அவந்திகாவையும் ராகவையும் தேடிய பிரதியுஷா கிஷோரிடமும் ரித்திமாவிடமும் சென்று அவர்கள் எங்கே என்று விசாரிக்க வருணை அழைத்துக் கொண்டு சென்றாள்.
கிஷோருடன் ஏதோ பேசி நகைத்துக் கொண்டிருந்தவளிடம் பிரதியுஷா “ஹனிபி எங்கே போனா ரித்தி?” என்று கேட்க
ரித்திமா இவ்வளவு நேரம் கிஷோரிடம் பேசிக் கொண்டிருந்தவள் அவந்திகாவை ராகவ் அவசரமாக அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக பிரதியுஷாவிடம் கூறவே, வருண்
“ராகவா அப்பிடி பண்ணுனான்?” என்று ஆச்சரியப்பட
“பய்யா நம்ம கிட்னாப்பிங் சீன்லாம் மறந்து போச்சா உங்களுக்கு?” என்று கேலி செய்த கிஷோருடன் சேர்ந்து சத்தமாகச் சிரித்தவன் இரு தோழிகளின் முறைப்பைக் கண்டதும்
“தம்பி கிஷோர் நீ காமெடிலாம் நல்லாவே பண்ணுற… ஆனா பண்ணுற டைமிங் தப்பா இருக்கேப்பா” என்று இழுத்தபடி கண்ணால் ரித்திமாவையும் பிரதியுஷாவையும் சுட்டிக் காட்டவே கிஷோர் காது மடல்களின் நுனியைப் பிடித்து மன்னிப்பு வேண்டினான் இருவரிடமும். அவனது பாவனையில் இரு பெண்களுமே சிரிக்க அங்கே ஒரு இனியச் சூழல் உருவானது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நால்வரும் அவர்களை இவ்வாறு கலாய்த்துக் கொண்டிருக்க, ராகவ் அவந்திகாவை அழைத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தான். அவளும் ஏன், எதற்கு என்று கேட்காமல் அவனுடன் கிளம்பிவிட்டாள். இந்தப் பரந்த வையகத்தில் அவனையன்றி வேறு யாரை அவளால் நம்ப இயலும்? அந்த நம்பிக்கை தந்த உறுதியுடன் அவனது தோளில் சாய்ந்து கொண்டபடி சாலையில் விளக்குகள் எல்லாம் தங்கள் காரை விட்டு விலகுவதை ரசித்தபடி இருந்தாள் அவள்.
சற்று முன்னர் நடந்ததை அவள் மனம் அசை போட ஆரம்பித்திருந்தது.
அமர் மேடையில் அறிவித்ததை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தவளிடம் வந்த ராகவ் “ஜான்சி ராணி! உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.. என் கூட வா” என்று அழைக்க
“கொஞ்சம் பொறு ராகவ்… பார்ட்டி இன்னும் கொஞ்சநேரத்துல முடிஞ்சுடும்.. அப்புறமா பேசிக்கலாம்” என்று சொல்லிவிட
“எல்லாரும் இந்தப் பார்ட்டியில இருந்தா தான் நம்மளை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்கனு பிளான் பண்ணித் தான் நான் அஃபிஷியல் பார்ட்டியை, ஃபேமிலி பார்ட்டியா மாத்துனேன் மேடம்ஜி.. இப்போ நீ என்னோட வர்றியா? இல்லை நானே உன்னைத் தூக்கிட்டுப் போகவா?” என்று தீவிரமானக் குரலில் கேட்கவும் அவந்திகா மறுத்துப் பேச வாயெடுத்தவள் பின்னர் அவனது கூரியவிழிப்பார்வையில் அடங்கி அவனுடன் அமைதியாக அந்தப் பார்ட்டி ஹாலை விட்டு வெளியேறினாள்.
இருவரும் காரில் அமரவும் கார் வேகமெடுத்தது. எங்கே செல்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் எப்போதும் இருவருக்குமிடையே இருக்கும் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் எதுவுமின்றி இவ்வளவு அமைதியாகக் கழியும் இந்தத் தருணத்தின் மோனநிலையைக் கேள்வி கேட்டுக் கலைக்க அவளும் விரும்பவில்லை.
