ராகவ் தனது அறையிலிருந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து அதிர்ந்தான். சீராக வெட்டப்பட்டத் தலைமுடியுடன் பார்க்க பளிச்சென்று இருக்கும் தன் முகமா இது என்று அதிர்ந்தான். இருபது நாட்கள் மழிக்கப்படாத தாடியுடன் தன் முகத்தைப் பார்க்கத் அவனுக்கே சகிக்கவில்லை.
“நீ பார்க்கிறதுக்கு ஆதிவாசி மாதிரி இருக்கிற ராகவ்… ஹேர் கட் பண்ணுறது இம்பாஸிபிள்… அட்லீஸ்ட் ஷேவ் பண்ணவாச்சும் செய்டா” என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டவன் ஷேவிங் செட்டை எடுத்து வேலையை ஆரம்பித்தான்.
கீழே அவந்திகாவுடன் சேர்ந்து மூன்று சகோதரர்களும் பேசுவதைக் கேட்டபடி ஷேவிங்கை முடித்தவன் ஆப்டர் ஷேவ் லோஷனைத் தடவிவிட்டு தன் முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டான்.
அவன் கீழே இறங்கும் போது அவந்திகா “உஷா ஒன்னும் கல்நெஞ்சக்காரி இல்லை வருண்… நீ பேசுனதுக்கு அவ ரிப்ளை குடுத்திருக்கா… இதுல என்ன தப்பு இருக்கு?” என்று தோழிக்கு வக்காலத்து வாங்குவது அவன் காதில் விழவும் ராகவுக்கு உள்ளுக்குள் புகைந்தது.
“ஓகே! நீ சொல்லுற மாதிரி அவ இரக்கச்சுபாவம்னு வச்சுக்குவோம் அவந்திகா… தென் ஒய் டிண்ட் ஷீ ரிப்ளை மை போன் கால்ஸ்? டூ யூ ஹேவ் எனி எக்ஸ்ப்ளனேசன்?” என்று கேட்ட வருணின் முகத்தில் தெரிந்த வலி ராகவுக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது.
எப்படியிருந்த என் சகோதரன் ஒரு பெண்ணின் காதலால் இப்படி மாறிவிட்டானே என்ற ஆதங்கம் அவனுள் எழ, வழக்கம் போல காதல் என்ற வார்த்தை எட்டிக்காயாய் கசந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வருண் சொன்னதைக் கேட்டு அவந்திகா ஏதோ பதிலளிக்க முயன்றவள் அவன் முகத்தில் தெரிந்த வேதனையைக் கண்ணுற்றவளாய் “உனக்கு உஷாவைப் பத்தி சரியா தெரியலை… உஷா ரொம்பவே கேரிங்கானவ… ஒரு ஃப்ரெண்டா என்னால அடிச்சுச் சொல்ல முடியும்” என்று சொல்லிமுடிக்க
வருண் கசப்பாய் “அதைத் தான் நானும் சொல்லுறேன்… ஃப்ரெண்ட்ஷிப் வேற லவ் வேற” என்று சொல்லிவிட்டு அமைதியாய் கையைக் கட்டிக்கொண்டான்.
“அப்சல்யூட்லி ரைட்… லவ்வுல நிறைய சுயநலம் இருக்கும்… ஆனா ஃப்ரெண்ட்ஷிப் அப்பிடி கிடையாது” என்று சொல்லி வருணுக்கு ஒரு குட்டு வைத்த திருப்தியில் திரும்பியவள் மாடிப்படியின் அருகில் கையைக் கட்டிக்கொண்டு நின்ற ராகவைக் கண்டதும் திகைத்தாள்.
