இரத்தம் கொடுத்துவிட்டு வந்தவன் அங்கேயே தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டான். பின்னர் நினைவு வந்தவனாக ரிசப்ஷனுக்குச் சென்றவன் கிஷோரின் எண்ணை அழைத்து மிகுந்த சிரமத்துடன் வார்த்தைகளைக் கோவையாகப் பேசி அவனிடம் விஷயத்தைக் கூறி இங்கே வருமாறு கூறினான். கூடவே ரித்திமாவை மட்டும் அழைத்து வரச் சொல்லிவிட்டுச் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்தான்.
அவந்திகா அளவுக்கு இல்லையென்றாலும் அவனுக்கும் சிறியளவு காயம் பட்டுத்தான் இருந்தது. ஆனால் வலி ஏதும் தெரியாத வண்ணம் அவனது உடலும் மனமும் சேர்ந்து மரத்துவிட்டது போன்று அவனுக்குத் தோன்றியது.
கண்ணை மூடியவனுக்கு “இத உன்கிட்ட இனிமே சொல்ல முடியுமானு தெரியல! ஐ லவ் யூ ராகவ்” என்ற அவந்திகாவின் குரலே காதில் ஒலிக்க அவனால் எதுவுமே செய்ய இயலாத ஒரு நிலை!
கண் எதிரே தன் உயிராக நினைப்பவள் சாவின் விளிம்பில் இருக்க அதைக் காணும் துயரம் தன் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று எண்ணிக்கொண்டவன் ஐ.சி.யூ வாசலிலேயே தவமிருந்தான்.
ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வெளியே வந்த மருத்துவர் “பிளட் லாஸை பேலன்ஸ் பண்ணியாச்சு. தென் இன்டர்னல் ப்ளீடிங் ஸ்டாப் ஆகுறதுக்கு மெடிசின் குடுத்துருக்கோம். பட் ஷீ இஸ் ஸ்டில் இன் அன்கான்ஷியஸ் ஸ்டேஜ். இந்த மெடிசின்க்கு அவங்க பாடி ரெஸ்பான்ட் பண்ணுறதப் பாத்துதான் ஃபர்தரா சர்ஜரி பத்தி யோசிக்க முடியும்” என்று சொன்னவர் அவனுடைய நிலையைக் கண்டு நர்ஸிடம் அவனுக்கு ட்ரெஸ்ஸிங் செய்யச் சொல்லிவிட்டுச் சென்றார்.
நர்ஸ் மருந்துடன் வந்து காயத்தைச் சுத்தம் செய்து கட்டு போட்டது கூட அறியாமல் தன்னினைவு இழந்தவனாகச் சிலை போல் அமர்ந்திருந்தான் ராகவ்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதே நேரம் ராகவ் போன் செய்து விஷயத்தைச் சொன்னதும் வேகமாக கிளம்பிய கிஷோர் வீட்டினரிடம் பிசினஸ் விஷயமாகச் செல்வதாகச் சொல்லிச் சமாளித்துவிட்டு ரித்திமாவையும் கையோடு கூட்டிக்கொண்டு கிளம்பினான். அவள் வழியெங்கும் கேட்ட கேள்வி எதற்கும் பதிலளிக்காமல் மருத்துவமனையை வந்தடைந்தான்.
“இப்போ எதுக்கு நாம இந்த ஹாஸ்பிட்டல்க்கு வந்திருக்கோம்? அட்லீஸ்ட் இப்போவாச்சும் சொல்லு கிஷோர்” என்று கேட்ட ரித்திமாவைப் பார்த்து உயிரற்ற புன்னகையைச் சிந்திய கிஷோர் அவளை உள்ளே அழைத்துச் சென்று விவரம் கேட்டு ஐ.சி.யூ வார்டு நோக்கிக் நடக்க ஆரம்பித்தான்.
அவனை மௌனமாகப் பின்தொடர்ந்த ரித்திமா ஐ.சி.யூவின் வாயிலில் கை கால்களில் கட்டுகளுடன் அமர்ந்திருந்த ராகவைக் கண்டதும் பதறிப்போய் வேகமாக அவனை நோக்கி ஓடினாள்.