கார் பூங்கா நகரமான பெங்களூருவின் ஒரு பூங்காவின் முன்னே நிற்க பூங்கா அடைக்கப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் அங்கே மக்கள் கூட்டம் அறவேயில்லை. ராகவ் காரை வெளியே நிறுத்தியவன் அவந்திகாவின் கரம் பற்றி பூங்காவுக்குள் அழைத்துச் சென்றவன் அங்கே நடைபாதை ஓரத்தில் வரிசையாக இருக்கும் விளக்குக்கம்பங்களின் அடியில் கிடந்த மரப்பெஞ்சில் தானும் அமர்ந்து அவந்திகாவையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
இவனுக்கு என்னவாயிற்று என்று எண்ணியபடி எதுவும் பேசாமல் அவனருகில் அமர்ந்தவளின் கண்கள் ராகவின் வதனத்தில் வலம் வந்தது. இன்றைக்கு இவனது செய்கைகள் வித்தியாசமாக உள்ளதே என்று யோசித்தபடியே வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் மீது கண்ணைப் பதித்திருந்தவனது கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி அவன் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள் அவள்.
“என்னடா ஆச்சு உனக்கு? இன்னைக்கு நீ ரொம்ப அப்நார்மலா பிஹேவ் பண்ணுற.. உனக்கு அதுக்கான அறிகுறி தெரியுதா?”
“நான் நார்மல் மனுசனா இருந்திருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணிருக்க ஓகே சொல்லிருக்கவே மாட்டேனே ஜான்சி ராணி”
“இஸிண்ட்? இப்பிடி கலாய்க்கிறதுக்கு தான் நீ என்னை இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்தியா? இன்னும் அரைமணி நேரம் தான்… பார்க்கைக் குளோஸ் பண்ணனும்னு வாட்ஸ்மேன் குச்சியோட வந்து நம்மளை விரட்டப் போறாருடா”
அவள் அப்படி சொன்னதும் தான் அவனுக்குப் புத்தியில் உறைத்தது இன்னும் சிலமணித்துளிகளில் பூங்காவை அடைத்துவிடுவார்கள் என்பதே. அதற்குள் அவளை எதற்காக அழைத்துவந்தானோ அந்த விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடவேண்டும் என்று எண்ணி கண்ணை இறுக மூடித் திறந்து பெருமூச்சை வெளியிட்டுக் கொண்டான்.?
“இப்பிடி பெருமூச்சு விடுறதுக்காகத் தான் பார்க்குக்குக் கூட்டிட்டு வந்தியா?” என்று கேட்டவளிடம் தலையசைத்து மறுத்தவன்
“ம்ஹூம்! எனக்கு வெளியுலகத்தோட ஆரவாரம் எதுவுமில்லாத ஒரு இடத்தில வச்சு உன் கிட்ட பேசணும்னு ஆசை… அதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்… இங்கே யாருமே இல்லை… நீ, நான், இந்த மரம், செடி, அந்த லேம்ப் போஸ்ட் அவ்ளோ தான்… இதுல எதுவும் நம்மளை தொந்தரவு பண்ணாது” என்று சொல்லிவிட்டுக் கனிவுடன் அவளைப் பார்த்தான் ராகவ்.
அவந்திகா அதற்கு பதிலளிக்கவில்லை என்றாலும் அவன் சொன்னதை ஆமோதிப்பதற்கு அடையாளமாய் குறுஞ்சிரிப்பு ஒன்று அவளது இதழில் மலர்ந்தது.
அச்சிரிப்பினால் உண்டான கன்னக்குழியழகில் மெய்மறந்தவன் அவள் முகத்தைத் தனது கரங்களில் ஏந்திக் கொண்டபடி “ஐ லவ் யூ அவந்திகா” என்றான் தனது மொத்தக் காதலையும் புரியவைத்துவிடும் ஆழ்ந்த குரலில்.
அவன் இதழில் பிறந்து அவளது செவியில் தவழ்ந்து இதயக்கூட்டுக்குள் புகுந்த அந்த வார்த்தை அவந்திகாவின் ஒவ்வொரு நாடி நரம்பிலும் வார்த்தைகளில் விளக்க முடியாத இன்பத்தைப் பாயச் செய்யவே, சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள் அவள்.
