அவனது வசீகரம் ஒரு கண்ணுக்குத் தெரியாத கயிறு; அது என் மறுப்புகளை அத்தனை மென்மையாகக் கட்டிப்போட, நான் அவனது ஆளுமைக்கு மனமுவந்து சிறைபட்டுப் போனேன்.
-வெண்பா
ஜானவியின் வீட்டில் சகல சௌகரியங்களுடன்கூடிய அறையை ஒதுக்கியிருந்தார்கள் வெண்பாவுக்கு. பால்ய சினேகிதரின் மகளுக்குச் சின்னதாய் ஒரு வசதிக்குறைவுகூட நேரக் கூடாதெனப் பணியாட்களிடம் கட்டளையிட்டிருந்தார் சின்னதுரை.
அன்றைய தினம் முழுவதும் ஜானவியுடன் அவளது உறவுக்காரப் பெண்களுடன் வெண்பாவுக்கு இதமாகக் கழிந்தது. மறுநாள் அவர்கள் லீலா பேலஸுக்குச் சென்றுவிடுவார்கள். திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள், திருமணம், வரவேற்பு என அனைத்து நிகழ்வுகளும் அங்கேதான் நடைபெறவிருக்கின்றன.
மறுநாள் விடியல் திருமண வீட்டாருக்கு உற்சாகமாகத் தயாரானபோது வெண்பாவின் மனம் வேறுவிதமான குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. அன்றைய தினம் சட்டமன்றம் கூடவிருக்கிறது. நேத்ரன் சட்டச்சபையில் பதவியேற்பான். அதைக் காணும் ஆவல் அவளுக்கு.
தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்த விசாலமான கெஸ்ட் ரூமில், கதவைச் சாத்திக்கொண்டு படுக்கையின் நுனியில் அமர்ந்திருந்தாள் வெண்பா. அவளுக்கு முன்னால் இருந்த பெரிய ஸ்கிரீன் டிவியில், செய்தி சேனலொன்று நேரலையாக ஓடிக்கொண்டிருந்தது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை, புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவுக்காகக் களைகட்டி நின்றது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளது நெஞ்சுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறப்பது போன்றதொரு படபடப்பு. கைகளை இறுக்கமாகக் கோர்த்தபடி டிவி திரையையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சட்டப்பேரவைச் செயலாளர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் பெயராக வாசித்துவர, அந்த மந்திரச் சொல்லுக்காக வெண்பாவின் செவிகள் தவமிருந்தன.
“திரு. நேத்ரன்…”
அந்த அறிவிப்பு ஒலித்த மறுகணமே, வெண்பாவின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்திவிட்டு, பின் இரட்டிப்பு வேகத்தில் எகிறத் தொடங்கியது. அவளது முகத்தில் தானாகவே ஒரு பரவசப் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
அனைத்துக் கேமராக்களும் இப்போது நேத்ரனின் மீது குவிய, வெண்ணிறச் சட்டை, கருப்பு சினோஸில் கம்பீரமான சிங்கமெனத் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தான் நேத்ரன். அவனது ஒவ்வொரு அடியிலும் அதிகாரத்தின் மிடுக்கும், இளமையின் துடிப்பும் சரிவிகிதத்தில் கலந்திருந்தன. அவனது அந்த ஆளுமையான தோற்றத்தைக் கண்ட எதிர்க்கட்சி வரிசையிலிருந்த பல மூத்த தலைவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர்.
உறுதிமொழி ஏற்பதற்கான மேடைக்கு வந்தவன், தற்காலிகச் சபாநாயகரை நோக்கிக் கைகூப்பி வணக்கம் செலுத்தினான். பின்னர் மைக்ரோஃபோனுக்கு அருகே வந்து நின்றான். சட்டமன்ற அதிகாரி ஒருவர், உறுதிமொழிப் பத்திரத்தை அவனுக்கு முன்பாக நீட்டினார்.
அதை வாங்குவதற்கு முன், நேத்ரன் தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பவுடர் ப்ளூ வண்ணப் பர்ஸை மிக நிதானமாக வெளியே எடுத்தான். செய்தி சேனலின் கேமராமேன், ஒரு இளம் எம்.எல்.ஏவின் அந்த வித்தியாசமான செய்கையைக் கவனித்து, கேமராவை நேத்ரனின் கைகளை நோக்கி ‘ஜூம்’ செய்தார்.
