ராகவ் தனது அறையில் லேப்டாப்பில் கோப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன் போனில் அழைப்பு வரவும் யாரென்று நோக்கினான். அழைத்தவரின் எண்ணைப் பார்த்ததும் புருவச்சுழிப்புடன் எடுத்துக் காதில் வைத்துக் கொண்டான்.
“சொல்லுங்க! நான் கேட்ட டீடெயில்ஸ் கிடைச்சுதா?”
“……………………………………………………………”
“ஃபார்வேட் தட் டு மை ஈமெயில்.. ஐ வில் கேட்ச் யூ லேட்டர்” என்றபடி போனை வைத்தவன் அடுத்த நொடி தனது மெயிலுக்கு வந்த டாக்குமெண்டை பார்க்க ஆரம்பித்தான்.
வாசித்து முடித்தவனின் உதடுகள் “இன்ட்ரெஸ்டிங்” என்று முணுமுணுத்தது. போனை எடுத்து கேலரியில் உள்ளப் புகைப்படங்களைப் பார்வையிட்டவன் அதில் கடைசியாக அவந்திகா தங்கள் நால்வருடன் எடுத்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
போனை வைத்துவிட்டு உடைமாற்றித் தயாரானவன் அவனது அறையை விட்டு வெளியேறினான். கீழே வந்தவன் அங்கே வழக்கம் போல ஒரு ஓரமாக அமர்ந்து கையிலுள்ள புத்தகத்தில் எதையோ புரட்டிக் கொண்டிருந்த பாட்டியைப் பார்த்ததும் அவரும் பேரனைப் பார்த்துவிட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அலுவலகத்துக்குச் செல்வது போல உடையணியாமல் இலகுவான உடையில் நின்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தவர் “ஞாயிற்று கிழமை என்ன வேலை ராகவ்? உன்னைப் பார்த்தா ஆபிஸ் போற மாதிரி தெரியலையே?” என்று தனது மூக்குக்கண்ணாடியின் வழியே நோக்கிய அப்பெண்மணி மனிதர்களின் முகத்திலிருந்தே அவர்களின் மனதைப் படிக்கும் திறன் கொண்டவர்.
அவரிடம் பொய் சொல்லிப் பழக்கம் இல்லாத ராகவ் “ஃப்ரெண்டை பார்க்கப் போறேன் தாதி” என்று புன்னகையுடன் சொல்லும்போதே
“கேர்ள் ஃப்ரெண்டா ராகவ்?” என்ற இன்னொரு குரல் அவன் செவியைத் தீண்டவும் அந்தக் குரல் ஏற்படுத்திய எரிச்சலை உள்ளடக்கியபடி புன்னகையை வருவித்துக் கொண்டான் அவன்.
“கண்டிப்பா சொல்லியே ஆகணுமா சாச்சி?” என்று அதே குரலில் திருப்பிக் கேட்டவனிடம் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தார் வீணா, ராகவின் சித்தப்பாவான நிரஞ்சனின் மனைவி.
“சொல்லியே ஆகணும்னு உன்னை யாராலும் கட்டாயப்படுத்த முடியாதுடா ராகவ்… நீ என் பேரன், உனக்குப் பிடிச்சதைச் செய்யுறதுக்கோ, பிடிச்சவங்களைப் பார்க்கிறதுக்கோ உனக்கு யாரோட அனுமதியும் தேவையில்லை” என்றார் சுமித்ரா தனது மருமகளை ஓரக்கண்ணால் பார்த்தபடி. இதற்கு மேல் வீணாவால் என்ன செய்ய முடியும்!
அவரை ஏளனமாகப் பார்த்துவிட்டுச் சுமித்ராவிடம் திரும்பியவன் “தாதின்னா தாதி தான்… நான் ஸ்பெஷல் பெர்சனை தான் மீட் பண்ணப் போறேன்.. போயிட்டு வந்து நடந்த எல்லா விஷயங்களையும் விலாவரியா சொல்லுறேன்… பை” என்று சொல்லிவிட்டு கருநீல நிற போலோ ஷர்ட்டும், பழுப்பு நிற பேண்ட்டும் அணிந்தபடி வெளியேறியவனை வீணாவால் வெறிக்க மட்டுமே முடிந்தது.
ராகவ் காரில் சென்று அமர்ந்தவன் காரை அவந்திகாவின் சன்டியூ அலுவலகத்தை நோக்கி விரட்டினான். காரை ஓட்டியவனின் மனம் வேகமாகக் கணக்குப் போட ஆரம்பித்திருந்தது.
