“சிலர் கிட்ட மட்டும் நமக்கு பிரத்தியேகமான அன்பு கிடைக்கணும்னு எதிர்பார்ப்போம்… அவங்களுக்கு நம்ம ஸ்பெஷலானவங்களா இருக்கணும்னு பிரயத்தனப்படுவோம்… அவங்க எல்லாரையும் மாதிரி நம்மளை ட்ரீட் பண்ணுனாங்கனா கோவம் வரும்… எரிச்சல் வரும்… என்னை எப்பிடி நீ சாதாரணமா நடத்தலாம்னு ஒரு ஆதங்கம் நமக்குள்ள வெடிக்கும்… இதுல்லாம் ஏன் தோணுதுனு ஆராய்ச்சி பண்ணி நேரத்தை வேஸ்ட் ஆக்குறதுக்குப் பதிலா அந்த நபர் கிட்டவே பேசிட்டா அவங்களும் காரணத்தைச் சொல்லிடுவாங்க… ஏதோ ஒரு வருத்தம், கோபம் அவங்களுக்கு நம்ம மேல இருக்கலாம்… அதை தெரிஞ்சிக்கிட்டா நம்ம பக்கம் இருக்குற தப்பு என்னனு தெரிஞ்சு திருத்திக்க முடியும்”
-அனுக்ரஹா
காலையில் எழுந்ததும் முதல் கடமையாக மொபைலை எடுத்து டேட்டாவை ஆன் செய்ததும் அனுக்ரஹாவின் கண்ணில் பட்டது அவளது அன்னை அனுப்பிய முருகன் படத்துனான காலை வணக்கம்.
“ஓஹ்! இன்னைக்கு சஷ்டியா?” என்று முணுமுணுத்தபடியே ‘குட்மானிங்கை’ அனுப்பி வைத்தவள் இன்னொரு படிக்கப்படாத செய்தி இருப்பதைப் பார்த்ததும் புருவம் சுருக்கினாள்.
‘ஹிட்லர்’ என்ற பெயரிலிருந்து வந்த செய்தி அது.
அவசரமாகப் படித்துப் பார்த்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இன்னைக்குக் கொஞ்சம் பிசி… வீக்கெண்ட் பேசலாம்”
வாசித்த பிற்பாடு தான் அவன் தன்னிடம் பேசிய விதத்துக்கு சிறு வருத்தம் கூட தெரிவிக்காதது புத்தியில் உறைத்தது அனுக்ரஹாவுக்கு.
‘இவன் வாரம் முழுவதும் பிசி என்று சொன்னவரைக்கும் சரி. நான் வாரயிறுதியில் ஃப்ரீயாக இருப்பேன் என்று இவனே எப்படி நினைக்கலாம்?’
எரிச்சலோடு தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.
“வீக்கெண்ட்ல நான் பிசி”
அவ்வளவு தான்! உதட்டைச் சுழித்தவள் அவனது வாட்சப் ‘லாஸ்ட் சீன்’ என்று காட்டிய நேரத்தைப் பார்த்தாள்.
சரியாகத் தனக்குச் செய்தி அனுப்பியதிலிருந்து ஒரு நிமிடம் கழித்து!
அது என்னவோ மனதுக்கு இதமாக இருந்தது. எனக்குச் செய்தி அனுப்பிவிட்டு உடனே ஆப்லைன் போய்விட்டான் என்பதில் ஒரு சின்னச் சந்தோசம் அவளுக்கு.
அடுத்து அவனுடைய டிபியை ஆராய ஆரம்பித்தாள்.
கருப்பும் வெள்ளையுமாகச் சதுரங்கத்தின் காய்கள் நின்றிருக்க அதில் ராஜாவை மையைப்படுத்திய படத்தில் கோட்ஸ் ஒன்று இருந்தது.
“A real man can use power rather than let power use him”
அதை வாசித்ததும் அனுக்ரஹா உதட்டைச் சுழித்து அழகு காட்டிக்கொண்டாள்.
“இந்தப் பில்டப்புக்குலாம் குறைச்சல் இல்ல”
அனுக்ரஹா சலித்தபடி எழுந்தவள் குளித்து அலுவலகம் செல்ல தயாரானாள்.
அவளும் பிரபாவதியும் அலுவலகத்தை அடைந்ததும் அங்கே முகுந்தன் அவர்களுக்காக ஒரு நற்செய்தியை வைத்திருந்தான்.