தொலைக்காட்சித் திரையில் இப்போது அந்தச் சிறிய க்ரோஷே பர்ஸ் மிகத் தெளிவாகத் தெரிந்தது. வெளிர் நீல வண்ணத்தில், இரண்டு அழகான டேலியாக்கள் மலர்ந்திருக்க, அதன் நடுவே ‘N.V’ என்ற எழுத்துகள் பின்னப்பட்டிருந்த அந்தப் பர்ஸ், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நேரலையில் காட்டப்பட்டது.
அதைக் கண்டதும் வெண்பாவுக்கு நெஞ்சமெங்கும் பூக்களின் மலர்ச்சியோடு கூடிய வசந்தம். கேரளாவில் அடைமழை கொட்டிய அந்தத் தேர்தல் முடிவு நாளில், அவனது வெற்றிக்கான பரிசாகத் தன் கைகளால் பின்னி அவனிடம் கொடுத்த அதே பர்ஸ்!
ஒட்டுமொத்த மீடியாவும், அரசியல் தலைவர்களும் பார்க்கும் இத்தனை பெரிய அதிகாரப்பூர்வமான மேடையில், அவன் தன் காதலின் அடையாளமான அந்தப் பர்ஸைப் பெருமையாக வெளிக்காட்டுவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
திரையில், நேத்ரன் அந்த க்ரோஷே பர்ஸிற்குள் இருந்து, தனது வட்ட வடிவமான ‘ஹாரிபாட்டர்’ கண்ணாடியை எடுத்து மிக ஸ்டைலாக அணிந்துகொண்டான். பர்ஸைப் பத்திரமாக மீண்டும் தன் நெஞ்சோடு இருக்கும் சட்டப் பாக்கெட்டில் வைத்துவிட்டு, உறுதிமொழிப் பத்திரத்தைக் கையில் ஏந்தினான். கண்ணாடியின் பின்னணியில் அவனது கூர்மையான கண்கள் இன்னும் வசீகரமாகத் தெரிந்தன.
சட்டப்பேரவையே அமைதியாக இருக்க, அவனது கணீரென்ற காந்தக் குரல் மைக்ரோஃபோன் வழியாகத் தமிழ்நாடு முழுவதும் ஒலித்தது.
“சட்டமன்றப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மா. நேத்ரன் ஆகிய நான், சட்டப்படியமைந்த இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், மாறாத பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் இப்போது மேற்கொள்ளவிருக்கும் கடமையை நேர்மையாகவும், உண்மையாகவும் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய ஆணையிடுகிறேன்!”
ஒவ்வொரு வார்த்தையையும் அத்தனை அழுத்தமாகவும், ஆழமாகவும் உச்சரித்தான் நேத்ரன். அந்த உறுதிமொழிச் சாசனத்தில் இருந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் நியாயம் கற்பிப்பான் என்ற நம்பிக்கை, அந்த அதிகாரப்பூர்வமான குரலிலேயே தெரிந்தது.
வாசித்து முடித்ததும், சபாநாயகரின் மேசைக்கு அருகே சென்று, உறுப்பினர்களுக்கான பதிவேட்டில் தன் கம்பீரமான கையெழுத்தைப் பதித்தான். பின் சபாநாயகருக்கும், முதலமைச்சருக்கும், அவையிலிருந்த மற்ற உறுப்பினர்களுக்கும் தன் மிடுக்கான வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத் தன் இருக்கைக்குத் திரும்பினான்.
டிவி திரையில் அவனது காட்சி மாறி வேறு ஒரு எம்.எல்.ஏ வரத் தொடங்க, வெண்பா ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியிட்டாள். அவளை அறியாமலேயே அவளது முகத்தில் பெருமிதத்தின் பூரிப்பு!
படுக்கையில் சாய்ந்தவள், தலையணையை அணைத்துக்கொண்டு நெகிழ்ச்சியில் கண்மூடிக் கிடந்தாள். நேத்ரனுடைய வாழ்க்கையின் ஆகப்பெரிய நாள் இது. அப்படிப்பட்ட ஒரு உச்சபட்ச தருணத்தில், அவன் தன் நெஞ்சோடு அவளது நினைவைச் சுமந்துவந்ததை எண்ணியபோது, உலகத்தையே தனியாக நின்று ஜெயித்தது போன்ற ஒரு பெருமிதம் அவளுக்குள் பொங்கியது.