மகிழ்ச்சியில் விகசித்த அவளது முகத்தைப் பார்த்தபடியே “உன்னோட சபதத்துல நீ ஜெயிச்சிட்ட… நம்மளோட மேரேஜ் ஹண்ட்ரெண்ட் பர்சண்டேஜ் லவ் மேரேஜ் தான்… இன்னும் நமக்கு லவ் பண்ணுறதுக்கு எக்கச்சக்க டைம் இருக்கு… ரெண்டு பேருக்கும் சலிச்சுப் போற அளவுக்கு லவ் பண்ணலாம்… சரியா?” என்று கேட்டவனுக்குப் பதிலாகப் புன்னகையை வீசியவள்
அவனைப் போலவே அவளும் அவனது கன்னங்களைத் தனது கரத்தில் தாங்கியபடி “உன்னைக் காதலிக்கிறதுல எனக்கு என்னைக்குமே சலிப்பு வராதுடா… ஐ லவ் யூ சோ மச் ராகவ்” என்று சத்தமாகச் சொன்னபடி அவனை அணைத்துக் கொண்டாள்.
அவளது வார்த்தையில் இருந்த அளவுக்கடந்த அன்பு அவனுக்குள் கர்வத்தை உண்டாக்க, அதை அனுபவித்தபடியே “எல்லா விஷயமும் ஒரு நாள் போரடிக்கும் ஜான்சி ராணி… ஒரு நாள் உனக்கும் இந்த லவ் போரடிக்கலாம்… அப்போ நீ என்னை விட்டுட்டுப் போயிடுவியா?” என்று கேட்டு அவளைச் சீண்ட
அவனைக் கழுத்தோடு கட்டிக் கொண்டபடி இருந்தவள் தன் முகத்தை மட்டும் திருப்பி “அப்பிடி போரடிச்சுதுனா நாலு சண்டை போட்டுக்கலாம்… அப்புறம் தானா காதல் வந்து இடையில புகுந்துக்கும்… ஆனா உன்னை விட்டுட்டுப் போற ஆப்சன் இது வரைக்கும் என் சிஸ்டம் மெமரியில இல்லை” என்று கேலியாய்ச் சொல்லிவிட்டு தனது வார்த்தையை நிரூபிப்பது போல அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் அவந்திகா.
காதலியின் முதல் முத்தத்தில் தடுமாறிய ராகவ் அது ஏற்படுத்திய அதிர்ச்சியுடன் கூடிய ஆனந்தத்தில் மூழ்கியபடி “ஓகே ஓகே! போதும்.. என் கன்னத்தை விடு ஜான்சிராணி! டைம் ஆச்சு பாரு… இன்னும் கொஞ்சநேரம் இங்கே இருந்தா சில விபரீதங்கள் நடக்கலாம்” என்று சொல்ல அவந்திகா அவசரமாக அவனை விட்டு விலகியவள் சட்டென்று எழுந்து நின்றாள்.
“ஏன் உனக்கு இப்பிடி புத்தி போகுது ராகவ்? இனிமே நீ என் கிட்ட இருந்து ஒரு மூனடி தள்ளியே நில்லு” என்றாள் அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை வேறு மாதிரி புரிந்துகொண்டவளாக.
ராகவ் குழப்பத்துடன் அவளைப் பார்த்தவன் “என்ன உளருற ஜான்சிராணி? இன்னும் கொஞ்சநேரத்துல பார்க் குளோஸ் பண்ணுற டைம் வந்துடும்… இதுக்கு மேல இங்கே இருந்தா நீ சொன்ன மாதிரி வாட்ஸ்மேன் குச்சியோட வந்து நம்மளை விரட்டுவாருனு தான் நான் சொல்லவந்தேன்” என்று தனது வார்த்தைகளுக்கு விளக்கமளிக்க அதைக் கேட்டுவிட்டு மானசீகமாகத் தன் தலையில் குட்டிக்கொண்டாள் அவந்திகா.
“உன் புத்தி ஏன் இப்பிடி போகுது அவந்திகா? அவன் என்ன சொல்லிருக்கான்? நீ என்ன நினைச்சிருக்கனு பாரு… சை!” என்று தன்னைத் தானே திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள் அவள்.
தன்னைக் கேள்வியாய் நோக்கியவனைப் பார்த்து சமாளிப்பாக இளித்துவைத்தவள் “நீ ரொம்ப நல்லவன் ராகவ்” என்று சொன்னபடி அவனது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
ராகவ் பெஞ்சிலிருந்து எழுந்தவன் “நான் நல்லவனா கெட்டவனாங்கிறது ரெண்டாவது… முதல்ல நீ என்ன நினைச்ச? அதைச் சொல்லு ஜான்சி ராணி” என்று தனது காரியத்திலேயே கண்ணாய்க் கேட்க அவந்திகா சிரித்துச் சமாளித்தபடி அவனுடன் பார்க்கை விட்டு வெளியேறினாள்.
“நீ சொல்லலைனா நம்ம இங்கே இருந்து கிளம்பவே போறதில்லை” என்று அவன் பிடிவாதம் பிடிக்கவும் வேறுவழியின்றி அங்கிருந்த மரம் மட்டைகளை நோக்கியபடி தான் எண்ணியதை அவனிடம் சொல்லி முடித்தாள் அவந்திகா.
“ஜான்சி ராணிக்கு மைன்ட் இவ்ளோ டர்டியா இருக்கு” என்று குறும்புடன் சொல்லிவிட்டு அவளைக் காரில் அமரச் சொன்னவன் காரை வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான்.
அவந்திகாவின் வீட்டின் முன்னே காரை நிறுத்தியவன் அவள் இறங்கியதும் “டேக் கேர்” என்று சொல்லவும்
“உள்ளே வந்துட்டுப் போ ராகவ்.. கண்டிப்பா சித்தி பார்ட்டியில இருந்து திரும்பி வந்துருப்பாங்க” என்று அவந்திகா வீட்டில் கண்ணை ஓட்டியபடியே சொல்ல
“ஏன்? கௌசிம்மாவை நினைச்சு பயமா இருக்குதா ஜான்சி ராணிக்கு?” என்று கேட்டுக் கண்ணை வேறு சிமிட்டிவைத்தபடி காரிலிருந்து இறங்கினான் ராகவ்.
“நான் ஒன்னும் சித்திக்குப் பயப்படலையே… உன் கூட வந்துட்டு உன்னை உள்ளே கூப்பிடலைனா அம்பு ஏதாச்சும் சொல்லும்.. இது எனக்குத் தேவையா? அதான் கூப்பிட்டேன்… சோ உன்னோட கேலி கிண்டல் அப்புறம் கண் சிமிட்டுனது மூனையும் வாபஸ் வாங்கிக்கோ” என்று அமர்த்தலாக மொழிந்தபடி அவனை வீட்டினுள் அழைத்துச் சென்றாள் அவந்திகா.
வீட்டினுள் வாசந்தியும் ரவீந்தரும் கௌசல்யா குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருப்பது வராண்டாவின் படியில் காலை வைக்கும் போதே இருவருக்கும் கேட்டுவிட்டது.
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாருமே ரொம்ப சிம்பிளா இருக்காங்க… எவ்ளோ பெரிய மனுசங்க அவங்க, ஆனா அலட்டிக்காம நம்மளோட ஈஸியா மிங்கிள் ஆகிட்டாங்கல்ல” – வாசந்தி.
“அவங்க இயல்பே அது தான் வசு… இப்போ சுமித்ராம்மாவை எடுத்துக்கோ.. பார்க்கத் தான் ரொம்ப கண்டிப்பா தெரியுறாங்க… ஆனா ரொம்ப வெள்ளை மனசுக்காரங்க அவங்க… அதுவும் உஷான்னா அவங்களுக்கு உயிரு” என்றது கௌசல்யாவின் குரல்.
“எனக்கு ஜீஜூவைத் தான் ரொம்பப் பிடிச்சிருக்கு… அவர் இன்னைக்கு எனக்கு, அம்புக்கு, சுமிப்பாட்டிக்குலாம் லவ் யூ சொன்னாரு தெரியுமா?” என்று அர்ஜூன் அவன் பாட்டுக்குப் பெருமை பேச இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராகவிற்கு மனிதர்கள் மனதை வெல்ல அந்தஸ்து, பணம் தேவையில்லை, வெறும் தூய அன்பு மட்டுமே போதுமென்பது மனதில் உறைத்தது.
இதை அவனுக்குப் புரிய வைக்கத் தான் கடவுள் அவனது ஜான்சி ராணியை அனுப்பியிருக்கிறாரோ என்று எண்ணம் மனதில் எழ அவளது கரங்களைப் பற்றியபடி
“வா! உள்ளே எல்லாருக்கும் ஒரு குட் நைட்டைச் சொல்லிட்டு நான் கிளம்புறேன்” என்று கூறியவன் அவளுடன் வீட்டுக்குள் சென்றான்.