“வீ மார்ட் சி.ஈ.ஓ கூட தாமஸ் குரியன் சார் எனக்கு மீட்டிங் ஒன்னு அரேஞ்ச் பண்ணிருக்கார்… அதுக்காக இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ளைட்ல நான் மும்பைக்குப் போறேன்…. இந்த மீட்டிங் மட்டும் சக்சஸ் ஆகிடுச்சுனா நம்ம புராடக்ட்ஸ் எல்லாம் இந்தியா முழுக்க உள்ள வீ மார்ட் ஸ்டோர்ஸ்ல லாஞ்ச் பண்ணிடலாம்… அப்பிடியே ஸ்மார்ட் பஜார், வீ.ஆர் ஹைபர் மார்க்கெட் மாதிரி பெரிய செயின் ஸ்டோர்ஸ் கூடவும் டை-அப் வைக்குறதுக்கான பேச்சுவார்த்தையையும் ஆரம்பிச்சிடலாம்னு லோகநாதன் சார் சொன்னார்”
அந்தச் செய்தியைக் கேட்டதும் இளைஞர் பட்டாளம் உற்சாகத்தில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
“உங்க எல்லாருக்கும் இன்னொரு முக்கியமான டாஸ்க் இருக்கு கய்ஸ்”
என்ன என்று அனைவரும் ஆர்வமாகப் பார்த்தார்கள்.
“வழக்கம் போல நம்ம கம்பெனியோட சோசியல் மீடியா அப்லோட்ஸ் வரணும்… அதோட பொறுப்பை ஷாமும் வித்யூத்தும் பாத்துக்கோங்க… நம்மளோட ஷிப்பிங் பார்ட்னர் மேல கொஞ்சம் கம்ப்ளைண்ட்ஸ் வருது… ஆர்டர் டிலே ஆகுது, பேக்கேஜை டேமேஜ் பண்ணி கொண்டு வர்றாங்கனு திருச்சில இருந்து ஒரு கஷ்டமர் கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க… அது என்னனு ரவிகிஷன் கவனிக்கணும்… முடிஞ்சா நீ அவங்க ஜி.எம் கூட பேசிடு ரவி… அப்புறம், ரீவாக்கு ஒரு டாஸ்க்… சென்னையில ஃபேமஸான சூப்பர் மார்க்கெட்ஸ் சிலதோட லிஸ்ட் உனக்கு அனுப்பிருக்கேன்… நான் மும்பைல இருந்து வர்றதுக்குள்ள நீ இந்த வேலைய முடிச்சிடுவனு நம்புறேன்… ஃபைனலி மை கேப்டன் அனு! நீ ஆல்ரெடி விதவிதமான டிஷ் பத்தி தகவல் சேகரிச்சிட்டிருக்கனு தெரியும்… பொங்கல் வரப் போகுது… யூ ஹேவ் டூ திங் அபவுட் நியூ புராடக்ட் லாஞ்ச்”
“ஷ்யூர் அண்ணா” என அனைவரும் ஒருமித்தக் குரலில் சொல்லி முகுந்தனை வழியனுப்பி வைத்தார்கள்.
அவன் சொன்ன நற்செய்தி அன்றைய நாளுக்கான பூஸ்டாக அமைந்தது மெல்டிங் பாட் குழுவுக்கு.
அனுக்ரஹா கூட அந்த உற்சாகத்தில் ராகவர்தனின் செய்தியால் உண்டான எரிச்சலையும் சலிப்பையும் மறந்து போனாள்.
பொங்கல் சமயத்தில் எந்த உணவுப்பொருளை அறிமுகப்படுத்தினால் சரியாக இருக்குமெனத் தேடித் தீர்த்துவிட்டு ஓய்ந்திருந்த சமயத்தில் மதியவுணவுக்கான நேரமும் வந்துவிட்டது.
வழக்கமாக இந்நேரத்தில் அன்னையிடம் பேசுவாள் அனுக்ரஹா.
அவரிடம் முகுந்தன் தனக்குக் கொடுத்திருக்கும் வேலையைப் பற்றி கூறினாள்.
“பொங்கலுக்கு ஸ்பெஷல்னா எல்லா காய்கறியும் போட்டு வைக்குற பொங்கல் குழம்பு தான்… அதுல நாட்டுக் காய் எல்லாம் ஒற்றைப்படைல போட்டு வைப்போம்… மினிமம் ஏழு காய்… மேக்சிமம் இருபத்தோரு காய்… ஒவ்வொரு ஏரியாலயும் ஒவ்வொரு மாதிரி சமைப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்… நான் எப்பிடி செய்வேன்னு நீ பாத்திருக்கல்ல?”