“ராகவ்! என்னாச்சு? ஏன் உங்களுக்கு அடி பட்டிருக்கு? ஹனிபி எங்க?” என்று கேள்விகளால் திணறடிக்க அவனால் அவளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாக அளிக்க முடிந்தது.
அந்த நேரம் நர்ஸ் உள்ளே இருந்து வந்தவர் ராகவிடம் “சார்! உங்க வைஃப் பாடி மெடிசின்க்கு குயிக்கா ரெஸ்பான்ட் பண்ணிருச்சு! டாக்டர் வந்து சின்ன சர்ஜரி ஒன்னு பண்ணுவாரு. அதுக்கு அப்புறமாதான் எதுவுமே சொல்ல முடியும்” என்று அவளது நிலையை விளக்கிவிட்டுச் செல்ல ரித்திமா குழப்பத்துடனும் அதிர்ச்சியுடனும் அந்தக் கதவிலிருந்த கண்ணாடி வழியே பார்க்க அங்கே லைஃப் சப்போர்ட்டிங் சிஸ்டம் உதவியுடன் சுவாசித்துக் கொண்டிருந்த அவந்திகாவின் கட்டுப் போட்ட உடல் தெரியவும் அதிர்ச்சியில் உறைந்தவளின் தொண்டையிலிருந்து மெதுவாகச் சின்ன கேவல் எழுந்தது அவளிடம்.
பின்னர் அது கட்டுப்படுத்த முடியாத அழுகையாக மாறவும் ராகவாலும் அவனைச் சமாளிக்க முடியவில்லை. ரித்திமாவைச் சமாதானப்படுத்த கிஷோரால் முடியவில்லை.
அழுது அழுது கண்ணீர் வற்றிவிட ரித்திமா “இது எப்பிடி நடந்துச்சு ராகவ்? சொல்லுங்க!” என்று அழுகையினூடே கேட்டாள்.
ராகவ் கண்ணை மூடி நடந்ததை உணர்ச்சியற்ற குரலில் கூறி முடித்தான்.
அதே நேரத்தில் உள்ளே அவந்திகாவுக்குச் சிகிச்சையும் நடந்துகொண்டிருக்க கிஷோர் கட்டணம் செலுத்திவிட்டு இருவருக்கும் தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
4 மணி நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் “சர்ஜரி முடிஞ்சாச்சு. பட் அவங்க இன்னும் லைஃப் சப்போர்ட்டிங் சிஸ்டம் இல்லாம மூச்சுவிடச் சிரமப்படுறாங்க! அவங்க இன்னும் 48 ஹவர்ஸ் அப்சர்வேஷன்ல வச்சிட்டுதான் நாங்க எதுவும் சொல்ல முடியும்! தென் இந்த 48 ஹவர்ஸ்குள்ள அவங்களுக்குக் கான்ஷியஸ் வந்தா மட்டும்தான் அவங்க சீக்கிரமா ரெகவர் ஆவாங்க. அதர்வைஸ் ரொம்பக் கஷ்டம். தைரியமா இருங்க” என்று சொல்லி ராகவின் தோளைத் தட்டிவிட்டுச் சென்றார்.
கிஷோர் “பய்யா! நீங்க வேணாப் பாருங்க! பாபி சீக்கிரமாக் கண் முழிச்சிடுவாங்க” என்று சொல்லும்போதே நர்ஸ் வந்து “சார் இவருக்கும் சின்னச் சின்ன இன்ஜுரீஸ் இருக்கு. இவரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறது பெட்டர்” என்று சொல்ல கிஷோர் அவரிடம் தலையாட்டியவன் இருவரையும் கஷ்டப்பட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
அவ்வாறு அந்த இரவு கடந்து சென்றது.
ஆனால் மறுநாள் காலையும் அவளுக்கு நினைவு திரும்பாமலிருக்க ரித்திமா மிகவும் பயந்து போனாள். கிஷோரோ ராகவையும் ரித்திமாவையும் ஒரு புறம் சமாளித்தவன் மறுபுறம் தன் குடும்பத்தினருக்கு இந்த விவரம் தெரியாமல் மறைக்க மிகவும் சிரமப்பட்டுப் போனான்.