‘அந்தக் கெத்தான லுக், எப்பவும் போல ஃபார்மல்ஸ்… அதுக்கு மேல அந்த ஹாரிபாட்டர் கண்ணாடி. எவ்ளோ கேர்ள்ஸ் இன்னைக்கு டிவியைப் பார்த்து நம்ம ஆளைச் சைட் அடிச்சிருப்பாங்களோ!’ என்று மனதுக்குள் செல்லமாகச் சலித்துக்கொண்டாலும், வெண்பாவின் இதழ்களில் கர்வமான ஒரு புன்னகை மலர்ந்தது.
ஒரு எம்.எல்.ஏவாக அவன் ஒட்டுமொத்தத் தொகுதிக்கும், மக்களுக்கும் சொந்தக்காரனாக இருக்கலாம்; ஆனால், அவனுக்குள் இடைவிடாது துடிக்கும் இதயம் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற அசைக்க முடியாத கர்வம் வெண்பாவின் கண்களில் அழகாக மின்னியது.
“கங்கிராட்ஸ் எம்.எல்.ஏ சார். எனக்கு ட்ரீட் எப்ப?” என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினாள்.
உடனே அவனது முந்தைய தினத்தின் வருத்தம் மனதில் உறுத்தவும் அது குறித்து வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினாள் வெண்பா. எப்போது பார்க்கிறானோ பார்க்கட்டுமென்ற எண்ணம்.
“நேத்தைய டென்ஷன் என்னாச்சு? உங்க பையன் கிடைச்சிட்டானா?”
செய்திகளை அனுப்பிவிட்டு ஹோட்டலுக்குச் செல்லத் தயாரானதில் நேத்ரனிடமிருந்து பதில் வந்ததா இல்லையா எனக் கவனிக்கவில்லை வெண்பா. மாலையில் இன்டர்நெட்டை ஆன் செய்தபோது பதில் வந்திருந்தது அவனிடமிருந்து.
“ம்ம்! நிகில் அவனைத் திருச்செந்தூர்ல இருந்து அழைச்சிட்டு வந்தானாம். மேற்கொண்டு பேச நேரம் கிடைக்கல. ஊருக்கு வந்ததும் பேசிக்கலாம்னு நிகில் சொல்லிட்டான்.”
அவனது பதில் வந்த உற்சாகத்தில் ஜானவியின் வரவேற்புக்காக ஆயத்தமானாள் அவள்.
லீலா பேலஸின் பிரம்மாண்டமான ஹால், வடமாநிலத்துப் பாணியிலான ‘சங்கீத்’ விழாவுக்காகப் பேரழகோடு அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கு திரும்பினாலும் வண்ண விளக்குகள், சாமந்தி மற்றும் ரோஜா மலர்களின் நறுமணம், பாலிவுட் மெலடிகளின் ரீங்காரம் என அந்த இடமே ஒரு மாபெரும் திருவிழா போலக் காட்சியளித்தது.
ஜானவியின் உறவினர்களும் தோழிகளும் விலையுயர்ந்த டிசைனர் ஆடைகளில் மின்னிக்கொண்டிருக்க, அத்தனைக் கூட்டத்திலும் வெண்பா மட்டும் தனித்து, ஒரு தேவதையைப் போல ஜொலித்துக்கொண்டிருந்தாள்.
காரணம், அவள் அணிந்திருந்த அந்த ரஸ்ட் ஆரஞ்சு வண்ணச் செட்டிநாடு சில்க் காட்டன் அனார்கலி! நேத்ரன் அவளுக்காகத் தேடித் தேடித் தேர்ந்தெடுத்து வாங்கிய ஆடை அது. அதன் கழுத்துப் பகுதியிலும் முந்தானையிலும் செய்யப்பட்டிருந்த நுணுக்கமான ஜரிகை வேலைப்பாடுகளும், உடலோடு ஒட்டிய அதன் நேர்த்தியான அளவும் அவளது அழகை இன்னும் பலமடங்கு கூட்டிக் காட்டியது. அந்த ஆடையை அணியும்போது நேத்ரனின் அரவணைப்பு தன்னைத் தழுவியதைப் போன்றதொரு உணர்வு அவளுக்குள் மெல்லிய சிலிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
நடனங்கள், பாடல்கள், நண்பர்களின் கேலிகள் என அந்த மாலைப் பொழுது அத்தனை உற்சாகமாகக் கழிந்தது. விழா முடிந்து, விருந்தினர்கள் ஒவ்வொருவராகக் கலைந்து செல்ல, வெண்பாவும் ஜானவியின் குடும்பத்தாரோடு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பங்களாவுக்குத் திரும்பினாள்.