ஆஹா! இதை எப்படி மறந்தோமெனத் தலையில் தட்டிக்கொண்டவள் “தேங்க்யூ ஃபார் திஸ் வொண்டர்ஃபுல் ஐடியா… இதை நான் ட்ரை பண்ணி பாக்குறேன்… அப்புறம் சின்ன பேட்சா ஃபேக்டரில செஞ்சு பாத்து ஒர்க் அவுட் ஆச்சுனா கட்டாயம் இதை நாங்க பெரிய அளவுல பண்ணுவோம்” என்று உற்சாகமாகக் கூறினாள்.
“அதுல்லாம் சரிடி… நீ என்னமோ ராகவ் கிட்ட பேசப்போறதா நம்பர் வாங்குனனு அஜ்ஜூ சொன்னானே”
மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார் அகல்யா.
இளைய சகோதரனை மானசீகமாக வறுத்தெடுத்த அனுக்ரஹா அன்னையைச் சமாளிக்க முடியாமல் திணறினாள்.
“நீயா எதையும் கற்பனை பண்ணிக்காதம்மா… என் ஃப்ரெண்ட் ஒருத்தருக்கு போலீஸ் ஹெல்ப் வேணும்னு சொன்னார்… அவருக்காக வாங்குனேன்”
அகல்யா அந்தப் பொய்யை நம்பவில்லை. அவரிடம் பேசிவிட்டுச் சாப்பிடுவதில் கவனமானாள் அனுக்ரஹா.
‘ரெடி டூ ஈட்’ உணவுவகைகள் என்றாலே சத்தில்லாதவை, நவீன உணவு வகைகளுக்கு மட்டுமே மாற்று என்ற நிலையை மாற்ற வேண்டும் என்பதே முகுந்தனின் தற்போதைய குறிக்கோள்.
மண்சார்ந்த சமையலை ‘ரெடி டூ ஈட்’ வகையறாவாகத் தயாரிக்கும்போது சமையலின் பாரம்பரியம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும். கூடவே நேரமின்மையால் சமைக்காமல் துரித உணவுகளை நாடும் இளைய தலைமுறையினருக்குப் பாரம்பரிய சமையலைச் சாப்பிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
அந்த எண்ணத்தில் தான் ‘வெரைட்டி ரைஸ்’ வகைகள் பற்றி அவள் தேடத் தொடங்கியிருந்தாள். விழாக்காலத்துக்கென அவர்கள் பிரத்தியேகமாக ஏதாவது ஒரு தயாரிப்பை வெளியிடுவது வழக்கம். இம்முறை பொங்கல் குழம்பை அதற்காகத் தேர்ந்தெடுத்தாள் அனுக்ரஹா.
அதற்காக பிரபாவதியுடன் கலந்தாலோசனை செய்ததில் அன்றைய தினம் கழிந்தது.
“டி அனு! நான் இன்னைக்கு ரீவ் கூட போறேன்… நாளைக்குச் சீக்கிரமே எழுந்திரிச்சு அண்ணா குடுத்த லிஸ்டுல இருக்குற சூப்பர் மார்க்கெட்சோட ஜி.எம்மைச் சந்திக்கணும்”
“ஓ.கே பிரபா… ஆல் த பெஸ்ட் ரீவ்… நாளைக்கு மீட்டிங் சக்சஸ் ஆகும்”
“தேங்க்ஸ் அனு… நீ தனியா போயிடுவியா? இல்ல…”
ரீவா இழுக்கவும் அவளை முறைத்த அனுக்ரஹா “நான் ஒன்னும் குட்டி பாப்பா இல்ல” என்று சொல்லிவிட்டுத் தனது வெஸ்பாவைக் கிளப்பினாள்.
அன்றைய தினம் கொஞ்சம் அதிகநேரம் அலுவலகத்தில் செலவளித்துவிட்டாள்.
டையாக்ஸ் பிசினஸ் பார்க்கிலிருந்து அவளது வீடு இருக்கும் ராஜா ஜோசப் நகர் வெகுதூரம் இல்லை என்பதால் அதிக நேரம் பயணத்தில் செலவளியாமல் ஒலிம்பியா க்ராண்டே ரெசிடென்சிக்குள் நுழைந்தது அவளது வெஸ்பா.
அவளுக்கென அங்கே ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் வெஸ்பாவை நிறுத்தியவள் உரசுவது போல வந்து நின்ற ராயல் என்ஃபீல்டைக் கண்டதும் திகைத்துப் போனாள்.
அந்த பைக்கை ஓட்டி வந்தவன் தலைக்கவசத்தை கழற்றும் வரை கொரியன் சீரீஸ்களில் வரும் சைகோ கில்லர் போல அவனை எண்ணி மருண்டவள் வந்திருப்பவன் ராகவர்தன் என்று அறிந்ததும் அதிர்ந்தே போனாள்.