அங்கே இருவரையும் பார்த்துவிட்டுப் பெரியவர்கள் திடீரென்று ஏன் மாயமானீர்கள் என்று கேட்டுத் துளைத்தெடுக்க அவந்திகா “என்னோட ஃபியான்ஸி நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு… ஒரு கப் காபி கூடக் குடுக்காம என்கொயரி பண்ணுறிங்களே சித்தி?” என்று பேச்சை மாற்ற அதன் பின் விருந்தோம்பல் ஆரம்பித்துவிட்டது.
அதெல்லாம் முடிந்து ராகவ் கிளம்பவே அவந்திகாவுக்குக் குடும்பத்தினரால் நிரம்பி ததும்பிய அந்த வீடு வெறுமையாய்த் தோன்றியது. அதே நேரம் தான் சபதத்தில் ஜெயித்த விஷயத்தை மறக்காமல் ரகுவரனிடமும் கௌசல்யாவிடமும் பகிர்ந்துகொண்டாள் அவள்.
“சித்தப்பா இன்னைக்கு ராகவ் என் கிட்ட பிரபோஸ் பண்ணிட்டான்… நானும் தான்… எவ்ளோ அழகான மொமண்ட் தெரியுமா அது?” என்று மீண்டும் அந்தப் பார்க்கில் நடந்த காதல் உரைக்கும் படலம் மனக்கண்ணில் வர அதை ரசித்தபடியே சொன்னவளை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தனர் கௌசல்யாவும் ரகுவரனும்.
“எல்லாம் சரி தான்… பிரபோஸ் பண்ணுனாருனு சொன்னியே.. கிஃப்ட் எதுவும் தரலையா?” என்று மகளிடம் குறும்பாக வினவினார் ரகுவரன்.
அவந்திகா இல்லையென்று மறுத்தவள் “அவனே ஒரு பெரிய கிஃப்ட் தானே.. இன்னொரு கிஃப்ட் எதுக்குனு நானும் அதைப் பெருசா கண்டுக்கலை… பட் நெக்ஸ்ட் டைம் அவன் கிட்ட கண்டிப்பா கிஃப்ட் கேப்பேன் சித்தப்பா” என்று அமர்த்தலாகச் சொல்ல
“கிஃப்ட் வாங்குறதுலாம் நல்ல பழக்கமில்லை… எதுவா இருந்தாலும் உன் கல்யாணத்துக்கு அப்புறமா வாங்கிக்கோ… அப்புறம் நீங்க உங்களோட வாயை வச்சுக்கிட்டுக் கொஞ்சம் சும்மா இருங்க ரகு… சும்மா இருந்த பொண்ணைச் சீண்டி விடாதிங்க” என்று சொல்லிவிடவே இருவரும் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டனர்.
அதே நேரம் ராகவ் வீடு திரும்பியவன் அவனைக் கேள்வியாலும், கேலியாலும் துளைத்தெடுத்தக் குடும்பத்தினரை அரும்பாடு பட்டுச் சமாளித்துவிட்டுத் தனது அறைக்குள் சென்று அடைக்கலமாகி விட்டான்.
ஒரு வழியாக மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்த மிகப்பெரிய விஷயத்தை அவந்திகாவிடம் இறக்கிவைத்துவிட்டத் திருப்தி அவனுக்கு. ஒவ்வொரு முறையும் தான் ஏன் அவளை நினைத்துப் பார்க்கிறோம், அவள் மீது அக்கறை எடுத்துக் கொள்கிறோம் என்று யோசித்து யோசித்து ஓய்ந்தவன் அதன் அர்த்தம் காதல் என்று புரிந்து கொண்டு அதை இன்று அவந்திகாவிடமும் வெளிப்படுத்திவிட்டான். அந்த நிம்மதியும், பதிலுக்கு அவந்திகா சொன்ன “ஐ லவ் யூ சோ மச் ராகவ்” என்ற வார்த்தையுமே இடைப்பட்ட ஐந்து மாதக்காலங்களை வண்ணமயமாக மாற்றவல்லவை என்று எண்ணியபடி படுக்கையில் சரிந்து நிம்மதியாக கண்ணுறங்கலானான் ராகவ்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