சுவரை வெறிக்க வெறிக்கப் பார்த்தவாறு கை கட்டி அமர்ந்திருந்த ராகவைக் கண்டவன் “பய்யா! எல்லாம் சரியாயிடும்” என்று சொல்லி அவனுக்குத் தைரியம் கூறினான்.
அதற்குக் கசப்பான புன்னகையை மட்டும் பதிலாக அளித்தவன் “எல்லாத்துக்கும் நான்தான் காரணம்! அவ சாதாரண அவந்திகாவாவே இருந்திருந்தா இந்த நெலமை அவளுக்கு வந்திருக்காது. என்னால, என்னைக் கல்யாணம் பண்ணிகிட்ட ஒரே காரணத்துக்காக இன்னைக்கு இப்பிடி வாழ்வா சாவா கன்டிஷன்ல இருக்கா!” என்று உடைந்த குரலில் கூறவும் கிஷோருக்குக் கஷ்டமாக இருந்தது.
அவன் அறிந்த ராகவ் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்று அவந்திகாவின் ராகவாக அவன் கண்களுக்குத் தெரிந்தான்.
ரித்திமா என்ன செய்வதென்று அறியாமல் இடிந்துபோய்தான் அமர்ந்திருந்தான்.
இவ்வாறு அவர்கள் மூவரையும் பயமுறுத்திவிட்டு 30 மணி நேரம் கழித்துக் கண்விழித்தாள் அவந்திகா.
நர்ஸ் டாக்டரை அழைத்துக் காட்டவும் அவர் அவளைப் பரிசோதித்தார். மருந்தின் வீரியத்தால் அவளால் தெளிவாகப் பேச முடியவில்லை. தலை ஏதோ பாரமாக இருப்பது போல மட்டும் உணர்ந்தவள் மீண்டும் மயக்கத்துக்குச் சென்றாள்.
டாக்டர் வெளியே வந்து அவள் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், ஆனால் மருந்துகள் மற்றும் வலியின் காரணமாக மயக்கத்தில் இருப்பதாகவும் இனி பயப்பட எதுவும் இல்லையென்றும் கூறிவிட்டுச் சென்றார்.
அதைக் கேட்டதும்தான் மூவருக்கும் போன உயிர் திரும்பி வந்ததைப் போல் இருந்தது. கண்ணாடி வழியாக அவந்திகாவைப் பார்த்த ராகவ் அவளின் மூச்சு சீராக இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு சின்ன நிம்மதியுடன் நின்றான்.
இவ்வாறே அவந்திகா இடையிடையே விழித்தவள் ஒரு வாரகாலம் ஐ.சி.யூவில் இருக்க அந்த ஏழு நாட்களில் நரகம் எப்படி இருக்கும் என்பதை ராகவ் உயிரோடிருக்கும்போதே அனுபவித்துவிட்டான்.
எட்டாவது நாளில்தான் அவர்கள் அவளைப் பார்ப்பதற்கே அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளே வந்தவர்களைப் பார்த்துச் சிரமத்துடன் இமையைப் பிரித்தவள் சிறிய புன்னகையைச் சிந்தியபடி மாஸ்க்கைச் சுட்டிக்காட்ட அருகிலிருந்த நர்ஸ் அதை அகற்றினார்.
அவளால் சிரமமின்றி மூச்சுவிட முடிவதை உறுதி செய்தவர் அவர்களிடம் நீண்ட நேரம் அவளுடன் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றார்.
மெதுவாக அவர்களை நோக்கி ஒரு கரத்தை உயர்த்த முயன்றவளின் கரம் பற்றி அவள் அருகில் அமர்ந்தான் ராகவ்.
அவளைக் கண்ணிலே ஒற்றிக்கொண்டவன் கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர் விட்டான். எப்பேர்ப்பட்ட ஆணாக இருந்தாலும் தான் காதலிக்கும் பெண்ணை இந்த நிலையில் பார்த்தால் கண்ணீர் விடத்தான் செய்வான்!
அவனுடைய கண்ணீர் கிஷோரையும் அசைத்துவிட அவனால் கட்டுப்படுத்த முடியாமல் திரும்பி நின்றுகொண்டான்.