நாள் முழுவதுமான கொண்டாட்டத்தின் களைப்பில் பங்களாவே உறக்கத்தைத் தழுவியிருந்தது. ஆனால், வெண்பாவின் விழிகளில் மட்டும் உறக்கம் தஞ்சம் புக மறுத்தது. நேத்ரனின் பதவியேற்பு, அவனது அந்த மிடுக்கான தோற்றம், டிவியில் அந்த க்ரோஷே பர்ஸை அவன் காட்டியபோது அவளைப் புல்லரிக்கவைத்த அந்தத் தருணம் என அத்தனையும் மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருக்க, பால்கனியில் நின்றபடி இரவு வானத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அவளது அலைபேசி மெல்ல அதிர்ந்தது. திரையில் ‘நேத்ரன்’ என்ற பெயர் மின்னியதும், இதயம் ஒரு கணம் தாறுமாறாகத் துடித்தது. இந்த நள்ளிரவு நேரத்து அழைப்பு அவளுக்குள் இனிய தவிப்பை ஏற்படுத்தியது.
அழைப்பை ஏற்றவள், “என்ன எம்.எல்.ஏ சார்… பதவியேற்ற அன்னைக்கே தூக்கத்தைத் தொலைச்சிட்டீங்களா?” என்று மிக மெல்லிய குரலில், குறும்பாகக் கேட்டாள். மறுமுனையில் அவனது இதமான சிரிப்பொலி கேட்டது.
“என் தூக்கத்தை நீ என்னைக்கோ திருடிட்டியே டீச்சரம்மா! உன்னைப் பார்க்கணும் போல இருக்கு,” என்றான் அவனது காந்தக் குரலில்.
“இந்த நேரத்துலயா? இப்ப நான் ஜானவி வீட்டுல இருக்கேன் நேத்ரன். எல்லாரும் தூங்கிட்டாங்க.”
“நான் பங்களா வாசல்லதான் நிக்கிறேன். கொஞ்சம் வெளிய வர்றியா? ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்…” அவனது குரலில் இருந்த அந்த உரிமையான எதிர்பார்ப்பை உணர்ந்தவளுக்குத் தட்டிக்கழிக்கத் தோன்றவில்லை.
“இதோ வர்றேன்…” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, யாருக்கும் சத்தம் கேட்காதவாறு மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.
காவலாளியிடம் சொல்லிக்கொண்டு பங்களாவின் பிரம்மாண்டமான இரும்புக் கேட்டைத் தாண்டிச் சில அடிகள் நடந்தாள். நள்ளிரவு நேரத்துச் சில்லென்ற காற்று அவளை உரசிச் சென்றது.
பகலில் சொகுசுக் கார்கள் மட்டுமே வலம் வரும் அந்த அகலமான சாலை, இப்போது அவர்களுக்காகப் பாய் விரித்தாற்போல அமைதியாகக் கிடந்தது. சாலையின் இருபுறமும் அரண்போல நின்றிருந்த அடர்ந்த பழமையான மரங்களின் கிளைகளுக்கு ஊடாக, தெருவிளக்கின் மஞ்சள் நிற ஒளி மென்மையாக வடிகட்டிப் பூமியில் விழுந்துகொண்டிருந்தது.
எந்தப் பந்தாவும் இல்லாமல், ஒரு சாதாரண மனிதனைப் போல அந்தச் சாலையின் ஓரத்தில் இருந்த மஞ்சள் மற்றும் கருப்பு வர்ணம் பூசப்பட்ட தடுப்பருகே அவளுக்காகக் காத்திருந்தான் நேத்ரன்.
முழுவதுமாகத் தன் அரசியல் அதிகார தோற்றத்தைக் கழற்றிவிட்டு நிற்கையில் அவன் இன்னும் வசீகரமாய்த் தெரிந்தான் அவளது விழிகளுக்கு.
இரவு நேரத்திற்காக இலகுவான க்ரூ நெக் ஓவர்சைஸ் டீஷர்ட்டும் கருப்பு நிறத்தில் சற்றே பெரிதான பேன்ட்டும் அணிந்திருந்தவளின் கால்களைக் கவ்வியிருந்தன ஸ்னீக்கர்கள். அவளது விழிகள் நேத்ரனின் கண்களை அலங்கரித்த ஹாரிபாட்டர் கண்ணாடியை உற்று நோக்கின.
“டிவியில பாத்தேன்! நீங்க பதவி ஏத்துக்கிட்ட மொமெண்ட் எனக்கு ரொம்ப நெருக்கமான மொமெண்ட். இன்னைக்கு இன்ஸ்டால எல்லாரும் என்னோட க்ரோஷே பர்ஸ் பத்திதான் பேசுறாங்க. தி கியூட் எம்.எல்.ஏனு கேப்ஷன் வேற”
அவனருகே நடைபாதையின் விளிம்பில் வந்து அமர்ந்தாள் வெண்பா. அந்த நள்ளிரவு நேரத்துத் தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் அவள் ஒரு தேவதையாகவே தெரிந்தாள். அவளது நீண்ட கரிய கூந்தல் போனி டெயிலாகக் காற்றில் லேசாக அசைந்தாடிக்கொண்டிருந்தது.
நேத்ரன் அதிகமெல்லாம் யோசிக்கவில்லை. அவளது கால்கள் தொட்டுக்கொண்டிருந்த சாலையில் அமர்ந்துவிட்டான். கால்களைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவனின் தோளில் அடித்தாள் வெண்பா.

“யாரும் பாத்தாங்கனா உங்களை எம்.எல்.ஏனு நம்பமாட்டாங்க”
“நான் இங்க எம்.எல்.ஏவா வரலையே.” என்று முறுவலித்தவன் “சங்கீத் ஃபங்ஷன் எப்பிடி இருந்துச்சு? நான் வாங்கிக் கொடுத்த டிரெஸ் என் தேவதைக்குக் கரெக்டா ஃபிட் ஆச்சா? அப்ப இருந்ததைவிட இப்ப டீச்சரம்மா கொஞ்சம் வெயிட் போட்டுட்டீங்களே! அதான் கேட்டேன்” என்று நேத்ரன் அவளது கண்களைப் பார்த்துக் கேட்க, வெண்பாவின் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை.
“ரொம்ப கரெக்டா ஃபிட் ஆச்சு நேத்ரன். நீங்க கொடுத்த டிரெஸ்னு தெரிஞ்சதும், ஜானவி என்னைக் கிண்டல் பண்ணித் தள்ளிட்டா,” என்றபடி, தனது கல்லூரி நாட்களைப் பற்றியோ அல்லது தோழியின் கல்யாணப் பரபரப்பைப் பற்றியோ வெண்பா தன் கைகளை அழகாக அசைத்து, முகபாவனைகள் மாற அத்தனை சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
நேத்ரனோ தரையில் ஒரு காலை நீட்டி, மறுகாலை மடக்கி அமர்ந்து, தன் கைகளை முழங்கால் மீது தளர்த்தியபடி அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவளது வார்த்தைகள் அவனது செவிகளில் விழுகிறதோ இல்லையோ, அவனது இதழ்களில் ஒரு மெல்லிய, ஆனால் ஆழமான காதல் புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது. உலகத்தின் அத்தனை அழகும் அவளுக்குள் சுருங்கிவிட்டதைப் போல அவனது பார்வை அவளைத் துளைத்தது.
அவனது அந்த இமைக்காத பார்வையைக் கவனித்த வெண்பா, பேச்சைச் சட்டென நிறுத்திவிட்டு அவனைக் குறுக்கிட்டாள்.
“இட் சீம்ஸ் லைக் அ டேட். பீச், சினிமா, ஹோட்டல்னு எங்கயும் கூட்டிட்டுப் போகாம இந்த வி.ஐ.பி ரோட்லயே டேட் அரேஞ்ச் பண்ணுன உங்க சிக்கனத்தை நினைச்சா புல்லரிக்குது. யாரும் பாத்துட்டாங்கனா என்ன பண்ணுவீங்களாம்?” குறும்பாகக் கேட்டாள்.
நேத்ரன் தன் தாடையைத் தடவியபடி லேசாகச் சிரித்தான்.
“எனக்கு உன்னைப் பாக்கணும்னு தோணுச்சு. எப்பவுமே நம்மளைச் சுத்தி ஆளுங்க நிறைய இருக்காங்க. உன்கூடத் தனியா லாங் ட்ரைவ் போனப்பகூட டீக்கடை சேட்டாகூட இருந்தார். ஒரு தடவை ஒரே ஒரு தடவை இந்த உலகத்துல நீயும் நானும் மட்டும் தனியா இருக்குற மாதிரியான மொமெண்ட் வேணும்னு ஆசைப்பட்டேன். அதான் ஊரே உறங்குன அப்புறம் உன்னைத் தனியா மீட் பண்ணிப் பேசிட்டிருக்கேன். அ ரோட் டேட் ஃபார் அஸ்.”
அவன் சாதாரணமாகத் தொனியில் சொன்னாலும், அதிலிருந்த காதலும் ஏக்கமும் வெண்பாவின் கன்னங்களைச் சிவக்கச் செய்தது.
“போட் கிளப் ரோட்டுல இப்பிடி ஒரு அமைதி இருக்கும்னு நான் நினைச்சதே இல்ல. எவ்ளோ சைலண்ட்டா இருக்குல?” என்றாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி.
“ம்ம்ம்… இந்த அமைதிதான் நான் விரும்புனது. இன்னைக்கு நாள் முழுக்க அசெம்பிளி, மீட்டிங்னு செம டென்ஷன். என்னாலயும் உன்கூடச் சரியா பேச முடியல. இப்ப எல்லாம் டீச்சரம்மாகூடப் பேசலனா ஆக்சிஜன் இல்லாத உலகத்துல இருக்குற மாதிரி மூச்சுத் திணறுது எனக்கு. அதான் நேரம் கிடைச்சதும் ஓடிவந்துட்டேன்.” என்றான் அவளது கண்களை நேராகப் பார்த்து.
அவனது வார்த்தைகளில் இருந்த ஆர்வம், அந்த நள்ளிரவின் குளிரையும் தாண்டி வெண்பாவுக்குள் ஒரு மெல்லிய வெப்பத்தைப் பரப்பியது.
“நீங்க ஏன் இப்பிடி இருக்குறீங்க? ஐ மீன், இவ்ளோ வெளிப்படையா உணர்வுகளைக் கொட்டுறது. ஐ ஹேவ் மை விமன்னு வெளிப்படையா நம்ம உறவை உலகத்துக்கு முன்னாடி காட்டுறதுனு, உங்க அணுகுமுறை எதிர்பாக்காத வகையில என்னைத் திணறடிச்சுது. இன்னைக்கு அசெம்பிளியில வச்சு நான் குடுத்த க்ரோஷே பர்ஸை எடுத்தீங்களே, அந்த மாதிரி. யாரும் எதுவும் நினைப்பாங்களேனு மத்தவங்க தயங்குற மாதிரி நீங்க எதுக்கும் தயங்குறதில்ல. நீங்க ஒரு யூனிக் பீஸ் எம்.எல்.ஏ சார்” என்றாள் அவளது குரலில் காதலும் நெகிழ்ச்சியும் பிரவாகமாய்ப் பொங்கிவழிய.
“பின்ன? என் வருங்காலப் பொண்டாட்டி ஆசையாப் பின்னிக் கொடுத்த கிஃப்ட் அது. என்னோட வாழ்க்கையோட ஆகப்பெரிய நாள்ல, அது என்கூட இல்லாம வேற எங்க இருக்கும்? நான் ஒண்ணும் தனியாள் இல்ல, எனக்குனு ஒருத்தி இருக்குறானு காமிச்சுக்க ஆம்பளைங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் டீச்சரம்மா. நான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா காமிச்சுக்குறேன். அவ்ளோதான்,” என்றவன் கண்சிமிட்டியபடி மெல்ல அவளருகே முன்னோக்கி நகர்ந்தான்.
“ஏன்னா இந்த எக்ஸ்ட்ராவான, எக்ஸ்ட்ரீமான செய்கைகளுக்கு நீ தகுதியானவ,” என்று சொன்னவனின் ஸ்னீக்கர்கள் அவளது ஸ்னீக்கர்களை முத்தமிட்டன.
அவளது கையை மிக மென்மையாகப் பற்றிக்கொண்டவனின் ஸ்பரிசத்தில், வெண்பாவின் இதழ்களில் அழகான வெட்கம் வந்து புன்னகையோடு பின்னிப் பிணைந்து ஒட்டிக்கொண்டது. நள்ளிரவின் அமைதியில், அந்தத் தெருவிளக்கின் வெளிச்சம் அவர்கள் இருவரையும் ஓர் அழகிய ஓவியம் போலப் படம்பிடித்துக்கொண்டிருந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