அரைமணிநேர பயணத்தில் ஜனசந்தடி மத்திமமாக இருந்த இடத்தின் நடுநாயகமாக இருந்த கட்டிடவளாகத்தின் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன் சுற்றும் முற்றும் பார்த்தபோது சன்டியூ அலுவலகம் கண்ணில் படவே அதை நோக்கி நடைபோட்டவன் உள்ளே நுழைகையில் மூன்று பெண்களின் சிரிப்புச்சத்தம் அவன் செவிப்பறையைத் தீண்டி அடங்கியது.
உள்ளே நுழைந்தவனின் பார்வை நாற்காலியின் கைப்பிடியில் காலைப் போட்டு அமர்ந்திருக்கும் அவந்திகாவைக் கண்டதும் அதில் சுவாரசியம் ஏறியது.
“ஹாய் ஜான்சிராணி” என்றபடி அவர்களின் அறைவாயிலில் நின்றவனைக் கண்டதும் அவந்திகாவுக்கு மயக்கம் வராத குறை தான்.
கடைசியாகச் சந்தித்த போது அவனுக்கும் பிரதியுஷாவுக்கும் இடையே நடைந்த வார்த்தைப்போரை நினைவில் கொண்டுவந்தவள் சட்டென்று எழ முயலுகையில் தடுமாறவே ராகவ் “ஹேய்!” என்ற கூவலுடன் வந்தவன் அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான்.
இதைக் கண்ட மற்ற இருவருக்கும் ஆச்சரியத்தில் கண்கள் விரிய ராகவோ தன்னையும் அவந்திகாவையும் தவிர இன்னும் இரண்டு ஜீவன்கள் இருப்பதைக் கண்டுகொள்ளாமல் அவளிடம்
“இந்த தடுமாறுற பழக்கம் உனக்கு எப்போ தான் மாறப்போகுதோ?” என்று கேலி செய்ய
அவந்திகா “எப்போவுமே மாறாதுடா… இது தொட்டில் பழக்கம்” என்றாள் அமர்த்தலாக.
ராகவ் “இட்ஸ் ஓகே! நீ ஒவ்வொரு தடவை தடுமாறுறப்பவும் நான் தான் உன் கூட இருப்பேனே… சோ நோ பிராப்ளம்” என்று அவளிடம் உரிமையுடன் பேசுவதைக் கண்டதும் பிரதியுஷாவுக்கும் ரித்திமாவுக்கும் உண்மையாகவே ஆச்சரியம் தான்.
விக்ரம், அவன் தான் அவந்திகாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை. அவனைக் கூட அவந்திகா தூர நிறுத்தி தான் பேசுவாள். அலுவலகத்துக்கு வரவா என்று கேட்டதற்காக அவனுக்கு பத்து பக்கத்தில் ஒரு லெக்சர் அடித்தவள் “டோன்ட் டிஸ்டர்ப் மீ ஒய்ல் ஐ அம் வொர்க்கிங்” என்ற ஒரே வார்த்தையில் முடித்துவிட்டாள்.
அப்படிப்பட்டவளா இன்று ராகவுடன் இவ்வளவு சாதாரணமாக உரையாடுகிறாள் என்று இரு தோழியரும் வாயடைத்துப் போயினர்.
அவந்திகா தோழியரின் திகைத்தப்பார்வையைக் கவனித்தவள் ராகவிடம் “ஆமா! நீ எதுக்கு இங்கே வந்த?” என்று கேட்க
அவன் “ஏன் ஜான்சிராணி உன்னைப் பார்க்க நான் வரக்கூடாதா?” என்று பதிலுக்குக் கேட்க
“நீ ஏன் என்னைப் பார்க்கணும்?” என்று வெடுக்கென்று அவள் கேட்கவும்
“எனக்குப் பார்க்கணும்னு தோணுச்சும்மா.. அதான் வந்தேன்… சரி ட்வென்ட்டி ஒன் டேய்ஸ் ஒரே இடத்துல இருந்தோமேனு ஒரு அக்கறையில பார்க்க வந்தேன்… உன் ஆபிஸ்கு வந்ததுக்கு ஒரு காபி டீ கூட குடுக்காம நிக்க வைச்சு பேசுறியே! இது தான் உங்க ஆபிஸோட கல்சரா?” என்று மூச்சுவிடாமல் கேட்டவனின் பார்வையில் அவன் சொன்ன அக்கறை என்பது சிறிதும் இல்லை என்பதை பிரதியுஷா கண்டுகொண்டாள்.