நிமிர்ந்த ராகவ் “ஜான்சி ராணி! நீ எங்களை ரொம்பப் பயமுறுத்திட்ட தெரியுமா?” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு அவளது தலையில் இருந்த கட்டை ஆதரவாகத் தடவிக்கொடுத்தான்.
சிரமத்தினூடே “உன்னைப் பாத்து நான் கூடப் பயந்து போய்ட்டேன், தெரியுமா?” என்று அவள் திரும்பிப் பதிலளிக்கவும் மூவரும் புரியாது விழித்தனர்.
“பின்ன, உன் மூஞ்சியப் பாரு கண்ணாடில! நீ என்னோட மார்ஷ்மெல்லோ இல்ல! அகோரி பாபா மாதிரி இருக்க” என்று அவனது ஒரு வாரத் தாடியைக் கேலி செய்தாள்.
“ஹனிபி! இந்தக் கன்டிஷன்லயும் உனக்குக் கிண்டல் பண்ண வருது பாரு! இந்த எட்டு நாளா நாங்க தவிச்ச தவிப்பு அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்” என்று தழுதழுத்த குரலில் பேசினாள் ரித்திமா.
அவந்திகா பின்னர் யோசனையுடன் “வீட்ல எல்லாருக்கும்…..” என்று மெதுவாக வீட்டினரை நினைவுறுத்திக் கேட்டாள்.
“பாபி! அவங்க எல்லார்கிட்டயும் நாம இங்க ஒரு மீட்டிங்குக்கு வந்ததா சொல்லிச் சமாளிச்சு வச்சிருக்கேன்! பட் ரொம்ப நாளைக்கு இந்தப் பொய்யக் காப்பாத்த முடியாது”
“பட் சொன்னா அவங்க கஷ்டப்படுவாங்க கிஷோர்” என்றாள் ரித்திமா.
“சொல்லித்தான ஆகணும்! இன்னும் எத்தனை நாளுக்கு நாம இங்க இருக்கப் போறோம்? நார்மல் வார்டு ஷிஃப்ட் பண்ணுற ஸ்டேஜ்ல நாம பாபியக் கூட்டிட்டுப் போயிடலாம்” என்று அதற்குப் பதிலளித்தான் கிஷோர்.
“பட் அவ பாடி கன்டிஷன் அதுக்கு ஒத்துக்கணுமே!” என்று ரித்திமா யோசிக்க “நம்ம டாக்டர்கிட்ட கேட்டுட்டு வந்துடுவோம்” என்று சொல்லிக்கொண்டே ரித்திமாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றான் கிஷோர்.
அவ்வளவு நேரம் அவளை விழியகலாமல் பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் அவனை நோக்கித் திரும்பவும் மனதிலிருந்ததைக் கேட்டே விட்டான்.
“ஏன் இப்பிடிப் பண்ணுன அவந்திகா? அந்த ரத்த வெள்ளத்துல உன்னைப் பாத்ததும் எனக்கு உயிர் வாழணும்கிற ஆசையே போய்டுச்சு. பதில் சொல்லு”
“பிகாஸ் ஐ லவ் யூ ராகவ்!” என்று சொல்லி அவனைக் காதலுடன் பார்க்க ராகவ் இவ்வளவு காதலுக்குத் தான் தகுதியானவனா என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.
“என்னால அப்போ எதுவுமே யோசிக்க முடியல! அப்பா அம்மா நான் இப்பிடி ஒரு கண்டிஷன்ல இருந்தப்போ அம்மா என்னை இப்பிடித்தான் சமாளிச்சாங்க! அவங்களுக்கு அவங்க பொண்ணோட உயிர் முக்கியமாத் தோணுன மாதிரி எனக்கு என் புருஷனோட உயிர் முக்கியம்னு தோணுச்சு! என்னைக் காப்பாத்துறதுக்காகத்தானே சாகத் தயாராகுற அளவுக்கு உனக்கு என் மேல லவ் இருக்குனா எனக்கும் அதே அளவு லவ் இருக்கு ராகவ்” என்று சிரமத்தினூடே உரைத்தவளின் நெற்றியில் முத்தமிட்டான் அவளின் ராகவ்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


