து மறைந்தவனை பார்த்தபடி அங்கேயே அமர்ந்திருந்தார் ராசம்மா. மதியவுணவும் சொக்கலிங்கம் வீட்டில் கொடுத்துவிட அதை வாங்க செல்லும் போதும் மீனாட்சியும் இன்னும் சில பெண்களும் பொழிந்த வசைமாரியைத் தலையைக் குனிந்தபடியே கேட்டுக்கொண்டார் அவர்.
நிமிர்ந்து ஏறிட்டால் கூட “நம்ம ஊருல அண்டி பொழைக்க வந்த பிச்சைக்காரிக்கு வார கோவத்த பாத்தியா?” என்று இன்னும் அதிகமாய் மனம் நோக பேசுவார்கள்.
எனவே அமைதியாய் கடந்தவர் சாப்பிட்டார்; பின்னர் பால்பண்ணையில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தார்; இடையிடையே மிச்சமிருந்த சோறை அங்கே வந்த நாய்களுக்கு உருட்டி வைத்தார்.
இருட்டியதும் சுப்புசாமி வேலையிலிருந்து வரும் போதே உழுந்தவடையும் தண்ணீரும் கொடுத்துவிட்டுச் சென்றான். இப்படி தான் ராசம்மாவின் அன்றைய தினம் கழிந்தது.
மொத்தத்தில் வயோதிகத்தில் வறுமையை மட்டுமன்றி தனிமையையும் அனுபவித்த அந்த ஜீவனுக்கு சேர்ந்தவிளை கிராமமும் அதன் மக்களும் இனிப்பும் கசப்பும் கலந்த நாட்களை பரிசாக அளித்து வந்தனர்.
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction