அன்று சீக்கிரமாகவே அலுவலகத்துக்கு வந்துவிட்டாள் ரித்திமா. கதவைத் திறந்தவள் உள்ளே சென்று பேகை வைத்துவிட்டுத் தண்ணீரைக் குடித்தவள் அவந்திகாவுக்குப் போன் செய்து உஷாவின் செக்கப் பற்றி நினைவூட்டி அவளுடன் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினாள்.
தானே இன்று அலுவலகத்தைப் பார்த்துக் கொள்வதாகக் கூறிப் போனை வைத்தவள் யாரோ வருவது போல் அரவம் கேட்க “இன்னைக்கும் வந்துட்டானா” என்று சலித்தபடி வருபவனுக்காகக் காத்திருந்தாள்.
“ஹாய் ஹாய்! என்ன பண்ணிட்டிருக்க டார்லிங்?” என்று பேசிக்கொண்டே உள்ளே வந்தவன் கிஷோர்.
“இன்னைக்கும் வந்துட்டியா?” என்று கேட்டுக்கொண்டே அவனைப் பார்க்காமலே லேப்டாப்பில் தன்னுடைய கவனத்தை வைத்தாள்.
“நீதான் 3 மாசமா பதிலே சொல்லவே இல்ல. பட் நான் அப்பிடியே விட்டுட முடியாது இல்லயா?” என்று சொல்லிவிட்டு ஒரு சேரை அவள் அருகில் போட்டு அமர்ந்தான்.
“உனக்கு வேற வேலையே இல்லயா?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நெறயா இருக்கே! பட் ராகவ் பய்யாதான் இப்போ விஹான் டெலிகாம் டேக் ஓவர் பண்ணதால என் வொர்க் பர்டன் இப்போ அவ்ளோவா இல்ல”
“சோ நீங்க லவ் ட்ராக் ஓட்டுறதுக்கு வந்துட்டீங்க… ஆனா பாருங்க எனக்கு நெறைய வேலை இருக்கு! சோ நீங்க கெளம்புறீங்களா?”
“ப்ளீஸ் ரித்தி! நீ வொர்க் பண்ணுவியாம்! நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம சமத்தா இருப்பேனாம்” என்று சொல்லி நகர மறுத்தவனை எப்பிடியோ போ என்று தோளைக் குலுக்கிவிட்டு அமர்ந்து வேலையைச் செய்யத் தொடங்க அவன் கன்னத்தில் கை வைத்து அவளையே பார்க்க ஆரம்பித்தான்.
ஆனால் ராகவோ இரண்டு கம்பெனிகளின் வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்துகொண்டிருந்தான். கிஷோர் சொன்னபடி ராகவ் இந்த மூன்று மாதங்களில் இரண்டு கம்பெனிகளின் மேலாண்மையையும் பார்த்துக்கொண்டதால் அவனுக்கு அவந்திகாவிடம் சண்டை போடவோ செலவழிக்கவோ நேரம் கிடைக்கவில்லை.
அதனால் அவள் அவன் மீது கடுப்பிலே சுற்றிக்கொண்டிருந்தாள். ராகவுக்கும் அது தெரிந்திருந்தும் அவனால் அவளுக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. அவளால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் அவளது மனதை அவளால் சமாதானம் செய்ய முடியவில்லை.
அன்று அலுவலகத்திலிருந்து வந்தவனிடம் “மிஸ்டர் உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுங்கிறது நியாபகத்துல இருக்கா? நான்தான் உன்னோட வைஃப். ஒரு மாசமா லண்டன் போறேனு சொல்லிட்டு நல்லா ஊர் சுத்திட்டு வந்த. அப்புறம் கிட்டதட்ட டூ மன்த்ஸ் நீ ஆபிஸ் போறதும் தெரியல. வர்றதும் தெரியல! சன்டே கூட என்கூட உன்னால டைம் ஸ்பென்ட் பண்ண முடியாதுல்ல” என்று சண்டை போட ஆரம்பித்தாள்.
அவன் பொறுமையாக அமர்ந்தவன் “வொர்க் லோட் ஜாஸ்தி! இன்னும் 2 மன்த்ஸ் இப்பிடித்தான் இருக்கும் அவந்திகா!” என்று சொல்லிவிட்டு டையைக் கழற்றினான்.
“இன்னும் டூ மன்த்ஸா? இம்பாஸிபிள்! நாளைக்கு ஃபுல்லா நீ என்கூடதான் இருக்கப் போற” என்று சொல்லிவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள்.
“பட் ஜான்சிராணி…..”
“மூச்! எதுவும் பேசாத! நான் சொன்னா சொன்னதுதான்! நீயும் நானும் டுமாரோ ஒரு லாங் ட்ரைவ் போறோம்! நோ மோர் ஆர்கியூமென்ட்ஸ்!” என்று அவனது உதட்டில் விரல் வைத்துக் கூறச் சிரித்தவன் சரியென்று தலையசைத்துவிட்டு ஃப்ரெஷ் ஆகச் சென்றான்.
திரும்பி வந்தவன் காரைச் சர்வீஸுக்கு விட்ட விஷயம் நினைவுக்கு வரவும் சர்வீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்து நாளை காலை கார் தனக்கு வேண்டுமென்று சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டு அவந்திகாவைப் பார்த்தான்.
அவள் நாளை அணியப் போகிற டிரஸ்ஸைக் கண்ணாடி முன் நின்று வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ராகவ்! இந்த யெல்லோ டாப் எப்பிடி இருக்கு?” என்று அதைத் தன் மேல் வைத்துக் காண்பிக்க ராகவ் அதைப் பார்த்துவிட்டுத் தன் பெருவிரலைக் கீழ் நோக்கிக் காண்பிக்க “நல்லா இல்லையா?” என்று கேட்டுவிட்டு வேறொரு டாப்பை எடுத்து அதே மாதிரிக் காண்பிக்க அதற்கும் சேம் ரியாக்ஷன் காட்ட அவள் கடுப்பாகிவிட்டாள்.
“அப்போ எதாச்சும் ஒரு டிரஸ் நீயே செலக்ட் பண்ணிச் சொல்லு” என்று உர்ரென்று சொன்னவளைப் பார்த்துச் சிரித்தவன் “இது நல்லா இருக்கு!” என்று ஒரு லாங் ஸ்கர்ட்டைக் காண்பிக்க அவளுக்கும் அது பிடித்திருக்கவே சந்தோஷத்துடன் அதை எடுத்து வைத்தாள்.
அவர்கள் இருவரும் அந்த லாங் ட்ரைவைப் பற்றிய கனவுகளுடன் உறங்கினர்.
அதே நேரம் அந்தச் சர்வீஸ் ஸ்டேஷனில் ரிப்பேர் சர்வீஸ் எல்லாம் முடிந்து பளபளப்புடன் நின்றது ராகவின் கார்.
அந்தக் காரின் கீழே இருந்து வெளியே வந்த மெக்கானிக் தன் சூப்பர்வைசரிடம் எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறவும் அவர் திருப்தியுடன் சென்றார்.
அவர் சென்றதும் போனை எடுத்த அந்த மெக்கானிக் “ஹலோ! சார் நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் பக்காவாப் பண்ணிட்டேன்” என்று இன்னும் சில வார்த்தைகள் பேசிவிட்டுப் போனை வைத்தவன் காரை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றான்.
அவனிடம் பேசியவன் வேறு யாருமில்லை. சிராஜ் மெஹ்ராதான். சிராஜிற்கு அன்று உறக்கம் வரவே இல்லை. டெலிகாம் இண்டஸ்ட்ரியின் மிகப்பெரிய கான்ட்ராக்ட் ஒன்று அவன் கையிலிருந்து நழுவி விஹானுக்குச் சென்றதால் வந்த கோபம் அவனை உறங்க விடவில்லை.
ராகவிற்குப் பின் கிஷோரால் அவனது போட்டியைச் சமாளிக்க முடியாது என்று தப்புக் கணக்கு போட்டவன் எப்படியாவது அந்தக் கான்ட்ராக்ட்டைக் கைப்பற்ற பெரும் முயற்சி செய்தும் கடைசி நேரத்தில் ராகவின் தலையீட்டால் அது கிஷோருக்கே செல்ல அவன் நெஞ்சில் ராகவின் மேல் இருந்த கோபம் தீராப் பகையாக மாறியது அந்தக் கணமே!
அவனது குறுக்குபுத்தி தீட்டிய கேவலமான திட்டத்தில் அவன் 90 சதவீதம் வெற்றி பெற்றுவிட்டான். ஆனால் நாளை அதற்கான மீதமுள்ள 10 சதவீத வெற்றியைச் சுவைக்க ஆவலுடன் காத்திருந்தான்.
ஆனால் அந்த மோசமான நாளின் விடியல் என்னவோ அழகாகவே இருந்தது.
காலையில் எழுந்ததும் அவந்திகா லாங் ட்ரைவ் செல்வதற்கான ஆர்வத்துடன் தயாராக ராகவ் சர்வீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்து கார் தயாராகிவிட்டதா என்று கேட்க அவர்களோ சிறிய வேலை இருப்பதாகக் கூறவும் அவன் தான் நேரே அங்கே வந்து காரை எடுத்துக்கொள்வதாகக் கூறிப் போனை வைத்துவிட்டான்.
கேள்வியாகப் பார்த்த அவந்திகாவின் அருகில் சென்றவன் அவள் தலைமுடியைக் கலைத்துவிட்டுக் குளிக்கச் சென்றான்.
“போடா! நான் அகெய்ன் ஹேரை செட் பண்ணனும் உன்னால” என்று சிணுங்கியவள் தலைமுடியை வார ஆரம்பித்தாள்.
எல்லாம் முடித்துவிட்டுக் கண்ணாடியில் பார்த்தவள் “நீ அழகிடி” என்று சொல்லிவிட்டுக் கீழே சென்றாள்.
அங்கிருந்த ராதிகா பிரியாவிடம் விஷயத்தைக் கூறியவள் உஷாவைப் பார்த்துக் கொள்ள ரித்திமாவை வரச் சொல்லியிருப்பதாகக் கூறினாள்.
அதே நேரம் ராகவ் போனில் வருணுடன் பேசிக் கொண்டு வந்தவன் “சீக்கிரமா இந்தியா வாங்க பய்யா! என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும். பட் ஐ நீட் யுவர் சப்போர்ட்” என்று பேசிப் போனை வைத்தவன் தன் அம்மாவிடமும் பெரியம்மாவிடமும் சொல்லிக்கொண்டுகிஷோரையும் அவந்திகாவையும் அழைத்துக் கொண்டு கிஷோரின் காரில் ஏறினான்.
“கிஷோர்! அந்தச் சர்வீஸ் ஸ்டேஷன் இடியட் நேத்து நைட்டே கார் ரெடினு சொன்னவன் இன்னைக்கு மார்னிங் ஏதோ வேலை இருக்குனு சொல்லி டிலே பண்ணிட்டான். நீ காரை அங்க விடு! நாங்க அங்க போய் என்னோட காருக்கு ஷிஃப்ட் ஆயிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு அவன் அருகில் அமர கிஷோர் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
சர்வீஸ் ஸ்டேஷனை அடைந்த ராகவ் அவசரத்தில் காரில் எதையும் செக் செய்யவில்லை. அவசரமாகக் காரை வெளியே எடுத்து வந்தவன் கிஷோரிடம் சொல்லிவிட்டு அவந்திகாவைக் காரில் அமரச் சொன்னான்.
கிஷோரும் பெட்ரோல் லெவல் பற்றிக் கேட்க மறந்தான். இருவரும் பை சொல்லிவிட்டுக் கிளம்ப அவன் வீட்டுக்கு வண்டியை விட்டான்.
கிஷோரின் கார் வீட்டை நோக்கிச் செல்ல அதே நேரத்தில் பெங்களூரு மைசூர் ஹைவேயில் சென்றுகொண்டிருந்தது ராகவின் கார்.
அவந்திகாதான் வளவளவென்று பேசிக்கொண்டே வந்தாள். ராகவ் அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துக்கொண்டே வந்தான்.
அவள் கடுப்பில் “இப்பிடி சைலண்டா வர்றதுக்கு நீ என்னைக் கூட்டிட்டு வந்திருக்கவே வேண்டாம். இன்னும் கூர்க் வர்றதுக்கு 4 ஹவர்ஸ்க்கு மேல இருக்கு. அதுவரைக்கும் நீ இப்பிடியேதான் வரப் போறியா ராகவ்?” என்று கேட்டவள் அதற்கும் அவன் புன்னகையையே பதிலாகத் தர முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
காலை நேரம் வாகன வரத்துக் குறைவாக இருந்ததால் கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அமைதியாக வந்தவள் பின்னர் போர் அடிக்கவும் மீண்டும் ராகவிடம் சினிமா கதைகளைப் பேச ஆரம்பிக்க அவனும் கேட்டுக்கொண்டே காரை ஓட்டினான்.
“நீ அயன் மூவி பாத்திருக்கியா ராகவ்? அதுல பிரபு சாரும் சூர்யாவும் இப்பிடித்தான் கார்ல போய்ட்டு இருப்பாங்க. அப்போ ஒரு லாரி வேகமா வரும்” என்று அவள் பாவனையுடன் கூற பதறிய ராகவ் “அம்மா தாயே! நல்ல சீன் எதுவுமே உன் வாய்ல வராதா?” என்று சொல்லிவிட்டுச் சாலையில் கண்ணைப் பதித்தான்.
“அட மூவிதானே! ஒரு சீன்ல அந்த வில்லன் காரோட வீல்ல இருக்கிற நட்டை ஃபுல்லா கழட்டிடுவான். கார் பேலன்ஸ் இல்லாமப் போகும். அப்போ அவன் இன்னொரு கார்ல வந்து ஒரு பன்ச் டயலாக் பேசுவான் பாரு” என்று அவள் அந்தச் சீனில் மூழ்கி அதை விவரித்துக்கொண்டே வருகையில் அவர்களின் கார் அதிர்ந்தது.
திடுக்கிட்டவள் “விளையாடாதே ராகவ்! நான் இனிமே அந்தச் சீனைச் சொல்ல மாட்டேன்” என்று சொல்லவும் மீண்டும் கார் அதிர அவள் பின்னே திரும்பிப் பார்க்க அவர்களின் காரை ஒரு லாரி வேகமாக இடித்ததைக் கண்டு அதிர்ந்தாள்.
ராகவோ வேகத்தைக் கூட்டி முன்னேற லாரி டிரைவரும் அவனுக்கு இணையான வேகத்துடன் வரவே அவளுக்கு இது எதுவுமே சாதாரண நிகழ்வாகத் தோணவில்லை.
“ராகவ் சர்வீஸ் ரோட்ல வண்டிய ஸ்டாப் பண்ணு!”
“அதுக்கு இன்னும் கொஞ்சதூரம் போகணும் அவந்திகா! இந்த ராஸ்கல் ஏன் இப்பிடிலாம் பண்றானு புரியலயே” என்று பல்லைக் கடித்தபடியே காரை ஓட்டினான்.
இருவரும் பதற்றத்தில் பெட்ரோல் அளவைக் கவனிக்கத் தவறினர்.
சிறிது தூரத்தில் சர்வீஸ் ரோடு வரவும் ராகவ் வேகத்தைக் குறைத்தான். வண்டியை நிறுத்த ப்ரேக்கை அழுத்தியவன் அது வேலை செய்யாமல் இருக்கவே திகைத்தான்.
அவனால் காரை நிறுத்தவும் முடியவில்லை. வேகத்தைக் குறைக்கவும் ஓரளவுக்கு மேல் முடியவில்லை.
“என்னாச்சு இந்தக் காருக்கு?” என்று அவன் டென்ஷனாகும்போதே லாரி மீண்டும் இடிக்கவும் அவனால் நடப்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பெட்ரோல் லெவல் குறையக் குறையக் காரின் வேகம் குறைந்ததை அவன் உணரவே இல்லை.
இந்த நிலையில் சென்றால் ஒன்று கார் எதன் மீதாவது மோதி விபத்துக்குள்ளாகும், அப்படி விபத்தின்றிச் சமாளித்துக்கொண்டு சென்றாலும் பின்னால் வரும் லாரி தங்களது காரை விடாது என்று புரிந்துகொண்டவன் அவந்திகாவைப் பார்த்தான்.
அவள் டென்ஷனில் சிலை போல் அமர்ந்திருக்க ராகவ் “அவந்திகா லுக் அட் மீ! இப்போ உன் சைட்ல இருக்கிற டோரை ஓப்பன் பண்ணதும் நீ கார்ல இருந்து குதிக்கணும்” என்று சொல்லவும் அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.
மீண்டும் சைட் மிரரைப் பார்த்தபடியே “அந்த லாரி கண்டிப்பாய்க் காரை நசுக்காம விடாது. டூ வாட் ஐ சே” என்று பல்லைக் கடித்தான்.
“அப்போ நீ?” என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்க அவனோ “நான் உன்னை ஜம்ப் பண்ணச் சொன்னேன் டேமிட். தேவையில்லாமப் பேசாத” என்று கத்திவிட்டுப் பதற்றத்துடனே தனக்கும் லாரிக்குமான தொலைவைச் சிறிது அதிகரிக்க முயன்றான்.
“முடியாது! நான் நீ இல்லாம எங்கயும் குதிக்க மாட்டேன்” என்று அவள் அழுத்தமாக உரைக்கவும் அவன் “இது பிடிவாதம் பிடிக்கிறதுக்கான நேரம் இல்ல. இப்போ நீயும் உள்ளேயே இருந்தா என்னோட சேந்து மேலதான் போகணும். ஒழுங்கா நான் டோர் ஓப்பன் பண்ணதும் ஜம்ப் பண்ற நீ” என்று கோபத்துடன் உரைத்தான்.
“சோ வாட்? எனக்குச் சாவைப் பாத்து என்னைக்குமே பயம் கெடையாது. ரொம்பச் சின்ன வயசுல அத என் கண் எதிர்ல பாத்துட்டேன்” என்று அவந்திகா இறுகிய குரலில் சொல்ல “லிசன் அவந்திகா! உனக்காக அங்க கௌசிம்மா, பாபி, ரித்தினு எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க” என்றான் ராகவ் வேதனையான குரலில்.
“அப்போ உனக்காக வெயிட் பண்ண மாட்டாங்களா? நீ இல்லாம நான் மட்டும் என்ன பண்ணப் போறேன் ராகவ்?” என்று அவள் கண்ணீருடன் கேட்கவும் அவனால் பதிலளிக்க முடியவில்லை.
லாரியோ வேகத்துடன் காரைப் பின்தொடர ராகவ் அவந்திகாவை வெளியேற்ற எவ்வளோவோ முயன்றும் முடியவில்லை.
அவந்திகாவின் நினைவலைகளில் இதே காட்சியைத் தான் அனுபவித்த நிமிடம் நியாபகத்துக்கு வந்தது.
“தாரிணி! கார்ல பிரேக் பிடிக்கல மா!” என்று கலவரத்துடன் கூறிய தன் தந்தையுடைய முகமும் “ஏதாச்சும் பண்ணுங்க ரவி! கொழந்தை ரொம்பப் பயப்படுறா” என்ற தாயின் வருத்தமும் கண் முன் படம் போல் விரிந்தது.
அவரோ முயன்று தோற்றவர் தாரிணியைப் பார்த்து ஒரு உயிரற்ற புன்னகை சிந்த அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட தாரிணி “அவந்திகா! இப்போ அம்மா இந்த டோரைத் தொறந்து விடுவேனாம்… நீ கண்ணை மூடிட்டு ஜம்ப் பண்ணனும் ஓகே!” என்று சொல்ல அவந்திகா மறுத்ததும் அவளுக்கு நினைவில் வந்தது.
தூரத்தில் வரும் லாரியைப் பார்த்துக் கலவர முகத்துடன் மகளை அணைத்தவர் அவளை இறுக முத்தமிட்டு “அம்மா அப்பா ரெண்டு பேரும் உன்னை ரொம்பவே லவ் பண்ணுறோம்” என்று கண்ணீருடன் சொல்லத் தாயின் பேச்சில் அவள் உருகிய தருணத்தில் அவளைக் காரிலிருந்து தள்ளிவிட அவள் விழுந்த இடம் புதராக இருந்ததால் தலையில் சிறு காயத்துடனும் கை கால்களில் சிராய்ப்புடனும் தப்பித்தாள் அவந்திகா.
காலை நொண்டியபடி எழுந்தவள் தங்களின் காரை எதிரில் வந்த லாரி வேகமாக மோத “அம்மா” என்று கத்தியது இன்றும் அவளின் காதில் ஒலித்தது.
திரும்பி ராகவைப் பார்த்தவள் காரின் வேகம் குறைவதை அப்போதுதான் உணர்ந்தாள். தன்னைக் காக்க முயலும் அவனது பிரயத்தனங்களைப் பார்த்தவள் “ராகவ் எனக்கு நீன்னா ரொம்பப் பிடிக்கும், உன்கூட எப்பிடிலாம் வாழனும்னு நான் நெறைய கனவு வச்சிருந்தேன் தெரியுமா? எதுவுமே நடக்கப் போறதில்ல இனிமே” என்று சொல்லவும் ராகவுக்குத் தன் இதயத்தை யாரோ துண்டு போடுவது போலத் தோன்றியது.
“நோ அவந்திகா… நீ குதிச்சுடு”
“நான் குதிக்க மாட்டேன்… நீதான் ஜம்ப் பண்ணனும்”
“நீயில்லாம எனக்கு இந்த லைஃப் தேவையே இல்ல. புரிஞ்சுதா உனக்கு?” என்று பல்லைக் கடித்தவன் செய்வதறியாது காரை அதன் போக்கில் விட்டான்.
“ராகவ் என்னைக் கொஞ்சம் பாரு” என்று சொன்னவளை அவன் பதற்றத்துடன் பார்க்க “இத உன்கிட்ட இனிமே சொல்ல முடியுமானு தெரியல! ஐ லவ் யூ ராகவ்” என்று சொல்லி அவன் இதழைத் தன் இதழால் மூடியவள் அவன் நெகிழ்ந்த நேரத்தில் அவன்புறமிருந்த காரின் கதவைத் திறந்துவிட்டு அவளின் பலம் அனைத்தையும் திரட்டி அவனைத் தள்ளிவிட்டாள்.
அதை எதிர்ப்பார்க்காத ராகவ் சாலையின் சரிவுகளில் உருண்டவன் மெதுவாக எழுந்து பார்க்கையில் காரின் வேகம் சுத்தமாகக் குறைந்திருப்பதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
வேகமாகக் காரை நோக்கி ஓடியவனின் நிம்மதி அதிக நேரம் நிலைக்கவில்லை.
கார் தானாகவே நின்றதும் பதற்றம் குறைந்த அவந்திகா காரை விட்டு வெளியேற முயல அவளது ஸ்கர்ட்டின் முனை எதிலோ சிக்கிக்கொண்டது. குனிந்து அதை இழுத்துக்கொண்டவள் காரை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த அந்த லாரியைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தாள்.
ராகவோ வேகமாக காரை நோக்கி ஓடி வர, அதற்குள் சாலையின் ஒரு புறம் ஒதுங்கி நின்ற காரை அந்த லாரி இடித்ததால் அது மறுபுறச் சரிவில் பயங்கரமாக இடித்துக்கொண்டே உருண்டது.
அதைக் கண்டவன் உள்ளே இருந்தவளை எண்ணித் தன் நெற்றியிலிருந்து வழிந்த இரத்தத்தையும் பொருட்படுத்தாமல் முட்கள் நிறைந்த அந்தச் சரிவில் வேகமாக இறங்கினான்.
கார் சற்றுத் தொலைவில் நொறுங்கிய நிலையில் நிற்க “அவந்திகா” என்று கத்திக்கொண்டே அருகில் சென்றவன் அவள் கார் உருண்ட வேகத்தில் தூக்கி எறியப்பட்டுச் சற்றுத் தொலைவில் கிடப்பதைக் கண்டு அவளிடம் ஓடினான்.
குப்புறக் கிடந்தவளை நிமிர்த்தியவனுக்கு இரத்தத்தில் நனைந்த அவளின் முகமே அவள் இருக்கும் அபாய நிலையைத் தெரிவிக்க அவளைத் தூக்கிக்கொண்டு காருக்கு ஓடினான்.
அதில் செல்போனைத் தேடியவன் அது கிடைக்காமல் போகவே அவளைச் சிரமத்தோடு தூக்கியவன் சாலையின் ஒரு புறம் நின்று வரும் வாகனங்களை மறிக்கத் தொடங்கினான்.
“நீ இப்பிடிப் பண்ணிருக்கக் கூடாது அவந்திகா! உனக்கு ஏதும் ஆக நான் விடமாட்டேன்” என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டான்.
கடவுளின் அருள் போல அங்கே வந்த ஒரு கார் நிற்கவே அவந்திகாவின் நிலையைப் பார்த்ததும் பதற்றத்துடன் அவர்களைக் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தது.
அவர்களை இறக்கிவிட்ட காரின் சொந்தக்காரர் அவந்திகாவை அட்மிட் செய்யும் வரை அவன்கூடவே இருந்து மருத்துவமனையின் வழிமுறைகளை முடித்துவிட்டுச் சிறிது நேரம் ராகவுடனே இருந்தார். பின்னர் அவன் தானே பார்த்துக் கொள்வதாகச் சொல்லவும் அவனுக்குத் தைரியம் சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.
செல்பவரைப் பார்த்தபடியே ஐ.சி.யூ வாசலில் நின்றான் ராகவ். மருத்துவர்கள், நர்ஸ் என்று பரபரப்பாக இருந்தது அந்த இடம். கதவை மூடவும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் அவன்.
சிறிது நேரத்தில் வந்த மருத்துவர் அவனிடம் “சார் அவங்களுக்கு விழுந்த ஃபோர்ஸ்ல கைலயும் கால்லயும் ஃப்ராக்சர்ஸ், தென் ஹெட் இன்ஜுரிஸும் பலமா இருக்கு. இன்டர்னல் ப்ளீடிங் இருக்கிறதால 6 ஹவர்ஸ்க்குள்ள அவங்கள ட்ரீட் பண்ணனும். ஹெவி ப்ளட் லாஸ். அவங்க ப்ளட் குரூப் ஓ நெகட்டிவ். இப்போ எங்க ப்ளட் பேங்க்ல அது ஸ்டாக் இல்ல” என்று அவளின் நிலையை விளக்க “நானும் சேம் குரூப்தான் டாக்டர்…. நான் குடுக்குறேன்” என்று அவன் சொல்லவும் ஒரு நர்ஸை அனுப்பி அவனிடம் இரத்தம் எடுக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