அவன் கண்கள் அவளையே ஊடுருவ “இவன் எதுக்கு இப்பிடி லேசர் பார்வை பார்க்கிறான்? இது சரியில்லையே” என்று எண்ணியவள் ராகவிடம்
“ஹலோ! என்னாச்சு மேன்? எதுக்கு இப்பிடி குறுகுறுனு பார்க்கிற?” என்று கேட்க
அவன் “வாட்டர் ஃபால்ஸ் பக்கம் போறேன்… நீயும் வர்றியா?” என்று கேட்டது தான் தாமதம் அவள் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
சரியென்று தலையாட்டியவள் அவனுடன் கிளம்ப எத்தனிக்க, கிஷோரும் அமரும் அவர்களுடன் வருவதாகச் சொல்ல அவந்திகா “வருண் நீயும் வர்றியா?” என்று கேட்க வருண் இல்லையேன்று மறுத்துவிட்டான்.
ராகவ் வருணைக் கை காட்டி “பய்யா கூட இருங்க ரெண்டு பேரும்” என்று கட்டளையிட்டு விட்டு அவந்திகாவுடன் வெளியேறினான் அவன்.
அவந்திகா அவனுடன் சேர்ந்து நடந்தபடியே “நீ மட்டும் இஷ்டத்துக்கு வெளியே வரலாம்… ஆனா உன் ப்ரதர்ஸ் ரெண்டு பேரும் வரக் கூடாதா?” என்று அவனிடம் குற்றம் கண்டுபிடித்தபடி சென்றாள்.
ராகவ் அதைக் கேட்டும் கேட்காத மாதிரி அவளது வெற்றுக்கால்களைக் கவனித்தவன் “வெளியே வர்றப்போ சிலிப்பர் போட்டுட்டு வர மாட்டியா ஜான்சிராணி?” என்று ஒரு மாதிரி குரலில் வினவ
அவந்திகா “எனக்கும் சிலிப்பர் போடாம வர்றது பிடிக்கலை தான். ஆனா என்ன பண்ணுறது? என்னைக் கிட்னாப் பண்ணுன புண்ணியவான் என் செருப்பைக் கிட்னாப் பண்ண மறந்துட்டானே?” என்று சொல்லிவிட்டு அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி நடந்தாள்.
“இம்பாஸிபிள்” என்ற வார்த்தை மட்டும் ராகவிடமிருந்து வெளிவந்தது. அதைக் கேட்டபடி தோளைக் குலுக்கியபடி நடந்த அவந்திகா கவனிக்காமல் சேறு நிறைந்த இடத்தில் காலை வைக்கவே பிடிமானம் எதுவுமின்றி வழுக்கி விழுந்தாள்.
ராகவ் அதைக் கண்டவன் அவளைப் பிடிக்கும் முன்னர் அவள் கீழே விழுந்திருந்தாள். கையை நீட்டி அவளைத் தூக்க முயல அவந்திகா அவன் கையைத் தட்டிவிட்டு எழுந்தவள் கை கால்களை உதறிக்கொண்டாள்.
“ப்ளடி ரெயின்! இப்பிடியா கண்ணு மண்ணு தெரியாம பெய்ஞ்சு வைப்ப.. உன்னால தான் இதெல்லாம்” என்று முந்தைய இரவில் பெய்த மழையை திட்டித் தீர்த்தவள் நின்ற கோலம் ராகவுக்குச் சிரிப்பை மூட்டியது.
முதலில் அவள் என்ன நினைப்பாளோ என்று சிரிப்பை அடக்க முயன்றவன் பின்னர் முடியாமல் போகவே கடகடவென்று சத்தம் போட்டுச் சிரிக்க அவந்திகாவின் முகம் கோபத்தில் சிவந்தது.
“ஏய் சிரிக்காதேடா… கீழே விழுந்தவங்களைப் பார்த்துச் சிரிக்கக் கூடாதுனு உன்னோட கிண்டர் கார்டன் டீச்சர் சொல்லித் தரலையா? இனாஃப் ராகவ்” என்று கத்தியவளின் வாயிலிருந்து முதல் தடவையாகத் தன் பெயரைக் கேட்டவன் மெதுவாகச் சிரிப்பை நிறுத்தினான்.
வயிற்றைப் பிடித்துக் கொண்டவன் “சாரி! உன்னை ஹர்ட் பண்ணனும்னு சிரிக்கலை.. பட் உன்னோட ஃபேஸ்ல கொஞ்சம் சேறு பட்டிருக்கு… இதோட உன்னைப் பார்த்தா செம காமெடியா இருக்கு…. அதான் சிரிச்சேன்” என்று சொல்லிவிட்டு நமட்டுச்சிரிப்புடன் அவளுக்கு முன்னே நடந்தான்.
அவந்திகா அவன் சொன்னதும் தன் முகத்திலிருந்த சேறை துடைக்கிறேன் பேர்வழியென தன் கையிலிருந்த சேறை மீண்டும் முகத்தில் பூசிக்கொண்டாள். தன் செய்கையின் விளைவைப் பின்னர் உணர்ந்தவள் தனக்கு முன்னே செல்பவனின் முதுகு சத்தமற்ற சிரிப்பில் குலுங்குவதைக் கண்டதும் ஆத்திரம் தலைக்கேற வேகமாக அவனை நோக்கி நடந்து சென்று அவன் முன்னே வழியை மறிப்பது போல நின்றாள்.
ராகவ் அவளை என்னவென்று ஏறிட்டுப் பார்க்க அவந்திகா “என்னைப் பார்த்தா சிரிக்குற?” என்று கேட்டுவிட்டு தன் கரங்களை அவன் கன்னத்தில் துடைக்க ஆரம்பித்தாள்.
அவன் முகம் முழுவதும் சேறான பின்னும் திருப்தியடையாதவள் அவனது வெள்ளை டிசர்ட்டை இழுத்து அதில் கைகளைத் துடைத்துவிட்டு, தன் முகத்தையும் துடைக்க ஆரம்பிக்கவும் ராகவுக்கு அதிர்ச்சியில் மூளை ஸ்தம்பித்துவிட்டது.
குடும்பத்தினரை தவிர வேறு யாரையும் மூன்றடி தொலைவில் (சமூக இடவெளிங்கிறது இது தான் மக்களே) நிறுத்திப் பேசுவது தான் அவனது வழக்கம். அவனை இவ்வளவு தைரியமாக நெருங்கித் தொடும் உரிமையை அவன் மூன்றாம் நபர்களுக்குத் தந்ததே இல்லை.
“யூ ஆர் சோ மீன் ராகவ்… நம்ம இன்னும் கொஞ்சநாள்ல மேரேஜ் பண்ணிக்கப் போறோமே…. நான் உங்க கையைப் பிடிக்கக் கூடாதா?” என்று கேட்டவளின் முகம் நினைவடுக்கில் தோன்ற அதைச் சிரமத்துடன் அழித்துவிட்டு தன் டிசர்ட்டை அழுக்காக்கியே தீருவேன் என்று சபதமெடுத்திருந்தவளை நோக்கினான் ராகவ்.
அவளோ தன் வேலை முடிந்து விட்டத் திருப்தியில் “ஐயோ பாவம்! ஒயிட் டிசர்ட் பிரவுன் டிசர்ட்டா மாறிடுச்சு… இந்த மைதாமாவும் காபிபவுடரா மாறிடுச்சு” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டுச் சிரிக்க
ராகவ் தன் டிசர்ட்டை உதறிவிட்டபடியே “இதெல்லாம் நீ இப்போ எதுக்கு செஞ்சேனு தெரிஞ்சுக்கலாமா ஜான்சிராணி?” என்று நல்ல பையனாகக் கேட்டபடி நடக்க
அவந்திகா “நீ என்னைப் பார்த்து சிரிச்சல்ல அதுக்குத் தான்டா” என்று அமர்த்தலாகப் பதிலளித்தபடி சென்றவளை எண்ணி அவனுக்குக் கோபம் வருவதற்கு பதில் அநியாயத்துக்குச் சிரிப்பு மட்டுமே வந்தது.
சிரித்தால் அதற்கும் இது போல எதாவது விநோதமாகச் செய்துவைப்பாள் இந்தப் பெண் என்று அறிந்தவன் சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடி “நீ எப்போவுமே இப்பிடித் தானா? ஐ மீன் யோசிக்காம பேசுறது, யோசிக்காம பிஹேவ் பண்ணுறது, பிராப்பர் பிளானிங் இல்லாம எல்லாத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேனு செய்யுறது, சீரியஸ்னெஸ் புரியாம நடந்துக்கிறது.. இது தான் உன்னோட நேச்சரா?” என்று அவன் கேட்டதில் அவந்திகா வாயடைத்துப் போனாள்.
பின்னே என்ன! வெறும் நான்கே வார்த்தைகளில் அவளது குணங்களைப் புட்டுப் புட்டு வைத்தவனைப் பார்த்து வாயடைத்துப் போவது சகஜம் தானே…
“நல்லவேளை நீ என்னோட கிளாஸ் டீச்சரா இல்லை… எவ்ளோ கம்ப்ளைண்ட்ஸ் சொல்லுற என் மேல?” என்று சொன்னபடி அருவியின் இரைச்சலைக் கேட்டுக்கொண்டே நடைபோட்டாள்.
“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு ஜான்சிராணி” என்றவனிடம்
“எனக்கு இப்பிடியே இருந்து பழகிப் போச்சு ராகவ்… பெருசா எந்தக் கவலையுமில்லாம, யாரோட கன்ட்ரோலும் இல்லாமலே வளர்ந்துட்டேன்… பிளான் பண்ணி எதையும் பண்ணுறது என்னோட அகராதியிலேயே இல்லை… வாழ்க்கையை அதோடப் போக்குல வாழ ஆசைப்படுறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.
இருவரும் பேசிக்கொண்டே அருவியை வந்தடைந்தனர். ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் சில நிமிடம் மெய்மறந்து நின்றனர்.
ராகவ் வேகமாக நதியில் காலைவைத்தவன் அவந்திகாவிடம் “என்னோட வர்றியா ஜான்சிராணி?” என்று கையை நீட்ட
அவளோ “நான் வரலைப்பா… இந்த அருவியும் ஆறும் அழகா தான் இருக்கு… ஆனா அழகான எல்லாமே ஆபத்தும் கூட” என்று பயத்துடன் அவனது கையைப் பற்ற மறுத்தாள்.
ராகவ் இதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் லாவகமாக பாறையில் ஏறி அடுத்தப் பாறைக்குத் தாவிச் சென்றவன் வெகுசீக்கிரத்தில் அருவியை நெருங்கிவிட்டான். சிறிதுநேரம் அதில் நனைந்து விட்டுத் திரும்பியவன் அவந்திகா கரையிலுள்ள சிறு கல்லின் மீது அமர்ந்து முகம் கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுத் தான் எதற்கு அவளைத் தனியாக அழைத்து வந்தோமோ அந்த வேலையை ஆரம்பித்தான்.
“அவந்திகா! உன்னோட ஃப்ரெண்ட்ஸ்னா உனக்கு ரொம்ப பிடிக்குமோ?” என்று அவன் கேட்டது தான் தாமதம். அவந்திகா தங்களின் பன்னிரெண்டு வருட நட்பின் பிரதாபங்களை எடுத்துவிடத் தொடங்கினாள். அவள் சொன்னதிலிருந்தே அவர்கள் மூவரும் ஒருவருக்காக மற்றொருவர் எதையும் செய்யத் தயங்குவதில்லை என்று ராகவிற்குப் புரிந்தது.
அதே நேரம் அவந்திகாவின் குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் அவனுக்கு இருந்தது. என்ன தான் தனது சகோதனுக்காக என்றாலும் தான் செய்தது மிகப்பெரிய குற்றம். இந்தப்பெண்ணைப் பற்றிய தவறான தகவல் எதுவும் பரவிவிட்டால் அது இவளின் பிற்கால வாழ்க்கைக்கு நல்லதல்ல என்ற கவலை அவனுக்கு இங்கே வந்த நாளிலிருந்தே இருந்தது.
தன் எதிரில் நிற்கும் இவளுக்கு இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மை புரியாமல் இருக்கலாம். ஆனால் ராகவிற்கு அப்படி இல்லையே. இங்கிருந்து சென்றதும் அவன் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் இரண்டு. முதலில் அவந்திகாவை அவள் குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுத் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்யவேண்டும்.