“நீயா?”
“நானே தான்” என்றவன் நிதானமாக ஹெல்மெட்டை தனது கையில் சுழற்ற
“உனக்கு எப்பிடி நான் இங்க இருக்கேன்னு…” என வார்த்தையை முடிக்காமல் அவள் தடுமாறினாள்.
“நான் உன்னை மாதிரி இல்ல… இங்க வந்ததும் உன்னைப் பத்தி எல்லா டீடெய்ல்சும் அங்கிள் கிட்ட வாங்கிட்டேன்”
அனுக்ரஹாவுக்குள் மீண்டும் தடுமாற்றம்! அதை மறைத்துகொண்டாள்.
“வீக்கெண்ட்ல நீ பிசினு மெசேஜ் பண்ணிருந்த… அதான் டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம்னு நானே வந்துட்டேன்”
சாதாரணமாகச் சொன்னவன் “அங்கிள் நீ அப்பார்ட்மெண்ட்ல தங்கிருக்கனு சொன்னார்… இங்க நிக்குறதை பாத்தா பார்க்கிங்கில தங்கியிருக்குற மாதிரி தோணுது” என்றதும் தலையிலடித்துக் கொண்டாள் அவள்.
“அது உன்னைப் பாத்த ஷாக்ல..”
அவள் பேச முடியாமல் தவிக்க போகலாமென்பது போல கை காட்டினான்.
அனுக்ரஹா அவனோடு மின்தூக்கிக்குச் செல்லும்போதே இருவருக்கும் சேர்த்து ஸ்விகியில் உணவு ஆர்டர் செய்துகொண்டே நடந்தாள்.
அவளுடைய வீடு இருக்கும் தளம் வந்ததும் வெளியேறி காரிடாரில் நடக்கும்போதே ராகவர்தனின் விழிகள் அந்த இடத்தை ஆராயத் தொடங்கின.
கதவைத் திறந்து உள்ளே வந்ததும் உட்காருமாறு அவனுக்குச் சைகை காட்டிவிட்டுச் சமையலறைக்குள் வந்தவள் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு ஹாலுக்குப் போனாள்.
ராகவர்தனிடம் பாட்டிலை நீட்டியதும் வாங்கிப் பருகியவன் “என் கிட்ட என்ன கேக்கணும் உனக்கு?” என்று நேரடியாக விசயத்துக்கு வர
“அத்தை கிட்ட நீ வேற பொண்ணு பாக்க சொன்னியா?” என்று நேரடியாகவே கேட்டாள். குரலில் குற்றம் சாட்டும் தொனி.
ராகவர்தன் தண்ணீர் பாட்டிலை சோபாவின் பக்கவாட்டில் வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
“பாக்க சொன்னா என்ன தப்பு?”
அனுக்ரஹாவின் கண்கள் கோபத்தில் சுருங்கின.
“அப்ப எதுக்கு என் கிட்ட அன்னைக்கு இண்டேரக்டா கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்ட?”
“கேக்க தோணுச்சு… கேட்டேன்… நீ அதுக்கு ஆமா இல்லனு எந்தப் பதிலும் சொல்லல… சோ அம்மா கிட்ட வேற பொண்ணு பாக்க சொன்னேன்”
அவன் அலட்டாமல் அளித்த பதிலில் அவளுக்குத் தான் தொண்டை அடைத்த உணர்வு.
“அப்ப உனக்குக் கல்யாணம் பண்ணுறதுக்கு ஏதோ ஒரு பொண்ணு இருந்தா போதும்… அப்பிடி தானே?”
மனத்தாங்கலோடு கேட்டாள் அனுக்ரஹா.
ராகவர்தன் அவளை ஸ்கேன் செய்யும் பார்வை பார்க்கவும் முகத்தை மாற்றிக்கொண்டாள்.
“அப்பிடியே நான் நினைச்சாலும் என்ன தப்பு? நீயும் நானும் லவ்வர்ஸ் இல்ல… ஃப்ரெண்ட்சும் இல்ல… ஜஸ்ட் தெரிஞ்சவங்க… உன்னைக் கல்யாணம் பண்ணுக்கிட்டாலும் வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எனக்கு அது ஒன்னு தான்”
அனுக்ரஹாவின் முகம் மாறிப்போனது.
“தேங்க்ஸ்… இதை தெரிஞ்சிக்க தான் கால் பண்ணுனேன்… அப்பிடியே என்னோட பதிலையும் சொல்லிடுறேன்… எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல”
ராகவர்தனின் கண்களில் கோபம் மின்னி மறைந்தது.