இவன் ஏன் பொய் சொல்கிறான் என்ற ரீதியில் ராகவை அளவிட்டவள் அவன் சட்டென்று பார்வையை மாற்றிக் கொள்ளவும் திகைத்தாள். எவ்வளவு சீக்கிரத்தில் முகம் மாறுகிறான் இவன் என்று திகைத்தவள் முகம் மாறுவது, குணம் மாறுவதெல்லாம் இந்தச் சகோதரர்களுக்குப் புதிதா என்ன என்று அலட்சியத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவந்திகா “நீயே பார்த்தேல்ல, சண்டே கூட எங்களுக்கு ரெஸ்ட் இல்லாம நாங்க ஹார்ட்ஒர்க் பண்ணிட்டிருக்கோம்… இப்போ வந்து விருந்தோம்பலைப் பத்தி கிளாஸ் எடுக்கிறியே! உனக்குலாம் மனசாட்சியே இல்லையாடா?” என்று கேட்டுவிட்டு லேப்டாப்பின் புறம் திரும்பியவளின் கரத்தைப் பற்றி தன்புறம் திருப்பினான் ராகவ்.
“நம்ம எவ்ளோ பிஸியா இருந்தாலும் நமக்குப் பிடிச்சவங்களுக்காக நேரம் ஒதுக்கலாம் ஜான்சிராணி… எனக்கு இதை யாரோ எங்கேயோ சொல்லிருக்கிறாங்க”
“பிடிச்சவங்களுக்காக நாங்க ஆல்ரெடி நேரம் ஒதுக்கியாச்சு… அந்த லிஸ்ட்ல நீ இல்லை.. சோ எங்க டைமை வேஸ்ட் பண்ணாதே”
“வாட்? என்னை உனக்குப் பிடிக்காதா? இந்தக் கையால எத்தனை நாளு உனக்குச் சமைச்சு போட்டிருப்பேன்? இதே கையால எத்தனை தடவை நீ கீழே விழுறதுக்குள்ள உன்னைத் தாங்கிப் பிடிச்சிருப்பேன்?”
“அதுக்கு என்ன பண்ண சொல்லுற மேன்? அதெல்லாம் ஃபாரஸ்டோட முடிஞ்சுது… எனக்கு என்னோட கம்ஃபர்டபிள் ஜோனை விட்டு வெளியே போய் யாரோடவும் பழகுறதுக்குப் பிடிக்காது… உன் கூட பேசிப் பழகுற எண்ணம் எனக்குச் சுத்தமா கிடையாது ராகவ்”
“ஆனா எனக்கு இருக்கே” – ராகவ்.
“அதான் ஏன்னு கேக்குறேன்” – அவந்திகா
“பிகாஸ் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்… எனக்கு ஒருத்தவங்களைப் பிடிக்கணும்னா அதுக்குனு சில டேர்ம்ஸ் வச்சிருந்தேன்.. அதுல எதுவுமே உனக்கு மேட்ச் ஆகலை தான்… இருந்தாலும் ஐ லைக் யூ… தட்ஸ் ஒய் யூ ஆர் ரியலி ஸ்பெஷல் டு மீ” என்று அசராமல் வார்த்தைகளை அள்ளிவிட்டான்.
ஆனால் அதை நம்பி உச்சி குளிர அவந்திகா ஒன்றும் முட்டாள் இல்லையே!
அவள் “இஸிண்ட்? பட் யூ ஆர் நத்திங் டு மீ… சோ ப்ளீஸ் டோன்ட் இரிட்டேட் அஸ்” என்ற வார்த்தையில் ஒட்டுமொத்த எரிச்சலையும் கொட்டிச் சொல்ல ராகவுக்கு அவளது இந்தப் பதிலில் கோபம் எகிறினாலும் வெளிக்காட்டிக்கொள்ள இயலா நிலை…
அவந்திகா “லிசன் ராகவ்… ஏதோ ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல என்னென்னவோ நடந்து போச்சு… அதனால உங்களோட சில நாள் பழகுற சான்ஸ் எனக்கு கிடைச்சுது… இந்த விஷயத்தை நான் பெருசு படுத்த விரும்பலை.. நடந்ததை நான் சொன்னா உஷாவுக்கும் வருணுக்கும் சங்கடமா போயிடும்… வீட்டுல பேரண்ட்ஸ் வீணா கஷ்டப்படுவாங்கனு யோசிச்சு தான் நான் பொய் சொன்னேன்… அந்தப் பிராப்ளம் முடிஞ்சு போச்சு.. இனிமே நீ என் கிட்ட பேசவோ நான் உன் கிட்ட பேசவோ எதுவும் இல்லை ராகவ்.. ஐ ஹோப் இனிமே நீ என்னை மீட் பண்ணணும்னு நினைக்க மாட்ட”
அவ்வளவு தான் விஷயம் முடிந்தது என்பது போல பார்த்துவைத்தவளின் முன்னே அதற்கு அப்புறமும் நிற்க ராகவின் பிறவிக்குணம் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் அவன் உதடுகள் “ஐ அம் இம்ப்ரெஸ்ட்” என்று சொல்லிவிட்டு ஒரு குறுஞ்சிரிப்பை வீசவே அது ஒன்றே அவந்திகாவை அமைதிப்படுத்த போதும் அல்லவா…
அவன் சிரிப்பெனும் மாயவலையில் சிக்கும் முன்னர் தலையை உலுக்கிக் கொண்டவள் “நீ இன்னும் கிளம்பலையா?” என்று கேட்க
“வந்த வேலை முடியாம கிளம்ப மாட்டேன் ஜான்சி ராணி” என்றான் பிடிவாதமாக.
“ஹேய் பகவான்! இப்போ என்ன தான் வேணும் உனக்கு?”
“ஜஸ்ட் ஒன் கப் காபி.. இனாஃப்” என்று தோளைக் குலுக்கியவனின் கையில் நூறு ரூபாய் நோட்டைத் திணித்தவள்
“இப்பிடியே போனா லெப்ட் கார்னர்ல ஒரு காபிஷாப் இருக்கும்… நீ போய் காபி குடிச்சுக்கோ… எனக்கு டைம் இல்லை” என்று சொல்லவே ராகவ் அதை அவள் கரங்களில் மீண்டும் திணித்தவன் அந்தக் கரங்களைப் பற்றிக்கொண்டான்.
“ஒரு காபி குடிக்கப் பத்து நிமிசம் ஆகுமா? அதுக்குப் போய் நீ ஓவரா ஆட்டிடியூட் காட்டி உன் டைமை வேஸ்ட் பண்ணிட்டிருக்க… நீ வரலைனா நான் இதே ரூம்ல உக்காந்துப்பேன்… அப்புறம் உன் இஷ்டம்” என்று சொன்னவனின் கண்ணில் தெரிந்த பிடிவாதத்தைக் கண்டு கழுத்தை நெறிப்பது போல கையைக் கொண்டு சென்றவள்
“உன்னை… சரி! இப்போ என்ன காபி தானே குடிக்கணும்? வா போவோம்” என்று அவன் கரத்தைப் பிடித்து இழுத்தபடி வேகமாக வெளியேறினாள்.
தங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் ராகவுடன் செல்லும் அவந்திகாவைக் கண்டு திகைத்த அவளது தோழிகள் இருக்கையில் அமர்ந்தனர்.
“உஷா! ஹனிபிக்கு என்னடி ஆச்சு? அவ யார் கிட்டவும் இப்பிடி பிஹேவ் பண்ண மாட்டாளே.. ஒரு வேளை…..”
“ஷட் அப் ரித்தி! அப்பிடி எதாவது ஒன்னு இருந்தா ஹனிபி நிச்சயமா நம்ம கிட்ட சொல்லாம இருக்க மாட்டா… எப்பிடி பார்த்தாலும் ராகவும் அவன் பிரதர்சும் தான் அந்த ட்வென்ட்டி ஒன் டேய்ஸ் ஹனிபியை பத்திரமா பார்த்துக்கிட்டாங்க.. அவ ஈசியா எல்லாரோடவும் ஃப்ரெண்ட் ஆயிடுவா… அந்தப் பழக்கத்துல தான் ராகவைக் கூட்டிட்டுப் போயிருப்பா”
“இஸின்ட்? எனக்கு அப்பிடி தோணலை… ஹனிபி வேணும்னா ஃப்ரெண்டா நினைக்கலாம்… நீ அந்த ராகவோட ஃபேஸை பார்த்தியா? ஹனிபியைப் பார்க்கிறப்போ அதுல ஒரு ஸ்பார்க் வந்துச்சு… அன்னைக்கு நீ ரெஸ்ட்ராண்ட்ல ஹனிபியை அறைஞ்சப்போ கூட இதே ஸ்பார்க் தான் அவன் கண்ணுல தெரிஞ்சுச்சு.. ஐ திங்க் சம்திங் சம்திங்…” என்று இழுத்த ரித்திமாவை முறைத்தாள் பிரதியுஷா.
“நீ அடங்கவே மாட்டியா? ஓவரா சினிமா பார்த்தா இப்பிடி தான்… நீ நினைக்கிற மாதிரி எதுவும் இருக்காது” என்று கூறியவளின் மனமும் ராகவின் வருகை, அவனிடம் அவந்திகா பேசிய பாங்கு, சற்று முன்னர் அவனைக் கைப்பற்றி இழுத்துச் சென்ற விதம் என அனைத்தையும் அசை போட்டுக் கொண்டிருந்தது.
அதே நேரம் அவந்திகாவும் ராகவும் காபி ஷாப்பில் காபியை அருந்திக் கொண்டே வளவளத்துக் கொண்டிருந்தனர்.
“உண்மையைச் சொல்லு ராகவ்… நீ எதுக்காக என்னைப் பார்க்க வந்த?”
“மார்னிங் உன்னோட செல்பியைப் போன்ல பார்த்தேன்.. உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு, உடனே புறப்பட்டு வந்தேன்” என்று சாவகாசமாக அவளுக்குப் பதிலளித்துவிட்டு காபியை அருந்தியவனின் பேச்சை இன்னும் அவந்திகா நம்பவில்லை.
அப்போது “அவந்திகா” என்றபடி வந்த ஒரு ஆடவனைக் கண்டதும் இருவரும் புருவம் சுழித்தனர். ராகவ் இவன் யாரென்று எண்ணி யோசனையுடன் பார்க்க, அவந்திகாவோ இவன் ஏன் இங்கே வந்தான் என்ற எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள்.
வந்தவனோ ராகவையும் அவந்திகாவையும் ஒருசேர பார்த்துவிட்டு அவந்திகாவிடம் கிண்டலாக “என்ன அடுத்த மாப்பிள்ளை பார்க்கும் படலமா?” என்று கேட்க
அவந்திகா தலையாட்டி மறுத்தவள் “நோ நோ! இது டேட்டிங்.. நல்லா ரொமாண்டிக்கா போயிட்டிருந்தப்போ நீ தான் இடையில வந்துட்ட விக்ரம்” என்று அமர்த்தலாக மொழிந்தபடி ராகவை நோக்கியவள்
“ராகவ்! எனக்கு நிச்சயம் பண்ணுனாங்கனு சொன்னேன்ல அது இவனைத் தான்… சரியான அம்மா கோண்டு…. இவன் என்னோட சித்தியைப் பார்த்துச் சொன்னானாம் அவங்க வளர்ப்பு சரியில்லைனு” என்று ஏளனமாகச் சொல்லவும் ராகவிற்கு இவன் யாரென்று இப்போது புரிந்தது.
அதோடு தான் செய்து வைத்தக் காரியத்தினால் இவனெல்லாம் அவந்திகாவின் சித்தியைப் பேசியிருக்கிறானே என்ற குற்றவுணர்ச்சி வேறு. இது எல்லாம் போதாதென்று அவந்திகா உபயோகித்த ‘டேட்டிங்’ என்ற வார்த்தையில் அந்த விக்ரமின் முகம் போன போக்கைக் கண்டதும் ராகவிற்கு சிரிப்பு வேறு வந்து தொலைத்தது.
அந்த விக்ரம் கோபத்துடன் ஏதோ சொல்ல வர அவனைக் கையுயர்த்தி தடுத்த அவந்திகா
“யாரையும் மோசமா பேசுறது எனக்குப் பிடிக்காது.. பட் நீயா வந்து என் பெர்சனல் மேட்டர்ல மூக்கை நுழைச்சதால வேற வழியில்லாம உன் அம்மா வரைக்கும் இழுத்துப் பேசிட்டேன்… இனிமே இந்த சிட்டிக்குள்ள என்னை எங்கே பார்த்தாலும் பார்க்காத மாதிரி போயிடு… பிகாஸ் என்னை ஹர்ட் பண்ணுனவங்களுக்கு நான் ரிப்ளை குடுக்கிறப்போ நாசூக்கு பார்க்க மாட்டேன் விக்ரம்.. இப்போ மரியாதையா இங்கே இருந்து போயிடு” என்று சொன்னவிதத்தில் அவள் இன்னும் மோசமாக எதுவும் சொல்லித் திட்டுவதற்கு முன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அவந்திகாவின் முகம் இன்னும் தீவிரமான பாவத்துடன் இருக்கவே ராகவ் “இப்பிடி ஒருத்தனை மேரேஜ் பண்ணிக்க நீ எப்பிடி சம்மதிச்ச?” என்று கேலியாகக் கேட்க
அவந்திகா “ஒரு மனுசனை பார்த்ததும் அவன் எப்பிடிப்பட்டவன்னு சொல்ல முடியாதுல்ல… நல்லா படிச்சிருந்தான், கை நிறையச் சம்பாதிக்கிறான், சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப்னு கேள்விப்பட்டதும் சித்தி ஒத்துக்கிட்டாங்க… எனக்கும் இதுல நோ சொல்லுறதுக்கு ஒரு காரணமும் இல்லை.. சோ நான் சித்திக்காகச் சம்மதிச்சேன்… ஆனா என் வாழ்க்கையில இன்னொரு தடவை அரெஞ்ச்ட் மேரேஜ்ங்கிற முட்டாள்தனத்தை நான் பண்ணுறதா இல்லைனு வீட்டுல ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்” என்று அவள் சொல்லவும் ராகவின் உதட்டில் குறுஞ்சிரிப்பு.
“அப்போ லைப் லாங் நீ சிங்கிளாவே சுத்தப் போறியா ஜான்சிராணி?”
“நோ வே! நான் யாரையாச்சும் பொறுமையா லவ் பண்ணி மேரேஜ் பண்ணிப்பேன் ராகவ்” என்றாள் அவந்திகா அமர்த்தலாக.
ராகவ் அவள் சொன்னதைக் கேட்டுக் கோப்பையில் மிச்சமிருந்த காபியைக் குடித்துவிட்டு “தென் ஒய் டோண்ட் யூ மேரி மீ?” என்று கேட்டு அவளை அதிர வைத்தான்.
அவந்திகாவால் அவள் காதையே நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டுப் பார்த்தாள். ஆனால் ராகவ் அழுத்தம் திருத்தமாகக் கேட்டது இதைத் தான்.
“நீ ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது ஜான்சிராணி?”
இதைக் கேட்டதும் அவந்திகாவுக்கு முதலில் என்ன சொல்வது என்று புரியவில்லை. பின்னர் பொறுமையாக யோசித்தவள்
“உன்னை நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்? ஒருவேளை உன்னால என்னோட என்கேஜ்மெண்ட் நின்னு போச்சுனு இரக்கப்பட்டு நீ எனக்கு வாழ்க்கைப்பிச்சை போடுறியா?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டவளின் குரலில் இல்லாதக் கோபத்தை அவளது கண்கள் வெளிப்படுத்தியது.
ராகவ் அமைதி காக்கவும் கோபத்தில் நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்தவள் “நல்லா கேட்டுக்கோ ராகவ்! நீ இரக்கப்பட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் குறைஞ்சு போயிடலை… உனக்கும் எனக்கும் எதுலேயும் ஒத்து வராது… ஸ்டேட்டஸ், மைண்ட் செட், போட்டிருக்கிற டிரஸ், லைப்ஸ்டைல்னு எல்லாமே நம்ம ரெண்டு பேருக்கும் வேற வேற… சோ இந்த நினைப்பை அப்பிடியே ரப்பர் போட்டு உன் மனசுல இருந்து அழிச்சிடு… எனக்கு டைம் ஆகுது… நான் கிளம்புறேன்” என்று முடிவாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
பாதி தூரத்தில் நின்றவள் திரும்பி அவனிடம் வந்து “இனிமே தயவு பண்ணி என்னைப் பார்க்க வராதே! யாரும் என் மேல இரக்கப்பட்டா எனக்குச் சுத்தமா பிடிக்காது” என்று உரைத்துவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.
ராகவிற்கு அவள் சென்றதும் மழை பெய்ந்து ஓய்ந்தாற் போன்று இருந்தது. தான் நினைத்த எதுவும் அவ்வளவு சுலபமாக நடக்காது போலவே என்று எண்ணியவன் தான் நினைத்தது நடக்காவிடில் வருணின் நிலை என்னாகும் என்ற யோசனை மனதைப் புண்ணாக்க இவளை எப்படி சம்மதிக்க வைப்பது என்ற கேள்வியுடன் அங்கிருந்து வெளியேறினான் ராகவ்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