இரண்டாவதாக வருணின் காதலியிடம் சகோதரனின் நிலையை எடுத்துக் கூறி அவளை மீண்டும் வருணுடன் சேர்த்துவைக்க வேண்டும். அதற்கு அவள் அவ்வளவு எளிதில் வருணை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பது வருண் மற்றும் அவந்திகாவின் உரையாடலிலிருந்து ராகவ் புரிந்து கொண்டான்.
அவளது குணம் எப்படி என்பதை அறிந்துகொள்ளத் தான் அவன் அவந்திகாவிடம் பேச்சுக் கொடுத்ததே. அவந்திகா சொன்னவரைக்கும் அந்த பிரதியுஷா பிடிவாதக்காரியாகத் தான் தோன்றினாள். அதோடு அவளது பிடிவாதத்தைத் தோழியரிடம் அவள் எப்போதுமே காட்டுவதில்லை என்ற தகவலும் போனசாகக் கிடைத்தது அவனுக்கு.
இதை எல்லாம் யோசித்தபடியே வந்தவன் சத்தியமாக அவந்திகா என்ன பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதைக் கவனிக்கவில்லை. அவளோ இதையறியாது கண்ணை உருட்டியபடி ஏதேதோ சொல்லிக் கொண்டே நடந்தாள். அவள் பேசுவதைக் கேட்பது இன்றைக்குத் தானே கடைசி என்று எண்ணிக்கொண்டான் ராகவ்.
ஏனெனில் மறுநாள் மாலையோடு ஊரடங்கு தான் முடியப்போகிறேதே என்று பெருமூச்சுடன் எண்ணியவனுக்கு தான் ஏன் இவ்வளவு வருத்தமாகச் சிந்திக்கிறோம் என்ற ஆச்சரியம் தோன்ற அதற்குள் வீடும் வந்திருந்தது.
வீட்டுக்குள் சென்றதும் அவந்திகா வழக்கம் போல கிஷோரிடம் வம்பளக்க ஆரம்பித்துவிட ராகவ் உடை மாற்றுவதற்காக அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.
அவனது இம்மனநிலை இருபத்தியிரண்டாம் நாள் காலையில் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு “நான் ரெடிப்பா கிளம்புவோமா?” என்று கேட்ட அவந்திகாவைக் காணும் வரை அப்படியே தான் மாறாமலிருந்தது.
அவள் கேட்டதற்கு சரியென்று தலையாட்டியவன் சகோதரர்களுடன் சேர்ந்து அந்த வீட்டிலிருந்து வெளியேறினான். அவந்திகா மறக்காமல் அவனது மொபைலில் செல்பி எடுத்துக் கொண்டவள் தனது எண்ணுக்கு அப்புகைப்படத்தை அனுப்பியபடி நடந்தாள்.
காட்டை விட்டு சற்றுத் தொலைவிலுள்ள மேட்டுநிலமும் அதைத் தாண்டி கருங்கோடாய் தெரியும் தார்ச்சாலையும் கண்ணில் பட அம்மேட்டுநிலத்திலுள்ள கட்டிடத்தில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
ராகவ் அவந்திகாவைத் தன்னுடன் காரில் ஏறும் படி பணித்தவன் வருணிடம் மற்றொரு காரை எடுக்குமாறு சொல்லிவிட்டுக் காரைக் கிளப்பினான். அவனுடன் முன்னிருக்கையில் அமர்ந்தவள் அவள் பாட்டுக்கு போனில் கேம் விளையாட ஆரம்பித்துவிட பெங்களூருவுக்கு இத்தனை கிலோமீட்டர் என்று காட்டும் சாலையோர வழிகாட்டியைக் கண்டதும் ராகவிற்கு உள்ளுக்குள் இனம்புரியாத உணர்வு எழுந்தது. அதை ஓரம்கட்டிவிட்டுச் சாலையில் கண்பதித்தான் அவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