“நீ சொன்னதை உனக்கு நான் திருப்பிச் சொன்னதுக்கே இவ்ளோ கோவம் வருதுல்ல”
“அந்தச் சிச்சுவேசனும் இதுவும் ஒன்னா ராகவ்?
அனுக்ரஹாவின் குரல் உயர்ந்தது.
“கத்தக்கூடாது… நான் உன் எதிர்ல தான் இருக்கேன்… எதிர் ஃப்ளாட்ல இல்ல”
கப்சிப்பென வாயை மூடிக்கொண்டாள் அவள்.
“இந்தக் கண்ட்ரோல் பண்ணுற குணத்தால தான் எனக்கு எரிச்சல் வருது”
வாய்க்குள் முணுமுணுத்தாள்.
சில நிமிடங்கள் அந்த அறைக்குள் மௌனத்தின் ஆட்சி நடந்தேறியது.
அந்நேரத்தில் அழைப்பு மணி அடித்தது.
“ஸ்விகில ஆர்டர் போட்டிருந்தேன்”
அனுக்ரஹா எழுந்திருக்க அவளைப் பார்வையால் அடக்கிவிட்டு எழுந்தான் ராகவர்தன்.
கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். உணவு கொண்டு வந்த ‘டெலிவரி எக்சிகியூட்டிவிடம்’ இருந்து பார்சலை வாங்கிக்கொண்டவன்
“ரேட்டிங் மறந்துடாதிங்க சார்” என்றதற்கு சரியென்று தலையாட்டிவிட்டு கதவை அடைத்தான்.
உணவு பார்சலை அனுக்ரஹாவிடம் நீட்டியவன் அவள் மணம் வேறுவிதமாக வரவும் பார்சலைப் பரிசோதிப்பதைப் பார்த்துவிட்டு என்னவென வினவினான்.
“நான் நம்ம ரெண்டு பேருக்கும் புல்காவும் தால் மக்கானியும் ஆர்டர் பண்ணுனேன்… ஆனா வெஜ் புலாவ் வந்திருக்கு… ஆர்டரை மாத்திக் குடுத்துட்டாங்க போல” என்று ஒவ்வொரு கொள்கலனாக எடுத்து வெளியே வைத்தபடி உதட்டைப் பிதுக்கினாள்.
“உடனே கால் பண்ணி அவரை வரச் சொல்லு… திருப்பிக் குடுத்துடலாம்”
அனுக்ரஹா கொள்கலன்களை பேப்பர் கவரிலிருந்து எடுத்து வைத்தவள் அந்தக் கவருக்குள் ஏதோ கிடக்கவும் எடுத்துப் பார்த்தாள்.
பார்ப்பதற்கு தபால் தலை போல இருந்தது.
அவள் அதைத் திருப்பிப் பார்க்க ராகவர்தன் ஏதோ தோன்றவும் “அதை குடு” என்று கேட்டான்.
“ஸ்டாம்ப் மாதிரி இருக்கு” என முணுமுணுத்தபடி நீட்டியவள் அவனது விழிகளில் கோபச்சீற்றம் ஏறவும் என்னவெனப் புரியாமல் விழித்தாள்.
அவசரமாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.
அந்த எக்சிகியூட்டிவ் இன்னும் தரைத்தளம் வரவில்லை. அவனது பைக் தரிப்பிடத்தில் பேக்கோடு நின்றது.
உணவு பார்சலை வெடுக்கென அனுக்ரஹாவிடமிருந்து பிடுங்கியவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேற அவளும் அவனைத் தொடர்ந்தாள்.
வாயிலுக்கு வந்ததும் “நீ உள்ள இரு” எனக் கட்டளையிட்டவனின் குரலில் அவசரம்.
“நானும் வர்றேன்”
“உள்ள இருனு சொன்னா அதைக் கேளு அனு”
சீற்றத்தோடு சொன்னவன் அங்கிருந்து வேகமாக ஓடினான்.
மாறி வந்த உணவைக் கொடுப்பதற்கு ஏன் இந்த வேகம்? தன் கண்ணிலிருந்து மறைந்தவனின் செயல்களில் திடீரென முளைத்த பரபரப்புக்கும் அவசரத்துக்கும் காரணம் புரியாமல் நின்றாள் அனுக்ரஹா.
ராகவர்தனோ அந்த டெலிவரி எக்சிகியூட்டிவைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக புயல் வேகத்தில் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தான், மின்தூக்கி தரைத்தளத்திற்கு போய்க்கொண்டிருந்த காரணத்தால்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


